இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும்
ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15-12-2007 அன்று தஞ்சையில் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலதை திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்
இந்திய அரசு அன்றாடம் புதிது புதிதாக இந்தித் திணிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்திட திட்டமிட்டு செயல்படுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2) - இன் கீழ் தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக செயல்படுத்திட உரிமை இருக்கிறது.
இந்த விதிக்கேற்ப தமிழக அரசு சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் வழியாக இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்திய அரசு அதைச் செயல்படுத்த முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டது. அரசமைப்புச் சட்டத்தின் உயர்வு பற்றி தனக்குச் சாதகமான முறையில் உபதேசம் செய்து வரும் இந்திய அரசின் ஆட்சியாளர்கள், அச்சட்டப்படி தமிழ் மொழி உயர்நீதி மன்ற அரங்கில் ஏற முனைந்த போது, தமிழைக் கீழே தள்ளி இழிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்ட விதியையும் அவமதித்து காலில் போட்டு மிதித்தார்கள்.
ஆனால், அதே இந்திய அரசின் ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் இந்தி மொழியில் வெளியிடும் முயற்சியில் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையைப் பெற்றுள்ளார்கள்.
தமிழில் தந்தி கொண்டு வந்தார்கள். முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அது செயல்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் திட்டத்தைக் கை கழுவி விட்டார்கள். தமிழில் தந்தி கொடுக்க யாரும் முன் வரவில்லை என்று பொய்க்காரணம் சொன்னார்கள். நடந்ததோ வேறு. தமிழில் தந்தி கொடுக்க மக்கள் முன் வந்த போதெல்லாம் இயந்திரம் பழுது என்றார்கள். தமிழில் தந்தி கொடுத்தால் தாமதமாகத்தான் போகுமென்றார்கள். இப்படியாக தொலைபேசித் துறை அதிகாரிகள் தமி;ழ் வழித் தந்தியை ஒழித்தார்கள்.
இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.
தமிழ் நாட்டில் இயங்கும் அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் புயல் வேகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. அதே வேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழில் எழுதி வந்த அலுவலகப் பெயர்களைக் கூட இப்பொழுது கைவிட்டு, இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகளை எழுதுகிறார்கள்.
இந்தித் திணிப்பின் முன்மாதிரி மையமாக அஞ்சலகத் துறை விளங்குகிறது
தில்லி அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக ஆட்சி மொழியாகிய தமிழை அலுவல் மொழியாகச் செயல்படுத்தவும் இந்திய அரசை வலியுறுத்தி வரும் மொழிப்போர் நாளான 25-01-2008 அன்று தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் போராட்டம் நடத்துவதென்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு
தமிழக அரசு வேகவேகமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. அது கொண்டு வரும் புதிய திட்டங்களின் பெயாகளை முதலில் ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்துகிறது.
தமிழக அரசுப் பேருந்துகளில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே செய்யப்படுகின்றன. இப்பொழுது விரைவுப் பேருந்துகளில், "அல்ட்ரா டீலக்ஸ்" என்ற 'மிகை சொகுசு வண்டிகளை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தமிழ்ப் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். தமிழாக்கம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே "அல்ட்ரா டீலக்ஸ்" என்று எழுதப்படுகிறது. அதே போல், "பாயின்ட் டு பாயின்ட்" என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டி அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தமிழ் மொழியில் தான் உரியவாறு பெயர் சூட்டி அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு தனது திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர் சூட்டுகிறது என்பதையாவது தமிழக அரசு கவனித்து தமிழ்நாட்டில் தமிழில் பெயர் சூட்ட முனைந்திருக்கலாம்.
தமிழக அரசின் தமிழ்;ப் புறக்கணிப்பைக் கண்டித்து வரும் 25-1-2008 மொழிப்போர் நாளில் சென்னை கோயம்பேடு நடுவண் பேருந்து நிலையத்திலும், தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடத்துவது என்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.
2. மண்ணின் மக்களுக்கு வேலை தராமல் மற்ற மாநிலத்தவர்க்கு வேலை தரும் இன ஒதுக்கல்
கொள்கையைக் கண்டித்து திருச்சி மிகுமின தொழிலகம் முன் மறியல் போராட்டம்
திருச்சி திருவரம்பூர் மிகுமின் தொழிலகம் (பி.எச்.இ.எல்) புதிய விரிவாக்கத்திற்காகப் பல்லாயிரக் கணக்காணோரை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதுவரை வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் ஆவர். அந்நிறுவனத்தில் உள்ள ஆறு பொது மேலாளர்களில் நால்வர் மலையாளிகள்.
தமிழ் நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான மிகுமின் தொழிலகத்தில் 80 விழுக்காட்டுப் பணியிடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குத் தான் வழங்கப் படவேண்டும். மிகுமின் தொழிலகத்தில் வேலைக்குச் சேர்க்கும் போது தமிழர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அவர்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் 1970-களில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த ஆணை இப்போது புறக்கணிக்கப்படுகிறது.
இதே போல் திருச்சி கோட்டத் தொடர் வண்டித் (ரயில்வே); துறையில், மிகை எண்ணிக்கையில் பீகாரிகளையும் இதர பகுதி இந்திக்காரர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார்கள். கடந்த ஓராண்டிற்குள் வணிகப் பிரிவில் 200 வடநாட்டாரும், இளநிலைப் பொறியாளர் நிலையில் 100 வடநாட்டாரும், மூன்றாம் நிலைப் பிரிவில் 300 வடநாட்டாரும் ஆக மொத்தம் 600 வடநாட்டாரும் பணியமர்த்தம் பெற்றுள்ளனர்.
இந்திக்காரரான லல்லு பிரசாத் யாதவ் தொடர் வண்டித் துறை அமைச்சாரனதிலிருந்து அத்துறையில் இந்தித் திணிப்பும் இந்திக்காரர் திணிப்பும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. தமிழும் தமிழர்களும் புறக்கணிக்ப்படுகிறார்கள். மேலே சொன்ன இந்திக்காரர் திணிப்பு திருச்சிக் கோட்டத்தில் மட்டும் நடந்தது. சென்னைக் கோட்டத்தில் இன்னும் அதிகமாக வடவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் திருச்சி அருகிலுள்ள ஆயுதத் தொழிற்சாலையிலும் (எச்.ஏ.பி.பி) வேற்று மாநிலத்தவர் மிகையாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழர்கள் புறக்கணிக்ப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் தொழிலகப் பணியிடங்களில் 80 விழுக்காடு இடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் என்று ஏதேதோ காரணம் காட்டி, முறையான கல்வித் தகுதி பெற்றுள்ள தமிழக ஆண்களையும் பெண்களையும் இன ஒதுக்கல் செய்வது, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கத்தையே சீர்குலைப்பது ஆகும்.
வேற்று இனத்தாரை மிகையாக வேலைக்குச் சேர்த்து மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணிக்கும் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தமிழ்த் தேசியத் தன்னுரிமை நாளான 25-2-2008 அன்று காலை பத்து மணிக்கு திருவரம்பூர் மிகுமின் தொழிலக ஆலை வாயிலில் த.தே.பொ.க சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.
3. இரயில்வே நிர்வாகமே, பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்யாதே!
தென்னகத் தொடர் வண்டித் துறை "ரயில் நீர்" என்ற பெயரில் ஒரு பாட்டில் பத்து ரூபாய்க்கு தொடர் வண்டிகளிலும் நிலையங்களிலும் தண்ணீர் விற்கத் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதற்காக காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள பாலூர் என்ற இடத்தில் பாலாற்றில் ஊற்று நீர் எடுப்பது தான் தமிழக நலன்களுக்கு எதிரானது.
இத்திட்டத்தின் கீழ் பாலூரில் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் பாலாற்று ஊற்று நீரை எடுக்க உள்ளார்கள். இந்த நீர், ஆந்திர, கர்நாடக, தமிழக, கேரளப் பகுதிகளில் ஓடும் தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் விற்கப்பட உள்ளது.
பாலாற்றில் தமிழகப் பகுதிக்குத் தண்ணீரே வருவதில்லை. பாலாற்றின் கரையிலுள்ள வேலூருக்கு ஒன்பது நாளுக்கு ஒரு தடைவை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்வரவு நீரும் ஊற்று நீரும் மிகமிகக் குறைவாக உள்ளதுதான் இந்த அவலத்திற்குக் காரணம். ஏற்கெனவே தமிழக அரசு இதே பகுதியில் பாலாற்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஆலந்தூர் வரை வழங்குகிறது.
ஆம்பூர் பகுதியிலிருந்து வெளியேறும் தோல்பதனிடும் கழிவு நீர் காஞ்சிபுரம்; வரை ஓடி வந்து ஊற்று நீரை பாழ்படுத்தி விட்டது. மிச்சம் உள்ள தண்ணீரையும் ரயில் நீர் திட்டத்திற்கு எடுத்து விட்டால் தோல் கழிவு நீர் மெலும் கிழக்கு நோக்கி ஆற்றில் பரவும் .பாலாற்றில் எஞ்சியுள்ள ஊற்று நீரும் பயன் படாமல் போய்விடும்.
தமிழகத்தை விட பல பத்து மடங்கு ஆற்று நீர் வளம் நிறைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த இரயில் நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.
பாலாற்றை மலடாக்கும் இந்த ரயில் நீர்த் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இழந்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை நீர் போன்றவற்றை மீட்க முடியாத தமிழக அரசு, இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பாதுகாக்கும் முயற்சியில் இல்லை.
எனவே, பாலாற்று ஊற்று நீரை எடுக்கும் திட்டத்தை தென்னகத் தொடர் வண்டித் துறை கை விடுமாறும், இத் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.