உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் அறிக்கை!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் அறிக்கை!. Show all posts

Monday, February 20, 2017

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? பெ. மணியரசன் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.02.2017) நடந்த நிகழ்வுகள், அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும், தன்னலவாத – அராஜகக் கட்சிகள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சர் தேர்வு என்பது சனநாயக முறைப்படி இல்லாமல், சசிகலா ஆள்கடத்தல் கும்பலின் அராஜகத்தின் வெற்றியாக முடிந்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறிய, முதன்மை எதிர்க்கட்சி இரகசிய வாக்கெடுப்பு கோரிய போது, அ.இ.அ.தி.மு.க. உண்மையான சனநாயக அமைப்பாக இருந்திருந்தால், இரகசிய வாக்கெடுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலையை எண்ணும் முறையில் வெற்றி பெறுவது என்ன சனநாயகம்? தலைகளைக் கடத்திப் பல நாள் பதுக்கி வைத்திருந்து, சட்டப்பேரவைக்கு மந்தையாய் ஓட்டி வந்து – தன்னை வாங்கியவர்களின் கண்காணிப்பின் கீழ் கை தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது அ.தி.மு.க. பாணி சனநாயகம்!

தி.மு.க. பாணி சனநாயகம் எப்படி இருந்தது? சட்டப்பேரவைக்குள் தகராறு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வந்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய எதிர்ப்பை சனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்கு மாறாக, நாற்காலிகளைத் தூக்கி எறிவது, குப்பைக் கூடைகளைத் தூக்கி எறிவது, பேரவைத் தலைவரைப் பிடித்து இழுத்துத் தள்ளுவது, அவருடைய நாற்காலியில் தி.மு.க. உறுப்பினர்கள் போய் குந்திக் கொள்வது என்ற அராஜகங்களை தி.மு.க. அரங்கேற்றியது!

தி.மு.க. நடத்திய இந்த கலாட்டா எந்த வகையிலும், சனநாயக வழிமுறையாக இருக்காது. ஆனால், இந்த கலாட்டாவை ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படாத சொல்லாக இதுவரை “அறம்” இருந்தது. அதையும் கொச்சைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பதவிப் போட்டியில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதில் ஒரு விழுக்காடுகூட காட்டவில்லை! அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை.

தமிழ்நாட்டு இன – மொழி – பண்பாட்டு உரிமைகளுக்கு கருத்துருவாக்கம் செய்ய, களப்போராட்டம் நடத்த முன் வந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் சரியான தமிழ்த்தேசிய மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற படிப்பினையைத்தான் தமிழர்களுக்கு, நேற்றைய சட்டப்பேரவை அராஜகங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Thursday, February 16, 2017

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பைச் செய்யாதிருப்பது, அவர் தமது பதவியை சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயலலிதா – சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சில நாட்களில் தீர்ப்பு வர இருந்ததால், நேற்று (14.02.2017) வரை, தமிழ்நாடு முதல்வர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பை வெளியிடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதில் காரணம் இருந்தது.

ஆனால், நேற்று காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் தீர்ப்புச் சொல்லி, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபிறகு, இன்று (15.02.2017) மாலை வரை முதல்வர் பதவி குறித்து முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுநர் மவுனம் காப்பது, அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க. இங்கு வீங்கிப் பெருக்க வேண்டும் என கனவு காண்கிறது. இவ்வாறான பா.ச.க.வின் அரசியல் சதி நோக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் என்றால், அவர் தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டவர் ஆவார்.

அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் தமிழ்நாட்டில் நிலவுகின்ற முதலமைச்சர் பதவிச் சிக்கலுக்கு தீர்வு காண ஆளுநருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1. முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் இருவரில் ஒருவரை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்வது. அடுத்த சில நாட்களில் இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பை உடனடியாக வெளியிடுவது.

2. பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களால் வெளியில் தேர்வு செய்யப்பட்டு அவ் உறுப்பினர்களின் ஒப்புதல் கையொப்பத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க உடனயாக வாய்ப்பளிப்பது. அவர் தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கெடு விதிப்பது.

3. இப்போது முதலமைச்சராக உள்ள திரு ஓ. பன்னீர்ச்செல்வத்திற்கு தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிறுவிட முதல் வாய்ப்பளிப்பது. அவருக்குப் பெரும்பான்மை இல்லையேல் அடுத்த வாய்ப்பை திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிப்பது.

இவ்வாறான முறைகளில் ஒன்றை உடனடியாக ஆளுநர் தேர்வு செய்து, ஒரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. சண்டையை இருபக்கமும் இருந்து கொண்டு, பா.ச.க. ஊதிப் பெருக்கி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரும் சதித் திட்டத்திற்கு ஆளுநர் இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam


Wednesday, February 15, 2017

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! பெ. மணியரசன் அறிக்கை!

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகள் கூறிய கூற்று, இன்று (14.02.2017) மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் கொள்ளை வழக்கில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏற்கெனவே நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு அப்படியே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதன் பொருள், செயலலிதாவும் குற்றவாளிதான் என்பதாகும்.

தமிழ்நாட்டில் சர்வாதிகார அரசியல் - குடும்ப அரசியல் – கொள்ளை அரசியல் முடிவுக்கு வந்து, உண்மையான சனநாயக அரசியல், அறம் சார்ந்த அரசியல் மலர அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டால், இத்தீர்ப்பின் பலன் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் சிறந்த புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Sunday, February 12, 2017

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அ.இ.அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தமிழ்நாடு அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் தன் வீட்டில், தனக்கு ஆதரவுப் பரப்புரையை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆதரவாளர்களை சேர்க்கும் பணியிலேயே 24 மணி நேரமும் இருக்கிறார். “புதிய முதல்வர்” என்று அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்ட சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர்களை தலைநகருக்கு வெளியே கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார். அவரும் தனக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேலையிலேயே இருக்கிறார்.

இதனால், அரசு நிர்வாகம் செயல்படாமல் – பல தரப்பு மக்களும் துயரத்தில் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அன்றாடம் நடக்க வேண்டிய அலுவலகப் பணிகள், ஏற்கெனவே காலம் கடந்துவிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் நடைபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அரசு எந்திரத்தை முடக்கிவிட்ட நிலையில், இதுதான் நல் வாய்ப்பு என்று கருதி கேரளம், பவானியில் ஆறு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசு, பாலாற்றில் மேலும் புதிய தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா குடிநீரையும் ஆந்திர அரசு குறைத்துவிட்டது.

மிக முக்கியமாக, உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் வல்லடி வழக்குகளை எதிர் கொள்ளக்கூடிய தயாரிப்புப் பணியை, நம் தரப்பில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கு தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தவில்லை.

ஓ.பி.எஸ். வீடும், போயஸ் தோட்டமும் சர்க்கஸ் கூடாரங்கள் போல் ஆகி, தொலைக்காட்சிகளின் நிரந்தர நேரடி ஒளிபரப்பில் இருக்கின்றன.

“காபந்து முதலமைச்சர்” என்பவர் அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுகளை செயல்படுத்த கடமைப்பட்டவர். உடனடித் தேவைகளுக்காக முடிவுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர். அரசமைப்புச் சட்டத்தில், “காபந்து அரசு” என்றோ, “காபந்து முதலமைச்சர்” என்றோ ஒரு வகையினம் கிடையவே கிடையாது.

ஓர் அமைச்சரவை பதவி விலகினாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிந்தாலோ, அந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் நின்று போகாமல் தொடர்வதற்காகவே, “காபந்து அமைச்சரவை” ஏற்பாடு உள்ளது.

எனவே, இப்பொழுது ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள்தான் முதலமைச்சர்! அவர், உடனடியாகத் தலைமைச் செயலகம் சென்று தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சசிகலா அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்குகின்ற வகையில், எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள அரசுக் கடமைகள் முடங்கி மக்கள் துன்புறாத வகையில், ஓ.பி.எஸ். செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Tuesday, February 7, 2017

கோட்டை அதிகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது. பெ. மணியரசன் அறிக்கை!

கோட்டை அதிகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கு நாளை (07.02.2017) உச்ச நீதி மன்றத்தில் வருகிறது. தமிழ்நாட்டிற்குச் சட்டப்படியுள்ள காவிரி உரிமைகளை மறுத்து வாதிடுவதற்கு கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களை தில்லியில் சந்தித்து முன்தயாரிப்புகளைச் செய்துவிட்டனர். இதுபற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் நமது வழக்கறிஞர்களுக்கு முழுத்தகவல்களையும் சட்டநுணுக்கங்களையும் தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் காவிரி வழக்கில் தமிழ்நாட்டுத் தரப்பு வாதங்களை, சட்ட ஞாயங்களைச் சரியாக எடுத்துரைக்கவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. மூத்த வழக்கறிஞர் நஃபாதே பொறுப்பேற்ற பிறகு அவர் திறமையாக வாதாடி வருகிறார். அவரை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு அவருக்குத் தேவையான தகவல்களையும் நுட்பச் செய்திகளையும் தமிழ் நாடு அரசு வழங்கினால்தான் அவருடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசின் காவிரித் தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைவராக உள்ள பொறியாளர் சுப்பிரமணியம் அவர்களின் செயல்பாடுகள் என்னவென்றே தெரியவில்லை. அவருக்குப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா அல்லது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அவர் சரியாக நிறைவேற்றவில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்களும் மற்ற மூத்த பொறியாளர்களும் பொறியாளர் அ. வீரப்பன் தலைமையில் சங்கமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த மூத்த பொறியாளர் சங்கம் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்றுநீர்ச் சிக்கல்களில் தொழில்நுட்ப வகையிலும் சட்ட நுணுக்க வகையிலும் சிறப்பாகத் தாமே முன்வந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்திக் கடமையாற்றி வருகிறது.

அவர்களில் காவிரிப் பகுதியில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர்களும் இருக்கிறார்கள். அந்த மூத்த பொறியாளர்களில் தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்ற வழக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தற்சமயம் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைப் பயன்படுத்திக் கர்நாடகம் கேரளம் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே செயின்ட் ஜார்ஜ் கோட்டை அதிகாரத்தைப் பற்றியே முழுக்கவனத்தையும் செலுத்தி காவிரி வழக்கில் கோட்டைவிடக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடிக் கவனம் செலுத்தி இன்றே காவிரி வழக்கில் நம் தரப்பை வலுப்படுத்துவதற்கு தில்லியிலுள்ள நம் தரப்பு வழக்கறிஞர்களோடு உரியவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Friday, February 3, 2017

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசமைப்புச் சட்டக் காப்பாளர்களா? கவிழ்ப்பாளர்களா? பெ. மணியரசன் அறிக்கை!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசமைப்புச் சட்டக் காப்பாளர்களா? கவிழ்ப்பாளர்களா? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.01.2017 அன்று நிறைவேற்றப்பட்ட  “விலங்குகள் துன்புறுத்தல்  தடை -1960 தமிழ்நாடு  திருத்தச்சட்டத்திற்குக்” குடியரசுத் தலைவர் 31.01.2017 அன்று ஒப்புதல் தந்த சில மணிகளுக்குள், அந்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தில்லிப் பெருச்சாளி சுப்பிரமணியசாமியும் கட்டற்ற கருணைக் கடல்கள் என்று கூறிக்கொள்ளும் கழுகுகள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தன.

அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல் உடனடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக்மிஸ்ராவும் ரோகிண்டன் எப் நாரிமனும்  கிட்டத்தட்ட முழு விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

வழக்கம்போல் அசட்டையாக இல்லாமல் இந்தத் தடவை தமிழ்நாடு அரசு வலுவான வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து அதை எதிர்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பராசரன்,  ராகேஷ் துவிவேதி, சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வாதப் போர் நடத்தினர்.

மான வெட்கமே இல்லையா? மனச்சான்று இல்லையா?

நீதிபதி தீபக்மிஸ்ரா, தமிழ்நாடு வழக்கறிஞர் பராசரனை விளித்துப் பேசியது மிகவும் கவனிக்கத்தக்கது.

”பராசரன், உங்கள் ஆட்சியாளர்களுக்குச் சொல்லுங்கள், நாகரிகச் சமூகத்தில் சட்டம் ஒழுங்குதான் முதன்மையானது. அரசமைப்புச் சட்டத்தின் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பு உச்சநீதிமன்றம்! அது ஒரு செய்தியை முடிவுக்குக் கொண்டு வந்தபின் அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும்; அம்முடிவைச் செயல்படுத்த வேண்டும். நாங்கள் காவிரி வழக்கில் இதைக் கூறினோம்!”

காவிரி வழக்கில் தீபக்மிஸ்ரா கொடுத்த தீர்ப்புகளைக் கழிவறைக் கடிதாசிக்குக் கூடப் பயன்படாது என்று குப்பைக் கூடையில் வீசினர் கர்நாடக ஆட்சியாளர்கள்.

அடுத்தடுத்து உச்சநீதிமன்றம்  தமிழ்நாட்டிற்குத் திறந்து விடச்சொன்ன காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்று கர்நாடக ஆட்சியாளர்கள் ஒளிவுமறைவின்றி அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உலகறிய உச்ச நீதிமன்றத்தை இழிவுபடுத்தினர்

அதுமட்டுமல்ல தமிழர்களுக்குச் சொந்தமான 40 உலாப் பேருந்துகளையும் 150க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் மற்றும் மகிழ்வுந்துகளையும் கன்னட வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கினர். எரிந்த தீ தானே அனையும் வரை அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை கர்நாடகத் தீயணைப்புத் துறையினர்!

கர்நாடக ஆட்சியாளர்களின் உச்சநீதிமன்ற அவமதிப்புச் செயல்கள்  மீதும் வன்முறைகளுக்குத் துணைநின்ற அட்டூழியத்தின் மீதும் இதே தீபக்மிஸ்ரா அமர்வு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர் அமர்வு தான் காவிரி வழக்கை விசாரித்து வருகிறது.

தானே முன்வந்து தீபக்மிஸ்ரா அமர்வு கர்நாடக முதலமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்கலாம்; ஏன் செய்யவில்லை?

இப்போது - தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த மக்கள் எழுச்சியைக் கண்டிக்கிறது தீபக்மிஸ்ரா அமர்வு. 2014-இல் சல்லிக்கட்டைத் தடை செய்ததை எதிர்த்துப் போராடலாமா என்று கேட்கும் அவர், காவிரி வழக்கு நடந்த போது மானத்தை மறந்து விட்டாரா? தமிழர்களைப் போன்ற அப்பாவிகளைப் பார்க்கும் போது தான் அவருக்கு மான உணர்வு வருமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மோடி அரசு வாதிட்டது. அதற்காகத் தனி விவாதம் நடத்தி, அதிகாரம் உண்டு என்று தீபக்மிஸ்ரா அமர்வு தீர்ப்பளித்தது.  பிறகு ஏன் அவர் அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அமைதியாகிவிட்டது? நாங்கள் தமிழர்கள் என்பதாலா? நீங்களும் மோடி அரசு போல் இனப்பாகுபாடு பார்க்கிறீர்களா?

தீபக்மிஸ்ரா அவர்களே, இறுதி அதிகாரம் மக்கள் கையில் தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்திடம் இல்லை! இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து வரும் கர்நாடகத்தின்மீது பரிவு காட்டி, அரசமைப்புச் சட்டத்திற்கும் நீங்கள் துரோகம் இழைத்துள்ளீர்கள். நீங்கள் அரசமைப்புச் சட்டக் காப்பாளராக இல்லை கவிழ்ப்பாளராக இருக்கிறீர்கள்.

“அமைதியாகவே சென்றாலும் சாலையில் அணிவகுத்துச் செல்ல அனுமதித்தது ஏன்” என்று தீபக்மிஸ்ரா கேட்டார். அதற்கு, “அரசமைப்புச் சட்ட உறுப்பு 19-இன் கீழ் அமைதியாக அறவழியில் போராடும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் மறுமொழி கூறினார்.

உடனே நீதிபதி ரோகிண்டன் எப் நாரிமன் ”உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டைத் தடை செய்து 2014 - இல் தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை எதிர்த்து அமைதியாகக் கூட போராடக்கூடாது” என்றார்.

ஜூனியர் நாரிமன் அவர்களே, துள்ளிக்  குதிக்காதீர்கள்! உங்களின் தமிழின வெறுப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாக அமைந்து விடக் கூடாது!

தமிழ்நாட்டில் நடந்த சல்லிக்கட்டில் நான்குபேர் இறந்து விட்டார்கள்” என்று தீபக்மிஸ்ரா, தமிழர்கள் மீது கருணை காட்டுவது போல் பேசியதற்கு “ டெல்லி கிரிக்கெட்டில் கூட ஒருவர் இறந்து விட்டார். அதற்காக அதைத் தடை செய்யலாமா” என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மிகச் சரியாக எதிர்வினா எழுப்பினார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 29(1) பண்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு தருகிறது என்று முகுல் ரோத்தகி வாதிட்டதை எதிர்த்த தீபக்மிஸ்ரா “சல்லிக்கட்டு என்பது பண்பாட்டு நடவடிக்கையா என்று பார்ப்போம்” என்று உறுமிவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

தமிழர்களே, சல்லிக்கட்டு நடத்த சட்டம் வந்துவிட்டது என்று நாம் கவனக்குறைவாக இருந்திடக்கூடாது. எச்சரிக்கை தேவை! விழிப்புணர்ச்சியும் எழுச்சியும்தான் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Saturday, September 24, 2016

பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!


பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும்

செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!

பாறையைப் பிளந்து கொண்டு விதைமுளைப்பது போல், தமிழினஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு“தமிழ் மக்கள் பேரவை” உருவாகியிருப்பது,உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம்குளிரும் செய்தியாகும்.

பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும்வெகு மக்களை ஒருங்கிணைத்துக்கொண்டு கூட்டுத் தலைமையின் கீழ்உருவாக்கியிருக்கும் “தமிழ் மக்கள்பேரவை”க்கு தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் மனம் நிறைந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர்விரோதப்போக்குகளை ஈழத்தில் வாழும்தமிழ் மக்கள் புரிந்து கொண்டு, “தமிழ்மக்கள் பேரவை”யால் முன்னெடுக்கப்படும்எழுக தமிழ் பேரணியில், தமிழ் சொந்தங்கள் பங்கெடுக்க வேண்டியது ஒவ்வொருதமிழரதும் வரலாற்றுக் கடமையாகும்.
தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்களப்படையாட்கள் போர் முடிந்த நிலையில்,கடந்த ஏழாண்டுகளாகத் தமிழர்களின்விளை நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், வீடுகளை வன்கவர்தல்செய்தும் புதிய வகையில் இன அழிப்புப்போரைத் தொடர்கின்றனர். இராசபட்சேஆட்சியில் நடந்த அதே சிங்களப்படையின்வன்கவர்தல்களும் ஆக்கிரமிப்புகளும்மைத்திரி – ரணில் ஆட்சியிலும்தொடர்கின்றன.
ஈழத்தின் அதிகரித்த ராணுவ பிரசன்னம்காரணமாக மக்களின் சுதந்திரமானநடமாட்டம் பாதிக்கப்பட்டிருப்பதோடுகுடியியல் (சிவில்) நிகழ்வுகளில்இராணுவத்தின் தலைகீடும் நெருக்கடியும்தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்கண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள்அனைத்தும் விலக்கப்பட்டு தமிழர்களின்பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள்திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் பேரவையின் கோரிக்கை உலகஅரங்கில் ஏற்கப்பட வேண்டிய மனிதஉரிமை நீதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைஇராணுவமயமாக்கிக் கொண்டுள்ளஅதேவேளை அவற்றில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத் திணித்துதமிழர் தாயக அழிப்பு வேலையை சிங்களஅரசு இன்றும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர்தாயகம் என்ற அடிப்படை உரிமையைப்பறிக்கும் வகையில் சிங்களர்களைமைத்திரி – ரணில் அரசு குடியேற்றிக்கொண்டுள்ளது.
இந்து மற்றும் கிருஸ்தவ, இசுலாம்மதங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின்தாயகத்தில் சிங்கள பௌத்தகோயில்களைப் புதிது புதிதாக எழுப்பிக்கொண்டுள்ளார்கள். இந்துக் கோயில்களில்புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்.இவ்வாறான தமிழர் ஆன்மிக அழிப்புநடவடிக்கைகளை மைத்திரி – ரணில் அரசுஉடனடியாகக் கைவிட வேண்டும்.
போர்க்காலத்தில் நடந்த தமிழினப்படுகொலைக் குற்றங்கள், காணாமல்போன தமிழர்கள் என்ற தலைப்பில்அழிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்கள் –அதற்கான பொறுப்பாளிகள் ஆகியவற்றைவிசாரித்து, நடந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர - குற்றவாளிகளைத்தண்டிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம்உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
“தமிழ் மக்கள் பேரவை” – நாளை (24.09.2016)காரி(சனி)க்கிழமை யாழ்ப்பாணத்தில்நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும்“எழுக தமிழ்” பேரணி, தமிழர் அரசியல்செயல்பாட்டில் புதுக்குருதி பாய்ச்சும் என்றுஉறுதியாக நம்புகிறோம்.
இப்படிப்பட்ட வடிவிலான மக்கள் அமைப்பும்,மக்கள் திரள் போராட்டங்களும்தான்தமிழர்களுக்கான உண்மையான –உறுதியான அரசியல் தலைமையைஉருவாக்கும். தற்சமயம் தமிழீழத்தில்சிங்கள ஆட்சியாளர்களின் அரவணைப்பில்வலம் வந்து கொண்டிருக்கும் கங்காணித்தலைமைகளைப் புறந்தள்ளும்.
கூட்டுத் தலைமையில் சனநாயகஉள்ளடக்கத்தோடும் சமூகப் பன்மைகளைஏற்கும் உளவியலோடும்உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மக்கள்பேரவை”யின் பேரணியில், பல இலட்சம்தமிழ் மக்கள் கலந்து கொண்டு உலகத்தின்கவனத்தை ஈர்க்க வேண்டும். உலகம்வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியல் திறன் காட்டிசாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கைஎமக்கிருக்கிறது.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT