உடனடிச்செய்திகள்

Tuesday, January 31, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் - த.தே.பொ.க. கண்டனம்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

 

கூடங்குளம் அணு உலைக் குறித்து அரசு அமைத்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடந்துள்ளது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

இந்து முன்னணியினரும், காங்கிரசுக் கட்சியை சேர்ந்த சிலரும் சேர்ந்துகொண்டு இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரும், தமிழக  அரசு அமைத்த பேச்சு வார்த்தைக் குழுவின் உறுப்பினருமான புஸ்பராயன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

 

அணுஉலை ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளிகளுக்கும் வன்முறை மோதல் நடப்பதாகக் காட்டி, அமைதிவழிப் போராட்டத்தை சீர்குலைக்க இந்தியஅரசு செய்கிற திட்டமிட்ட சதி இது. பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அதே நேரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அணுஉலை ஆதரவாளர்களையும் அனுமதித்தது தமிழகக் காவல்துறையின் இரட்டை அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

காங்கிரசுக் கட்சி வரும் பிப்ரவரி 4-ஆம் நாள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கான அடித்தள மாநாடு என்று அழைத்திருப்பதும் இச்சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையை ஏவி கூடங்குளம் - இடிந்தகரை பகுதியிலிருந்து போராடும் மக்களை வன்முறை மூலம் கலைக்கும் சதித்திட்டம் இதில் உள்ளது. அதற்கான முன்னோட்டமே இன்று (31.1.2012 அன்று) கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

 

இப்போராட்ட்த்தை கிருத்தவர்களின் மதப்போராட்டமாகக் காட்டி பிளவுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்துமுன்னணி களமிறங்கியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான புஸ்பராயன் மற்றும் போராட்டக் குழுவினர் மீது இந்துமுன்னணியினரை தாக்கியதாகப் போய் வழக்குப் போடப்பட்டுள்ளதானது தமிழக காவல்துறையின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.

 

போராட்டக் குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள கொடூந்தாக்குதலை கண்டிப்பதோடு புஸ்பராயன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்பப் பெறுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்திய அரசும், இந்து முன்னணியும் மேற்கொண்டுள்ள இச்சீர்குலைவு முயற்சிகளை முறியடித்து, கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தை தமிழகம் தழுவியப் போராட்டமாக தமிழ் இனத்தின் தற்காப்புப் போராட்டமாக பரந்த அளவில் நடத்த தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழினத்தை அளிக்கும் கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடவேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை தமிழகஅரசு வலுவாக ஆதரிக்க வேண்டும் எனவும், அணு உலையை மூடுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்

 கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சிதம்பரம்



மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவிய செங்கிப்பட்டி மாவீரன் முத்துகுமார் சிலைக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்த்தும் த.தே.பொ.க. தோழர்களும், மகளிர் ஆயம் தோழர்களும்..! பதிவேற்றம்: சனவரி 30, 2012

Monday, January 30, 2012

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

 

தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி சனவரி 29 அன்று மாவீரன் முத்துக்குமார், சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.

 

சென்னை

ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில்சென்னை கொளத்தூரில் எழுப்பப்பட்டிருந்த மலர் தூணுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அதியமான், காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர் ஜெர்சி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் அருண்சோரி, சதிசுகுமார், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், காரை மைந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சவுந்திரராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார்,  உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் அணி அணியாக வந்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

மாவீரன் முத்துக்குமார் உயிர் நீத்த, சென்னை இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு முத்துக்குமாரின் பெயரை வைக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழர் எழுச்சி இயக்கத்ன் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி தலைமையில் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் நடந்தது. காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட 30 தோழர்களை கைது செய்து மாலை விடுவித்தது.

 

நேற்று மாலை சென்னை திரு.வி.க. நகரில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பெ.தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் சி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

 

தஞ்சை

தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரால் நிறுவப்பட்டுள்ள மாவீரன் முத்துக்குமார் சிலைக்கு நாள் முழுவதும், தஞ்சை, திருச்சி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்த வந்த த.தே.பொ.க. மற்றும் தோழமை அமைப்புத் தோழர்களும், உணர்வாளர்களும் மலர் மாலைகள் அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தை இலவசமாக வழங்கி நின்ற புலவர் இரத்தினவேலவர் முன்னின்று மேற்கொண்டார். பங்கேற்றத் தோழர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மாலையில் எழுச்சியான கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

 

ஓசூர்

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க சுடரோட்டமும், நினைவேந்தல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சுடரோட்ட நிகழ்வில், தோழர் ஸ்டாலின் சுடரேந்திவர, திரளான த.தே.பொ.க. தோழர்களும், நிகரன், மெய்யறிவு, அகஸ்டின், வெண்ணிலா உள்ளிட்ட குழந்தைகளும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

சுட்ரோட்டத்தை தோழர் இரவீந்தரன் தொடக்கி வைத்தார். மகளிர் ஆயம் செயலாளர் தோழர் கண்மணி உள்ளிட்ட பெண் தோழர்கள் முன்னிலை வகித்தனர். முழக்கங்கள் எழுப்பியவாறு சற்றொப்ப 9 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்ற இச்சுடரோட்ட நிகழ்வு ஓசூர் நகரில் முத்துக்குமாரின் ஈகம் குறித்த விரிவான பரப்புரையாக அமைந்தது. ராம் நகரில் நிறைவடைந்த சுடரோட்ட சுடரை தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் திரு. இராம்குமார் பெற்றுக் கொண்டார். அங்கு நடந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்திற்கு, ஓசூர் த.தே.பொ.க. நகரச் செயலாளார் தோழர் இரமேசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் பழனி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிறைவில், தோழர் முருகப்பெருமாள் நன்றி நவின்றார்.

 

குடந்தை 

குடந்தையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இன்று காலை குடந்தை மேலக்காவிரி அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், .தே.பொ.க. குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், குடந்தைத் தமிழ்க் கழக அமைப்பாளர் தோழர் பேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஈரோடு வெ.இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். தோழர் பார்த்திபராசன் தலைமை தாங்கினார். தோழர் தமிழ் வரவேற்புரையாற்றினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக்குமார் நிழற்படத்திற்கு தோழர்கள் மலர் மாலை அணிவித்து, வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா, தோழர் தீரன் ஆகியோர் ஈகியரை நினைவுகூர்ந்து வீரவணக்க உரையாற்றினார்.

 

பவானி - ஒருச்சேரி

பவானி நகரம் ஒருச்சேரியில், தமிழக இளைஞர் முன்னணி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் ம.பழனிச்சாமி முன்னிலையில், தோழர் சின்னராசு தலைமையேற்க ஈழவிடுதலைக்காக சிறை சென்ற தமிழச்சி தாயம்மா மலர் தூவி ஈகியருக்கு மரியாதை செலுத்தினார். இலக்கியத் தளம் அமைப்பின் தோழர் பகலவன் சிறப்புரையாற்றினார். நிறைவில் தோழர் சேகர் நன்றி கூறினார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஊர் பொது மக்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

 

மதுரை

மதுரை செல்லூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நிடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

 

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் வீரவணக்கக் கூட்டத்தில் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

 

காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை ஈகியருக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. த.தே.பொ.க. செயலாளர் தோர் சிவ.அருளமுதன் உள்ளிட்டோர் இதில் உரையாற்றுகின்றனர்.

 

இதே போன்று, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பகுதிகளிலும் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடந்தன. ஈழத்தமிழர்களுக்காக உயிரீகம் செய்த அம்மாவீரர்களின் ஈகம் வீண்போகாது என்பதையே இது உணர்த்தகின்றது.

Wednesday, January 25, 2012

மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

 

1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

 

சென்னை

சென்னை வள்ளலார் நகர் மணிக்கூண்டு அருகிலிருந்து 25.01.2012 அன்று காலை 10 மணியளவில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியவாறு மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைந்தனர். பின்னர் அங்குள்ள ஈகியர் நடராசன், தாளமுத்து மற்றும் முனைவர் எஸ்.ஜெகதாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில் த.தே.பொ.க. சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தோழர்களிடம் மொழிப்போர் குறித்த உரையாற்றினார். இதில், செங்குன்றம் ஆ.திருநாவுக்கரசு, கிண்டி இராஜன், வெற்றித்தமிழன், நாத்திகன்கேசவன், முனைவர் வே.பாண்டியன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

திருச்சி

திருச்சி கீழப்பழூரில் த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் தலைமையில், 25.01.2012 அன்று காலை 10 மணியளவில் புத்தூர் உழவர் சந்தை முன்பு பேரணியாக புறப்பட்ட த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் உணர்வாளர்கள் ஈகி சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது  நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு, புலவர் வீ.ந.சோமசுந்தரம், புலவர் இரத்தினவேலவர், திருக்குறள் முருகானந்தம், புதுக்குடி த.இ.மு. கிளைச் செயலாளர் காமராசு, தோழர் நிலவழகன்(த.ஓ.விஇ.), தோழர்கள் தி.மா.சரவணன், குடந்தை ஈகவரசன், இனியன், செங்கொடி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

சிதம்பரம்

இந்தி எதிர்ப்புப் போரின் போது இந்திய இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளை மார்பில் ஏந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஈகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா மாலை அணிவித்தார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், த.இ.மு. நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் மற்றும் தோழர்கள் ம.கோ.தேவராசன், கோபிநாத் உள்ளிட்ட திரளான தோழர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இதில் பங்கேற்றனர்  

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

 




 

Tuesday, January 17, 2012

ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலைக்குக் காரணமான மலையாளிகளைக் கைது செய் - பெ.மணியரசன்!

ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலைக்குக் காரணமான மலையாளிகளைக் கைது செய்ய

தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள்

 

சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும் உறவினர்களும் ஆம்புலன்சு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.

 

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும் சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302) மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். 

 

சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப்  போயுள்ளார். மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார். சந்திரனை காவல்துறை விசாரித்து நடந்த உண்மைகளைப் பெற வேண்டும். மேலும் சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும் விசாரிக்க வேண்டும். 

 

இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல் மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத் தேநீர்க் கடைக்காரர்  உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

 

கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள் பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: தஞ்சை

Saturday, January 14, 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தேசியப் பேரிடர் பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் - த.தே.பொ.க.!

பேரழிவுக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை
தேசியப் பேரிடர் பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூர் கலைஞர் நகரில் 12.01.2012 அன்று கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், பா.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

“தானே“ புயல் வரும் என்று இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் கொண்டிருந்த போதும், அதற்குரிய தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் வழக்கமாக மக்களைத் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றும் பணிகளை மட்டுமே தமிழக அரசு செய்து வந்தது. மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரை வேகத்தில் புயல் காற்று கரையைக் கடக்கும் என்று தெரிந்தும் மின்சாரத்திற்குரிய ஜெனரேட்டர்கள், குடிநீர் வழங்க வாகன ஏற்பாடுகள் போன்றவற்றை உரியவாறு முன்னெச்சரிக்கையுடன் செய்து வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பேரிழப்பு நிகழ்ந்துவிட்ட நிலையில் இந்திய அரசு தமிழக அரசிற்கு இராணுவ உதவி செய்ய முன்வந்திருக்க வேண்டும்.

முந்திரி, பலா, தென்னை போன்ற பலன்தரும் மரங்கள் அடியோடு வீழ்ந்துவிட்டன. வீடுகள் தகர்ந்துவிட்டன. மின்இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் குடிநீருக்குக் கூட வழியில்லாமல் போய்விட்டது. குளம், கிணறு, அடிகுழாய் போன்றவை அனைத்தும் ஏற்கெனவே அழிந்து போய் நிலத்தடி நீரை மின்சார உதவியுடன் எடுப்பது தவிர மாற்று ஏற்பாடில்லாத அம்மக்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் தண்ணீர் இல்லாமல் பலநாள் தவியாய்த் தவித்தனர். போக்குவரத்துச் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழக அரசின் துயர்துடைப்புப் பணிகள் முழுமையாக இழப்புகளை ஈடு செய்யப் போதாது. இந்திய அரசு தேசியப் பேரிடர் பகுதிகளாகக் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை அறிவித்து முழு இழப்பீடு வழங்க வேண்டும். முழுமையாகத் துயர் துடைப்புப் பணிகளைச் செய்ய நிதி உதவி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் உண்டாக்கும் வகையில் நடைபெறும் சோதனையை நிறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் உறுதி செய்த பின்னரும், மீண்டும் மீண்டும் அவ்வணையைச் சோதிப்பது அதை உடைப்பதற்கான மறைமுக முயற்சிகள் என்றே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது.

இப்பொழுது 6 அடி விட்டமும் 800 அடி ஆழமும் கொண்ட 5 பெரும் துளைகளை அணைக்கட்டமைப்பில் பெரும் இயந்திரங்களை வைத்து இந்திய அரசு போடுகிறது. இந்தத் துளைகளை மூட ஒரு துளைக்கு 1000 மூட்டை சிமென்ட் தேவைப்படும் என்று அவர்களே கூறுகிறார்கள். அப்படியென்றால் இவை துளை அல்ல. மிகவும் ஆழமான கிணறுகள் ஆகும். அணைக் கட்டடத்தில் 5 இடங்களில் கனரக இயந்திரங்களை வைத்து 800 அடி ஆழத்திற்குக் கிணறு தோண்டினால் அந்த அணை என்னவாகும்? கேரள அரசின் அணை உடைப்பு நோக்கத்தை நிறைவேற்ற “சோதனை“ என்ற பெயரில் இந்திய அரசு களம் இறங்கியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

இந்தச் சூது முயற்சியைத் தமிழக அரசு தடுக்காததும் கண்டிக்காததும் வியப்பாக இருக்கிறது. சோதனை என்ற பெயரில் அணையைப் பலவீனப்படுத்தும் நடுவண் அரசின் செயல்பாட்டை உடன் தடுத்து நிறுத்துமாறு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

கூடங்குளம் வேண்டாம்; நெய்வேலி வேண்டும்.

தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஈடுகட்ட உடனடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத் தொகுப்பிற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.


நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 11கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கும், 9 கோடி யூனிட் மின்சாரம் கேரளத்திற்கும், 6 கோடி யூனிட் மின்சாரம் ஆந்திரப்பிரதேசத்திற்கும் போகிறது. இம்மின்சாரம் அனைத்தையும் தமிழகப் பயன்பாட்டிற்குத் திருப்பிவிடுமாறு தமிழக முதலமைச்சர் செயலலிதா இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு தமிழகம் மின் பற்றாக் குறையால் தவிப்பதை உணர்ந்து நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விட வேண்டும் என்று த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: தஞ்சை

Friday, January 13, 2012

நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்க பெ.மணியரசன் கண்டனம்!

நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு த.தே.பொ.க. கண்டனம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன் கண்டன அறிக்கை

முதலமைச்சர் செயலலிதா தமது இல்லத்தில் தமக்கு வேண்டிய சிலருடன் நடத்திய உரையாடலில்  கூறியவை என்று சொல்லி நக்கீரன் வாரமிருமுறை இதழ் அண்மையில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் எம்.ஜி.ஆர்.,  "அம்மு (செயலலிதா) மடிசார் மாமி இல்லை. மாட்டுக் கறி சாப்பிடும் மாமி. எனவே மற்ற பிராமணப் பெண்களைப் போல் அவரைக் கருதக் கூடாது" என்று எஸ்.டி.எஸ், கே.ஏ.கே., பொன்னையன் போன்றோரிடம் முன்பு ஒரு முறை கூறினார் எனறு செயலலிதா கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அ.இ.அ.தி.மு.க. தலைமை தனது கட்சியினரைத் தூண்டி விட்டு 7.1.12 அன்று சென்னை நக்கீரன் அலுவலகம் முன் போராடச் செய்தது. அ.இ.அ.தி.மு.க.வினர் நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். அலுவலகத்தைப் பூட்டினர். காவல்துறை வேடிக்கை பார்த்தது . கைது செய்வது போல் நடித்து வாகனத்தில் ஏற்றி சற்றுத் தொலைவில் கொண்டுபோய் வன்முறையாளர்களை இறக்கிவிட்டது.

தமிழகமெங்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழ்களைக் கடைகளில் இருந்து பறித்து தீவைத்து எரித்தனர். தமிழக அரசு நக்கீரன் அலுவலகத்தில் மின்சார இணைப்பையும், தண்ணீர்க் குழாய் இணைப்பையும் துண்டித்தது.

அரம்பத்தனம் செய்த அ.இ.அ.தி.மு.க.வினர் மீது வழக்கில்லை. ஆனால் நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் மீது கொலைமிரட்டல் விட்டது உள்ளிட்ட பிணையில் வரமுடியாத பிரிவுகளில் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகச் சீரழிந்து நீண்ட காலமாகிவிட்டது.  செயலலிதாவுக்கும் அது தனிப்பட்ட ஏவல் செய்கிறது.

இதழ் வணிகத்திற்காகவும் தங்களின் அரசியல் விருப்பு வெறுப்பிற்காகவும் முக்கியப் பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து வக்கிரமாகக் கட்டுரைகள் வெளியிடுவதையும், ஊகச் செய்திகளை உலவ விடுவதையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்கவில்லை.  இவ்வாறான செயல்கள் இதழ் உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்.

முக்கியப் பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கில் தவறாகச் செய்திகள் வெளியிட்டால் அவ்வேட்டின் ஆசிரியர், கட்டுரையாளர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதை விடுத்து வன்முறை ஏவுவது ஏற்கத் தக்கதல்ல.

செயலலிதா மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது உண்மையாயிருந்து அது வெளியிடப்பட்டிருந்தால், எந்த வகையில் அவரை இழிவுபடுத்தியதாகும்?
மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவான செயலா? இதற்கு செயலலிதாவும் அ.இ.அ.தி.மு.க.வும்தான் விடையளிக்க வேண்டும்.

நக்கீரன் அலுவலகம் மீது அ.இ.அ.தி.மு.க.வினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், தமிழக அரசு மின் இணைப்பு, குடிநீர்க்குழாய் இணைப்பு
ஆகியவற்றைத் துண்டித்ததையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெ.மணியரசன்
தலைவர் ,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
9443274002

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT