“வெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்டது போல் தொடராமல் தடுக்க மாற்றுத் திட்டங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது!”
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
அரியானா மாநிலம் சிக்கந்தப்பூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை, அரியானாவைச் சேர்ந்த 10 – 15 பேர், நேற்றைக்கு முதல் நாள் நள்ளிரவு 1 மணி அளவில், கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். இனிமேல் அரியானாவுக்கு வேலைக்கு வரக்கூடாது, உடனடியாக அரியானாவைவிட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று சொல்லி, அந்த இருவரையும் ஒரு வீட்டுக்குள் அடைத்து கடுமையாக அடித்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த, மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை சிலர் சூழ்ந்து கொண்டு, கன்னடம் பேசத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். பேசத் தெரியாது என்று அவர்கள் சொன்னவுடன் அவர்களைத் தாக்கி, கன்னட மொழித் தெரியாதவர்களுக்கு கர்நாடகத்தில் வேலையில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த நிகழ்வுகளும் வழக்குகளாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த இரு வன்முறை நிகழ்வுகளும் கண்டிக்கத்தக்கவை. ஆனால், இவ்வாறான நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்பதை சமூக அறிவியல் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பல தேசங்களாக விளங்க வேண்டிய தேசிய இனங்கள், “இந்தியா“ என்ற ஒரே நாடாக வெள்ளை ஏகாதிபத்தியத்தால் பிணைக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பிறகும் அது அப்படியே நீடிக்கிறது. இந்தியாவின் இந்தத் தனித்தன்மையை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் கிட்டத்தட்ட அவை தனியாக இருந்தால் என்ன உரிமைகளை அனுபவிக்குமோ, அதற்குச் சமமாக இந்தியாவுக்குள் அவற்றுக்கு உரிமை வழங்க வேண்டியது அவசியம்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், மொழிவழித் தாயகங்களாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மிகையாக பிற மொழி பேசுவோர், இன்னொரு மொழி பேசும் மக்களின் தாயகத்தில் குடியேறுவதும் தொழில் வணிகம் செய்வதும் அந்த மண்ணுக்குரிய தேசிய இன மக்களின் உரிமைகளை பறிப்பதாக அமைகிறது. அந்த மண்ணுக்குரிய மக்களின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அயல் இனத்து மக்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக இது அமைகிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளன. மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவை பிற மாநிலத்தவருக்கு உள் எல்லை அனுமதிச் சீட்டு (Inner line permit) என்ற முறையை வைத்து, வெளி மாநிலத்தவரின் மிகை நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாத வகையில் தடைச் சட்டம் உள்ளது. கர்நாடகத்தில், சரோஜினி மகிசி குழு பரிந்துரையை ஏற்று, ஊழியர் நிலையில் 100க்கு 90 விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை வழங்க வேண்டுமென்றும், அதிகாரிகள் மட்டத்தில் 100க்கு 60 விழுக்காடு கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றும் ஆணைகள் போட்டுள்ளார்கள். அதைச் செயல்படுத்த உறுதியளிப்பதாக அண்மையில்தான் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
நடந்து முடிந்த அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா வெளியிட்டத் தேர்தல் அறிக்கையில், எமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரியானாவின் தனியார் துறையில் அரியானாவின் மண்ணின் மக்களுக்கு 50 விழுக்காடு வேலை ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி கூறியிருந்தார்.
ஏற்கெனவே, வெளியாரை வெளியேற்றும் போராட்டம் அசாமில் நடந்த போது அப்போதைய பிரதமர் இராசீவ் காந்தி, வெளிநாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர் உள்ளிட்ட வெளியாரை ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கு வைத்து, அதன்பிறகு வந்தவர்களை வெளியேற்றுவது என்று போராட்டக்காரர்களுடன் உடன்படிக்கை செய்தார்.
இப்பொழுதும் கர்நாடகத்தில் வெளி மாநிலத்தவர் விளைநிலங்களை வாங்குவதற்கு தடைச் சட்டம் உள்ளது. மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே காங்கிரசு முதலமைச்சரும், பா.ச.க. முதலமைச்சரும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, தங்கள் மாநிலத்திற்கு உ.பி. மற்றும் பீகாரிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறெல்லாம், பல்வேறு வடிவங்களில் பல்வேறு மாநிலங்களில் வெளியார் நுழைவுக்கு எதிராக சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கின்றன.
எனவே தான், தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர் வரைமுறையின்றி குடியேறுவதையும், வேலையில் சேருவதையும் சொத்து வாங்குவதையும் கட்டுப்படுத்த 6 வகையானத் தீர்வுகளை முன்வைத்துப் போராடி வருகிறது.
• அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 20 விழுக்காட்டிற்கு மேல் வேலை பார்க்கும் நிறுவனங்களில் மிகையாக உள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்.
• தமிழ்நாட்டின் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை, தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
• வரைமுறையின்றி வந்து அன்றாடம் வெள்ளம் போல் வந்து குவிகின்ற வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது.
• வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
• வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல், உள் அனுமதிச் சீட்டு (Inner line permit) வழங்கும் உரிமை தமிழக அரசுக்கு வேண்டும்.
• மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குவதைப் போல, ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் தமிழக சிறு - நடுத்தரத் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு, ‘உழைப்பாளர் மானியம்’ வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்ற வேண்டும். இவ்வாறான சட்ட வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டால், ஒரு மாநில மக்களின் தாயக வாழ்வுரிமையை தகர்க்கும் வகையில், பிற மாநிலத்தவர் மிகையாக நுழைவது தடுக்கப்பட்டு, ஒரு மாநில மக்களுக்கு எதிராக இன்னொரு மாநில மக்கள் வன்முறையைக் கையாள்வது தவிர்க்கப்படும். இதைப் பற்றிதான் அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சரியான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தை தமிழ்நாட்டின் சிவசேனா என்றும், அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களை தமிழ்நாட்டின் பால் தாக்கரேக்கள் என்றும் கொச்சைப்படுத்தவதன் மூலம் இந்த சிக்கலுகளுக்குத் தீர்வு காண முடியாது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் ஆக்கவழிப்பட்ட மேற்கண்டத் தீர்வுகளை, சட்ட விதிகளாக உருவாக்கிட தமிழக அரசு, இந்திய அரசு ஆகியவை முன் வர வேண்டும். தமிழ் மக்கள், இக்கோரிக்கைகளை அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.