வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை
"வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா?" என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கேள்வி எழுப்பினார். வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் இன்று(26.03.2012) தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை, "இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும்.
வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.
இந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும்? இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா? வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா?" என்று ஆவேசமாகப் பேசினார்.
கோவையில் 20 தோழர்கள் கைது
கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் தலைமையில் பேரணியாகச் செல்ல முயன்ற தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் 20 பேரை காவல்துறை கைது செய்தது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார், செயலாளர் தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்ட தோழர்கள் கைதாயினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர்.
சென்னை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை வாக்காளர் அட்டை வழங்கல் பொறுப்பு அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு தோழர்களால் நேரில் கொடுக்கப்பட்டது.
குடந்தை
த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கியப் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்து விளக்கவுரை நிகழ்த்தினார்.
ஒசூர்
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நடவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.
திருச்சி
திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். பாவலர் முவ.பரணர், தோழர்கள் இரெ.சு.மணி, இனியன், ஆத்மநாதன், வே.பூ.ராமராஜ், சூர்யா, சத்யா, வே.க.இலட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவின்றார்.
கீரனூர்
கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசினார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவின்றார்.