உடனடிச்செய்திகள்
Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Wednesday, September 25, 2019

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ள தமிழ் தெரியாத வடநாட்டுக்காரரை உடனே மாற்ற வேண்டுமெனக் கோரி, இன்று (25.09.2019) செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வங்கி - அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து இந்திய அரசுப் பணிகளிலும் தமிழே தெரியாத இந்திக்காரர்களை பணியமர்த்தி வரும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாயர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு தோழர் ரெ. கருணாநிதி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் இலெட்சுமணன், நாம் தமிழர் கட்சி பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு. அற்புதராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். நிறைவில், தோழர் ச. செந்தமிழன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, June 17, 2019

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் 'தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் "தமிழக அரசே தமிழக அரசே, இரத்து செய் இரத்து செய் வேதகால பிராமண முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பது இரத்து செய்!", "தமிழன்னை சிலையா சமற்கிருத மாதா சிலையா?" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மருது மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு இராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் திரு. சி. பேரறிவாளன், தமிழ் உரிமை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழில் வழக்காட உரிமை கோரும் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், ஏழு தமிழர் விடுதலை கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி, வீரகுல அமரன் இயக்கம் நிறுவனர் திரு. இரா. முருகன், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் திரு. அண்ணாதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசிர்வாதம், மதுரை ஸ்டார் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பழ. இராஜேந்திரன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி தோழர்கள் பாண்டியம்மாள், ரேவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் என 200 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் ஆண்களும் தங்கள் கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மதுரை காவல் படை மைதானத்தில் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சிலை அமைக்கக் கோரும் ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்றும், இது போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்றும் ஐயா பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு நிற்காமல் தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டு வல்லுனர்களையும் கொண்ட புதிய குழு அமைத்து கல்லிலோ அல்லது வெங்கலத்திலோ, தமிழர் மரபுப்படி தமிழன்னை சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வலியுறுத்தினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 14, 2019

கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லாக்கோட்டையில் கால்ஸ் மதுபான ஆலையை எதிர்த்து மகளிர் ஆயம் சார்பில் மகளிர் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லாக்கோட்டை சாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட மகளிர் ஆயம் தோழர்கள் முடிவு செய்திருந்த நிலையில் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கல்லாக்கோட்டை கடை வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மகளிர் ஆயம் தோழர்களை ஆலையின் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது கொளுத்தும் வெயிலையும் பாராமல் மகளிர் ஆயம் தோழர்கள் - பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் என அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி இருந்தபோது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் அனைவரையும் ஏற்றினர்.


போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் தோழர் லட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் அருணா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் செம்மலர், துணைத் தலைவர் தோழர் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் ஆயம் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் 300 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.






தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 23, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தொடர்புடைய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மீது நடவடிக்கை கோரி தஞ்சையில் இன்று (23.03.2019) எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் நடுவண்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி அம்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரியார் மையம் தோழர் கலா, மாணவிகள் அஞ்சுதம், இரா. வான்மதி, இரா. தேன்மொழி, மகளிர் ஆயத்தோழர்கள் சுவாமிமலை பி. இளவரசி, திருச்சி வெள்ளம்மாள், தஞ்சை வெற்றிச்செல்வி, பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் சி. இராசப்பிரியா, தஞ்சை நகரத் தோழர்கள் அமுதா, இராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சை மகளிர் ஆயம் தோழர் செம்மலர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மகளிர் ஆயப் பொறுப்பாளர் அ.சுந்தரி நன்றியுரையாற்றினார். திரளான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு: 
7373456737, 9486927540

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, March 14, 2019

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், *“ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு”* சார்பில், இன்று (14.03.2019) - வியாழன் காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் இலங்கை தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வேணுகோபால், திராவிடர் விடுதலை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு தோழர் தியாகு, த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.தா. பாண்டியன், 'இளந்தமிழகம்' செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வி. கோவேந்தன், தோழர்கள் மணி, தமிழரசன், கண்ணன், வடிவேலன், சந்தோஷ், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் தற்போது சூளைமேடு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

ஐ.நா. அவையே! இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டிலேற்று! தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 9, 2019

ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!


ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள்சந்திப்பு இயக்கத்தை நடத்தினார்.அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தோழர்களும் பங்கேற்றனர்.

அதில் தீர்மானித்தபடி, இன்று (மார்ச் 9, 2019) மாலை சென்னை, கோவை, மதுரை,திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திருச்சி
திருச்சியில் தொடர்வண்டி சந்திப்பு நிலையம் அருகில் உள்ள ஆர்.சி. பள்ளி சாலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, செயபால், லெட்சுமி அம்மாள், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி, பூதலூர் ஒன்றியப் செயலாளர் பி. தென்னவன், திருவெறும்பூர் செயலாளர் தியாகராசன், விராலிமலை செயலாளர் வே.பூ. இராமராசு, பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், இராசாரகுநாதன், இனியன், குடந்தை தீந்தமிழன், வெள்ளம்மாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

சென்னை

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் தி. வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாசு, மே 17 இயக்கப் பொறுப்பாளர் பிரவின், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குனர் மு. களஞ்சியம், தமிழ்ப்பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குனர் வ. கௌதமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் பழ. நல். ஆறுமுகம், வி. கோவேந்தன், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வடசென்னை செயலாளர் செந்தில், தென்சென்னை செயலாளர் கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

புதுச்சேரி
புதுச்சேரி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தோழர் சுகுமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி, புதுச்சேரிச் செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, தோழர்கள் பட்டாபி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

மதுரை
 மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்மா மக்கள்முன்னேற்றக் கழகம், இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொருளாளர் ஆனந்தன், மதுரை மாநகர்செயலாளர் தோழர் இராசு, பொதுக் குழுஉறுப்பினர் கதிர் நிலவன், தோழர்கள் புருசோத்தமன், கருப்பையா, கரிகாலன்,அழகர்சாமி, வழக்கறிஞர் அருணாசலம், தி.கருப்பையா, ஓசுர் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செம்பரிதி, மகளிர்ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, செரபினா, மேரி, சந்திரா, இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை
நெல்லையில் வ. உ. சி. திடல் அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 'வான்முகில்' வழக்கறிஞர் ம. பிரிட்டோ, நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் ராம்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மு. தமிழ்மணி, புளியங்குடி செயலாளர் க. பாண்டியன், தோழர்கள் சிவா, விஜயநாராயணன் உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை
கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கோவை கு. இராமகிருட்டிணன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தோழர் உ. தனியரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இராசேசு, திருவள்ளுவன் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.

சேலம்

சேலத்தில் அண்ணா சிலை அருகில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிவாளன் தந்தையார் திரு. குயில்தாசன், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் டேவிட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் காஜா மைதீன், நாம் தமிழர் கட்சி தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பேரியக்கத் தோழர்கள் பிந்துசாரன், பொதுக்குழு உறுப்பினர் வெ. இளங்கோவன், தோழர்கள் வெண்ணந்தூர் சேகர், ஈரோடு சரவணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

#28YearsEnoughGovernor
#அநீதியே28ஆண்டுகள்போதாதா

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, December 29, 2018

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன் கேள்வி!

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
“கசா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், இன்று (29.12.2018) காலை முதல் மாலை வரை, நாகையில் தொடர் முழுக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, திரு. அன்புத் தென்னரசன் உள்ளிட்ட நா.த.க. பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் திரு. வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் திரு. ஆ.கி. ஜோசப் கென்னடி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், வேதாரண்யம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி..வி. இராசன், செயலாளர் திரு. தா. ஒளிச்சந்திரன், நடிகர் மன்சூர் அலிகான், மருது மக்கள் இயக்கத் தலைவர் தோழர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையுரை ஆற்றிய ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்:

“கசா புயல் துயர் துடைப்பில் உடனடியாக ஈடுபடாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மிக எழுச்சியோடு - ஒரு மாநாடு போல் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், “கசா” புயல் ஏற்படுத்திய பேரழிவின் போது சரிவரி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடாத இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியாவது அவர்கள் துயர் துடைப்புப் பணிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடக்கிறது.

புயல் வருவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, முன்கூட்டியே மின் இணைப்பைத் துண்டித்து சரியாகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன்பிறகு, நடந்த புயல் துயர் துடைப்புப் பணிகள் – செப்பனிடும் பணிகள் மிக மிக மோசமாக உள்ளன.

சில இடங்களில் இன்னும்கூட மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு, வீடுகளின் மீதுள்ள கூரைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சார்பில் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? தனியாக சில நண்பர்கள் தன்னார்வ முயற்சியில் அதற்குரிய கருவிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு தோப்பே வீழ்ந்து கிடக்கும்போது, அந்த நில உரிமையாளர் தனியாக அவற்றை அகற்றிட முடியுமா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்கிறது?

புயல் நடந்த போது, நான் வட அமெரிக்காவில் இருந்தேன். தொலைக்காட்சி வழியாக அதன் பாதிப்புகளைப் பார்த்தேன். நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு இடங்களில் துயர் துடைப்புப் பணிகளில் இறங்கியதைப் பார்த்தேன். நான் சார்ந்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய – தமிழ்நாடு அரசுகள் என்ன செய்தன?

எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். தமிழ்ச்சமூகம் இன்றைக்கு முன்பைவிட அதிகளவில் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. எனவேதான், அரசை நம்பாமல் - அரசை சார்ந்திருக்காமல், தாங்களாகவே உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் களத்தில் இறங்கி அக்கறையுடன் பணி செய்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் நம்மைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாகள். வடஅமெரிக்காவில் நான் இருந்தபோது, அங்கிருந்த தமிழ் இளைஞர்கள், நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் துடிப்போடு செயல்பட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பி வைத்தார்கள். நம் தமிழ்ச்சமூகம் சர்வதேசமயமாகி வருவதன் வெளிப்பாடு இது! நம் சமூகம் புதிய மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதன் அடையாளம் இது!

அயல் நாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்தந்த நாடுகளில் அந்தந்த இனத்தின் பெருமைகளை – சாதனைகளைப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் நம் சொந்தங்களுக்கு, தமிழ் இனத்தில் பெருமைகளும், சாதனைகளும், சிறப்புகளும் நெஞ்சில் தைக்கிறது! எனவே, அதிக ஆர்வத்தோடு தமிழ்நாட்டை உற்று நோக்குகிறார்கள்.

பழைய காலம் போல் இன்றைக்கு பெயர் பெற்ற தலைவர்கள் - பூதந்தாங்கி பட்டங்களைச் சுமந்த அரசியல் தலைவர்கள் சொன்னால்தான் - வழிகாட்டினால்தான் நடக்கும் என்ற நிலைமை இப்போது இல்லை! ஏதோ தேர்தலின்போது, அவர்களுக்கு வாக்குப் போடுவதோடு இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மாற்றம் வரும்; வர வேண்டும்!

துயர் துடைப்புப் பணிகளில் உதவியதோடு மட்டுமல்ல, தன்னெழுச்சி நம் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. இதோ, இப்போது வேளாண் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொங்கு மண்டலத்தில் உழவர் பெருமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டுவழிச் சாலைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் பெற்ற அரசியல் கட்சிகளுக்குக் காத்திராமல், தாங்களே களம் காணும் புதிய அத்தியாயத்தை தமிழ் மக்கள் திறந்துவிட்டுள்ளார்கள்!

இந்த நிலையிலும்கூட ஆடாமல் அசையாமல் சரியாகப் பணி செய்யாமல் இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு!

நரேந்திர மோடி அரசு, தமிழ் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு அறிக்கைக் கூட விடவில்லை! ஏன்? தமிழர்கள் மீது – தமிழ் மக்கள் மீது அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி - பாகுபாட்டு உணர்ச்சி இருக்கிறது. அதுதான், அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுகிறது!

இந்த புயல் துயரத்தை நரேந்திர மோடி ஏன் வந்து நேரில் பார்க்கவில்லை? நமக்கும் சேர்த்துதான் அவர் தலைமை அமைச்சராக இருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மோடியின் அடிமனம் தமிழர்களை அவர்களில் ஒருவராக ஏற்கவில்லை. எனவே, அலட்சியப்படுத்துகிறார்கள்!

நரேந்திர மோடியிடம் புயல் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 15,000 கோடி ரூபாய் கேட்டார். ஆனால், இப்போது வரை வெறும் 353 கோடி ரூபாயைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நடுவண் வேளாண் அமைச்சகம் 173 கோடி ஒதுக்கியுள்ளது. “ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்? ஏன் எங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஏன் கேட்கவில்லை?

மோடியைக் கேட்டால், அவரது முகம் உரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் எடப்பாடி! எட்டுக் கோடி மக்களுக்கு முதல்வராக நீடிக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் முதலமைச்சர் மோடியை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நிதி பெற்றாரே.. அவரை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அழைத்து வந்தாரே.. எடப்பாடி அவர்கள், இதுபோல் முயற்சி எடுத்தாரா?

இப்போது, “கசா” புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானது அல்ல! நாங்கள் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டோம். 1957க்குப் பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள புயல்தான் மிக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். இதைவிடப் பெரிய அழிவு வேறென்ன வேண்டும்? இது பேரிடர் அல்ல பேரழிவு என்கிறோம்!

இந்த புயல் பாதிப்பை, ஏன் “தேசியப் பேரிடராக” இந்திய அரசு அறிவிக்கவில்லை? உங்கள் இந்தியத்தேசியத்தில் தமிழ்நாடு வராதா?

நரேந்திர மோடியை இப்படி வஞ்சிக்கிறார். இன்னொருபுறத்தில், அடுத்த தலைமையமைச்சர் என காங்கிரசுத் தலைவர் இராகுலை அழைக்கின்றார்களே! அவர் தமிழ்நாட்டிற்கு வந்து புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டாரா? அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் யாராவது வந்தார்களா? ஏன் வரவில்லை?

இந்த இலட்சணத்தில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரை “இந்தியாவின் திருமகளே வருக! நல்லாட்சி தருக!” என்றாரே, அதைப்போல் இப்போது “இராகுலே வருக! நல்லாட்சித் தருக!” என அழைக்கின்றார். தமிழ்நாட்டுக்குக் காங்கிரசும், அதன் தலைவர்களும் என்ன செய்தார்கள்? இவர்கள்தான் மாற்று என்பது ஏமாற்றில்லையா?

தி.மு.க. வேண்டுமானால் கசா புயல் பாதிப்புக்காக சில உதவிகளை – நிதியை அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் 15,000 கோடி ரூபாய் கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்தாரே! அந்தத் தொகையைத் தாருங்கள் என்று இந்திய அரசுக்கு – நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் என்ன அழுத்தம் கொடுத்தார்? என்ன போராட்டம் நடத்தினார்? என்ன குரல் கொடுத்தார்?

எனவே, நீங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றீர்கள்! செல்லா நாணயத்தின் இருபக்கங்களாக தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இருக்கின்றன! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு, தில்லியை தப்பிக்க விடுகின்றீர்கள்!

காங்கிரசும் பா.ச.க.வும் ஒன்றே! காங்கிரசுக்கு இன்னொரு பெயர்தான் - பா.ச.க.! இந்தியத்தேசியத்தின் இன்னொரு பெயர்தான் இந்துத்துவம்! அதுபோல், தில்லியின் கங்காணிதான் திராவிடம்!

இம்மூவரும் நம்மை – தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். எனவேதான், நாம் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. நாங்கள் தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்!

எனக்கு முன்னால் பேசிய அன்புத்தோழர் சீமான், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலரது வீடுகளில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருப்பதை அவர்களது தோழர்கள் சுட்டிக்காட்டியதைச் சென்னார். “அதனால் என்ன தம்பி? அவர்களும் நம் தமிழர்கள்தானே!” என்றார். இவ்வாறு நாம் தமிழர்களைக் கட்சி கடந்து நேசிக்கிறோம் அல்லவா? இதுதான் இங்கு தேவை!

இவ்வளவு பெரிய பேரிடர் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏன் இந்திய அரசு உடனடியாக மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்கவில்லை? இராணுவம் வந்திருந்தால், ஒரு வாரத்தில் மின் கம்பங்களை மீட்டு, மின் விநியோகத்தை சீரமைத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இன்னும்கூட, பல பகுதிகளில் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை! வயல் காடுகளில் பயிர்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும் இராணுவ மண்டலமாக்கி, தொழிற்சாலைகளை ஆங்காங்கு வைத்து, தமிழர்களைக் கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடுகின்ற இந்திய அரசு, மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்க சிந்திக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை? மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தைக் கேட்டு கோரிக்கை வைத்தால், தன் வீட்டிற்கு ரெய்டு வரும், வழக்கு வரும், சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்று எடப்பாடியார் அச்சப்படுகிறாரா?

இவ்வளவு நடந்தபிறகும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துயர் துடைப்புத் தொகையும் முழுமையானதாக இல்லை. நெற்பயிர் சேதத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். எட்டுவழிச் சாலையைக் கொண்டு வரும்போது, ஒரு தென்னை மரத்திற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை பேசினீர்களே! இப்போது, வெறும் 1,100 ரூபாயைக் கொடுத்தால் என்ன ஞாயம்? தென்னையை வெட்டி எடுக்கவே 1000 ரூபாய் வரைத் தேவைப்படுகிறது. எனவே, ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, கடன் தள்ளுபடியின் போது தமிழ்நாடு அரசு ஐந்து ஏக்கர் வரம்பு விதித்தது. அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் நீக்கியபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஐந்து ஏக்கர் வரம்பை உறுதிப்படுத்தியது தமிழ்நாடு அரசு! அவ்வாறெல்லாம் இல்லாமல், இப்போது அனைவருக்கும் வரம்பின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வாராக் கடன் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கின்றீர்களே, ஏன் உழவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது?

உழவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல! தங்களது நெல்லுக்கும், பருத்திக்கும், சர்க்கரைக்கும் வழங்கப்பட வேண்டிய உண்மையான விலையைக் குறைத்து, அவர்களது அடிவயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு வாங்குகிறீர்களே! அதனுடன் கொடுக்கப்படாத விலையின் ஒருபகுதியைத்தான் (Deffered Price) அவர்கள் கடன் தள்ளுபடியாகக் கேட்கிறார்கள். எனவே, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உழவுத் தொழிலாளின் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு இப்போது உழவு வேலையும் இல்லை. எனவே, அவர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது இழப்புத் தொகை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் என்ன துயர் துடைப்புப் பணி இருக்கிறது? எனவே, தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! இந்திய அரசிடம் அதற்குரிய நிதியைக் கேட்க வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர்கள் க. விடுதலைச்சுடர், தை. செயபால், பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோர் பி. தென்னவன், மகளிர் ஆயம் தோழர் செம்மலர், தஞ்சை மாவட்டச் செயற்குழு” தோழர்கள் இரெ. கருணாநிதி, க. காமராசு, இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, May 25, 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப்  பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டையைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பதவி விலக வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.05.2018) மாலை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.




தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னை அண்ணா சிலை அருகிலிருந்து திரண்ட தோழர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை - பறக்கும் தொடர்வண்டி பாலம் அருகில் காவல்துறையினர் வழிமறித்துத் கைது செய்தனர்.





தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், திரு. ஆளூர் சானவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள்), திரு. பெ. ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), தோழர் பிரவீன் (மே பதினேழு இயக்கம்), வழக்கறிஞர் இரசினிகாந்த் (மக்கள் அரசுக் கட்சி), முனைவர் சுப. உதயகுமார் (பச்சைத் தமிழகம்), திரு. பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாயிகள் சங்கம்), தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தமிழ்க்குமரன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தோழர் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி) உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இயக்குநர்கள் வெ. சேகர், அமீர், இராம், கோபி நயினார் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.








கட்சிக் கொடி அடையாளங்களின்றி இப்போராட்டத்தில் தமிழ்தேசியப் பேரியக்கம் பங்கேற்றது. பேரியக்கம் சார்பில் பங்கேற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் மா.வே. சுகுமார், மணி, முத்துக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.





தமிழ்நாடு அரசே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

கொலைகாரக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

எடப்பாடியே பதவி விலகு!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT