“காவிரி உரிமை மறுப்பிற்கு அரசியல் மட்டுமே
காரணமல்ல! இனப்பகையே முதன்மைக் காரணம்!”
தஞ்சை காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!
“பா.ச.க போன்ற கட்சிகள் காவிரி உரிமை மறுப்பதற்கு வெறும் அரசியல் மட்டுமே காரணமல்ல! தமிழினத்தின் மீதான இனப்பகையே முதன்மைக் காரணம்!” என தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் நரேந்திரமோடி அரசைக் கண்டித்து, தஞ்சையில் இன்று (14.10.2016) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சைத் தொடர்வண்டி நிலையம் அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசியதாவது :
“இன்று, காவிரிச் சிக்கல் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது. கடந்த 20.09.2016 அன்று “காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைக்கிணங்க காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரத்திற்குள் நடுவண் அரசு அமைக்க வேண்டும்” என்று தீர்ப்புரைத்தது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து, இந்திய அரசு நேரடியாகவே தமிழர்களை வஞ்சித்துள்ளது. பா.ச.க. நரேந்திரமோடி அரசின் இந்த முடிவு, காவிரி டெல்டா மாவட்ட மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்திய அரசின் வாதப்படியே எடுத்துக் கொண்டாலும்கூட, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்க இந்திய அரசுக்கு அதிகாரமில்லை! இதனை தமிழ்நாட்டில் பலரும் புரிந்து கொள்ளாமல் குழம்பிக் கொண்டுள்ளனர். எனவே, அதுபற்றி நாம் தெளிவு பெற வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262, மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகள், நிலவும் ஆற்றுச் சமவெளிகள் குறித்தும், அதற்கென சட்டமியற்றும் அதிகாரம் குறித்தும் பேசுகிறது. மாநிலங்களுக்கிடையில் பாயும் ஆறுகள், நிலவும் ஆற்றுச் சமவெளிகள் ஆகியவற்றின் பயன்பாடு, பங்கீடு, கட்டுப்பாடு ஆகியவை குறித்து விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கத் தேவையான பொறியமைவுகளை உருவாக்க சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (1) கூறுகிறது.
இவ்வாறு அமைக்கப்படும் பொறியமைவின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என சட்டமியற்றும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (2) கூறுகிறது. இந்த உறுப்பு அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான், 1956ஆம் ஆண்டு, “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தை” இந்திய நாடாளுமன்றம் இயற்றியது. இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தண்ணீர் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று இச்சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைபாட்டை வலுப்படுத்தும் வகையில், நர்மதை நீர் பகிர்வுச் சிக்கலை ஒட்டி 1980ஆம் ஆண்டும், கிருஷ்ணா நதிச் சிக்கலை ஒட்டி 2002ஆம் ஆண்டும், தண்ணீர் தகராறு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
1956 – மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – பிறப்பிக்கப்பட்ட பிறகு அரசமைப்புச் சட்ட உறுப்பு - 262 செயல்படத் தொடங்கிவிட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தலையிடக்கூடாது என தண்ணீர் தகராறு சட்டத்தில் விதிகளைச் சேர்க்க நாடாளுமன்றத்திற்கு 262 (2) அதிகாரம் வழங்குகிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில் விதி 6 (2) உருவாக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தின் பணி முடிவடைந்து விடுகிறது.
மேலும், இச்சட்டத்தில் என்ன திருத்தம் செய்து கொள்வதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதன் செயல்பாட்டில் நாடாளுமன்றம் குறுக்கிடவே முடியாது!
நீதிமன்றங்களில் தீர்ப்புகளை நீதிபதிகள்தான் வழங்குகின்றனர். அந்த நீதிபதிகளை அரசாங்கம்தான் பணியமர்த்துகிறது. நீதிபதிகளை அரசாங்கம் பணியமர்த்துகின்றது என்ற காரணத்தினாலேயே, நீதிபதிகளின் தீர்ப்பில் குறுக்கிட அரசாங்கத்திற்கு அனுமதியில்லை. அதுபோலவே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றமோ இந்திய அரசோ தலையிட முடியாது! அதற்கு அனுமதியில்லை!
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்குமாறு பரிந்துரைதான் செய்திருக்கிறது என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது மிகத் தவறான கூற்று!
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பின் பகுதி 8 (பக்கம் 224, தொகுதி – 5)-இல், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது” என்ற தலைப்பில், “காவிரி நீர் தகராறுத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவுகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கும், (மாநிலங்களை) அவற்றுக்கு உட்படுத்துவதற்கும், “காவிரி மேலாண்மை வாரியம்” என்ற பெயரில் மாநிலங்களுக்கிடையிலான மன்றம் ஒன்றை நிறுவியாக வேண்டும். இந்த வாரியம் இந்திய அரசின் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் நிறுவியாக வேண்டும் (Shall be constituted) என்றுதான் ஆணையிடுகிறதே தவிர, “வாரியம் அமைக்கலாம்” என பரிந்துரைக்கவில்லை.
இந்த முடிவுக்கு தான் வந்ததற்கான காரணங்களையும் இறுதித் தீர்ப்பின் இதன் முந்தைய பத்திகளில் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.
பத்தி 14-இல், “நடுவர் மன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த பொருத்தமான பொறியமைவை நிறுவுவது முகாமையான தேவை என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் அவ்வாறு அமைக்கப்படும் பொறியமைவு தீர்ப்பாயத்தின் முடிவை செயல்படுத்தத்தக்க போதிய அதிகாரம் கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எங்களுடைய இந்தத் தீர்ப்பும் வெற்றுத்தாளிலேயே நின்றுவிடும் என அஞ்சுகிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஏனெனில், இதற்கு முன் காவிரித் தீர்ப்பாயம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகமும், இந்திய அரசும் செயல்படுத்தவே இல்லை என்பதை நாமல்ல, இந்தத் தீர்ப்பிலேயே நீதிபதிகள் கூறியுள்ளனர். அதனால்தான், இறுதித் தீர்ப்பை எப்படி செயல்படுத்த வேண்டுமென நீதிபதிகள் விரிவாக விளக்கியுள்ளனர்.
நர்மதை நீர்ச் சிக்கலில், நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் (NCA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதையும், கிருஷ்ணா தீர்ப்பாயம் தனது தீர்ப்பு செயல்படுவதற்கு உறுதியான பொறியமைவு நிறுவப்பட வேண்டும் என வாதிடுவதையும் காவிரி இறுதித் தீர்ப்பு எடுத்து விளக்குகிறது. இதற்காக, மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில், 6A என்ற புதிய பிரிவு 1980-இல் சேர்க்கப்பட்டதையும், 6(2) என்ற பிரிவு 2002-இல் சேர்க்கப்பட்டதையும் காவிரித் தீர்ப்பில் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர்.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு ஒரு வழிமுறையையோ, பல வழிமுறைகளையோ ஏற்படுத்த முடிவு செய்து விட்டு, அதனை அரசிதழில் வெளியிடலாம் என மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தின் பிரிவு 6A (1) கூறுகிறது.
“பிரிவு 6(1)இன் கீழ் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் ஆணை அல்லது தீர்ப்புக்கு உள்ள அதே வலிமையைப் பெறுகிறது” என்று 6(2) என்ற புதிய பிரிவு 2002ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அதாவது, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது.
ஏற்கெனவே எடுத்துக்காட்டியபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் (Shall be constituted) என்று தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உறுதிபடக் கூறிவிட்டது.
எனவே, இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் போல் மதித்து இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால், அதுதான் நடந்திருக்கும்! ஆனால், இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டும் சட்டத்தின் ஆட்சி செயல்படவே செய்யாது! காவிரிச் சிக்கலிலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது.
கிருஷ்ணா தீர்ப்பாயம், தனது இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தீர்ப்புரைத்தது. அதை எழுத்து குறையாமல் இந்திய அரசு அப்படியே செயல்படுத்தியது. தீர்ப்பு வந்த மறுநாளே 29.05.2014 அன்றே கிருஷ்ணா மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கு இந்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் அரசாணை வெளியிடப்பட்டதே தவிர, நாடாளுமன்றச் சட்டம் இயற்றி அதன்வழியே மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ஏனெனில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலேயே மேலாண்மை வாரியம் அமைக்குமாறு ஆணையிடப்பட்டது.
இதுபோல், காவிரித் தீர்ப்பாயமும் மேலாண்மை வாரியம் அமைக்குமாறு இறுதித் தீர்ப்பில் ஆணையிட்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசின் அரசாணை மட்டுமே போதுமானது. நாடாளுமன்றச் சட்டம் தேவையில்லை.
காவிரியில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அது தமிழர்களுக்கு வழங்குகின்ற நீதியாகிவிடுமே, ஆரிய இந்தியாவில் அது எப்படி நடக்கலாம்? அதனால்தான் நமக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது!
2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்தான், கர்நாடகவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கோடு பா.ச.க. நரேந்திரமோடி அரசு தமிழ்நாட்டிற்கு இப்படி துரோகம் இழைத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
பாரதிய சனதாவாக இருந்தாலும், காங்கிரசுக் கட்சியாக இருந்தாலும் தங்கள் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு, எல்லா சிக்கல்களிலும் காய் நகர்த்துவார்கள் என்பது பொது உண்மைதான்! ஆனால், காவிரிச் சிக்கலில் இந்திய அரசின் அணுகுமுறைக்கு இந்தத் தேர்தல் கணக்கு முதன்மைக்காரணம் அல்ல! உண்மையான காரணம், ஆழமானது!
கடந்த 1991இன் இறுதியில், காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு உச்ச நீதிமன்ற நெருக்குதல் காரணமாக, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடுமையான இனப்படுகொலைத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடி வந்தனர்.
அப்போதும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஒரு சிறிதும் நிறைவேற்ற மாட்டோம் என்றுதான் கர்நாடகம் நின்றது. அப்போது, எந்தத் தேர்தலும் இல்லை! 1989ஆம் ஆண்டே கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. தமிழர் மீதான இனப்பகையே அவர்களின் முதன்மைக்காரணியாக உள்ளதால், நம்மை எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.
தேர்தல் காலமோ அல்லது வழக்கமான காலமோ எதுவாக இருந்தாலும், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் காவிரித் தீர்ப்பை மதித்ததே இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு!
இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு, முதன்மையான காரணம் ஆரிய இந்தியத்தின் தமிழினப்பகையே ஆகும். எனவேதான், தமிழர்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்கள் பக்கம் இந்தியா நிற்கிறது. இந்திய ஆட்சியில் எந்தக் கட்சி – எப்படிப்பட்ட கூட்டணி இருந்தாலும், இந்த நிலையில் ஒரு சிறிது மாற்றமும் இல்லை! கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி செய்தாலும், பா.ச.க.வோ சனதா தளமோ ஆட்சியில் இருந்தாலும் இந்தப் போக்கில் ஒரு சிறிது மாற்றமும் இருப்பதில்லை.
இன்னொரு காரணத்தையும் பேசுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பது தமிழ்நாட்டில் ஒரு குழப்பான அரசியல் நிலையை உருவாக்கியிருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய அரசு இப்படி துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
செயலலிதா நல்ல உடல்நிலையோடு சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அரசு காவிரிச் சிக்கலில் இப்படித்தான் நடந்து கொண்டது என்பது வரலாறு! எனவே, முதலமைச்சர் செயலலிதாவின் உடல்நலக் குறைவு இப்போதைய காவிரி உரிமைப் பறிப்புக்கு முதன்மைக் காரணம் அல்ல!
இந்திய அரசின் தீராத தமிழினப்பகை தான் காவிரிச் சிக்கலில் முதன்மைக் காரணமும் அடிப்படைக் காரணமும் ஆகும்!
சிலர் “மாற்று” என்ற பெயரில், கடல் நீரைக் குடிநீராக்கிக் கொள்ளுங்கள், மழை நீரை சேகரித்துக் கொள்ளுங்கள், ஏரி – குளங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசுகின்றனர். இவற்றையெல்லாம் கூறிக் கொண்டு, இன்னொருபுறம் அவர்கள் காவிரியை மறுந்துவிடு என்று நமக்கு அறிவுறுத்துகின்றனர். இவர்கள் எல்லோரும் காவிரி நீரைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் சரக்கு (Commodity) போல கருதுகின்றனர்.
காவிரி என்பது, 19 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் – 17 மாவட்டங்களுக்குப் பாசன நீர் என்பதைத் தாண்டி, தமிழர்களுடன் வரலாற்றுப் பிணைப்பு கொண்டதென நாம் உணர வேண்டும். காவிரி நம் அடையாளமாக இருக்கிறது. தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு வெறும் உடலியல் (Biological) உறவல்ல, அதையும்தாண்டி பாசமும் பிணைப்பும் கொண்டது போல்தான், தமிழ் மக்கள் காவிரியுடன் உறவாடி வருகின்றனர். எனவேதான், சிலப்பதிகாரத்தில் காவிரியை நம் செவிலித்தாய் என்கின்றனர்.
அதன் காரணமாகவே, நமக்கு காவிரி மறுக்கப்படுகின்றது. காவிரிச் சிக்கல் வெறும் தண்ணீர் பகிர்வுச் சிக்கல்ல, அது ஒரு இனச்சிக்கல் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். நடப்புகள் அதை மெய்ப்பிக்கின்றன.
காவிரி உரிமையை மறுத்து இனவெறியுடன் செயல்படும் கர்நாடகத்திற்கு - துணை போகும் ஆரிய இந்திய அரசு, தமிழ்நாட்டில் செயல்படாமல் முடக்குவதற்கான நீண்ட போராட்டத்திற்கு நாம் அணியமாக வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு, இந்திய அரசு அலுவலகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும்”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களும் உழவர்களும் பங்கேற்றனர்.