உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு!. Show all posts

Monday, June 22, 2020

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!



தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!
தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை!
வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள்.
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா!
இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை!
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக!”
“இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”.
மேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை!
“தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை!
திராவிடத் திரிபுவாதம் செய்த மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்கள் “திராவிட” என்ற சொல்லை மனுதர்ம நூலிலிருந்தும், குமாரிலபட்டரின் “தந்திர வார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்ததாகக் கூறுகிறார். ஏனெய மேலைநாட்டு ஆய்வாளர்களும் ஆரியச் சான்றுகளிலிருந்தே “திராவிடத்தை” எடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம்.
“திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை!
பெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள்! தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை.
தமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார்.
திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார்.
திராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947).
வடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.
ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்!
சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com). இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!
ஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி - இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள். (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-groomshttp://www.dravidamatrimony.com/brides). ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்!
தென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை!
“தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்!
பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம்.
அதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை!
பார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா! ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.
திராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன.
இவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது!
“பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன்? ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன்? இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை!” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?
ஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்!
“தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது! தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்?
தமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது?

நீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை!
தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்!
ஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம்! ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, May 13, 2020

கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா? சிறப்புக் கட்டுரை பெ. மணியரசன்!


கொளத்தூர் மணியும், சுப.வீ.யும்

பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?

ஐயா பெ. மணியரசன்,

தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த “வரனே அவசியமுண்டே” என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் வைத்து அழைத்தது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்று, தமிழின உணர்வாளர்கள் வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே ஏராளமான மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகளைக் கேரளத் திரைப்பட இயக்குநர்களும் கதை ஆசிரியர்களும் கதாநாயகர்களும் திட்டமிட்டுச் சேர்த்துள்ளார்கள் என்பதை எழுத்தாளர் சாம்ராஜ் உட்பட பலர் வரிசையாகப் பட்டியலிட்டார்கள்.

தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான இனச் சிக்கலாகப் பேசப்பட்ட – இந்த விவாதம், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், தி.மு.க.விற்கும் இடையிலான சிக்கலாக மாறிப் போனது ஏன்?

தி.மு.க. தரப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கலைஞர் கருணாநிதி மட்டும் தலைவரல்லர், தமிழின அழிப்பு வெறியர்களான இராசபட்சே, கோத்தபய கூடத் தலைவர்கள்தாம் போல – என்று கருதும் அளவிற்கு, பிரபாகரன் மீது மிகமிகக் கொச்சையான, குரூரமான, வன்மமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

தி.மு.க. தரப்பினர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து இழிவாகவும், கீழ்த்தரமாகவும் வலைத்தளங்களில் பரப்பிய அவதூறுகளை கண்டிப்பதற்கு மாறாக, அதை இப்போது தேவையில்லை என்று சாதாரணப்படுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி. பேராசிரியர் சுப.வீ. விடுத்த இரண்டாவது அறிக்கையில் (11.05.2020) மேற்படி இழிவுகள் மற்றும் அவதூறுகளுக்கு பின்னால் உள்ள ஞாயங்களை எடுத்துக் கூறுகிறார். விடுதலைப் புலிகள் மீது இராசபட்சே கும்பல் என்னென்ன குற்றச்சாட்டுகள் சொன்னதோ, அவை அனைத்தையும் தி.மு.க. தரப்பினர் அடுக்கினார்கள்.

- முதல் முதலாக 1983இல் சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதால்தான் சிங்களர்கள் 1983 சூலை படுகொலை நிகழ்ச்சிகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

- முசுலிம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள், வெளியேற்றினார்கள்.

- சிறீ சபாரத்தினத்தையும் டெலோ போராளிகளையும் கொன்றார்கள்.

- ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவையும் அவருடன் இருந்தோரையும் கொன்றார்கள்.

இன்னும், இன்னும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீதும் குறிப்பாகப் பிரபாகரன் மீதும் தி.மு.க. தரப்பினர் சுமத்தினார்கள்.

சிங்களப் படையாட்கள் 13 பேரை ஈழத்தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதைக் குற்றமாகச் சொல்கிறார்கள்! ஏன் புலிகள் அவர்களைக் கொன்றார்கள்?

1956லிருந்து தமிழீழத் தமிழர்களை சிங்களப் படையாட்களும் காவல்துறையினரும் தொடர்ந்து சுட்டுக் கொன்றார்கள். தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொண்டு பின் சுட்டுக் கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் மக்கள் திரள் போராட்டம் நடத்திய தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களும், அமிர்தலிங்கம் அவர்களும் பட்டியலிட்டுள்ளார்கள்.

தமிழர்களின் சனநாயக உரிமைகளை மட்டுமின்றி, மனித உரிமைகளையும் பறித்த சிங்களக் காடையர்களையும் சிங்களப் படையாட்களையும் எதிர்கொள்வதற்காக தம்பி பிரபாகரன் அவர்களுக்கு முன்பாகவே தமிழர் தற்காப்பு ஆயுதக் குழுக்கள் உருவாயின. ஆயுதப் போராளி பொன். சிவக்குமரன் சிங்களப் படையாட்களிடம் பிடிபட்டபோது, நச்சுக் குப்பி கடித்து உயிரீகம் செய்தார். எதிரியிடம் சிக்கினால் நச்சுக் குப்பி கடித்து சாக வேண்டும் என்ற போர் முறை கூட தம்பி பிரபாகரனுக்கு முன்பாக ஈழத்தமிழர்களிடம் உருவானதுதான்!

டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் என்ற ஈழத்தமிழர் படை அமைப்புகள் எதற்காக உருவாயின? தமிழர்களை அழிக்கும் சிங்கள இராணுவத்தையும் காவல் துறையினரையும் எதிர்த்துக் கொல்வதற்குத்தானே!

தமிழீழப் பகுதியில் தமிழர்களைத் தாக்கிய சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றது என்ன குற்றம்?

“அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு” என்று முழங்கிவிட்டு, தில்லி ஏகாதிபத்தியத்தின் திராவிட முகமையாக மாறிப் போன தி.மு.க. போல் புலிகள் செயல்படாதது குற்றமா?

தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி என்று முழங்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றும் உரிமையை நான்தான் வாங்கினேன் என்று மார்தட்டியது போன்ற கருணாநிதியின் சற்சூத்திர “சாதனைப் பட்டியல்” புலிகளிடம் இல்லைதான்!

இந்திரா காந்தி ஆட்சி, இந்தியாவில் தமிழீழ ஆயுதப் படை அணிகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தபோதே, அந்த அமைப்புகளைத் தனது கையடக்கக் குழுக்களாக வைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. இந்திய அரசு விரும்பும் அளவிற்கு மட்டும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைப்புகளாக அவை செயல்பட வேண்டும் என்பதே இந்திரா காந்தியின் திட்டம். சில அமைப்புகள் அவ்வாறு இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டன.

இந்திய அரசுக்கு மட்டுமின்றி, தி.மு.க.விற்கும் வேண்டிய அமைப்பாக டெலோ மாறிப் போனது. இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் கட்டுப்படாத ஈழ விடுதலை அமைப்பாக செயல்பட்டது புலிகள் அமைப்பு!

இந்தியப் பயிற்சிக்குப் பின் நாடு திரும்பிய டெலோ படையினர் பல தடவை புலிகளைத் தாக்கினர்; படுகொலை செய்தனர். விடுதலைப்புலிகள் முகாம் ஒன்றைத் தாக்கிப் புலி வீரர்கள் பலரைக் கொன்றார்கள். இதற்கான எதிர்வினையாகத்தான் விடுதலைப்புலிகள் டெலோவின் தலைமை முகாமைத் தாக்கி அழித்தனர்.

தி.மு.க. தரப்பினர், “பிரபாகரன் படையினர் டெலோவைத் தாக்கி அழித்தார்கள்; அதன் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொன்றார்கள்” என்று ஒருபக்க நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டுவது நேர்மையா?

அமைதிப்படை என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக - ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் படையை ஏவினார் இராசீவ் காந்தி! இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இந்தியப் படை கொன்றது. சிங்களப் படையாட்கள் செய்ததைப் போலவே இந்தியப் படையாட்கள் ஈழத்தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இந்தியப் படையை வரவேற்றது. இந்தியப் படைக்குத் துணையாகச் செயல்பட்டது. விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டி, அவர்களை இந்தியப் படையாட்கள் சுட்டுக் கொல்ல உதவியது. இதற்கு எதிர்வினையாக சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். முகாமைத் தாக்கி, அதன் தலைவர் பத்மநாபா உள்ளிட்டோரை புலிகள் கொன்றார்கள்.

இந்த வரலாறெல்லாம் என்னைவிடத் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்குக் கூடுதலாகத் தெரியும்; துல்லியமாகத் தெரியும்! பல கருத்தரங்குகளில் பொதுக்கூட்டங்களில் இவற்றையெல்லாம் விலாவாரியாகப் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்குத் தம் சொந்த ஊரில் - சொந்த நிலத்தில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்தவர் தோழர் கொளத்தூர் மணி! பல உதவிகள் செய்தவர். அதற்காகப் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அதிகம் சிறை சென்றிருப்பார் என நினைக்கிறேன்.

2008 நவம்பர் மாதம் சிங்களப் படை மிகக் கடுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வானத்திலிருந்து கொத்துக் குண்டுகள் போட்டுக் கொல்கிறது. புலிகளும் பொது மக்களும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இதைக் கண்டித்து ஈரோட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) பொதுக்கூட்டம் போட்டது. அதில் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி மற்றும் நான் மூவரும் பேசினோம். மூன்று பேரையும் கோவை நடுவண் சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி! இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறைகளில்தாம் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம்! 32 நாட்கள் மட்டுமே! பிணையில் வெளி வந்தோம்! மற்றொரு வழக்கில், பல மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தவர் தோழர் மணி!

அத்தனையையும் பொக்கென்று போட்டு உடைத்து விட்டார் தோழர் கொளத்தூர் மணி.

பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர் மட்டும் அல்லர்; ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அடையாளம்! சேர சோழ பாண்டியர் வீரம் பற்றி நாம் பேசுவது ஆரியப் புராணக்கதைகளைப் போன்றதன்று! தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் என்பதற்குச் சமகாலச் சான்று பிரபாகரன் - புலிப்படைப் போராளிகள் - தமிழீழத் தமிழர்கள்!

அப்படிப்பட்ட பிரபாகரனை, மலையாளத் திரைப்படத்தில் நாயோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியதை ஆதரித்துத் தமிழ்நாட்டுத் தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் எழுதியதையும், இவர்கள் கட்டுக்கதைகளை கற்பித்துக் கொண்டு பிரபாகரனை இழிவுபடுத்தியதையும் ஒற்றை வரியில் கண்டிக்கத் தோழர் கொளத்தூர் மணிக்கு மனம் பாயவில்லை!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பாரும் (தமிழ்த்தேசியத் தரப்பினரும், தி.மு.க. தரப்பினரும்) தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி, இரு தரப்பையும் சமப்படுத்துகிறார் தோழர் மணி.

பிரபாகரனால்தான் ஈழத்தமிழர்கள் அழிந்தார்கள், பிரபாகரன் ஒரு வன்முறை அராஜகவாதி என்று தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் அவதூறு செய்தது தோழர் மணியின் மனத்தில் வலியை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே தோழர் மணி வர்ணித்து வந்த கருணாநிதியின் இனத்துரோகங்களை இப்போது, தமிழின இளைஞர்கள் வரிசைப்படுத்தும்போது அவருக்கு வலிக்கிறது. திராவிடப் பாசம், தமிழினத்திற்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறதோ?

திராவிடப் பாசம் மட்டுமல்ல, புதிதாகப் பாரதப் பாசமும் தோழர் மணியைப் பற்றிக் கொண்டுவிட்டது!

“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது, இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது - என்பது ஒரு காரணம்”.

“பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரையும், பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சரையும், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியாகச் செல்ல இருந்த முன்னாள் சுவீடன் பிரதமரையும் உள்ளே நுழைய மறுத்து இலங்கை அரசு போரை நடத்தியது” என்றும் தோழர் மணி கூறுகிறார்.

மேற்கத்திய வல்லரசுகள் நடத்தும் இப்போரில் மேற்கத்திய நாடுகள் அனுப்பிய வெளியுறவு அமைச்சர்களை இலங்கை அரசால் எப்படித் தடுக்க முடியும்? தோழர் மணியின் தருக்கத்தில் தன் முரண்பாடு ஏன்? யாருடைய பின்பலத்தில் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட குட்டித் தீவான இலங்கைக்கு இத்துணிச்சல் வந்தது? இந்தியா தந்த துணிச்சல்!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் மீது தமிழ் ஈழத்தின் மீது தனிப்பட்ட பகை உணர்ச்சி ஏதுமில்லை! இந்நாடுகளின் இராணுவக் கூட்டணியில் சிங்கள இலங்கை இல்லை! இலங்கை இரண்டாகப் பிரியாமல் தடுக்கும் தனி அக்கறை மேற்கத்திய நாடுகளுக்கு இல்லை.

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில், இந்தியத் துணைக் கண்டத்தில் சீன ஆதிக்கத்தைத் தடுக்கும் தேவை மேற்கத்திய வல்லரசுகளுக்கு உண்டு. அதற்கு இந்தியாவின் துணையை அவை நாடுகின்றன.

ஆரிய அதிகாரத் தலைமையில் உள்ள இந்தியா தமிழினத்தைத் தனது வரலாற்றுப் பகை இனமாகப் பார்க்கிறது. இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி இல்லை என்றாலும், தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூடுதலான இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு!

சங்க காலத்திலிருந்து ஆரியத்தை எதிர்த்து வருபவர்கள் தமிழர்கள்; சமற்கிருதத்தைத் தேவமொழி என்று ஏற்காதவர்கள். ஆன்மிகத்திலும் இருபதாம் நூற்றாண்டு அரசியலிலும் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு விடுதலை கோரியவர்கள். இப்பொழுதும அனைத்திந்தியக்கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. எனவே, தமிழர்களைப் பகைவர்கள் போல் பார்ப்பதும், பழிவாங்குவதும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வழக்கம்!

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகவே வெளிநாட்டுக் கொள்கை இருக்கும். இந்தியாவில் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்திருப்போர், அண்டை நாட்டில் தமிழர்கள் தனிநாடு கோருவதை ஆதரிப்பார்களா? அதிலும், “ஆரிய இனத்தைச்” சேர்ந்த சிங்களர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்கள் தனி ஈழம் அமைப்பதை ஏற்பார்களா?

நான் ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலேயே எழுதியதைத் திரும்பச் சொல்கிறேன்: “ஒரு வேளை சிங்களர்கள் தனி ஈழத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்திய ஆளும் வர்க்கம் தனி ஈழத்தை ஏற்காது!”.

இந்திய அரசுதான் மேற்கத்திய நாடுகள் உட்பட பல அயல்நாடுகளிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்களர்களின் போருக்கு ஆதரவு திரட்டித் தந்தது. இந்திய அரசின் வற்புறுத்தலால் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகள் ஈழ விடுதலைப் போரை எதிர்த்தன.

தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு போர் நகர்வையும் இந்திய அரசின் அறிவுரையோடும் ஒப்புதலோடும்தான் சிங்கள அரசு முன்னெடுத்தது.

2008-இல் சிங்கள அரசு தொடங்கிய இறுதிப் போர்க்கு முன்பாக 2008 மார்ச்சு மாதம் இலங்கைப் படைத்தளபதி சரத் பொன்சேகா புதுதில்லி வந்து, அமைதி உடன்படிக்கையை மீறி போர் தொடங்குவதற்கு இந்திய அரசிடம் ஒப்புதலும் உதவியும் பெற்றுச் சென்றார். அப்போது பொன்சேகா மூன்று கோரிக்கைகளை இந்திய அரசிடம் வைத்தார்.

1. வரும் சூன் மாதம் (2008) விடுதலைப்புலிகள் வசம் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற போர் தொடுக்கப் போகிறோம்.

2. அப்போரில் இலங்கைக் கப்பற்படைக்கு – இந்தியா கடல்வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்க வேண்டும்.

3. ஒருவேளை, ஆனையிறவில் இலங்கைப் படை தோற்றதைப் போல் இதில் தோற்றால் – புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டால் உயிர்ச்சேதம் இல்லாமல் எங்கள் படையினரை இந்தியா மீட்டுத் தர வேண்டும்.

கமுக்க உடன்படிக்கையில் வெளியே கசிந்த செய்திகள் இவை! அப்போதே எங்களின் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் (2008) இதழ் ஆசிரியவுரையில் மேற்படி மூன்று கூறுகளையும் வெளியிட்டோம்.

இறுதிப் போரில் ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். அவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால், உலக நாடுகள் தலையிடும் சூழல் உருவாகும். அப்படி ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பையும் இந்தியா ஏற்க வேண்டும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கோரினர். அதற்கு ஒப்புக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளை வரச்சொல்லி – அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வர் செயலலிதாவையும் சந்தித்து வேண்டுகோள் வைக்க ஏற்பாடு செய்தனர்.

2008 சூன் – சூலையில் பெரும் போரைத் தொடுத்தது சிங்கள அரசு. வான் கொத்துக் குண்டு வீச்சில் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கலைஞரோ, செயலலிதாவோ பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று கூறி சிங்கள அரசு நடத்தும் போரை ஞாயப்படுத்தினார் செயலலிதா.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின. “ஆனந்த விகடன்” இதழ் அப்போது தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகளை ஆதரிப்போர், தனி ஈழத்தை ஆதரிப்போர், பிரபாகரனை ஆதரிப்போர் என்று பல வினாக்களைக் கேட்டுக் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள், 06.08.2008 நாளிட்ட “ஆனந்த விகடன்” இதழில் வந்தன. அதில், தனி ஈழத்தை ஆதரிப்போர் 55.44 விழுக்காட்டினர் என்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறோம் என்று கூறியவர்கள் 54.25 விழுக்காட்டினர்.

விடுதலைப்புலிகளை தி.மு.க. இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியோர், 22.71 விழுக்காட்டினர். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று கூறியோர் 47.48 விழுக்காட்டினர். இப்போது போலவே பட்டும் படாமலேயே தி.மு.க. இருக்கலாம் என்று கூறியோர் 29.79 விழுக்காட்டினர்.

இராசீவ் காந்தி கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்குப் போதிய ஆதரவில்லை என்று கூறியவர்களின் கணிப்பு பொய் ஆனது. கருணாநிதி, செயலலிதா, காங்கிரசார் எல்லோர்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அவர்களுக்கு அடுத்த பேரிடி “தினமணி” இதழிலிருந்து வந்து விழுந்தது.

“விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் ஒன்றா?” என்ற வினாவைக் கேட்டு “தினமணி” கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்கு, “ஆம்” என்று விடையளித்தோர் 72.58 விழுக்காட்டினர்.

அதன்பிறகே, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கோர வேண்டும் என்று வலியுறுத்தி காந்தியடிகள் பிறந்த நாளான 02.10.2008 அன்று சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருநாள் உண்ணாப் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்தது. மிகப்பெரிய போராட்டமாக நடந்தது. மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தமிழ்நாட்டில் கணிசமான “வாக்குச்சந்தை” இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். புதிய ஒப்பனைகளுடன் புதிய நாடகங்கள் அரங்கேற்றத் தொடங்கினர்.

முதலமைச்சர் கருணாநிதி 06.10.2008 அன்று மயிலை மாங்கொல்லையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, “இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றால், அதற்குப் பிறகு நாங்கள் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்” என்று முழங்கினார்.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்திய அரசு இலங்கையிடம் போர் நிறுத்தம் கோரவில்லை என்றால், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

கெடு முடிவதற்கு முதல்நாள் மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 26.10.2008 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். “பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது; தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள்” என்று கலைஞர் வீட்டுவாசலில் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டதும் பிரணாப் விடையளித்ததும் வருமாறு :

கேள்வி 1 : இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் கோர ஒப்புக் கொண்டீர்களா?

பிரணாப் : நாங்கள் போர் நிறுத்தம் கோர மாட்டோம் (We are not for Ceasefire).

கேள்வி 2 : இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமா?

பிரணாப் : இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இராணுவக் கருவிகள் சில கொடுத்துள்ளோம்.

கேள்வி 3 : இலங்கைப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்படுமா?

பிரணாப் : இந்தியாவில் பலநாட்டுப் படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். இலங்கைப் படை வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். இது எப்போதும் உள்ள வழமையான நடவடிக்கைதான்!

பிரணாப் முகர்ஜியின் வாக்குறுதியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டத்தைக் கைவிட்டோம் என்று அறிவித்தார் கருணாநிதி. “எனது நம்பிக்கை வீண் போகவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன” என்றார் கருணாநிதி!

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து முடித்தபின் இலங்கைக் குடியரசுத் தலைவர் இலங்கை நாடாளுமன்றத்தில், “நாம் இந்தியாவுக்கான போரைத்தான் நடத்தினோம்” என்று அறிவித்தார். அதற்கு எந்த மறுப்பும் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் சொல்லவில்லை, ஆளுங்கட்சித் தலைவி சோனியா காந்தியும் சொல்லவில்லை!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்தப் போர் இந்தியா நடத்தியதா? மேற்கத்திய நாடுகள் நடத்தியதா? கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகங்களை மறந்துவிட வேண்டுமா?

போர் நடத்திய அறுவர் குழு
---------------------------------------------
இலங்கை அரசு நடத்திய ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழு அடிக்கடி விவாதித்து வழிநடத்தியது. அதில் மூன்று இலங்கையர், மூன்று பேர் இந்தியர்!

சிங்களத் தரப்பில் 1. கோத்தபய இராசபட்சே (இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளர்), 2. பசில் இராசபட்சே (நாடாளுமன்ற உறுப்பினர்), 3. லலித் வீரதுங்க (குடியரசுத் தலைவரின் செயலாளர்).

இந்திய அரசுத் தரப்பில்,

1. எம்.கே. நாராயணன் (இந்தியப் பாதுகாப்புத்துறையின் மதியுரைஞர் – மலையாளி).
2. சிவசங்கர மேனன் (வெளியுறவுத்துறை செயலாளர் – மலையாளி).
3. விஜய் சிங் (பாதுகாப்புத்துறை செயலாளர் – இந்திக்காரர்).

இச்செய்தி ஏற்கெனவே ஊடகங்களில் வெளியானதுதான். கோத்தபய இராசபட்சே இந்தியன் டிஃபென்ஸ் ரிவ்வியூ (Indian Defence Review) என்ற இதழுக்கு அளித்த செவ்வியிலும் இந்த அறுவர் குழு இலங்கையின் போர் நடவடிக்கைகளை நிர்வகித்தது பற்றிக் கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் கருணாநிதியின் போர் நிறுத்த உண்ணாப் போராட்ட நாடகத்தையும் அம்பலப்படுத்திவிட்டார் கோத்தபய! (கோத்தபய இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர்).

2009 ஏப்ரல் 24ஆம் நாள் விடியும் நேரத்தில், மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதி திடீர் உண்ணாப் போராட்டம் தொடங்கினார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது கோரிக்கை!

உணர்ச்சி வசப்பட்டு திடீரென்று உண்ணாப் போராட்டம் நடத்துகிறார் என்ற அதிர்ச்சிச் செய்தி! ஆனால், இந்த நாடகம் முதல் நாளான ஏப்ரல் 23ஆம் நாள் மாலையே இந்திய அரசுக்குத் தெரிந்தது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் தன்னை அவசரமாகத் தொலைப்பேசியில் அழைத்து இச்செய்தியைக் கூறியதாக கோத்தபய மேற்படி செவ்வியில் கூறியுள்ளார். மறுநாள் கருணாநிதியின் உண்ணாப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில், “தாக்குதல்கள் நிறுத்தப்படும்” என்று போலி அறிக்கை வெளியிடுவதற்கான தயாரிப்பில் அப்போதே இறங்கிவிட்டோம் என்கிறார் கோத்தபய!

சிவசங்கர மேனன் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு Choices : Inside the Making of Indian Foreign Policy (வாய்ப்புகள் : இந்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தின் உட்புறம்).

போரின் இறுதி நாட்களில் நார்வேயும், அமெரிக்காவும் புலித்தலைமைகளை வான் வழியே அழைத்துச் சென்று காப்பாற்றி, போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின. ஆனால், அதில் சிங்கள, இந்திய அரசியல்வாதிகளுக்கு உடன்பாடில்லை என்று சிவசங்கர மேனன் குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். ஆனால், இச்செய்தி போரின் இறுதிக் கட்டத்திலும் போர் முடிந்த பின்னும் பரவலாகப் பேசப்பட்ட செய்திதான்!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்திய அரசுதான் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை நடத்திய போரை இயக்கியது என்பதற்கு இந்தச் சான்றுகள் போதுமல்லவா!

கருணாநிதியின் துரோகத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இனப்பகை இந்திய அரசையும் அல்லவா பாதுகாக்கிறீர்கள்!

உங்கள் திராவிடக் கொள்கை மீதும், பெரியாரியத்தின் மீதும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு இருந்தது. அனைத்தையும் தகர்த்து விட்டீர்கள் தோழரே!

இந்தியா நினைத்தாலும் இலங்கை நடத்திய போரை நிறுத்தி இருக்க முடியாது என்று கூறி, ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை போனதை மறைக்க விரும்புகிறீர்களே!

கருணாநிதி வஞ்சகமாக நாடகமாடாமல் இலங்கைப் போர் நிறுத்தத்தை வலியுறுத்திப் போராடியிருந்தால், தனிப்பெரும்பான்மை இல்லாத மன்மோகன் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால், ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காங்கிரசு அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இருக்கும் என்று நான் கருதவில்லை. ஈழத்தமிழர்களுக்காக – நாடகமாடாமல் உண்மையிலேயே கருணாநிதி பதவி விலகியிருந்தாலும், காங்கிரசுக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும் மன்மோகன் ஆட்சி வீழ்ந்துவிடாமல் இந்தி மண்டலக் கட்சிகள் பாதுகாத்திருக்கும். தமிழர்களுக்காக காங்கிரசு ஆட்சி வீழ்வதை, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியோ, மாயாவதியின் பகுசன் சமாஜ் கட்சியோ மற்றும் சில கட்சிகளோ விரும்பி இருக்க மாட்டா! தங்கள் ஆதரவைக் கொடுத்திருப்பார்கள்!

கலைஞர் கருணாநிதி மன்மோகன் சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டு, தாமும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அன்றைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி மக்கள் பக்கம் நின்ற ஒரு போராளியாகக் காட்சியளித்திருப்பார்.

ஆனால், கருணாநிதி தமிழீழத்தை – ஈழத்தமிழர்களை ஆதரிப்பதுபோல் நாடகமாடி ஏமாற்றினார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

தோழர் கொளத்தூர் மணி இன்னொரு ஆபத்தான தத்துவம் சொல்கிறார். “பத்தாண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லை” என்கிறார்.

பதினோராண்டுகள் கழிந்து போய்விட்டன என்றுகூறி, ஈழத்தமிழர்கள் கருணாவை ஏற்றுக் கொள்வார்களா? இன்னொன்று, ஈழத்தமிழர் இனம் அழிக்கப்பட்டதை, விடுதலைப் போர் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு வீழ்த்தப்பட்டதை – அந்த இன அழிப்பிற்கு மறைமுகமாகத் துணைபோனவர்களை பத்தோடு பதினொன்றாக மறந்துவிட தோழர் மணி அவர்களால் முடிகிறது என்பதை நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை!

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று அதை மறந்து விடலாமா? திராவிடத் தத்துவத்தின்படி மறந்து விடலாம்! மறந்துவிட்டுத்தானே, திராவிடத் தளபதி கருணாநிதி பா.ச.க.வுடன் 1999-இல் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க.வினரை உட்கார வைத்தார்!

1965 – இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் 400க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்ற காங்கிரசுக்குத்தானே கருணாநிதி 1969 முதல் ஆதரவு தந்தார். 1971 பொதுத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்!

இந்தப் பாதையெல்லாம் திராவிடத் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த பாதைதான்!

வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோது, அவனை ஆதரித்தார்! அவன் 1947 ஆகத்து 15இல் விடைபெற்ற போது அது துக்க நாள் என்றார் பெரியார். சில ஆண்டுகள் காங்கிரசு எதிர்ப்பு. பின்னர் 1954லிருந்து காங்கிரசு ஆதரவு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டே தமிழ்நாடு விடுதலை பற்றியும் அவ்வப்போது பேசிய அந்நாளையக் கலைஞர் அவர்! தி.மு.க. ஒழிப்புதான் முதல் வேலை என்று 1949லிருந்து 1967 பிப்ரவரி வரை செயல்பட்ட பெரியார் இப்படிப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாத பண்பாட்டிற்குத் தானே அடித்தளம் அமைத்தார்!

1970களின் தொடக்கத்தில் தந்தை செல்வா அவர்கள், சென்னையில் பெரியாரை சந்தித்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரியபோது, “நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்” என்று விடை கூறி, ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்தவர் பெரியார்.

வரலாற்றில், ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலையடைய காலனி நாடுகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தில், ஒரு காலனி நாடு இன்னொரு காலனி நாட்டை ஆதரிப்பதுதான் வலிமையாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல், ஒதுங்கிக் கொள்வதற்காக – தந்திரமாக ஓர் அடிமை இன்னொரு அடிமையின் விடுதலையை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு ஆதரவு தர மறுத்துள்ளார்.

கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள். பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும் அவர்களைத் திராவிடத் தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ்த்தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது! எனவே, பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இதோ சுப.வீ. அவர்களுடைய ஒப்புதல் கூற்று : “புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப்பட்டது”. (சுப.வீ. அறிக்கை, 11.05.2020).

“மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தோழர் கொளத்தூர் மணி தனது கட்டுரையில் கூறுகிறார்.

பா.ச.க. பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான கொள்கைத் திட்டம் – வேலைத் திட்டம் எதையாவது தி.மு.க. வெளியிட்டிருக்கிறதா? பீகாரின் பிராமண பிரசாந்த் கிசோர் ஏற்கெனவே மோடிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர். இப்போது மு.க. ஸ்டாலினுக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார். பிரசாந்த் கிசோர் கலைத்திட்டத்தில் (Curriculam) பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள் இல்லையே! எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை இதுவரை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. கடைபிடிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார் என்பதற்காக, காங்கிரசோடு தொடர்பை துண்டித்துக் கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்நேரத்தில், பா.ச.க. ஆட்சிக்கு எதிராக சோனியா காந்தி புதுதில்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை (14.01.2020) தி.மு.க. புறக்கணித்தது. இதுதான் பா.ச.க. எதிர்ப்புக் கூட்டணியா?

காங்கிரசைக் கைவிட்டு பா.ச.க.வோடு தி.மு.க. கூட்டணி சேராது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? கருணாநிதி அவர்களே 1999லிருந்து ஐந்தாண்டுகள் பா.ச.க. கூட்டணியில்தானே இருந்தார்! எதிரும் புதிருமானவர்கள் காலப்போக்கில் சேர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இதே கட்டுரையில் தோழர் மணி கூறுகிறார். அவர் வாதப்படி தி.மு.க. பா.ச.க.வோடு சேர்ந்தாலும் பெரிய தவறு ஒன்றுமில்லை!

தோழர் கொளத்தூர் மணி கட்சி பா.ச.க. மதவாத பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து, அதை பரிசீலித்து ஏற்குமாறு மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்துவதை பாசிச எதிர்ப்பு உத்தியின் கீழ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தோழர் மணி பரிந்துரைப்பது முற்றிலும் முரண்பாடானது!

தோழர் கொளத்தூர் மணி – பேராசிரியர் சுப.வீ. ஆகிய இருவரும் ஈழவிடுதலைக்காக மிகக்கடுமையாகப் போராடியவர்கள்! மிக அதிகமாக ஈகம் செய்தவர்கள்! என்ன செய்வது? அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர்களை இனத்துரோக முகாமுக்குள் கொண்டு போய் சேர்த்துவிட்டது!

“நேற்று ஒருவன் புரட்சியாளனாக இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் புரட்சியாளனாக இருக்கிறான் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நடைமுறையில் இன்றும் புரட்சியாளனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும்” – மா சே துங்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, November 5, 2019

தி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா? சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை பெ. மணியரசன்!


தி.மு.க.வும் தி.க.வும்
இந்திய எதிர்ப்புக் கட்சிகளா?

சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


என்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “ராஜீவ் மல்கோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கியமான சில கருத்துகளுக்கு என்னுடைய மறுமொழி வருமாறு :
“பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று இவாள் பேசுவார்கள். அதாவது இதுவொரு கத்திரிக்கோல் உத்தி” என்று எழுதியுள்ளார் பேரா. சுப.வீ.
இதில், “அவாள்” என்பது பிராமணர்களையும், “இவாள்” என்பது தமிழ்த்தேசியர்களையும் குறிக்கிறது.
தி.க.வினரை காங்கிரசில் சேரச் சொன்னார் பெரியார்
-----------------------------------------------------------------------------------
பிராமணர்களுக்கும் இந்தியாவிற்கும் திராவிட இயக்கம் நிரந்தரமாக – எதிராகச் செயல்படுவதாக சுப.வீ. கூறுகிறார். 1957 பொதுத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவைத் தோற்கடித்து காங்கிரசின் சீனிவாச ஐயரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை செய்த பெரியார், அண்ணாவை “வேசிமகன்” எனத் திட்டினாரே, அப்போது கூட பிராமணர் எதிர்ப்பில்தான் பெரியார் பரப்புரை செய்தாரா?

அதே 1957ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட நீதிக்கட்சியின் முக்கிய சிந்தனையாளர்களில் – செயல்பாட்டாளர்களில் ஒருவராய் இருந்த “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தோற்கடித்து, காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களை வெற்றிபெறச் செய்ய பெரியார் பரப்புரையில் ஈடுபட்டாரே, அப்போதும் பிராமண எதிர்ப்புக்காகத்தான் அதைச் செய்தாரா?
“திராவிடர் கழகச் சார்புடையவர்கள் ஆனாலும் சரி, தி.க. ஆதரவாளர்கள் ஆனாலும் சரி; அவர்கள் காங்கிரசில் சேர்ந்து தொண்டாற்ற ஆசைப்படுவார்களானால் தாராளமாக அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்” என்றார் பெரியார். (விடுதலை, 18.08.1961). அனைத்திந்திய ஆட்சியையும் தமிழ்நாட்டு ஆட்சியையும் அப்போது காங்கிரசுதான் வைத்திருந்தது. அப்போது, அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி. அப்போது தலைமையமைச்சர் காசுமீர் பிராமணரான பண்டித நேரு! இதுதான் திராவிட இயக்கத்தின் இந்திய எதிர்ப்பா? பிராமணர் எதிர்ப்பா?
1965இல் இந்தி எதிர்ப்பு மாணவர்களை
சுட்டுக் கொல்லச் சொன்னார் பெரியார்
-------------------------------------------------------------
இந்திய அரசு இந்தியைத் திணித்தபோது, தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மாணவர்களிடம் உருவாக்கியதில் தி.மு.க.விற்கு முக்கியப் பங்குண்டு. அந்த மாணவர் போராட்டம் தமிழர்களின் மக்கள் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையையும், இந்திய இராணுவத்தையும் மத்திய மாநில காங்கிரசு ஆட்சிகள் ஏவிவிட்டன. நானூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, பெரியார் விட்ட அறிக்கையை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

“தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்? பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு, எல்லா மக்களும் 'இந்தி' 'இந்தி' என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகக் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” - பெரியார். (சான்று : 1965 மே 28 முதல் 30 வரை பெரியாரின் அறிக்கைகளையும், உரைகளையும் தொகுத்து வந்துள்ள “கிளர்ச்சிக்குத் தயாராவோம்” நூல், பக்கம் 6, 10, 14, 15).
தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக - இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பெரியாரின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிரானதா? தமிழ்நாட்டிற்கு எதிரானதா? திராவிடத் “தத்துவ”த்தில் இதற்கு விடை உண்டா?
இந்தித் திணிப்பை அப்போது எதிர்த்த தி.மு.க. திராவிடக் கட்சியா? இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுக் கொன்ற பெரியாரின் தி.க. திராவிடக் கட்சியா? சுப.வீ. சொன்ன உவமையை இங்கு பொருத்தலாம் – தி.க.வும், தி.மு.க.வும் கத்தரிக்கோல் போல், எதிரெதிராக இயங்கி இணைந்து செயல்பட்டிருப்பார்களோ?
பெரியாரின் தி.மு.க. எதிர்ப்பும் திராவிடக்கொள்கை தானா?
1957 தேர்தலிலிருந்து 1967 தேர்தல் வரை அண்ணாவையும், தி.மு.க.வையும் வீழ்த்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்ய கடும் பரப்புரையும், களப்பணியும் ஆற்றிய பெரியாரும் திராவிடர் கழகத்தினரும் திராவிடவாதிகளா? இந்தியத்தேசியவாதிகளா? திராவிடர் கழகத்தின் – பெரியாரின் முதல் எதிரிகளாக அவர்களால் கருதப்பட்ட தி.மு.க.வினர் திராவிடவாதிகளா? இல்லையா? பேராசிரியர்தான் ஆய்வுரை வழங்க வேண்டும்.

“அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு!” என்று முழங்கிய அண்ணா அவர்கள், 1963ஆம் ஆண்டு தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்போது, “எல்லையில் சீனப் படையெடுப்பு! வீடு இருந்தால்தான் ஓடு மாற்றிக் கொள்ளலாம்; இந்தியா இருந்தால்தான் திராவிடநாடு அடைய முடியும்” என்று சொல்லி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டாரே, அப்போது அண்ணா இந்திய ஆதரவாளராக இருந்தாரா? எதிர்ப்பாளராக இருந்தாரா? இந்தியாவைத் தன் வீடாகக் கருதினார் அண்ணா! அதுதான் இந்திய எதிர்ப்பா?
தி.மு.க. – காங்கிரசு, பா.ச.க.
கூட்டணிகள் திராவிட உறவுதானா?
---------------------------------------------------------
1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டணி சேர்ந்தார். 1975 நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்குப் பின் 1976 சனவரி 31-இல் முதலமைச்சர் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. 1980 மக்களவைத் தேர்தலில் அதே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கலைஞர் கருணாநிதி, “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று முழக்கம் விடுத்து மீண்டும் கூட்டணி சேர்ந்தார். அப்போது கலைஞர் இந்திய ஆதரவாளராக இருந்தாரா? இந்திய எதிர்ப்பாளராக இருந்தாரா?

1999இலிருந்து 2003 வரை பா.ச.க. தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. பதவி வகித்தது. அப்போதும் தி.மு.க. இந்திய எதிர்ப்பாளராக, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பாளராக, இந்துத்துவா எதிர்ப்பாளராகத்தான் இருந்ததா?
சுப.வீ. போன்ற தி.மு.க.வின் தீவிரப் பரப்புரையாளர்கள் திராவிடத்தின் இந்துத்துவா எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், “இனிமேல் பா.ச.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேராது” என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுமாறு கோருவார்களா? அவ்வாறு அறிக்கை வெளியிடச் செய்வார்களா?
மாநிலக்கொடியில் கருணாநிதியின் சரணாகதி
--------------------------------------------------------------------------
1970களில் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான மாதிரிக் கொடியை வெளியிட்டார். அதில், இந்திய அரசுக் கொடியின் படத்தை மேலே போட்டு, அதற்குக் கீழே தமிழ்நாடு அரசின் கோயில் முத்திரைச் சின்னத்தைப் பொறித்திருந்தார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்திய ஆதரவாளராக இருந்தாரா, எதிர்ப்பாளராக இருந்தாரா?

அடுத்து, தான் கேட்ட தனிக்கொடி திட்டத்தை அம்போவெனக் கைவிட்டு குட்டிக்கரணம் போட்டு, இந்திய அரசுக் கொடியை இந்திய விடுதலை நாளில் ஏற்றுவதற்கு இந்தியத் தலைமையமைச்சரிடம் மனுப் போட்டு, அவர் அனுமதியைப் பெற்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மூவண்ணக்கொடி ஏற்றினார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்தியதேசியவாதியா? “மாநில சுயாட்சி” வீரரா?
கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சராக இருந்த சித்தராமையா தயாரித்த மாநிலக் கொடியில் இந்திய அரசுக் கொடி இல்லை. ஒரு காங்கிரசுத் தலைவருக்கு இருந்த இனப்பற்று, மாநிலப்பற்று, துணிச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக கலைஞர் கருணாநிதியிடம் இந்தப் பண்புகள் இல்லை!
கலைஞர் கருணாநிதி தன்னையும் தி.மு.க.வினரையும் “இனத்தால் திராவிடன்; மொழியால் தமிழன்; நாட்டால் இந்தியன்” என்று அடையாளப்படுத்தி “திராவிட சித்தாந்தப் பொன்மொழி” ஒன்றை உருவாக்கிப் பேசி வந்தாரே, அப்போதும் கலைஞர் இந்தியதேசிய எதிர்ப்பாளர் தானா?
தி.க - தி.மு.க.வின் பிராமணிய சரணாகதிப் படலம்
-------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதிக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திராவிடர் கழகம், தி.மு.க. ஆதரவு நிலையை விலக்கிக் கொண்டு செயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆதரவு நிலையை 1990களில் எடுத்தது. சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று சவால் விட்டு அறிவித்துக் கொண்ட செயலலிதா புகழ் பாடுவதையே அப்போது அன்றாட அரசியலாக்கிக் கொண்டார் ஆசிரியர் வீரமணி. புகழ்ச்சியின் உச்சமாக வல்லம் பெரியார் கல்லூரிக்கு செயலலிதாவை அழைத்து “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் அவருக்கு வழங்கினார் வீரமணி. அதுவும் பிராமணிய எதிர்ப்புதானா?

திராவிட முன்னேற்றக் கழகம் 1962-க்குப் பிறகு, இராசாசியுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1967 பொதுத்தேர்தலில் இராசாசியின் சுதந்திரா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்து தொகுதிப் பங்கீடு செய்து கொண்டது. அப்போது, தேர்தல் பரப்புரையில் பிராமணர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் இராசாசி! “பிராமணர்கள் ஒரு கையால் தங்கள் பூணூலைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார். அப்பொழுதும், திராவிடம் இந்துத்துவா எதிர்ப்பில் – பிராமண எதிர்ப்பில்தான் இருந்ததா?
திராவிடர் பற்றிய பெரியாரின்
வர்ணணை சமூக அறிவியலா?
-------------------------------------------------
“தமிழர் என்றால் தாங்களும் தமிழர் என்று பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்வார்கள். திராவிடர் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது” என்று வரலாற்றியல், மானிடயியல் அறிஞர்கள் யாரும் கூறாத ஒரு கருத்தை பெரியார் கூறினார். ஆனால், உண்மையில், ஆரிய பிராமணர்களுக்கு மட்டுமே “திராவிடர்” என்ற பெயர் உருவானது என்ற செய்தியை வரலாற்று ஏடுகளிலிருந்து நாங்கள் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

திராவிடத்தின் தந்தைமாரில் ஒருவராக விளங்கக்கூடிய கால்டுவெல் ஆரிய நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகாவிலிருந்தும் “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்று தன்னுடைய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ”திராவிட பிராமண மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) என்பதை இணையதளத்தில் தட்டினால், எத்தனை திராவிட பிராமண சங்கங்கள் இருக்கின்றன, எத்தனை திராவிட பிராமணப் பிரிவுகள் இருக்கின்றன என்பது தெரிய வரும்!
இன்றைக்கும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் “புதூரு திராவிட சங்கம்” என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.comhttp://pudurdravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் - பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) - பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).
பிரித்தானியக் கலைக்களஞ்சியம் “திராவிடன்” என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும்போது, “இச்சொல் முதன் முதலில் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்களை மட்டுமே குறித்தது. பிற்காலத்தில், கெடு வாய்ப்பாக இந்தப் பெயரால் மண்ணின் மக்களையும் குறிக்கும் நிலை உருவானது” என்று கூறுகிறது. (காண்க : http://gluedideas.com/Encyclopedia-Britannic…/Dravidian.html).
குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசும் தாயகங்களில் வாழும் பிராமணர்களைக் குறிக்க “பஞ்ச திராவிடர்கள்” என்ற சொல்லும் வரலாற்று ஏடுகளில் காணக்கிடைக்கிறது. பிராமணர்களைத்தான் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைத்தார்கள். ஐயமிருந்தால், பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
தி.மு.க. கோவையில் 1950இல் நடத்திய “முத்தமிழ்” மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப் பேசினர். அப்போது, திராவிடர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் சான்று எதுவுமில்லை என்று கூறி, திராவிடம் என்ற சொல்லைக் கைவிடுமாறு அண்ணாவிடம் இவ்விருவரும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அண்ணா விடையிறுக்கும்போது, சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே.சாமிநாதய்யர் சிலையின் கீழே “திராவிட வித்யா பூசணம்” என்று எழுதப்பட்டிருப்பதையும், “சனகணமன” பாட்டில் “திராவிட” என்ற சொல் வருவதையும் சான்றாகக் காட்டினாரே தவிர, சங்க இலக்கியத்திலிருந்தோ, காப்பிய இலக்கியத்திலிருந்தோ சான்று காட்டவில்லை! அப்போதும், அண்ணா காட்டிய “திராவிட”ச்சான்றுகள் ஆரியம் சார்ந்தவையே!
மேற்கண்ட வரலாற்றுப் பின்னணியில்தான், ஆய்வு அடிப்படையிலும் அரசியல் நிலைபாட்டு அடிப்படையிலும் திராவிடம் என்பது ஆரியத்தின் இளைய பங்காளி என்று துல்லியமாகச் சொல்கிறோம். இப்பொழுதும், ஆரியத்தின் இளைய பங்காளியாகத்தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு காவல் அரணாகத்தான் திராவிடம் செயல்படுகிறது.
2008 – 2009 ஆண்டுகளில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை நடத்தியது. அதற்கு, எல்லா வகையிலும் இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். இந்திய அரசு ஈழத்தில் போர் நிறுத்தம் கோர வேண்டுமென்று கூறி, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரை நாள் உண்ணாப் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்திய அரசு போர் நிறுத்தம் கேட்க மறுத்துவிட்டது. உண்ணாப்போராட்டத்தோடு முடித்துக் கொண்டது மட்டுமில்லை, ஈழத்தில் தமிழினப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசில் தி.மு.க. பதவி வகித்துப் பலன் அனுபவித்தது. இந்த தமிழினத்துரோகமும் திராவிடத்தின் இந்திய எதிர்ப்பு தானோ?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் குறித்து..
-------------------------------------------------------------------------
பேராசிரியர் சுப.வீ. அவர்களுடைய இன்னொரு முகாமையான கேள்வி இதோ : “தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏன் திராவிடத்தை எதிர்ப்பதில்லை? பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதாலா? உண்மையில் வெங்கட்ராமன்தான் பேசுகிறார். மணியரசன் வாய் அசைக்கிறார். அவர் நெஞ்சில் கள்ளம் இல்லையென்றால், அவரும் நேரடியாகப் பேச வேண்டும் தானே?”

“பிராமண வகுப்பில் பிறந்த தோழர் வெங்கட்ராமன்தான் சிந்திக்கும் ஆற்றல் உடையவர். பிராமணர் அல்லாத தமிழினத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர். வெங்கட்ராமனுக்கு ஊதுகுழலாக இருக்கிறார்” என்று சுப.வீ. பேசும்போது, அவர் மணியரசனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தமிழினத்தையே அவமானப்படுத்துகிறார்.
ஏனெனில், “தமிழர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி” என்று பேசிய பெரியார் மரபில் வந்தவரல்லவா! எனவே, பிராமணர்களால் மட்டுமே கூர்மையாக சிந்திக்க முடியும் என்ற அடிமை உளவியலில் இருந்து சுப.வீ. போன்றவர்கள் இன்னும் விடுபடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது!
எனது இந்தக் கருத்தை, சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீ. அவர்களிடம் தஞ்சாவூரில் எங்களது இயக்க அலுவலகத்தின் வாசல் அருகில் மரநிழலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் கூறியிருக்கிறேன். அப்போதும், “வெங்கட்ராமன் தான் உங்களைக் கெடுத்துவிட்டார்” என்று சொன்னார். “தமிழனுக்கு சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லை எனக் கருதுகிறீர்களா சுப.வீ.?” என்று நான் கேட்டேன்.
தோழர் கி. வெங்கட்ராமன் திராவிடத்தைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பதற்குக் காரணம், திராவிடவாதிகள்தான்! நீங்கள் கருத்தளவில் விவாதம் செய்ய மாட்டீர்கள், பிராமணியர்களைப்போல பிறப்பிலிருந்து விவாதம் செய்வீர்கள். கருத்துக்கு விடை சொல்லாமல், அவர் பிராமண வகுப்பில் பிறந்ததைக் கூறி, உடனே உங்களின் ஆதரவாளர்களை களிப்படையச் செய்வீர்கள். அப்போது, கருத்தளவில் தருக்கம் நடக்காது. அது பிறப்பளவில் திசைமாறிப் போகும்!
எனவே, தோழர் கி.வெ. திராவிடம் குறித்த தருக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம், தி.க. – தி.மு.க.வில் இருப்பவர்களைவிட நடைமுறையில் பிராமணிய எதிர்ப்பாளர் தோழர் கி. வெங்கட்ராமன். படிக்கும் காலத்திலேயே பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மனித சமத்துவ சிந்தனை வசப்பட்டு, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத் தேடி வந்து எங்களோடு இணைந்தவர் தோழர் கி.வெ.! தன்னுடைய இரு மகள்களுக்கும் பிராமணரல்லாத வகுப்பில் பிறந்தவர்களைத் தேடித் திருமணம் செய்து வைத்தவர். ஆரியத்தை - பிராமணியத்தை அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் வாயிலாக மட்டுமின்றி, நடைமுறையிலும் எதிர்த்து வருபவர். இந்துத்துவாவை எதிர்த்து, அரிய கருத்துகள் கொண்ட பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
திராவிடவாதிகள் தருக்கம் செய்வதைவிட, குறுக்குவழியில் குதர்க்கம் செய்வதில் நாட்டமுடையவர்கள். அதனால்தான், அவர்களோடு நேரடி தருக்கத்தில் அவர் ஈடுபடவில்லை.
தமிழ்த்தேசியத்தின் மரபும் வீரமும்
--------------------------------------------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கம், திராவிடவாதிகளைப் போல் பிராமணர்களைக் கண்டு அஞ்சும் இயக்கமல்ல! வர்ணாசிரமத்தை – பிராமணியத்தை எதிர்க்கக்கூடியவர்கள் பிராமணர்களில் இருந்தாலும், வெளிப்படையாக அவர்களை வரவேற்கக்கூடிய இயக்கம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். எங்கள் இயக்கத்தில் உறுப்பினராக்கிக் கொள்வோம். இதில் எந்த ஒளிவுமறைவுமில்லை! அதேபோல், ஆரிய எதிர்ப்பில் - பிராமணிய ஆதிக்க எதிர்ப்பில் ஈடுபடாதவர்களை – அவர்கள் மரபுவழித் தமிழினத்தில் பிறந்திருந்தாலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுப்பினர்களாக ஏற்பதில்லை!

வெளிப்படையாக ஆரியத்தை – பிராமணியத்தை – இந்துத்துவாவை – இவற்றை செயல்படுத்தி வரும் இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்த்து வருகிறது. நாங்கள் தி.மு.க.வைப் போல், காங்கிரசுடனோ, பா.ச.க.வுடனோ கூட்டணி சேர்வதில்லை. கூட்டுப் போராட்டங்களும் நடத்துவதில்லை!
தமிழ் இனம் வரலாறு நெடுக ஆரியத்தை – பிராமணியத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வர்ணாசிரம தர்மம், சாதி உயர்வு தாழ்வு இவற்றையெல்லாம் தமிழினம் எதிர்த்தே வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்றவை மனித சமத்துவத்தைத்தான் பேசுகின்றன.
தமிழர் ஆன்மீகம் கூட பழங்கால ஆசீவகமாக இருந்தாலும், சிவநெறியாக இருந்தாலும், திருமால் நெறியாக இருந்தாலும், ஆரிய வர்ணாசிரம தர்மத்தை ஏற்கவில்லை; எதிர்த்தே வந்திருக்கிறது. திருமூலர் கூறிய “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற பொன்மொழியைத் தான், அண்ணா தன்மொழியாக ஏற்றுக் கொண்டார். வள்ளலாரின் சமத்துவ ஆன்மீகம் ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பில் கருக்கொண்டது. தமிழர் ஆன்மீகம், தமிழ்ப் பெருமையைத்தான் – தமிழர் பெருமிதத்தைத்தான் கூறி வந்திருக்கிறது. இவ்வாறான வரலாற்று வழியில் வந்த எங்களது இக்காலத் தமிழ்த்தேசியம், ஆரிய பிராமணிய சித்தாந்தத்தையும் அதன் இன மேலாதிக்கத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும், சாதி ஒடுக்குமுறைகளையும் இந்திய ஏகாதிபத்தியத்திய அரசியலையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
அதேபோல், வெளியார் சிக்கலில் 1956 நவம்பர் 1-க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழக்கூடியவர்களும், அவர்களின் வழி வந்தவர்களும் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களே, அவர்கள் சம உரிமை உள்ளவர்கள் என்றுகூறி, அவர்களின் தமிழ்த்தேசிய ஈடுபாட்டிற்கேற்ப அவர்களையும் உறுப்பினராக்கிக் கொள்கிறோம். அவர்களும் பொறுப்புகளுக்குத் தேர்வாகிறார்கள். தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் நானூறு – ஐநூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மரபுவழித் தமிழர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கை!
பேராசிரியர் சுப.வீ. அவர்களை, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் விமர்சித்தபோது, அதை நாங்கள் கண்டித்தோம். பிறமொழி பேசுவோர் பற்றிய எங்கள் மேற்கண்ட நிலைபாட்டை அப்பொழுதும் கூறியிருக்கிறோம். சுப.வீ. அவர்கள் மரபுவழித் தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் கூறியிருக்கிறோம்.
மேற்கண்ட எமது வினாக்களுக்கு சுப.வீ. அவர்கள் விடை கூறட்டும்; அதன்பிறகு பார்ப்போம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT