“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” என நேற்று (19.03.2017) மாலை நெல்லை மாவட்டம் – கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை கேரள அரசு சீர் செய்திட வலியுறுத்தி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று (19.03.2017) கரிவலம்வந்தநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரிவலம்வந்த நல்லூர் வடக்கு இரத வீதித்திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு - கரிவலம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞானராசு அவர்கள் தலைமை தாங்கினார். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு பனையூர் - இடையன்குளம் வட்டாரப் பொறுப்பாளர் திரு. செயக்குமார், திரு. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க. பாண்டியன், செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு தென்மலை வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாப்புராஜ், திரு. காளிமுத்து (தலைவர்), திரு. வீருத்தேவர் (செயலாளர்), சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஏ.எம். பழனிச்சாமி, சிவகரி விவசாயிகள் சங்கப் பொருளாளர் திரு. குருசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் திரு. மு. தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர் பாண்டியராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது :
“செண்பகவல்லி அணை - திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் இராசபாளையம் வரையிலான கிராமங்களுக்கு வேளாண்மை மற்றும் குடிநீருக்கான பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. வாசுதேவநல்லூர் பகுதியில் மட்டும் 15 குளங்களும், சிவகிரி பகுதியில் 33 குளங்களும், சங்கரன்கோவில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் சற்றொப்ப 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், குடிநீரையும் இந்த அணை வழங்கி வருகிறது.
1956ஆம் ஆண்டு - மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, 1963இல் செண்பகவல்லி தடுப்பணை உடைந்த போது, அன்றைக்கு இருந்த காமராசர் ஆட்சி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக செண்பகவல்லி அணையை சீர் செய்தது.
ஆனால், மொழிவழி மாநில எல்லை வரையறுக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையிலுள்ள எல்லை சரிவர ஒழுங்கு செய்யப்படாமல் இருந்ததால், கேரள அரசும் அதன் வனத்துறையும் தமிழ்நாட்டு எல்லைக்குள் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமித்து தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கி வருகின்றன.
அதன் விளைவாகத்தான், மீண்டும் 1984இல் செண்பகவல்லி அணையில் உடைப்பு ஏற்பட்ட போது, அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் இதே அணை கேரள அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு, கேரளப் பொதுப்பணித்துறையிடம் பேசி – அணையை சீரமைக்க 10இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சீரமைப்புச் செலவு என முடிவு செய்து, அதில் பாதித்தொகையான 5 இட்சத்தை 15 ஆயிரத்தை முன்தொகையாக கேரள அரசுக்கு அளித்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேரள அரசு, அப்பணத்தைத் திருப்பி அனுப்பி, சீரமைக்க முடியாது என்று அறிவித்ததன் காரணமாக, சிவகிரி வட்ட விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில் 2006இல்(03.08.2006) தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு நிதி வழங்கி அணையை 8 வாரத்திற்குள் சீரமைக்க ஆணையிட்டது.
அந்த ஆணையை கேரள அரசு மதிக்கவே இல்லை! அந்த ஆணை கிடைத்த பிறகும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அசைவற்று இருக்கிறது. இதனால், கேரள அரசு மேலும் துணிச்சல் பெற்று, அடுத்தகட்ட அடாவடியில் இறங்கிவிட்டது.
சிவகரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் 1733இல் செண்பகவல்லி அணை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், செண்பகவல்லி தடுப்பணை என்று ஒன்று இருந்ததே இல்லை என்றும் அடாவடியாகப் பொய் கூறுகிறது கேரள அரசு!
தமிழ்நாடு – கேரள எல்லை ஒழுங்கமைக்கப்படாததன் விளைவாகவே, இது போன்ற சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் கேரள அரசோடு பேசி, செண்பகவல்லி தடுப்பணையை உடனடியாக சீர் செய்வதற்கும், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை ஒழுங்கமைப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நெல்லை மாவட்ட உழவர்கள், இப்பகுதி பொது மக்கள், படித்த இளையோர் யாருக்காகவும் காத்திராமல், இது நமது சிக்கல் – நாம் தான் மீட்க வேண்டும் என்ற உரிமை உணர்ச்சியோடு தொடர் இயக்கங்களில் பங்கேற்க வேண்டும்!
உறுதியாக நம்புங்கள்! நாம் – நம்முடைய ஒற்றுமையின் மூலம் நமது நீதியை வெல்வோம்! செண்பகவல்லி அணையை மீட்போம்!”
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கரிகாலன், சிவா, மகளிர் ஆயம் திரு. துரைச்சி, உள்ளிட்டோரும், அப்பகுதி உழவர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்