உடனடிச்செய்திகள்

Thursday, May 31, 2012

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” என இந்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை..! பதிவேற்றம்: மே 30 .2012

Wednesday, May 30, 2012

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய, தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

"தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய,

தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

 

"தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைய, தமிழக பெட்ரோலியத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும்" என தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

 

பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்திய இந்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகத் தலைநகர் சென்னையிலும், பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

தஞ்சை ஜூப்பிடர் திரையரங்கம் அருகில், நேற்று(29.05.2012) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், "இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் இயங்குவதாக இந்தியப் பிரதமரும், நிதியமைச்சரும் சொல்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சொல்வது போல் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் இந்திய ஆட்சியாளர்களே! பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை உயர்ந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும்போது, பெரு முதலாளிகளான ரிலையன்சு மற்றும் எஸ்ஸார் குழுமங்கள் மும்பை ஆழ்கடலிலும், விசாகப்பட்டினம் கடலிலும், கல்கத்தா கடலிலும் எடுக்கும் பெட்ரோலியம் முழுவதையும் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் விற்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்?

 

குசராத்தி சேட்டு நிறுவனங்களான ரிலையன்சும், எஸ்ஸாரும் ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கும் இலஞ்சம் தான் இதற்குக் காரணமா? இனியும் அந்நிறுவனங்கள், பெட்ரோலியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து அதை இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு திருப்பிவிட வேண்டும்.

 

ஓபெக் நாடுகள் நிர்ணயித்துள்ள விலையைவிட குறைவான விலையில், தரமான பெட்ரோலியத்தை ஈரான் நாடு வழங்கி வந்தது. அமெரிக்க வல்லரசின் நெருக்குதல்களுக்கு அடிபணிந்து ஈரான் நாட்டிலிருது இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்தை இந்திய அரசு சரிபாதியாக குறைத்துவிட்டது. இப்படிப்பட்ட இந்திய அரசின் கொள்கைகள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமே தவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது உண்மை காரணமல்ல.

 

ஈரானிலிருந்து இந்தியாவுக்கு தரை வழியாக குழாய்கள் மூலம் சமையல் எரிவளி மலிவான விலையில் கிடைக்க, ஒப்பந்தம் போடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. அதையும் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மன்மோகன் அரசு நிறுத்திவிட்டது. இந்தியாவின் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அமெரிக்க வல்லரசின் முகவராக செயல்படுவதால் தான் சமையல் எரிவாயு, எரிவளிக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் இருக்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில், தமிழக மக்களின் தேவையில் 80 விழுக்காட்டை நிறைவு செய்யும் அளவிற்கு குத்தாலம், நரிமணம் போன்ற இடங்களில் ஏராளமான சமையல் எரிவளி கிடைக்கிறது. இந்த நிலையில், தமிழக மக்கள் எரிவளி உருலைகளுக்கு எதற்காக அதிக விலை கொடுக்க வேண்டும்? இனிமேல் ஓராண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 4 எரிவளி உருலை மட்டுமே மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், அதற்கு மேல் வாங்கினால் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏராளமாக எரிவளியை உற்பத்திச் செய்யும் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மீது செயற்கையாக உயர்த்தப்பட்ட அதிக விலையை ஏன் சுமக்க வேண்டும்?

 

தமிழ்நாட்டில் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்களம், புவனகிரி, கமலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 28 எண்ணெய் கிணறுகளில் ஒரு மாதத்திற்கு 40,000 கிலோ லிட்டர் பெட்ரோலும், 1,20,000 கிலோ லிட்டர் டீசலும் கிடைக்கிறது. இது தமிழகத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இந்த பெட்ரோல், டீசலும், வெளிநாட்டில் வாங்கப்படும் எண்ணெய்க்குரிய அதே விலையில் கணக்கிடப்பட்டு, விலை உயர்த்தப்படுகிறது. இந்த மோசடி விலையை தமிழக மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? அதனால் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவளி முழுவதையும் அந்த உற்பத்தி நிறுவனங்களோடு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

 

தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள், பொத்தாம் பொதுவில் விலை உயர்வைக் கண்டித்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பெட்ரோலியம் முழுவதையும், தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த வேண்டும். நடுவண் அரசின் அதிகாரக் குவியலை பொத்தாம் பொதுவில் எதிர்க்காமல், கோட்பாட்டு வகையில் கோரிக்கைகளை வைத்து எதிர்க்க வேண்டும். கடுமையான மின்வெட்டு நிலவும்போது, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் கேட்காமல் பொத்தாம் பொதுவில் மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் கேட்கிறார் செயல்லிதா. தமிழக மக்களுக்கு தங்கள் மண்ணில் கிடைக்கும் பெட்ரோலியமும், தங்கள் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரமும் தங்களுக்கே கிடைக்க வேண்ட்டும் என்ற உணர்ச்சியை ஊட்டி மக்களை வீதிக்கு அழைத்தால் தான் இந்திய அரசு பணியும். தமிழகத்திற்கு உரியதைக் கொடுக்கும். இத்திசையில் செயலலிதா செயல்பட வேண்டும்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி தில்லி ஆட்சியில் பங்கு வகித்துக் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதாக சொல்வது, அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவத மக்களை ஏமாற்றும் நாடகமாகும். கூட்டணி அமைச்சரவையில் இருக்கின்ற தி.மு.க. அங்கேயே இந்த விலை உயர்வை தடுக்கப் போராடியிருக்க வேண்டும்.

 

தமிழ்த் தேசியம் என்ற சித்தாந்தம் சிக்கல்களை சொல்லி வெறும் விமர்சனம் மட்டும் செய்யாது. சிக்கல்களுக்கான தீர்வுகளையும் அவற்றிற்குரிய மாற்றுத் திட்டங்களையும் முன் வைக்கிறது. அந்த அடிப்படையில் தான் ரிலையன்சு, எஸ்ஸ்ர் குழுமங்களின் பெட்ரோலிய ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது. இக்கோரிக்கைகளை தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும், தமிழ் மக்களும் முன் வைக்க வேண்டும். இந்த அடிப்படையில் மக்கள் எழுச்சியை உண்டாக்கினால் இந்த சிக்கல்களுக்கத் தீர்வு கிடைக்கும்"  என பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

 

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 29.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். த.தே.பொ.க. முன்னணித் தோழர்கள் ம.கோ.தேவராசன், முருகவேள், சுகன்ராஜ், த.இ.மு. பொறுப்பாளர்கள் தோழர் பிரபாகரன், தே.அரவிந்தன் உள்ளிட்ட திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதி கிராப்ட் அருகில்) நேற்று(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, பாவலர் முவ.பரணர், தோழர் நிலவழகன்(த.ஓ.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி நவின்றார்.


ஓசூர்
ஓசூர் இராம் நகரில் நேற்று(29.5.2012) காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஆர்ப்பாட்டதிற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

பாபநாசம்
பாபநாசம் மேலவிதியில் நேற்று(29.5.2012) மாலை 5 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணி தேவராயன்பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் இரா.பிரபாகரன் தலைமையேற்றார். த.இ.மு. துணைச் செயலாளர் தோழர் ரெ.புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. குடந்தை நகரச் செயலாளர் தோழர் செந்தமிழன், தோழர் வளவன்(த.தே.பொ.க.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயளாலர் வழக்கறிஞர் மா.சிவராசு உரையாற்றினார்.

 

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் இன்று(30.05.2012) மாலை 5.30 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் ஈஸ்வரன் தலைமையேற்றார். த.இ.மு. ஓசூர் நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணியன், த.தே.பொ.க. ஓசூர் நகரச் செயலாளர் தோழர் இரமேசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

சென்னை
சென்னையில், இன்று(30.05.2012) மாலை 5.30 மணியளவில் நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றுப் பேசினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், எழுத்தாளர் பொன்னுசாமி உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை-17Monday, May 28, 2012

தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்கு! - நாளை தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்கு!

நாளை தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

 

தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க, தமிழகத்தின் பெட்ரோலிய வளங்களை, தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

இது குறித்து, அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "இனி பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் உயர்த்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்று எண்ணும் அளவிற்கு, இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக இப்போது பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இந்திய அரசு.

 

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.7.54 என்பது அண்மைக் காலவரலாறு காணத செங்குத்தான விலைப்பாய்ச்சலாகும். இந்த விலை உயர்விலும் இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு தமிழ்நாட்டிற்கு கூடுதல் விலைஉயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தில்லிக்கு பெட்ரோல் விலையர்வு லிட்டருக்கு ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டிற்கு ரூ.7.98!

 

அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது! இந்த பெட்ரோல் விலைஉயர்வு பொதுவாக தவிர்த்திருக்கக்கூடியது என்பது ஒரு புறமிருக்க இவ்வளவு கடும் விலை உயர்வை தமிழ்நாடு சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கட்டுண்டுக் கிடப்பதால் எண்ணெய் வளம் மிக்கத் தமிழ்நாடு இவ்விலை உயர்வை சுமக்க வேண்டியுள்ளது.

 

தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவாயு கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோ லிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.

 

அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்சம் இலாபம் உட்பட அதன் அடிப்படை விலை அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.

 

மீதமுள்ள மூன்றில் இரண்டுபங்கு தேவைக்கு தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேச சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

 

இவ்வாறு தமிழ்நாட்டு பெட்ரோலிய எண்ணெய் தமிழகத்திற்கே சொந்தம் என்ற உரிமையும், அயல்நாட்டுச் சந்தையில் தமிழகமே பெட்ரோலியத்தை நேரடியாக இறக்குமதி செய்துகொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலை சுமார் 50 ரூபாய் விலையில் தாராளமாக வழங்கலாம். டீசலையும் இது போல் குறைந்த விலையில் வழங்கலாம்.

 

தமிழ்நாட்டின் எரிவளித் (எரிவாயு) தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும்" என தெரிவித்தார்.

 

மேலும், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும் தமிழக பெட்ரோலிய வளங்களை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வரும் 29.5.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

 

அதன்படி நாளை(29.05.2012) மற்றும் நாளை மறுநாள்(30.05.2012) தமிழகமெங்கும் த.தே.பொ.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர். தஞ்சையில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன உரையாற்றுகிறார்.

 

தஞ்சை

தஞ்சை நகரம் ஜீப்பிட்டர் திரையரங்கம் எதிரில் நாளை(29.5.2012) மாலை 5.30 மணியளவில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்கிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றுகிறார்.

 

சிதம்பரம்

சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 29.5.2012அன்று  மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டதிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகரை கண்டன உரையாற்றுகிறார்.

 

திருச்சி

திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதி கிராப்ட் அருகில்) நாளை(29.5.2012) மாலை 5  மணியளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி கண்டன உரையாற்றுகிறார்.

 

பாபநாசம்

பாபநாசம் மேலவிதியில் நாளை(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் இரா.பிரபாகரன் தலைமையேற்கிறார். த.இ.மு. மாவட்டச் செயளாலர் தோழர் மா.செ.சிவராசு கண்டன உரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் நாளை(29.5.2012) மாலை 5 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்குஆர்ப்பாட்டதிற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றுகிறார்.

 

சென்னை

சென்னையில், 30.05.2012 அன்று மாலை 5 மணியளவில் சைதை பனகல் மாளிகை முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு வலுசேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

 

- தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை


Saturday, May 26, 2012

பெட்ரோல் டீசல் விலை குறைய தமிழக எண்ணெய் வளத்தை தமிழ்நாட்டிற்கு சொந்தமாக்குவோம்!

பெட்ரோல்,டீசல் விலை குறைய

தமிழக எண்ணெய் வளத்தை தமிழ்நாட்டிற்கே சொந்தமாக்குவோம்

மே 29 அன்று தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி ஆர்ப்பாட்டம்

பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிவிப்பு

 

இனி பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் உயர்த்தப்பட்டாலும் வியப்பதற் கில்லை. இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக இப்போது பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இந்திய அரசு.

 

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.7.54 என்பது அண்மைக் காலவரலாறு காணத செங்குத்தான விலைப்பாய்ச்சலாகும். இந்த விலை உயர்விலும் இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு தமிழ்நாட்டிற்கு கூடுதல் விலைஉயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தில்லிக்கு பெட்ரோல் விலையர்வு லிட்டருக்கு ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டிற்கு ரூ.7.98!

 

அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது!

 

இந்த பெட்ரோல் விலைஉயர்வு பொதுவாக தவிர்த்திருக்கக்கூடியது என்பது ஒரு புறமிருக்க இவ்வளவு கடும் விலை உயர்வை தமிழ்நாடு சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கட்டுண்டுக் கிடப்பதால்  எண்ணெய் வளம் மிக்கத் தமிழ்நாடு இவ்விலை உயர்வை சுமக்க வேண்டியுள்ளது.

 

தேவையற்ற இந்த விலை உயர்வை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

பெட்ரோல் விலை உயர்வுக்கு இரண்டு காரணங்களை இந்திய அரசு கூறுகிறது. (1) இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர் இழப்பைச் சந்திக்கின்றன. குறிப்பாக கடந்த 2012 மார்ச்சு 31 கணக்கின்படி ஒரு  லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6.28 இழப்பை இந்நிறுவனங்கள் சுமக்கின்றன. (2) அமெரிக்க நாணயமான டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெருமளவு சரிந்துவிட்டதால் இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை ரூபாய் மதிப்பில் உயர்ந்துவிட்டது.

 

இந்த இரண்டு காரணங்களுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கடும் விலை உயர்வை நியாயப்படுத்திவிடமுடியாது.

 

முதலாவதாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன என்பது அப்பட்டமானப் பொய் ஆகும். மோசடியான கணக்கீட்டுமுறையினால் அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதாக பொய்ச்சித்திரம் தீட்டப்படுகிறது. இதனை இந்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டன.

 

 இந்தியாவிற்குள் உற்பத்தியாகும் பெட்ரோலியம் உள்ளிட்டு அனைத்துமே வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாவதாகக் கணக்கில் காட்டப்படுகின்றன. அமெரிக்க டாலர் மதிப்பில் அனைத்து எண்ணெயும் இறக்குமதியானதாக கற்பனையாகக் காட்டப் படுகிறது. அதற்கு கப்பலில் கொண்டுவந்ததற்கான கட்டணம் என்று இன்னொரு கற்பனைக் கணக்கு காட்டப்படுகிறது. கடல் வழியில் கப்பலில் கொண்டு வரும்போது கசிந்துவிட்டதாக ஒரு கணக்கு இதும் கற்பனைதான். பிறகு ஏற்றுவதற்கும் இறக்கு வதற்குமான செலவு என்ற இன்னொரு கற்பனைக் கணக்கு. இவற்றையெல்லாம் கூட்டிச்சேர்த்துதான் கச்சா எண்ணெயின் அடிப்படை விலை தீர்மானிக்கப்படுகிறது.

 

இந்த கணக்கீட்டின் வழியிலேயே கூட எண்ணெய் நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் கிடைக்கிறது. ஆனால் இந்த இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாக பொய்யாகக் கணக்குக் காட்டப்படுகிறது. அரசு அமைத்த ஆய்வுக் குழுக்களே இதனை எடுத்துக்கூறிவிட்டன.

 

உண்மையில் ஆண்டுதோறும் இந்நிறுவனங்கள் அரசுக்கு கோடிகோடியாய் இலாப ஈவுத் தொகையை வழங்கிவருகின்றன.

 

கற்பனையான இறக்குமதியையும் அடிப்படையாகக் கொண்டு கச்சா எண்ணெயின் விலை தீர்மானிக்கப்படும்போது, அதில் ஏற்படும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்ற காரணியும் அரசின் கற்பனைக்கு மெருகூட்டப் பயன்படுகிறதேயன்றி உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதில்லை.

 

மேற்கண்டவாறு எண்ணெயின் அடிப்படை விலையைத் தீர்மானிப்பதில் மோசடியான கணக்குமுறை ஒருபுறம் செயல்படுகிறதென்றால் மறுபுறம் பெட்ரோல் டீசல் மீதான அரசின் வரிவிதிப்பு விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

 

பெட்ரோல்விலை இப்போதைய உயர்வுக்குப் பிறகு லிட்டருக்கு ரூ.77.53 என்றால் இதில் ரூ.45.75 பெட்ரோல்மீது இந்திய, தமிழக அரசுகள் விதிக்கும் வரித் தொகை யாகும்.பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்க வரி, உற்பத்திவரி, மேல்வரி, கல்விவரி ஆகியவை மொத்தம் 32 விழுக்காடு மாநில அரசின் விற்பனை வரி (இப்போது அது வாட்வரி) 27 விழுக்காடு.

 

பெட்ரோல்விலை உயர்வு என்பது ஒருவகையில் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாய்க் கிடைக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரியைப் பாதி குறைத்தால் கூட பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்கமுடியும்.

 

இது ஒட்டுமொத்த இந்திய நிலை. இதைக் கூட தமிழகம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவாயு கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.

 

அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தி லேயே கிடைக்கிறது. குறைந்த பட்சம் இலாபம் உட்பட அதன் அடிப்படை விலை அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.

 

மீதமுள்ள மூன்றில் இரண்டுபங்கு தேவைக்கு தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேச சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

 

இவ்வாறு தமிழ்நாட்டு பெட்ரோலிய எண்ணெய் தமிழகத்திற்கே சொந்தம் என்ற உரிமையும், அயல்நாட்டுச் சந்தையில் தமிழகமே பெட்ரோலியத்தை நேரடியாக இறக்குமதி செய்துகொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலை சுமார் 50 ரூபாய் விலையில் தாராளமாக வழங்கலாம். டீசலையும் இது போல் குறைந்த விலையில் வழங்கலாம்.

 

தமிழ்நாட்டின் எரிவளித் (எரிவாயு) தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும்.

 

எனவே தமிழ்நாட்டின் எண்ணெய் வளம் முழுவதும் தமிழகத்திற்கே  சொந்தமாக வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முதலமைச்சர் செயலலிதாவின் வெறும் கண்டன அறிக்கைகளால் பயன் ஏதும் கிடைக்காது.

 

இம்மண்ணிற்கான மாற்று வழிகளைச் சொல்லாமல் " பெட்ரோல் விலையைக் குறை" என்ற எதிர்க்கட்சிகளின் வெற்று முழக்கத்தாலும் நிலையான பலன் ஏதும் விளையாது.

 

தமிழக எண்ணெய் வளத்தை தமிழ்நாட்டிற்கே சொந்தமாக்கு!

பெட்ரோல் டீசல் மீதான வரிகளை இந்திய அரசே திரும்பப் பெறு!!

என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அதுதான் பெட்ரோல் டீசல் விலை குறைய உரிய வழியாகும்.

 

பெட்ரோல்விலை உயர்வைக் கண்டித்தும் இவ்விரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரும் 29.5.2012 செவ்வாய் அன்று சென்னையிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது.

 

இந்திய அரசு உடனடியாக இந்த பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

                                                                                                                       

 

இடம்: சென்னை

 
                                                                                                       கி.வெங்கட்ராமன்

பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Tuesday, May 22, 2012

தமிழீழ மக்களுக்கு நினைவேந்தல நிகழ்வில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

சென்னை மெரினா கடற்கரையில், தமிழீழ மக்களுக்கு நினைவேந்தல் செய்யும் விதமாக மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

Sunday, May 20, 2012

“தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!” - மெரினாவில் மக்கள் முழக்கம்!

"தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!" - மெரினாவில் மக்கள் முழக்கம்!


"மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!" சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.

 

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.

 

மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர் திரு. இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


போர் குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம்  நடத்தப்பட்டது. திரு. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.


"இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!", "இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்" உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 


“தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!” - பெ.மணியரசன் பேச்சு!

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பெ.மணியரசன் பேச்சு

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வியே" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது". சிங்கள – இந்தியப் பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை. முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


தஞ்சை
தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நினைவேந்தலுக்கு த.தே.பொ.க. நகர துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். 


நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் "முள்ளிவாய்க்கால் குருதி வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் இனச் சொந்தங்ளுக்கும், விடுதலைப்புலி வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேர்ந்த பின்னடைவும், தோல்வியும் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட தோல்வியாகும். இக்கருத்தை இன உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நான் சொல்லவில்லை. 'ஆயுதமேந்தி முப்படைகள் கொண்டு போராடிய ஈழத்தமிழர்களையே தோற்கடித்துவிட்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மாத்திரம்?' என்ற உணர்வு இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும், நமக்குப் பகைவர்களாகிப் போன அண்டை இனங்களான கன்னடர்கள், மலையாளிகள் போன்றோருக்கும் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, காவிரி உரிமையை மீட்க தஞ்சை மாவட்டத்திலும், சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடும் போராட்டங்கள் நடத்தினோம். அதில், இந்திய அரசின் துணையோடு கன்னடர்கள் நம்மை தோல்வியடையச் செய்தார்கள். அது மட்டுமின்றி, 1991 நவம்பர் - திசம்பர் மாதங்களில் 'காவிரிக் கலவரம்' என்ற பெயரில், கர்நாடகத் தமிழர்களைத் தாக்கி கன்னட வெறியர்கள் தமிழர்கள் பலரைக் கொன்றார்கள். வீடுகளை சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தார்கள். நாம் பதிலடி கொடுக்கவில்லை. அகதி முகாம்கள் தாம் நடத்தினோம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, தமிழர்களை விட மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறித்தார்கள். தமிழர்களைத் தாக்கினார்கள். அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன தமிழர்களையும் தாக்கினார்கள். இந்த துணிச்ச்சல் மலையாளிகளுக்கு எங்கிருந்து வந்தது? காவிரி பிரச்சினையில் நம்மைவிட சிறுபான்மையாக உள்ள கன்னடர்களிடம் நாம் தோற்றதாலும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துணை மலையாளிகளுக்கு இருப்பதாலும் தான் இந்த துணிச்சல் அவர்களுக்கு வந்தது.

எனவே, முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதை உணர்ந்து, சாதியாக பிளவு படாமல் ஒன்றுதிரண்டு வருங்காலத்தில் மூர்க்கமாக உரிமை மீட்கப் போராட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்று நாம் உணர வேண்டும். முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளையில், இந்தப் படிப்பினையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

"தமிழர் சர்வதேசியம் வேண்டும்" – திருத்துறைப்பூண்டி தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு
முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவு கூறும்ட வகையில், திருத்துறைப்பூண்டியில் 18.05.2012 அன்று நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. நிகழ்வுக்கு, கூட்டமைப்பின் செயலாளர் தோழர் எஸ்.அரவிந்தன் தலைமையேற்றார். தோழர் எஸ்.இராமச்சந்திரன்(வங்கி ஊழியர் சங்கம்) வரவேற்புரையாற்றினார்.

நிறைவில், சிறப்புரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "புவிசார் அரசியல் ஆதிக்கத் தேவை மற்றும் இந்திய முதலாளிகளின் சந்தைத் தேவை ஆகிய காரணங்களுக்காகத் தான் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகித்த்தாக சொல்கிறார்கள். ஆனால், இவற்றை விட இந்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான ஆரிய இனவெறிப் பகை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழை பகையாக்க் கருதும் ஆரிய இனத்தின் இன்றைய அரச வடிவம் தான் இந்தியா. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த தந்தை செல்வும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், இந்தியாவை எதிரியாக ஓரிடத்திலும் சொன்னதில்லை. ஆனால், இந்தியாவோ தமிழர்களைத் தான் முதன்மைப் பகையாகக் கருதுகிறது.

1947 வெள்ளையர்கள் ஆட்சி முடிவுக்குப் பிறகு தான் நாம், ஆரிய இந்தியாவில் பலவற்றையும் இழந்திருக்கிறோம். யாரெல்லாம் தமிழர்களுக்கு எதிரியோ இந்தியா அவர்களுக்கு நண்பன். அதனால் தான், தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களத்தோடு நட்பு கொள்கிறது இந்தியா. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தொடர்ந்து தமிழகம் அண்டை தேசிய இனங்களால் வஞ்சிக்கப்படும் போது, அத்தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நட்டிற்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. எனவே, இந்தியா ஆரியத்தின் வடிவம் தான்.

'பாரத்' என்று அழைக்கப்படுவதும், 'பத்மபுஷன்', 'பத்மசிறீ', 'பத்மினி', 'ஆரியபட்டா' என சமற்கிருதப் பெயர்களில் அரசு நடவடிக்கைகள் தொடர்வதும், சிங்கத்தை அரசுச் சின்னமாகக் கொண்டிருப்பதும் இந்தியா ஆரியத்தின் வடிவமாகத் தொடர்வதையே காட்டுகின்றது. ஆரியத்தின் பழமைதான், இந்தியாவின் பழமையாக குறிக்கப் படுகின்றது. அதனால் தான், இன்று ஈழத்தமிழர்களாக இருந்தாலும்,  அவர்களுக்கு உதவதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றாலும் அனைவரையும் இந்தியா எதிரியாக கருதுகின்றது.

பாலத்தீன தேசத்திற்கு எப்படி இஸ்ரேல் உடனடிப்பகையாக விளங்குகிறதோ, அதைப் போலவே ஈழத்தமிழர்களுக்கு சிங்களம் உடனடிப்பகை. அதேபோல், பாலத்தீன தேசத்திற்கு அமெரிக்கா எப்படி சர்வதேசப் பகையோ, அதைப்போல ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தான் சர்வதேசப் பகை. இந்தத் தெளிவோடு ஈழத்தமிழர்கள் தம் அரசியல் முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்கள் துணை நிற்பது போல், தமிழ்நாட்டு உரிமைக்கான போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்களும் ஆதரவளிக்க வேண்டும். தமிழீழ விடுதலை – தமிழ்நாட்டு விடுதலை ஆகிய இரு வேலைத்திட்டங்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்த தமிழர் சர்வதேசியத்தை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.


தமிழிய ஆய்வாளர் முனைர் த.செயராமன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் கே.இராசா, தொ.ச. கூட்டமைப்புத் தலைவர் தோழர் டி.சிங்காரவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன், ஏ.ஐ.டி.யு.சி. நகரப் பொறுப்பாளர் தோழர் எம்.முருகதாஸ், தோழர் டி.தெட்சிணாமூர்த்தி(என்.எப்.டி.இ.), தோழர் வி.கே.செல்வராசு (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), தோழர் என்.குணசேகரன்(த.அ.போ.கழகம் - ஏ.ஐ.டி.யு.சி.) ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தொழிற்சங்க கூட்டமைப்புப் பொருளாளர் தோழர் பி.அன்பழகன் நன்றி நவின்றார்.சென்னை


சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 19.5.2012 அன்று மாலை 5 மணியளவில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். தோழர் தமிழ்க்கனல் (தாம்பரம் கிளைச் செயலாளர்) முன்னிலை வகித்தார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கருத்துரை வழங்கினார். வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி, த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை


கோவை செட்டிவீதி அசோகன் பகுதியில் நேற்று (17.5.2012) காலை 11 மணியளவில், தமிழ்ச் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் பி.சுரேசு தலைமையேற்றார். த.இ.மு கிளைச் செயலாளர் கு.இராசேசுகுமார். த.தே.பொ.க தோழர்கள் இரா.கண்ணன், ம.தலவாய்சாமி, சு.மாரியப்பன் உள்ளிட்ட திரளான தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான தோழர்களும், உணர்வாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க.  பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி ரவுண்டானா பகுதியில், 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தோழர் குமார்(தமிழர் தேசிய இயக்கம்) தலைமையேற்றார். தோழர் கோபால்(வி.வி.தே.மு.), தோழர் சந்திரன்(ம.தி.மு.க.), தோழர் பெ.ஈ.ஸ்வரன்(த.இ.மு.) ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

 செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி - சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 18.5.2012 அன்று காலை 9 மணியளவில் த.தே.பொ.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர்), தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு உறுப்பினர், த.தே.பொ.க.)  ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதிகிராப்ட் அருகில்) 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில், த.தே.பொ.க. சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவலர் மு.வ.பரணர் தலைமையேற்றார்.  த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் முன்னிலை வகித்தார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன்(த.தே.பொ.க.) நன்றி நவின்றார்.

குடந்தை

குடந்தை மேலக்காவேரி அருகில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற வீரவணக்க தெருமுனைக் கூட்டத்தையொட்டி, த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு த.தே.பொ.க. நகரச்செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.
  
சாமிமலை
சாமிமலை கடை வீதியில் 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில் த.தே.பொ.க. கொடியேற்றப்பட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ம.திருவரசன் (எ)முரளி (த.தே.பொ.க.) நிகழ்வுக்குத் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, தோழர் ச.பேகன் (குடந்தை தமிழ்க் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவில், தோழர்.க.தீந்தமிழன்(எ)தினோசு நன்றி கூறினார்.

மதுரை
மதுரையில் தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், தலைமை அஞ்சல் அலுவலகம் (மீனாட்சி பசார்)முன், 19.05.12 அன்று மாலை  5 மணியளவில் "முள்ளிவாய்க்கால் முடிவல்ல''  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இராசு அறிமுகவுரையாற்றினார். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, த.தே.வி.இ. மாவட்டச் செயலாளர் தோழர் கதிர்நிலவன், மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் திரு. க.பரந்தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வினை, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தோழர் சு.தளபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.தூத்துக்குடி
தூத்துக்குடி க்க்கன் பூங்கா எதிரிலுள்ள மக்கள அரங்கத்தில், 17.05.2012 அன்று மாலை 7 மணயளவில், தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.ஓ.வி.இ. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் தலைமையேற்றார். திரு சவுந்திரபாண்டியனார்(நாம் தமிழர் இயக்கம்) முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராசு, தமிழர் தேசிய இயக்க மாவட்டப் பொறுப்பாளர் தோழர் துரை.அரிமா, தோழர் மகாதேவன்(நாம் தமிழர் கட்சி), வெனி.இளங்குமரன் (உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
      


இடம்:சென்னை

தலைமைச் செயலகம்,
 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT