உடனடிச்செய்திகள்
Showing posts with label நெய்வேலி மின்சாரம். Show all posts
Showing posts with label நெய்வேலி மின்சாரம். Show all posts

Wednesday, November 28, 2012

சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!


சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது த.இ.மு.!

தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின்வெட்டை எதிர்த்தும், சிதம்பரம் நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நெய்வேலி மின்சாரத்தை கேட்டுப் பெறாத தமிழக அரசை கண்டித்தும், சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள்.

கடும் மின்வெட்டை செயல்படுத்தி வரும் சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக இளைஞர் முன்னணி 25.11.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இப்போராட்டத்திற்கு சிறுதொழில் முனைவோர் சங்கம் மற்றும் தமிழக உழவர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், இன்று (28.11.2012) காலை 11.30 மணியளவில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்காக, சிதம்பரம் நகரக் காசுகடைத் தெருவிலிருந்து தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேரணியாக, முழக்கங்களுடன் சென்றனர். சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஆவேசத்துடன் வந்த தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மின்வாரிய அலுவலகத்தின் முதன்மைக் கதவை, கையில் கொண்டுவந்திருந்த பூட்டைக் கொண்டு இழுத்துப் பூட்டினர் தோழர்கள்.

காவல்துறையினருடனான தள்ளுமுள்ளுவின் போது, தோழர் சுப்பிரமணிய சிவ, ச.பாபு, சுகன்ராஜ் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

தமிழக இளைஞர் முண்ணனி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவபிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும், பெருந்திரளான பெண்களும், இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஆவேசமாகத் திரண்டிருந்த தோழர்களைக் கண்டக் காவல்துறையின்ர், அவர்களது கோரிக்கையின் ஞாயத்தை உணர்ந்து தோழர்களை கைது செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சுகன்)

Tuesday, September 4, 2012

கடும் மின்வெட்டை நீக்க, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் பெற வலியுறுத்தி சிதம்பரத்தில் அனைத்து தொழில், வணிகம் சார்ந்த அமைப்புகள் பேரணி ஆர்ப்பாட்டம்



கடுமையான, தாறுமாறான, முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டினால் சிதம்பரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கிவரும் வணிக நிறுவனங்களும், சிறுதொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக் கிடையில் நிறுவனங்களை நடத்தி வரும் சிதம்பரம் பகுதி வணிகர்களும், தொழில் முனைவோரும் இந்த மின்வெட்டால் விழிபிதுங்கி நிற்கிறனர் இந்நிலையில், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் பெற வலியுறுத்தி 4.9.2012 இன்று காலை 10 அளவில் சிதம்பரம் அனைத்து தொழில் வணிகம் சார்ந்த அமைப்புகள், பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம், தெற்கு சன்னதியிலிருந்து புறப்பட்ட பெருந்திரளான வணிகர்களின் பேரணி “ தமிழக அரசே ! தமிழக அரசே! கடுமையான மின்வெட்டை நீக்க ,நெய்வேலி மின்சாரத்தை முழுவதையும் கேட்டுப்பெறு! கேட்டுப்பெறு! ”என்று உணர்ச்சி முழக்கமிட்டபடி பேரணியாக சென்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் திரு டி.டி.கே பாண்டியன் தலைமை தாங்கினார். பவுன், வெள்ளி, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு இரா. முத்துக்குமரேசன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

திரு ஆர். ஆர் ரவீந்தரன் (செயலாளர், காய், கனி மார்கெட் வியாபாரிகள் சங்கம்) ஆர். அருள் (தலைவர், அண்ணாமலைநகர், வர்த்தகர் சங்கம்) ஜி. சேகர் (தலைவர், தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம்), க. நாகராசஜன் (தலைவர், தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்), கே.ரமேஷ் (தலைவர், புகைப்பட கலைஞர்கள், சங்கம்), ஆ.ஆறுமுகம் (மாவட்டச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி), பொன். சக்திவேல்(மாவட்டச் செயலாளர், அகில இந்திய கைவினைஞர் சங்கம்), செல்வ. கதிரவன் (சிதம்பரம் செயலாளர், கிரில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்), ஆ.குபேரன் (ஒருங்கிணைப்பாளர், அக்னி சிறகுகள் சேவை அமைப்பு), க.முரளி (தலைவர், கடலூர் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்). ஆர். சுரேஷ் (தலைவர், சிதம்பரம் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம்), அ.குணசேகரன் (சிதம்பரம், கவரிங் மிஷின் கட்டிங் தொழிலாளர்கள் சங்கம்), கோ. சுப்பராயன் (அமைப்புக்குழு, சிறுதொழில் அமைப்பு), இராதகிருஷ்ணன் (ஆலோசகர், பருப்பு, தானிய வியாபாரிகள் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு கி.வெங்கட் ராமன் பல்வேறு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். திரு. கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு) நன்றி நவின்றார்.

பெருந்திரளான பல்வேறு தொழில், வணிகம் சார்ந்த அமைப்புகளும், வணிகர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடித்து, சிதம்பரம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.






(செய்தி : த.தே.பொ.க.செய்தி பிரிவு , படங்கள் : அரவிந்தன்)

Friday, August 10, 2012

நெய்வேலி அனல்மின் நிலையத் தலைமையகம் முற்றுகை த.தே.பொ.க தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்லக் கூடாது
நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகம் முன்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முற்றுகைப் போராட்டம்!
300 க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி  நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்லக் கூடாதென வலியுறுத்தி நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் முற்றுகையிட்டனர். 300க்கும் மேற் பட்டோர் கைது.

10.8.2012. இன்று காலை 10 மணி அளவில் நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமைகத்தை நோக்கி  பெருந்திரளானத் தோழர்கள்  “அனுமதியோம்! அனுமதியோம்! காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை அனுமதியோம் ! என உணர்ச்சிப் முழக்கமிட்டவாறு , தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் பெரும் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

ஆவேச முழக்கத்தோடு தலைமை நிறுவனத்தை முற்றுகையிடும் நிலையில், காவல் துறையினர்  இடைமறித்தனர்.  காவல்துறையினருடன் த.தே.பொ.க தோழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் பல தோழர்கள் உணர்ச்சி முழக்கமெழுப்பி  தலைமையகத்தை நோக்கி முன்னேறிச்  சென்றனர். பிறகு காவல்துறையினர் தலைமை நிலைய வாயிலில்  300க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தனர்.

பெண்கள், இளைஞர்கள் என பெருந்திரளாகக் கூடிய இந்த முற்றுகையில் த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் குழ.பால்ராசு, ஓசூர் மாரிமுத்து, பழ.இராசேந்திரன், பா.தமிழரசன், க.அருணபாரதி, ஆ.ஆனந்தன், தமிழக இளைஞர்முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் மா.கோ.தேவராசன், மு.தமிழ்மணி, ஈரோடு இளங்கோவன், இராசுமுனியாண்டி (தஞ்சை நகரச்செயலாளர், த.தே.பொ.க), பெண்ணாடம் முருகன், ஓசூர் நடவரசன், க.ரா. முத்துச்சாமி (திருப்பூர் இயற்கை வாழ்வகம்) இராசையா உள்ளிட்ட திரளான தோழர்கள் கைதாயினர்.


             (செய்தி த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் அரவிந்தன்)

Thursday, August 9, 2012

“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” பெ.மணியரசன் பேட்டி


“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ஆகத்து 10 நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிறுவன முற்றுகைப் போராட்டம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

காவிரி நீர் மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் என வலியுறுத்தி, நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆகத்து 10 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவுள்ளது. இப்போராட்டம் குறித்து விளக்குவதற்காக 08.08.2012 அன்று காலை 11 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றைச் சேர்ந்த கிருஷ்ணராஜ அணையின் மொத்த உயரம்  120-அடி. இன்றைய நிலவரப்படி அதில் 119-அடி தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்தக் கொள்ளளவு 16.6 டி.எம்.சி. அதில் இன்றைய நிலவரப்படி 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2922-அடி. அதில் இன்று 2890 அடி தண்ணீர் உள்ளது. ஏரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2859 அடி அது அன்றே நிரம்பி 4.08.2012 மிச்ச நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் இந்த அளவு தண்ணீர் இருந்தும் காவிரி தீர்ப்பாயத்தின்  இடைக் காலத் தீர்ப்பின் படி சூன் மாதம் தர வேண்டிய 10.16 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. சூலையில் தர வேண்டிய 42.76 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. ஆகத்து மாதம் முதல் வாரத்தில் தர வேண்டிய 13.5 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. 

எனவே, கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது, அணைகள் வறண்டு கிடக்கின்றன என்ற கூற்றுதான் பொய். அணைகள் நிரம்பி உடையும் ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, தனது அணையின் தற்காப்புக் கருதி கர்நாடகம் மிச்ச நீரை வெளியேற்றும் உத்தியை கடந்த பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. சூன் – சூலை மாதங்களில் குறைந்த அளவாக 25 டி.எம்.சி. தண்ணீர் கொடுத்திருந்தால் கூட காவிரி பாசனம் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்திருக்க முடியும்.

மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் அன்றாடம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் தெரிந்தும் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956-ன்படி செயல்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் சட்டத்தை நிலைநாட்ட மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசை நம்பியும் பயனில்லை சட்டத்தை நம்பியும் பயனில்லை என்ற அவலமே தமிழ்நாட்டிற்கு மிஞ்சியுள்ளது. 

கர்நாடகம் பல்வேறு பொருளாதார நிலைகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது. குறிப்பாக நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கு போகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது என்ற உண்மையை எடுத்துக்காட்ட கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 10.08.2012 அன்று நடத்துகிறது. 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் அன்று காலை 10 மணிக்கு, கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் அனல் மின் நிறுவனத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க. தோழர்களும், உழவர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்“ என பேசினார்.

சந்திப்பின் போது, த.தே.பொ.க. மூத்தத் தோழர் இரா.கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமையக் செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



(செய்தி: த.தே.பொ.க. தலைமைச் செயலகம், படங்கள்: பாலா)

Thursday, July 26, 2012

காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு
நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரைத் தராத கர்நாடகத்திற்குநெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என வலியுறுத்தி வரும் ஆகத்து-10 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, இந்திய அரசின் நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்துகின்றது. இப்போராட்டத்திற்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
இப்போராட்டத்தை விளக்கி த.தே.பொ.க. வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, கபினி உள்ளிட்ட அணைகளில், மொத்தக் கொள்ளளவில் முக்கால் பாகம் தண்ணீர் நிரம்பி விட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மை இல்லை. கர்நாடகம் தமிழர்கள் மீது பகை உணர்ச்சி கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 26 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரினால் காலம் காலமாகப் பாசனம் பெற்று வருகிறது. சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை – தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  குடிநீருக்குக் காவிரியை நம்பி உள்ளனர்.
ஏடறிந்த காலந்தொட்டுக் காவிரிக்கும் தமிழர்களுக்கும் தாய் – சேய் உறவு தொடர்கிறது.  தமிழர் நாகரிகத்தின் வளர்ப்புத் தாய் காவிரி. தமிழ் இனத்தின் அடையாளம் காவிரி.
இவ்வாண்டு ஐந்து லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியைச் செய்ய விடாமல் பாழடித்துவிட்டது கர்நாடகம். ஒரு போகச் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. தமிழகத்திற்குரிய தண்ணீரைச் சட்ட விரோதமாகத் தனது கோடைச் சாகுபடிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருக்கிறது.  இடைக்காலத் தீர்ப்பு 1991இல் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு இந்திய அரசால் அதன் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் பெற்றுள்ளது. 
அந்த இடைக்காலத் தீர்ப்பின்படி சூன்மாதம் 10.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும், சூலை மாதம் 42.76 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். மூர்க்கத்தனமாகக் கர்நாடகம் மறுத்துவிட்டது.  தட்டிக் கேட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு நயவஞ்சகமாக மவுனம் காக்கிறது.  மறைமுகமாகக் கர்நாடகத்தின் மூர்க்கத் தனத்தை ஆதரிக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும்கூட பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுக்கிறது இந்திய அரசு.
சூடானில் உற்பித்தியாகி எகிப்தில் பாயும் நைல் ஆறு எந்தத் தடையுமின்றி ஓடுகிறது.  பகை இருந்தபோதும், இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானில் தடையின்றிப் பாய்கின்றன.  பல நாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள ஹெல்சிங்கி உடன்பாடு உள்ளது.
இந்தியாவுக்குள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள சட்டமில்லையா? இருக்கிறது. அது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் (1956). அச்சட்டப்படி அமைக்கப்பட்டதுதான் காவிரித் தீர்ப்பாயம். அதன் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடகம். கர்நாடகத்தின் இனவெறிக்குத் துணை போகிறது இந்திய அரசு.
 நர்மதை, கிருஷ்ணா, ஆறுகளின் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் செயல்படுகின்றன.  காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு மட்டும் கழிவறைக் காகிதம் ஆனது ஏன்? நாம் தமிழர்கள் என்பதாலா?
 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்கிறது கேரளம்! அந்த அராஜகத்திற்கு ஆதரவு தருகிறது இந்திய அரசு! இந்தியாவில் தமிழ் இனத்திற்குச் சட்ட நீதி எதுவும் கிடையாதா?
சிறுவாணியில் அணைகட்டிக் கோவை, திருப்பூர் மாவட்டக் குடிநீரைத் தடுக்கப் போகிறது கேரளம். அமராவதிக்குத் தண்ணீர் வழங்கும் பாம்பாற்றில் அணை கட்டப் போகிறது கேரளம்.  பாலாற்றில் கணேசபுரத்தில் அணைகட்டிக் கசிவு நீரையும் தடுக்கப் போகிறது ஆந்திரப் பிரதேசம்.
 இனிப் பதிலடி கொடுக்காமல் சட்டம் பேசிப் பயனில்லை தமிழர்களே! நம் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகம் போகிறது. அதைத் தடுப்போம். அம்மின்சாரம் தமிழ்நாட்டிற்குப் பயன்படட்டும். அங்கிருந்து கேரளத்துக்கு ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் போகிறது.  ஆந்திரத்துக்கு ஆறு கோடி யூனிட் மின்சாரம் போகிறது. தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா?
 காவிரியில் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுப்போம்! பாகுபாடு காட்டும் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம்! கர்நாடகச் சிறையிலிருந்து காவிரியை மீட்போம்! களம் அழைக்கிறது வாருங்கள் தமிழர்களே!
 இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.



(செய்தி; த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: போராட்டத் துண்டறிக்கை)

Monday, July 16, 2012

காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது! நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு


காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது!

நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.07.2012 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, பா.தமிழரசன், க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கிருட்டிணகிரியில் படுகொலை செய்யப்பட்ட பெ.தி.க. அமைப்பாளர் தோழர் பழனி அவர்களுக்கும், மறைந்த பாவலர் பல்லவன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
நெய்வேலி நிறுவன முற்றுகை

காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இடைக்காலத் தீர்ப்பே செயலில் உள்ளது. இத்தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு சூன் மாதம் 10.16 டி.எம்.சி காவிரித்தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். சூலை மாதம் 15 ஆம் நாள் வரை 21.38 டி.எம்.சி திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆகமொத்தம்  தமிழகத்திற்கு உரிமையான ஏறத்தாழ 33 டி.எம்.சி காவிரிநீரை கர்நாடகம் முடக்கி வைத்திருக்கிறது.

கர்நாடகத்தில் பருவமழை வழக்கத்தைவிட இதுவரை குறைவாக பெய்திருப்பதாக கர்நாடகம் அரசு கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகள் வறண்டிருக்கவில்லை. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஏமாவதி ஆகிய அணைகளில் மொத்தம் 65 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் உள்ளது. அதிலிருந்து சூன் மாதத்திற்கு உரிய தண்ணீரை திறந்திவிட்டிருந்தால் கூட தமிழகத்தில் குறுவை சாகுபடியை நம்பிக்கையோடு தொடங்கியிருக்க முடியும்.

ஆனால் அடாவடித் தனமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரை முடக்கி வைத்து ஒரு சொட்டுத் தண்ணீரும் திறந்து விடமாட்டோம் எனக் கொக்கரிக்கிறது. இதனால் காவிரி பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மழையும் பெய்யாத நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாக உள்ளது.

இராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்த் திட்டங்கள் பலவும் காவிரி நீரை நம்பியே உள்ளன. இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் நெருங்கி வருகிறது.

காவிரி ஆணையத்தைக் கூட்டி இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என இந்திய அரசும் ஆணையிடவில்லை. இந்திய அரசு  தனது சட்டக் கடமையை நிறைவேற்ற மறுக்கிறது. தனது மவுனத்தின் மூலம் கர்நாடகத்திற்கு சார்பாக நடந்துகொண்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

அதே நேரம், காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு செயலில் இருக்கும் இன்றைய நிலையிலும் நெய்வேலி இரண்டாவது அனல் மின்நிலையத்திலிருந்து கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட் மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

இந்நிலையில் பதிலடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தமிழர்களுக்கு வேறுவழியில்லை. எனவே “காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பாதேஎன்ற முழக்கத்தை முன்வைத்து வரும் ஆகஸ்டு 10 வெள்ளியன்று நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென்று த.தே.பொ.க கேட்டுக் கொள்கிறது.


ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் அணு உலைக்கெதிரான ஆர்ப்பாட்டம்


இரண்டாவது உலகப்போரில் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மக்களின் நினைவை ஏந்தி அணு ஆற்றலின் அழிவு வேலையை கண்டிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 6-ஆம் நாள் ஹிரோஷிமா நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இந்நாளில் மின்சார உற்பத்தி என்ற பெயரால் தலைமுறை தலைமுறையாக மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பேரழிவை உண்டாக்கும் அணு உலைகளை மூடக்கோரி கண்டன இயக்கங்கள் நடத்துவதென பல்வேறு சூழலியல் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும்முடிவு செய்துள்ளன.

 இதற்கு இசைய வரும் ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை மூடுமாறு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனதலைமைச் செயற்குழு முடிவு செய்தது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சிதம்பரம், தஞ்சை, ஒசூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தை இக்கோரிக்கையில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளையும், இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தபட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து காயத்திரி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயலில் உள்ள இட ஒதுக்கீடு திட்டத்திற்கு இதன்மூலம் இக்கட்டு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இச்சிக்கல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க இந்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவரும் நிலையில் இவற்றின் முடிவுகள் தெரியும் வரை இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. இதனை வலியுறுத்தி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நடப்பில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் என தலைமைச் செயற்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழமையுள்ள,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்

நாள் :16.07.2012 
இடம் : சிதம்பரம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT