தமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
#BoycottKaala
உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி தங்கள் வாழ்வுரிமைக்குப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப் பட்டு, 13 பேரை சுட்டுக் கொன்றார்கள்; அறுபதுக்கும் மேற் பட்டோரை சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் 30.05.2018 அன்று தூத்துக்குடி சென்ற நடிகர் இரசினிகாந்து, இந்தப் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்தினார்கள் என்றும், இவ்வாறு போராட்டம் - போராட்டம் என்று நடத்திக் கொண் டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.
அரசின் கணக்குப்படி 20 ஆயிரம் மக்கள் பங்கெடுத்த போராட்டம் - உண்மையில் இதைப்போல் இரண்டு மடங்கு கூடுதலான எண்ணிக்கையில்தான் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த மக்கள் போராட் டத்தை சமூக விரோதிகள் வழி நடத்திய போராட்டம் என்று கொச்சைப்படுத்தியதன் மூலம் இரசினிகாந்து தன்னை மக்கள் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொண்டார்.
இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று இரசினிகாந்து கூறியதில் ஓர் உட்பொருள் உள்ளது. இப்போது 13 பேரைத்தான் சுடுகாட்டிற்கு அனுப்பியுள்ளோம். இனி போராட்டங்கள் தொடர்ந்தால் அங்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்திதூத்துக்குடியில் செத்ததைவிட அதிக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பு வோம் என்ற உட்பொருளில் தான் இரசினிகாந்து அவ்வாறு கூறியுள்ளார்!
காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து செயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை தமிழர்கள் நடத்திய போராட்டங்கள்தான் தொழில் வளர்ச்சியையும் கொண்டு வந்தது; மக்கள் உரிமைகளில் முன்னேற்றங்களையும் கொண்டு வந்தது. உரிமைப் போராட்டங்களே இல்லாத சுடுகாட்டு அமைதியை இரசினிகாந்து விரும்புகிறார்.
நிலம், நீர், காற்று மூன்றையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் எந்தத் தொழிற்சாலையையும் - தொழிலையும் மூடச் சொல்லிப் போராடுவதுதான் மக்களைப் பாதுகாக்கும்; அப்போராட்டங்கள் இல்லை யென்றால், மக்கள் உயிரைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் கவலைப்படாத தொழில் துறை வேட்டை ஓநாய்களின் கொள்ளைகள் மட்டுமே மிஞ்சும்!
கடைசியாக ஒன்று..
இரசினிகாந்து மக்கள் விரோதி - தமிழர் விரோதி என்பதைப் புரிந்து கொண்டோம்! திரைப்படக் கொள்ளை வசூல் மட்டுமே அவரின் இலட்சியம் என்று தெரிகிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். - மோடி குரலைத் தான் வெளிப்படையாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்வினையாக இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று தமிழ் நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க வேண் டும். காலா படத்தைப் பார்க்க மாட்டோம் எனத் தமி ழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
கர்நாடகத்தைப் பாருங்கள்! காவிரிச் சிக்கலில் ஒப்புக்கு அரைகுறையாகத் தமிழ்நாட்டு உரிமை பற்றி இரசினிகாந்த் பேசினார். அதற்காகக் கர்நாடகத்தில் காலா படம் திரையிட அனுமதியில்லை என்று ஒட்டு மொத்தக் கன்னடர்களும் அரசும் முடிவெடுத்துள் ளார்கள்.
தமிழர்களே ஏமாந்தது போதும்; விழித்துக் கொள்வீர்!
கன்னட நாட்டு இரசினிகாந்தின் காலா படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர்கள்!
“கருப்பு” என்பதை இந்தியில் “காலா” என்று பெயர் வைத்துள்ளார். தமிழ்த் திரைப்படத்திற்கு இந்திப் பெயரா? சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com