உடனடிச்செய்திகள்

Saturday, January 27, 2007

சிதம்பரத்தில் மொழிப் போர் ஈகியர் தினம்

சிதம்பரத்தில் மொழிப் போர் ஈகியர் தினம் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடந்தது. தமிழுக்காக உயிர் நீத்த ஈகியருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழக மாணவர் முன்னணியின் தோழர்களும், தமிழக தொழிற்சங்க முன்னணி கி.வெங்கட்ராமன் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் கலந்து கொண்டு மொழிப்போர் ஈகியரை நினைவு கூர்ந்தனர்.
Thursday, January 25, 2007

மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்

Wednesday, January 24, 2007

தமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்

தமிழ்த் தேசக் குடியரசு
பெ.மணியரசன்

தேசியம் என்பது என்ன ?
 தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.
தேசம் என்றால் என்ன ?
 சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.
 
ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.
 
ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.
 
பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.
தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?
இல்லை. தேசம்( (Nation ) ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.
 
ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா. 
 
தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம். 
 
'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்".
 
நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:
 
'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்"
 
மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.
 
நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( ( Swiss confederation )) என்பதாகும்.
 
இந்தியா ஒரு நாடு@ ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.  (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?
           ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.
           இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம்( Nationality). ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.
 எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
         தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது@ இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது. திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல@ அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.
 ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட" என்று அழைத்தனர். 'தமிழ்" என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்" என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள",'த்ராவிட" என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள்(பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.
 இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது@ இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது. சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
           அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி( ( Proto Language ) ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
 சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
 திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.
 பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு 'திராவிடர் கழகம்" என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை@ தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.
 ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் "திராவிட" என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.
 'இந்தியர்" என்பது மரபினமும் அல்ல@ தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர்( Geo political name). ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல@ இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்( Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.
 இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்"( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.
 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  'இந்தியன்" என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.
 சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்@ கவரிங் தங்க நகை போல!
 அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்" என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும். ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்" என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.
 'தமிழர்", 'தெலுங்கர்", 'வங்காளி" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை" என்று மட்டுமே அது கூறுகிறது. 'தமிழர்" போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.
 லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் ( (Union of nations )) என்றே அழைத்தனர்.
 இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது.

சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வௌ;வேறா ?
 இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.
 சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.( ( Webster's Pocket dictionary ))
 அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர். The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது.
 நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.

உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா ?

 உலகம் ஒன்று@ மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.
 புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை@ ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.
 வௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
 உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.

 இந்தியாவில் தேசிய இனங்களின் சமத்துவம் இருக்கிறதா? சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா ?
இல்லை.
 உலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( (Nation State formation )) என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.
 தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம்,   இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.
 அதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும். மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.
 உலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை.

இந்தியா போன்ற பல தேசிய இன நாட்டில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன விடுதலையை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகாதா ?
 பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது. தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை. தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை).
 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.
 ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை( Right to Self determination with the right to secede ) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம்@ விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.
 பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்.

இந்தியாவில் எல்லா தேசிய இன மக்களிடமும் வறுமை, வேலை இன்மை, சாதி ஒடுக்குமுறை போன்றவை உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று திரட்டி புரட்சி நடத்தி, தேசிய இனங்களுக்கு முழு உரிமை வழங்கக்கூடிய ஒர் அரசை நிறுவிட போராடக்கூடாதா ?
 வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவையே. இவற்றை ஒழிக்கப் போராடும் இதர தேசிய இனமக்களுக்குத் தமிழ்த் தேசிய இனம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
 ஆனால், இங்குள்ள முதன்மையான சிக்கல் தேசிய இனஒடுக்குமுறையே! அதற்குத் தீர்வு கண்டால் தான் வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கும் தீர்வு காணமுடியும்.
 உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித், தமிழ்நாட்டில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித் இருவரும் வறுமை மற்றும் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் ஒற்றுமை உண்டு. ஆனால் இந்திமொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாகத் திணிப்பதில் இருவர்க்குமிடையே முரண்பாடு உள்ளது. உ.பி.காரர்களுக்கு அது சொந்த மொழி@ தமிழர்க்கு அது அயல்மொழி. இந்தி அல்லது ஆங்கிலத்தில் ரயில்வே போன்ற இந்திய அரசு நிறுவனங்களின் வேலைக்குத் தேர்வு நடக்கிறது. இரண்;டுமே தமிழர்க்கு அயல்மொழி. உ.பி.காரர்களுக்கோ இவற்றுள் ஒன்று சொந்த மொழி.
 இந்திய தேசியம் என்ற கருத்தியல் உ.பி.காரர்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழர்க்கு அடிமைத் தனத்தை வலுப்படுத்துகிறது. இது போல் பலவற்றுள் தமிழராய் உள்ள ஏழை அல்லது தலித்துக்கும் இந்தி ஏழை அல்லது தலித்துக்கும் இடையே பாகுபாடு நிலவுகிறது.
 வர்ண-சாதிக் கோட்பாடுடைய பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமெனில் தமிழ்நாடு தில்லியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனியத்தின் அதிகாரத் தலைமை பீடமாகவும், அதன் வற்றாத ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது தில்லி அதிகார மையமே! இந்தி மாநிலங்களே! தமிழ்நாட்டில் எவ்வளவு தான் பார்ப்பனிய எதிர்ப்பு இருந்தாலும் தில்லி அதிகாரம் பார்ப்பனியத்திற்கு மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்துவிடும்.
 அடுத்து பல தேசிய இனங்களிடையே ஒரே நேரத்தில் ஒரே இலக்குகாகப் புரட்சி நடந்ததாக இதுவரை வரலாறு இல்லை. 1917 நவம்பர் 7-இல் வெற்றி பெற்ற ரசியப்புரட்சி ரசியதேசத்தில் ரசிய தேசிய இனத்தில் தான் நடந்தது. ஜார் மன்னனால் வெற்றி கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டிருந்த மற்ற தேசிய இனங்களில் நடைபெறவில்லை. ரசியப்புரட்சி வெற்றி பெற்றபின் இதர தேசிய இனங்களில் தனி நாட்டிற்கான போராட்டங்கள் நடந்தன. காலப்போக்கில் அவை இணைக்கப்பட்டு 1922-ஆம் ஆண்டுதான் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது.
 சீனப்புரட்சி சீன தேசிய இனத்தில்தான் நடந்தது. அந்நாட்டில் 96 விழுக்காட்டினர் சீன தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. கொரியப்புரட்சி கொரிய தேசிய இனத்தில் தான் நடந்தது. வியட்நாம், கியூபா நாடுகளில் நடந்த புரட்சியும் அந்தந்த தேசிய இனத்தில் தான் நடந்தது. பல தேசிய இனப் புரட்சி இதுவரை நடைபெறவில்லை.
 அனைத்திந்தியப் புரட்சி என்று சொல்வது பல தேசிய இனப்புரட்சியைக் குறிப்பதாகும். அப்படி ஒரு புரட்சி நடக்கவே நடக்காது. என்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இன்றும் சமச்சீர் வளர்ச்சி கொண்ட அனைத்திந்தியக் கட்சியாக வளர முடியவில்லை. அது மேற்குவங்க, கேரள, திரிபுராக் கட்சியாகவே உள்ளது.
 இந்தியாவில் இன்று ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்புரட்சி நடந்து கொண்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் வளர்ச்சியடைந்துள்ள ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கட், ஜார்கண்ட் போன்ற மாநிங்களில் அவ்வியக்கம் முதன்மையாக பழங்குடி மக்களைச் சார்ந்துள்ளது. பழங்குடி மக்களுக்கான சிக்கல், இனக்குழு சமூகச் சிக்கலின் ஒரு பகுதியே. ஏதோ ஒரு வகையில் அங்கு தேசிய இனச் சிக்கல் தான் கையாளப்படுகிறது.
 இந்தியாவில் முதலில் தேசிய இன விடுதலைப் புரட்சிகளே நடை பெறவுள்ளன. தமிழர்கள் அனைத்திந்தியப் புரட்சி நடத்த விரும்பினால், அது நடக்காது. காரணம், அதற்கான அனைத்திந்திய பல தேசிய இன அமைப்பு உருவாகாது.
 நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்னும், கன்னடர்களின் அனைத்துக்கட்சிகளும் காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தர மறுக்கின்றன. பெங்களுர் அல்சூர் ஏரிக்கரையில் கன்னடர் எதிர்ப்பினால் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 14 ஆண்டுகளாகக் கோணிப்பை போட்டு மூடப்பட்டுள்ளது.
 999ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இருந்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடி தண்ணீர் தேக்க விடாமல் தடுக்கிறது கேரளம். பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் இந்தியத் தேசியமும் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள கேரள அரசு தான் இவ்வாறு தடுக்கிறது. இதற்கு முன், இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ் கூட்டணி அரசு 142 அடி தேக்க விடாமல் தடுத்தது.
 இவர்களுடன் எல்லாம் சேர்ந்து தான் அனைத்திந்தியப் புரட்சி நடக்கப்போகிறதா? ஒருக்காலும் நடக்காது. புரட்சியைக் கைவி;ட்டு விட்டோம் என்று நேரடியாகச் சொல்லாமல், அதைக் கைவிடுவது தான் அனைத்திந்தியப் புரட்சி பேசுவது.
 இன்னொரு அடிப்டையான செய்தி சொந்த தேசத்தை நிறுவிக் கொள்ளாத எந்தப் பாட்டாளி வர்க்கமும் அல்லது மக்களும் சோஷலிசப் புரட்சி நடத்தவே முடியாது. சுதந்திரமான, ஜனநாயகமான தேச அரசுகளை நிறுவுவதன் ஊடாகத் தான் சமூக மாற்றங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
 1789-இல் நடந்த பிரஞ்சுப்புரட்சி ஜனநாயக தேசியக் குடியரசுக்கான முதல் புரட்சி. அந்த ஜனநாயகம் முதலாளிய ஜனநாயகம். நிலக்கிழார்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த மன்னராட்சியை வீழ்த்திட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முற்போக்கான முழக்கங்களின் கீழ் அப்புரட்சி நடந்தது. மன்னராட்சி வீழ்த்தப்பட்டு வாக்குரிமை அடிப்படையில் அமையும் முதலாளிய ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.
 1917-இல் ரசியப் பாட்டாளி வர்க்கம், ஜார் மன்னராட்சியை வீழ்த்தி, ஜனநாயகக் குடியரசுக்கான புரட்சியைத் தான் நடத்தியது. அதன் ஊடாகத்தான் வளர்ச்சிப் போக்கில் சோஷலிசம் நிறுவப்பட்டது. சீன, கொரிய, வியட்நாமியப் புரட்சிகள் சாரத்தில் தேசிய விடுதலைப் புரட்சிகளே. கிய+பப் ;புரட்சி ஜனநாயகத்திற்கான தேசியப் புரட்சியே.
 
 தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் தேசியப் புரட்சியை நடத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அற்றிருந்தால், அதற்கு சோஷலிசப் புரட்சியை நடத்தும் ஆற்றல் மட்டும் எப்படி வந்துவிடும்?
தனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா? இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
 
ஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை(சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா?
 இந்தக் கருத்து சரியல்ல. ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும். ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது. ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.
 அது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்", 'காலனி" என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.
 இந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார். காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.
 ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன. இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர். தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள்? தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார்? தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வௌ;வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம். ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன? மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.
 காலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும்@ புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்@
 முன்னது அயல் ஏகாதிபத்தியம்( Foreign Imperialism)@ பின்னது அண்டை ஏகாதிபத்தியம்( (Neighbour Imperialism )) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது.
 அயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.
 இன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம்.
 அயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள். ஒரு எஜமானன் இந்திய அரசு@ மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.
 ஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே.

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்றும், ஏற்றத் தாழ்வான வளர்ச்சி தான் இருக்கிறதென்றும், அதனால் இந்திய அரசின் கொள்கையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் கூறுகிறார்களே ?
 இக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைகளே இல்லை என்று மறுக்கிறது. ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது. இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் ;( Class reductionism ) என்று மார்க்சியம் சாடுகிறது. மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.
 பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே. தமிழ்நாட்டில் தி.மு.க கோரிய தனிநாட்டுக்கு மிகப்பெரும் அளவில் தமிழர்கள் ஆதரவு கொடுத்ததும் தேசிய இன ஒடுக்குமுறைக்கான எதிர்வினையே!
 இந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியத்தில் தமிழர்கள் மட்டும் தான் வருவார்களா? மற்றவர்களும் வருவார்களா?
 தமிழர்கள் மட்டுமின்றி, நெடுங்காலமாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சக்திகளே. குறிப்பாக முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து இங்கேயே தங்கி, தமிழ்நாட்டைத் தாயகமாகவும், தமிழைத் தங்கள் தேசிய மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, வீட்டில் தெலுங்கு பேசும் மக்களும், அதே போல் தமிழகத்தைத் தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ள கன்னடம் பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே. தமிழ்த் தேசம் அவர்களுக்கும் உரியதே. இதே போல், உருது பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே.
 தமிழகத்தின் வடக்கெல்லையில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், தெற்கெல்லையில் மலையாளத்தைத் தாய் மொழியாகவும், வடமேற்கில் கன்னடத்தைத் தாய் மொழியாகவும் கொண்டுள்ள மக்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாகும். தமிழ்த் தேசக் குடியரசில் இவர்களுக்கு சமஉரிமையும் சிறப்புப் பாதுகாப்பும் இருக்கும்.
 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் தமிழர்களே. ஆனால் அவர்களில் மிகப்பெரும்பான்மையோர் தமிழைவிட சமஸ்கிருதமே உயர்வானதென்றும், தாங்கள் ஆரியப் 'பெருமைகளுக்குச்" சொந்தக்காரர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர். கோயில் வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் தமிழைப் புறக்கணித்து, சமஸ்கிருதத்தையே முன்னிறுத்துகின்றனர். இந்த வகையில் தமிழர்கள் என்று இவர்கள் தங்களைக் கருதிக்கொள்வதில் உளவியல் ஊனம் உள்ளது. பார்ப்பனர்களும் பார்ப்பனிய சக்திகளும் இந்திய அரசுக் கட்டமைப்பில் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையும் தமிழ்த் தேசியத்திற்குத் தேவை.
 கொள்கை, நடைமுறை இரண்டிலும் பார்ப்பனியத்தை மறுத்து, தமிழ் உணர்வோடு செயல்பட முன்வரும் பார்ப்பனர்களைத் தமிழ்த் தேசியம் அரவணைக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு இன்று தனி நபர்கள் சிலரே வரக்கூடும்.
 பிறப்பிலேயே மனிதர்களின் குணங்களும் தகுதிகளும் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்பது வர்ணாசிரம தர்மம். தமிழ்த் தேசியம் அதை மறுக்கிறது. ஆதலால், தமிழ்த் தேசியம் பிறப்பை அடிப்படையாக வைத்து பார்ப்பனர்களைப் புறக்கணிக்காது. அதே வேளையில் அவர்களிடம் உள்ள,(மேலே சுட்டிக் காட்டப்பட்ட) உளவியல் ஊனத்தையும், அவர்கள் ஆளும் சக்தியாக உள்ளார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது தமிழ்த் தேசியம்.
 ஒரு தேசிய இயக்கம், அத்தேசக் குடிமக்கள் அனைவர்க்கும் உரியதாகவும் இருக்க வேண்டும். தனக்கான சமூகவியல், பொருளியல் கொள்கைகளை விட்டுவிடாமல் அனைவரையும் தழுவியதாக அது செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா, அசாம், ஈழம் போன்றவற்றின் தேசிய இயக்கங்கள் இந்த அணுகுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
 தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன வெறியை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், வெள்ளை இனத்தவரின் குடியுரிமையை மறுக்காமல் அவர்களில் உள்ள சனநாயக சக்திகளையும் இயக்கத்தில் ஏற்றுக் கொண்டது. அசாமில் உல்ஃபா, பல்வேறுபட்ட பழங்குடிகளையும், பார்ப்பனர் உள்ளி;ட்ட பல்வேறு வகுப்பாரையும் இணைத்துச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழப்பகுதிகளில் வாழும் சிறுபான்மை சிங்களர் உரிமைக்கும் உறுதியளித்து அவர்களையும் விடுதலை இயக்கத்திற்கு அழைக்கிறது. சிங்களர்கள் வருவார்களா மாட்டார்களா என்பது வேறு செய்தி. ஒரு தேசிய இயக்கம் இவ்வாறான பார்வை கொண்டிருக்க வேண்டும்.
 தமிழ்த் தேசியம் இட்லரின் பாசிச இனவாதக் கொள்கை கொண்டதல்ல. அதே வேளை தமிழர்களின் தாயகத்தையே தம் வசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அயல் இனத்தார் மிகை எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் புகுந்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றுவதை எதிர்க்கிறது.

'வெளியாரை வெளியேற்றுவோம்" எனத் த.தே.பொ.க முழங்குவது இனவாதப்பாசிசம் இல்லையா? பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு இது ஆபத்தை உண்டாக்காதா?
 'வெளியாரை வெளியேற்றுவோம்" என்ற நமது முழக்கமும் அதற்கான போராட்டமும் பாசிசம் ஆகாது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட 1956-க்குப் பின், தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்மக்களின் தாயக உரிமை, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பறித்து ஆக்கிரமிக்கும் வேற்று இனத்தாரைத் தான் வெளியேற்றக் கோருகிறோம். மற்றபடி தமிழகத்தில் நூற்றுக்குநூறு தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
 குறிப்பாக மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரர்கள் ஆகியோர்தாம் அன்றாடம் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியேறி மண்ணின் மக்களின் எண்ணிக்கையை சிறுபான்மை ஆக்குமளவிற்கு ஆக்கிரமிக்கிறார்கள். இவ்வாறான அயலாரின் மிகை வருகையை ( Abnormal migration ) தாராளமாக அனுமதித்தால் தமிழர் தாயகம் பறிபோய் விடும். தமிழ்த் தேசிய இனம் சிறுபான்மை ஆகிவிடும்.
 தமிழ்நாட்டை ஒரு தேசம் என்று பார்க்காமல், இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற அளவில் மட்டும் பார்ப்பவர்கள் தாம் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அசாமில் நடந்த வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தில் இந்திய அரசு ஒர் உடன்பாடு கண்டு ஒப்பந்தம் போட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
 வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அங்கெல்லாம் உடலுழைப்புத் தொழிலாளிகளாகவே பெரிதும் இருக்கிறார்கள். அவர்கள் அம்மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். கேரளத்தில் ஏர் உழுதல், நடவுநடுதல், தேங்காய் பறித்தல், கட்டட வேலைகள் செய்தல் போன்ற கடின உடலுழைப்பு வேலைக்குப் பெரிதும் தமிழர்களையே அமர்த்துகிறார்கள். அவ்வேலைகளைச் செய்ய விரும்பாத அளவிற்கு மலையாளிகளின் பொருளியல் அங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் பணமும் ஒரு காரணம்.
 தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்ச்சியும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் உறுதியாக இருந்தால் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அது மதிப்பையும் பாதுகாப்பையும் வழங்கும். தமிழகம் பதிலடி கொடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வும் அயல் இனத்தார்க்கு உண்டாகும்.

இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகிவருகிறது. சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்பபானதில்லையா?
 பெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது. ஒரே இடத்தில்-தில்லியில்- மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.
 ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம். சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.
 தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக்  கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல்  பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே! ஆயுதங்கள் அல்ல.
 இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்.

தமிழ்த் தேசியத்தின் தொழில், வேளாண் கொள்கைகள் என்ன? சமூகவியல் கொள்கைகள் என்ன?
 தொழில்துறையில் அரசுத்துறை மேலோங்கியிருக்கும். சிறிய, நடுத்தர, ஏகபோகமற்ற தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். வரம்புக் குட்பட்டு தனியார் தொழில்துறைக்கு நல்வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும்.
 ஏகாதிபத்திய-பன்னாட்டு-தொழில் நிறுவனங்களுக்கான தாராளமயம், உலகமயம் கைவிடப்படும். வெளியேற்ற வேண்டிய வெளியார் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படக்கூடிய நமக்கு இன்றியமையாத் தேவையாய் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
 வேளாண்துறையில், தற்சார்பு வேளாண்மை கொள்கைக் கடைபிடிக்கப்படும். மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு வேளாண் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். நிலச் சீர்திருத்தம் முழுமை அடையும். சிறிய, நடுத்தர, பெரிய விவசாயிகளின் நிலவுடைமை உரிமை பாதுகாக்கப்படும். அவர்களுக்கு அரசு மானியங்கள் அதிகரிக்கப்படும். வெளிநாட்டுச் சந்தையில் போட்டியிடக் கூடியவகையில் வேளாண்மைக்கு மானியம் வழங்கப்படும்.
 மொத்தத்தில் தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை கடைபிடிக்கப்படும். தமிழகச் சூழலுக்கேற்ற ஒரு நிகரமை(சோஷலிசம்) இலக்கு அதற்கு இருக்கும்.
 வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவம் போன்றவை சமூகவியலில் இருக்கும்.

தமிழ்த் தேசியப் புரட்சி எவ்வாறு நடக்கும்?
 மாபெரும் மக்கள் எழுச்சியாகவே தமிழ்த் தேசியப் புரட்சி நடக்கும். போர்க்குணம் மிக்க அமைப்பு அப்புரட்சிக்குத் தலைமை தாங்கும். கொரில்லாக் குழு வடிவமாகவோ அல்லது நாடாளுமன்ற சட்டமன்றப் பாதையாகவோ தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை இருக்காது.
 
முடிவாக, தமிழ்த் தேசியம் எது ?

    எமது தேசம் தமிழ்த்தேசம்
    எமது தேசிய இனம் தமிழர்
    எமது தேசிய மொழி தமிழ்
    எமது இலக்கு தமிழ்த்தேசக் குடியரசு அமைத்தல்
    என்பதே தமிழ்த் தேசியம்.

உலகமயமும் தமிழ்த் தேசியமும் - கி.வெங்கட்ராமன்

உலகமயமும் தமிழ்த் தேசியமும்
கி.வெங்கட்ராமன்

            ஆழிப் பேரலையை விட அதிவேகத்தோடு உலகமயப் பொருளியல் உலகமக்களைத் தாக்கி வருகிறது. உழைப்பு, இயற்கை, பணம் ஆகியவை மட்டுமின்றி, புன்னகை, அழுகை, பெண்ணின் ~நளினம்~, ஆணின் உடற்கட்டு...அனைத்தும் சந்தை சரக்காகி வருகின்றன.
             முதலாளியம் என்றாலே சுரண்டல்தான். உலகமயம் என்பது தீவிரச் சுரண்டல்.
 உலகச் சந்தையையும், உள்நாட்டுச் சந்தையையும் தடை ஏதுமின்றி தாராளமயமாக்குவதன் வழி, வர்த்தகம் மற்றும் நிதிமூலதனம் ஆகியவை நாட்டு எல்லைகளைக்; கடந்து தங்குதடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் ~உலகமயம்~  [Globalisation] எனப்படும். இதற்கான பொருளியல் கொள்கையைப் புதிய தாராளமயம்  [Neoliberalism]என்றும் கூறுவர்.
 இக் கொள்கை 1980-களில் வட அமெரிக்க ஆட்சியாளர் ரீகன், பிரிட்டனின் தாட்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் மூலதனம் உலகம் முழுவதும் பரவி ஆதிக்கம் செய்வது புதிய போக்கல்ல.
 போட்டி முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்றுரிமை (ஏகபோகம்) தோன்றியது. அதன் வழி ஏகாதிபத்தியம் உருவாயிற்று.
 
 "ஏகாதிபத்தியம் முதலாளியத்தின் உச்சகட்டம்" என்று வரையறுத்த மாமேதை லெனின், அதன் முக்கியக் கூறுகளாகக் கீழ் வருவனவற்றைச் சுட்டிக் காட்டினார்.
 (1). முற்றுரிமை நிறுவனங்கள் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிலை.
 (2). வட்டி மூலதனமும், தொழில் மூலதனமும் ஒன்றிணைந்த நிதிமூலதன   முற்றுரிமை மேலாதிக்கம்.
 (3). சரக்கு ஏற்றுமதியைவிட நிதிமூலதனமும் ஏற்றுமதி முதன்மை பெறுதல்.
 (4). உலகச் சந்தையை சில முற்றுரிமைக் கூட்டணிக்கு இடையே பங்கீடு செய்து கொள்வது.
 (5). நாடுகள் இம் முற்றுரிமை கூட்டணிகளுக்கிடையே பங்கு போடப்படுதல்.
 
 நாடுகளைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட மோதல்கள் தான் உலகப்போர்களுக்கு அடிப்படைக் காரணங்களாயின.
 இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி நாடுகள் விடுதலை அடைவது தீவிரம் பெற்றது. சோசலிச முகாம் ஒன்றும் அமைந்தது. "கம்யூனிச அபாயம்" பரவாமல் தடுக்க ஏகாதிபத்திய நாட்டு அரசுகள் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு போன்றத்துறைகளில் மக்கள் நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 
 ஆயினும் சில பத்தாண்டுகளிலேயே புதிதாக விடுதலை பெற்ற நாட்டு ஆளும் வர்க்கங்களிடையே ஏகாதிபத்தியத்தோடு கைக்கோக்கும் போக்கு வலுப்படத் தொடங்கியது. 1980-களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும்,சோவியத் ஒன்றியமும் சோசலிசப் பாதையிலிருந்து வீழ்ந்த பிறகு, இப்போக்குத் தீவிரம் பெற்றது.
 இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டத் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நிதி மூலதனப் பரவலுக்குப் பெருந்துணை புரிந்தது.
 தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட புதிய உயர் தொழில் நுட்பங்கள் அறிவுசார் முற்றுரிமை முதலாளிகளையும் உருவாக்கியது. மூலதனத்தை வைத்து உலகைச் சுரண்டுவது போல "அறிவைக்" கொண்டு சுரண்டுவது என்ற வாய்ப்பு பெருமளவில் திறந்து விடப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகின் முதல் இட முதலாளியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் வர முடிந்தது. ~இன்போசிஸ்~ மூர்த்தி, ~விப்ரோ~ பிரேம்ஜி போன்ற புதிய- ~தகவல் முதலாளிகள்~ உருவானார்கள். இரண்டாவது உலகப்போரில் தரைமட்டமான ஜப்பான் விரைவிலேயே ~தொழில் நுட்ப ஏகாதிபத்தியமாக~ நிலைபெற்றது.
 மூலதனத்துக்கு நிகராக ~அறிவு~ என்பதும் சுரண்டல் ஆயுதமாக வளர்ந்தது புதிய போக்காகும். உலக வர்த்தக அமைப்பு காப்புரிமை ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை வலுப்பெற வழிகோலியது.
 கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவது, அதன் மூலம் முதலாளிகள் உருவாவது ஆசான் காரல் மார்க்ஸ் காலத்திலேயே முளைவிட்ட ஒன்றுதான். ஆயினும், இன்று இப்போக்கு தனித்தன்மை பெற்ற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இதுபற்றி விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
 நிதி மூலதனத்தின் மேலாதிக்கமும், அறிவு முதலாளியத்தின் ஆதிக்கமும் கோலோச்சும் இக்காலத்திற்கு மார்க்சின் ~உபரிமதிப்புக் கோட்பாடு~ [Theory of Surplus Value] பொருந்தாது என்று கூறுவோர் உளர்.
 உண்மையில் உபரிமதிப்புக் கோட்பாடு இன்று தான் கூடுதல் பொருத்தமுடையதாகவும், சுரண்டலை அறிவியல் வழியில் துல்லியமாக விளக்குவதாகவும் உள்ளது. ஆயினும் ~பறக்கும் மூலதனம்~ [Hot money] கோலோச்சுவது, அறிவே மூலதனமாகச் செயல்படுவது ஆகியவற்றோடு இணைத்து புதிதாக இக்கோட்பாட்டை விளக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
 இது குறித்து வேறு ஒரு வாய்ப்பில் பார்க்கலாம்.

 ஏகாதிபத்தியத்தின் இன்றைய சுரண்டல் வடிவமே உலகமயம். அதற்கான கொள்கையே புதிய தாராளமயம். இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கையாக புதிய தாராளமயம் உள்ளது. முன்பு போல் காலனி நாடுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவையோ, அதற்காக தங்களுக்குள் போர் புரிய வேண்டிய நிலைமையோ இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இல்லை. ஏகாதிபத்தியங்களுக்கும், புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்குமான முரண்பாடும் முன்னுக்கு வரவில்லை.
 மாறாக வளர்ந்து வரும் "மூன்றாம் உலக" நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒப்புதலோடு அந்நாடுகள் ~உலகமயக் காலனி~களாக மாறி வருகின்றன. இவ்வகை முதலாளிகள் உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டார்கள். ஒரு சில நாடுகளில் தரகு முதலாளிகளாகவும், வேறுபல நாடுகளில் இளைய பங்காளிகளாகவும் இவ்வகை முதலாளிகள் இருக்கிறார்கள்.
 
இந்தியப் பெருமுதலாளிகள்-குறிப்பாக முற்றுரிமை முதலாளிகள் உலகமயத்தின் பங்காளிகளாக வல்லரசுகளோடு கைக்கோத்திருக்கின்றனர். அம்பானி, டாடா, பிர்லா, மூர்த்தி, டால்மியா போன்றவர்கள் ஜரோப்பா உள்ளிட்டு உலகநாடுகள் அனைத்திலும் வேட்டையாடுகின்றனர்.
 எனவே உலகமயத்தை நிலைகாட்டுவதில் ஏகாதிபத்திய முதலாளிகளைப் போலவே, இந்தியப் பெருமுதலாளிகளும் அக்கறை காட்டுகின்றனர்.
 
உலகம் முழுவதும் இவ்வாறான ஆதிக்கக் கூட்டணிக்கும் மக்களுக்குமான முரண்பாடே முதன்மை பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகளில் இது தேசிய முரண்பாடுகளின் ஊடாக வெளிப்படுகிறது.
 ஏனெனில் தேசியச் சந்தைகளையும், தேசிய வாழ்வையும் அழித்துதான் உலகமயம் நிலைபெறுகிறது.
 ~தடையற்ற போட்டி~ என்ற பெயரால் தாராளமயம் நியாயாப்படுத்தப்பட்டாலும், உண்மையில் சில்லோர் முற்றுரிமையை  [Oligopoly] நிலைநாட்டவே பயன்படுகிறது.
 இந்தியாவில் நுழையும் பன்னாட்டு நிறுவன மூலதனம் புதிய தொழில்களைத் தொடங்குவதை விட, தொழில்களைக் கைப்பற்றவே இறக்கிவிடப்படுகிறது.

 எடுத்துக்காட்டாக இந்துஸ்தான் லீவர் கம்பெனி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் ஐஸ்கிரீம் தொழிலில் இல்லை. ஆனால் இன்று 85மூ ஐஸ்கிரீம் சந்தையைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் புதிதாக ஐஸ்கிரீம் தொழிற்சாலைகள் நிறுவிவிடவில்லை. ஏற்கெனவே சந்தையில் இருந்த குவாலிட்டி ஐஸ்கிரீம், டோலப் ஐஸ்கிரீம், மில்க்ஃபுட் ஆகியவற்றை விழுங்கி, இப்போது தன்னை முற்றுரிமையாக நிலைப்படுத்தியிருக்கிறது. அருண் ஐஸ்கிரீம் போன்றவைத் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
 கோக் மென்பான நிறுவனம் இந்தியாவில் முதலில் நுழைய முயன்ற போது, தனியாகத் தொழில் நடத்தி தடையில்லாப் போட்டியில் வென்று வரவில்லை. முதலில் வடநாட்டு பார்லே கம்பெனியைக் கைப்பற்றியது. அன்று மென்பானச் சந்தையில் வடநாட்டில் கொடிகட்டிப் பறந்த தம்ஸ்-அப், லிம்கா ஆகியவை பார்லேவினுடையவை. இதன்பிறகு கோக் விரைவில் பரவியது. தமிழ்நாட்டில் நீண்டகாலம் புழக்கத்திலிருந்த வின்சென்ட், காளிமார்க், மாப்பிள்ளை வினாயகர் போன்ற உள்@ர் நிறுவனங்களை அழித்தது. இன்று இந்திய மென்பானச் சந்தையில் 60 விழுக்காடு கோக்கினுடையது.
 
 அதே நேரம் இந்தியப் பெருமுதலாளிகளில் பெரும்பாலோருக்கு உலகமயத்தால் பாதிப்பில்லை; ஆதாயமே. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய எஃகு இரும்பு நிறுவனமான கோரஸ் குழுமத்தை அண்மையில் டாடா கைப்பற்றியது. அடுத்து அமெரிக்காவில் உள்ள குமின் என்ஜின் கம்பெனி, ரிட்ஜ் பாஸ்டன் ஓட்டல், எனர்ஜி பிராண்ட் இன்கார்ப்பரேசன் போன்று அடுத்தடுத்து பலதுறைகளில் பெருநிறுவனங்களைக் கைப்பற்ற இருக்கிறது. "எங்களது ஆண்டு வருமானத்தில் 30மூ வெளிநாடுகளிலிருந்து வருகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது 50 விழுக்காடாக உயரும்" என்று டாட்டா குழுமம் அறிவிக்கிறது (இந்து-29-12-2006).
 புதிய தாராளமயம் புதிய தொழில்களை உருவாக்கும் என்று கூறுவது பெரும்பாலும் உண்மை இல்லை. மாறாக உள்@ர் தொழில்களை அழிப்பதே பொதுப் போக்காக உள்ளது.
 
தாராள இறக்குமதி அந்தந்த தேசிய இனத் தொழில் முனைவோரை விரட்டியடிக்கிறது. இதில் அதிக பாதிப்படைந்திருப்பது தமிழ்நாடு. இங்கு சிறுதொழில் உற்பத்திதான் முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3.09 இலட்சம் சிறு தொழிற்சாலைகளில் 1.41 இலட்சம் ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. கணிசமானவை நொடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.
 
பல இலட்சம் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டது தான் கண்டபலன். உருவாகிற பன்னாட்டு நிறுவனத் தொழில்களும் தானியங்கிமயமானவை. அங்கு வேலைவாய்ப்பு உருவாவது மிகமிகக் குறைவு.
 ~பறக்கும் பணம்~ என்பது உலகமயத்தில் விளைந்த பெரும் சிக்கலில் ஒன்றாகும். நிதி மூலதனத்தின் பேயாட்சி இதன் மூலமே முதன்மையாகச் செயல்படுகிறது. பங்குச் சந்தையில் மட்டுமே உலவிடும் பணம் இது. சில நிறுவனங்களின் பங்குகளை ஒரேடியாக வாங்கிக் குவித்துவைத்துக் கொண்டு, பங்குச்சந்தையில் அவற்றுக்கு ~கிராக்கி~ ஏற்படுத்தி, பன்மடங்காக்கி விலையேற்றி அதே பங்குகளை விற்றுவிட்டு பறந்து விடுவது. இந்த ஊக வணிகச் சூதாட்டம் அந்தந்த நாட்டுப் பொருளியலையே நிலைகுலையச் செய்துவிடும்.
 இவ்வாறு ஊக வணிகத்தில் பங்குச்சந்தை நிதி மூலதனம் உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பறப்பதற்கு தகவல் தொழில் நுட்பப் புரட்சி துணை செய்கிறது. இன்டர்நெட் மூலம் பணம் நாடுவிட்டு நாடு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது.
 
இவ்வாறான ஊகவணிகமும், வெளிப்பணிவாய்ப்பும் [BPO] உலகமயத்திற்கு ஆதரவாக பெரும் மயக்கத்தையே மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பணிமையங்கள் சென்னையில் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசன்ட், ஆல்செக்... என்று நிறுவப்பட்டுள்ளன. நவீன உலகில் அடையாளங்களாக, அறிவுப் பொருளாதாரத்தின் [Knowledge economy] அடிப்படைகளாக இவை காட்டப்படுகின்றன.
 இவ்வாறான நிறுவனங்களை ஈர்ப்பதில் மாநில அரசுகளிடையே கடும் போட்டியே நிலவுகிறது. இதனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி 1998க்கும் 2005க்கும் இடையே ஆண்டுக்கு 30மூ என்ற அளவில் பாய்ந்து செல்கிறது. (சி.பி.சந்திரசேகர்- சோசியல் சயின்டிஸ்ட் ஜன-பிப், 2006) இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 40மூ தகவல் தொழில் நுட்பத்துறையிலிருந்து வருகிறதாம்.
 ஆனால் இத்துறையில் உருவாகியிருக்கிற பணிவாய்ப்பு "வேளாண்மை தவிர்த்த பிறதுறை வேலைவாய்ப்பில் 0.21மூ தான்" என்று தகவல் தொழில்நுட்ப முதலாளிகள் சங்கக் குறிப்பே கூறுகிறது.
 ஆயினும், ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு இத்துறையில் உள்ளது. 25வயதுக்குள் இருபதாயிரம், முப்பதாயிரம் மாதச் சம்பளத்தை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம்.
 இத்தொழிலுக்கு ஆள்சேர்ப்பு மையங்களில்; முதன்மையானதாக சென்னையே உள்ளது. இங்குப் பணியில் சேருவோரில் "மிகப் பெரும்பாலோர்" ஏற்கெனவே நல்ல வேலையில் அமர்ந்திருப்போர் வீட்டுப் பிள்ளைகளே; நகர்ப்புறங்களைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரே. குறிப்பாக பார்ப்பனர்களும், பிற ~உயர்~ சாதியினருமே" என்று சிஜேஃபுல்லர் மற்றும் அரிபிரியா நரசிம்மன் ஆகியோர் கூறுவது கவனிக்கத் தக்கது. (காண்க: Econonmic and Political Weekly, ஜனவரி 21,2006) டாடா கன்சல்டன்ட் சர்வீஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் டெக்னாலஜிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இம் முடிவை இவர்கள் கூறுகின்றனர்.
 இத்துறை பணியாளர்கள் உலகமயத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள்.
 இன்னொரு புறம் உலகமயத்தோடு சேர்ந்து ஆங்கில ஆதிக்கமும் வருகிறது. குறிப்பாக வெளிப்பணிமையங்களில் ( Outsourcing centres) ஆங்கிலத்தில் உரையாடுவது, அதுவும் இந்திய உச்சரிப்பின் சாயல் இல்லாமல் உரையாடுவது முக்கிய தேவையாக முன் வைக்கப்படுகிறது. இம் மையங்களில் பணியாற்றுவோருக்கு ஜெரால்ட், ராபர்ட், எலிசபத், ரோசினா என்பன பொன்று பொய்ப் பெயர்களே கூட கொடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள் தாம் தம் நாட்டுக்காரரோடே உரையாடுவதாக மயக்கம் ஏற்படுத்தும் உத்தி இது.
 இந்தத் தகுதி பல தலைமுறையாக கல்விவாய்பபைப் பெற்ற பார்ப்பனர்களுக்கே இருப்பதால், அவர்களே அதில் அதிகம் வாய்ப்பு பெறுவதாகவும் மேற்குறித்த ஆய்வுக் கூறுகிறது. தகவல்தொழில்நுட்பத்துறையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வேலைவாய்பைப் பெறுவதில் இச்சமூகத்தவர்களே அதிகம் இருப்பதற்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது.
 இவ்வாறு பன்னாட்டு முதலாளிகள்- இந்தியப் பெருமுதலாளிகள்- பார்ப்பனர்கள்-ஆங்கில ஆதிக்கம் என்ற கூட்டணி உலகமயத்தில் நிலைபெறுகிறது.
 இந்தக் கூட்டணிக்கு அனைத்திந்தியச் சந்;தை அவசியமானது. வலுவான இந்திய மையம், அதில் அனைத்து அதிகாரங்களும் குவிவது என்பது தேவையான ஒன்று.
 உலகமயத்தால் அரசுகள் வலுவிழந்துவிடும் என்பது உலகமயக் கூட்டாளிகளுக்குப் பொருந்தாது.
 கல்வி தருவது, மருத்துவம் அளிப்பது போன்ற சேமநலப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொள்ளுமே தவிர, அரசு எந்திரம் உலகமயத்தால் பலவீனமடையாது.
 அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்பது முன்னைவிட புதிய தாராளமயக் காலத்தில் தான் தெளிவாகத் தெரியும்.
 தில்லிக்கு அருகில் குர்குவானில் ஹோண்டா நிறுவனத்திற்கு அடியாளாக காவல்துறை ஏவிவிடப்பட்டதும், ஒரிசாவின் கலிங்கா நகரில் பாஸ்கோ என்ற கொரியாவின் பன்னாட்டு கம்பெனிக்காக மண்ணின் மக்கள் வேட்டையாடப்பட்டதும் அண்மை நிகழ்வுகள்.
 இந்தியாவின் வரவு-செலவில் இராணுவத்திற்கு அளிக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதும், மேலும் மேலும் அமரிக்க வல்லரசின் இராணுவக் கூட்டணியில் இந்திய அரசு நெருங்குவதும் இப்போக்கிற்கு சான்று.
 ~வாட்~ என்ற மதிப்புக் கூட்டுவரி விதிப்பு, மாநிலத்தின் நிதி அதிகாரத்தைக் கடுமையாகத் தாக்கி, இந்தியா முழுவதையும் வழவழப்பான ஒரே சந்தையாக மாற்றும் நடவடிக்கை ஆகும். ~நதிகள் தேசியமயம்~, வேளாண்மையை பொது அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டு போவது, மத்திய சிறப்புப் படைகள் வலுவாக்கப்பட வேண்டும் என்பது போன்றவை தில்லியில் அதிகாரக் குவிப்பை முன்மொழிபவை ஆகும்.
 ~சிறப்புப் பொருளியல் மண்டலங்கள்~ தேசிய இனத் தாயகத்தையே கூறுபோட்டு அதற்குள் தில்லி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உலகமய சமஸ்தானங்களை நிறுவக் கூடியவை. தேசிய இன ஆட்சிப் பகுதிக்குள் உலகமயத்திற்கு வசதி செய்து தரும் தனித்தனி "நகர அரசுகளை" ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.
 இதற்கு ஏற்ப ~வலுவான இந்தியா~, ~வல்லரசு இந்;தியா~, ~ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியா~ என்ற முழக்கங்கள் வாயிலாக ~இந்திய தேசிய~ வெறி கட்டமைக்கப்படுகிறது.
 தேசிய இன அடையாளங்களே வளர்ச்சிக்கு இடையூறானது என்ற கருத்து பரப்பப்படுகிறது.
 ஆயினும் உலகம் முழுவதும் உலகமயத்திற்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு அடித்தளமாக தேசிய இன உணர்ச்சிகளே அமைந்துள்ளன.
 லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகமயத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு தேசிய இன உணர்ச்சியே அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பதற்கு வெனிசுவேலா, பொலிவியா, நிகரகுவா போன்றவையே சான்று பகர்கின்றன. ஸ்பானிய மொழி உணர்ச்சி, ஆப்ரோ-அமெரிக்க இன உணர்ச்சி ஆகியவற்றின் எகாதிபத்திய எதிர்ப்பு ஆற்றலை பிடல்காஸ்ட்ரோ வெளிக் கொணர்ந்திருப்பதும், மாயன் பழங்குடித் தொன்மங்கள் சபடிஸ்டாக்களின் வல்லாதிக்க எதிர்ப்புக்கு அடித்தளமிட்டுருப்பதை அதன் தலைவர் மார்க்கோஸ் விளக்குவதும் கவனங்கொள்ளத் தக்கவை.
 இங்கும் உலகமய எதிர்ப்பு என்பது புனைவான இந்திய தேசியத்தோடு முரண்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய உலகமயக் கூட்டணி ~இந்தியத் தேசியம்~ வழியாகத்தான் செயல்படுகிறது.
 உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான்.
 சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான்.
 தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.
 
 வெல்கத் தமிழ்த் தேசியப் புரட்சி !

 
 

 

 

 

முல்லை பெரியாறு - அ.ஆனந்தன்

முல்லை பெரியாறு :
போராட்ட அனுபவமும் புதிய எழுச்சியும்

அ.ஆனந்தன்
 
              முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க உழவர்களையும் உணர்வாளர்களையும் திரட்டிப் பேராடுவது என்று தமிழ்த் தேசிய முன்னனி மதுரை மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தமிழகம் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று 27-02-2006 அன்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பைக் கேரள அரசும் அனைத்துக்கட்சிகளும் எதிர்த்தன.
            
             சி.பி.எம் தலைமையிலான அணியும் காங்கிரஸ் தலைமையிலான அணியும் மே மாதம் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டாலும் கூட இரு அணிகளும் ஒருங்கிணைந்து மார்ச் மாதம் சட்டப்பேரவையைக் கூட்டி உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடமாக்கும் நோக்கத்தோடு முல்லை பெரியாறு அணையையும் உள்ளடக்கிய 'கேரள நீர்த் தேக்கப் பாதுகாப்புச் சட்டம்" என்ற பெயரில் மசோதா நிறைவேற்றினார்கள்.
            
              பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி கேரள எல்லைக்குள் உள்ள எந்த நீர்த் தேக்கத்தையும் செயல்படாமல் மூடிவிடக் கூடிய அதிகாரத்தை அச்சட்டம் கேரள அரசுக்கு வழங்கியது.
 இந்நிலையில் இம்மசோதாவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்று கோரி கேரள ஆளுநருக்கும் அச்சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் அனுப்ப கிராமம் கிராமமாக மக்களிடம் அஞ்சலட்டைகளில் கையெழுத்து வாங்குவதென்று தமிழ்த் தேசிய முன்னனி முடிவெடுத்தது. தமிழ்த் தேசிய முன்னனியின் மதுரை அமைப்பாளரான என்( அ.ஆனந்தன்)  தலைமையில் தோழர்கள் கரிகாலன், கதிர்நிலவன், மு.கா.வையவன், கண்ணன், பொள்ளாச்சி வெ.பாரதி, மு.ப.குமரன், ந.சி.பார்த்தசாரதி, பே.மேரி, அருணா, ரெ.இராசு, தஞ்சை தோழர்கள் முருகானந்தம், சதீசுகுமார், அண்ணாதுரை, இராமசாமி, சென்னை தோழர்கள் சிவ காளிதாசன், சோழநாடன், நாத்திகன் கேசவன், பொறியாளர்கள் செந்தில்குமார், அருள்ராசு, பொள்ளாச்சி தோழர்கள் பரணி, சேது, திலீபன், தம்பி ஆகியோர் கையெழுத்து இயக்கத்திலும் நிதி திரட்டலிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர்.
 
             மதுரை மாவட்டம் கோட்டநத்தம்பட்டி, வெள்ளளுர், மேலவலசை, தனியாமங்கலம், வாடிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான், மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், குருவித்துறை, மேலநாச்சிகுளம், பொம்மன்பட்டி, கீழநாச்சிகுளம், கருப்பட்டி, தேனூர், திருவேடகம், இரும்பாடி, திருவாலவாயநல்லூர், நெடுங்குளம், ராயபுரம், நகிரி ஆகிய ஊர்களிலுள்ள உழவர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஜயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலட்டைகளில் தங்கள் முகவரியுடன் கையொப்பமிட்டனர். இவ்வஞ்சலட்டைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் 13-04-2006 மதுரை தல்லாகுளம் அஞ்சல் நிலையத்தில் போடப்பட்டன. 
 
கூட்டங்கள்: கிராமங்களில் கையெழுத்து வாங்கும் போது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கையெழுத்து போட்டனர். பல கிராமங்களில் ஊர் பொது மந்தையில் குழுவினரை அமர வைத்து கூட்டம் கூட்டமாக வந்து கையெழுத்து போட்டனர். 
 
               சோழவந்தானில் 21-04-2006 மாலை தமிழ்த் தேசிய முன்னனி சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. தோழர்கள் பெ.மணியரசன், தியாகு, கே.எம்.அப்பாஸ், சூ.இரத்தினசாமி, ஆனந்தன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 
              இந்நிகழ்வுகளை ஆய்வு செய்ய மதுரை தமிழ்த் தேசிய முன்னனி கூட்டம் தோழர்கள் பெ.மணியரசன், தியாகு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில் அடுத்த கட்டமாக 26-08-2006 அன்று மதுரையில் முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 மாநாட்டு விளக்கத் தெருமுனைக் கூட்டம் 7-08-2006 அன்று திருவாலநாயநல்லூரில் நடந்தது. தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். ஆண்டிப்பட்டி பங்களாவில் 19-08-2006 அன்று மாநாடு குறித்து உழவர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய பேரவைக் கூட்டம் நடந்தது.
மாநாடு :  மதுரை ஒபுலா படித்துறை அருகில் 26-08-2006 சனி மாலை 6 மணிக்கு முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு மாநாடு தொடங்கியது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குக் படத்தை ஒய்வு பெற்ற பொறியாளர் தி.கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். மாநாட்டுத் தீர்மானங்களை தோழர் கி.வெங்கட்ராமன் முன்மொழிந்தார். தோழர் தியாகு எழுதிய 'முல்லை பெரியாறு உரிமை மீட்க இதுவே தக்க தருணம்" என்ற குறுநூல் வெளியிடப்பட்டது. உழவர் அமைப்புத் தலைவர்கள். திருவாளர்கள் ம.புத்திசிகாமணி, கே.எம்.அப்பாஸ், சூ.இரத்தினசாமி, கருணைதாசன், தோழர்கள் பெ.மணியரசன், தியாகு முதலானோர் பேசினர். கிராமங்களில் இருந்து உழவர்கள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். தஞ்சைப் பகுதியிலிருந்து உழவர்களும் உணர்வாளர்களும் வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். தமிழ்த் தேசிய முன்னனி தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். அம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 இம்மாநாடு வைகை பாசனப் பகுதி உழவர்களிடமும் மக்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மற்றமற்ற அரசியல் கட்சிகளும் இதில் தலையிட இம்மாநாடு தூண்டுகோலாய் அமைந்தது.
 இம்மாநாட்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் எதிர்க்கும் மலையாள இனவெறி பிடித்த கேரள அரசைக் கண்டித்தும், பதின்மூன்று வடிகால் மதகுகளையும் உடனடியாக இறக்கி 142 அடிவரை தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிடக் கோரியும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய அரசை கண்டித்தும், அரசமைப்புச்சட்ட விதி 355-ன் கீழ் கேரள அரசுக்கு உச்சநீதி மன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு இந்திய அரசு கட்டளைத் தாக்கீது அனுப்பிடக் கோரியும், சிக்கலுக்கத் தீர்வு காணப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக பரமக்குடியிலிருந்து மாபெரும் மக்கள் பேரணி நடைப்பயணமாகப் புறப்பட்டு முல்லை பெரியாறு அணையை அடைந்து பதின்மூன்று வடிகால் மதகுகளை இறக்கி அணையை மூடுவது என்றும், சிற்றணையில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகளைச் செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 18-09-2006 அன்று மதுரையில் ஆர்பாட்டம் நடத்துவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கபட்டது.

ஆர்ப்பாட்டம் : நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தை விளக்கி அலங்காநல்லூர் அஜந்தா திரையரங்கில் 9-9-2006 அன்று நடந்த கூட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். தமிழ்த் தேசிய முன்னனி தோழர்களும் உழவர் அமைப்பு தோழர்களும் உரையாற்றினர்.
 மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் அருகில் 18-09-2006 அன்று நடந்த ஆர்பாட்டத்திற்கு தோழர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். தோழர்கள் தியாகு, ஆனந்தன் உழவர் அமைப்பு தலைவர்கள் சீமான்(எ)மீனாட்சி சுந்தரம், ம.புத்திசிகாமணி, தெ.காசிநாதன்(தமிழக உழவர் முன்னனி), சூ.இரத்தினசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முந்நூறுக்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர்.

அணையில் : தமிழ்த் தேசிய முன்னனி தோழர்கள் பெ.மணியரசன், தியாகு, அ.ஆனந்தன், ரெ.இராசு, கரிகாலன், கதிர்நிலவன், இருளாண்டி மு.கா.வையவன், மு.பா.குமரன், சோழநாடன் ஆகியோர் 06-11-2006 அன்று முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று முதன்மை அணை, சிற்றணை, மண்ணணை, வடிகால் பகுதி ஆகியவற்றைப் பார்த்தனர். அணை புத்தம் புதிது போல் வலுவூட்டப்பட்டுள்ள உண்மையைக் கண்டறிந்தனர். கேரள அரசு கிளப்பும் புரளி எந்த அளவு இன வெறி பாசிசம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். அந்த நாளில் அணை நீர்மட்டம் 134 அடியைத் தாண்டியிருந்தது. அடுத்த சில நாள்களில் அது 136 அடியை தாண்டும். அப்படித் தாண்டினால் அத்தண்ணீரைத் தேக்கிட வடிகால் மதகுகளை இறக்கும்படி தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை. வாய்பிளந்து மரண ஒலமிடுவது போல் கிடந்தன வடிகால் மதகுகள். 14-11-2006 முதல் பதினைந்து நாட்கள் வரை 136 அடிக்கு மேல் 139 அடிவரை தண்ணீர் நிரம்பி அந்த 3 அடி நீரும் அப்படியேக் கடலில் கலந்து வீணாணது.

கொடும்பாவி எரிப்பு : தமிழக அரசைப் போக்கிரி வாடகைதாரர் என்றும் முல்லை பெரியாறு அணையை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கொக்கரித்த கேரள அரசின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன் கொடும்பாவியை த.தே.பொ.க தோழர்கள் 24-11-2006 அன்று தஞ்சை, செங்கிப்படடி, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம் ஆகிய இடங்களில் எரித்தனர். ஒசூரில் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 மதுரையில் தமிழ்த் தேசிய முன்னனி சார்பில் 25-11-2006 முற்பகல் அச்சுதானந்தன் கொடும்பாவிக்கு 142 செருப்படிச் சிறப்பு செய்தனர்.

பொருளாதாரத் தடை: கேரளம் அரிசி, பருப்பு, பால், சர்க்கரை, இறைச்சி வகையறாக்கள், முட்டை, மின்சாரம், கட்டடத்திற்குத் தேவையான மணல்,கருங்கல் ஆகியவற்றிற்குத் தமிழ்நாட்டையே சார்ந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட ஒரு நாள் அடையாள சாலை மறியல் கம்பம், கோவை- பாலக்காடு சாலை, செங்கோட்டை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசிய அமைப்புகள், உழவர் அமைப்புகள் மற்றும் சனநாயக இயக்கங்கள் சார்பில்; 4-12-2006 அன்று நடந்தது.
 கம்பம் மறியலுக்;கு உழவர்களைத் திரட்டுவதற்காக 30-11-2006,1-12-2006 ஆகிய நாட்களில் பெ.மணியரசன், அ.ஆனந்தன், சங்கராபுரம் தேவராசன், இராயப்பன்பட்டி குழந்தை, பார்த்தசாரதி, ரெ.இராசு, கரிகாலன், கதிர்நிலவன் ஆகியோர் தேவாரம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மேலூர், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று உழவர்களைச் சந்தித்து சாலை மறியலுக்கு அழைத்தனர்.
  திருவாளர்கள் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு, சீமான், புத்திசிகாமணி, கே.எம்.அப்பாஸ், இரத்தினசாமி, பசீர் முகம்மது, ஜான் மோசஸ், நகைமுகன், மெல்கியோர், கட்டகுளம் இராமசாமி, நிலவழகன், இளங்கோ, பொன்.காட்சி கண்ணண், தமிழ்வாணன், பார்த்தசாரதி, தேவராசன், ரமணண் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் கம்பத்திலும், கோவை இராமகிருட்டிணன், பொழிலன், ச.அர.மணிபாரதி, அரங்க.குணசேகரன் மற்றும் சனநாயக அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் கோவையிலும், குறிஞ்சி கபிலன், துரை.அரிமா, மு.தமிழ்மணி ஆகியோர் தலைமையி;ல் செங்கோட்டையிலும் சாலை மறியல் செய்தனர்.
 அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 
             அதே நாளில் அச்சுதானந்தன் தூண்டுதலில் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த மலையாளிகள் சுமார் 3000 பேர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் தலைமையில் முல்லை பெரியாறு அணையை உடைக்க மண்வெட்டி கடப்பாரையுடன் ஊர்வலமாக அணையை நோக்கி வந்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் சமரசம் பேசி திருப்பி அனுப்பிவிட்ட நாடகமும் நடந்தது. ஆனால் அணையை உடைக்கும் திட்டத்தை அச்சுதானந்தனும் மலையாளிகளும் கைவிடவில்லை. அண்மையில் முல்லை பெரியாறு முதன்மை அணையின் கைப்பிடி சுவரை மலையாளிகள் உடைத்துவிட்டனர். தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளத்தைச் சேர்ந்த குமுளி காவல் நிலையத்தில் குற்றமனு கொடுத்துள்ளனர். இதுவரை (6-1-2007) யாரும் கைது செய்யப்படவில்லை. 
             
                முல்லை பெரியாறு அணை உரிமை பறிபோவதைக் கண்டு ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமல்ல அனைத்துத் தமிழ் நாட்டு மக்களும் ஆத்திரங்கொண்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டத்திறகுத் திட்டமிடுவோம். தமிழ்த் தேசிய முன்னனி வருங்காலப் போராட்டங்களிலும் முன்ணணியாகச் செயல்படும்.
 
முல்லை பெரியாறு அணை முழுமையும் தமிழர்க்கே !
மூணாறு தேவிகுளம் பீர்மேடும் தமிழர்க்கே !

 --
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT