உடனடிச்செய்திகள்

Friday, November 30, 2012

காவிரி டெல்டா பகுதிகளில் இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி எரிப்பு!


காவிரி டெல்டா பகுதிகளில் இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி எரிப்பு!

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என்று கொக்கரிக்கும் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி டெல்டா பகுதிகளில் கொளுத்தப்பட்டது.


தஞ்சை
தஞ்சை பழையப் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவகொடும்பாவியைக் கொளுத்தினர். பலர் கோவம் தாங்காமல் உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை நகர செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பூதலூர் ஒன்றிய செயலாளர் க.காமராசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டச் செயலாளர் செங்கொடிச் செல்வன், மாவட்ட இணைச் செயலாளர் ஜெகதீசன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.மோகந்தாசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழின உணர்வாளர்கள் இக்கொடும்பாவி கொளுத்தும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.


சிதம்பரம்
கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் சிதம்பரத்தில் இன்று காலை 11 மணியளவில், தமிழக உழவர் முன்னணி சார்பில்  நடைபெற்றது.

தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் திரு, சி.ஆறுமுகம் தலைமையில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட உழவர்கள் திரண்டு தெற்குவீதி - தெற்கு சன்னதி - சபாநாயகர் தெரு சீர்காழி முதன்மை சாலை சந்திப்பில் எழுச்சியுடன் போராட்டத்தை  நடத்தினர்.

கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் ஒழிக! காவிரி மறுக்கும் ஜெகதீஷ் ஷட்டர்  ஒழிக!என்னும் கோபம் கொப்பளிக்கும் உணர்ச்சி முழக்கங்களுக்கிடையில் ஜெகதீஷ் ஷட்டர்  உருவப் பொம்மை எரியூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த உருவ பொம்மை எரிந்து முடியும் வரை உழவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

தமிழக உழவர் முன்னணி தலைவர், அ.கோ.சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் மா.கோ.தேவராசன், திரு.மதிவாணன், திரு.தங்க,கென்னடி, திரு,சரவணன், மு,முருகவேல் மு.சம்மந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற  இப்போராட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த உணர்வாளர்களும் தன்னிச்சையாக தங்களையும் இணைத்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
     
குடந்தை
குடந்தை தலைமை அஞ்சலம் முன்பு காலை 11 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகர செயலாளர் விடுதலைசுடர் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி கொளுத்தும் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சுவாமிமலை கிளைச் செயலாளர் ம.முரளி, தேவராயன் பேட்டை தமிழக இளைஞர் முன்னணிச் செயலாளர் பிரபாகரன், த.தே.பொக. தோழர் தீந்தமிழன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி செய்தி தொடர்பாளர் தளபதி சுரேஷ், ஒன்றிய செயலாளர் கை.சேகர் உள்ளிட்ட தமிழீன உணர்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.

திருத்துறைபூண்டி
திருத்துறைபூண்டி பேருந்துநிலையம் திருவள்ளூவர் சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.தனபால் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் க.அரசு, வழக்கறிஞர் இ.தனஞ்செயன், தமிழக உழவர் முன்னணி தோழர் ச.கோவிந்தசாமி உள்ளிட்ட திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.


காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நடைபெற்ற, கன்னட இனவெறியன் ஜெகதீஷ் ஷெட்டர் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தமிழ் மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

(செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

      

Wednesday, November 28, 2012

தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு!


தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு!

நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாள் தமிழகமெங்கும் நினைவுகூறப்பட்டது. ஈகைச்சுடரேற்றி வீரவணக்க நிகழ்வுகள், பொதுக் கூட்டங்கள் என தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் மாவீர்ர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சென்னை
சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 27.11.2012 அன்று மாலை 6.00 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், திரளான த.தே.பொ.க தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முத்துரங்கம் சாலையில், ம.தி.மு.க. சார்பில், மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

சென்னை முகப்பேரில், தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. த.மு.க. ஒருங்கிணைப்பாளர் தோழர் அதியமான நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சிறப்பு முகாம் செந்தூரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சென்னை கே.கே.நகரில், விடுதலை சிறுத்தைகள் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாவீர்ர் நாள் ஈகைச்சுடரேற்றி வீரவணக்க உரையாற்றினார்.

சென்னை ஆவடியில் நேற்று மாலை, அமைக்கப்பட்டிருந்த மாவீர்ர் நாள் ஈகைத்தூணுக்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், மலர் தூவி மரியாதை செலுத்தினா.




தஞ்சை
தமிழ் கூட்டமைப்பு சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தஞ்சை கேசட் அரங்கத்தில் மாலை 6.00 மணியளவில் தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருஞானம், விடுதலை தமிழ் புலிகள் நிறுவுனர் குடந்தை அரசன் உள்ளிட்ட திரளானோர் களந்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செய்லாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் வைகறை, தஞ்சை நகர துணை செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி தஞ்சை நகர செயலாளர் செந்திரள் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துக் கொண்டடு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 27.11.2012 அன்று மாலை 5.00  மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார்.

ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இரா.நந்தகுமார், த.தே.பொ.க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் காமராசு, தமிழக இளைஞர் முன்ன்ணி ஒன்றியத் தலைவர் தேவதாசு, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தச்சிணாமூர்த்தி, த.இ.மு. நடுவண்குழு உறுப்பினர் த.காமராசு உள்ளிட்டத் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துக் கொண்டடு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பூதலூர்
தஞ்சை மாவட்டம் 27.11.2012 அன்று மாலை 5.30  மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அற்புதராஜ், மக்கள் உரிமை இயக்கம் ஒருகிணைப்பாளர் பழ.இராஜ்குமார், ம.தி.மு.க. இலக்கிய அணி புண்ணிய மூர்த்தி, த.தே.பொ.க. ஒன்றிய செயலாளர் தோழர் செந்தில்குமார் உள்ளிட்ட தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.


குடந்தை
குடந்தை தெற்கு விதியில் மாவீரர் நாளான 27.11.2012 அன்று மாலை 6 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்முயற்சியில், மேதகு. வே.பிரபாகரன் தானி ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் நிறுத்தம் புதிதாகத் தொடங்கப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகர செயலாளர் தோழர் விடுதலை சுடர் அவர்கள் சங்கத்தின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார். இதில், திரளான த.தே.பொ.க. தோழர்களும், தானி ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.

தர்மபுரி
தர்மபுரியில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில், அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மற்றும், கட்சியின் முன்னணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி உரையாற்றினர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!


சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!

தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின்வெட்டை எதிர்த்தும், சிதம்பரம் நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நெய்வேலி மின்சாரத்தை கேட்டுப் பெறாத தமிழக அரசை கண்டித்தும், சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள்.

கடும் மின்வெட்டை செயல்படுத்தி வரும் சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக இளைஞர் முன்னணி 25.11.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இப்போராட்டத்திற்கு சிறுதொழில் முனைவோர் சங்கம் மற்றும் தமிழக உழவர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், இன்று (28.11.2012) காலை 11.30 மணியளவில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்காக, சிதம்பரம் நகரக் காசுகடைத் தெருவிலிருந்து தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேரணியாக, முழக்கங்களுடன் சென்றனர். சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஆவேசத்துடன் வந்த தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மின்வாரிய அலுவலகத்தின் முதன்மைக் கதவை, கையில் கொண்டுவந்திருந்த பூட்டைக் கொண்டு இழுத்துப் பூட்டினர் தோழர்கள்.

காவல்துறையினருடனான தள்ளுமுள்ளுவின் போது, தோழர் சுப்பிரமணிய சிவ, ச.பாபு, சுகன்ராஜ் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

தமிழக இளைஞர் முண்ணனி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவபிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும், பெருந்திரளான பெண்களும், இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஆவேசமாகத் திரண்டிருந்த தோழர்களைக் கண்டக் காவல்துறையின்ர், அவர்களது கோரிக்கையின் ஞாயத்தை உணர்ந்து தோழர்களை கைது செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சுகன்)

Tuesday, November 27, 2012

வாழ்வா? சாவா? காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி


                 வாழ்வா? சாவா?
காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையில் உழவர் பேரணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 16 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காய்ந்து சருகாகும் நிலையில் உள்ளது. உடனடியாக மேட்டூரிலிருந்து ஒரு நாளைக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் (1 ½ டி.எம்.சி) திறந்து விட்டால்தான் சம்பாப் பயிரைக் காக்க முடியும். இந்த அளவில் தண்ணீர் 2013 பிப்ரவரி 15 ஆம் நாள் வரை தேவை ஆனால் மேட்டூரில் நீரோ  இன்றைய (26.11.2012 நிலவரப்படி 50 அடியாகும். இது இன்னும் பத்து நாட்களுக்குக் கூட வராது.

இப்பொழுது மேட்டூரில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கல்லணைக்கு வரும் போது 8 ஆயிரம் கன அடியாக உள்ளது.

ஒரு வாரத்துக்கு ஒரு ஆற்றுக்கு என்ற கணக்கில் காவிரியிலும் வெண்ணாற்றிலும் முறை வைத்துத் தண்ணீர் விடுகிறார்கள். இந்தத் தண்ணீர் பல வாய்க்கால்களுக்குப் போய் சேரவில்லை. போய்ச் சேர்ந்த இடங்களிலும் வயல்வெடிப்பு நிரம்பக் கூடப் போதவில்லை.

திருவாரூர் மாவட்டம் வலிவலம் அருகே உள்ள கூரத்தாங்குடியில் ஆறு ஏக்கர் சம்பாப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜாங்கம், கடந்த ஒரு வாரகால வெண்ணாற்று முறையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தனது வயலுக்கான வாய்க்காலில் வராததால் காய்ந்து கருகும் சம்பாப்பயிரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வெண்ணாற்றுக்கான முறை முடிந்து காவிரியில் ஒரு வாரம் தண்ணீர் திறந்துவிடப் போகிறார்கள்; இன்னும் ஏழு நாட்களுக்குத் தனது வாய்க் காலில் தண்ணீர் வராது; அப்படியானால் சம்பாப்பயிர் முழுவதும் கருகிவிடும் என்று பதை பதைத்து தனக்கு ஏற்படப்போகும் சாகுபடி இழப்பையும் அதனால் ஏற்படும் கடன் தொல்லை, அவமானம், பணநெருக்கடி ஆகியவற்றையும் எண்ணிக் கவலை கொண்டு பூச்சி மருந்தை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்த அவலம் மற்ற ஊர்களுக்கும் தொடரும் அபாயம் உள்ளது.

எனவே, இந்திய அரசும், தமிழக அரசும்; காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்ல, உழவர்களின் உயிரையும் காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 355 ஐப்  பயன்படுத்தி கர்நாடகத்தில் தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீர்லிருந்து உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் 8.12.2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் சிலையி லிருந்து பேரணி புறப்படும். பேரணி நிறைவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

உழவர் பெருமக்களும், உரிமை உணர்வு படைத்த தமிழ்ப் பெருங்குடி மக்களும் திரளாகப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
                                                        பெ.மணியரசன்
 காவிரி உரிமை மீட்புக் குழு 
ஒருங்கிணைப்பாளர்
இடம்: தஞ்சாவூர்

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

Monday, November 26, 2012

“எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது வாழ்ந்து காட்டியவர் புலவர் இறைக்குருவனார்” தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை


எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது  வாழ்ந்து காட்டியவர் புலவர் இறைக்குருவனார்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை

தனித்தமிழ் இயக்கத்தின் சமகாலப் பேரறிஞரும்மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழிவந்து உலகத் தமிழ்க் கழகத்தின் பொறுப்பேற்று செயல் பட்டவரும், ‘தென்மொழி’ ஆசிரியருமாகிய திருக்குறள்மணி’ புலவர் இறைக்குருவனார் அவர்கள், 23.11.2012 அன்று பின்னிரவில்தஞ்சையில் மாரடைப்பால் திடீரென்று காலமானார்.

பட்டுக்கோட்டையில் தமிழர் முறைத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு இரவு சென்னைக்கு திரும்பும் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டுதஞ்சையில் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டார்.  அய்யா அவர்கள் நெஞ்சுவலியால் துடிக்கும் செய்தி பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மகன் பூங்குன்றன் வழியாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வந்தது.

உடனடியாக, இறைக்குருவனார் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்ற தோழர் பெ.மணியரசன் மற்றும் பேராசிரியர் வி.பாரிபொறியாளர் கென்னடி,வி.தமிழ்ச்செல்வன்வழக்கறிஞர் நல்லதுரைமுனைவர் இளமுருகன் உள்ளிட்டத்  தோழர்கள் அவரைதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் ஆய்வுசெய்து விட்டுஇறைக்குருவனார் இறந்துவிட்டார் எனக் கூறிவிட்டனர். அதன்பிறகுமருத்துவ வாகனத்தில்திருச்சித் தோழர் ஈகவரசன் பாதுகாப்பில் புலவர் இறைக்குருவனாரின் உடலை தோழர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்னாரது இறுதி வணக்க நிகழ்வு, 25.11.2012 அன்று காலை 10 மணியளவில், சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவுஇல்லமான தமிழ்க்களத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த புலவர் இறைக்குருவனாரின் உடலின் அருகில், சோகமே உருவாக புலவர் இறைக்குருவனார் அவர்களது துணைவியார் பொற்கொடி அம்மாளும், தென்மொழி அவையம் திரு. பூங்குன்றன், இறைக்குருவனாரின் மகள்கள்  இசைமொழி, அங்கயற்கண்ணி, ஆகியோர் அமர்ந்திருந்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனும், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தலைவருமான தோழர் பொழிலன் புழல் சிறையிலிருந்து சிறப்பு விடுப்பில் (பரோலில்) வந்திருந்தார். 

புலவர் இறைக்குருவனாரின் உடலுக்கு, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்பின் தொடங்கிய இறுதி வணக்க அஞ்சலி ஊர்வலம் மேடவாக்கம் கூட்டுச்சாலை வழியாக, திரளான தமிழ் உணர்வாளர்களுடன் இடு காட்டைச் சென்றடைந்தது.

 ஊர்வலத்தில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் பாவேந்தன், தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

உடலடக்கத்திற்குப் பின் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு, திரு பழநெடுமாறன் தலைமேற்றார். அதில் பேசிய தோழர் பெ.மணியரசன், பின்வருமாறு கூறினார்.

எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஒரு மரபை தமிழறிஞர்களிடையே பாவலரேறு பெருஞ்சித்திரனார் உருவாக்கினார். அந்த மரபில் வந்து அவரது மருமகனாக விளங்கி சிறப்பாக தமிழ்ப் பணியாற்றியவர் திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார். சாதிக் கூடாது என்று மேடையில் பேசும் அவர்கள் தங்கள் குடும்பத்திலும் சாதி இல்லாமல் வாழ்கிறார்கள். எழுத்திலும், சொற்பொழிவிலும் தனித்தமிழ் பேசும் அவர்கள் குடும்பத்தில் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தனித்தமிழில் பேசும் கொள்கை பிடிப்பை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களின் குடும்ப பிள்ளைகள் பல்வேறு அமைப்புகளில் இருந்தாலும் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, என்ற இலட்சியத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.

 ஈழத்தில் நம் இனம் அழிக்கப்பட்ட அவலத்தில் ஆத்திறத்தில் தனித் தமிழ்நாடு கோரிக்கை மேலும் வளர்ந்து வரும் இக்காலத்தில் அக்கொள்கைக்காகப் பாடுபட்டுவந்த இறைக்குருவனார். மறைந்து விட்டது துயரமளிக்கிறது தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு குறித்து எந்த நேரத்தில் ஐயம் கேட்டாலும் உவகையுடன் விளக்கம் அளிக்கும் இறைக்குருவனாரை இழந்துவிட்டோம். அவருக்கு வீரவணக்கம் செலுத்திக்கொள்கிறேன்.

 இரங்கல் நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அக்கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தோழர் தியாகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பாவேந்தன், தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், முனைவர் இரா. இளவரசு, புலவர் கி.த. பச்சையப்பன். சொல்லாய் அறிஞர் அருளி, தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன், எழுகதிர் ஆசிரியர் அருகோ, தமிழர் முன்னேற்றக்கழக ஒருங்கிங்கிணைப்பாளர் அதியமான், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் தாயம்மாள் அறவாணன், செம்மொழி நடுவண் ஆய்வு நிறுவன பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி, முனைவர் தெய்வநாயகம், கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன், பாவலர் மு. இராமச்சந்திரம் , இயக்குநர் மு. களஞ்சியம், ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல் ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அற்புதம் அம்மையார், தமிழர் கழகம் தோழர் தமிழ் முகிலன், புலவர் இரத்தினவேலவர், பாவலர் பரணர், அன்றில் பா. இறையெழிலன், முனைவர் தமிழப்பன், முனைவர் கு. அரசேந்திரன், பாவலர் காரைமந்தன் உள்ளிட்டோரும் பெருந்திரளான இனமொழி உணர்வாளர்களும், கலந்து கொண்டனர்.

புலவர் இறைக்குருவனாருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்து கின்றது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Sunday, November 25, 2012

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - தோழர் பெ.மணியரசன் பேச்சு


சாதி மறுப்புத் திருமணங்களை 
யார் நினைத்தாலும் தடுக்க முடியாது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாதி வெறியர்கள் தீ வைத்த நிகழ்வைக் கண்டித்து, மே பதினேழு இயக்கம் சார்பில், நேற்று(24.11.2012) மாலை 4.30 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் உமர் ஒருங்கிணைத்தார். மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரைசிங்கவேல், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், அருள்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், தர்மபுரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சாதி வெறிபிடித்த ஒரு கூட்டம், தீ வைத்துக் கொளுத்தி அட்டூழியம் செய்ததும், பொருட்களைக் கொள்ளையடித்ததும், தமிழ் இனத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. 12.11.2012 அன்று நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் நேரில் சென்று எரியூட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்த்த போது நெஞ்சு பதைத்தது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, ஒவ்வொரு அறையாக எரித்துள்ளனர் சாதி வெறியர்கள். உழைத்துச் சேர்த்த ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் கிடந்ததைக் கொண்டு வந்து காட்டினார்கள் அம்மக்கள். தமிழீழத்தில், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட தமிழர் பகுதியைப் போல, ஒரே இனத்திற்குள் உள்ள சாதி ஆதிக்கவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகள் காட்சியளித்தன.

கூடங்குளத்தில், யார் யார் என்றே தெரியாமல் தோராயமாக 50,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தர்மபுரியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் என்ற உண்மைத் தெரிந்த போதும் கூட, வெறும் 100 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்ததில் என்ன ஞாயம் உள்ளது? வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறிக்கும்பலில், பெண்கள் இருந்ததாகவும் சொல்கின்றனர். அது உண்மையாக இருப்பின், அவர்கள் மீதும் தயக்கமின்றி வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். சாதி வெறியர்களைத் தண்டிக்க, தமிழக அரசு முன்மாதிரி நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.

தர்மபுரி தீ வைப்பு போன்ற கொடிய சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். சாதியை ஒழிக்கும் வகையில், சாதி மறுப்புத் திருமணங்களை அதிகம் நடத்த வேண்டும். அவ்வாறு சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு, அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும். அந்த இட ஒதுக்கீட்டின் அளவை ஆண்டாண்டுக்கு அதிகரிக்க வேண்டும்


உலகமயம் கோலோச்சுகின் இந்த காலகட்டத்தில், அதன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால், பல தீமைகள் ஏற்பட்டுள்ள போதிலும் கூட, அதன் ஊடாக இளையோரிடம் சாதி, மதம் கடந்து காதல் மலர்வதும் நடைபெற்றுக் கொண்டிப்பது வரவேற்கத்தக்கது. இப்படி இளைய சமுதாயம் சாதி, மதம் கடந்து கலப்பு மணங்கள் புரிந்த கொண்டிருக்கும் நிலையில், சாதி மறுப்புத் திருமணங்களை எந்த காடுவெட்டி குருவாலும், சாதிச் சங்கங்களாலும் தடுக்க முடியாது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில், அணை உடைத்த வெள்ளம் போல், இளைஞர்கள் சாதியை உடைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்வது பெருகத்தான் போகிறது.

அண்மையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்த்தேசியவாதிகள் யாரும் தர்மபுரிக்கு வரவில்லை என்றும், தர்மபுரி தீ வைப்பு குறித்து மவுனம் சாதிப்பதாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாங்கள் எப்போது சாதி வெறியாட்டங்களை எதிர்த்துப் பேசாமல் மவுனமானோம் என அவருக்கு நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்.

தர்மபுரிக்கு தோழர் திருமாவளவன் சென்ற அதே நாளில் தான் நாங்களும் அங்கு சென்றிருந்தோம். இது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கும் தெரியும். எங்கள் கட்சி இதழான, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணாட்டம் இதழில், தர்மபுரி சாதி வெறியாட்ட நிகழ்வு தமிழினத்திற்கேத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என தலையங்கம் எழுதினோம்.

கடந்த ஆண்டு, பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் 7 பேர் தமிழகக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மதுரை, தஞ்சை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினோம். நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட, த.தே.பொ.க. தோழர்கள் பரமக்குடிக்கு நேரில் சென்று பார்த்தோம். காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் எனவும், மக்களை ஒடுக்கிய காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தோம்.

இப்பொதுழும், தர்மபுரியில் வெறியாட்டம் நிகழ்த்திய சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் அளித்தும், புதிய வீடுகளைக் கட்டித் தந்தும் அவர்களை மறுபடியும் கவுரமாக வாழ வைக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.


நத்தம் கிராமத்தை, 10 நிமிடத்தில் சென்றடைய முடியும் என்ற போதும், தர்மபுரியிலிருந்து பெரிய அளவில் காவலர்கள் சாதி வெறியர்களைத் தடுக்க வராதது ஏன்? அவர்களது உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். இதற்குக் காரணமான, காவல்துறை அதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தண்டனை ஆகாது என்பதால், அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து,  அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறோம். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதித் தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்கிறோம்.

இவையெல்லாம் சாதி வெறிக்கு எதிரான தமிழ்த் தேசியவாதிகளின் செயல்பாடுகள் ஆகாதா? அல்லது விடுதலை சிறுத்தைகள் எங்களை தமிழ்த் தேசிய சக்திகளாகவே பொருட்படுத்துவதில்லையா? அவ்வாறெனில், வேறு யாரைத் தான் விடுதலை சிறுத்தைகள் தமிழ்த்தேசியவாதிகள் என அழைக்கிறார்கள் என்பதையாவது அவர்கள் தெளிவுபடுத்துவார்களா? எந்த அமைப்பை, எந்தத் தலைவரை நீங்கள் தமிழ்த் தேசிய அமைப்பென்றும், தமிழ்த் தேசியவாதி என்றும் கருதுகிறீர்கள் என்பதையாவது வெளிப்படுத்துவீர்களா?


தர்மபுரி தீ வைப்பு நிகழ்வை சாக்காக பயன்படுத்தி ஒட்டு மொத்த தமிழ்த் தேசியத்தையும் எதிர்ப்பது தான் அவரது உத்தி என்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனெனில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து, தமிழ் இனவுணர்வோடு, தமிழர் சமத்துவ சிந்தனைகளோடு, இளைஞர்கள் தமிழ்த்தேசியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து, தன் அமைப்புகள் அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது உள்நோக்கம் தான் இதிலிருந்து வெளிப்படுகின்றது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட, பல வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தர்மபுரியில் நிகழ்த்தப்பட்டக் கொடுமையைக் கண்டிக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் உள்ளிட்ட பலரும் இங்கு எப்படி ஒன்றாகக் கூடியிருக்கிறோமோ, அதைப் போன்ற ஓர் தமிழ்த் தேசிய ஒற்றுமை தான் இன்றைக்குத் தேவை. தமிழ்த் தேசியப் புரட்சி எதிரியை வீழ்த்துவதைப் போலவே, தமிழர் மனங்களில், ஆரியர்களால் புகுத்தப்பட்ட சாதி என்ற அழுக்கையும் முழுமையாக அழிக்கும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்,  பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. முன்னணி நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவான தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார்.


 (செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: க.அருணபாரதி)

Saturday, November 24, 2012

“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக் கற்றும் போற்றியும் செயல்படுவோம்!” - தோழர் பெ.மணியரசன் அறிக்கை



“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்
கற்றும் போற்றியும் செயல்படுவோம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

தனித்தமிழ் இயக்கத்தின் சமகாலப் பேரறிஞரும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழிவந்து உலகத் தமிழ்க் கழகத்தின் பொறுப்பேற்று செயல் பட்டவரும், தென்மொழி ஆசிரியருமாகிய திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள், 23.11.2012 அன்று பின்னிரவில், தஞ்சையில் மாரடைப்பால் திடீரென்று காலமான துயர நிகழ்வு நெஞ்சத்தை வாட்டுகிறது.

பட்டுக்கோட்டையில் தமிழர் முறைத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு இரவு சென்னைக்கு திரும்பும் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, தஞ்சையில் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டார் அவர். நெஞ்சுவலியால் அவர் துடிக்கும் செய்தி பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மகன் பூங்குன்றன் வழியாக எனக்கு வந்தது.

உடனடியாக தமிழ் அன்பர்கள் பேராசிரியர் வி.பாரி, பொறியாளர் கென்னடி, இ.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் நல்லதுரை, முனைவர் இளமுருகன் மற்றும், தோழர்களுடன் இறைக்குருவனார் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்றோம். அவரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம்.

மருத்துவர்கள் ஆய்வுசெய்து விட்டு, இறைக்குருவனார் இறந்துவிட்டார் எனக் கூறினார்கள். அதன்பிறகு, மருத்துவ வாகனத்தில், திருச்சித் தோழர் ஈகவரசன் பாதுகாப்பில் இறைக்குருவனாரை சென்னைக்கு அனுப்பிவிட்டோம்.

புலவர் இறைக்குருவனார் அவர்கள், தனித்தமிழ்க் கொள்கையை, தமிழியக் கொள்கையை தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உரியதாக்கி எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர். சாதி மறுப்புக் கொள்கையை தாமும் செயல்படுத்தி தம் மக்களையும் செயல்படுத்தச் செய்தவர். சிறந்த தமிழர் மரபுச் சிந்தனையாளர். அவரது திடீர் மறைவு தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ஐயா இறைக்குருவனார் அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து துடிக்கும், அவர் துணைவியார் அன்புச் சகோதரி பொற்கொடி அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை(25.11.2012) காலை 10 மணிக்கு, சென்னை மேடவாக்கம் கூட்டுச் சாலையில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவிடம் அமைந்துள்ள தமிழ்க்களத்தில் நடைபெறும், இறுதி நிகழ்ச்சியில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தனித்தமிழை வளர்க்க, தமிழ்த் தேசியத்தை வளர்க்க திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் வழங்கியப் பங்களிப்புகளை கற்றும், போற்றியும், தொடர்ந்து செயல்படுவோம். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 

நாள்: 24.11.2012
இடம்: சென்னை

Wednesday, November 21, 2012

மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்!


மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்!


மருத்துவர் தெய்வநாயகம் அவாகள் மரணமடைந்தது மிகப்பெரும் வேதனையளிக்கிறது. கொடிய எய்ட்சு நோயிலிருந்தும், நெஞ்சக நோய்களிலிருந்தும் பலரின் உயிரைப் பாதுகாத்த மக்கள் மருத்துவர் தெய்வநாயகம் ஆவார்.

வெளிநாடுகளில் ஆங்கில மருத்துவத்துறையில் உயர்க்கல்விக் கற்று பொறுப்புகள் வகித்த அவர், சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகறியச் செய்தார். இனியத் தமிழில் பேசுவதில் மதிப்பும் மகிழ்ச்சியும் கொண்டவர் அவர். ஒரு துடிப்புள்ளத் தமிழ்த் தேசியராக வாழ்ந்தார். தமிழின உணர்வுக் கருத்துகளைப் பரப்பினார். ஈழத்தமிழர்களுக்கு துணையாய் செயல்பட்டார்.

இந்திய அரசின் துணையோடு, சி்ங்கள இனவெறி அரசு, தமிழின அழிப்புப் போர் நடத்திய 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரிய, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தோ, பொதுக் கூட்டங்கள் நடத்த சென்னையில் தி.மு.க. அனுமதி மறுத்தது. அப்போது, தனது தலைமையிலுள்ள தியாகராயர் நகர் செ.தே.நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டங்களையும், தமிழின உணர்வுக் கூட்டங்களையும் நடத்த அனுமதி தந்தார். இந்த வகையில் தமிழினத்திற்கு ஆதரவான கருத்துப் பரப்பலுக்குப் பெருந்துணையாய் நின்றார்.

மருத்துவர் தெய்வநாயகம் அவர்களுடைய இறப்பு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமின்றி ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து துயருற்றிருக்கும் அவரது இல்லாத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை காலை 10 மணியளவில், சென்னை தியாகராயர் நகர், 101 - மகாலட்சுமி தெருவிலுள்ள (ரெங்கநாதன் தெருவுக்கு எதிரில்) அவரது இல்லத்திலிருந்து, அன்னாரது இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT