உடனடிச்செய்திகள்

Thursday, December 26, 2019

“மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை!



“மொழித் திணிப்பை முறியடிக்க..”


“ஆனந்த விகடன்” வார ஏட்டில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

“மொழித் திணிப்பை முறியடிக்க..” என்ற தலைப்பில், 1.1.2020 நாளிட்ட “ஆனந்த விகடன்” வார ஏட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது :

“தனித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் வைத்திருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார்.

எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்கிறது. “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்றே கூறுகிறது. இந்தியை “தேசிய மொழி” (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் “அலுவல் மொழி” என்று குறிப்பிடுகிறது.

1956இல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான “மொழிப் பாதுகாப்பு” என்பதை சிதைக்கும் வகையிலேயே 1965ஆம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைபிடித்து வரும் “இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்”, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார் மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தி மொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்து போனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்!

இந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!”.

இவ்வாறு ஐயா பெ. மணியரசன் எழுதியுள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, December 3, 2019

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!



மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை
அனுமதித்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!


கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் நடூரில் நேற்று (02.12.2019) கொட்டிய பெருமழையில் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்ததில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நான்கு வீடுகள் தகர்ந்து அதில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் – பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களும் கொடூரமாக உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மதில் சுவர் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என்கிறார்கள். இதைக் கட்டியவர் “சக்கரவர்த்தி துகில் மாளிகை” என்ற மிகப்பெரிய துணிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன். இவருடைய வீட்டுக்கு அருகில் உழைக்கும் மக்களான அருந்ததியர் குடும்பங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தன் குடும்பத்தார் பார்வையில் படக் கூடாது என்பதற்காக சிறைச்சாலை சுவரைப் போல், உயரமாக நீளமாக மதில் சுவரை எழுப்பியிருக்கிறார் சிவசுப்பிரமணியன்.
ஆனால், மாளிகை கட்டி வாழும் அந்தப் பெரும் பணக்காரர், மதில் சுவருக்கு மட்டும் அத்திவாரத்தை ஆழமாகப் போடாமல் உயரமாகக் கட்டியிருக்கிறார். பெருமழை தாங்காமல் மட்டுமின்றி, மழை நீர் வெளியேறும் நீரோட்டப் போக்கினை தடுத்து அந்த மதில் சுவர் கட்டப்பட்டதால், தேங்கிய நீரினாலும் பெருமழையைத் தாங்காததாலும் அந்த மதில் சுவர் சரிந்து நொறுங்கி பக்கத்தில் உள்ள உழைப்பாளி மக்களின் ஓட்டு வீடுகளில் விழுந்து 17 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.
இந்த மதில் சுவர் நடைமுறையில் ஒரு தீண்டாமைச் சுவர்! வீட்டைச் சுற்றி இவ்வளவு உயரத்திற்கு யாரும் மதில் சுவர் எழுப்புவதில்லை. இந்தத் தீண்டாமைச் சுவர் என்பது, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். தீண்டாமைச் சுவர் என்று குற்றம்சாட்டியும், மழை நீரின் ஓட்டத்தைத் தடுப்பதால் தங்கள் குடியிருப்புகள் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக மாறி விடுகிறது என்றும் அதிகாரிகளுக்கு முறையிட்டு அந்த சுவரை அப்புறப்படுத்த அம்மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் சட்டை செய்யவில்லை.
பெரும் பணக்காரர் – சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர், எனவே அவரது ஆதிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அதிகாரிகள் கருதினார்களா? அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தார்களா என்ற வினாக்கள் இயல்பானவை.
தமிழ்நாட்டில் அரசியல் சார்பு, சமூக ஆதிக்கவாதிகள் சார்பு அதிகாரம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு நடூர் உயிர்ப்பலியும் ஒரு சான்றாகும்!
பல தடவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அகற்றப்படாத மதில் சுவரால் தங்களுடைய உறவினர்கள் 17 பேர் பலியாகிவிட்ட ஆத்திரத்தில், “மதில் சுவர் மாமன்னர் சிவசுப்பிரமணியனை” கைது செய் என்று வலியுறுத்தி சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமரசம் பேசி, கலையச் செய்திருக்கலாம். அதைவிடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்கும் உத்தியை ஆட்சியாளர்கள் கடைபிடித்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்த உயிரிழப்புகளை அறிந்து அங்கு சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி, சனநாயக வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களைத் தாக்கி, அவரைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த கொடுங்கோன்மை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மேற்கண்ட தீண்டாமைச் சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அச்சுவரை அகற்றிட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அகற்றாமல் போனதற்கு யார் யார் காரணம் என்று அறிந்து, அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் உடனடியாக சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மாவட்ட வருவாய்த் துறையினர் தலையிட்டு, சமரசம் பேசினார்களா, அப்படி பேசவில்லையென்றால் கடமை தவறிய அல்லது அவர்களை கடமை தவறச் செய்த பிரமுகர்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்! குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில் பெ. மணியரசன் செவ்வி!



ஈழத்தமிழரை ஏமாற்றியதே

13ஆவது திருத்தம்!


“குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில்
ஐயா பெ. மணியரசன் செவ்வி!



“ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்!” என “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

“மோடியின் அரவணைப்பில் கோத்தபய!” என்ற தலைப்பில் 06.12.2019 நாளிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் வந்துள்ள செவ்வியில் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளதாவது :

"கடந்த 27.7.1987 அன்று இந்தியத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியும், இலங்கை அதிபர் செயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, அரசியலமைப்புச் சட்டம் 13ஆவது திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்று சொன்னது இந்தியா. ஆனால், சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன், “இது (இந்திய இலங்கை ஒப்பந்தம்) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல, சிங்கள இனவாத பூதம் இதை விழுங்கிவிடும். தமிழீழ தனி அரசே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு” என்றார். அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு இல்லை. மாகாண அரசுக்குக் காவல்துறை அதிகாரம் கிடையாது. காவலர்கள் அனைவரும் சிங்களக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குவார்கள். நிலம் வாங்குவதும், விற்பதும் மாகாண அரசின் கட்டுப்பாட்டில் வராது.

இலங்கையில் ஒற்றையாட்சிதான், கூட்டாட்சி கிடையாது. திரையரங்கு வரி, வீட்டு வரி வசூலிக்கலாம். அதைச் செலவு செய்ய சிங்கள ஆளுநர் ஒப்புதல் அவசியம். மத்திய அரசு எப்போதாவது மாகாண அரசுகளுக்கு நிதி ஒதுக்கும். அது ஒன்றுதான் நிதி ஆதாரம். எனவே, 13ஆவது சட்டத் திருத்தம் என்பது ஏமாற்று வேலை. ஆனால், அதைக்கூட ஆதரிப்பதாக வெளிப்படையாக கோத்தபய சொல்லவில்லை என்பது வேதனையான விஷயம். அவர் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியம்?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, December 2, 2019

வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்! திசம்பர் 20 அன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன் மனிதச் சுவர் போராட்டம்! பெ. மணியரசன் அறிவிப்பு!



வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!

திசம்பர் 20 அன்று சென்னை

நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்
மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!



தமிழ்நாட்டில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குவிகிறார்கள். உயர் தொழில்நுட்ப வேலையிலிருந்து, உடலுழைப்பு வரை எல்லா வேலைகளையும் அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிலே தங்கிக் குடும்பம் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, எண்ணெய் எரிவளித் துறை, பி.எச்.இ.எல், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையங்கள், படைக்கலத் தொழிற்சாலைகள், வருமான வரி – சரக்கு சேவை (ஜி.எஸ்.டி.) வரி, சுங்க வரி அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சல் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 90 விழுக்காடு வேலை வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வேலைகளுக்கும் (TNPSC) இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கொடிய நிலையில் உள்ளது. கல்வித் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் மிகமிகக் குறைந்த கூலிக்கு வேலை பார்ப்போர் மிக அதிகம்! கல்வித்தகுதி பெற்று, வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர்!

அண்மையில் கோவை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., போன்ற பட்டம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போட்டார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.

தமிழ்நாட்டு வேலைகளை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் பறித்துக் கொண்டால், தமிழர்களின் கதி என்ன? வெளி மாநிலத்தவர் மக்கள் தொகை தமிழ்நாட்டில் வெள்ளம் போல் உயர்ந்து கொண்டே போனால், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு மிஞ்சுமா என்ற கேள்விகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டெரிகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சிக்கலை முன்னுணர்ந்து 2005இல் ஈரோட்டில் “வெளியாரை வெளியேற்று” என்ற தலைப்பில் மாநாடு போட்டது. வெளியார் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அவர்களை வெளியேற்றுவதற்குரிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் கூறி, அம்மாநாட்டில் புத்தகமும் வெளியிட்டது.

தொடர்ந்து, சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, குடந்தை, ஓசூர் எனப் பல இடங்களில் வெளியாரை வெளியேற்றக் கோரியும், மண்ணின் மக்களுக்கு மாநில அரசில் 100 விழுக்காடும், நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடும், தனியார் துறையில் 90 விழுக்காடும் வேலை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.

இவ்வாண்டின் (2019) தொடக்கத்தில் தொடர்வண்டித்துறையில் சென்னை பெரம்பூர், திருச்சி பொன்மலை, கோவை போன்ற இடங்களில் பழகுநர் பணிக்கும், நிரந்தரப் பணிக்கும் வேலைக்கு ஆள் சேர்த்தபோது 90 விழுக்காடு இடங்கள் வடவர்க்கும், வெளி மாநிலத்தவர்க்கும் தரப்பட்டது. அந்த அநீதியைக் கண்டித்தும், 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வலியுறுத்தியும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கக் கோரியும் கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை வாயில் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மறியல் போராட்டம் நடத்தியது. ஏராளமான இளைஞர்கள், அம்மறியலில் கலந்து கொண்டு கைதானார்கள்.

நமது போராட்டம் வீண்போகவில்லை! போராட்டம் நடைபெற்ற சில வாரங்கள் கழித்து 2019 மே 20 அன்று புதிதாக 510 பேரை வேலைக்கு எடுப்பதற்கான அறிவிப்பை சென்னை ஐ.பி.எப். தொழிற்சாலை வெளியிட்டபோது, அதில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்போருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதன் அடுத்தகட்டமாக, இப்போது சென்னை, திருச்சி, கோவை தொடர்வண்டித்துறை தொழிற்சாலைகளில் பழகுநர் வேலைக்கு (Act Apprentice) தென்னகத் தொடர்வண்டித்துறை உள்ள தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமே விண்ணப் பிக்கலாம் என்று 26.11.2019 நாளிட்ட புதிய அறிவிப்பை தென்னகத் தொடர் வண்டித்துறை வெளியிடடுள்ளது. நமது பேராட்டத்திற்குப் பலன் உண்டு என்பதற்கு இந்த மாற்றம் ஒரு அளவுகோல்!

தென்னகத் தொடர்வண்டித்துறையிலும் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டிக் கோட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தொடர்வண்டித்துறையை வலியுறுத்துகிறோம்! ஒருபடி முன்னேற்றம் என்ற வகையில் இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

வெளி மாநிலத்தவர்களே
திரும்பிப் போங்கள் – மனிதச் சுவர் போராட்டம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு வேலைகளுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை, வந்த வழியே திரும்பிப் போங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. இப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்!

பெருந்திரளாகத் தமிழர்கள் இந்த மனிதச் சுவர் போராட்டத்தில் பங்கேற்று, தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் தாயக உரிமையையும் பாதுகாக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, November 23, 2019

மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு பெ. மணியரசன் கண்டனம்!


மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் கண்டனம்!


மராட்டியத்தில் சிவசேனையும் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து அமைச்சரவை அமைக்க இருந்த நிலையில், தேசியவாதக் காங்கிரசிலிருந்து அஜீத்பவாரை இழுத்து 22.11.2019 – 23.11.2019 நள்ளிரவில் அரசியல் சதித் திட்டத்தை அரங்கேற்றி – ஆளுநருக்குத் தெரிவித்து விடியற்காலை 7.30 மணிக்கு ஆளுநர் பா.ச.க.,வின் பட்னாவிசை முதலமைச்சராகவும், அஜீத்பவாரை துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கச் செய்த பா.ச.க.,வின் நள்ளிரவு மோசடி வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்த நள்ளிரவு மோசடிக்கு முழுப்பொறுப்பு தலைமை அமைச்சர் நரேந்திரமோடியே! நள்ளிரவு 12 மணிக்கு ஆளுநருக்குத் தெரிவித்து,12.30 மணிக்கு புது தில்லி புறப்பட இருந்தவரைத் தடுத்து விடியற் காலை 5.30 மணிக்கு பட்னாவிசையும் அஜீத்பவாரையும் சந்திக்க வைத்து ஆளுநர் காலை 7.30 மணிக்குப் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைக்க நடுவண் அரசே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வளவு நள்ளிரவு வேலைகளும் தலைமை அமைச்சர் ஏற்பாடில்லாமல் நடக்க முடியாது.

சட்டவிரோத அமைச்சரவை 7.30 மணிக்குப் பதவி ஏற்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 8.40 மணிக்கு மோடி டிவிட்டர் வழியாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். மோடியிடம் இட்லர் தோற்றுப்போனார்.

சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக நள்ளிரவு சதியில் உருவாக்கப்பட்ட அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது. கொடுமையிலும், கொடுமை.

நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் இனி சட்டத்தின் ஆட்சி நடக்குமா, அடுத்த மக்களவைத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. பா.ச.க. தலைமைக்கு அரசியல் ஒழுக்கமில்லை. சனநாயகத்தின் மீதும் அரசமைப்பச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

இப்படிபட்ட பா.ச.க.,வைத் தமிழ்நாட்டில் வளர்க்கலாமா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, November 19, 2019

“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி!


“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து
தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப்
பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!”


“பசுமை விகடன்” வார ஏட்டிற்கு
தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி!

"ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?” என்ற தலைப்பில் 25.11.2019 நாளிட்ட “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அளித்துள்ள செவ்வி :
‘‘தமிழக விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழிப்பதற்காகவும் மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு இந்தச் சூழ்ச்சியான சட்டத்தைக் கொண்டுவருகிறது.
`வேளாண் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், கால்நடைகள் வளர்ப்பவர்களும் அவை தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றில் ஈடுபடலாம்’ என இந்தச் சட்டம் சொல்கிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்வதுதான் இதன் சாராம்சம்.
அதேபோல, `கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனை செய்வதற்குப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு உத்தரவாதமான சந்தையைப் பெறலாம்’ எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான்.
ஏற்கெனவே மத்திய அரசின் சாந்தகுமார் குழு, `வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.
அதை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சூழலுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.
வேளாண் விளைபொருள்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் இங்கு ஒத்து வராது”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!



கோத்தபய வெற்றியிலிருந்து

பாடம் கற்க வேண்டும்!



ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், “சிறீலங்கா பொதுஜன பெரமுனா” கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற “ஐக்கிய தேசியக் கட்சி” வேட்பாளரான சஜித் பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 - 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!

இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளைக் கம்பெனிகள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிர்வாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாக தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள “சிறுபான்மை” மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.

காலனி வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமொரு எடுத்துக்காட்டு!

“பெரும்பான்மையினரின் முடிவை செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிரந்தர அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள ஐரிஷ் (அயர்லாந்து), ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.

இதேபோல்தான், ஸ்பெயினில் சிக்கிக் கொண்ட “சிறுபான்மை” தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத “சிறுபான்மை” தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.

அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், “சிறுபான்மை” தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!

இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.

போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியை சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!

வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!

கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.

வடக்கு - கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் அபாயமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற கிராமங்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!

மணலாறு என்ற தமிழ்ப் பெயரை “வெலிஓயா” என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் கிராமங்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு - கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.

வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டாம்!

இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்தி சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டி சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!

கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்த கதைப்புகளை நம்ப வேண்டாம். கடந்தகால படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைபாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் “சிந்தனைச் சிற்பி”களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, November 17, 2019

பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது! கி. வெங்கட்ராமன் அறிக்கை!



பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு

இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட

வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


மலையகத்திலிருந்தும், காடுகளிலிருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு இந்தியா முழுவதுமுள்ள வனங்களை பெருங்குழுமங்களின் வேட்டைக்குத் திறந்துவிடும் நோக்கில், இந்திய அரசு “இந்திய வனச் சட்ட வரைவு – 2019” – என்பதை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

கோடிக்கணக்கான ஆதிவாசிகளையும், மலையக மக்களையும் அவர்களது வரலாற்றுத் தாயகத்திலிருந்து வெளியேற்றும் இக்கொடிய வரைவுச் சட்டத்தை எதிர்த்து, இந்தியாவின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ்நாட்டில் ஆதிவாசிகளின் தாயகப் பாதுகாப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், இச்சட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் “ஆதிவாசிகள் விடுதலை முன்னணி” சார்பில், இச்சட்ட வரைவை எதிர்த்து இரண்டு முறை பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதிவாசிகள் விடுதலை முன்னணித் தலைவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிவாசிகளின் உரிமைகளை ஆதரித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், மகளிர் ஆயம் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் இந்த வரைவுச் சட்டத்தின் கொடும் தன்மைகளை விளக்கி முதன்மை உரையாற்றினார். அக்கலந்துரையாடலில், 2019 – இந்திய வனச்சட்ட வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி செங்கல்பட்டு தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து, பல மாவட்டங்களில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரையும், மலையக மக்களையும் ஒன்றுதிரட்டி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்தப் பின்னணியில், இந்திய அரசின் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று (16.11.2019) செய்தியாளர்களை சந்தித்து, இந்த வரைவு வனச்சட்டம் – 2019 முற்றிலும் திரும்பப் பெறப் படுவதாக அறிவித்தார்.

விரைவில், பெரும்பான்மையான பழங்குடி மக்களை வாக்காளர்களாகக் கொண்ட சார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதைக் கருத்தில் கொண்டுகூட இந்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருக்கலாம். எப்படி இருப்பினும் ஆதிவாசிகளின் தொடர்ந்த தாயக உரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது! இச்சட்ட வரைவை திரும்பப் பெற்றதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசின் அரசிதழில் இந்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT