உடனடிச்செய்திகள்

Sunday, July 31, 2016

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லையில் மக்கள் பெருந்திரள் உண்ணாப்போர்!


மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லையில் மக்கள் பெருந்திரள் உண்ணாப்போர்!
ஆரிய மேலாண்மையும் உலகமய வேட்டையும் இணைந்த ஓர் மக்கள் பகை கல்விக் கொள்கை ”புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரால் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரிய இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நேரடி வழிகாட்டுதலில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இக்கொள்கையை உருவாக்கி வருகிறது.

தீய நோக்கங்களுடன் கொண்டு வரப்படும் இப்புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நெல்லையில், இன்று அனைத்து சமுதாயக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மக்கள் பெருந்திரள் உண்ணாப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
நெல்லை – பாளையங்கோட்டை சவகர் திடலில், இன்று (30.07.2016) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இவ் உண்ணாப் போராட்டத்தை, “சமத்துவக் கல்விக்கானக் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. இதில், பாளை கத்தோலிக்க மறைமாவட்ட மற்றும் துறவற சபைகளின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், திருமண்டல தென்னிந்தியத் திருச்சபையின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், இரட்சணைய சேனை, அனைத்து இசுலாமிய சமாத்துகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள், சமூக – அரசியல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அதன் தலைவர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. பிரிட்டோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. கனிமொழி, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. விஜயா, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் திரு. பிரபாகர் (அ.தி.மு.க.), திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஏ.எல்.எஸ். இலட்சுமணன் (தி.மு.க.), பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மைதீன்கான் (தி.மு.க.), குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. பிரின்ஸ் (காங்கிரசு), மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் சவாகிருல்லா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்று, மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும் கேடுகளை விளக்கிக் கண்டன உரையாற்றினார்.

மாலையில், மூத்த கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி அவர்கள், உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி, புளியங்குடி செயலாளர் தோழர் க. பாண்டியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

இந்திய அரசே! காசுமீரிகள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துக! கண்டனப் போராட்டங்கள்
இந்திய அரசே! காசுமீரிகள் மீதான
தாக்குதலை உடனே நிறுத்துக!

கண்டனப் போராட்டங்கள்


காசுமீரில் வெறியாட்டம் நிகழ்த்தி வரும் இந்திய அரசைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று (29.07.2016) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா முதன்மைச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ. இராசு தலைமை தாங்கிப் பேசினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். பேரியக்க தோழர் மூ. கருப்பையா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம், எஸ்.டி.பி.ஐ. மதுரை மாவட்டச் செயாளர் திரு. அப்துல் காதர், தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் வெ. கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் பே. மேரி, பேரியக்கத்தோழர் கதிர்நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நுங்கம்பாக்கம்
---------------------------
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், கடந்த 21.07.2016 அன்று, காசுமீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. அப்துல் சமது, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மா.லெ. மக்கள் விடுதலை தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சதீசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் சாமி, ஏந்தல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
அம்பத்தூர்
-----------------------
28.07.2016 அன்று, அம்பத்தூரில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில், அதன் முன்னணித் தோழர் “மானிடமனம்” சேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரமூர்த்தி, மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், இந்திய தவ்கீத் சமாத் தலைவர் திரு. எஸ்.எம். பாக்கர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பங்கேற்றுக் கண்டனவுரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், ஏந்தல், செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசே! 
காசுமீரில் வெறியாட்டங்களை நிறுத்து!
காசுமீரிகளிடம் பொது வாக்கெடுப்பு நடத்து!

Friday, July 29, 2016

சீராய்வு முடிவுக்காகக் காத்திராமல் ஏழு தமிழர்களை 161-இன்படி விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


சீராய்வு முடிவுக்காகக் காத்திராமல்
ஏழு தமிழர்களை 161-இன்படி விடுதலை செய்க!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! 


அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனுவைக் காரணம் காட்டி, இராசீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக உள்ள ஏழு தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு தள்ளிப்போட்டுவிடக் கூடாது.

குற்றவியல் சட்டப்பிரிவு 435, மாநில அரசுக்கு வழங்கும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 02.12.2015 அன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு போட்டுள்ளது.

இச்சிக்கல் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து தொடங்கினாலும், அரசமைப்பு ஆயத் தீர்ப்புக்குப் பிறகு அது ஏழு தமிழர் வழக்கிற்கு நேரடித் தொடர்பற்றதாக மாறிவிட்டது.

குற்றவியல் சட்டப்பிரிவு 435(2) மாநில அரசுக்கு வழங்கியிருந்த தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை இந்திய அரசின் இசைவின்றி செயல்படுத்த முடியாது என அரசமைப்பு அமர்வு அளித்தத் தீர்ப்பே சீராய்வு மனுவில் விவாதிக்கப்படுகிறது. இது மாநில அரசிற்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டிச் சுருக்குகிறது என்ற ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகார எல்லை குறித்த சிக்கலாகும்.

இப்பொதுவான சட்ட சிக்கலை ஏழு தமிழர் வழக்கோடு நிரந்தரமாக முடிச்சுப் போடக் கூடாது. அவ்வாறு செய்வது, ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவுக்கு உண்மையான அக்கறையில்லை என கருதவே இடமளிக்கும்.

ஏனெனில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2011-இல் எழுந்த போது, முதலமைச்சர் செயலலிதா எழுப்பிய ஒரு முக்கியமான ஐயத்தை விவாதத்திற்குரிய இந்த அரசமைப்பு ஆயத் தீர்ப்புகூட தீர்த்திருக்கிறது.

மூன்று தமிழர் தூக்குத் தண்டனை 161-இன்படி கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி, காஞ்சி தழல் ஈகி செங்கொடி உயிரீகம் செய்த சூழலில், 29.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் செயலலிதா, “05.03.1991 நாளிட்ட கடிதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில், அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-இன் கீழ் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரத்தின்படி நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161-இன் படியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 257(1)-இன்படி கட்டளையிடுகிறது” என்பதாகக் கூறினார்.

இவ்வாறான சட்டத்தடை ஏதுமில்லை, உறுப்பு 161-இன்படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது – நீதிமன்றத் தலையீட்டிற்கும் அப்பாற்பட்டது என திட்டவட்டமாக அரசமைப்பு ஆயத் தீர்ப்பு கூறிவிட்டது.

இந்நிலையில் ஒன்றிய – மாநில அதிகாரம் குறித்த பொதுவான அடிப்படை சிக்கல் தீரும் வரை ஏழு தமிழர் விடுதலையை நிறுத்தி வைப்பது தவறான முடிவாகிவிடும். ஏனெனில், ஒன்றிய – மாநில அதிகாரப் பகிர்வு குறித்த இந்த அடிப்படை சிக்கல் சீராய்வு மனு என்ற நிலையைத் தாண்டி, ஏழு நீதிபதிகள் அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட முழு ஆயத்தின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய தேவை எழக்கூடும். அது முடிகிறவரை, எந்த ஞாயமுமின்றி ஏழு தமிழர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமில்லை.

எனவே, மாநில அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி உடனடியாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிசந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, July 25, 2016

அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும்
தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!


கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது. இதன் காரணமாக, பெருமளவிலான வெள்ள நீர் சென்னை மாநகரக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும், கனமழையால் வந்த மழை நீரும் அடையாறு ஆற்றில் வெள்ளமென வந்த நிலையில், நீரின் போக்கைத் தடுத்து சென்னை மாநகருக்குள் கட்டப்பட்டிருந்த பெரு நிறுவன ஆக்கிரமிப்புக் கட்டங்களின் காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.


செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் திடீரென திறந்துவிட்டது குறித்து தமிழ்நாடு அரசின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நிலுவையிலுள்ளது.

இந்நிலையில், தனது நிர்வாகத்திறமையின்மை மற்றும் இரவு நேரத்தில் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதுதான் சென்னை மாநகரின் வெள்ளப் பெருக்கிற்கு முதன்மைக் காரணம் என்பதை மறைத்துவிட்டு, ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் எளிய மக்களின் குடியிருப்புகள் மட்டுமே காரணம் என்று கூறிக் கொண்டு, தமிழ்நாடு அரசு திசைதிருப்பும் பணிகளைச் செய்து வருகின்றது.

சென்னை மாநகருக்குள் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளிலும், மாநகருக்குள் உள்ள பல்வேறு ஏரிகளிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமானங்கள் மீது கைவைக்க விரும்பாத தமிழ்நாடு அரசு, ஆற்றின் போக்கைத் தடுக்காமல் கரைகளில் வீடுகட்டி பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் எளிய மக்களின் குடியிருப்புகளை இடித்து நொறுக்கத் திட்டமிட்டு வருகின்றது.

அடையாறு ஆறு சென்னை மாநகருக்குள் பயணிக்கத் தொடங்கும் நந்தம்பாக்கம் தொடங்கி, கடலோடு கலக்கும் பட்டினப்பாக்கம் வரையிலான 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் பெரும் கட்டுமானங்கள் ஆற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளன என்று பல்வேறு வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மிக முகாமையாக, சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் ஓடு தளமே, அடையாறு ஆற்றின் போக்கைத் தடுத்து உருவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான செய்தி! மேலும், மணப்பாக்கம் மியாட் தனியார் மருத்துவமனை, நடுவண் அரசின் பறக்கும் தொடர்வண்டிக் கட்டுமானம் உட்பட பல கட்டிடங்களும் பல மென்பொருள் நிறுவனக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் சென்னை மாநகருக்குள்தான் ஆற்றின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

அதிலும் முகாமையாக, அடையாறு ஆற்றின் நீர் கடலுக்குள் சேரும் பட்டினப்பாக்கம் பகுதியில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதி, செட்டிநாடு நிறுவனங்களின் கட்டடங்கள் காரணமாக, ஆற்றின் ஆழம் மிகவும் குறைந்து மேடாக இருப்பதும், பல்லாண்டுகளாக முகத்துவாரப் பகுதி தூர் வாரப்படாததும்தான், ஆற்று நீர் கடலுக்குள் போக முடியாமல் தண்ணீர் பல கிலோ மீட்டர் அளவிற்கு நகருக்குள் தேங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசோ இந்த நிறுவனங்களின் கட்டுமானங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு ஆறு பயணித்து வரும் பகுதிகளில் “ஆக்கிரமிப்பு” என்ற பெயரில், எளிய மக்களை வெளியேற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
2015 _- பெருவெள்ளத்தைக் காரணம் காட்டி, காஞ்சி மாவட்டம், அனகாபுத்தூரிலுள்ள சாந்தி நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா உள்ளிட்ட பகுதிகளை இடித்துத் தள்ள தற்போது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டித்து, இப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் 650-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்கெதிரானப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, சென்னை பெருவெள்ளம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 2012ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, இதே பகுதி மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு, அதன்மேல் அடுக்ககங்களில் வசிக்கும் பணம் படைத்தோர் நடைபயணம் செல்வதற்கு ஏதுவாக, ஆற்றோர நடைபாதை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பெருவெள்ளத்தை காரணமாகக் கூறிக் கொண்டு, இதே பகுதியை முற்றிலும் இடித்து நொறுக்க திட்டமிடப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு நேர் எதிராக அடுத்த கரையில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது, ஒரு அடியைக்கூட மீட்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு, கரையின் இன்னொரு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டுள்ள பகுதியை, இடித்து நொறுக்கத் திட்டமிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
அனகாபுத்தூர் பகுதி மக்களை வெளியேற்றக் கூடாது என்று கோரி, 22.07.2016 அன்று காலை, அனகாபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில், அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தை அப்பகுதி இளைஞர்கள் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
பெண்களும் ஆண்களும் என நூற்றுக்கணக் கானோர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டு நின்று, அரசின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனகை முருகேசன், சி.பி.எம். பகுதிச் செயலாளர் தோழர் பாலன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தோழர் தமிழ்வாணன், புரட்சி பாரதம் மாநிலத் துணைச் செயலாளர் திரு. அன்பரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உரையாற்றினார். பேரியக்கத் தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்களும், அப்பகுதி இளைஞர்கள் இராசேசு, மாரி, கோபி, குப்பன், வேல், நாகராசு, மாரியப்பன், குமார், ஞானவேல் உள்ளிட்ட திரளானப் பொது மக்களும் பங்கேற்றனர்.
அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும். அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, கரைகளை வலுப்படுத்தி, சென்னை மாநகருக்குள் உள்ள தனியார் நிறுவனக் கட்டுமானங்களை அகற்றினாலே அடையாறு ஆறு தடைபடாமல் ஓடும். எனவே, தமிழ்நாடு அரசு அதைச் செய்ய வேண்டும்.

Sunday, July 24, 2016

பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது
தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டுச் சிறைகள் எந்தளவிற்கு காட்டுமிராண்டிக் காலத்தில் இருக்கின்றன என்பதற்கு சேலம் மக்கள் மன்றத் தலைவர் திரு. பியூசு மனுசை, சேலம் நடுவண் சிறையில் - சிறைக் கண்காணிப்பாளரும் சிறைக் காவலர்களும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதும் சித்திரவதை செய்ததுமே சாட்சியம்!
சேலம் முள்ளூர் கேட் என்ற இடத்தில் தொடர்வண்டி மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்ட போது பொது மக்களுக்கு மாற்று வழி அமைக்காமல் பணிகளைத் தொடங்கக் கூடாதென்று மறியல் போராட்டம் நடத்திய பியூசு மனுசு, ஈசன் கார்த்திக். முத்து ஆகிய மூவரையும், 08.07.2016 அன்று சேலம் காவல்துறையினர் தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறை அதிகாரிகளிடம் இம்மூவரும் இந்திய அரசுக் கொடியை எரித்;தவர்கள் என்றும் எனவே இவர்களை அடிக்குமாறும் காவல்துறையினர் கூறியதாகத் தெரிகிறது. அதனால் சிறைக் கண்காணிப்பாளர், இதர சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் உள்ளிட்ட 30 பேர் மிகக் கொடூரமாகத் தடியால் திரு. பியூசு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். மற்ற இருவரும் 15.07.2016 அன்று பிணையில் விடுதலையான நிலையில், பியூசுக்கு மட்டும் பிணை மறுத்து தமிழ்நாடு அரசு கடுமையாக வாதாடியுள்ளது.

அண்மையில் பிணையில வந்த பியூசு, சிறையில் தமக்கு நடந்த கொடுமைகளை செய்தியாளர்களிடம் சொன்னதுடன், தன்மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் சிறைக்குள் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

பியூசும் அவருடைய தோழர்களும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை. வாதத்திற்காக அவர்கள் அரசுக் கொடியை எரித்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், சட்டப்படி அதற்குத் தண்டனை தர விதிமுறைகள் இருக்கின்றன. அதைவிடுத்து, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை சிறை அதிகாரிகளும் காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாய் தாக்குவதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?

தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகள் எந்தளவிற்கு மனித உரிமைகளை பலியிடும் கொடூரக் கூடங்களாக இருக்கின்றன என்பதற்கு சேலம் சிறை நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டு!
அனைவரும் தம்மை ‘அம்மா’ என்றழைப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறிக் கொள்ளும் செயலலிதா ஆட்சியில், சிறைச்சாலைகள் மனித உரிமைப் பறிப்பு பலிபீடங்களாக இருக்கலாமா?

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சேலம் சிறையில் நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, அந்தக் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் அனுப்பும் கைதிகளுக்கானக் காப்புக் கூடங்கள்தான் சிறைச்சாலைகள். அவ்வாறு இருக்கும் போது, நீதிபதியால் காவலுக்கு அனுப்பப்பட்ட பியூசு மனுசுக்கு சிறை அதிகாரிகளால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது.

எனவே, பியூசு மனுசை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய நீதிபதியும், சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாகத் தலையிட்டு குற்றம் புரிந்த சிறை அதிகாரிகள் - காவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில கொடூர நிகழ்வுகளை செய்தித்தாளில் படித்துவிட்டு தாங்களே வழக்காக எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள், சேலம் சிறைத் தாக்குதல் நிகழ்வைக் கண்டு அமைதி காக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, பியூசு மனுசு மற்றும் இருவர் மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கைவிடச் செய்ய வேண்டும். மேற்கண்ட ஞாயங்களை நிறைவேற்றி நீதியை நிலைநாட்டுமாறு முதல்வரையும், சென்னை உயர் நீதிமன்றத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, July 22, 2016

வேலையில்லாதோருக்கு வேலையளித்தல், வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல் இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும். தோழர் பெ. மணியரசன் கோரிக்கை


வேலையில்லாதோருக்கு வேலையளித்தல்,
வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல்
இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை

இன்று (21.07.2016) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2016-2017 நிதிநிலை அறிக்கையில், தீர்வு காணப்படாத மிக முக்கியமான செய்திகளில் இரண்டை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன்.


1. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 92 இலட்சம். இவர்களில் பெரும்பாலோர் உரிய கல்வித் தகுதியும் சிறப்புத் தகுதிகளும் பெற்றவர்கள். இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

தமிழ்நாடு அரசின் கல்வித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. அவற்றை நிரப்ப ஒரு சிறப்புத் திட்டம் தேவை.

அடுத்து, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை தராமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள். வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே மிக அதிக எண்ணிக்கையில் வேலை தருகிறார்கள். வேலைக்கான தேர்வு என்பதைச் சூதாக நடத்தித் தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித் துறை, பி.எச்.இ.எல்., பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், பெட்ரோலியத் தொழிற்சாலைகள், நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்கவரி அலுவலகங்கள்,கடவுச் சீட்டு அலுவலகங்கள், கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள் என இந்திய அரசுத் துறையைச் சேர்ந்த அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மண்ணின் மக்களுக்கு நேர்ந்துள்ள இந்த உரிமைப் பறிப்பைச் சரிசெய்ய, தற்போது கர்நாடகத்தில் செயல்பாட்டிலுள்ள “சரோஜினி மகிசி” குழு பரிந்துரைகள் போல், தமிழ் நாட்டிலும் விதிமுறைகள் தேவை. எனவே மண்ணின் மக்களுக்கு இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலைகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு செய்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே மேற்கண்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும். ஏற்கெனவே இந்த முறைதான் செயல்பாட்டிலிருந்தது.


இந்தப் பணிகளுக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு வைக்கும் முறையைக் கைவிடுமாறு இந்திய அரசைத் தமிழ்நாடு அரசு கோரவேண்டும். இதற்கு முன்னோட்டமாகக் கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட சரோஜினி மகிசி ஆணையம் போல் ஓர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இந்த நிதி நிலை அறிக்கையிலேயே சேர்க்க வேண்டும்.

2. உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்குக் கட்டுபடியான விலை என்று சொல்லும் மோசடிச் சொற்கோவையை நீக்கி இலாப விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கை அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்வது போல் உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு விலை வரையறுக்கும்போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாட்டு அடிப்படையில் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தில் தகுதியான வல்லுநர்களையும் வேளாண் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது இடைக்கால ஏற்பாடாக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ3000 என்றும், கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ4000 என்றும் விலை நிர்ணயம் செய்து இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட இன்றியமையாத இரு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் சேர்க்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Wednesday, July 20, 2016

அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை அரித்துவாரில் அவமானப்படுத்தியதில் தருண் விசய்க்கு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து கூடிக் கும்மியடித்த தமிழ்நாட்டு மேனா மினிக்கிகள் மற்றும் வேடதாரிகளுக்கும் பங்கிருக்கிறது.

தமிழ் முகமூடியுடன் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்திடும் முயற்சியில் தருண் விசய்க்கும் ஒரு பங்கிருக்கிறது. ஏற்கெனவே அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழின் ஆசிரியராக இருந்தார்.

அந்தத் தருண் விசயோடு வேறு சில தன்னல நோக்கங்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். தருண் விசய் பற்றி அறிந்தே அவரை இங்கு அழைத்து வந்து பிரபலப்படுத்தும் பார்ப்பனிய ஆற்றல்களும் இங்கு இருக்கின்றன.
இப்பொழுது இவர்களின் முகமூடிகள் கிழிந்து அசல் முகம் அம்பலப்படும் வகையில் அரித்துவாரில் வடநாட்டினர் திருவள்ளுவர் சிலை அமைக்கக்கூடாது என்று சொல்வதுடன் நம் நெஞ்சமெல்லாம் கொதிக்கும் வகையில் நம் பேராசான் சிலையை கருப்பு நெகிழித் தாள்களால் மூடி அவரை விலங்கிட்டதுபோல் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டி, அநாதைப் பிணம் போல் குப்பை மேட்டில் வீசியிருக்கும் காட்சி தெரிவிக்கிறது.
இதுபற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், “இது திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமல்ல. இந்தியத்தேசியத்துக்கு நேர்ந்த அவமானம” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத்தேசியம்தான் திருவள்ளுவரை அவமானப்படுத்தியிருக்கிறது. அவர் நிற்க நான்கு சதுரடி நிலம் கொடுக்க மறுத்திருக்கிறது. இதுபற்றி இத்தனை நாள் ஆகியும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் முதல்வர் ராவத் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட உ.பி. ஆளுநர் இராம் நாயக், தமிழ்நாட்டைச் சேர்ந்த - மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க அவர்கள் தலையிடவில்லை.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை குப்பை மேட்டில் வீசப்பட்டது இந்தியத்தேசியத்திற்கு நிகழ்ந்த அவமானம் என எந்த வகையில் வைரமுத்து சொல்கிறார்? அவர் வேண்டுமானால், ஆரியப் பார்ப்பனியத்திற்கும் இந்தியத்தேசியத்திற்கும் தாசானு தாசனாய் இருந்து தன்னலம் காத்துக் கொள்ளலாம். தமிழினத்தின் தன்மானத்தை ஆரியத்துக்கு அடகு வைக்கும் உரிமை அவருக்கில்லை.

அடுத்து, “அரித்துவாருக்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பில்லை என்றால், இந்தியாவுக்கும் தமிழனுக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும்” என்று கூறிவிட்டு, அடுத்த வரியில் “அப்படி ஆவதை யாரும் விரும்பமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் கருணாநிதியிடம் வைரமுத்து கற்றுக் கொண்ட ‘இராசதந்திரம்” இதுதானோ?
முதல் வரியில் வீரர் போல் முழங்கிவிட்டு, அடுத்தவரியில் எதிரியின் காலடியில் வீழ்வது போல் அறிக்கை விடும் கங்காணி வசனங்களை தமிழின இளைஞர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அரித்துவாரில் சங்கராச்சாரியார் சதுக்கப் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்று அங்குள்ள பார்ப்பனப் புரோகிதர்கள் தடுத்தார்கள் என்றும், சங்கராச்சாரியார் சிலை இருக்குமிடத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கக்கூடாது என்றும் கூறியதாக செய்திகள் வருகின்றன.

அப்படியென்றால், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் - கும்பகோணம் போன்ற இடங்களில் சங்கர மடங்கள் இருக்கக்கூடாது. அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன உறவு இருக்கிறது?

தமிழர்களின் ஆன்மிக நெறிகளான சிவ நெறி - திருமால் நெறி இரண்டிற்கும், ஆதிசங்கரருடைய அத்வைதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற கேள்வியை தமிழினத்தின் உரிமைக் காப்புக் களத்தில் செயல்பட்டு வரும் நாங்கள் கேட்கிறோம்.

அடுத்து, மீண்டும் சொல்கிறோம். திருவள்ளுவருக்கு நேர்ந்த இந்த அவமானத்தை - தமிழினத்திற்கு நேர்ந்த இந்த அவமானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது அவருக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. அவர் வேறோன்றும் செய்ய வேண்டியதில்லை. திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து உரிய இடத்தில் நிறுவ வேண்டும்.

Tuesday, July 19, 2016

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை!


அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும்
திருவள்ளுவர் சிலையை மீட்டுத்
தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை! 


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் நிறுவுவதற்கு 29.06.2016 அன்று விழா ஏற்பாடு செய்த நிலையில், அங்குள்ள வடநாட்டவர்கள் திருவள்ளுவர் சிலையை இங்கு நிறுவக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

அதன்பிறகு, அரித்துவாரில் உள்ள உ.பி. மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அச்சிலை நிறுவப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால், இன்று (18.07.2016) ஆங்கில இந்து ஏட்டில் வந்த படமும் செய்தியும் மேற்படி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை கருப்பு நெகிழித் தாள்களால் (பிளாஸ்டிக்) சுற்றப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு மேற்படி வளாகத்தில் ஒரு மூலையின் கிடத்தி வைக்கப்பட்டுள்ள உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அப்படத்தைப் பார்த்த தமிழர்கள் தங்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 30.06.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், வடநாட்டில் திருவள்ளுவர் சிலை இழிவுபடுத்தப்பட்டுள்ளது – இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, அவமானமும் ஆகும், எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அச்சிலையை மீட்டு தமிழ்நாட்டில் நிறுவி பேராசான் திருவள்ளுவருக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதாவது திருவள்ளுவப் பெருந்தகைக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானத்தைத் துடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிலையை மீட்டு, உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து தக்க இடத்தில் நிறுவ வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியத்தேசியம் என்றும் தமிழர்களும் பாரத மாதா புத்திரர்கள் – புத்திரிகள் என்றும் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்களும் அவர்களுக்கு அடிவருடிப் பிழைப்பு நடத்தும் இனத்துரோகிகளும் இந்தியாவில் தமிழர்களும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்று கூறும் பொய்யைப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகளைக் காக்க – தங்கள் தன்மானத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் முகமூடி அணிந்து கொண்டு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்து வளர்த்திட செய்யும் தந்திரங்களை அடையாளங் கண்டு முறியடிக்க உறுதியேற்க வேண்டுமென்ற தமிழ் மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, July 18, 2016

இந்திய இராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:இந்திய இராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு!

தமிழ்த் தேசியப் பேரியக்கம், 
தந்தை பெரியார் திராவிடர் கழகம், 
திராவிடர் விடுதலைக் கழகம், 
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், 
இளந்தமிழகம் இயக்கம், 
சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) 
ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 15.07.2016 அன்று
வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:


மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை. 2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள்.

கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), "மோதல்" என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமை யாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி.

’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி இளைஞரின் இறுதி ஊர்வலத்திற்கு 3 இலட்சம் காஷ்மீரிகள் திரண்டு நின்றனர். அப்படி திரண்டவர்கள் மீதுதான் காஷ்மீர் காவல் துறையும், இந்திய இராணுவமும், தாக்குதல் நடத்தியுள்ளன. காவல் துறையும், மத்திய ரிசர்வ் காவல் துறையும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களைச் சேதப்படுத்தி வருகின்றனர்.

காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் அதை மீறிய வண்ணம் இருக்கின்றனர். துக்கம் அனுசரிப்பவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் இந்திய ராணுவம் தற்போது மீண்டுமொரு முறை கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையால் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மடிந்து வருகின்றனர்.

கொல்வதற்கு, காயப்படுத்துவதற்கு, சித்திரவதை செய்வதற்கு, சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் முழு சுதந்திரம் இருப்பதாகவே தெரிகிறது. இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமுற்றோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். அதில் தீவிர காயமுற்றோர் 200 பேர். ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டு காயமுற்ற 30 க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர்.

மருத்துவமனைகளுக்குள்ளும் ஆம்புலன்சுகளுக்குள்ளும் இருந்த நோயாளிகள் மீதும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீதும் ரிசர்வ் போலீஸ் படையும் காவல் துறையும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. காஷ்மீரில் இருந்து வரும் தகவல்களின்படி இஸ்லாமாபாத் மாவட்ட மருத்துவமனை, லால்போரா ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனை ஆகியவற்றின் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.


இப்படி மருத்துவமனைகளைத் தாக்குவது சர்வதேச விதி மீறலாகும். இதை கடந்த காலங்களிலும் காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவம் செய்துள்ளது. அதனால் கண்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைக்காகப் போராடுபவர்களைப் ’பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துவதும் அவர்களை நசுக்குவதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற இராணுவ சித்தாந்தத்தைப் பயன்படுத்துவதும் இப்போதும் தொடர்கிறது.

இன்றிலிருந்து 85 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 13 ஆம் நாள் காஷ்மீரிகள் டோக்ரா மன்னனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போது அம்மன்னனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 24 பேர் பலியானார்கள். அந்த வரலாறு மீண்டும் திரும்புகிறது. அவர்களின் விடுதலை தாகம் அடங்கவில்லை.

ஆயுத போராட்டத்தைப் பார்த்திராத ஒரு புதிய தலைமுறை கற்களை ஆயுதமாக்கி துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்கின்றது. தம்மில் யாருடைய உயிரும் போகலாம் என்று தெரிந்தாலும் அவர்கள் இந்திய இராணுவத்தை எதிர்கொள்கிறார்கள். வழக்கமான பாணியில், பாகிஸ்தானில் இருந்து கற்கள் வருகின்றன என்று பிரச்சாரம் செய்ய முடியாமல் ஊடகங்கள் தினறுகின்றன.

மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் ‘இண்டிஃபிடா’.
தென்னாப்பிரிக்காவின் எந்த இரயிலில் பயணிக்கும் போது விடுதலை உணர்வு பெற்றார் காந்தி என்று அறியப்படுகிறதோ அந்த இரயிலில் இன்றைய பிரதமர் மோடி பயணிக்கும் போதுதான் இந்திய இராணுவம் விடுதலைக்காகப் போராடும் மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து தில்லிக்கு வந்தப் பிரதமர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திவிட்டு காஷ்மீர் மக்களை அமைதி காக்கும்படி வேண்டுகிறார். எந்தப் பெரிய போராட்டப் பிரளயத்திற்குப் பின்னும் இந்திய அரசு
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் போனதில்லை. உறுதியளிப்பதும் பிற்போடுவதும் அதன் வழக்கமான மெத்தனம். ’காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’, ’இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை’ என்பதை இந்திய ஆளும் வர்க்க கட்சிகள், ஊடங்கங்கள் மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐ.நா. சபை என எல்லோரும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காஷ்மீரிகள் ஓய்ந்துவிடவும் இல்லை, ஓயப்போவதுமில்லை.

தமிழீழ விடுதலைப் போரின் போது இலங்கையும், இந்தியாவும் உலக அரசுகளும் எப்படி நடந்து கொண்டன என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். எனவே, இந்திய அரசு மற்றும் அதன் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை எம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நியாய உணர்ச்சி கொண்ட தமிழ் மக்கள் அனைவரின் கடமையாகும்.
தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்படுவதற்கு முன்னான புகைப்படம் உலகத் தமிழர்களை கண்ணீரில் ஆழ்த்திய போது நம்மோடு தம்மை இணைத்து கொண்டவர்கள் காஷ்மீர் மக்கள் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பெயரால் இந்திய ஆளும்வர்க்கம் காஷ்மீரிகளை நசுக்கிக்கொண்டிருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய அரசே!
• காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து!
• சிறப்பு ஆயுதப்படை சட்டங்களைத் (AFSPA) திரும்பப் பெறு!
• போலி மோதல் நாடக கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கு!
• காணாமல் போனவர்கள் குறித்த முறையான விசாரணை நடத்தி அந்த குடும்பங்களுக்கான நீதியையும் நிவாரணத்தையும் வழங்கு!
• இந்திய இராணுவமே காஷ்மீரில் இருந்து வெளியேறு!
• காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையின் போது ஐ.நா.விடம் ஒப்புக் கொண்டதற்கிணங்க காஷ்மீர் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு கண்டிடு!
”வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?”
காஷ்மீரிகளுக்கும் சரி ஈழத் தமிழர்களுக்கும் சரி விடுதலையினை விரும்பும் எந்த ஒரு தேசிய மக்களினத்திற்கும் இது பொருந்தும் என்பதை நம்மை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு நாம் நினைவு கூற விரும்புகிறோம்.

Sunday, July 17, 2016

சேலம் சிறைக்குள் சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்! தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சேலம் சிறைக்குள் சூழலியல் செயல்பாட்டாளர்
பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்!
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


சேலம் முள்ளுவாடி பகுதியில், பொது மக்களுக்கு முறைப்படி அறிவிப்பு செய்து – இழப்பீடோ மாற்று இடமோ வழங்காமல், தொடர்வண்டிப் பாதையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் முயற்சியில் இறங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்துப் போராடிய, சேலம் மக்கள் மன்ற அமைப்பாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான பியூஸ் மனுஷ் மற்றும் தோழர்கள் கார்த்திக், முத்து ஆகியோர் கடந்த 08.07.2016 அன்று, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இத்தோழர்கள் தொடர்ந்து சேலம் பகுதியில் நீர் நிலைகள் மீட்பு உள்ளிட்ட சூழலியல் சார்ந்த பணிகளையும் விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருபவர்கள் ஆவர்.

சேலத்திலுள்ள மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி ஆகிய ஏரிகளையும், அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி ஆகிய இரண்டு தெப்பக்குளங்களையும் தன்னார்வ முயற்சியில் இறங்கி, அவற்றை அழிவில் இருந்து மீட்டெடுத்து அரும்பணியாற்றியத் தோழர்கள் இவர்களே! மேலும், தர்மபுரியில் வற்றிப்போன எட்டிமரத்துப்பட்டி ஓடையை மேம்படுத்தி, இன்று அதை வற்றாத நீரோடையாக மாற்றி சாதித்துக் காட்டியும், சேலத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணையில் கேம்பிளாஸ்ட் நிறுவனம் கொட்டும் வேதியியல் கழிவுகளில் சயனைடு இருப்பதை அறிந்து, தொடர் போராட்டத்தால் அதைத் தடுத்து நிறுத்தியதும் இவர்களே!

இப்படி தன்னார்வத்தோடு பணியாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, தற்போது பொய் புகாரின் பேரில், பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து, இத்தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

முகநூலில் தன்னைத் தவறாகச் சித்தரித்து படம் வெளியிட்டதன் காரணமாக, சேலம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட சிக்கலில், மெத்தனமாகச் செயல்பட்ட சேலம் மாவட்டக் காவல்துறையினர் மீது இதே தோழர்கள் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்தக் காழ்ப்புணர்வின் காரணமாகவே, காவல்துறையினர் இத்தோழர்களைக் கைது செய்திருக்கக் கூடும் என்ற வலுவான ஐயம் எமக்கு எழுகின்றது.

கடந்த 14.07.2016 அன்று, தோழர்கள் கார்த்திக் மற்றும் முத்து ஆகியோர் பிணை வழங்கப்பட்டு விடுதலையாகிவிட்ட நிலையில், பியூஷிற்கு பிணை வழங்க தமிழ்நாடு காவல்துறையினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து பிணை கிடைக்காமல் செய்துள்ளனர்.

இதைவிடக் கொடுமையாக, நேற்று (15.07.2016) பியூஷை அவரது மனைவி மோனிகா, சூழலியல் செயற்பாட்டாளர் ஈஸ்வரன், தருமபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலா ஆகியோர் சிறைக்கு சென்று சந்தித்து போது, சிறைக் காவலர்கள் தம்மைக் கடுமையாகத் தாக்கி உள்ளதாக பியூஷ் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தோழர் பியூஷ் மனுஷ் ஊழல் செய்தோ – கையூட்டு பெற்றோ சிறை சென்றவர் அல்ல. மக்களுக்காகச் சிறை சென்றவர். நீதிமன்ற சிறைக் காவலில் உள்ள அவரையே, சட்டத்தின் மீதோ அரசின் மீதோ அச்சம் கொள்ளாமல் சிறைக்காவலர்கள் தாக்கியிருக்கின்றனர் என்றால், தமிழ்நாடு காவல்துறையினரின் திட்டமிட்டே அவரைத் தாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

எனவே, மக்களுக்காகச் சிறை சென்றுள்ள தோழர் பியூஷை, இனியும் கால தாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அவரைத் தாக்கிய சிறைக் காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்! தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!” வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ. மணியரசன் பேச்சு!
பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது
தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்!
தமிழ்நாடு அரசு உடனடியாக 
உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!”

வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் பேச்சு!


“பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – அது ஒரு நீர்த்தேக்கம்! எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்” என்று, வாணியம்பாடியில் பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

வேலூர், காஞ்சி, சென்னை மாவட்டங்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் வேட்டு வைக்கும் ஆந்திராவின் சட்ட விரோதத் பாலாற்றுப் புல்லூர் தடுப்பணையை அகற்று, தமிழர்களின் கனக நாச்சியம்மன் திருக்கோவிலை ஆந்திரா ஆக்கிரமிக்க அனுமதிக்காதே ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, வாணியம்பாடியில் “பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.07.2016) காலை எழுச்சியோடு நடைபெற்றது.

வாணியம்பாடி கனரா வங்கி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் திரு. மு. சுரேசு தலைமை தாங்கினார். தெக்குப்பட்டு திரு. ம. பாபு, வடக்குப்பட்டு திரு. ப. பிரபு, புல்லூர் திரு. க. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு. செம்பரிதி, கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுச்சியுரையாற்றினார். அவர் பேசியதாவது:

"வெள்ளைக்காரனுக்கு நாம் அடிமையாக இருந்தபோதுகூட, தமிழ்நாட்டிற்கு ஆற்று நீர் உரிமைகள் இருந்தன. ஆனால், தில்லிக் கொள்ளையர்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் சென்றபிறகு, நம் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டுள்ளது.

1892ஆம் ஆண்டு மைசூர் – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றனர். தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசு, இதை கண்டு கொள்வதே இல்லை

நேற்று (14.07.2016) ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணையைப் பார்வையிட நாங்கள் குழுவாகச் சென்றோம். அங்கு சென்ற பிறகே, அது வெறும் தடுப்பணை அல்ல, அதுவோரு நீர்த்தேக்கம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எல்லோரும் அந்த தடுப்பணை 5 அடியிலிருந்து 12 அடி வரை உயர்த்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! அங்கு, மிகப் பலமாக அஸ்திவாரம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கத்தையே உருவாக்கியுள்ளனர்.

ஆந்திரப் பொதுப்பணித்துறையினர் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

இப்போதுகூட, துப்பாக்கி ஏந்திய ஆந்திரக் காவல்துறையினர் – அதிரடிப்படையினர் நமது கனகநாச்சியம்மன் கோவிலில் இருந்த தமிழரான அர்ச்சகரை விரட்டிவிட்டு, அங்கு கடும் பாதுகாப்பைப் போட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் இதுவரை அங்கு வரவில்லை.

வெறும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் செயலலிதா கருதுகின்றார். அந்தக் கடிதம் எழுதுதல் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே!

எனவே, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று இந்தியத் தலைமை அமைச்சரிடம் சந்தித்து, இந்த அணை சட்ட விரோதமான அணை என்று உண்மைகளைக் கூறி முறையிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். நம் பொதுப்பணித்துறையினரையும் தமிழ்நாடு காவல்துறையினரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும். கனகநாச்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினரை இருக்கும்படிச் செய்ய உத்தரவு பெற வேண்டும்”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. ஜமுனா தியாகராஜன், பாலாறு பாதுகாப்பு இயக்கம் திரு. ஆ.த. ஜமீன் சவுந்தர்ராஜன், மக்கள் சட்ட உரிமைகள் கழகச் செயலாளர் திரு. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன், எக்லாஸ்புரம் ஊராட்சித் தலைவர் திரு. தேவ. சோழன், சமூக ஆர்வலர் திரு. அகஸ்டின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புல்லூர் திரு. அ. ஆஞ்சி நன்றி கூறினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் தருமபுரி விசயன், தோழர் பழ.நல். ஆறுமுகம், ஒசூர் செயலாளர் தோழர் முருகேசன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், காஞ்சிபுரம் பொறுப்பாளர் தோழர் சி. நடராசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
நிறைவில், காஞ்சிபுரம் தோழர் உலக ஒளி பாடல் ஒன்றைப் பாடி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, 14.07.2016 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், புல்லூரில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT