உடனடிச்செய்திகள்

Friday, June 29, 2012


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர
தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர”  என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சென்னை வண்டலூரில்  நேற்று(28.06.2012) மாலை நடத்தியது.

சென்னை வண்டலூர் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 10ஆம் வகுப்பு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நடைபெற்றது. தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் முகிலை இராச பாண்டியன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான புலவர் த.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார். தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளைச்  செயலாளர் பாவலர் ம.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைநகர்த் தமிழ் சங்கத் துணைத் தலைவர் புலவர் வெற்றியழகன், தலைமை நிலையச் செயலாளர் புலவர் புஞ்சைத் தமிழரசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் கு.ப.இளங்கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கவிதை உறவு இதழாசிரியர் கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாணவர்களுக்குப் பரிசளித்து, சிறப்புரையாற்றினார்.

நிறைவில் உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேசியதாவது:

பதிப்புச் செம்மல் பேராசிரியர் மெய்யப்பன் அவர்கள், மெய்யான தமிழ்ப் பற்றாளர். தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் துணை நின்றவர். நாங்கள் நடத்தி வரும் தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் எஸ்.வி.இராசதுரை, இந்து-இந்தி-இந்தியா என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வந்தார். அதனை நூலாக வெளியிடவேண்டுமென்று நாங்கள் மெய்யப்பனாரை அணுகிய போது அதை வெளியிட்டுத் தந்தார்.

கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது அச்சிலையின் மாதிரி வடிவத்தை செய்து வந்து நாங்கள் தோழமை அமைப்புகளோடு சேர்ந்து அதே இடத்தில் அச்சிலையை வைக்கப் போனோம். அப்போது கைது செய்யப்பட்டோம். அதன்பிறகு, பூம்புகாரிலிருந்து மதுரை வரை ஊர்திப் பரப்புரை நடத்தி கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தினோம். அப்பொழுது, மக்களிடம் வழங்குவதற்காக நான் எழுதிய கண்ணகி சிலையும் கலை இலக்கியப் பார்வையும் என்ற நூலை அச்சிட்டுத் தருமாறு மெய்யப்பனாரை வேண்டினோம். அவர் 2000 படிகள் அச்சிட்டு அன்பளிப்பாக எங்களிடம் வழங்கினார். சிதம்பரத்தில், அவரை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கிய “தமிழ்க்காப்பணி“யில் அவருடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் சேர்ந்து செயல்பட்டனர். அவருடைய சாவு இவ்வளவு விரைவில் நடைபெறுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் இனத்தில் பிறந்ததற்காக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெருமிதம் கொள்ள வேண்டும். உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் செம்மொழியும் தமிழே. நம்முடைய தமிழ்ச் சமூகம் அறிவியல் சமூகமாக இருந்திருக்கிறது. உலகத்தைக் கடவுள் படைத்தார் எனக் கூறினால் தொல்காப்பியத்தின்படி அது இலக்கணப் பிழையாகும். உலகம் இருக்கிறது என்பதே தொல்காப்பியர் கருத்து.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன வகை சாமிகளை கும்பிட்டார்கள், என்ற நடப்புகளை தொல்காப்பியர் கூறினாரே  தவிர இந்த உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறவில்லை. அதே போல், மொழியைக் கடவுள் படைத்தார் என்ற கருத்தும் தமிழர்களுக்குக் கிடையாது. தமிழ் மொழியைக் கடவுளாக்கி, தமிழ் வாழ்த்துப் பாடுவது பண்டைக் காலத்தில் நமது மரபில்லை. தமிழ் எழுத்தின் ஓசை ஒவ்வொன்றும் உடல் உறுப்பில் எங்கிருந்து பிறக்கிறது, எப்படி உடல் உறுப்புகள் செயல்படுகின்றன என்பவற்றை மட்டுமே தொல்காப்பியர் கூறினார்.

ஐரோப்பாவில் 13ஆம் நூற்றாண்டில் பிலாலஜி(Philology) என்ற மொழியியல் தோன்றும் வரை, மொழியைக் கடவுள் படைத்தார் என்றே மேலை நாடுகளில் கூறிவந்தனர். சுந்தரம் பிள்ளை அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் புதிதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஒரு போராட்டம் என்ற அளவில் தான்.

இப்படிப்பட்ட, அறிவு மரபுக்கு சொந்தமானவர்கள் நாம் என்பதில் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த மொழியைப் புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தை வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும், ஆங்கிலத்திலேயே மனைவியிடம் பேச வேண்டும், வேலைக்காரியிடம் பேச வேண்டும் என்றும், தமிழ் ஒரு மூடநம்பிக்கை மொழி என்றும் முற்போக்குக் கருத்துகள் சிலவற்றை வலியுறுத்திய தலைவர்கள் தமிழ்நாட்டில் கூறிவந்தார்கள்.

இதனால், பாதிக்கப்பட்டத் தமிழர்களில் ஒரு சாரார் தமிழர்களின் இலக்கியச் செழுமையையும், அறிவியல் மரபையும் புறக்கணித்தனர். நம் தாய் மொழியை இழிவாகக் கருதும் மனநோய்க்கு ஆளானார்கள். இந்த மனப்போக்கு இன்று எங்கே கொண்டு வந்து  விட்டுள்ளது? அம்மாவை மம்மி என்றும், அப்பாவை டாடி என்றும் அழைக்கும் அவலத்திற்கு கொண்டு வந்துள்ளது. அம்மாவை மம்மி என்று அழைப்பதை அருவருக்க வேண்டும். அசிங்கமாகக் கருத வேண்டும்.

அன்னை தந்த பாலொழுகும், குழந்தை வாய் தேனொழுக, அம்மா என்று சொன்னதுவும் தமிழன்றோஎன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறினார். நம்முடைய வேரிலிருந்து நாம் வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தான் நாம் செழிக்க முடியும். வளர முடியும். அடுத்த மரத்தின் நிழலில் வளரும் செடி, வளர்ச்சியடையாது. நாம் யாராக இருக்கிறோமோ அதிலிருந்தே நாம் வளர வேண்டும். நம் வேரை நறுக்கிவிட்டல்ல. பிடுங்கி எறிந்துவிட்டல்ல.

ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும், இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வேலையில்லாமல் துன்புறுகிறார்கள். பலர், மாதம் 4000, 5000த்துக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இந்தி மாநிலங்களைச் சேர்ந்த வடவர்கள் அங்கே வேலையில்லாமல், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் புகுந்து உயர்சம்பள வேலையிலிருந்து, அத்துக்கூலி வேலை வரை கைப்பற்றி விடுகிறார்கள். தன் சொந்த மக்களுக்கு வேலை தராத இந்தி, தமிழ் மக்களுக்கு வேலை தந்து விடுமா?

எந்த மொழியாக இருந்தாலும், ஒரு மொழி வேலை தந்து விடாது. சமூக அமைப்பு தான் வேலை தரும். தமிழர்கள் மீது ஆங்கில ஆதிக்கத்தை நீடிக்கச் செய்வதற்கும், இந்தித் திணிப்பை ஞாயப்படுத்துவதற்கும் இந்த மொழிகளைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று  கவர்ச்சி வலை வீசுகிறார்கள்.

இந்தியாவுக்கு ஒரு இணைப்பு மொழி வேண்டும் என்கிறார்கள். காங்கிரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ச.க. போன்றவை இந்தி மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். அதற்காக அவர்கள் மும்மொழிக் கொள்கையை முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைக்க வேண்டும் என்று கோரி இருமொழிக் கொள்கை என்று பேசுகிறார்கள்.

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்ற முழக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் நீண்டகாலமாக முழங்கி வருகின்றன. மும்மொழிக் கொள்கையானாலும், இருமொழிக் கொள்கையானாலும், அயல்மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழை அடிமை நிலைக்குத் தள்ளுவதாகும்.

இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை. சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் இருக்கின்றன. அங்கு இணைப்பு மொழி எதுவும் கிடையாது. 4 மொழிகளும் ஆட்சி மொழிகளே. 4 மொழிகளும் கல்வி மொழிகளே.  வளர்ச்சி அடைந்த 15 மொழிகளைக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று இரசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு சாரார் கோரினர். இரசிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இலெனின் அக்கருத்தை எதிர்த்தார். ஒரு மொழியை இணைப்பு மொழியாக்கிவிட்டால், அது மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று இலெனின் கூறி இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி, இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாட்டையே எதிர்த்தார் இலெனின்.

இன்றைக்கும் கூட, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில், பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும், ஒரு மொழிப் பாடமாக இருக்கிறது. ஆனால், அந்நாடுகளில் ஆங்கிலத்தில் கடைத்தெருவிலோ, அலுவலகங்களிலோ பேசுவதை கவுரவக் குறைவாக கருதுகிறார்கள்.

எனவே, மெய்யப்பனார் நினைவைப் போற்றும் இந்நாளில், அதுவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் இவ்விழாவில் ஒருமொழிக் கொள்கையை ஏற்று, நம் தமிழ் மொழியே கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் விரிவடையச் செய்ய நாம் உறுதியேற்போம். இணைப்பு மொழி என்ற மாயக் கோட்பாட்டைப் புறந்தள்ளுவோம்.

இணைப்பு மொழி இல்லையென்றால் பல மொழிகள் பேசும் நாட்டில் மக்களிடையே இணைப்பு ஏற்படாது என்று இரசியாவில் கம்யூனிஸ்டுகளில் ஒரு சாரார் கூறிவந்தனர். அக்கருத்தை மறுத்த இலெனின், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருமொழி பேசும் ஓரின மக்கள், வேறு மொழி பேசும் தேசங்களோடும் மக்களோடும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்றார்.

எனவே, நாமும் ஒருமொழிக் கொள்கைக்கு உறுதியாகக் குரல் கொடுப்போம். போராடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.நிறைவில், தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் ஞா.சிறீதரன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர் பெருமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். 

(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: மா.பாலா)

Friday, June 22, 2012

“ஈழத்தமிழர்களை விடுதலை செய்!” – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!


“ஈழத்தமிழர்களை விடுதலை செய்! செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!

செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் 'சிறப்பு முகாம்' என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டில் இன்று(22.06.2012) காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த மாதம் தங்களை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகளான ஈழத்தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, இம்மாதம் 15.06.2012  அன்று சிறைவாசிகளை படிப்படியாக விடுதலை செய்வதாக ஒத்துக் கொண்டது. ஆனால், 15.06.2012 அன்று கடந்த பின்னரும் கூட யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

தமது வாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, தற்போது மீண்டும் செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகள் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது,  சாகும் வரையிலான உண்ணாப்போராட்டம் நடத்திய ஐவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை இம்முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு தமது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சென்னையில் தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் ஒன்று கூடி தமிழக முதல்வருக்கு 19.06.2012 அன்று பல நூற்றுக்கணக்கில் அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை செய்! விடுதலை செய்! ஈழத்தமிழ் அகதிகளை வாக்குறுதிக்கேற்ப விடுதலை செய்! தமிழக அரசே விடுதலை செய் என்பன உள்ளிட்ட முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஷாஜகான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழகத்தில் செயல்படுகின்ற ஈழத்தமிழர் சிறப்பு முகாம்கள் தமிழினத்தின் அவமானச் சின்னமாக கருதப்பட வேண்டும். எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகள் எல்லாம் ஈழத்தமிழர்களை சக மனிதனாக அங்கீகரித்து அவர்களுக்கு குடியுரிமை அளித்து வாழ்க்கை அளிக்கிறது. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டுக்காரர்களுக்கும் மலையாளிகளுக்கும் குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு இங்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறது? தமிழ்நாட்டுத்  தமிழர்கள் இனஉணர்வுடன் ஒன்று சேர்ந்து போராடாமல் இருந்ததும் இதற்குக் காரணம். உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், ஈழஅகதிகளின் உயிருக்கு ஏதேனும் கேடு நேர்ந்தால் அதன்பின் சடங்குப் போராட்டங்கள் நடைபெறாது. தமிழ்த் தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தின் தொடக்கமாக அது அமையும் என்று தெரிவித்தார்.

நிறைவில், தீர்மானம் முன்மொழிந்து பேசிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இப்போராட்டம் முதலில் முற்றுகைப் போராட்டமாகத் தான் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்ப்போம் என்ற அடிப்படையில் தற்போது ஆர்ப்பாட்டமாக நடக்கிறது. இவ்வாய்ப்பையும் அவர் தவற விட்டால்,  நாங்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமை கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகையிடுவோம். அப்போது எங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாதுஎன ஆவேசமாகப் பேசினார். பெ.தி.க. இளைஞரணிச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனையில், உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ அகதிகள் திரு. செல்வராஜ், சதீஷ்குமார், மதன், பராபரன், செல்வம் ஆகியோரை தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, புகைப்படங்கள்: அருணபாரதி)

Wednesday, June 20, 2012

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் எதேச்சாதிகாரத்திற்கு பெ.மணியரசன் கண்டனம்!


அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் எதேச்சாதிகாரத்திற்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காலஞ்சென்ற மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி அவர்களின் 78வது பிறந்த நாளையொட்டி அவர் பெயரில் நிறுவப்பட்டுள்ள விருதுகள் வழங்கும் விழா 15.06.2012 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற இருந்தது. கடைசி நேரத்தில் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இது சட்டப் புறம்பான செயலாகும்.

முன்கூட்டியே முறைப்படி பணம்கட்டி ரசீதும் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சி நாளன்று அனுமதி மறுத்து நூலக ஆணைக்குழு அதிகாரிகள் கடிதம் கொடுத்துள்ளார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அன்றே உயர்நீதி மன்றத்தை அணுகி, திட்டமிட்டபடி கூட்டம் நடத்த நீதிமன்ற ஆணை பெற்றுள்ளார்கள். நீதிமன்ற ஆணை கிடைத்த பிறகும் நூலக ஆணைக்குழு அனுமதி தர மறுத்து வேறோரு கூட்டம் அரசு சார்பில் நடத்துவது போல் ஒரு போலி ஏற்பாடு செய்துள்ளார்கள். உயர்நீதிமன்ற ஆணை நகலை கொடுக்கச் சென்ற போது அரங்கம் மற்றும் நூலக ஆணைக்குழு அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அதிகாரிகள் வெளியேறி விட்டார்கள்.

சின்னக்குத்தூசி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்தவர்கள் நூலக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டத்தை நடத்தி விருதுகளை வழங்கியுள்ளார்கள். அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் சரஸ்வதி, திருச்சி செல்வேந்திரன் ஆகியேர் பேசியுள்ளனர்.
மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி மிகவும் பிரபலமான அரசியல் கட்டுரையாளர் ஆவார். பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த இளம் இதழாளர்களுக்கு விவரங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். அவர் தி.மு.க. சார்பாளர். எனவே அ.இ.அ.தி.மு.க. பற்றியும் அதன் தலைவர் செயலலிதா பற்றியும் அரசியல் விமர்சனங்கள் பல செய்தவர். இதன் காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு, எழுத்தாளர் சின்னக்குத்தூசி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்விழாவை தடுத்து நிறுத்தி சீர்குலைத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அவமதித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது இது முதல் தடவையன்று. ஏற்கெனவே பல நிகழ்வுகளில் இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, கூடங்குளத்தில் இன்று வரை 144 தடை ஆணையை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நீட்டித்து வருகிறது. 

மனிதப்பேரழிவை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுவுலைகளை மூடக் கோரி சனநாயக வழியில் பரப்புரை நடத்தியதற்காகத் தோழர்கள் முகிலன், வன்னியரசு, சதிசு ஆகியோர் மீது பொய் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அவ்வழக்கில் அவர்களுக்குப் பிணை கிடைத்த போது சிறைக்குள் இருந்த அவர்கள் மீது அடுத்தடுத்து புதிய வழக்குகளைப் போட்டு பிணையில் வரமுடியாத நிலையை உருவாக்கியது.
சென்னிமலையில் வேளாண்மைக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காததைக் கண்டித்து அமைச்சர் ஒருவருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக தோழர் கி.வே.பொன்னையன் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளை மீண்டும் மீண்டும் போட்டு பிணையில் வரமுடியாதபடி சிறையில் அடைத்து வைத்தனர். கூடங்குளம் அணுவுலையை அமைதிவழியில் எதிர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது பல நூறு வழக்குகள் பதிவு செய்யபட்டன.

சனநாயக முறைப்படி வெளிப்படுத்தப்படும் கருத்துகளையும், சனநாயகப் போராட்டங்களையும் சகித்துக் கொள்ளாத செயலலிதா ஆட்சி, தொடந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பதும் மக்களுக்காகப் போராடுவதை அனுமதிப்பதும் சனநாயகத்தின் உயிர்க்கூறுகளாகும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிகிறது. சமுகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tuesday, June 19, 2012


செங்கல்பட்டு சிறப்பு முகாம் சிறைவாசிகளை விடுதலை செய்க!
உணர்வாளர்கள் அவசரத் தந்தி!
வரும் வெள்ளி(22.06.2012) அன்று செங்கல்பட்டு
சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

சென்னை, 19.06.2012.

செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் 'சிறப்பு முகாம்' என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசே ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு தந்தி கொடுக்கும் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் தங்ககளை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகளான ஈழத்தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, இம்மாதம்(15.06.2012) அன்று சிறைவாசிகளை படிப்படியாக விடுதலை செய்வதாக ஒத்துக் கொண்டது. ஆனால், 15.06.2012 அன்று கடந்த பின்னரும் கூட யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

தமது வாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, தற்போது மீண்டும் செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகள் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது, 5ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை 7 பேர் மேற்கொண்டுள்ளனர். 4ம் நாளிலிருந்து உண்ணாநிலையில் இருந்து வரும் திரு. சதீஷ் குமார், திரு. பாரபரன் மற்றும் திரு. மதன் ஆகியோரது உடல் நிலை மோசமாகி சோர்வாக காணப்படுகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தும், தமிழக அரசு தமது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சென்னையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தமிழக அரசுக்கு அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் இன்று(19.06.2012) காலை 10.30 மணிளவில் நடத்தினர்.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், திருமதி அற்புதம் குயில்தாசன், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் இதில் திரளாக பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழியர் ம.இலட்சுமி, எழுத்தாளர்கள் வான்முகில், அமரந்தா, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

'விடுதலை செய் விடுதலை செய்! அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்' என்பன உள்ளிட்ட முழக்கங்கள் அஞ்சலக வாயிலில் தோழர்களால் முழங்கப்பட்டன. தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டன. வரும் வெள்ளி(22.06.2012) அன்று செங்கல்பட்டு முகாம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் தலைவர்கள் கூட்டாகத் தீர்மானித்தனர். 

செய்தி: த.தே.பொ.க., செய்திப் பிரிவு.

Thursday, June 7, 2012

சிங்கள அமைச்சரே வெளியேறுக! - கோவையில் ஆர்ப்பாட்டம்!

சிங்கள அமைச்சரே வெளியேறுக! - கோவையில் ஆர்ப்பாட்டம்!


கோவையில் கரும்பு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைவந்த, சிங்கள இனவெறியன் இராசபக்சே அரசின் அமைச்சர் ரேஜினால்டு ஒல்டுகூரியை கண்டித்து அவர் தங்கியிருந்த கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியன் இன்று தமிழ் உணர்வாளர்களால் முற்றுகையிடப்பட்டது. 

இன்று (07.06.2012) காலை 10 மணியளவில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை வடக்கு கிளைச் செயளாலர் தோழர் பா.சங்கர் தலைமையில், த.இ.மு செயளாலர்கள் கு.ரசேசுக்குமார், பிறை.சுரேசு, வே.திருவள்ளுவன், மா.தளவாய்சாமி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

பெரியார் தி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மேலும் பல அமைப்புகள் இன்று தொடர் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர். 

இதுவரை கைது செய்யப்பட்டத் தோழர்களை தமிழகக் காவல் துறையினர், சூளூர் பகுதியிலுள்ள ஒர் மண்டபத்தில் தங்க வைத்துள்ளது. 

கைதான தோழர்களைப் பாராட்டுவோம்! போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் உறுதியேற்போம்!

- தலைமைச் செயலகம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Wednesday, June 6, 2012

ஊடகச் செய்தி(06.06.2012) இராசபக்சேவை கைது செய்! - சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!இராசபக்சேவை கைது செய்! - சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்!

 

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான இராசபக்சேவை பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநல ஆயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றக் கோரியும், இன்று[06-06-12] காலை 10.30 மணிக்கு, சென்னை பிரித்தானிய துணைத் தூதரகத்தின் முன் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் ஒன்று கூடல் நடைபெற்றது.

 

நிகழ்வை, மே பதினெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் தோழர் பாவேந்தன், த.மு.மு.க. பொறுப்பாளர் ஆருண் ரஷீத், நாம் தமிழர் கட்சி இணையதளப் பாசறைப் பொறுப்பாளர் தோழர் பாக்கியராசன், பெ.தி.க. தென் சென்னை மாவட்டச் செயளாலர் தபசிக்குமார், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். 

 

"கைது செய்! கைது செய்! இனப்படுகொலை போர்க்குற்றவாளி இராசபக்சேவை கைது செய்" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

பின்னர், பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்தில் இராசபக்சேவை இங்கிலாந்திலேயே கைது செய்யக் கோரும் விரிவான கோரிக்கை மடல் பொறுப்பாளர்களால் அளிக்கப்பட்டது. 

 
Monday, June 4, 2012

இலண்டனில் இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!

இலண்டனில் இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!


இலண்டன் சென்ற சிங்கள இனவெறியன் இராசபக்சேவை விரட்ட வேண்டும் என இலண்டன் வாழ் புலம் பெயர் தமிழீழ மக்களுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு.

நாள்: சூன் 3, 2012.

Saturday, June 2, 2012

பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு உடனே தடை செய்க! - நா.வைகறை கோரிக்கை!

பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு உடனே தடை செய்க! 
தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கோரிக்கை! 

பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் போன்ற போதைப் பாக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்று நோய், வயிற்றுப் புண், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன. பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்டவைகளை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. பொது மக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை நடத்தியுள்ளது. விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி வணிகர்கள் மத்தியில் பரப்புரை இயக்கமும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இவ்வகைப் பாக்குகளை தடை செய்யாமல் விலையை சற்று உயர்த்திய நேரத்தில் தடை செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை முன் மறியல் போராட்டமும், உற்பத்தி செய்யும் சென்னை கோத்தாரி நிறுவன முறு்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டு தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த செயலலிதா ஆட்சி காலத்தில் உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வகை போதைப் பாக்குகள் தடை செய்யப்பட்டன. இதனை எதிர்த்து குட்கா தயாரிக்கும் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடைபெற்றன.

அண்மையில் இந்திய அரசு புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளன. இதன் மூலம் பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.

குட்கா வகை போதைப் பாக்குகளை தடை செய்யும் நடவடிக்கையில் கடந்த காலத்தில் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்ட தமிழக அரசு இம்முறை பின்தங்கிவிடாமல், பான்பராக், மாணிக் சந்த், உள்ளிட்ட போதைப் பாக்குகளை உடனே தடை செய்ய வேண்டும் என்று தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Friday, June 1, 2012

பிரிட்டன் வரும் இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
பிரிட்டன் வரும் இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

 

வரும் 06.06.2012 அன்று இலண்டனில் பொதுநல ஆயநாடுகளின் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள, இலங்கைத் தடியரசுத் தலைவரும், மனிதகுலப் பகைவனுமான இராசபக்சே இலண்டன் வருகிறார்.

 

கடந்த 2010ஆம் ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இராசபக்சேவை, ஹீத்துரு விமான நிலையத்தை விட்டு இறங்க விடாத அளவிற்கு, வீரத்துடன் போராடிய பிரித்தானிய தமிழ் மக்களுக்கு, தற்போது மீண்டும் அதே போன்று இராசபக்சேவை விரட்டியக்கும் நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

2008-2009இல் தமிழீழ மண்ணில் 1இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளியான இராசபக்சேவுக்கு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரும் வரை உலகத் தமிழர்கள் ஓயக்கூடாது. இராசபக்சேவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என நம்பும் வகையில், அண்மையில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த லைபிரீய முன்னாள் அதிபர் சார்லஸ் டைலர் என்ற கொடுங்கோலனுக்கு 50 ஆண்டுகள் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 

கடந்த மார்ச் மாத்தில், ஐ.நா. மனித உரிமை அவையில், இராசபக்சேவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென பல்வேறு நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. உலக நாடுகள் மத்தியிலும், மனித நேய மற்றம் சனநாயக சக்திகள் மத்தியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராசபக்சேவை, இலண்டனில் விரட்டியடித்து பிரித்தானிய புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாறு படைக்க வேண்டும். அவர் விரட்டியடிக்கப்படும் போது, ஈழத்தமிழினப் படுகொலையை உலகம் மேலும் கூர்ந்து கவனிக்கும். உலகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

 

எனவே, வரும் சூன்-6 அன்று பிரிட்டன் வரும் இராசபக்சேவை, பிரித்தானியத் தமிழ் மக்கள் வீரத்துடன் விரட்டியடிக்க வேண்டும் என உரிமையோடும், உறவோடும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பெ.மணியரசன்,

இடம்: சென்னை

 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT