தமிழர்களின்
மரபார்ந்த கலை நிகழ்வுகள் – உரிமைகளை மீட்க உந்து விசையளிக்கும் பாவரங்கம்
– தமிழர் மரபு வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு வருவோருக்கு
பாராட்டு – வடமொழிப் பெயர் நீக்கி தமிழ்ப் பெயர் சூட்டல் – தமிழர்
மீட்சிக்கான உரைவீச்சு என பல்வேறு வடிவ நிகழ்வுகளோடு, தஞ்சையில்
தமிழ்த்தேசியப் புத்தெழுச்சியுடன் நேற்று (29.07.2017) மாலை “தமிழர்
மீட்சிப் பெருங்கூடல்” சிறப்புடன் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப்
பேரியக்கம் சார்பில், நேற்று மாலை தஞ்சை – ஆபிரகாம் பண்டிதர் சாலையில்
நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.
பால்ராசு தலைமை தாங்கினார். தஞ்சை வீரசோழன் தப்பாட்டக் குழுவினரின்
எழுச்சிமிகுப் பறையிசையும் நடனமும் காண்போரின் கண்களைக் கவர்ந்து
கட்டிப்போட்டது. தப்பாட்டக் கலைஞர்களுக்கு மேடையில் துண்டணிவித்து,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டினார்.
அதனைத்
தொடர்ந்து, பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி
வரவேற்புரையாற்றி உரையரங்கத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்க் கலை இலக்கியப்
பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியக்
கருத்துகளை தமக்கே உரிய கலை இலக்கிய நடையில் பாக்களாக வடித்து, பாவலர்கள்
கவிபாஸ்கர், நா. இராசாரகுநாதன், செம்பரிதி, முழுநிலவன் ஆகியோர் சிறப்பான
பாவீச்சு நல்கி, திரண்டிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினர்.
தமிழ்த்தேசியப்
பேரியக்கப் பொருளாளர் தோழர் விடியல் (அ. ஆனந்தன்), தமிழர் பெருங்கூடலில்
தொடங்கி இனி தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ள தமிழ்த்தேசியப் பரப்புரையை
அறிவிக்கும் முதன்மைத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பலத்த
கையொலியுடன் தீர்மானம் நிறைவேறியது.
இதனையடுத்து
நடைபெற்ற எழுச்சிமிகு உரையரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்
செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர்
வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர்
மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழக மாணவர்
முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா ஆகியோர், தமிழர்களின் உரிமை
உரிமை மீட்பு – தமிழ்த்தேசியக் கோட்பாடின் வரலாறு – மதுக்கடை ஒழிப்பு –
நீட் தேர்வு என பல்வேறு தலைப்புகளில் சிறப்பான உரைவீச்சை நிகழ்த்தினர்.
இதனையடுத்து,
தமிழர்களின் மரபான இயற்கை வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு
வருவோரைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் (பெண்ணாடம்), திரு.
கண்ணதாசன் (முருகன்குடி), திரு. சு. பழனிவேலு (சூழியக்கோட்டை), திரு.
கார்த்திகேயன் (காஞ்சிபுரம்) ஆகியோருக்கு மேடையில் துண்டவிணித்தும்,
புத்தகங்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட்டனர்.
அதனைத்
தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளர்கள்
பலரின் பெயரை தமிழில் சூட்டும் நிகழ்வு நடந்தது. பேரியக்கத்தின் பொருளாளர்
தோழர் அ. ஆனந்தனுக்கு “விடியல்” என்றும், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர்
தெட்சிணாமூர்த்திக்கு, “தென்னவன்” என்றும், பொதுக்குழு உறுப்பினர் தோழர்
தினேசுக்கு “தீந்தமிழன்” என்றும், ஈரோடு தோழர் பிரகாசுக்கு “அருள்ஒளி”
என்றும், செங்கிப்பட்டி தோழர் செயராஜூக்கு “வெற்றித்தமிழன்” என்றும்
தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன.
நிறைவில்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புமிகு
நிறைவுரையாற்றினார். தமிழினத்தின் உரிமைகளை மீட்பது மட்டும் தமிழ்த்தேசியம்
அல்ல, தமிழர்களின் மரபான அறத்தையும், வீரத்தையும், பண்புகளையும் மீட்பதும்
– சாதி அழுக்கும் மனக்கேடுகளும் நீக்கப்பட்ட புதிய தமிழனை – தமிழச்சியை
மறுவார்ப்பு செய்வதும் தமிழ்த்தேசியம்தான் என்பதே அவரது உரையின் சாரமாக
இருந்தது.
புதிய
எதிர்பார்ப்புகளுடன், தமிழ்த்தேசிய எழுச்சியுடன், தமிழ்நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழின
உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கான இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக
விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர்
தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன்,
உழவர் சங்கத் தலைவர் திரு. சித்திரக்குடி பழனிராஜன், உலகத் தமிழ்க் கழக
புதுச்சேரி பொறுப்பாளர் ஐயா கோ. தமிழுலகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத்
தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர்.
தமிழ்த்தேசியப்
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன்,
மதுரை இரெ. இராசு, சென்னை அருணபாரதி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்
செயலாளர் தோழர் சிதம்பரம் ஆ. குபேரன், பொதுக்குழு உறுப்பினர்கள் குடந்தை
தீந்தமிழன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, முன்னணிச் செயல்பாட்டாளர்கள்
புதுச்சேரி இரா. வேல்சாமி, சிதம்பரம் பா. பிரபாகரன், தருமபுரி க. விசயன்,
புளியங்குடி க. பாண்டியன், தொரவி சிவக்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதியிலிருந்து பேரியக்கத் தோழர்கள் ஊர்திகளில் வந்து
பங்கேற்றனர்.