உடனடிச்செய்திகள்

Wednesday, February 27, 2013

சேலத்தில் கெயில் நிறுவன அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!




தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருட்டிணகரி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் சற்றொப்ப 325 கி.மீட்டர் நீளத்திற்கு, இந்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியை, தமிழகக் காவல்படையின் உறுதுணையுடன் செய்து வருகின்றது.

இத்திட்டத்தைக் கைவிடக் கோரி, நேற்று(26.02.2013) சேலத்திலுள்ள கெயில் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி தலைமையேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் தோழர் பி.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, நா.வைகறை, அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஈரோடு வெ.இளங்கோவன், சேலம் தோழர் பிந்துசாரன், கோவை தோழர் ஸ்டீபன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர்.

கைதான 1000க்கும் மேற்பட்டோரை, மண்டபங்களில் தங்க வைத்து மாலை விடுதலை செய்தனர் காவல்துறையினர்.






(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Sunday, February 24, 2013

அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை!

அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, இந்திய அரசை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 23-02-2013 அன்று காலை திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகள் முற்றுகையிடப்பட்டன.

உழவர்கள், உணர்வாளர்கள் என ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் முதன்மைச் சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இயங்கிவரும் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு நிறுவனம் நோக்கி பேரணியாக சென்றனர். சிகப்புச் சீருடையணிந்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் முன்னணியாகச் செல்ல, உழவர்களும், உணர்வாளர்களும் பின் தொடர, மாபெரும் மக்கள் வெள்ளமாக வீதிகள் நிரம்பி வழிந்தன. வழி நெடுக “காவிரி தமிழர் செவிலித்தாய், காவிரி தமிழர் உரிமை சொத்து”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! காவிரி வாரியம் இல்லாத இறுதித் தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காய்! ஏட்டுச் சுரைக்காய்!”, “காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரியில்லை!”, “வெளியேறு! வெளியேறு! காவிரி உரிமையை காத்திடாத இந்திய அரசே வெளியேறு” என்று உழவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் அதிரச் செய்தன.

முற்றுகைப் போராட்டத்தையொட்டி பெட்ரோல் கிணறு நிறுவன முகப்பு வாயிலருகே மூன்று அடுக்கு பாதுகாப்புப் படையினர் நின்றுக் கொண்டு இருந்தனர். நடுவண் தொழிற் பாதுகாப்புப் படை, கலவரத் தடுப்புப் படை, அதிவிரைவுப் படை என காவல்துறையினர் தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தோழர்கள் பெட்ரோல் கிணறு நிறுவன வாயிற்கதவுகள் அருகே முன்னேறினர். முன்னெச்சரிக்கையாக வாயிற் கதவுகளை காவல்துறையினர் இழுத்து மூடினார். தடுத்து நிறுத்தப்பட்ட உழவர்களும் உணர்வாளர்களும், திரளான பெண்கள் உள்ளிடோர் வாயிற்கதவருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அனைவரும் அதை எதிரொலித்தனர். போராட்டத்திற்கு தலைமையேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு பெட்ரோல் எடுக்கின்ற பணி நடைபெறக்கூடாது என்று தான் முற்றுகை போராட்டத்தை அறிவித்தோம். இப்போரட்டத்திற்கு பயந்தும், பணிந்தும் அரசே முழுவதுமாக இன்று இந்நிறுவனத்தை மூடி, முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளது” என்று அறிவித்தவுடன் தோழர்கள் பலத்த கரவோலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

அங்கே கூடியிருந்த திரளானத் தோழர்களிடம் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர்.கி.வெங்கட்ராமன், தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சேரன், காவிரி விவசாய பாசனப் பாதுகாப்பு சங்கப் பொறுப்பாளர் திரு. தனபால், பாரம்பரிய நெல் விவசாய சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், நாம் தமிழர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கந்தன், இயற்கை வேளாண்மை இயக்கத் தலைவர் தோழர் கே.கே.ஆர்.லெனின், தாளாண்மை உழவர் இயக்க பொறுப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய இயக்கம் பொது செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை மாவட்டத் துணை தலைவர் திரு இரவிச்சந்திரன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக தமிழர் நீதிக் கட்சி தோழர் இராசேந்திரன் நன்றி கூறினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், தோழர் க.முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ம.கோ.தேவராசன், தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச்செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைத்தலைவர் தோழர் கெ.செந்தில்கமரன், துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பங்கெடுக்க, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட தமிழின உணர்வாளர் அமைப்புத் தோழர்களும், தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட உழவர் அமைப்புத் தோழர்களும் ஊர்திகளில் வந்திருந்தனர்.














(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Friday, February 22, 2013


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க , இந்திய அரசை வலியுறுத்தி, அடியக்கமங்கலத்தில் பெட்ரோல் கிணறு முற்றுகைப் போராட்டம் பங்கேற்க வாரீர் தமிழர்களே..!

 காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அழைப்பு

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மிகவும் காலம் கடந்து, உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேறுவழியின்றி, கடந்த 20.02.2013 அன்று நடுவண் அரசு, தனது அரசிதழில் வெளியிட்டது.

இறுதித் தீர்ப்பில், தமிழக, கர்நாடக, கேரள, புதுவை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வு எவ்வளவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகிர்வைச் செயல்படுத்தத், தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இவ்வமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், இத்தீர்ப்பினால் எந்தப் பயனும் இல்லையென்று காவிரித் தீர்ப்பாயமே கூறியுள்ளது. எனவே, இவ்விருக்குழுக்களையும் அவசரச் சட்டம் இயற்றி நடுவண் அரசு நிறுவ வேண்டும்.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கூறியுள்ளபடி, கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ் சாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகள், தமிழகத்திலுள்ள மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகள், கேரளத்திலுள்ள பானாசுர சாகர் அணை ஆகியவற்றில், தண்ணீர் திறந்து மூடும் நிர்வாகம் மேற்படி காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காதவரை, “காவிரியிலிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்து விட முடியாதுஎன்று கூறும் அடாவடித்தனம் தொடரும். அரசிதழில் வெளியிடப்பட்ட, காவிரித் தீர்ப்பு வெறும் ஏட்டுச்சுரைக்காய் ஆகவே இருக்கும்.

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில் நடுவண் அரசு, அரசிதழில் வெளியிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. கர்நாடகத்தின் கருணையை நம்பியிருக்கும்படி தமிழகம் விடப்பட்டது. கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்தவே இல்லை.

இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு, இடைக்காலத் தீர்ப்புக்கு ஏற்பட்ட அதே கதி ஏற்படாமல் இருக்க, அவசரச்சட்டம் இயற்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியறுத்தி, நாளை(23.02.2013) காரி(சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலத்தில் உள்ள நடுவண் அரசின் பெட்ரோல் கிணறுகளை முற்றுகையிடும் போராட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகிறது.

பல்வேறு கட்சிகளும், உழவர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள காவிரி உரிமை மீட்புக்குழு நடத்தும் இப்போராட்டத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்கிறார்கள். இதையே அழைப்பாக ஏற்றுத் தமிழ் மக்கள், அடியக்க மங்கலம் போராட்டத்திற்கு, எழுச்சியுடள் வருமாறு அன்போடு அழைக்கிறேன்.


இவன்,
இடம்: தஞ்சை
 
பெ.மணியரசன்,

ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

Wednesday, February 20, 2013

காவிரித் தீர்ப்பு: அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


காவிரித் தீர்ப்பு: 



அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் 



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை



“காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதை செயல்படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

காலம் கடந்த்தாயினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளதை, காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்கிறது. ஆனால், அத்தோடு நின்று விட்டால் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

கடந்த 1991ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, நடுவண் அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதனை கடைசி வரை செயல்படுத்தவில்லை கர்நாடகம். 

இப்பொழுது, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளவாறு, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் கட்டுப்பாட்டின்கீழ், கர்நாடகத்தின் நான்கு அணைகளையும் நீர்ப்பாசன நிர்வாகத்திற்கு உட்படுத்தினால் தான், இந்த இறுதித் தீர்ப்பு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. நீர்ப்பாசன நிர்வாகத்தைப் பொறுத்தவரை, காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் முழு அதிகாரம் இருக்க வேண்டும்.

இப்பயொரு, தன்னாட்சி அமைப்பை உருவாக்காமல் காவிரி அடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதே தமிழகம் கண்ட அனுபவம்.

1998ஆம் ஆண்டு, ஒரு பஞ்சாயத்து சபை போல பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைத்தார்கள். அது முறையாக செயல்படவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அது அளித்த சில முடிவுகளை கர்நாடகம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு பக்கம். 
எனவே, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதன் கட்டுப்பாட்டில் கர்நாடகாவின் நான்கு அணைகளின் நீர்த்திறப்பு நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தோழமையுடன்,

பெ.மணியரசன்

ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு
தலைவர் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 


பாலச்சந்திரன் இனப்படுகொலை: பன்னாட்டு விசாரணை மன்றமும் கருத்து வாக்கெடுப்பும் தேவை! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


பாலகன் பாலச்சந்திரன் இனப்படுகொலை: 
பன்னாட்டு விசாரணை மன்றமும் 
கருத்து வாக்கெடுப்பும் தேவை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை


பன்னிரெண்டு வயது பாலகனான பாலச்சந்திரன் சிங்கள இனவெறி இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படங்களைப் பார்த்த போது ஏற்பட்ட மன பதைப்பு இன்னும் அடங்கவில்லை.

பால் வடியும் முகம்; சிங்கள இராணுவத்தின் பதுங்கு குழியில் வைப்பட்டிருந்த போது, திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன சிறுவன் பெற்றோரைத் தேடி திகைப்பது போன்ற பார்வை; சிங்கள இராணுவத்தினர் கொடுத்த ஒரு தின்பண்டத்தை தின்றுகொன்றிருந்த அப்பாவித்தனம்; சிறிது நேரத்தில் பதுங்கு குழியிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தன்னோடிருந்த விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதை அதே சிறுவன் தன் கண்ணால் காண்கிறான். அதன் பிறகு பாலச்சந்திரனை நிற்க வைத்து அவன் கை தொட்டு விடும் தூரத்தில் துப்பாக்கியை நீட்டி மார்பிலே சுட்டுச் சாய்க்கிறார்கள் கொடியவர்கள்.

மல்லாந்து விழுகின்ற அவன் மார்பில் நான்கு தடவை மீண்டும் துப்பாக்கியால் சுடுகிறார்கள். என்ன துடித்துடித்திருப்பான் அந்த பாலகன்? அவன் செய்தக் குற்றமென்ன? இரு தரப்பினர் போரிட்டு கொண்டபோது இடையிலே சிக்கி பலியானவனல்ல பாலச்சந்திரன். கைப்பற்றிக் கொண்டு வந்து திட்டமிட்டு சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போல் ஆயிரக்கணக்கான தமிழீழக் குழந்தைகளை சிங்கள இராணுவம் சுட்டுக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை அழித்திருக்கிறது. இது போர்க்குற்றமல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை என்பதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய இளையமகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட முறையே நூற்றுக்கு நூறு நம்பத் தகுந்த சாட்சியமாகும்.

இப்பொழுதுதாவது, மனித உரிமையில் அக்கறையுள்ள உலக நாடுகள், பன்னாட்டுச் சமூகம் இதில் தலையிட வேண்டும். இலங்கை அரசே அமைத்த “கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்” என்ற உள்நாட்டு விசாரணை ஆணையம் இனப்படுகொலையை விசாரிப் பதற்கு உரிய அமைப்பு அல்ல என்பதை உலகம் உணர வேண்டும். தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் ஐ.நா. மன்றத்தால் நிறுவப்பட்டு அது விசாரணை செய்து அறிக்கை அளித்ததே ஈழத்தில் நடத்தப்பட்ட இனப் பேரழிப்பிற்கு உரிய விசாரணையாகும்.

வருகின்ற மார்ச்சு மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் தர்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்க முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர வேண்டும். அதற்கு மாறாக இலங்கை அரசே தனது “எல்.எல்.ஆர்.சி.” மூலம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தால் அது மனித குலப் பகைவன் இராசபட்சேவுக்கு, அமெரிக்காவும் அதை ஆதரிக்கும் நாடுகளும் முட்டுக் கொடுப்பதாகவே அமையும்.

பாலச்சந்திரன் போன்ற பாலகர்களை இனப்படுகொலை செய்த மனிதகுல அழிப்புக் குற்றத்தில் இந்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே கும்பலுடன் மன்மோகன் கும்பலையும் நிறுத்த வேண்டும். அதே போல் தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்கள இனவெறி அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமுன், ஐ.நா. அதிகாரியான மலையாளி விஜய் நம்பியார், அவருடைய அண்ணன் சதீஷ் நம்பியார் உள்ளிட்டவர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. 

பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட இருக்கிறார்கள் என்ற தகவலை 2009 மார்ச்சு மாதமே தமிழீழப் பகுதியில் செயல்பட்ட ஐ.நா. அதிகாரிகள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அறிக்கையாக கொடுத்துவிட்டார்கள். அந்த அறிக்கையை வெளியே தெரியாமல் மறைத்து சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணை நின்றவர்கள் பான்கீமுன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் உள்ளிட்ட நபர்கள் ஆவர்.

எனவே ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரில் இராசபட்சே கும்பலோடு சேர்ந்து செயல்பட்ட இந்திய ஆட்சியாளர்கள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைத்து அறிக்கைத் தரவேண்டும். குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர் தங்களுக்குரிய இறையாண்மையுள்ள தேசம் அமைத்துக் கொள்வது குறித்து வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும். இனப்படுகொலை நடந்த கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகியவற்றில் ஐ.நா. மன்றத்தில் பன்னாட்டு விசாரணைக்குப் பிறகு அங்கு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனித் தனி தேசங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அதே ஞாயத்தைத் தான் ஈழத்திற்கும் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை குழப்பமின்றி தமிழர் சர்வதேசியம் உலக மக்களிடம் முன் வைக்க வேண்டும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இனப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் குறித்து நெஞ்சம் பதைபதைக்கும் அனைத்து தமிழர்களும் உலகச் சமூகத்திடம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட வேண்டும்.

இந்த கொடூரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்த சேனல்-4 தொலைக்காட்சிக்கும், “போரில்லா மண்டலத்தில் இலங்கையில் கொலைக் களம்” என்ற ஆவணப்படம் எடுத்த கல்லம் மக்காரே அவர்களுக்கும் தமிழர்கள் நன்றி கூறுவோம்.

இவண்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

இடம்: தஞ்சை  




Monday, February 18, 2013

“கர்நாடக முதல்வர் உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையா?” தோழர் பெ.மணியரசன் கேள்வி




நா

“கர்நாடக முதல்வர் உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையா?
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி 
கர்நாடக அரசு காவிரியில், தமிழகத்திற்கு உடனடியாக 2.44 ஆ.மி.க. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று 07.02.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த ஆணையை உடனடியாக நிறைவேற்றாமல் 3 நாள் காலம் தாழ்த்தி, 10.02.2013 அன்று தண்ணீர் திறந்து விட்டதாகச் சொன்னது கர்நாடக அரசு. மிக மிக்க் குறைவான தண்ணீர் 5 நாட்கள் கழித்து பில்லுகுண்டுலுவுக்கு வந்த்து. வந்ததும் உடனே தண்ணீர் நின்று விட்டது. கர்நாடகம் ஒரு பாவனை காட்டி விட்டு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி விட்டது.

நேற்று(17.02.2013) கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஒளிவு மறைவின்றி அறிவித்துள்ளார். ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த அவர் மறுத்துவிட்டார். அம்மறுப்பை பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளார். இம்முறை தமிழக அரசு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து, அது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று உரத்துப் பேசுகிறார் ஷெட்டர்.

அவரது இவ்வறிவிப்பு ஏடுகளில் வந்துள்ளது. ஏடுகளில் வந்துள்ளதை வைத்து, உச்சநீதிமன்றம் தன்முயற்சியாக(Suo Moto) ஷெட்டர் மீது நீதிமன்ற வழக்குப் பதிவு செய்து அவரை உச்சநீதிமன்றத்தில் நேர் நிற்க ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச செய்யவில்லை.

ஜெகதீஷ் ஷெட்டர் உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையா என்ற ஐயம் ஏற்படுகிறது. அவர் எத்தனை முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படத்தவில்லை என்றாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்காது என்ற கருத்து மக்களிடம் மலர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இப்போக்கு, இந்தியாவின் இறுதி அதிகாரம் படைத்த நீதிமன்றத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்து வருகிறது.

இனியாவது உச்சநீதிமன்றம், தனது மதிப்பைக் காத்துக் கொள்ள, நீதியை நிலைநாட்ட, ஜெகதீஷ் ஷெட்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
இடம்: தஞ்சை
 
                                                                           பெ.மணியரசன் தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Thursday, February 14, 2013

பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர்களைத் தூக்கிலிடாதே! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர்களைத் தூக்கிலிடாதே!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

வீரப்பனை பிடிப்பதற்காக மனித வேட்டை நடத்திய அதிரடிப்படையினர் 1993ஆம் ஆண்டு, வீரப்பன் குழுவினர் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 22 பேர் பலியான வழக்கில், ஞானப்பிரகாசம், சிலவேந்திரன், மீசை மாதையன், சைமன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை தள்ளுபடி செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய உள்துறை கடிதம்

இந்தியக் குடியரசுத் தலைவாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின்னர், இந்திய அரசும், பிரணாப் முகர்ஜியும், நிலுவையிலுள்ள தூக்குத் தண்டனைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். அண்மையில் தான், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்டார்கள். அவரது கருணை மனுவை, இந்தியக குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உசசநீதிமன்றத்தில் நிவாரணம் தேடும் வாய்ப்பை குறுக்கு வழிகளில் தடுத்து தூக்கிலிட்டார்கள். அடுத்ததாக இப்பொழுது வீரப்பன் குழுவை சேர்ந்தவர்கள் என 4 பேரை தூக்கிலிட அவசர முயற்சிகளை எடுத்துள்ளார்கள்.

இந்த நால்வரும், கண்ணி வெடிகுண்டு வைத்தவர்கள் என்பதற்கு உரிய சாட்சியங்கள் இல்லாமல், தண்டனை பெற்றவர்கள் ஆவர். மொத்தமாக 127 பேரைக் கைது செய்து, அந்த வழக்கை நடத்தினார்கள். அதில், கர்நாடக  நீதிமன்றம், அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை தான் வழங்கியது. வாழ்நாள் தண்டனையே சரியல்ல என்று நீதிகேட்டு மேல்முறையீடு செய்தவர் நால்வருக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய பரிசு தான் தூக்குத் தண்டனைத் தீர்ப்பாகும்.

இந்த நால்வரில் சிலர் வீரப்பனை நேரில் கூட பார்த்ததில்லை. கண்ணில் பட்டவர்களை எல்லாம் பெருந்திரளாக கைது செய்து, நிரூபணங்கள் இல்லாத நிலையில் யாரோ நான்கு பேரை தூக்கில் போட வேண்டும் என்பது சட்ட ஆட்சிக்கான உரைகல் அல்ல. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கிலும் இப்படித்தான் நடந்தது. உண்மையில் அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பித்து விடுகிறார்கள். அகப்பட்ட அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம், மரண தண்டனைகளை உறுதி செய்யும் போது தவறு செய்யக் கூடாது என்று, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள், நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், தீபத் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று, சங்கீத் எதிர் ஹரியானா மாநில அரசு வழக்கில் பல அறிவுரைகளை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில், இரண்டு மரண தண்டனைகள் தவறாக நிறைவேற்றப்பட்டதும், சுட்டிக்காட்டப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமக்கு முன்பிருந்த குடியரசுத் தலைவர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் காட்டிய குறைந்தபட்ச மனச்சான்றுத் தயக்கத்தைக்கூட காட்ட விரும்பவில்லை. இவ்வளவு வேகமாக, “தூக்குத் தூக்கி என்று பட்டம் வாங்கும் அளவிற்கு பிரணாப் முகர்ஜி செயல்படுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

ஆட்சியாளர்கள் தமிழினத்தைப் பழித்தீர்க்க வேண்டும் என்று கருதுகின்ற இராசீவ்காந்தி வழக்கில் உள்ளவர்களை விரைவில் நெருங்க வேண்டும் என்று ஒரு மறைமுகத் திட்டத்தை வைத்துக கொண்டு, அதை செய்வதற்கு முன்னுதாரணங்களாக மற்றவர்களை வேகவேகமாக தூக்கில் போட்டு வருகிறார்களோ என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

உலகெங்கும் மரண தண்டனை கூடாது என்ற கருத்து வலுவாகி, கிட்டத்தட்ட 136 நாடுகளில், மரண தண்டனை நீக்கப்பட்டும், சட்டபுத்தகத்தில் இருந்தாலும் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டும் வருகின்ற நிலையில், சோனியாகாந்தி அரசு மிக வேகமாக, மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. சோனியா காந்தி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், செயல்படக்கூடிய ஒருவரை குடியரசுத் தலைவராகப் பெற்றுள்ளார்கள். இவர்கள் குடிமக்களின், இதர சனநாயக உரிமைகளைப் பறிப்பதில், எவ்வளவுத தீவிரமாக இருப்பார்கள் என்று இவையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கர்நாடகாவின் பெல்காம் சிறையில் வாடுகின்ற இந்த நான்கு தமிழர்களுக்கும், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நடுவண் அரசு கைவிட வேண்டுமேன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மரண தண்டனைக்கு எதிராகவும், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராகவும் மனிதநேய உணர்வுள்ள சனநாயக எண்ணம் கொண்ட, அனைத்து மக்களும் வீதிக்கு வந்து போராடுவது இன்றியமையாத தேவையாகும்.

இவண்,                                                                                
                                                                           பெ.மணியரசன்
இடம்: தஞ்சை
 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி








போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT