சென்னையில் எழுச்சியுடன் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாடு
சென்னை மன்றோ சிலை அருகிலிலிருந்து 11.10.09 காலை 11.00 மணியளவில் "தமிழினப் பாதுகாப்புப் பேரணி" நடைபெற்றது. முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நேற்று முன்தினம் (11.10.09) தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநாட்டையொட்டி, பேரணியும் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் ஈழவிடுதலைக்காக ஒன்றிணைந்து "தமிழர் ஒருங்கிணைப்பு" என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த பல மாதங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வமைப்பின் முன்முயறச்சியில், "தமிழினப் பாதுகாப்பு மாநாடு" என்ற மாநாடு ஏற்பாடாகியது. சென்னை மன்றோ சிலை அருகிலிலிருந்து 11.10.09 காலை 11.00 மணியளவில் "தமிழினப் பாதுகாப்புப் பேரணி" நடைபெற்றது. பேரணிக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, மநாட்டு ஆயத்தக் குழு செயலர் அய்யநாதன், பேராசிரியர் சரசுவதி, ஓவியர் புகழேந்தி, இயக்குநர் புகழேந்தி, எழுத்தாளர்கள் சூரியதீபன், அமரந்த்தா உள்ளிட்ட பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
காஞ்சி மக்கள் மன்றத்தினரின் கலைக் குழு பறையாட்டம் அடித்து முன் செல்ல, தலைவர்கள் பின்னால் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் கலந்து கொள்ள தஞ்சை, சிதம்பரம், திருத்துறைப்புண்டி, ஓசூர், மதுரை என பல்வேறு ஊர்களிலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் வாகனங்களில் வந்திருந்தினர்.
ஈரோட்டிலிருந்து தமிழகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பேருந்துகளில் வந்திருந்தனர். செனனை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்பு, ஈழஅகதிகள் முகாம் வாசிகள், அம்பத்தூர் திருவள்ளுவர் தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளும் பேரணியில் பங்கு பெற்றன.
"முள்வேலி முகாமில் சிறைபட்ட தமிழர்களை விடுதலை செய்!", "தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை நீக்கு!", "கச்சத்தீவை மீட்போம்!", "எழுந்தது பார் தமிழ்த் தேசியம்! விழுந்தது பார் இந்தியத் தேசியம்" என்பது போன்ற பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஊர்வலம் மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை நோக்கி நகர்ந்தது.
பேரணியின் முடிவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் ஆரிய இனவெறியன் இட்லரும், சிங்கள இனவெறியன் ராசபட்சேவும் தாங்கிய பதாகையை தீவைத்துக் கொளுத்தினர். அது அங்கு பரபரப்பை உண்டாக்கியது. உடனே அங்கு வந்த காவல்துறையினர், அப்பதாகையை தோழர்களிடமிருந்து பிடுங்கி தீயை அணைத்தனர்.
மக்கள் கண்காணிப்பகம் என்.ஜி.ஓ. செயலாளர் ஹென்றி திபன் பேரணியை முடித்து வைத்து உரையாற்றினார்.
மக்கள் கண்காணிப்பகம் என்.ஜி.ஓ. செயலாளர் ஹென்றி திபன் பேரணியை முடித்து வைத்து உரையாற்றினார்.
தமிழக பெண்கள் செயற்பாட்டுக் களம் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல், காஞ்சி மக்கள் மன்றம் மகேஷ் உள்ளிட்டோர் தீர்மானங்களை வாசித்தனர். மாலையில், தமிழினப் பாதுகாப்பு மாநாடு பொதுக் கூட்டம் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு இதழாளர் அய்யநாதன் தலைமை தாங்கிப் பேசினார்.
தீர்மானங்களை முன்மொழிந்து தலைவர்கள் பேசினர். கவிஞர் தாமரை, இயக்குநர் வ.கௌதமன், புதுவை பராங்குசம், செங்குட்டுவன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அமைப்பாளர் புலவர் கி.த.பச்சயப்பன்தமிழக முதல்வர் கருணாநிதியை கண்டித்து உரை நிகழ்த்தினார். பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் துணைத் தலைவர் கண.குறிஞ்சி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சிறப்புரையாற்றிய புலவர் புலமைப்பித்தன், "இலங்கைக்கு எம்.பி.க்கள் உல்லாசப் பயணமாகத் தான் சென்றுள்ளனர்" என குற்றம் சாட்டினார். பாரதிய சனதா கட்சியின் தேசியப் பொதுக் குழு செயலாளர் மருத்துவர் வைத்திலிங்கம் பேசும் போது, "காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரே கொள்கை தான். தனித்தமிழ் ஈழம் அமையக் கூடாது என்பதே அது" என்று அம்பலப்படுத்தி பேசினார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசுகையில்,
"ஈழத்தமிழர்களுக்கும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் சரி முதல் எதிரி இந்திய அரசு தான். ஈழத்தமிழர்கள் இன்று கொடுமைக்குள்ளாகியிருப்பது இந்திய அரசால் தான். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினைகளில் இந்திய அரசு அண்டை மாநிலத்தவர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ் இனத்தை வஞ்சிக்கிறது.
தற்போது கூட, முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. இதற்கு இந்திய அரசைக் கண்டிக்கும் அதே வேளையில், இதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தொழில்களையும், வணிகங்களையும் ஆக்கிரமிக்கும் அயல் இனத்தாரை வெளியேற்ற வேண்டும்.
தமிழ்நாடு தமிழ்த் தேசக் குடியரசாக மலர வேண்டும். அப்பொழுது தான் ஈழத்தமிழர்க்கும் நாம் துணை நிற்க முடியும். தமிழ்நாட்டு உரிமைகளையும் நாம் பாதுகாக்க முடியும்" என்று தெரிவித்தார்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி பேசுகையில்,
"ஈழத்தமிழர்கள் போராடுவார்கள். அவர்களுக்கு எவ்வகையிலும் உதவ முடியாத தமிழ்நாட்டு தமிழர்கள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? ஈழத்தமிழர் போராட்டத்தை பார்த்து கனவு காண்பது மட்டுமே நமது வேலையாகிவிடக் கூடாது. தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்" என்று தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு பேசும் போது,
"அக்டோபர் 28 அன்று மாநிலந்தழுவிய அளவில் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து "முள்வேலித் தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இலங்கையில் வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கள் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாகக் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுளூள 3 லட்சம் ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ முனும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேச சமூகத்தின் சார்பில் ஐ.நா.வே மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.
- இனப்படுகொலைக் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்காக மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், இந்தக் குற்றங்களுக்குத் துணை புரிந்த தெற்காசிய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என இம்மநாடு வலியுறுத்துகிறது.
- உலகின் பிற பகுதிகளில் மேற்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி பொது சன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத் தேசிய இனத்தின் அரசியல் வருங்காலத்தைத் தீர்வு காண ஐ.நா. முன்வர வேண்டும்.
- இலங்கையை இனவெறி அரசாக ஐ.நா.வும், உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும் என இம்மநாடு கேட்டுக்கொள்கிறது.
- தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உலக நாடுகளிடையே முன்னெடுத்துச் செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
- கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துப் போராட இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.
- இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் எல்லையைத் திறந்துவிடுவதன் மூலம், அல்லது இறுக்கமற்ற எல்லை ஆக்குவதன் மூலம் தமிழக, தமிழீழ மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்.
- இலங்கை மீது ஒரு பொருளியில் தடையை நாம் விதிப்பதோடு, உலக அளவில் இலங்கைக்கு எதிராகப் பொளியல் தடை விதிக்கும் படியும் இயக்கம் நடத்த வேண்டும்.
- இலங்கை அரசின் முக்கியமான வருமான வழிகளில் ஒன்றாக இருப்பது சுற்றுலாத் துறையாகும். மனித உரிமைகளை மதிக்கிற எவரும் இனக்கொலைகாரர்கள் ஆட்சிபுரியும் அந்த நாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்லக்கூடாது. இவ்வழியில் சிங்கள அரசை நெருக்கவும் இயலும். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகத் திரைப்படத் துறையினர் எவ்வகையிலும் இலங்கையோடு கூட்டு முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதை உடனடியாக கைவிட வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழகத்தில் தமிழக அரசு ஈழத் தமிழர்கள் சிலரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தமிழர்கள் சிலரையும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான சிறை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டிப்பதோடு, இந்தச் சிறப்பு முகாம்களை இழுத்து மூடி முகாம்வாசிகளை விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- தமிழீழ அகதிகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்து, அவர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- 2006 பிப்ரவரி 27 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 142 அடி வரை தண்ணீர் தேக்க, முல்லைப் பெரியாறு அணையின் வடிகால் மதகுகளை கீழிறக்குமாறும், தீர்ப்பின்படி தண்ணீரைத் தேக்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- இன உணர்வு அடிப்படையிலும், மனிதநேய நோக்கிலும் ஈழத் தமிழர்கள் உயிர் காக்க, உரிமை காக்கப் போராடியதற்காக, பேசியதற்காக, செயல்பட்டதற்காக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் இம்மநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.