உடனடிச்செய்திகள்
Showing posts with label காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!. Show all posts
Showing posts with label காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!. Show all posts

Tuesday, September 27, 2016

காவிரித் தீர்ப்பு : வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்ச நீதி மன்றம்! நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே ! பெ.மணியரசன் அறிக்கை!



காவிரித் தீர்ப்பு : வன்முறைக்கு 
வளைந்து கொடுக்கிறது உச்ச நீதி மன்றம்! 
நீதியை நிமிர்த்த
வீதிக்கு வாருங்கள் தமிழர்களே !

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!


காவிரிவழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கர்நாடக அரசின் சட்ட விரோத செயல்களையும் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும் மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்ததுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும் என்று தமிழ்நாட்டின் ஏழரைக்கோடி தமிழ்மக்கள் இன்று எதிர்பார்த்தார்கள் . சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யவில்லை .அவர்மீது உரியவாறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.மாறாக உச்ச நீதிமன்ற மாண்புக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது என்று சித்தராமையாவிடம் உச்ச நீதிமன்றம் கெஞ்சியுள்ளது..
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில் 21.09.2016 முதல் 27.09.2016 வரை ஏழு நாட்களுக்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தது.ஆனால் ஒருசொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு திறக்கமுடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக அரசிடம் அதுபற்றி விளக்கம் கேட்காமல் வெறுமனே செப்டம்பர் 28,29,30 மூன்று நாட்களுக்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் பம்மி,பதுங்கி கூறியிருக்கிறது .கர்நாடகத்தைக்கண்டு உச்ச நீதிமன்றம் அச்சப்படுகிறதா ? அல்லது நடுநிலைத் தவறி சட்டப் புறம்பான சாதகங்களை கர்நாடகத்திற்கு செய்கிறதா ? என்ற ஐயம் தமிழ் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது .
நான்கு வாரங்களுக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று 20.09.2016 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் கர்நாடக,தமிழக முதலமைச்சர்கள் இருவரையும் நடுவண் அரசு அழைத்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கி இருப்பதன் மர்மம் என்ன?.
உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் மூலம் தங்களது அட்டூழியங்களுக்கும் ,வன்முறை வெறியாட்டங்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் ,மத்திய அரசும் இருப்பது போலவே உச்ச நீதி மன்றமும் ஆதரவாக இருக்கிறது என்பதை கர்நாடக விவசாயிகளும்,இனவெறியர்களும் புரிந்து கொண்டார்கள் .எனவே இப்பொழுதே அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உரிமையுடன் கலவரங்களில் இறங்கி விட்டார்கள் .
இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் நீதிகளும்,பாதுகாப்புகளும் தமிழ்நாட்டிற்கு இல்லையென்பதை ஏற்கனவே நடுவண் அரசு தனது நடுநிலை தவறிய செயல்கள் மூலம் தெரிவித்து வருகிறது.இப்பொழுது உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசைப்போலத்தான் செயல்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
நீதியை முறியடிக்க போராடுபவர்களுக்கு நீதி வளைந்து கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.இப்பொழுது நீதியை நிமிர்த்தவும் ,தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்கவும் ,நடப்பு சம்பா சாகுபடியை காப்பாற்றவும் ,இருபது மாவட்டங்களுக்கான குடிநீரை உறுதிப்படுத்தவும் தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசு நிறுவனங்களை செயல்பட விடாமல் முடக்குவது உட்பட பல வடிவங்களில் வீதியில் இறங்கிப் போராடுவது ஒன்றே வழியாகும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT