உடனடிச்செய்திகள்

Thursday, July 26, 2012

காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு
நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரைத் தராத கர்நாடகத்திற்குநெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என வலியுறுத்தி வரும் ஆகத்து-10 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, இந்திய அரசின் நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்துகின்றது. இப்போராட்டத்திற்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
இப்போராட்டத்தை விளக்கி த.தே.பொ.க. வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, கபினி உள்ளிட்ட அணைகளில், மொத்தக் கொள்ளளவில் முக்கால் பாகம் தண்ணீர் நிரம்பி விட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மை இல்லை. கர்நாடகம் தமிழர்கள் மீது பகை உணர்ச்சி கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 26 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரினால் காலம் காலமாகப் பாசனம் பெற்று வருகிறது. சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை – தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  குடிநீருக்குக் காவிரியை நம்பி உள்ளனர்.
ஏடறிந்த காலந்தொட்டுக் காவிரிக்கும் தமிழர்களுக்கும் தாய் – சேய் உறவு தொடர்கிறது.  தமிழர் நாகரிகத்தின் வளர்ப்புத் தாய் காவிரி. தமிழ் இனத்தின் அடையாளம் காவிரி.
இவ்வாண்டு ஐந்து லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியைச் செய்ய விடாமல் பாழடித்துவிட்டது கர்நாடகம். ஒரு போகச் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. தமிழகத்திற்குரிய தண்ணீரைச் சட்ட விரோதமாகத் தனது கோடைச் சாகுபடிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருக்கிறது.  இடைக்காலத் தீர்ப்பு 1991இல் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு இந்திய அரசால் அதன் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் பெற்றுள்ளது. 
அந்த இடைக்காலத் தீர்ப்பின்படி சூன்மாதம் 10.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும், சூலை மாதம் 42.76 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். மூர்க்கத்தனமாகக் கர்நாடகம் மறுத்துவிட்டது.  தட்டிக் கேட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு நயவஞ்சகமாக மவுனம் காக்கிறது.  மறைமுகமாகக் கர்நாடகத்தின் மூர்க்கத் தனத்தை ஆதரிக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும்கூட பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுக்கிறது இந்திய அரசு.
சூடானில் உற்பித்தியாகி எகிப்தில் பாயும் நைல் ஆறு எந்தத் தடையுமின்றி ஓடுகிறது.  பகை இருந்தபோதும், இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானில் தடையின்றிப் பாய்கின்றன.  பல நாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள ஹெல்சிங்கி உடன்பாடு உள்ளது.
இந்தியாவுக்குள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள சட்டமில்லையா? இருக்கிறது. அது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் (1956). அச்சட்டப்படி அமைக்கப்பட்டதுதான் காவிரித் தீர்ப்பாயம். அதன் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடகம். கர்நாடகத்தின் இனவெறிக்குத் துணை போகிறது இந்திய அரசு.
 நர்மதை, கிருஷ்ணா, ஆறுகளின் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் செயல்படுகின்றன.  காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு மட்டும் கழிவறைக் காகிதம் ஆனது ஏன்? நாம் தமிழர்கள் என்பதாலா?
 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்கிறது கேரளம்! அந்த அராஜகத்திற்கு ஆதரவு தருகிறது இந்திய அரசு! இந்தியாவில் தமிழ் இனத்திற்குச் சட்ட நீதி எதுவும் கிடையாதா?
சிறுவாணியில் அணைகட்டிக் கோவை, திருப்பூர் மாவட்டக் குடிநீரைத் தடுக்கப் போகிறது கேரளம். அமராவதிக்குத் தண்ணீர் வழங்கும் பாம்பாற்றில் அணை கட்டப் போகிறது கேரளம்.  பாலாற்றில் கணேசபுரத்தில் அணைகட்டிக் கசிவு நீரையும் தடுக்கப் போகிறது ஆந்திரப் பிரதேசம்.
 இனிப் பதிலடி கொடுக்காமல் சட்டம் பேசிப் பயனில்லை தமிழர்களே! நம் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகம் போகிறது. அதைத் தடுப்போம். அம்மின்சாரம் தமிழ்நாட்டிற்குப் பயன்படட்டும். அங்கிருந்து கேரளத்துக்கு ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் போகிறது.  ஆந்திரத்துக்கு ஆறு கோடி யூனிட் மின்சாரம் போகிறது. தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா?
 காவிரியில் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுப்போம்! பாகுபாடு காட்டும் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம்! கர்நாடகச் சிறையிலிருந்து காவிரியை மீட்போம்! களம் அழைக்கிறது வாருங்கள் தமிழர்களே!
 இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.(செய்தி; த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: போராட்டத் துண்டறிக்கை)

Tuesday, July 24, 2012

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு
தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள ஆணை தமிழகத்திற்கு எதிரானது; ஒப்பந்தப்படி நடப்பில் உள்ள தமிழக அரசின் அணை பராமரிப்பு உரிமையை பறிக்கக்கூடியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அணைப் பாதுகாப்பு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தங்களின்படி அவ்வணையின் பராமரிப்பு அதிகாரம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்ததாகும். ஆனால் அணைப் பராமரிப்பு தொடர்பான அன்றாட பணிகள் உள்ளிட்ட எந்தப் பணியையும் செய்யவிடாமல் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள அரசு சட்டவிரோதமாகத் தடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு சிற்றணையில் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களையும், பணியாளர்களையும் கேரள காவல் துறையினர் மிரட்டி வெளியேற்றிவிட்டனர்.

நீதிபதி ஆனந்த் குழுவினர் அணையின் வலுகுறித்து ஆய்வு செய்வதற்காக தோண்டிய துளைகளை முழுமையாக அடைப்பதற்கு கூட விடாமல் கேரள அரசு தடுத்து விட்டது. அப்பணி அரை குறையாகவே நிறைவேறியுள்ளது.

அணைப் பாதுகாப்பு குறித்து கேரள அரசுக்கு உண்மையிலேயே அச்சம் இருக்குமானால் துளையை அடைக்கும் பணிகளையும், அணைப் பராமரிப்பு பணிகளையும் தடைச் செய்யாமல் அனுமதித்திருக்க வேண்டும். இப்பணிகளை கேரள அரசு அடாவடியாக தடுப்பதில் இருந்தே அணையின் வலுகுறித்து கேரளா தெரிவித்து வரும் அச்சம் இட்டுகட்டப்பட்டது, உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகும்.

இந்நிலையில் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணிகளை நடுவண் காவல் சேமப் படை (சி.ஆர்.பி.எப்) மூலம் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்த வைத்திருக்க வேண்டும். மாறாக தேவையின்றி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதன்மீது 23.07.2012 அன்று ஆணைப் பிறப்பித்த நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. ஆனால் இப்பணிகளை கேரள அரசின் கண்காணிப்பு பொறியாளர், நடுவண் அரசின் நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ஆகிய மூவர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியாமல் தடுத்துவிடும். கேரள மேற்பார்வை பொறியாளர் ஒத்துழைக்கவில்லை என்றால் எந்தப்  பராமரிப்பு பணியையும் செய்ய முடியாது. இந்த வகையில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையானது அணைப் பராமரிப்பு பணிகள் தொடர்பில் ரத்து அதிகாரத்தை வழங்குகிறது. நிரந்தரமாக கேரள அரசின் தயவில் இப்பணிகள் விடப்படுகின்றன என்று பொருள்.
முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் அணையின் பராமரிப்பு உரிமை தமிழக பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற ஐவர் ஆயத்தின் இந்த ஆணை தமிழகத்தின் இந்த உரிமையைத் தட்டி பறிக்கிறது. கேரளாவின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதாக இந்த உரிமையைத் தாழ்த்திவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத்துடிக்கும் கேரளத்தின் அடாவடிக்கே உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை உதவியாக அமையும்.

எனவே தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு அதிகாரத்தை தற்காத்து கொள்ள கீழ்வரும் சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமையை இந்த ஐந்து நீதிபதிகள் ஆயத்தின் ஆணை பறிப்பதோடு மட்டுமின்றி முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தின் அடிப்படையையே மாற்றியமைத்துவிட்டது. இது இந்த ஐவர் ஆயத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். எனவே ஐவர் ஆயத்தின் இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். 7நீதிபதிகள் அல்லது அதற்கு மேலும் எண்ணிக்கையில் நீதிபதிகள் கொண்ட இன்னும் விரிவான உச்சநீதிமன்ற ஆயம் (பெரிய பெஞ்ச்) இம்மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக் அரசு முன்வைக்க வேண்டும்.

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை வரை உள்ள பழையச் சாலையை புதுப்பிக்கலாம் என தமிழக அரசுக்கு ஐவர் ஆயத்தின் இவ்வாணை அனுமதி அளித்திருந்தாலும் நடைமுறையில் அதனை கேரள காவல்துறை அனுமதிக்காது என்பது தெளிவு. அன்றாடம் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி அது நிறைவேறாமல் பார்த்துகொள்ளும்.

இப்பணிகளை தடையின்றி நிறைவேற்ற வேண்டுமானால் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்து கேரள காவல் துறை நீக்கப்பட்டு அப்பணிகள் நடுவண் சேமப்படையிடம் (மத்திய ரிசர்வ் போலிஸ்) ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே அங்கு மத்திய ரிசர்வ் படையை நிறுத்துமாறு இந்திய அரசை தமிழக அரசு அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

வல்லக்கடவு – முல்லைப்பெரியாறு அணை சாலை பழைய சாலையாகும். அதில் மண்டியுள்ள புதர்களையும், மரங்களையும் அப்புறப்படுத்தி சாலையை புதுப்பித்து கொள்வதற்கு நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழகம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இவ்வாணை நிபந்தனை போடுகிறது. மரங்களை அப்புறப்படுத்த கேரள வனத்துறை எதிர்ப்பு கிளப்பினால் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்படும். சாலைப் புதுப்பிக்கும் பணி நடைமுறையில் நிறைவேறாது. இந்த நிபந்தனையை எதிர்த்தும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட சட்டவகை, அரசியல்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டு முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க விரைந்து செயல்படுமாறு தமிழக அரசைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 (கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் : சிதம்பரம்

தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை

தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை

புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதில் பல திரிபுகள் தோன்றுவது இயல்பே. அக்கருத்தியலை உண்மையாக முன்னெடுப்போர் இருப்பர்; உற்சாகத் திற்காக முன்னெடுபோர் இருப்பர்; புதிய புகலிடமாகக் கருதுவோர் இருப்பர்; போர்வையாகப் பயன்படுத்துவோர் இருப்பர்; தூய்மைவாதம் பேசித் துருவமுனைப்புக் குறுங்குழு ஆவோர் இருப்பர்; இப்படி அப்புதிய கருத்தியலை ஏற்போர் எத்தனையோ வகையினர்! செல்வாக்குப் பெற்றுவரும் “தமிழ்த் தேசியம்” என்ற கருத்தியலிலும் இவ்வாறு பல திரிபுகள் தோன்றியுள்ளன.

அத்திரிபுகளுள் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.

தமிழனை முதலமைச்சர் ஆக்குவதுதான் தமிழ்த்தேசியத்தின் இலட்சியம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மட்டுமின்றி, தேர்தல் பதவிகள் மீது நாட்டமில்லாத தமிழ்த் தேசிய நண்பர்களும் “ தமிழன் ஆள வேண்டும்” என்று கூறுகின்றனர். “தமிழன் ஆளவேண்டும் என்று அவர்கள் கூறுவது விடுதலை பெற்ற தமிழ்நாட்டில் தமிழன் ஆள வேண்டும் என்ற பொருளில் இல்லை.

இப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழர் வரவேண்டும் என்ற பொருளில் கூறுவதாகும். அதாவது தெலுங்கு, கன்னடம், உருது போன்ற பிற மொழிகளைத் தாய்மொழியாய்க் கொண்டிராத, தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழர் முதலமைச்சராய் வரவேண்டும். அவ்வாறு தமிழர் முதலமைச்சராய் வந்தால் தமிழ் மொழி, தமிழின உரிமை தொடர்பான பல சிக்கல்களுக்கு இந்தியக் கட்டமைப்புக் குள்ளேயே தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில், தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான உரிமைகள் பறி போனதற்கு முகாமையான காரணம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறமொழி பேசுவோர் பலர் முதலமைச்சர்களாக இருந்ததுதான் என்பது அவர்களின் நிலைபாடு. தமிழக முதலமைச்சர்கள் வரிசையில் கருணாநிதி தெலுங்கர், செயலலிதா கன்னடப் பார்ப்பனர், எம்.ஜி.ஆர். மலையாளி, இராசாசி பார்ப்பனர், குமாரசாமி ராஜா தெலுங்கர், ஓமந்தூரர் இராமசாமி ரெட்டியார் தெலுங்கர் அண்ணா கூட அரைத் தெலுங்கர் என்கிறார்கள் அந்நண்பர்கள்.

குறிப்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் “தமிழ்நாட்டின் முதலமைச்சராய்த் தமிழன் தான் வரவேண்டும்” என்று தீவிரப் பரப்புரை செய்து வருகிறார். தோழர் சீமானே முதலமைச்சராகட்டும். அதற்கு அவர்க்கு எல்லா உரிமையும் இருக்கிறது. முதலமைச்சராகி அவர் என்ன செய்வார்?

“நாம் முதலமைச்சரானால், உத்தரவு போடும் இடத்தில் இருப்போம்; தேர்தலைப் புறக்கணித்தால் மனுக்கொடுத்துக் கோரிக்கை வைக்கும் இடத்தில்தான் இருப்போம்” என்கிறார் சீமான்.

முதலமைச்சரானதும் என்ன ஆணை போடுவார்? தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் இனிமேல் இந்தியோ அல்லது ஆங்கிலமோ அலுவல் மொழியாக இருக்காது. தமிழ்தான் அலுவல்மொழியாக இருக்கும் என்று ஆணை போடுவாரா, சீமான்? அதற்கு ஒரு முதலமைச்சருக்கும் சட்டப்பேரவைக்கும் அதிகாரம் இருக்கிறதா?
தோழர் சீமான் முதலமைச்சரானால், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கமும் அங்குள்ள அனல்மின் நிலையமும் தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியஅரசு அதில் உரிமை கொண்டாட முடியாது என்று சட்டம் போடுவாரா?

தோழர் சீமான் முதலமைச்சரானால், நரிமணம், கோயில்களப்பாள், கமலாபுரம், அடியக்க மங்கலம், புவனகிரி பெட்ரோலியமும் குத்தாலம் சமையல் எரிவளியும் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றும், அவற்றின் மீது இந்திய அரசுக்கு இருந்த உரிமையை நீக்கிவிட்டேன் என்றும் ஆணையிடுவாரா?

கச்சத் தீவு மீட்கப்பட்டுவிட்டது, இனி அது இலங்கைக்குச் சொந்தமில்லை என்று சட்டமியற்ற முடியுமா?உயிர்க்கொல்லி அணு உலைகளைத் தமிழ்நாட்டில் மூடிவிட்டோம் என்று ஆணையிட முடியுமா?

தமிழக மக்களிடம் இனிமேல் இந்திய அரசு, உற்பத்திவரி, கம்பெனி வருமானவரி, தனிநபர் வருமானவரி, சுங்கவரி உள்ளிட்ட எந்த வரியும் விதிக்கக் கூடாது; வசூலிக்கக் கூடாது; அவற்றைத் தமிழக அரசே விதித்து வசூலித்துக் கொள்ளும். அதிலிருந்து சிறுபகுதி நிதியை இந்தியஅரசுக்குத் தமிழகம் தரும் என்று தோழர் சீமான் சட்டமியற்றுவாரா?

பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை நிறுவனங்கள் வெளியேற்றப்படும் என்று ஆணையிடு வாரா?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, அமராவதி, பவானி, சிறுவாணி, நெய்யாற்றின் கரை இடதுகரைக் கால்வாய் முதலியவற்றிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்கள் தடுக்கக் கூடாது அவற்றின் மீது அணைகட்டக் கூடாது, என்று சட்டமியற்றி செயல்படுத்த முடியுமா?

மேற்சொன்ன அனைத்திலும் இந்திய அரசுக்கு மட்டுமே அதிகாரமிருக்கிறது. தமிழக அரசுக்கு அதிகாரம் எதுவுமில்லையா? இருக்கிறது. சுடுகாடு பராமரிக்க, கால்நடைகளைக் கவனிக்க, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விளைநிலங்களை வாங்கிக் கொடுக்க, பள்ளிக்கூடங்கள் நடத்த, மருத்துவமனைகள் பராமரிக்க, வாழ்வுரிமைக்குப் போராடும் மக்களை அடித்துநொறுக்கி, துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி அடியாள் வேலை பார்க்கும் காவல்துறையைக் கட்டி வளர்க்கத் தமிழகஅரசுக்கு அதிகாரமிருக்கிறது.

இந்தத் தரத்தில் இன்னுஞ்சில அதிகாரங்கள் இருக்கின்றன.
இவையெல்லாம் கங்காணி அதிகாரங்கள். இறையாண்மையுள்ள அரசின் அதிகாரங்கள் அல்ல. தமிழக முதலமைச்சர் பதவி என்பது தலைமைக் கங்காணிப் பதவியே!

ஊழல் பேர்வழிகளை, ஒட்டுண்ணி அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள். உண்மையான இனப்பற்றும் நேர்மையான பண்பும் கொண்ட ஒரு தமிழனோ அல்லது தமிழச்சியோ தமிழக முதலமைச்சர் ஆனாலும் மேலே சுட்டிக்காட்டிய அதிகாரங்கள் அவர்க்குக் கிடைக்கப் போவதில்லை. எனவே, உண்மையான சமூக முன்னேற்றத்தை உருவாக்க முடியாது. தமிழகம் இழந்து வரும் உரிமைகளை மீட்கமுடியாது. தமிழ் நாட்டில் எல்லா இடத்திலும் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிட முடியாது.

ஒட்டு மொத்தத் தமிழ்த் தேசத்தையும் தமிழ்மக்களையும் தில்லி ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. தமிழகத்திற்குரிய எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ளது இந்திய ஏகாதிபத்தியம். அதன் காலனியாகத்தான் தமிழ்நாடு வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடிமைத் தளையிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்காமல் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்று முழங்குவது, தமிழின உணர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகும். அடிமைத்தனத்தை நீட்டிக்கும் உத்தியாகும். நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நோய் தீர்க்கும் மருந்து கொடுக்காமல் சத்து மாத்திரை தருகிறேன் என்றால் எப்படியோ அப்படித்தான், கங்காணி முதலமைச்சர் ஆக விரும்புவதும்!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்
(திருக்குறள்)


கருணாநிதியின் இனத்துரோகத்தை, செயலலிதாவின் இந்திய தேசியப் பார்ப்பனியக் கொள்கை நிலைப்பாட்டை அடையாளம் காண்பதும், எதிர்ப்பதும் தேவை. அதே வேளை இவ்விருவரால் மட்டுமே எல்லாம் கெட்டுப் போய்விட்டன என்று கருதுவது, உள்ளதை உள்ளவாறு பார்த்தது ஆகாது.

எல்லாத் தீங்குகளுக்கும் தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் மட்டுமே காரணம் என்று கருதினால் இந்திய ஏகாதிபத்தியம் தமிழனப்பகையுடன் செயல்படுவதையும், தமிழ்நாட்டைக் காலனிய முறையில் ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் உரியவாறு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். காங்கிரசு, பா.ச.க. கட்சிகளும் அவற்றுடன் கூட்டணி சேர்ந்தோ அல்லது இணக்கம் கொண்டோ செயல்படும் இதரக் கட்சிகளும் இந்தியதேசிய வெறியுடன் ஏகாதிபத்தியத் தன்மையுடன் செயல்பட்டுத் தமிழ்நாட்டை ஒடுக்குகின்றன என்ற உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் ஆகிவிடுவோம்.

தெலுங்கர், மலையாளி போன்ற பிற இனத்தார் முதலமைச்சர்களாக இருந்ததால்தான் தமிழக உரிமைகள் பறிபோயின, தமிழும், தமிழர்களும் முன்னேற முடியவில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

தமிழக முதல்வர்களாக காமராசரும் பக்தவத்சலமும் பச்சைத் தமிழர்கள் என்பதில் மேற்படித் தமிழ்த் தேசியர்களுக்கு ஐயம் இருக்காது. காமராசர் எளிமையானவர்; இலஞ்ச இலாவண்யங்களில் ஈடுபடாதவர், பள்ளிக் கூடங்கள் அதிகமாகத் திறந்தவர். ஆனால் அவர் எந்த அளவு தமிழின உணர்வுடன் செயல்பட்டார்? தமிழின உரிமைகளைக் காப்பாற்றினார்?
மொழி வழி மாநில அமைப்பின் போது தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருத்தணி, சித்தூர், புத்தூர், காளத்தி போன்ற வட தமிழ்மண் ஆந்திரப்பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டதை அவர் எதிர்க்கவில்லை. 

தமிழகத்தில் ம.பொ.சியும் மேற்படி வடக்கெல்லைப் பகுதியில் செயல் பட்ட காங்கிரசாரும், காமராசரின் தலைமையை மீறிப் போராடியதால்தான் திருத்தணியாவது கிடைத்தது. காமராசர் முதலமைச்சராக இருந்த போதுதான் தெற்கெல்லை மீட்பு தேவிகுளம், பீர்மேடு மீட்புப் போராட்டம் தீவரமடைந்தது. அப்பகுதியில் உள்ள காங்கிரசுத் தலைவர்களான நேசமணி பி. எஸ். மணி குஞ்சன் நாடார் போன்றவர்களின் தலைமையில் அப்போராட்டம் நடந்தது. அப்போராட்டத்திற்கு எதிராகத்தான் காமராசர் செயல்பட்டார்.

போராடிய காங்கிரசாரின் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டம் மீட்கப்பட்டது. தேவிகுளம் பீர்மேடு பகுதிகளையும் மீட்க வேண்டும் என்று தெற்கெல்லை மீட்புக் காங்கிரசார், அப்போது முதல்வராயிருந்த காமராசரைச் சந்தித்து மனுக் கொடுத்த போது “ குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவில்தான் இருக்கு போங்கள்” என்றார் காமராசர். 

தேவிகுளம் பீர்மேட்டை இழந்ததால் தான் இன்று முல்லைப் பெரியாரையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காமராசர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் சென்னை மாநிலம் என்றிருப்பதைத் “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றக்கோரி, காங்கிரசைச் சேர்ந்த பெரியவர் சங்கரலிங்கனார் சாகும் வரை பட்டினிப்போராட்டம் நடத்தினார். கண்டுகொள்ளவில்லை காமராசர். உண்ணாப் போராட்டத்தில் உயிர்நீத்தார் சங்கரலிங்கனார்.

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் “ தமிழன் ஆள வேண்டும்” என்று கூறுவோர் என்ன விடை சொல்கிறார்கள்? காமராசர் தமிழர்தாம்! ஆனால் இந்திய ஏகாதியபத்தியத்தின் தமிழ்நாட்டுத் தளபதியாகச் செயல்பட்ட தமிழர்!

பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதுதான் 1965-இல் இந்தி திணிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாகக் கிளர்ந்தெழுந்தது.

பக்தவத்சலம் ஆட்சி, காக்கைக் குருவிகளைச் சுட்டுக்கொல்வதைப் போல் முந் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களையும், மக்களையும் சுட்டுக்கொன்றது. அப்போது வல்லமைமிக்க அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராகச் செல்வாக்குடன் திகழ்ந்தார். காமராசர். நேரு காலமாகிவிட்டார். இந்திரா அனைத்திந்தியத் தலைவராக வளரவில்லை. அதனால் அப்போது காமராசரே அனைத்திந்தியப் பெருந்தலைவர்.

கீழப்பழூர் சின்னச்சாமி இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டபோது, “ வயிற்று வலிதாங்காமல், கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொண்டார் “ என்று எகத்தாளம் பேசினார் பக்தவத்சலம்.

காமராசரும் பக்தவத்சலமும் தமிழர்கள் தாமே! அவர்கள் ஆட்சியில் தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்ட பெருங் கேடுகள் நடந்தனவே, எப்படி? காமராசரும் பக்தவத்சலமும் தனிநபர்களல்லர்; அவர்கள் ஓர் அனைத்திந்திய ஆளுங் கட்சியின் தமிழகத் தலைவர்கள். அந்த அனைத்திந்தியக் கட்சி, இந்தியதேசிய வெறி கொண்ட ஏகாதிபத்தியக் கட்சி. 

அக்கட்சியின் எல்லைகளைத் தாண்டி இவர்களால் செயல்பட்டிருக்க முடியாது. அவ்வாறு எல்லைகளைத் தாண்டி செயல்படும் தமிழின உணர்வும் உரிமை வேட்கையும் கொள்கையும் இவர்களுக்கு இருந்திருந்தால் இவர்கள் காங்கிரசுக் கட்சியில் இருந்திருக்க மாட்டார்கள்.

தனிநாடு கேட்ட தி.மு.க. தடைச்சட்டம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் முன் கூட்டியே விடுதலை இலட்சியத்திற்கு விடைகொடுத்தது. சட்ட மன்றத்தில் ஆட்சி அமைத்து அதன் வழித்த தனிநாடு அமைப்போம். என்றார் அண்ணா. 1967-இல் ஆட்சி அமைத்தது தி.மு.க. முதலமைச்சரானார் அண்ணா. தமிழின உணர்வாளர்கள் எதிர்பார்த்ததை அவரால் செய்ய முடியவில்லை. “ தம்பி நான் சூழ்நிலையின் கைதியாக இருக்கிறேன். முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடமாக இருக்கிறது.

நாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று கூறி தமிழின உணர்வுத் தம்பிகளை அமைதிப்படுத்தினார் அண்ணா. “ இருக்கின்ற நிலைமையை ஏற்றுகொள், இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்காதே” என்று சொல்லாமல் சொன்னார். குறைந்த காலத்தில் அவரும் காலமாகிவிட்டார்.

கருணாநிதி தெலுங்கர் என்று ஒரு சாரர் சொல்கின்றனர். அது பற்றி நமக்குத் தெரியாது அந்த ஆராய்ச்சி இப்போது எந்த விளைவையும் உண்டாக்கப் போவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அடுத்தநிலைத் தலைவர்களாக இருந்த, ஐயத்திற்கு இட மில்லாத தமிழர்களான நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? “நடமாடும் பல்கலைக் கழகம்” “நாவலர்” இரா. நெடுஞ்செழியன் மலையாளியான எம்.ஜி.ஆருக்கும், கன்னடப் பார்ப்பனரான செயலலிதாவுக்கும் துணை நின்று பதவித் தாகம் தணித்துக் கொண்டார். “இனமானப் பேராசிரியர்” அன்பழகன் கல்வியமைச்சராய் இருந்த காலத்தில்தான் மிக அதிகமாக ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஈழத்தில் 2009-இல் இன அழிப்புப் போர் நடந்த போது, நடுவண் அரசில் பங்கு வகித்து அமைச்சர்களைக் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி எப்படி நடந்து கொண்டது? அப்போதும் நடுவண் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் தமிழர்கள்தாம்!
தமிழினம், தமிழ்நாடு அடிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்த புரிதலும் அடிமைத் தளையை அறுப்பதற்கான கொள்கையும் அதற்குரிய அமைப்பு வடிவமும் இல்லாத நிலையில் தமிழர்கள் அமைச்சர்களாய் இருப்பது மட்டுமே தமிழனத்தைக் காப்பாற்றாது.

தமிழினத்தில் பிறந்தவர்களில் பல தரத்தினர் உள்ளனர். இருக்கின்ற நிலைமையில் என்ன பெற முடியுமோ. அதைப் பெறுவோம் என்போர், கிடைக்கின்ற அதிகாரத்தைப் பெற இனத்தை அடமானம் வைப்போர், இனப்பகைவர்களுக்கு ஏவல் செய்து பதவி பெறுவோர், எதிரியிடம் எந்தப்பதவியும் பெறுவதிலை, இன விடுதலையே முதன்மை என்று செயல்படுவோர் எனப் பலதரப்பினர் தமிழர்களிடையே உள்ளனர்.

இந்த வேறுபாடுகளையெல்லாம் கவனியாமல் “தமிழன் முதலமைச்சராக வேண்டும்” என்று கூறுவோரில் முன்று வகையினர் இருக்கின்றனர். ஒருவகையினர், விவரமறியாதவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளந்திகள்! இது குருட்டுத்தனம்! இன்னொரு வகையினர் விவரமறிந்த தன்னலக்காரர்கள். இது திருட்டுத்தனம். மூன்றாம் வகையினர், கடுமையான சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு கூறுவோர்; இதய நோய்க்கு இஞ்சிமரப்பா மருந்து கொடுப்போர். இவர்கள் குழப்பவாதிகள்.

இந்த மூன்றுவகையினரும் ஒரே தளத்தில்தான் செயல்படுகின்றனர். இவர்களால் தமிழின விடுதலை அரசியலுக்கு ஏற்படும் பின்னடைவும் குழப்பமும் ஒரே தன்மையில் தான் இருக்கும்.
இவர்கள், தமிழக மக்களுக்கிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் உண்டாக்கக் கூடிய இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறி தமிழ்நாட்டில் நானூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தெலுங்கு, கன்னடம், பேசும் மக்கள் , நவாபுகள் ஆட்சிகாலத்தில் குடியேறிய உருது பேசும் இஸ்லாமிய மக்கள் ஆகியோரை அயலார் என்று கூறுகின்றனர்.

இவர்கள் தமிழகத்தில் வாழலாம்; ஆனால் ஆளக்கூடாது; முதலமைச்சர் ஆகக் கூடாது, அமைச்சர்கள் ஆகக் கூடாது என்கிறனர். இவர்களைத் தமிழ்த் தேசிய அமைப்புகளில் உறுப்பினர்களாச் சேர்க்கக் கூடாது, என்கின்றனர்.

தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தமிழக ஆட்சியில் பங்கு பெறக் கூடாது, தமிழ்த் தேசிய அமைப்புகளில் உறுப்பினர் ஆகக் கூடாது எனில், அவர்கள் தமிழ்நாட்டின் குடிமக்களாக இருக்க முடியாது என்று கூறுவதாகும். தமிழகத்தில் வாழும் பிறமொழி ஏதிலிகள் என்ற நிலையில் இருக்கலாம் என்று பொருள்.
“இவர்கள் தமிழ்நாட்டில் வாழலாம் ஆனால் ஆளாக்கூடாது” என்று சொல்வதன் உண்மைப் பொருள் இதுவாகத்தான் இருக்கும். இவர்களுக்கு வாக்குரிமை மறுக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

நானூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் குடிமக்களாக வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு வாக்குரிமையை மறுப்பது என்ன ஞாயம்? அது என்ன வகை சனநாயகம்? சிங்கள இனவறியர்கள் கூட தமிழர் களின் வாக்குரிமையை மறுக்கவில்லை; தங்கள் கட்சிகளில் தமிழர்கள் உறுப்பினராகச் சேரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை.

இந்துத்துவா கட்சியான பா.ச.க. கூட இஸ்லாமியர்களின் வாக்குரிமையை மறுக்கவில்லை. இஸ்லாமியர் களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்கிறது. சில பொறுப்புகளிலும் வைத்திருக்கிறது. நாம் தமிழின வெறியர்கள் அல்லர். தமிழின உரிமை மீட்பாளர்கள் என்ற புரிதல் வேண்டும்.

“வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற முழக்கத்தை வைத்துள்ளது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி “வெளியார்” என்பதற்குப் பொருத்தமான ஒரு விளக்கமும் வரையறையும் வேண்டும். தேசிய இனங்களின், தேசங்களின் வரலாறு, அவற்றின் இருப்பு பற்றிய புரிதலும் உலக நடப்புகள் குறித்த அறிவும் கொண்டு “வெளியார்” பற்றி வரையறுப்பு செய்ய வேண்டும்.

மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ் நாட்டில் குடியேறிய பிற மொழியாளர்- பிற மாநிலத்தவரைத்தான் “வெளியார்” என்று வரையறுக் கிறது த.தே.பொ.க.
நானூறு ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து ஆந்திரம் மற்றும் கர்நாடகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தமிழகக் குடிமக்களாக நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னட, உருது மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை அயலார் என்று எந்த அடிப்படையில் வரையறுக்க முடியும்? உலகில் எங்காவது இதற்கு முன் எடுத்துக்காட்டு இருக்கிறதா? ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டு இங்கு வாழும் ஆங்கிலோ இந்தியர்களைக் கூட அயலார் என்று கருத முடியாது.

தெலுங்கு, கன்னடம், ஆகியவற்றை வரலாற்று வழித் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் பலஇலட்சம் பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். சில பகுதிகளில் அடர்த்தியாக வாழ்கிறார்கள். அவர்களில் மிகப்பெரும்பாலோர் தங்களைச் சாதியாகக் கருதிக் கொள்கிறார்களே தவிர தமிழரல்லாத தனி இனமாகக் கருதிக்கொள்வதில்லை.

எல்லையோரங்களில் வாழும் தெலுங்கு கன்னடம், பேசுவோர் மொழிச் சிறுபான்மையினர் ஆவர் அவர்களும் தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசுவோரும் ஒரு தன்மையினர் அல்லர். எல்லையோரத்தில் வாழ்வோர் தேசிய இனச் சிறுபான்மையோர் உட்பகுதியில் ஆண்டுகளாக வாழ்வோர் தமிழ்த் தேச மக்கள்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சகிலி சுதாராணி என்பவர் தமது முனைவர் (பி.எச்டி) பட்ட ஆய்விற்குத் “தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள்” என்ற தலைப்பு எடுத்துள்ளார். தமது ஆய்விற்காகத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, கள ஆய்வு மேற்கொண்டார். அவருடைய ஆய்வின் முடிவுகள் பற்றிய செய்தி 7.7.2012 “ தி இந்து” நாளேட்டில் வந்துள்ளது. அதில் ஒரு பகுதி வருமாறு:

“தெலுங்கு மக்கள் தங்களின் பண்பாடு, சடங்குகள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் மொழி தேய்ந்து விட்டது. முதியவர்கள் மட்டுமே கொஞ்சம் தெலுங்கு பேசுகிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தமிழில்தான் பேசுகிறார்கள்.தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப்பாடமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் சிதறிக் குடியேறி வாழும் தெலுங்கர்களால் தங்கள் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. 90 விழுக்காடுத் தெலுங்கர்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும் எழுதவும் முடியாதவர்களாக இருக்கிறார்கள். தெலுங்கில் பேசுவோரும் அதிகமாகத் தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்கள்!”


சுதாராணியின் களஆய்வு எதைக் காட்டுகிறது? நானூறு ஆண்டுகாலத் தமிழக வாழ்க்கை, தெலுங்கு பேசும் மக்களை மெல்ல மெல்ல தமிழின அடையாளங்களைத் ஏற்கச் செய்து விட்டது. தெலுங்கு அடையாளங்களைத் தேயச்செய்து விட்டது. இந்த வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் இயல்பாக வளரத் தமிழ்த் தேசியம் துணை செய்ய வேண்டும்.

அதற்கு மாறாக “நீங்கள் தமிழர்கள் இல்லை, தமிழ்த் தேசிய இயக்கங்களில் நீங்கள் உறுப்பினராக முடியாது, தமிழ்நாட்டில் நீங்கள் முதலமைச்சராக முடியாது “ என்று கையில் தடி எடுத்தால், அம்மக்கள் தெலுங்கு அடையாளங்களைக் காப்பற்றுவதில் மீட்பதில் தீவிரம் காட்டுவர்கள். தமிழ்த் தேசியத்தைப் பகைக் கருத்தியலாகப் பார்ப்பார்கள்.

இந்தியத் தேசியமே தங்களைக் காக்கும் கவசம் என்று கருதுவார்கள். இந்தியத் தேசிய – பார்ப்பனியப் படை வரிசையில் முன்னணிப் பாத்திரம் வகிப்பார்கள். கன்னடம் பேசும் மக்களும் இதே நிலை எடுப்பார்கள். உருது பேசும் மக்கள் இஸ்லாமிய அடிப்படை வாத்ததில் தீவிரம் பெற்று, தமிழ் அடையாளங்களைப் புறக்கணிப்பார்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு உண்டாக்கிய பின்னடைவுகளை எண்ணிபார்க்க வேண்டும்.
இவ்வாறான அணுகு முறையைக் கைக்கொண்டால் தமிழ்த் தேசியம் தனக்குத் தானே பகைப் பாசறைகளை ஊருக்கு ஊர் உருவாக்கிக் கொள்ளும். பார்ப்பனியம் படமெடுத்தாடும்; பாரதமாதா பலிபீடம் ஊருக்கு ஊர் தயாராகும். தமிழ்த் தேசியம் தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ளும்.

வரலாற்றுப் போக்கில் தமிழகத்தில் குடியேறி பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசும் மக்களைத் தமிழ்த் தேசிய சக்திகளாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் கூறுவது வெறும் போர்உத்தி (Tactics) மட்டுமன்று. தேசிய இன உருவாக்கத்தின் வரலாற்றுப் போக்கும் அதுவே என்பதும் ஆகும்.

உலகில் தமிழினம் உள்பட எந்தத் தேசிய இனமும் ஒரே குருதி வழி உறவுடன் வளர்ந்தவை அல்ல. பல்வேறு பழங்குடிகள், வெவ்வேறு மரபினக் குழுக்கள் என்று சேர்ந்துதான் ஒரு தேசிய இனம் (Nationality) உருவாகிறது. அவற்றுள் பெரும்பான்மை மக்களையும் வலுவான் மொழியையும் கொண்ட இனக்குழு பிற சிறிய வலுக்குறைந்த பழங்குடிகளையும் இனக்குழுக்களையும் தன்னுள் உள்வாங்கி செரித்துக் கொண்டு வளர்கிறது. தனது அடையாளத்தை முதன்மைப்படுத்தி வளர்கிறது. இயல்பான வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இது நிகழ்கிறது.

இவ்வாறான வெவ்வேறு இனக்குழுக் கலப்பு ஏற்படும் போது, பெரும்பான்மை மக்களையும் வலுவான மொழியையும் கொண்ட இனக்குழு அடையாளங்களை சிறு பான்மை இனக்குழுக்கள் ஏற்பதைப் போலவே அந்த சிறு பான்மை இனக் குழுக்களின் சில அடையாளங்களையும் பழக்க வழக்கங்களையும் பெரும்பான்மை இனக்குழுவும் ஏற்றுக் கொள்கிறது நடக்கிறது.
தேசம், தேசிய இனச் சமுதாயம் என்பது பழங்குடிகள் (Tribes) போன்றதன்று; மரபினம் (Race) போன்றதன்று. பிற இனக்குழுக்களையும் இணைத்துக்கொண்ட புதிய சமூக மாகும். அதே வேளை அதற்கான மரபு வழிப்பட்ட முதன்மைக் கூறுகள் சில தேசிய இன்ங்களில் வலுவாக நீடிக்கிறது.

வேறு சில தேசிய இனங்களில் மூல மரபின வேர் மறைந்து போகிறது. தமிழ்த் தேசிய இனத்தில் மரபின மூலவேர் வலுவாக இருக்கிறது. எகிப்தியர்கள், யூதர்கள், சீனர்கள், போன்ற தேசிய இன்ங்களுக்கும் அவற்றின் மரபினவேர் தொடர்கிறது; வலுவாக இருக்கிறது. அதே வேளை அவை, அதே பழைய மரபின்ங்களல்ல இன்று வெவ்வேறு இனக்குழுக்களையும் இணைத்துக் கொண்டே அவை தேசிய இனச் சமூகமாக வளர்ந்துள்ளன.

இப்பொழுது நிலவும் இத்தாலிய தேசமும் இத்தாலிய தேசிய இனமும் ரோமனியர்கள், டியூட்டேனியர்கள், எட்ரூஸ்கனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் போன்ற மரபின்ங்களின் சேர்க்கைதான் என்பர் ஆய்வாளர்கள். காலியர்கள், ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டேனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானதுதான் பிரஞ்சு தேசம்- பிரஞ்சு தேசிய இனம் என்பர். இப்போதுள்ள ஆங்கிலேயர்; செர்மானியர் போன்றோரும் பல்வேறு மரபினங்கள் பழங்குடிகள் ஆகியவற்றிலிருந்து உருவானவர்களே! ஒரு தேசம் அல்லது தேசிய இனம் என்பது குருதி வழியே அமைவதை விட வரலாற்று வழியே அமைகிறது என்பதே உண்மை. இந்த வரலாற்றுண்மைக்கு மாறாக தூய குருதிவாதம் பேசுவது, வெறும் மனக்கணக்காக மட்டுமே இருக்கும்.

கலப்பிடமில்லாத தமிழ்ச்சாதிகள் என்று அறியப்பட்டவற்றுள் ஒரே சாதிக்குள் நல்ல கருப்பு நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நல்ல சிவப்பு நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்த நிற வேறுபாடு எப்படி வந்தது? கூரிய மூக்குடையோர் இருக்கிறார்கள்; தட்டை மூக்குடையோர் இருக்கிறார்கள். இந்த எலும்பு அமைப்பு வேறுபாடு எங்கிருந்து வந்தது? இவையெல்லாம் இனக்குழுக் கலப்புகளால் ஏற்பட்டவையே!
தமிழ்க்குருதித் தூய்மைவாதம் பேசும் தோழர்கள், இவ்வினாக்களுக்கு “தங்கள் ஆய்வுப்படி” விடையளிக்க வேண்டும்.

“தமிழர்களா” என்று அறிய சாதி அடையாளத்தை அனைவரும் பகிரங்கப் படுத்தவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள், ஒரு சாதிக்குள் இருக்கும் நிற வேறுபாட்டையும், மூக்கமைப்பு வேறுபாட்டையும், முக எலும்பு வேறுபாட்டையும் என்ன விளக்கம் கூறி ஞாயப்படுத்துவார்கள்? மாந்த இன ஆராய்ச்சியில் வெவ்வேறு இனங்களை அடையாளங்காண அடிப்படையாகக் கருதப்படும் உடற்கூறுகளில் தோல்நிறமும் மூக்கு அமைப்பும் முகாமையானவை!

தமிழரா என்று அறியச் சாதி கேட்கும் பழக்கம் தொற்றிக்கொண்டால், அத்தொற்றுநோய் வர்ண-சாதி என்ற மனுதருமக் கொள்ளை நோயில் கொண்டு போய் நம்மை சேர்க்கும். பார்ப்பனியம் மீண்டும் கோலோச்சும். பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்களாய், பஞ்சமர்களாய் உழல்வோம்!

மாந்த இனம் மனிதக் குரங்குகளாக, நியாண்டர்தால் மனிதர்களாக, கணக்குழுக்களாக, பழங்குடி களாக, மரபினங்களாக, தேசிய இன்ங்களாக எப்படி வளர்ந்து வந்ததோ அதே திசையில் அது வளர்ந்து செல்லட்டும். நாம் இப்போது தமிழ்த் தேசிய இனமாக இருக்கிறோம். தமிழ்த் தேசமும் நமது தேசிய மொழியும் நமது மக்களும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.

உலகெங்கும் பெரும்பாலான தேசிய இன்ங்கள் தங்களது சொந்த தேசத்தை நிறுவிக் கொண்டு விட்டன. நாம் நமது தமிழ்த் தேசத்தை இறையாண்மையுள்ளதாக நிறுவுவோம். அதில் மக்கள் சமத்துவத்தைப் பேணுவோம்.

தமிழ்த்தேச விடுதலைப் புரட்சிக்கும் தமிழ்த் தேச மக்களிடையே சமத்துவம் பேணுவதற்கும் மக்களிடையே உணர்ச்சி ஊட்ட, எழுச்சி ஏற்படுத்த தமிழர்களின் உண்மையான வரலாற்றுப் பெருமிதங்களையும் அறக்கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்தியம்புவோம். கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம் பெறுவோம்; கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்.
தெலுங்கைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ்ப்படைப்பாளிகள் தங்கள் அறிவாற்றலால் தமிழ்வளர்த்ததை- தமிழர் பெருமையை நிலை நாட்டியதை நினைவு கூர்வோம்.

உலகம் பன்மைத் தன்மை உடையது; உள்ளம் பன்மைத் தன்மையுடையது. அவை போலவே, தமிழ்த் தேசமும் பன்மைத் தன்மையுடையது. இந்த பன்மைத் தன்மையை தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள். அதனால், தமிழர் தாயக நிலப்பரப்பை உள்ளதை உள்ளவாறு அறிந்து ஐந்து நிலங்களாக அடையாளம் கண்டார்கள். ஐந்து வகை வாழ்க்கை முறை, ஐந்து வகைப் பண்பாடுகள், ஐந்து வகை தொழில்கள் இருக்கின்றன. என்றார்கள். காலத்தின் பன்மையை அறிந்து ஆறு வகைக் காலங்களைக் கண்டார்கள்.
பண்டைக்காலத் தமிழர்களுக்குத் தெய்வம் கூட ஒன்று அன்று; பன்மைத் தன்மையுள்ள பல தெய்வங்கள்!

இன்றைக்குத் தமிழ்த் தேசத்தில் பிரிக்க முடியாத பகுதிகளாக இணைந்துள்ள மக்கள்தாம் வீட்டில் தெலுங்கு, கன்னடம், உருது, செளராட்டிரம், மராத்தி ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள். இவர்கள் அனைவரும் தமிழ்த் தேச மக்களே! இவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறித் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் மக்கள் இவர்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ்த் தேச வாழ்வியலோ, முன்னேற்றமோ இல்லை.

இவர்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ்த் தேச விடுதலையும் இல்லை. வீட்டில் பிற மொழி பேசும் இவர்கள் தமிழைத் தங்கள் பொது மொழியாகவும் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஏற்றுக் கொண்டே வாழ் கிறார்கள் இனியும் அது தொடரும்; தொடர வேண்டும்.
தமிழ்த் தேசம் பன்மை கொண்டது. தமிழ்த் தேசியமும் பன்மை கொண்டது.

1956- நவம்பர் 1 மொழி வழி மாநில அமைப்பிகுப் பின் தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். காரணம் என்ன? இவர்கள் தமிழர் தாயகத்தின் மக்கள் தொகையில் தமிழர்களைச் சிறுபான்மை ஆக்கிவிடும் நிலையில் பெருகிக் கொண்டுள்ளார்கள்.

அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களின் தொழில், வணிகம், வேலை, கல்வி வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் அலுவல் மொழி ஆக்கிடத் துடிக்கிறார்கள். எனவே தமிழ்த் தேச மக்களின் தற்காப்புப் போராட்டமாக, 1956க்குபின் வந்த வெளியாரை வெளியேற்றும் போராட்ட்த்தைத் த.தே.பொ.க. முன்னெடுக்கிறது.வருங்காலத்தில் இதில் நாம் வெற்றி பெறுவோம்.

த.தே.பொ.க.வின் திராவிட எதிர்ப்பின் சாரம் என்ன? திராவிடம் என்பது ஒரு மாயை; அது ஒரு மொழியின் பெயரோ அல்லது இனத்தின் பெயரோ இல்லை. எனவே அது ஒரு தேசத்தின் பெயராகவும் பண்பாட்டின் பெயராகவும் இல்லை. ஆரியர்கள் உருவாக்கிய சொல்தான் திராவிடம். பிற்காலத்தில் தென்னகப் பார்ப்பனர்களை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திராவிடம்.

ஆந்திரப்பிரதேசத்தின் பெரும் பகுதி, கர்நாடகப் பகுதிகள், கேரளப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஆங்கில ஏகாதிபத்தியம் உருவாக்கிய நிர்வாக மண்டலமான சென்னை மாகாணத்தில் “திராவிடம்” என்ற அரசியல் சொல் அவர்களையெல்லாம் இணைக்கப் பயன் படும் என்று தமிழர்களில் சிலரும் மேற்படி இனங்களைச் சேர்ந்த சிலரும் கருதி “திராவிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களை மட்டும் குறிக்கும் சொல் “திராவிடம்” என்று பெரியார் கூறியது வரலாற்றுண்மைக்கும் தேசியஇன, மொழி ஆராய்ச்சிக்கும் பொருந்தாக கற்பனை.

“திராவிடம்” என்பது “தமிழர் “ அடையாளத்தையும், தமிழர் வரலாற்றையும் தமிழ்த் தேசிய எழுச்சியையும் மறைக்கவும் மழுங்கடிக்கவும் பயன்பட்டது. 

மொழிவழி மாநில அமைப்பிற்கு முன் சென்னை மாகாண திராவிட அரசியலில், தெலுங்கர், கன்னடம், மலையாளி மேலாதிக்கம் இருந்தது. மொழி வழி மாநில அமைப்பிற்குப்பின், தமிழர் அடையாளத்தை மறைத்து நிற்கிறது திராவிட அரசியல். பிறமொழி பேசும் சிறுபான்மை மக்களைத் தமிழ்த் தேசியத்தில் அரவணைத்துச் செல்வதற்கு மாறாக அச்சிறு பான்மை மக்களைக் காட்டித் தமிழ்தேசியத்தைப் பலியிடுகிறது திராவிட அரசியல்.

மேற்கண்ட காரணங்களுக்காவே த.தே.பொ.க. திராவிடத்தை மறுக்கிறது; எதிர்க்கிறது மற்றபடி பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைப் பேசும் மக்களை அயலாரகப் அடையாளப்படுத்துவதற்காக திராவிடத்தை எதிர்க்கவில்லை.
தமிழ்மொழி, தமிழ் இனம் குறித்துப் பெரியார் முன்வைத்த முற்றிலும் பிழையான கருத்துகளையும், அவரது தவறான அரசியல் நிலைபாடுகளையும் த.தே.பொ.க. எதிர்க்கிறது. அதே வேளை வர்ண-சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றில் பெரியாரின் பங்களிப்பை நன்றியுடன் பாராட்டுகிறது.

இவ்வாறு கூறுவதால் பெரியாரின் வர்ண- சாதி ஒழிப்பு- பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் த.தே.பொ.க. விற்குத் திறனாய்வுகள் இல்லை என்று பொருளில்லை. இவற்றில் திறனாய்வை விட அவரின் பயன் தரும் அளிக்கும் பங்களிப்பு அதிகம் என்று பாராட்டுகிறது.

பெரியாரின் திராவிடக் கருத்தியலையும், தமிழ்மொழி, தமிழ் இனம் தொடர்பான தவறான கருத்துகளையும் எதிர்த்து “திராவிடம்- தமிழ்த் தேசியம்” என்ற பெயரிலும் “ பெரியாருக்குப் பின் பெரியார்” என்ற பெயரிலும் இரு சிறு நூல்கள் எழுதியுள்ளேன். தமிழர் கண்ணோட்டம் இதழில் அவ்வபோது கட்டுரைகளும் எழுதி வருகின்றேன்.

பெரியாரின் ஏற்க வேண்டிய பங்களிப்புகளை ஏற்று மறுக்க வேண்டிய கருத்துகளை மறுப்பது என்ற அணுகுமுறையையைத்தான் த.தே.பொ.க. கடைபிடிக்கிறது. புரட்சிக்கரத் தமிழ்த் தேசியத்தைச் சிதைவின்றியும் திரிபின்றியும் சரியான உள்ளடக்கத்துடன் சரியான இலக்கில் முன்னெடுப் போம். தமிழ்த் தேசியம் என்பது சனநாயக வடிவம் என்பதை மனங்கொள்வோம்.

இக்கட்டுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூலை 16-31 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, July 16, 2012

காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது! நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு


காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது!

நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.07.2012 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, பா.தமிழரசன், க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கிருட்டிணகிரியில் படுகொலை செய்யப்பட்ட பெ.தி.க. அமைப்பாளர் தோழர் பழனி அவர்களுக்கும், மறைந்த பாவலர் பல்லவன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
நெய்வேலி நிறுவன முற்றுகை

காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இடைக்காலத் தீர்ப்பே செயலில் உள்ளது. இத்தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு சூன் மாதம் 10.16 டி.எம்.சி காவிரித்தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். சூலை மாதம் 15 ஆம் நாள் வரை 21.38 டி.எம்.சி திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆகமொத்தம்  தமிழகத்திற்கு உரிமையான ஏறத்தாழ 33 டி.எம்.சி காவிரிநீரை கர்நாடகம் முடக்கி வைத்திருக்கிறது.

கர்நாடகத்தில் பருவமழை வழக்கத்தைவிட இதுவரை குறைவாக பெய்திருப்பதாக கர்நாடகம் அரசு கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகள் வறண்டிருக்கவில்லை. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஏமாவதி ஆகிய அணைகளில் மொத்தம் 65 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் உள்ளது. அதிலிருந்து சூன் மாதத்திற்கு உரிய தண்ணீரை திறந்திவிட்டிருந்தால் கூட தமிழகத்தில் குறுவை சாகுபடியை நம்பிக்கையோடு தொடங்கியிருக்க முடியும்.

ஆனால் அடாவடித் தனமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரை முடக்கி வைத்து ஒரு சொட்டுத் தண்ணீரும் திறந்து விடமாட்டோம் எனக் கொக்கரிக்கிறது. இதனால் காவிரி பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மழையும் பெய்யாத நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாக உள்ளது.

இராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்த் திட்டங்கள் பலவும் காவிரி நீரை நம்பியே உள்ளன. இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் நெருங்கி வருகிறது.

காவிரி ஆணையத்தைக் கூட்டி இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என இந்திய அரசும் ஆணையிடவில்லை. இந்திய அரசு  தனது சட்டக் கடமையை நிறைவேற்ற மறுக்கிறது. தனது மவுனத்தின் மூலம் கர்நாடகத்திற்கு சார்பாக நடந்துகொண்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

அதே நேரம், காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு செயலில் இருக்கும் இன்றைய நிலையிலும் நெய்வேலி இரண்டாவது அனல் மின்நிலையத்திலிருந்து கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட் மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

இந்நிலையில் பதிலடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தமிழர்களுக்கு வேறுவழியில்லை. எனவே “காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பாதேஎன்ற முழக்கத்தை முன்வைத்து வரும் ஆகஸ்டு 10 வெள்ளியன்று நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென்று த.தே.பொ.க கேட்டுக் கொள்கிறது.


ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் அணு உலைக்கெதிரான ஆர்ப்பாட்டம்


இரண்டாவது உலகப்போரில் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மக்களின் நினைவை ஏந்தி அணு ஆற்றலின் அழிவு வேலையை கண்டிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 6-ஆம் நாள் ஹிரோஷிமா நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இந்நாளில் மின்சார உற்பத்தி என்ற பெயரால் தலைமுறை தலைமுறையாக மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பேரழிவை உண்டாக்கும் அணு உலைகளை மூடக்கோரி கண்டன இயக்கங்கள் நடத்துவதென பல்வேறு சூழலியல் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும்முடிவு செய்துள்ளன.

 இதற்கு இசைய வரும் ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை மூடுமாறு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனதலைமைச் செயற்குழு முடிவு செய்தது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சிதம்பரம், தஞ்சை, ஒசூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தை இக்கோரிக்கையில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளையும், இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தபட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து காயத்திரி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயலில் உள்ள இட ஒதுக்கீடு திட்டத்திற்கு இதன்மூலம் இக்கட்டு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இச்சிக்கல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க இந்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவரும் நிலையில் இவற்றின் முடிவுகள் தெரியும் வரை இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. இதனை வலியுறுத்தி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நடப்பில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் என தலைமைச் செயற்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழமையுள்ள,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்

நாள் :16.07.2012 
இடம் : சிதம்பரம்

Friday, July 13, 2012

ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு


ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
  
தமிழ்நாட்டில் தமிழுக்காக இருக்கும் ஒரே பல்கலைக் கழகமான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் புறக்கணித்து, நலிவடையச் செய்து, அதன் நிலத்தை கூறு போட்டு விற்கும் வேலையில் தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக் கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகில், முதன்மை நிர்வாகக் கட்டங்களுக்கு அடுத்தாற்போல் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 9.3.2012 அன்று தமிழக வருவாய்த் துறை அரசாணைப் பிறப்பித்தது  (அரசாணை எண்: GO-(MS) No 85)

இதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு கட்சி களையும் தமிழ் அமைப்புகளையும் கொண்ட தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நிலப்பறிப்பு முயற்சியை முறியடிக்கத் தொடர் போராட்டங்களுக்கு இவ்வியக்கம் திட்டமிட்டு வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 15.6.2012 அன்று தஞ்சையில் மாபெரும் வேண்டுகோள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக் கழக பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் பெ.மணியரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடுத்தார்.( WP No : 17452 / 2012)

பல்கலைக் கழக நிலத்தை கையகப்படுத்தும் மேற்கண்ட  சட்ட விரோத அரசாணையை நீக்க வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கை. இவ்வரசாணைக்கு உடனடி இடைக்காலத் தடை கோரப்பட்டது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை ஆயத்தில் 10.7.2012 அன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி  ஒய். இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னால் விசாரணை நடந்தது. பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் இரா. இராஜாராம் முன்னிலை ஆனார். மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வாதிட்டார்.

நம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் முக்கியமானவை வருமாறு:

தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம்இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில்  தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

· முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13.6.1981 இல் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

·  “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” தமிழக ஆளுநர் மூலம் 1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பல்கலைக் கழகத்திற்குத் தேவையான 1000 ஏக்கர் நிலம் தஞ்சை நகரத்திற்கு அருகில் கையகப்படுத்தப் பட்டது.

· மேற்சொன்ன அவசரச்சட்டத்திற்கு மாற்றீடாக தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டம் 1982 தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 8.3.1982 ஆளுநரின் கையொப்பம் பெற்று செயலுக்கு வந்தது.

· இச்சட்டத்தின் படி தமிழ்ப் பல்கலைக் கழகம் தனித்த அதிகாரமுடைய நிறுவனம் (body corporate )  ஆகும்.

· பல்கலைக் கழகத்தின் ஆளவை மன்றத்திற்கு (சிண்டிகேட்) தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சொத்துகள் மற்றும் நிதியை வைத்துக்கொள்ளவும், நிர்வாகம் செய்யவும் அதிகாரம் உண்டு என இச்சட்டத்தின் விதி 44 கூறுகிறது.

· இப்பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதன் குறிப்பான நோக்கத்திற்கு இசைய அதன் நிதியையும் நிலத்தையும் ஆளவை மன்றம் நிர்வாகம் செய்ய வேண்டும் என விதி 45 வரையறுக்கிறது.

· பல்கலைக் கழக பணிகளுக்காக நிலங்களையோ, கட்டிடங்களையோ கருவிகளையோ வாங்க விதி 51 ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

· ஆனால் தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் எந்த ஒரு விதியும்  பல்கலைக் கழகத்தின் நிலத்தை விற்கவோ, கைமாற்றிக் கொடுக்கவோ  பிறருக்கு வழங்கவோ ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை.

· ஆண்டு வரவு செலவு அறிக்கையை அணியப்படுத்தி  தமிழக அரசுக்கு அளிக்குமாறு ஆளவையை இச்சட்டத்தின் விதி 24  பணிக்கிறது. அவ்வறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அதாவது தமிழகச் சட்ட மன்றத்தின் இறுதி அதிகாரத்தின் கீழ் பல்கலைக் கழகத்தின் வரவு செலவுகள் வைக்கப்படுகின்றன.

· இந்நிலையில் 9.3.2012 நாளிட்ட வருவாய்த் துறை அரசாணையின் மூலம்  மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்குப் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான 61.42 ஏக்கர் நிலத்தைக் கையகப் படுத்தியது சட்ட விரோதமானது. ஏனெனில் சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு தனித்த நிறுவனமான தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வெறும் அரசாணை கட்டுப்படுத்தாது.

· இவ்வரசாணையில் வருவாய் வாரிய நிலையாணை 24-ன் படி இந்நிலம் கையகப்படுத்தப் படுவதாகக் கூறப்படுகிறது. 1982 தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை எடுக்க நிலையாணை 24ன் கீழ் எந்த அதிகாரமும் வருவாய்த் துறைக்கு வழங்கப்படவில்லை.

· சென்னையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 3.9.2011 அன்று பல்கலைக் கழக ஆளவை மன்றம் நிலத்தை கையளிக்கக் கூடியதாக வருவாய்த்துறை கூறுகிறது. ஆனால் இக்கூட்டத்தில் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் தமிழ்ப் பல்கலைக் கழக சட்டம் 1982ன் படி இக்கூட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர் அல்லர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 3 பேராசிரியர்களும் ஆளவை மன்றத்தின் நியமன உறுப்பினர் கூட அல்லர். இவ்வாறானக் கூட்டத்தில் தான் பல்கலைக் கழக நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க தீர்மானிக் கப்பட்டதாக அரசு கூறுகிறது.  இது சட்டத்திற்குப் புறம்பானது.

· ஏற்கெனவே தென்னகப் பண்பாட்டு மையத்திற்கும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கும் நிலம் அளிக்கப்பட்டதை இப்போதைய செயலுக்கு முன்னுதாரணமாகக் காட்ட முடியாது. ஏனெனில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டதே சட்ட விரோதமானது. ஒரு சட்ட விரோதச் செயலுக்கு இன்னொரு சட்ட விரோதச் செயலை முன்னுதாரணமாகக் காட்டி ஞாயப்படுத்தி விட முடியாது.

· தொல்பொருள் துறையின் அகழ்வாய்வில் தமிழ்ப் பல்கலைக் கழக பகுதியில் பண்டைகால குடியிருப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் நிலத்தை எடுப்பது வருவாய் வாரிய நிலையாணை எண்: 24(6)க்கு எதிரானது.

· அரசாணையில் கூறியிருப்பது போல் நிலக் கையகப்படுத்தல் தொடர்பாக எந்த முதன்மை நாளேட்டிலும் முன்னறிவிப்பு வெளியாக வில்லை. மக்கள் கருத்தும் கேட்கப்பட வில்லை. எனவே மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என அரசாணையில் குறிபிட்டிருப்பது தவறானது, பொய்யானது.

· எனவே எந்த வகையில் பார்த்தாலும் 9.3.2012 நாளிட்ட அரசாணை எண் 85 சட்ட விரோதமானது.

· இச்சட்ட விரோத ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஒரு வேளை இச்சட்ட விரோத ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் வளாகம் நிறுவப்பட்டுவிடுமானால் பிறகு அதை இடிப்பது கடினமாகி விடும்

· எனவே மாண்பமை நீதிமன்றம் மேற்கண்ட சட்ட விரோத அரசாணைக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளருக்கும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளருக்கும்  இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக் குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அவர்கள் பதில் அளித்த பிறகு இரு தரப்பு வாதங்கள் தொடரும¢. இடைக்காலத் தடைபற்றி அதன் பிறகு நீதிமன்றம் முடிவு அறிவிக்கும்.

 (செய்தி : த.தே.பொ.க செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT