நீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டது; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
அன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.
செயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.
உச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.
அதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.
2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.
இந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கி தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.
பேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
பேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.
அதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.
தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா?” என்று கண்டனக் குரலில் கூறினார்.
ஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா?
மோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா!
காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி! கோபால் கோட்சே மராட்டியர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.
முதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
வெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462