உடனடிச்செய்திகள்

Saturday, July 31, 2010

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி ஆற்றுநீர் உரிமைப் பிரச்சினை காவிரி பாயும் பகுதியின் உழவர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையாகும்.

1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட, வழக்கம் போல் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்திய அரசு இதிலும் கர்நாடகத்திற்கே துணை நின்றது. தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்ததோடு இந்திய அரசைப் பாதுகாக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றன.

வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர்களாகிய நாமும் கட்சிகளாக பிரிந்து லாவணியில் பங்கெடுத்து காவிரி உரிமையை இழந்துக் கொண்டிருக்கிறோம். குறுவை சாகுபடியை இழந்தோம்; சம்பாவுக்கும் நீரின்றி தவித்தோம். பின் புழுதி ஒட்டி நேரடி விதைப்புக்கு மாறினோம். தமிழக வேளாண் வல்லுனர்களும் காவிரி உரிமையைப் பெறுவதற்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடி செய்யுங்கள்; மரம் வளருங்கள்; சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள் என்று இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் நதிகளை இணைப்போம்! நதிகளை தேசியமயமாக்குவோம்! என போகாத ஊருக்கு வழி காட்டுகின்றன.

பாகிஸ்தானும், பங்களாதேசும் ஆற்றுநீரை உரிமையுடன் இந்திய அரசிடமிருந்து பெறுவது போல் காவிரி நீரை தமிழகமும் பெற வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக உழவர்களாகிய நாம் இருக்கிறோம்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூலை வரை வரவேண்டிய நீரை தமிழகம் மாதந்தோறும் கேட்டுப்பெற்றிருந்தால் குறுவைக்க ஜன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். இதைவிடுத்து, ஆடிப்பெருக்குக்காக அணையை திறப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பது ஒரு அரசியல் நாடகம். இதை நம்பி உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது சூதாட்டத்திற்கு ஒப்பானது.

ஆகவே தமிழக உழவர்களே! இன்னும் காலம் கடந்து விடவில்லை. கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் நாம் சிந்தித்தால் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். காவிரியில் நமது உரிமையை இழப்பது வேளாண்மையை மட்டும் பாதிக்காது. தமிழகத்து தொழில், வணிகம், குடிநீர் தேவை ஆகியவற்றையும் பாதிக்கும். ஆகவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஓருடம்பாய் வீறுகொண்டு எழுவோம்! காவிரி உரிமை மீட்போம்!

தமிழக அரசே! காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து! காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி! என்று கோரிக்கைகளை முன்வைத்தும், நடுநிலை தவறிய இந்திய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும், நரிமணம் பெட்ரோல், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற தமிழகத்து கனிம வளங்களை இந்திய அரசு கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 05.08.2010 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இவ்வார்ப்பட்டத்தில் திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு இனஉரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

Tuesday, July 13, 2010

PRESS NEWS:: தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி - பெ.மணியரசன் கண்டனம்!

இயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம்
தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின்
புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!
 
 
நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அவர்களைத் தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச - தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

 07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர்.

 

 எல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள்.

 

  தமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.

 

 மேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும்.

 

 10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர்;, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம்  என்று கூறினார்.

 

 சீமான் அவர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும்  இட்லரின்  பாசிச நாடகத்தைத்தான் நினைவு+ட்டுகிறது.

 


 1933-

ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்சித்தலைவராக இருந்த இட்லர், அவ்வாண்டின் மே நாள் விழாவை இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களைக் திரட்டி நடத்திவிட்டு, விடிவதற்குள் தொழிற்சங்கங்களைத் தடைசெய்ய ஆணையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார். செம்மொழி மாநாடு நடத்தியவுடன் தமிழ் இனஉரிமை அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவப் புதிய சட்டம் கொண்டு வருவோம் என்று உறுமுவதும் சீமானைச் சிறையிலடைத்ததும் இட்லரைத்தான் நினைவூட்டுகின்றன.

 

 தமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் (Out Post) கருணாநிதி மாற்றி வருவதையே  அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன. இந்த முயற்சியில்  அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார்.

 

 வரலாற்றின்  படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி அவர்கள், தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
| Thanjavur, 13.07.2010 ||
 

Friday, July 9, 2010

மீனவர்களைப் பாதுகாக்க, காவல் பொறுப்பை அய்.நா. மன்றம் ஏற்கவேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை

மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக்

காவல் பொறுப்பை அய்.நா. மன்றம் ஏற்கவேண்டும்

தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கோரிக்கை!
சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். சிங்களக் கடற்படையினர் அப்படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன்,காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் செல்லப்பன் இறந்தார்.மற்ற மூவர் காயமடைந்தனர். இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்று விட்டனர்.

இன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, அவர்கள் நால்வரின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசி விட்டனர்.

பன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது.காரணம், தமிழக மீனவர்கள் அயல்நாட்டுப் படையினரால் கொல்லப் பட்டாலோ,அவர்களின் மீன்களையும் மீன் பிடி வலைகளையும் கடலில் வீசினாலோ அவர்களை அம்மணப்படுத்தினாலோ அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஓர் அரசு இல்லை.

இந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும் தமிழர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு மட்டுமே இந்திய அரசு தமிழ்நாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழர்களின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்பதில்லை.
தமிழகத்தில் உள்ள மாநில ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, தங்களின் பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்புடியான, உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதும் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 451 அப்பாவி மீனவர்களை சிங்கள நாட்டுக் கப்பற்படை கொன்று விட்டது. இனியும் இந்த மனித அழிவு நடைபெறாமல் தடுக்க அய்.நா. மன்றம் தலையிட்டு, தமிழகக் கடலோரக் காவலை அது தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி தமிழர்களுக்கு விட்டு வைக்கப்படவில்லை. அய்.நா மன்றம் உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாள்: 9.7.20010
சென்னை.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT