உடனடிச்செய்திகள்

Sunday, June 29, 2014

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் - தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து
துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்
தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

இந்திய அரசின் துணையோடு அடாவடியாகக் கர்னாடகம் காவிரி நீர் மறுப்பதாலும், முல்லைப்பெரியாறு சிக்கலில் கேரளத்தின் இனவெறி காரணமாக அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாததாலும் ஏற்பட்டுள்ள சிக்கல் ஒரு புறம், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக மழைகுறைந்து வருவது மறுபுறம் என்று மிகப்பெரும் தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு தத்தளிக்கிறது.

நெல், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் மட்டுமின்றி மரப்பயிர்களும் வறட்சிக்காரணமாக பொய்த்து விட்டன.

காவிரி பாசனப்பகுதிகளில் கூட நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போகத் தொடங்கிவிட்டது. நிச்சயமற்ற மின் வழங்கலும் சேர்ந்து சிக்கலை ஆழப்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம், குளித்தலை பகுதிகளில் கூட தென்னை மரத்திற்கே தண்ணீர் இன்றி அவை வாடுகின்றன. வறட்சியை தாங்கி நிற்கும் பனைமரம் கூட சேலம் மாவட்டம், எடப்பாடியில் கருகி வருவதாகவும் ஏறத்தாழ 7000 மரங்கள் கருகி உதிர்ந்து விட்டதாகவும், ஏடுகளில் வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சேலம், தர்மபுரி, கிரு~;ணகிரி மாவட்டங்களில் மா, எலுமிச்சை, பப்பாளி சாகுபடிச் செய்யும் உழவர்கள் நிலத்தடி நீர் இன்மையால் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். இம்மாவட்டங்களில் கறவை மாடுகளுக்கு வைக்கோல் இன்றி உழவர்கள் தவிக்கிறார்கள். அறுவடை காலத்தில் வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துள்ள இடைமட்ட வணிகர்கள் ஒரு டிராக்டர் வைக்கோலை 14000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள். ஆலைகளிலிருந்து வரும் தீவனங்களும் தாறுமாறாக விலை ஏறி விட்டன.

இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளைக் கேரளாவிற்கு ஓட்டிச்செல்லும் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தேசிய ஆறான காவிரியைச் சார்ந்து குடிதண்ணீர் பெற்றுவரும் 85 ஒன்றியங்களில் பெரும்பான்மையானவை  குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன். பல நகராட்சிகளில் வாரம் ஒரு முறை குடிதண்ணீர் விடுவது என்ற போக்கு இயல்பாகிவிட்டது. இந்தக் குடிதண்ணீர் தட்டுப்பாடு தனியார் குடிநீர் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

தமிழக அரசு இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள ஒதுக்கி உள்ள 680 கோடி ரூபாய் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றதாகும்.

இந்நிலையில் 2012-ல் அறிவித்தது போல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து இந்திய அரசை வலியுறுத்தி இயற்கைப் பேரிடர் சிறப்பு நிதியைப் பெற்று இடர் நீக்கப் பணிகளில் தமிழக அரசு விரைந்து ஈடுபட வேண்டும்.

தமிழர்கள் நீர் ஆதாரங்களைப் பெருக்க உருவாக்கிய பழைய நீர்நிலை கட்டுமானங்களை உயிர்ப்பிப்பது, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஊக்கப்படுத்துவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கொடுங்குற்றமாக அறிவித்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நீண்டகாலத் திட்டங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


இல்லையேல் வறட்சிக்காரணமாகப் பெரும் எண்ணிக்கையி தமிழர்கள் புலம்பெயரும் ஆபத்து உள்ளது.

தோழமையுடன்
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Thursday, June 26, 2014

குடந்தை மலையாள ஆலூக்காஸ் தாக்கப்பட்ட வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களை தாக்கிய மளையாளிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 07-11-2011 அன்று நடைபெற்ற மளையாள நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாள தோழர் க.விடுதலைச்சுடர், தோழர்கள் ரவி (எ) செழியன், ம.முரளி, சிலம்பரசன், சம்புகன் ஆகியோரைக் காவல்துறை கைது செய்தது.

தோழர்கள் மீது பல கொடும்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது. பின்னர், பிணையில் வெளிவந்த தோழர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கை, வழக்கறிஞர்கள் இரா.சங்கர் மற்றும் சி.சங்கர் ஆகியோரும், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் த.தே.பொ.க வழக்கறிஞர் தோழர் கரிகாலன் ஆகியோரும் தோழர்களுகாக நேர்நின்று வாதாடினர். பின்னர், இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பை இன்று (26-06-2014) காலை வழங்கிய நீதிபதி வ. பத்பநாபன், வழக்கிலிருந்து தோழர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார்.

விடுதலையான தோழர்கள் அனைவருக்கும், நீதிமன்றத்தில் த.தே.பொ.க. சார்பில் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

தோழர்களுக்கு நாமும் பாராட்டுத் தெரிவிப்போம்!

பேச: தோழர் விடுதலைச்சுடர், 9443704375

Wednesday, June 25, 2014

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

தமிழினத்தின் வீரமரபின் அடையாளமான சல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சி - திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இன்று(25.06.2014) அறிவன்(புதன்) கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி திருச்சி அமைப்பாளர் தோழர் மு.தியாகராசன் தலைமை ஏற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.சல்லிக்கட்டு பேரவையின் மாநில துணைத்தலைவர் திரு. மு.தன்ராசு, சல்லிக்கட்டு பேரவை திரு. ஜீலி, திரு.தங்கத்துரை, ம.தி.மு.க அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் நா. இராசாரகுநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மு.த.கவித்துவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 


த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாற்ற முடியாதது அல்ல. ஏற்கெனவே இடஒதுக்கீடு, இராசீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பு உள்ளிட்டவைகள் மக்கள் போராட்டத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் திருத்தப்பட்டிருக்கின்றன. எனவே தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிக்கும், சல்லிக்கட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழக, இந்நிய ஒன்றிய அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையை நீக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.


நிறைவில், த.தே.பொ.க. தோழர் இனியன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில், த.தே.பொ.க., த.இ.மு., சல்லிக்கட்டுப் பேரவை அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

Saturday, June 21, 2014

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு!
இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள்
ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண் உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.

அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டுருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.

இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவல் மொழி பற்றிய 1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம், இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் சொல்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் இந்தி மட்டுமே கட்டாய அலுவல் மொழியாக இருக்கும் என்று அது கூறவில்லை. அச்சட்டத் திருத்தம் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தியிலும் இருக்கலாம், ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறது.

இந்தியைத் தீவிரமாக திணிப்பதற்கான முனைப்பில் காங்கிரசு அரசும் செயல்பட்டது. இப்பொழுது பா.ச.க. அரசும் அதே திசையில் செயல்படுகிறது.

1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்திற்கு மதிப்பளித்து 27.05.2014 அன்று வெளியிட்ட மேற்படி கட்டளைச் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டில் எழுந்தது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.

உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழை குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழக பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, எந்த வகையில் மொழிக் கொள்கையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது வினாக்குறியாக உள்ளது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் – தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை

Friday, June 20, 2014

இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை

இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக
இனவெறித் தாக்குதல்
இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை

ஈழத்தமிழர்கள் இன அழிப்பைத் தொடர்ந்து, இப்போது தமிழ் முஸ்லீம்களை குறிவைத்து இனவெறித் தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது சிங்கள – பவுத்தப் பேரினவாதம்.

அண்மைக்காலமாக இலங்கைத் தீவில் தெற்கில் வாழும் கிருத்துவர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள புத்த வெறியர்கள் திட்டமிட்ட வகையில் தாக்கி வருகின்றனர். இச் சிறுபான்மை மக்களுடைய வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை தொடர்த் தாக்குதலுக்கும், சூறையாடலுக்கும் உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக சூன் 15 தொடங்கி அலுத்துகமா, பெருவலா, தர்காடவுன் போன்ற இடங்களில் இசுலாமியருக்கு எதிரான தாக்குதல்கள் ஓர் இனத் துடைப்பு நடவடிக்கையாக உச்சம் பெற்றுள்ளது “பொத்து பல சேனா” என்ற சிங்கள – புத்த வெறி அமைப்பு காவல்துறையின் துணையோடே இத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிங்கள புத்த பிக்குகள் தலைமையில் செயல்படும் இந்த காடையர் அமைப்புக்கு மகிந்த இராசபட்சேயும், கோத்தபய இராசபட்சேயும் வெளிப்படையாக ஆதரவு அளித்ததைத் தொடந்தே இவர்களது இன வெறியாட்டம் தீவிரம் பெற்றுள்ளது.

இலங்கையில் அரசு வழிப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் சிங்கள – பவுத்த பாசிசத்தின் உடன்பிறந்த விளைவு இது.

தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள இந்த இன வெறித் தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்கள – பவுத்த பாசிச இராசபட்சே கும்பலை இனப் படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தாமல் சர்வ தேச சமூகம் காலம் கடத்துவதால் ஊக்கம் பெற்றுள்ள இன வெறி கும்பல் அடுத்தடுத்து இன அழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் இறங்குகிறது.

சிங்கள – பவுத்த பேரினவாத அடாவடிகள் அனைத்துக்கும் இந்திய அரசு பக்க பலமாக திகழ்வதால் எந்த கேள்விமுறையும் அற்று இந்த அநீதி தொடர்கிறது.

இலங்கை அரசின் துணையோடு சிங்கள் புத்த வெறியர்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தும் இன வெறித் தாக்குதல்களை இப்போதாவது இந்திய அரசு வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இந்த வெறியாட்டம் மேலும் தொடராமல் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் என த.தே.பொ.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Monday, June 9, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!
இதில் ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் ஒரே கருத்துதான் இருக்கிறது என்றும், எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே கருத்து தான் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு, முதலமைச்சர் சித்தராமையா பிரதமரை சந்திக்க உள்ளாரே, அது ஏன்? ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதற்கு மேலும் அழுத்தம் தருவதற்கும், ஒருவேளை வாரியம் அமைத்தால் அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உண்டாக்குவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட உத்தியை கர்நாடக அரசு கடைபிடிக்கிறது.

தொடர்ந்து காவிரி நீர் மறுக்கப்பட்டு, குறுவையும் சம்பாவும் பாதிக்கப்பட்டு குடி தண்ணீரும் இன்றி கோடிக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாக அல்லலுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்தத் துயரத்தைப் போக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இந்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். அந்த சட்டக்கடமையை இந்திய அரசு நிறைவேற்றிட நீதிமன்றத்தின் வழியாக முயல்வது ஒருவகை. அரசியல் ரீதியாக முயல்வது இன்னொரு வகை. கர்நாடக அரசு இந்த இரு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்த இரு வழிகளுக்கும் மேலாக காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கு மறுப்பதற்கு, கர்நாடக விவசாயிகளும் இனவெறி அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடுவதை கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கக்கூட முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த விரும்பவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்களான அனந்த் குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும், இந்திய அரசு காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்காமல் தடுப்போம் என்று ஒளிவு மறைவின்றி அறிவிக்கின்றனர். அச்செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவ்விருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துதான் இந்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட இனச்சார்போடு நடுவண் அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக சவால் விடுகிறார்கள். இந்த இரு நடுவண் அமைச்சாகளின் சட்டவிரோதப் போக்கை தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மேற்படி இரு நடுவண் அமைச்சர்களும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்று கூறுவது அவர்களின் சட்டவிரோதச் செயலை தமிழக முதல்வர் அனுசரித்துப் போவதுபோல் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ச.க. நடுவண் அரசு மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்குமா என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

எனவே, கடந்த காலங்களில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தி தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தது போது்ம். இனிமேலாவது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இக்கழகங்கள், ஆக்க வழியில் செயல்பட வேண்டும். அதற்கு, முன் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT