உடனடிச்செய்திகள்

Tuesday, December 27, 2016

கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்!


கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்!

1968ஆம் ஆண்டு, நாகை மாவட்டம் - கீ்ழ்வெண்மணியில் நிலபிரப்புத்துவ சாதி ஆதிக்க வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட 44 விவசாயத் தொழிலாளிகளின் நினைவிடத்தில், 25.12.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
 தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. தனபாலன், தோழர்கள் தை. செயபால், கா. அரசு, கா. சித்திரைச்செல்வன், ச. கோவிந்தசாமி, கீ. இசைவாணன், ச.பொ. முருகையன், சி. வைரக்கண்ணு, மு. பாரதி, நா. ஞானசேகரன், வழக்கறிஞர் இ. தனஞ்செயன், இரஜினி, கா. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தோழர்கள் பேரணியாகச் சென்று, நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

கீழ்வெண்மணி ஈகிகளுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, November 9, 2016

500 – 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பு: கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா? கி. வெங்கட்ராமன் அறிக்கை!


500 – 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பு: கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நேற்று (08.11.2016) நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

கருப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.

மோடியின் இந்த அறிவிப்பு உண்மையில் கருப்புப் பணத்தை தடுப்பதற்கு உதவாது.
ஏனெனில், கருப்புப் பணப் புள்ளிகள் தங்கள் சட்ட விரோதமான பணத்தைப் புழங்கவிடும் முறையே மனை வணிகம், தங்கப் பதுக்கல், ஊக வணிகம், பங்குச்சந்தை, பாரதிய சனதா – காங்கிரசு போன்ற தேர்தல் கட்சிகள் ஆகியவைதான்!

கருப்புப் பணப் பேர்வழிகளின் பணத்தில் புழங்கும் முதன்மைத் தேர்தல் கட்சியே பாரதிய சனதாதான். அதன் தலைமை அமைச்சர் கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார் என்று அப்பாவிகள்தான் நம்பக்கூடும்!

கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், கண்டெய்னர் லாரிகளில் பணத்தைக் கடத்துபவர்கள் ஆகியோர் தங்கள் கருப்புப் பணத்தில் பெரும் பகுதியை நேரடியாக, பொய்க் கணக்குகளின் வழியே வங்கிகளின் மூலமாக வெள்ளையாக்கிக் கொள்வார்கள். இன்னொரு பகுதியை, தங்கள் கையாட்கள் மூலமாக தனித்தனியே பிரித்துக் கொடுத்து வெள்ளையாக்கிக் கொள்ள முடியும்.

இதைவிட, சுவிட்சர்லாந்திலோ பனாமாவிலோ வேறு இது போன்ற நாடுகளிலோ வங்கிகளில் கருப்புப் பணம் சேர்த்தவர்கள் மோடியின் அறிவிப்பினால் ஒரு துளியும் பாதிக்கப்படப் போவதில்லை!

கடந்த 2006ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து வங்கிகளில் – இந்தியர்கள் செலுத்தியிருந்த 23,000 கோடி ரூபாய் தொகை, வரலாறு காணாத வகையில் - கடந்த சூலை (2016)யில், 8,392 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டதாக, சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, கருப்புப் பணக்காரர்களின் பணப்பதுக்கலின் வடிவம்தான் மாறி இருக்கிறதே தவிர, பணப்பதுக்கல் குறையவில்லை!

பத்தாண்டுகளுக்கு முன் இதேபோல், ஆண்டு குறிக்கப்படாத 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அப்போதும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவது என்பதுதான் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் அந்த நடவடிக்கையினால் கருப்பபுப் பணக்காரர்கள் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. மக்கள்தான் அவதிப்பட்டார்கள். அதன்பிறகு கருப்புப் பணப்புழக்கம் பல மடங்கு அதிகரித்துவிட்டதை நாடு கண்டது.

மோடி அரசு கருப்புப் பணக்காரர்களின், கள்ளச் சந்தைப் பேர்வழிகளின் காலில் விழுந்து - வரிச் சலுகை கொடுத்து - அவர்கள் பெயர்களை வெளியட மாட்டோம் என உறுதியளித்து கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை அறிவித்தது. அதனால் அதிகம் போனால் 65,000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மட்டுமே வெளியில் கொண்டு வந்ததாகக் கணக்குக் காட்டியது.

இந்திய அரசின் சேம வங்கியின் கணக்குப்படியே, இந்தியாவிற்குள் இன்றும் புழங்கும் கருப்புப் பணம் 10 இலட்சம் கோடியைத் தாண்டும்! சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்புப் பணம் இந்தக் கணக்கில் வராது. இந்த வகையில் மோடி அரசு கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை மூடி மறைத்து திசை திருப்புவதற்காக இந்த புது அறிவிப்பை மோடி வெளியிட்டுள்ளார்.

இன்னும் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை ஏ.டி.எம்.மிலிருந்து ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுக்க முடியாது என்றும, அதற்குப் பிறகு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேலும் – ஒரு வாரத்தில் 20,000 ரூபாய்க்கு மேலும் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எளிய மக்களையும், சிறு வணிகர்களையும், சிறு தொழில் முனைவோரையும்தான் அதிகம் பாதிக்கும்.

பாக்கித்தான் பயங்கரவாதிகள் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுவிட்டார்கள் என்று ஒட்டு மொத்த சிக்கலையும் அவர்கள் மீது சுமத்தி மிகைப்படுத்துவதாகும். இந்திய சேம வங்கியின் அறிவிப்புப்படியே 2011லிருந்து 2016 வரை இந்தியாவின் பொருள் உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரித்திருக்கும்போது, 40 விழுக்காடு பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யப்பட்டது. இதுவே பண வீக்கத்திற்கு – விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடியது.

இந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஐந்தாண்டுகளில் 76 விழுக்காடும், 1000 ரூபாய் நோட்டுகள் 109 விழுக்காடும் புழக்கத்தில் வந்துவிட்டதாக திடீரென்று விழித்துக் கொண்டது போல், இந்திய சேம வங்கி அறிவிக்கிறது. கணக்கில் வராதக் கருப்புப் பணப் புழக்கமே இதில் அதிகம்! 

ஆனால், எல்லாமே பாக்கித்தான் பயங்கரவாதிகளின் கள்ள நோட்டால் வந்ததுபோன்ற பொய் சித்திரத்தை தீட்டுவதற்கு மோடி அரசு முயல்கிறது.

இதற்கு மாற்றாக, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பணப் பதுக்கலையும், கருப்புப் பணப் புழக்கத்தையும் எளிதாக்குமே தவிர, தடுத்து விடாது!

தமிழ்நாட்டில், தஞ்சை – அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தேர்தலில் புழக்கத்தில் விடப்படும் கண்டெய்னர் லாரிப் பணத்தை இது தடுத்துவிடுமா என்று பார்த்தால் அதுவும் நடக்காது. பதுக்கி வைத்த ரூபாய் நோட்டுகளை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளும் முகவர்களாக வாக்காளர்களையே மாற்றிவிடும் வாய்ப்பு இதில் திறந்துவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டுத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பதவி அரசியல் கட்சிகள் 500 ரூபாய்க்கு பதிலாக 1,000 ரூபாயைக் கொடுத்தால், அதைப் பெற்றுக் கொண்டு மக்களே திசம்பர் 30-க்குள் அதனை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த வகையில், கருப்புப் பணக்காரர்களின் கையாட்களாக பொது மக்களே மாற்றப்படுவார்கள். இது புழங்கும் கருப்புப் பணத்தை விரிவாக்குமே தவிர குறைக்கப் பயன்படாது!

மோடி அரசின் உண்மையான நோக்கம், ஒன்று, கருப்புப் பணத்திற்கு எதிரான தனது தோல்வியை மறைத்து திசைதிருப்புவது. அடுத்தது, எல்லாவற்றையும் பாக்கித்தான் பயங்கரவாதத்திற்கு எதிராகத் திருப்புவதன் மூலம் ஒரு பொருளியல் அவசர நிலையையோ – வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான அவசர நிலையையோ அறிவித்து – அனைத்து சனநாயக உரிமைகளையும் முடக்குவற்கு முன் தயாரிப்பு செய்வது. மூன்றாவதாக, பாக்கித்தான் எதிர்ப்பு – முஸ்லிம் எதிர்ப்பு என்ற தனது வழக்கமான இந்துத்துவ அரசியலை நடத்தி உத்திரப்பிரதேசத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற தேர்தல் கணக்குப் போடுவது.

இதைத் தவிர, மோடியின் அறிவிப்பினால் மக்களுக்கு எந்த நல்ல பயனும் விளையப் போவதில்லை.  

தமிழ்நாட்டு மக்கள் இதில் விழிப்புடன் இருந்து, தங்கள் வாழ்வுரிமையையும் சனநாயக உரிமையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இன்னணம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, October 28, 2016

பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற அலட்சியத்தால் உயிரிழந்தாரா? தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை !


பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற அலட்சியத்தால் உயிரிழந்தாரா? தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை !

கடந்த 24.10.2016 அன்று, அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்து, இரங்கல் அறிக்கை அளித்தேன்.

தற்போது, தோழர் மூர்த்தி அவர்கள் அலிகர் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் உயிரிழக்க நேர்ந்தது என்று வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

கடந்த 23.10.2016 அன்று காலை அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மூர்த்திக்கு அன்று மாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக் கட்டியை அகற்றியிருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலை 9 மணிக்கு அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கிறது என்றும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர்.

சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் உடனடியாக வரவில்லை. காலதாமதமான பின் அங்குள்ள தமிழர்கள் முயற்சியால் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்துள்ளார். அவர் உயர் சிகிச்சை அளிக்க தில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளார். அதற்கான ஆம்புலென்ஸ் மற்றும் மருத்துவர்கள் ஏற்பாடு செய்ய மிகவும் காலதாமதமாகி இரவு 7 மணிக்கு மேல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

காலையிலிருந்து சிறுநீர் பிரியாமல் துன்பப்பட்ட பேரா. மூர்த்தி மிகவும் உடனடி சிகிச்சை அளிக்காமல் மிகவும் காலதாமதமாக ஆம்புலன்சில் ஏற்றிய போது இறந்துவிட்டார். மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்கள்.

அலிகரிலிருந்து 2.30 மணி நேர பயணமுள்ள தில்லி உயர் மருத்துவமனைக்கு கொண்டு போகாமல் பல மணி நேரம் தாமதப்படுத்தியதால் பேரா. மூர்த்தி அவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. தமிழர் என்பதால் இந்த அலட்சியமா?

தமிழ்நாடு அரசு, உடனே தலையிட்டு அலிகர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரித் தலைமையிடம் அறிக்கை கோரவேண்டும்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 

இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, October 27, 2016

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - பெ. மணியரசன் உரை!

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் உரை!


சிங்கப்பூரின் மேனாள்  குடியரசுத் தலைவரான -_ தமிழர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள், கடந்த 22.08.2016 அன்று தமது 92ஆவது அகவையில், சிங்கப்பூரில் காலமானார். தஞ்சைத் தமிழ்ச் சங்கம் சார்பில், அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 26.09.2016 மாலை தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, “புதிய பார்வை” இதழ் ஆசிரியர் முனைவர் ம. நடராசன் தலைமை தாங்கினார். தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிரீகம் செய்த சங்கர், உண்ணாப்போர் நடத்தி உயிரீகம் செய்த திலீபன் ஆகியோரின் படங்களுக்கு, தலைவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி, மெழுகு திரி ஏற்றி நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் வரவேற்றார். 
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள், திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைத் தலைவர் தோழர் சி. மகேந்திரன், நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, ம.தி.மு.க. பொறியாளர் வி. விடுதலைவேந்தன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்ச்சியை, பேராசிரியர் வி. பாரி ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பேசியதாவது:
“1999ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகள், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக பணியாற்றிய எஸ்.ஆர். நாதன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களின் பன்முக ஆளுமை குறித்து, அவர் மறைந்த பிறகே நான் அறிந்து கொண்டேன். சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றதும் அவரே என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் நாடான சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக இருந்த ஒரு தமிழர், கல்வியில் சிறந்து விளங்கி, மொழிபெயர்ப்பாளர் பணியாற்றி, பல்வேறு நாடுகளில் தூதராகப் பணியாற்றி பல்கலைக்கழகத் துணை வேந்தராக விளங்கி பன்முக ஆளுமை கொண்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார். பள்ளிக்கல்வியில் தோல்வியுற்று, பின்னர் சொந்த முயற்சியில் தொலைக்கல்வி கற்று அரசியல் வித்தகராக, ஆய்வாளராக உயர்ந்திருக்கிறார். அவரது இந்தத் தன்முயற்சி நம் இளைஞர்களுக்கு உந்து விசை அளிக்கும்.
அவரது இறுதி ஊர்வலத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டதையும், சிங்கப்பூர் அரசு சிறப்பாக அவருக்கு நன்றி தெரிவித்ததையும் இங்கு, இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் காட்டிய ஆவணப்படம் விளக்கியது.
தமிழ் மக்கள் சிங்கப்பூர், மலேசியா, தென்னாப் பிரிக்கா என பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தாய்த்தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையே குருதி ஓட்டம் போன்ற உயிரோட்டமுள்ள தொடர்பு இல்லை!
உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு ஒரு காப்பகம் போல் தாய்த்தமிழ்நாடு விளங்க வேண்டும். இவ்வாறான தமிழர் பன்னாட்டு உறவு உருவாகிட, வளர்ந்திட தமிழர் சர்வதேசியம் தேவை.
இவ்வாறு உலகத் தமிழர்கள் அனைவரும், எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒரு சர்வதேசியத்தை _- தமிழர் சர்வதேசியத்தைக் கட்டி வளர்க்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். 2011ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்ட போது, அந்த நிகழ்வில் இதை நான் கூறினேன். மீண்டும் அதை வலியுறுத்துகிறேன். 
அப்படி, நமக்குள் ஒரு சர்வதேசியம் இருந்தால்தான், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு _- ஒருவருக்கொருவர் உந்து விசையாகப் பணியாற்ற முடியும். இல்லையெனில், நாம் துண்டு துண்டாகத்தான் சிதறிக் கிடப்போம்.

தமிழீழத்தில் நம் இன மக்கள் இனப்படுகொலை செய்த போது, அதை உலகமே வேடிக்கைப் பார்த்தது. சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த்தது.
எனவே, இனி நமக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது. சர்வதேச சமூகம் நம்மை திரும்பிப் பார்ப்பதற்கு, நாமொரு சர்வதேசியமாக அதாவது,- தமிழர் சர்வதேசியமாக செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
சீனர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆதிக்க மனப் பான்மை உண்டு. அவர்கள் பழம்பெருமையில் திளைப்பவர்கள். தங்கள் பண்பாடுதான் சிறந்தது, தங்கள் மொழி தான் சிறந்தது, உலகில் சிறந்த இனம் _- தங்கள் ஹன் தேசிய இனம்தான் என்ற உளவியலை அவர்கள் எப்பொழுதும் பெற்றிருப்பார்கள்.

அப்படிப்பட்ட சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், இந்தியாவில் தமிழுக்கு என்ன நிலை என்று எண்ணிப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. ஆதிக்க மனப்பான்மை கொண்ட சீனர்கள்கூட, தமிழ் மொழியை அங்கீகரிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஏன் இந்த நிலை இல்லை?
உலகத்தில் சீனர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் சீன நாடு அதில் தலையிட்டு, அங்கு சீனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், உலகத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அந்தத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டுத் தமிழர்களால் தலையிட முடியவில்லை. ஏனெனில், தமிழ்நாடு இறையாண்மையுள்ள ஒரு தேசமாக இல்லை. தமிழ்நாடு ஐ.நா. மன்றத்தில் குரலெழுப்ப முடியாது. தமிழர்கள் தங்களுடைய மக்கள் வலிமையை வைத்துத் தமிழ் நாட்டில் போராடினால்தான், உலகின் கவனத்தை ஈர்க்க முடியும்.
150 கோடி மக்கள் பேசும் மொழி சீன மொழி. அந்த இனம் பெரும்பான்மையாக உள்ள சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே பேசாத ஆரியர்களின் சமற்கிருத மொழியைத் தமிழ்நாட்டில் திணிக்கிறார்கள். சமற்கிருதம் படி அல்லது அதன் குட்டி மொழியான இந்தியைப் படி என்கிறார்கள். சமற்கிருதம் யாருடைய தாய்மொழி? யாருடைய பேச்சு மொழி? எல்லா துறைகளிலும் அந்த மொழியின் மேலாண்மையை நிறுவ இந்திய அரசு ஏன் துடிக்கிறது?
சீனர்கள் தமிழ் மீது அச்சப்படாமல், தமிழை ஆட்சி மொழியாக - கல்வி மொழியாகத் தொடர வாய்ப் பளித்தனர். ஆனால், இந்தியாவோ தமிழைக் கண்டு அச்சம் கொள்கிறது. தமிழை ஒடுக்கியே -_ நசுக்கியே வைத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறது. அதனால்தான் தஞ்சாவூரின் பள்ளிகளில்கூட, சமற்கிருதத்தைத் திணிக்க _- இந்தியைத் திணிக்க இந்திய அரசு திணிக்கிறது. ஆரியம் எப்பொழுதும் சனநாயகத்தை மதிக்காது; சனநாயகத்தை விரும்பாது. அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே முனையும்.

இங்கே தஞ்சையிலும் - சென்னையிலும் உள்ள பள்ளி _- கல்லூரிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம் இருக்கிறது. மக்களின் அறியாமைப் பயன் படுத்தி, மக்களிடம் உள்ள அண்டிப்பிழைக்கும் கோழைத்தனத்தைப் பயன்படுத்தி, தமிழை சொந்த மண்ணிலேயே அழிக்கத் துடிக்கின்றனர். இந்த ஆதிக்க நிலையை முறியடிக்க வேண்டும்.
இந்தியாவின் ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே வாழ வேண்டும் -_ தங்கள் மொழி மட்டுமே வாழ வேண்டும் என்று, சிறிதளவுகூட சனநாயகம் உணர்வு இல்லாத ஆரியச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். அதனால்தான், கடைக்கோடி கிராமங்களில்கூட இந்தியைத் திணிக்கிறார்கள். இதனை நாம் ஒன்றுபட்டு எதிர் கொள்ள வேண்டும்.
திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களுக்க வணக்கம் செலுத்தும் வேளையில், நம் சொந்த மண்ணில் தமிழ் மொழி உரிமை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்! திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், உலகத் தமிழர் பேரமைப்பு திரு. குபேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.Tuesday, October 25, 2016

பேராசிரியர் து. மூர்த்தி மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்!


பேராசிரியர் து. மூர்த்தி மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

பேராசிரியர் முனைவர் து. மூர்த்தி அவர்கள், நேற்று (24.10.2016) புதுதில்லி மருத்துவமனையில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

அலிகர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ் பரப்பும் பணியை மொழிபெயர் தேயத்தில் சிறப்பாகச் செய்து வந்தார் தோழர் து. மூர்த்தி. அண்மையில்தான், அப்பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக, அவர் பணியாற்றியபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் உருவாயின. அவர் ஆய்வுப் பணியில் துடிப்புடன் செயல்பட்டது போலவே, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் துடிப்புடன் செயல்பட்டார். இதற்காக அவர் பழிவாங்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின், போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு, அவர் அலிகர் பல்கலைக்கழகம் சென்றார்.

அவர் தமிழ்நாட்டில் இருந்தபோது, “சிந்தனையாளன்” இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “1989 - அரசியல் சமுதாய நிகழ்வுகள்” என்ற நூல் வெளிவந்தது. அது குறித்த அறிமுகக் கூட்டத்தை, தஞ்சையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடத்தினோம். அதில், பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார்.

மார்க்சிய – பெரியாரிய கருத்தியலாளரான பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள், துணிந்த நெஞ்சும் தூய நோக்கும் கொண்டவர். மக்கள் மீது மிகுந்த அக்கறையும் தமிழ்ச் சமூக மாற்றம் குறித்த பேரார்வமும் கொண்டவர். அவர் பணி ஓய்வு பெற்று, தமிழ்நாடு திரும்பி, தமிழ்ச் சமூகவியல் சிந்தனைக் களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவருடைய திடீர் மறைவு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

பேராசிரியர் து. மூர்த்தி வாழ்ந்தபோது மக்களுக்கான வாழ்க்கை வாழ வேண்டுமென்று கருதியவர். அதற்கேற்ப அவர் உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நாளை ஒப்படைக்கப்படுவதாக நண்பர்கள் கூறினார்கள். இறப்பிலும் ஒரு சாதனையோடுதான் தோழர் மூர்த்தி விடைபெற்றுள்ளார்.

பேராசிரியர் து. மூர்த்தி அவர்களின் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, October 19, 2016

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் இன்று (18.10.2016), காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி வழக்கில் நீதி கிடைக்கக்கூடாது என்று கர்நாடக அரசைவிட இந்திய அரசு தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
2007இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் ஒதுக்கீடு செய்த தண்ணீர் அளவு போதாது என்று மறு ஆய்வு செய்ய ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேறு; இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைத்திட காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பின்னர் தொடுத்த வழக்கு வேறு. இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிப்பதென்பது சட்டப்படி முறையானதல்ல!
இரண்டு வழக்குகளின் தன்மைகளும் வெவ்வேறானவை. ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்புவது கர்நாடகத்தின் தந்திரம். அந்தத் தந்திரத்தை நடுவண் அரசு தானும் கையாள்கிறது. அதே தந்திரத்தின்படி உச்ச நீதமன்றம் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது நீதி முறையியல் ஆகாது!
காவிரித் தீர்ப்பாய வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க உரிமை உடையதுதானா என்று இப்பொழுது உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கிறது. அப்படியென்றால், 2007இல் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை ஏன் ஏற்றுக் கொண்டது? ஏற்றுக் கொண்டதுடன் இறுதி முடிவு வரும் வரை, தற்போதுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு இந்திய அரசு செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டது சட்டவிரோதச் செயலா? மூன்று நீதிபதிகள் அமர்வு உச்ச நீதிமன்றத்தின் மாண்புக்கு மாசுகள் ஏற்படும் வகையில் விசாரணை நடத்தக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகளையே மூன்று நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்பது என்ன ஞாயம்?
உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால்தான், 2007-லிருந்து கடந்த 04.10.2016 வரை காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதை ஏற்றுக் கொண்டு பதில் மனுக்கள் அளித்தன. வழக்குரைஞர் மூலம் வாதாடின.
இப்பொழுது முரட்டுத்தனமாக, உச்ச நீதிமன்றத்திற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனச் சொல்வது, இந்திய அரசு நடுநிலை தவறி தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையே உணர்த்துகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் முதல் பகுதி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறைத் தீர்த்து வைக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமெனக் கூறுகிறது. இந்த உறுப்பின் இரண்டாவது பகுதி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை எனக் கூறுகிறது.
இந்த இரண்டாவது பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் “காவிரித் தீர்ப்பாயம்”. அது கூறியிருக்கும் பொறியமைவுதான் “காவிரி மேலாண்மை வாரியம்”. நாடாளுமன்றத்தின் வழியாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டம்தான் “காவிரி மேலாண்மை வாரியம்”. மறுபடியும் இதற்கு நாடாளுமன்றம் செல்ல தேவையில்லை.
மற்ற சிக்கல்களில், நாடாளுமன்றச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுபடியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென இந்திய அரசு கூறுமா?
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956இல், நடைமுறை அனுபவங்களையொட்டி பல்வேறு திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முகாமையானவை, 6A மற்றும் 6 (2) ஆகும். 6 (2) என்ற திருத்தம், 2002இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தத் திருத்தம்தான், தண்ணீர் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமான ஆற்றல் கொண்டது எனக் கூறுகிறது.
இந்த 6 (2) உருவாவதற்கு முன், 6A பிரிவில் உள்ள உட்பிரிவு 7, தீர்ப்பாயத் தீர்ப்பை செயல்படுத்த நாடாளுமன்றம் கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறது. அதற்குப் பின், 2002இல் சேர்க்கப்பட்ட 6 (2) பிரிவு – தீர்ப்பாயத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று கூறியதுடன், 2002க்கு முன் இச்சட்டத்தில் உள்ள 6A, 7 ஆகியவை 2002க்குப் பிறகு பொருந்தாது எனக் கூறியுள்ளது.
இவற்றையெல்லாம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தெளிவாக விவாதித்துதான் “காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் (Shall constitute)” என்று கூறியுள்ளது. இவ்வளவு தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டததிலும், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 சட்டத்திலும் கூறப்பட்ட பின்னும், நாடாளுமன்றத்தில் இதை விவாதிக்க வேண்டுமென்று இந்திய அரசு வாதிடுவது, கர்நாடகத்தையும் விஞ்சிய அளவில் சட்டவிரோதமாக நரேந்திரமோடி அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது. 
இவ்வளவு தெளிவாக சட்டங்கள் வரையறுத்த பின்னும், உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் மீண்டும் விவாதித்துக் கொண்டிருப்பது, உச்ச நீதிமன்ற விசாரணை செல்லும் திசை பற்றி பல்வேறு ஐயங்களையும், அச்சங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவை, தற்போது செயலில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் மாற்றி முடிவு செய்தால், அந்த முடிவின்படி தண்ணீரைத் திறந்துவிடும் வேலைதான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இருக்கிறது. மற்றபடி, காவிரி மேலாண்மை வாரியம் தானாக தண்ணீரின் அளவை முடிவு செய்து திறந்துவிட முடியாது. இப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இப்பொழுதுள்ள இறுதித் தீர்ப்பின்படி அது தண்ணீர் திறந்துவிடும்.
அடுத்து, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு அனுப்ப வேண்டுமென கர்நாடக அரசு கூறுகிறது. இதை ஏற்றுக் கொள்வது போல் இந்திய அரசின் வாதங்கள் பொருள் தருகின்றன. இவ்வாறு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், காவிரித் தண்ணீர் நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு இல்லை என்றாகிவிடும்!
எனவே, மேற்கண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 ஆகியவற்றின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைத்திட, குறுகிய காலவரம்பிட்டு கட்டளை இடுவதொன்றே உச்ச நீதிமன்றத்தின் சட்டக் கடமையாகும் என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு மாறாக, வேறு வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தால் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் துணை போகின்றது என்று தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டு சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், இதுபோல் உச்ச நீதிமன்றம் இழுத்தடிப்பது நீதி வழங்குவதாகாது! பட்டினியால் அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல் “2,000 கன அடி திறந்து விடு“ என உச்ச நீதிமன்றம் சொல்வது இருக்கிறது. அதைகூட கர்நாடகம் மறுத்த நிலையிலும், கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?
காவிரிச் சிக்கலில் இப்பொழுது, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து, எழுச்சி பெற்று போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால், அந்தப் போராட்டங்கள் புதிய போக்கில் வடிவவெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, October 16, 2016

தாயகம் திரும்பிய தலைவர் மணியரசனுக்கு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு!
தாயகம் திரும்பிய தலைவர் மணியரசனுக்கு
செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு!


கடந்த 08.10.2016 அன்று வட அமெரிக்காவில் நடைபெற்ற "உலகத் தமிழ் அமைப்பின்" - வெள்ளி விழா மாநாட்டில்,
தமிழ்நாட்டுத் தமிழரின் உரிமைப் போருக்கு உலகத் தமிழரின் பங்களிப்பு அவசியம் என்பதை சிறப்பான முறையில் எடுத்தியம்பி உரையாற்றிய, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள, நேற்று (14.10.2016), தாயகம் ( தமிழ்நாடு ) திரும்பினார்.

நேற்று இரவு 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய, தலைவர் மணியரசன் அவர்களுக்கு, செஞ்சட்டை அணிந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழின உணர்வாளர் திரு. செ. அண்ணாதுரை, சென்னை விமான நிலைய பிரிபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. சுகுமார் ஆகியோர், தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் ஏந்தல், முழுநிலவன், நல்லசிவம், ரமேசு, கண்ணன், வழக்கறிஞர் இளவரசன், வீரத்தமிழா, சத்தியா, அருவி உள்ளிட்ட திரளான தோழர்கள் விமான நிலையம் வந்திருந்து தலைவரை வரவேற்றனர்

தமிழர்களின் கலை - அறிவியல் - பண்பாட்டு வரலாற்றை காட்சிப்படுத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி! தோழர் பெ. மணியரசன் நேரில் பார்வையிட்டு பாராட்டு!
தமிழர்களின் கலை - அறிவியல் - பண்பாட்டு
வரலாற்றை காட்சிப்படுத்தும் 
தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் 
பெ. மணியரசன் நேரில் பார்வையிட்டு பாராட்டு!


தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில், 10ஆம் ஆண்டாக “தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி”, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், நேற்றிலிருந்து நடைபெற்று வருகின்றது. கண்காட்சியை, தமிழ்நாடு அறிவயல் நகரத் தலைவர் திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்கள், நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் ஒளிப்படங்களுடன் சிறப்புடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை இன்று (15.10.2016) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர் ஏந்தல் ஆகியோர் பார்வையிட்டனர்.பின்னர் பார்வையாளர் குறிப்பேட்டில், தலைவர் பெ. மணியரசன் அவர்கள் பின்வருமாறு எழுதினார்:
“தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி ஆண்டுக்காண்டு வளர்ச்சி பெற்றும் மெருகேறியும் வருவது பாராட்டிற்குரியது. 'செயற்களம்' என்ற பெயருக்கேற்ப செயல்படும் தமிழகப் பெண்கள் செயற்களப் பொறுப்பாளர்கள் அனைவரும் தமிழினத்தின் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்!”

கண்காட்சிப் பொறுப்பாளர், தலைவர் மணியரசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், கையடக்கத் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கியும் மகிழ்ந்தனர்.

நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும், தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி, நாளை மாலையுடன் நிறைவு பெறுகின்றது.

தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட மோடி அரசின் நெருக்கடி! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!
.தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட
மோடி அரசின் நெருக்கடி!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!


ஓசையில்லாமல் தமிழ்நாட்டின் மீது இன்னொரு மிகப்பெரிய தாக்குதலை இந்திய அரசு தொடுத்திருக்கிறது!
“தேசிய உணவு உறுதிச் சட்டம்” என்ற நல்ல பெயரில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் சட்டம், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு மறுப்புச் சட்டம்தான் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதை வலுவாக மெய்ப்பிக்கும் வகையில், மிகப்பெரிய நிதித் தாக்குதல் ஒன்றை தமிழ்நாட்டின் மீது மோடி அரசு இப்போது தொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1 கோடியே 90 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அரசின் நியாயவிலைக் கடைகளில் வழங்கும் மானிய விலை அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவற்றைப் படிப்படியாகக் குறைத்து, இறுதியில் அறவே நீக்கி ரேசன் கடைகளை மூடிவிடுவது என்பதாக உலக வர்த்தகக் கழகத்தில், ஏற்கெனவே இந்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. அதற்கிணங்கப் பிறப்பிக்கப்பட்டதுதான், “உணவு உறுதிச் சட்டம்” !
இச்சட்டத்தின் அடிப்படையில், குடும்ப அட்டைதாரர்களில் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு மானிய விலை அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை என இந்திய அரசு அறிவித்தது. ஆயினும், இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது.
தமிழ்நாட்டின் இந்த நீதியான நிலைபாட்டை இந்திய அரசு ஏற்க மறுத்து, தமிழ்நாட்டிற்கு வழங்கிவரும் உணவு மானியத்தை ஆண்டுக்காண்டு குறைத்து வருகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், மற்ற மாநிலங்கள் இந்திய அரசின் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு மானிய வழங்கலை பெருமளவு வெட்டின. அதுமட்டுமின்றி, இந்தியாவிலேயே தமிழ்நாடு, கேரளா, உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும்தான் ரேசன் கடைகள் உருப்படியாக இயங்கி வருகின்றன.
இலவச அரிசி, குறைந்த விலை அரிசி ஆகியவற்றை தமிழ்நாடு, கூடுதலாக வழங்கி வருவதால் இத்தாக்குதலில் தமிழ்நாடுதான் பிற மாநிலங்களைவிட அதிகமாக அழுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. இப்போது, தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தில் வரலாறு காணாத வெட்டை இந்திய அரசு அறிவித்துள்ளது !
நியாயவிலைக் கடைகளின் வழியாக வழங்கும் இன்றியமையாப் பொருள்களுக்கு, தமிழ்நாடு அரசு தனது சொந்த வருமானத்திலிருந்து மானியம் கொடுத்து, குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் இவ்வாறான உணவு மானிய நிதிச்சுமை 5,300 கோடியாகும். இதில், அரிசி மானியம் மட்டுமே ஏறத்தாழ 3,500 கோடியாகும்!
தமிழ்நாடு மொத்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் டன் அரிசியை மாதந்தோறும் ரேசன் கடைகள் மற்றும் மானிய விலை வழங்கலுக்காக நடுவண் அரசின் தொகுப்பிலிருந்து வாங்கி வருகிறது. 20 கிலோ விலை இல்லா அரிசியாகவும், அதற்கு மேல் கிலோ ரூபாய் 3.50-க்கும் வழங்கி வருகிறது.
இந்திய அரசு, தமிழ்நாட்டு குடும்ப அட்டைதாரர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினர், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பத்தினர் என்று தன் மனம் போன போக்கில் வகைப் பிரித்திருக்கிறது. இதனடிப்படையில், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளோருக்கு ஒரு கிலோ அரிசியை, 5 ரூபாய் 65 காசுக்கும், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோருக்கு ஒரு கிலோ அரிசியை, 8 ரூபாய் 30 காசுக்கும் அளிக்கிறது.
இப்போது, வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என்ற கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரும் 1 இலட்சத்து 26 ஆயிரம் டன் அரிசிக்கு பெற்று வந்த விலையை, 8 ரூபாய் 30 காசிலிருந்து, 22 ரூபாய் 50 காசாக – கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்த வரலாறு காணாத விலை உயர்வால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 2,100 கோடி ரூபாய் மானியச் செலவு அதிகரிக்கும்.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவ்வப்போது வழங்கப்பட்டுவரும் கூடுதல் அரிசியை தமிழ்நாட்டிற்கு மட்டும் மறுத்துவிட்டது இந்திய அரசு! இந்த வகையில், 24,000 டன் கூடுதல் அரிசியை தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையில் கிலோ ரூபாய் 30 விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் கோதுமை விலையையும், 6 ரூபாய் 10 காசிலிருந்து 15 ரூபாய் 25 காசாக உயர்த்தியுள்ளது இந்திய அரசு!
தமிழ்நாட்டைப் போல் தேசிய உணவு உறுதிச் சட்டத்தை ஏற்க மறுத்து வந்த கேரள மாநில அரசு, இந்திய அரசின் இவ்வகை நிதித் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சரணடைந்துவிட்டது. தேசிய உணவு உறுதிச் சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகளில் இனி எதுவும் வழங்குவதற்கில்லை என கேரளா அறிவித்துவிட்டது.
தமிழ்நாடு அரசு இந்த நிதித் தாக்குதலை எதிர் கொள்ள, உரிய உத்திகளை வகுக்க வேண்டுமேயன்றி வீழ்ந்துவிடக் கூடாது!
ஒருபுறம் நீர் முற்றுகை, வேளாண் மானிய வெட்டு, சந்தை மறுப்பு, வேளாண் விளை பொருள் விலை மறுப்பு போன்ற பல்வேறு தாக்குதல்களின் மூலம், தமிழ்நாட்டு வேளாண்மையை முடக்க முயன்று வரும் இந்திய அரசு, உணவு மானியத்தை வெட்டி அழிக்க முயல்வதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு வழங்கும் உணவு மானியத்தைப் பணக் கணக்கில் ஒதுக்காமல், தானியக் கணக்கில் வழங்குவதற்கு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்குத் தேவையான மானிய விலை அரிசியை – அரிசியாகவே ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து அள்ளிச் செல்லப்படும் வரி வருமானத்தில் பாதியையாவது இந்திய அரசிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
ஒரே நேரத்தில் உழவு மானியத்தையும் உணவு மானியத்தையும் வெட்டி – தமிழ்நாட்டை பஞ்சக்காடாகத் மாற்றுவதற்கு இந்திய அரசு செய்யும் சதித்திட்டத்தை, தமிழ்நாட்டு உழவர்களும் மக்களும் விழிப்போடு புரிந்து கொண்டு களம் காண வேண்டும்!
தமிழினம் - ஆரிய இந்தியத்தின் கூர்முனை எதிரியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து, தமிழின உணர்வாளர்கள் இனப் போராட்டக் களத்தை உருவாக்க வேண்டும் - இல்லையேல், வாழ்வதற்கு வழியில்லை!

Saturday, October 15, 2016

“காவிரி உரிமை மறுப்பிற்கு அரசியல் மட்டுமே காரணமல்ல! இனப்பகையே முதன்மைக் காரணம்!” தஞ்சை காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


“காவிரி உரிமை மறுப்பிற்கு அரசியல் மட்டுமே
காரணமல்ல! இனப்பகையே முதன்மைக் காரணம்!”

தஞ்சை காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


“பா.ச.க போன்ற கட்சிகள் காவிரி உரிமை மறுப்பதற்கு வெறும் அரசியல் மட்டுமே காரணமல்ல! தமிழினத்தின் மீதான இனப்பகையே முதன்மைக் காரணம்!” என தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் நரேந்திரமோடி அரசைக் கண்டித்து, தஞ்சையில் இன்று (14.10.2016) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சைத் தொடர்வண்டி நிலையம் அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசியதாவது :
“இன்று, காவிரிச் சிக்கல் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது. கடந்த 20.09.2016 அன்று “காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைக்கிணங்க காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரத்திற்குள் நடுவண் அரசு அமைக்க வேண்டும்” என்று தீர்ப்புரைத்தது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து, இந்திய அரசு நேரடியாகவே தமிழர்களை வஞ்சித்துள்ளது. பா.ச.க. நரேந்திரமோடி அரசின் இந்த முடிவு, காவிரி டெல்டா மாவட்ட மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்திய அரசின் வாதப்படியே எடுத்துக் கொண்டாலும்கூட, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்க இந்திய அரசுக்கு அதிகாரமில்லை! இதனை தமிழ்நாட்டில் பலரும் புரிந்து கொள்ளாமல் குழம்பிக் கொண்டுள்ளனர். எனவே, அதுபற்றி நாம் தெளிவு பெற வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262, மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகள், நிலவும் ஆற்றுச் சமவெளிகள் குறித்தும், அதற்கென சட்டமியற்றும் அதிகாரம் குறித்தும் பேசுகிறது. மாநிலங்களுக்கிடையில் பாயும் ஆறுகள், நிலவும் ஆற்றுச் சமவெளிகள் ஆகியவற்றின் பயன்பாடு, பங்கீடு, கட்டுப்பாடு ஆகியவை குறித்து விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கத் தேவையான பொறியமைவுகளை உருவாக்க சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (1) கூறுகிறது.
இவ்வாறு அமைக்கப்படும் பொறியமைவின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என சட்டமியற்றும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (2) கூறுகிறது. இந்த உறுப்பு அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான், 1956ஆம் ஆண்டு, “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தை” இந்திய நாடாளுமன்றம் இயற்றியது. இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தண்ணீர் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று இச்சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைபாட்டை வலுப்படுத்தும் வகையில், நர்மதை நீர் பகிர்வுச் சிக்கலை ஒட்டி 1980ஆம் ஆண்டும், கிருஷ்ணா நதிச் சிக்கலை ஒட்டி 2002ஆம் ஆண்டும், தண்ணீர் தகராறு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
1956 – மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – பிறப்பிக்கப்பட்ட பிறகு அரசமைப்புச் சட்ட உறுப்பு - 262 செயல்படத் தொடங்கிவிட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தலையிடக்கூடாது என தண்ணீர் தகராறு சட்டத்தில் விதிகளைச் சேர்க்க நாடாளுமன்றத்திற்கு 262 (2) அதிகாரம் வழங்குகிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில் விதி 6 (2) உருவாக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தின் பணி முடிவடைந்து விடுகிறது.
மேலும், இச்சட்டத்தில் என்ன திருத்தம் செய்து கொள்வதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதன் செயல்பாட்டில் நாடாளுமன்றம் குறுக்கிடவே முடியாது!
நீதிமன்றங்களில் தீர்ப்புகளை நீதிபதிகள்தான் வழங்குகின்றனர். அந்த நீதிபதிகளை அரசாங்கம்தான் பணியமர்த்துகிறது. நீதிபதிகளை அரசாங்கம் பணியமர்த்துகின்றது என்ற காரணத்தினாலேயே, நீதிபதிகளின் தீர்ப்பில் குறுக்கிட அரசாங்கத்திற்கு அனுமதியில்லை. அதுபோலவே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றமோ இந்திய அரசோ தலையிட முடியாது! அதற்கு அனுமதியில்லை! 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்குமாறு பரிந்துரைதான் செய்திருக்கிறது என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது மிகத் தவறான கூற்று!

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பின் பகுதி 8 (பக்கம் 224, தொகுதி – 5)-இல், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது” என்ற தலைப்பில், “காவிரி நீர் தகராறுத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவுகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கும், (மாநிலங்களை) அவற்றுக்கு உட்படுத்துவதற்கும், “காவிரி மேலாண்மை வாரியம்” என்ற பெயரில் மாநிலங்களுக்கிடையிலான மன்றம் ஒன்றை நிறுவியாக வேண்டும். இந்த வாரியம் இந்திய அரசின் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் நிறுவியாக வேண்டும் (Shall be constituted) என்றுதான் ஆணையிடுகிறதே தவிர, “வாரியம் அமைக்கலாம்” என பரிந்துரைக்கவில்லை.
இந்த முடிவுக்கு தான் வந்ததற்கான காரணங்களையும் இறுதித் தீர்ப்பின் இதன் முந்தைய பத்திகளில் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.
பத்தி 14-இல், “நடுவர் மன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த பொருத்தமான பொறியமைவை நிறுவுவது முகாமையான தேவை என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் அவ்வாறு அமைக்கப்படும் பொறியமைவு தீர்ப்பாயத்தின் முடிவை செயல்படுத்தத்தக்க போதிய அதிகாரம் கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எங்களுடைய இந்தத் தீர்ப்பும் வெற்றுத்தாளிலேயே நின்றுவிடும் என அஞ்சுகிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஏனெனில், இதற்கு முன் காவிரித் தீர்ப்பாயம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகமும், இந்திய அரசும் செயல்படுத்தவே இல்லை என்பதை நாமல்ல, இந்தத் தீர்ப்பிலேயே நீதிபதிகள் கூறியுள்ளனர். அதனால்தான், இறுதித் தீர்ப்பை எப்படி செயல்படுத்த வேண்டுமென நீதிபதிகள் விரிவாக விளக்கியுள்ளனர்.
நர்மதை நீர்ச் சிக்கலில், நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் (NCA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதையும், கிருஷ்ணா தீர்ப்பாயம் தனது தீர்ப்பு செயல்படுவதற்கு உறுதியான பொறியமைவு நிறுவப்பட வேண்டும் என வாதிடுவதையும் காவிரி இறுதித் தீர்ப்பு எடுத்து விளக்குகிறது. இதற்காக, மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில், 6A என்ற புதிய பிரிவு 1980-இல் சேர்க்கப்பட்டதையும், 6(2) என்ற பிரிவு 2002-இல் சேர்க்கப்பட்டதையும் காவிரித் தீர்ப்பில் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர்.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு ஒரு வழிமுறையையோ, பல வழிமுறைகளையோ ஏற்படுத்த முடிவு செய்து விட்டு, அதனை அரசிதழில் வெளியிடலாம் என மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தின் பிரிவு 6A (1) கூறுகிறது.
“பிரிவு 6(1)இன் கீழ் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் ஆணை அல்லது தீர்ப்புக்கு உள்ள அதே வலிமையைப் பெறுகிறது” என்று 6(2) என்ற புதிய பிரிவு 2002ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அதாவது, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது.
ஏற்கெனவே எடுத்துக்காட்டியபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் (Shall be constituted) என்று தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உறுதிபடக் கூறிவிட்டது.
எனவே, இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் போல் மதித்து இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால், அதுதான் நடந்திருக்கும்! ஆனால், இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டும் சட்டத்தின் ஆட்சி செயல்படவே செய்யாது! காவிரிச் சிக்கலிலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது.
கிருஷ்ணா தீர்ப்பாயம், தனது இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தீர்ப்புரைத்தது. அதை எழுத்து குறையாமல் இந்திய அரசு அப்படியே செயல்படுத்தியது. தீர்ப்பு வந்த மறுநாளே 29.05.2014 அன்றே கிருஷ்ணா மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கு இந்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் அரசாணை வெளியிடப்பட்டதே தவிர, நாடாளுமன்றச் சட்டம் இயற்றி அதன்வழியே மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ஏனெனில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலேயே மேலாண்மை வாரியம் அமைக்குமாறு ஆணையிடப்பட்டது.
இதுபோல், காவிரித் தீர்ப்பாயமும் மேலாண்மை வாரியம் அமைக்குமாறு இறுதித் தீர்ப்பில் ஆணையிட்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசின் அரசாணை மட்டுமே போதுமானது. நாடாளுமன்றச் சட்டம் தேவையில்லை.
காவிரியில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அது தமிழர்களுக்கு வழங்குகின்ற நீதியாகிவிடுமே, ஆரிய இந்தியாவில் அது எப்படி நடக்கலாம்? அதனால்தான் நமக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது!
2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்தான், கர்நாடகவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கோடு பா.ச.க. நரேந்திரமோடி அரசு தமிழ்நாட்டிற்கு இப்படி துரோகம் இழைத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
பாரதிய சனதாவாக இருந்தாலும், காங்கிரசுக் கட்சியாக இருந்தாலும் தங்கள் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு, எல்லா சிக்கல்களிலும் காய் நகர்த்துவார்கள் என்பது பொது உண்மைதான்! ஆனால், காவிரிச் சிக்கலில் இந்திய அரசின் அணுகுமுறைக்கு இந்தத் தேர்தல் கணக்கு முதன்மைக்காரணம் அல்ல! உண்மையான காரணம், ஆழமானது!
கடந்த 1991இன் இறுதியில், காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு உச்ச நீதிமன்ற நெருக்குதல் காரணமாக, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடுமையான இனப்படுகொலைத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடி வந்தனர்.
அப்போதும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஒரு சிறிதும் நிறைவேற்ற மாட்டோம் என்றுதான் கர்நாடகம் நின்றது. அப்போது, எந்தத் தேர்தலும் இல்லை! 1989ஆம் ஆண்டே கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. தமிழர் மீதான இனப்பகையே அவர்களின் முதன்மைக்காரணியாக உள்ளதால், நம்மை எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.
தேர்தல் காலமோ அல்லது வழக்கமான காலமோ எதுவாக இருந்தாலும், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் காவிரித் தீர்ப்பை மதித்ததே இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு!
இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு, முதன்மையான காரணம் ஆரிய இந்தியத்தின் தமிழினப்பகையே ஆகும். எனவேதான், தமிழர்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்கள் பக்கம் இந்தியா நிற்கிறது. இந்திய ஆட்சியில் எந்தக் கட்சி – எப்படிப்பட்ட கூட்டணி இருந்தாலும், இந்த நிலையில் ஒரு சிறிது மாற்றமும் இல்லை! கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி செய்தாலும், பா.ச.க.வோ சனதா தளமோ ஆட்சியில் இருந்தாலும் இந்தப் போக்கில் ஒரு சிறிது மாற்றமும் இருப்பதில்லை.
இன்னொரு காரணத்தையும் பேசுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பது தமிழ்நாட்டில் ஒரு குழப்பான அரசியல் நிலையை உருவாக்கியிருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய அரசு இப்படி துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
செயலலிதா நல்ல உடல்நிலையோடு சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அரசு காவிரிச் சிக்கலில் இப்படித்தான் நடந்து கொண்டது என்பது வரலாறு! எனவே, முதலமைச்சர் செயலலிதாவின் உடல்நலக் குறைவு இப்போதைய காவிரி உரிமைப் பறிப்புக்கு முதன்மைக் காரணம் அல்ல! 
இந்திய அரசின் தீராத தமிழினப்பகை தான் காவிரிச் சிக்கலில் முதன்மைக் காரணமும் அடிப்படைக் காரணமும் ஆகும்!

சிலர் “மாற்று” என்ற பெயரில், கடல் நீரைக் குடிநீராக்கிக் கொள்ளுங்கள், மழை நீரை சேகரித்துக் கொள்ளுங்கள், ஏரி – குளங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசுகின்றனர். இவற்றையெல்லாம் கூறிக் கொண்டு, இன்னொருபுறம் அவர்கள் காவிரியை மறுந்துவிடு என்று நமக்கு அறிவுறுத்துகின்றனர். இவர்கள் எல்லோரும் காவிரி நீரைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் சரக்கு (Commodity) போல கருதுகின்றனர்.
காவிரி என்பது, 19 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் – 17 மாவட்டங்களுக்குப் பாசன நீர் என்பதைத் தாண்டி, தமிழர்களுடன் வரலாற்றுப் பிணைப்பு கொண்டதென நாம் உணர வேண்டும். காவிரி நம் அடையாளமாக இருக்கிறது. தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு வெறும் உடலியல் (Biological) உறவல்ல, அதையும்தாண்டி பாசமும் பிணைப்பும் கொண்டது போல்தான், தமிழ் மக்கள் காவிரியுடன் உறவாடி வருகின்றனர். எனவேதான், சிலப்பதிகாரத்தில் காவிரியை நம் செவிலித்தாய் என்கின்றனர்.
அதன் காரணமாகவே, நமக்கு காவிரி மறுக்கப்படுகின்றது. காவிரிச் சிக்கல் வெறும் தண்ணீர் பகிர்வுச் சிக்கல்ல, அது ஒரு இனச்சிக்கல் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். நடப்புகள் அதை மெய்ப்பிக்கின்றன.
காவிரி உரிமையை மறுத்து இனவெறியுடன் செயல்படும் கர்நாடகத்திற்கு - துணை போகும் ஆரிய இந்திய அரசு, தமிழ்நாட்டில் செயல்படாமல் முடக்குவதற்கான நீண்ட போராட்டத்திற்கு நாம் அணியமாக வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு, இந்திய அரசு அலுவலகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும்”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களும் உழவர்களும் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT