உடனடிச்செய்திகள்

Thursday, November 30, 2017

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"
கடந்த 28.12.2017 அன்று, சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் - 3

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்! 

எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்!

 
உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்!
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27” இவ்வாண்டு (2017), உலகெங்கும் இந்நாளை தமிழர்கள் எழுச்சியுடன் நினைவு கூர்ந்து, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
 
தமிழீழத்தில்...

2009ஆம் ஆண்டு இனப்படுகொலைப் போருக்குப் பின்னர் தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடி களாலும் தடைகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு இராணுவத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பிரிட்டன், பிரான்சு, கனடா என புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வாழும் நாடுகளிலும், உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
 
ஓசூர் 

ஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சாந்திநகரில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வை த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி நோக்கவுரையாற்றி ஒருங்கிணைத்தார். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்கில் அனைவரும் கையில் ஒளியேந்தி நிற்க, தோழர் முத்து மாவீரர் வீரவணக்கப் பாடலை உணர் வெழுச்சியுடன் பாடினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, த.க.இ.பே. ஓசூர் செயலாளர் தோழர் முத்துவேலு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தோழர் ரோம்லெஸ், பாவலர் குடந்தை மாறன், வள்ளுவர் இலக்கிய மன்ற பொறுப்பாளர் சிவந்தி அருணாச்சலம், தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன், தமிழ்த் தேச குடியரசு இயக்க பொறுப்பாளர் தோழர் தமிழரசன், தொழில் முனைவோர் திரு. ஜெய்சன் உள்ளிட்டோர் வீரவணக்க உரையாற்றினர். முன்னதாக, இளம் தோழர் கோபி கவி படித்தார். தோழர் முத்து ஈழ எழுச்சிப் பாடல்களை நிகழ்வின் இடையிடையே பாடினார். த.க.இ.பே. பாவலர் நடவரசன் நிறைவுரையாற்றினார்.
 
குடந்தை

குடந்தை ஒன்றியம் புதுப்படையூரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுக்கு குடந்தை நகரச்செயலர் தோழர் ம. தமிழ்த்தேசியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் முன்னிலை வகித்தார். தேவநேசன் மற்றும் மகளிர் ஆயம் தோழர் இளவரசி, மேரி மற்றும் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
 
திருச்சி

திருச்சியில், த.தே.பே. அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்திற்கு, மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாவீரர் ஈகச்சுடரேற்றி உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், ஜி.பி. பொறியியல் தொழிலா ளர்கள் சங்கம் திரு. மதியழகன், பேரியக்க தோழர்கள் தியாகராசன், இராமராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
புதுச்சேரி

புதுச்சேரி வேல்ராம்பட்டில், தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11. 2017 அன்று குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், 27.11.2017 மாவீரர் நாளன்று ஈகியர் வீரவணக்கமும் நடைபெற்றது. பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். பகுதி மக்களும், பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
 
தருமபுரி

தருமபுரி தொலைப்பேசித் தொடர்பகம் அருகில் நடை பெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கச் செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் தோழர் கரு.பாலன், பா.ம.க. திரு. சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் தோழர் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு உணர்வாளர்களும், முருகேசன், அன்பழகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
 
செங்கிப்பட்டி
 
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாள் 26.11.2017 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, பழ. மலைத்தேவன், பெ. ஆனந்த் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
 
தஞ்சை

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு உ.தே.பே. தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, மாவீரர் நாள் ஈகச்சுடரேற்றம் நடைபெற்றது. பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
 
மதுரையில் தடை 

மதுரை - சிம்மக்கல் ஆறுமுச்சந்தியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்ட ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், முதலில் அனுமதி தந்த காவல்துறையினர் கடைசி நேரத்தில் திடீரென அனுமதி மறுத்தனர்.
 
தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்!!!

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, November 28, 2017

“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை!

“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை!
 

தமிழ்நாடு அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர்களை விரிவுரையாளர்களாகப் பணியமர்த்துவதற்கு எதிரான தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம் குறித்து, “வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை! - வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு!” என்ற தலைப்பில், 29.11.2017 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில், செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பாலிடெக்னிக் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் 23.11.2017 அன்று சென்னையிலுள்ள தரமணியில், நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் என்று அரசு சார்பில் அறிவிப்பும் வந்தது.

அக்கட்டுரையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதியின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. “சில நாட்களுக்கு முன்பு அரசு சார்பில் எங்களிடம், நீங்கள் இப்படி கூட்டம் நடத்தக்கூடாது என்றார்கள். அதற்கு நாங்கள், முற்றுகையாகவோ ஆர்ப்பாட்டமாகவோ செய்யப்போவதில்லை. பாதிக்கப்படும் மாணவ சமுதாயம் ஒன்று திரள்வார்கள் என்று சொன்னோம்.


இந்த விஷயத்தில் மாணவர்களிடம் பெருகிவரும் ஆதரவைப் பார்த்த அரசாங்கம், கடந்த 21-ஆம் தேதி மாலை ஆறு மணியளவில், இந்த சான்றிதழ் முகாம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை ஒத்த கருத்துடையவர்களையும், மாணவர்களையும் திரட்டி, எப்போது முகாம் நடத்தினாலும் போராடுவோம். இந்த புதிய நடைமுறையை அரசு நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, November 27, 2017

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தோழர் கி. வெங்கட்ராமன் உரை!

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரை!
“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், 25.11.2017 காலை, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, “விசை” இணைய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் அ.மு. செய்யது தலைமை தாங்கினார்.

இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டுராசா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன், ஊடகவியலாளர் தோழர் ஆழி செந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பட்டுராசன் காந்தி, தமிழ்நாடு மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் இளையராசா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தோழர் கி.வெ. அவர்களது உரையின் எழுத்து வடிவம் :

“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், முகாமையான பொருளில், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு முதலில் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இனப் போராட்டங்கள் குறித்து நாம் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்பட வேண்டும்.

பொதுவாக நாம், “கருத்து வாக்கெடுப்பு” என்றும், “பொது வாக்கெடுப்பு” என்றும் மாறிமாறிப் பயன் படுத்துகிறோம். இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு! பொது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்புதான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டின் மீது நடக்கும் வாக்கெடுப்பு என்பதால், குறிப்பாக தேசிய இறையாண்மை குறித்தது என்பதால் நாம் இதனை “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) என்றே கூற வேண்டும். “பொது வாக்கெடுப்பு’’ எனக் கூறக்கூடாது என்பது எனது கருத்து!

அவ்வகையில், குர்திஸ்தான் - கட்டலோனியாவில் தங்கள் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய கருத்து வாக்கெடுப்புகளை நாம் ஆதரிக்கிறோம். கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை, தமிழ்ச்சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.

நம் எல்லோருக்கும், தமிழீழ விடுதலை என்ற நோக்கத்தில் பொது கருத்தும், அக்கறையும் இருக்கிறது. தமிழீழத்தில் ஒரு மாபெரும் இன அழிப்பு நடந்த நிலையில், அந்த அக்கறை நம்மிடத்தில் கூடுதலாகவும் உள்ளது. ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறையில் நம்மிடையே வேறுபாடுகள் உள்ளன.

ஐ.நா.வின் சட்டங்கள் - பிரகடனங்கள் போன்ற வற்றில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு என்றைக்குமே வல்லரசு நாடுகள் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்திற்கு தானே முன்வந்து ஆதரவு தெரிவித்த வரலாறு கிடையாது! வரலாற்று நிர் பந்தங்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் அவர்களது நாட்டு நலன் களை அல்லது அவர்களது ஆதிக்கத் தேவைகளுக்கு இசைவாக இருக்கும் போதுதான் ஆதரிக்கிறார்கள்.

பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சி செய்த சோவியத் - சீனா போன்ற நாடுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணையாக நின்றது உண்மை தான்! ஆனால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.

மாபெரும் தலைவர் மாசேதுங் உயிரோடு இருந்த காலத்தில்தான், சீனா - திபெத் தேசிய இனத் தாயகத்தை ஆக்கிரமித்தது.

தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை அளித்து - உலகிற்கே முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை, சோவியத் ஒன்றியம் வைத்திருந்தது. அந்த உரிமையைக் கொண்டு பின்லாந்து நாடு பிரிந்து போவதை தலைவர் லெனின் ஏற்றுக் கொண்டு, தனி நாடு அமைத்துக் கொள்ள வழிவிட்டார்.

இங்குதான் நாம் “சோவியத் ரசியா” என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்கள் சட்டப்படி “சோவியத் ஒன்றியம்” என்றுதான் சொன் னார்களே ஒழிய, நாட்டின் பெயரில் “இரசிய” அடையாளம் வெளிப்படையாக வராமல்தான் பார்த்துக் கொண் டார்கள்.

ஆனால், ஏட்டளவில் உரிமைகள் இருந் தாலும், நடைமுறையில் சோவியத் நாட்டில், இரசிய மொழி - இரசிய இன ஆதிக்கம் மேலாங்கியது. லெனின் காலந்தொட்டு, அங்கு இரசிய மேலாதிக்கத்திற்காக நடந்த அத்துமீறல்கள் குறித்து உக்ரேனியன் கம்யூனிஸ்ட்டுகள் இப்போது எழுதுகிறார்கள். லாட்வியக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படுத்துகிறார்கள். சோவியத் ஒன்றியம் சிதறிப் போனதில், இரசிய மேலாதிக்கத்திற்கு முகாமையான பங்குண்டு!

லெனின் பிரிந்து போகும் உரிமையை ஆதரித்தாலும், தேச அரசு அமைத்துக் கொள்வதை நிபந்தனையற்று ஏற்கவில்லை. தேசியத் தன்னுரிமையை மணமுறிவு (விவாகரத்து உரிமைக்கு) இணையானதாகக் கூறினார். அதாவது பல தேசங்கள் சேர்ந்து இருப்பது குடும்பமாக வாழ்வது போல் இயல்பானது; பிரிந்து சென்று தேச அரசு அமைப்பது விவாகரத்து போல விதிவிலக்கானது. என்பதுதான் லெனின் கோட்பாடு!

ஐ.நா.வின் உரிமைப் பிரகடனத்தின் உறுப்பு 1 (2) இல், எல்லா தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முரணாக அடுத்த பகுதியிலேயே, உறுப்பு நாடுகளின் இறையாண்மையை - பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரண்டு பிரிவுகளையும் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எப்போதுமே தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது, எதிர்நிலையான இந்த சர்வதேச சூழலில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் முன்னேறுகிறது! வரலாற்றுத் தேவைகளைக் கருதி, வல்லரசுகள்கூட தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சூழல் வரலாம். ஒரு ஏகாதிபத்திய வல்லரசு நாடு ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கக் கூடாது என்று லெனின் சொன்னார்.

அதுபோல், வட அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை, “அமெரிக்கக் கையாட்களின் போராட்டம்” என்று முத்திரை குத்திவிட முடியாது. குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் அதுதான்!

ஈராக், துருக்கி போன்ற பல நாடுகளிடையே குர்து இன மக்கள் சிதறிக் கிடக்கின்றனர். துருக்கியில் ஒசலான் தலைமையில் பி.கே.கே. என்ற கம்யூனிஸ்ட் தொழி லாளர் கட்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பல்லாண்டுகளாக - பல ஒடுக்குமுறைகளை எதிர்த்து முன்னேறிக் கொண்டுச் சென்றுள்ளது. ஒசலான் வாழ் நாள் சிறையாளியாக துருக்கியில் அடைக்கப்பட் டுள்ளார்.

1988இல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு, குர்து மக்களை இனப் படுகொலை செய்து, தொகை தொகையாகக் கொன்ற போது குர்து மக்களின் விடுதலைத் தாகம் பெருமளவில் பேசப்பட்டது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, குர்திஸ்தான் விடுதலை இயக்கத்தினர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு மாகாண அரசு ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலாக அதை அமைத்துக் கொண்டார்கள்.

அதன் தலைவர் பர்சானி அப்போதே சொன்னார். “எங்களுக்கு சாதகமான சூழல் வரும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மாகாண அரசைப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்றார். அதைத்தான் இப்போது 25.09.2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - தங்கள் விடுதலைக் கோரிக்கையை உலகறியச் செய்துள்ளனர்.

விடுதலைக் கோரிக்கைக்காக ஆயுதம் தூக்கினால் அதை பயங்கரவாதம் என்கிறாயே, இதோ அங்கீகரிக்கப்பட்ட அரசைக் கொண்டு - சனநாயக வடிவிலேயே எங்கள் விடுதலைக் கோரிக்கையை - மக்கள் கருத்தாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று குர்து மக்களும், கட்டலோனிய மக்களும் தெரிவித் துள்ளார்கள்.

செர்மனி மேலாதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கொசோவா விடுதலையை ஆதரிக்கிறது, ஆனால், கட்டலோனியா விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதுபோல்தான் பல வல்லரசுகளும்!
இதே சூழலில்தான், கனடாவில் கியூபெக் மாகாணத்திலும், ஐக்கிய முடியரசான பிரிட்டனில் ஸ்காட்லாந்திலும் கருத்து வாக்கெடுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த வல்லரசும் அதை முன்வைக்கவில்லை. அங்கிருக்கும் சனநாயக வளர்ச்சிக்கேற்ப, அதை அங்குள்ள பிரிட்ஷ் அரசும், கனடா அரசும்தான் நடத்தியது.

பல தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் “கூட்டாட்சி” (Federation அல்லது Confederation) என்பது தோற்றுப்போன ஒரு கோட்பாடு! கூடுதல் உரிமைகள் பெற்றெல்லாம் ஒரு தேசிய இனம் கூட்டாட்சியில் நிலைத்துவிட முடியாது! கூடுதல் அதிகாரத்தை நோக்கிப் போவதே இயல்பாக நடப்பதில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வலுவாகும் இடங்களில் அவற்றின் அழுத்தத்தில் அவற்றை எதிர்கொள்ள சில இடங்களில் நடக்கலாம்.

சோவியத் ஒன்றியத்தைவிட, தேசிய இனங்களுக்கு உரிமை வழங்கிய ஒரு அரசமைப்புச் சட்டம் உலகில் எங்காவது உண்டா? ஆனால், நடைமுறையில் ரசிய மொழி இன மேலாதிக்கம்தான் அங்கு நடந்தது. ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் என்ற வழியில் அது நடந்தது. வட அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலோ சாக்சன் மொழியினரின் கூட்டாட்சியாக அது இருந்தாலும் கூட, அங்கும் முரண்பாடுகள் வெடிக்கின்றன. கலிபோர்னியாவில் தனி நாட்டுக் குரல் கேட்கிறது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசில், ஏதாவதொரு தேசிய இனம் மேலாதிக்கம் செலுத்துவது இயல்பாக உள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியாகத்தான் நடந்தது. குர்திஸ்தானில், சன்னி இசுலாமியப் பிரிவினரே பெரும் பான்மையாக உள்ளனர். கட்டலோனியாவில் ரோமன் கிருத்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஸ்பெயினிலும் அவ்வாறே! இருப்பினும், அங்கெல்லாம் மதத்தைத் தாண்டி மொழி வழி தேசிய இனப் போராட்டம் நடக்கிறது. பண்பாட்டுக் கூறாக மதம் இருக்கலாமே தவிர, மொழி - தாயகம் தான் தேசிய இனத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இவையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக உள்ளன. சில அரிதான சூழல்களில், நாகாலாந்து போன்ற இடங்களில் பல மொழி பேசுபவர்கள் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படையில், ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து கொண்டு, தங்களுக்கான தேச அரசை அமைத்துக் கொள்ளப் போராடுவதும் நடக்கிறது. இது சராசரிப் போக்கல்ல!

தமிழீழத்தில் இன்றைக்குள்ள நிலையில், விடுதலைக் கோரிக்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அங்கு அமைப்பு ரீதியான சில குழப்பங்கள் உண்டு!

தமிழீழத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேச அரசை நிறுவி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசையும், தமிழீழ மக்களையும் சிங்கள பௌத்த இனவெறி அரசு பல நாடுகளின் பங்ளிப்போடு போர் நடத்தி - இரத்தக் களரியில் அழித்தொழித்தது.

எனவே, பன்னாட்டுச் சமூகம்தான் ஐ.நா.வழியே அந்த அரசை மீட்டெடுத்துத் தர வேண்டும்! அதற்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதற்குமுன், நமக்கு சில புரிதல்கள் வேண்டும்.

இந்தியாவின் அனுசரணையோடு - இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தவே முடியாது என்ற அடிப்படைப் புரிதல் நமக்கு வேண்டும். எந்தவொரு அரசுக்கும் வர்க்கத்தன்மை இருப்பதைப் போல், அவற்றுக்கு ஒரு இனத்தன்மையும் இருக்கிறது. அவ்வாறு, இந்தியாவுக்கு ஒரு ஆரிய இனத்தன்மை இருக்கிறது. ஆரியக் கட்டமைப்பாக அது செயல்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழினத்தை பகையாக நிறுத்தியே, இந்தியா பிறந்து வளர்ந்து நம்முன் நிற்கிறது என்ற புரிதல் நமக்கு அவசியமானது!

உலகின் புவிசார் அரசியல் நிலைமைகள் அவ்வப்போது மாறலாம். சோவியத் - அமெரிக்கா என்ற இருமுனை உலகம் இருந்தபோது, உலக நிலைமைகள் வேறு! இன்றைக்கு, வட அமெரிக்கா தலைமையில் ஒருமுனை உலகம் வலிந்து திணிக்கப்படும் சூழலில், அதற்கு எதிராகப் பலமுனை உலகம் உருவாகி வரும் சூழல் வேறு! எனவே, புவிசார் அரசியல் நலன் என்பது தற்காலிகமானது!

இன்னொருபக்கம், சீன எதிர்ப்புக்காக இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் கருத்தாளர்கள் இருக்கின்றனர். இந்தியா ஒருபோதும் அவ்வாறு செய்யாது! தமிழினப் பகையோடுதான், இந்திய அரசு சீன எதிர்ப்பை முன்வைக்கும். அவ்வாறுதான் செயல்படுகிறது. தனது பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பிலும், சாகர் மாலா திட்டத்திலும் சீனாவோடு கைகோக்கிறது. பன்னாட்டு உறவு வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை!

எனவே, இந்தியா - தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடுதான் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல் அணி வகுப்பை நாம் முன்வைக்க வேண்டும்.

தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வழக்கம்போல் சிங்கள அரசு எதிர்க்கும்! எனவே, அதற்கு ஆதரவாக வெளியில்தான் சூழல்களை உருவாக வேண்டும். அப்பணியில் நாம் ஈடு பட வேண்டும்.

இன்றைக்கு, பல தடைகளைக் கடந்து தமிழீழத்தில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில், மாவீரர் நாள் என்பது துக்கம் கொண்டாடும் நிகழ்வல்ல! “நாங்கள் ஒரு தேசம்! இது எங்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்’’ என்று உலகிற்குத் தங்கள் விடுதலைக் கோரிக்கையை பறைசாற்றும் நிகழ்வு!

இவ்வாறான சூழலில், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த விரும்பினால், அதற்கு மிகப்பெரிய தடையாக இந்தியாதான் முன் நிற்கிறது!

நாமெல்லாம் நேசித்த கியூபா, வெனிசுவேலா போன்ற பல இடதுசாரி நாடுகள், இந்தியாவின் உதவி வேண்டும் என்பதற்காகத்தான், கேள்வி இல்லாமல் இந்தியா ஆதரித்த இலங்கையின் தமிழின அழிப்புப் போரை ஆதரித்தார்கள். இதில் முதலாளிய நாடு - பொதுவுடைமை நாடு என்ற சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது!

இன்றைக்குள்ள உலகச் சூழலில், தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, வல்லரசுப் போட்டிகளுக்கு உள்ளே நுழைந்து நடத்தும் ஒரு காய் நகர்த்தல் ஆகும்! வெறும் கொள்கை உறவோடு, ஞாயங்களின் அடிப்படையில் அது நடக்காது! மனித உரிமை ஆர்வலர்கள் இருப்பார்கள், மக்கள் இருப்பார்கள். ஆனால், அரசு என்பது ஒரு போதும் ஞாயத்தின் பக்கம் நிற்காது. தங்கள் அரசுக்கு அல்லது தங்கள் மண்டலத்திற்கு ஒரு நலன் இருக்கிறதென்றால், ஒரு தேச விடுதலைப் போரை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம்!

இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். கட்டலோனியா மற்றும் குர்திஸ்தானில், மாகாண அரசுதான் கருத்து வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, இங்கேயும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் பிடித்த பிறகு அவ்வாறு கருத்து வாக்கெடுப்பு நடத்து வோம் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை!
ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கூட “இந்திய ஒருமைப் பாட்டை - இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஒருவர் வாக்குறுதி அளித்தால் தான், இங்கு தேர்தலிலேயே நிற்க முடியும்! இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறை ஆகியவை அத்தகையவை! கருத்து வாக்கெடுப்பு என்று அறிவித்தால் அடுத்த நொடி தமிழ்நாட்டு ஆட்சியை இந்திய அரசு கலைத்துவிடும்!

“அடைந்தால் திராவிட நாடு” என முழங்கியவர்கள் கூட, ஏதோவொரு வடிவத்தில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க.வுக்கு அப்போது கூடுதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால், இந்திய அரசு ஒரு தடைச்சட்டம் போட்டு அதை கைவிடச் செய்தது.

தனிநாடு கேட்டவர்கள் ஆயிற்றே என தமிழ் நாட்டுக்குக் கூடுதல் உரிமைகள் எல்லாம் கொடுக்கப் படவில்லை. கூடுதலாக அதிகாரங்கள்தான் பறிக்கப் பட்டன. மாநில உரிமைகள் பல பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவ்வாறுதான், தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டு இந்திய அரசால் “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம்தான் தேசிய இன ஒடுக்குமுறையின் முதன்மைக் கருவியாக இருக்கிறது. சனநாயகம் என்ற போர்வையில் ஆரியமய இந்தி இனத்தின் ஆதிக்கம், ஆரிய வளையத்தில் வீழ்ந்துபோன பிற இனங்களின் துணையோடு நடக்கிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது அதுதான்!

எல்லா வகையிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதென்பது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல! சமற்கிருத இந்தி மொழித் திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் ஆரிய இன மேலாதிக்கத்திற்காக நடக்கின்றன. மோடி இதில் வேகமாக உள்ளார் என்றால், காங்கிரசு அதில் கொஞ்சம் பதமாக நடக்கிறது. அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை!

சிலர், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று கூறுகின்றனர். அது உயர்ந்த இலட்சியம்தான் என்றாலும், அதற்கு உடனடி வாய்ப்பில்லை!

எனவே, முதல் கட்டமாக ஒத்த தேசிய இனங்கள் என்ற வகையில் தமிழர்கள் தங்கள் இறையாண்மை இலட்சிய அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். தமிழர்களின் தேசியத் தாயகங்களான தமிழீழமும் தமிழ்நாடும் “தமிழர் சர்வதேசியம்” என்ற வகையில், பொதுப் புரிதலோடு ஒத்திசைய வேண்டும்.

அதன் வழியிலேயே, தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு நோக்கி நாம் நகர முடியும்! தமிழீழம் இன்றைக்கு எலும்புக் கூடாக இருக்கலாம்! சாம்பல் மேடாக இருக்கலாம். ஆனால், நாளை எழும்! சாம்பலிலிருந்து மீண்டும் எழும்! மாவீரர்களின் ஈகம் வீண் போகாது! தமிழீழம் உறுதியாய் வெல்லும்!”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, November 26, 2017

“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!” தமிழீழ தேசியத் தலைவருக்கு தோழர் பெ.மணியரசன் புகழாரம்!

“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!” தமிழீழ தேசியத் தலைவருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழாரம்!
 
நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது பிறந்தநாள்!

"எங்கள் குல நாயகன்; எம் இனத்துத் தலைவன்; எங்களுக்குத் தம்பி; எங்களுக்கு அண்ணன்; வாராது வந்த மாமணி; எல்லாமாகி நிற்கின்ற தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கு பிறந்தநாள்! வாழ்க எம் விடுதலை வேந்தே!

அறத்தினால் வீழ்ந்தாய்; ஆரியத்தின் சூழ்ச்சியால் வீழ்ந்தாய்! ஆயினும் ஐந்து கண்டங்களில் வாழும் தமிழர் நெஞ்சமெல்லாம் எழுந்து நிற்கிறாய்!

அறத்திற்கு மட்டுமன்று, அநீதியை ஒழிக்கும் மறத்திற்கும் அன்பே துணை என்றான் நம் பாட்டன் வள்ளுவன். அதற்குத் தானே நீ ஆயுதம் எடுத்தாய்!

மக்கள் மீது மாறாத அன்பு உனக்கு; அந்த மக்களின் விடுதலைக்காக; நீ பெற்ற மக்களைக் களப்பலி கொடுத்தாய்! குடும்ப ஆதாய அரசியல் கோலோச்சும் தமிழகம், உன் குடும்பத்தைப் பார்த்தல்லவா திருந்த வேண்டும்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சர் பதவி உன்னைத் தேடி இருமுறை வந்தது. அற்பச் சலுகைகளைத் தந்து இலட்சிய வீரர்களை மடக்கும் ஆதிக்கசக்திகளின் தந்திரத்தை நானறிவேன் என்றாய்! எனக்கொரு பதவிக்காக போராடவில்லை, எம்மின விடுதலைக்காக போராடுகிறேன், ஒரு முதலமைச்சர் பதவிக்காக என் இனத்தை விற்கமாட்டேன் என்றாய்!

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ!” என்றான் பாரதி. பேரம் பேசுவதற்காக விடுதலை முழங்கியோர் பிச்சைப் பதவிகளை ஏற்றார்.

இலட்சியத்தை விட்டுவிட்டால் - இயக்கத்தைத் தடை செய்யவில்லை என்றார்கள். இலட்சியமில்லாவிட்டால் இயக்கம் எதற்கு என்றாய்!

உன்னை அண்ணன் என்றும் தம்பி என்றும் ஒரு கையால் தழுவிக்கொண்டே, பிச்சைப் பதவிகளுக்கு இன்னொருகையை நீட்டுகிறார்கள் நெருப்பின் செல்வனே!

சொல்லுக்கேற்ற செயல், செயலுக்கேற்ற சொல் என்று ஆக்கிக் கொண்ட செம்மலே, உன் இயக்கத்தை முள்ளிவாய்க்காலோடு முடித்து விட்டதாக பகைவர்கள் பறைசாற்றித் திரிகிறார்கள். எந்தப் பக்கமிருந்து உன் படை வருமோ என்று உள்மனத்தில் பதைபதைத்துக் கிடக்கிறார்கள்.

உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!

இன்றிருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் பல மடங்கு உனது புகழ் பரவும் பார்வதி மைந்தனே, உன் செல்வாக்கு பல மடங்கு வேர்விடும் வேலுப்பிள்ளைப் பிரபாகரனே!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் தொடந்து துணை நிற்பதென்ற உறுதியில் மேலும் உரமேற்றிக் கொள்கிறது"

(மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மணிவிழாவையொட்டி, 2014ஆம் ஆண்டு - தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள், 'மாமணிக்கு மணிவிழா ஆண்டு!" என்ற தலைப்பில் எழுதிய தலையங்கக் கட்டுரையாக தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 15-30 இதழில் வெளியான கவிதை இது!)
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!
 
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் செலுத்தும் - மாவீரர் நாளான நாளை ( 27.11.2017 ) மாலை, மதுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஒன்றுகூடல் நடைபெறுகிறது.

மதுரை சிம்மக்கல் அருகிலுள்ள ஆறுமுச்சந்தியில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்குகிறார்.

தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்று தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்!


Saturday, November 25, 2017

“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எட்டில் கட்டுரை!

“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எட்டில் கட்டுரை!




“தமிழர்களின் வேலை வாய்ப்பை தமிழக அரசே பறிக்கும் அவலம் - அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” என்ற தலைப்பில், 30.11.2017 நாளிட்ட “புதிய தலைமுறை” வார இதழில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழக இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு பணியில் 9351 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு. இதனால், மாநில அரசின் பணிகளில் பலநூறு வேலைவாய்ப்புகளை பறித்திருக்கிறார்கள் வெளிமாநிலத்தவர்கள்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களைவிடவும் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்கள்தான் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசுப் பணி வாய்ப்புகளும் தமிழக இளைஞர்களிடம் பறிக்கப்படுகிறது. இத்தனைக்கும், இந்தியாவிலேயே படித்து வேலையில்லாத பட்டதாரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்நிலையில், இங்குள்ள மாநில அரசுப்பணிகளில்கூட வெளிமாநிலத்தவர்களை அனுமதிப்பது மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகமாக்கி, தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் என்ற குரல் எல்லாமட்டத்திலும் ஒலிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான 1058 காலிப் பணியிடங்களுக்கு, ‘ஆசிரியர் தேர்வு வாரியம்’ (Teachers Recruitment Board) நடத்திய தேர்வின் முடிவுகளில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். தங்களின் இருப்பிட விபரம் உள்பட பல்வேறு குளறுபடிகள் செய்துதான் இந்த செயல் நடைபெற்றுள்ளதாக அந்த தேர்வினை எழுதிய தமிழக பட்டதாரிகள் குமுறினர். இந்நிலையில், என்ன நிகழ்ந்துள்ளது என நுட்பமாக பார்த்தவர்களுக்கு உள்ளே ஆச்சர்யம் காத்திருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே, மாநில அரசின் தேர்வுகளை வெளிமாநிலத்தவர்களும்வெளிநாட்டினரும் எழுதலாம் என்ற வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்திருக்கிறது. ரகசியமாக இருந்த அந்தத் தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நம்முடன் பேசிய, பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆசிரியர் தேர்வினை எழுதிய திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞரான பாலசுப்ரமணியன், “நான் எம்.டெக். படித்துள்ளேன். பல ஆண்டுகளாக இந்த தேர்வினை எழுதி வருகின்றேன். இந்த முறை நடந்த தேர்வினை மிகவும் சிறப்பாக எழுதி, எப்படியும் பணி கிடைத்துவிடுமென காத்திருந்தேன். அதுபோல நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன். ஆனால், எழுத்து தேர்வு முடிவுகளை பார்த்தவுடன் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். அதில் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கட் ஆஃப் மார்க் அதிகமாக இருந்தது. சந்தேகத்துடன் என்னவென்று பார்த்தபோதுதான் தெரிந்தது இந்த தேர்வுகளில் பலநூற்றுக்கணக்கான வெளிமாநில மாணவர்கள் தேர்வாகியுள்ளது. அவர்கள் அனைவரும் பல லட்சம் கட்டி ஐஏஎஸ் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள். அதனால், அவர்களால் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்திருக்கிறது. இதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.

“தமிழ்நாட்டிற்குள்ளேயே உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலத்தவர்களையே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு ‘ஆசிரியர் தேர்வு வாரியம்’ நடத்திய தேர்வின் முடிவுகள், கடந்த 07.11.2017 அன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப் பட்டுள்ளன. அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்! இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களை தட்டிப் பறித்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணை வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் வெளி மாநிலத்தவர் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்! வழக்கமாக இதுபோன்ற தேர்வுகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு மாணவர்கள் 120 முதல் 130 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், 140லிருந்து 154 வரை வெளி மாநிலத்தவர் மதிப்பெண் பெற்றுள்ளது. இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், பாடங்கள் தமிழில்தான் நடத்தப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில், தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் அச்சத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணித்த நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற் குரியது.

மகாராஷ்டிரத்தில் 1968-இலிருந்தும், கர்நாடகாவில் 1986-இலிருந்தும், குஜராத்தில் 1995-இலிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999-இலிருந்தும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டும் அப்படியொரு சட்டத்தை இயற்றவில்லை. மாறாக வேலை வாய்ப்பை மற்ற மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்! இது மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சிதைத்து மண்ணின் மக்களான தமிழர்கள் உரிமையைப் பறிப்பதாகும்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளைச் செய்யும்போது, தமிழ்நாட்டு மரபு வழியில் தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான காலவரம்புடன் கூடிய இருப்பிடச் சான்று, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல, மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

உடனடியாக பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித்தேர்வு பட்டியலிலிருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும். தமிழர்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டிய நேரமிது. கட்சி கடந்து ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக, 07. 11. 2016 அன்று திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குஜராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும்.” என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன்.

“இதற்கும் மேலாக இப்போது தமிழர்களின் தலையில் விழுந்த பேரிடியாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி. என். பி. எஸ். சி. ) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2016இல் செய்த திருத்தம் என்பது, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான். மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு.

இதன்மூலம், நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசு.
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக்கொள்ள வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குஜராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் பொதுப்பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

பல்தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் தேர்வினை எழுதிய கும்பகோணத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன், “தமிழகம் முழுவதும் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறோம். இந்த நிலையில் வெளிமாநிலத்தவர்களும் இங்கு வந்து எங்களுடன் போட்டியிட்டால் எப்படி நாங்கள் வேலைக்கு போக முடியும். இந்த தேர்வுகளில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக PT-32 என்ற தேர்வுமையத்தில் மட்டுமே பலநூறு வெளிமாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இதுபோல சில குறிப்பட்ட தேர்வு மையங்களில் அதிக அளவில் வெளிமாநில மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இங்கு படித்து வேலையில்லாமல் இருக்கும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் பணிவாய்ப்பை பிற மாநிலத்தவர்களுக்கு தாரைவார்க்கக்கூடாது” என்கிறார் கவலையுடன்.

தமிழகம் முழுவதும் இப்போதைய கணக்குப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் மேல். அவர்களில் பி.இ.,எம்.இ. மற்றும் பிஎச்டி போன்ற உயர்கல்வி படித்தவர்கள்கூட 6 ஆயிரம் ரூபாய் மாதசம்பளத்திற்கு வேலை பார்க்கும் கொடுமை நடந்துவருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அரசுப்பணி தேர்வுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் தஞ்சையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன், “இங்கு என்னை போன்ற பல லட்சம் இளைஞர்கள் கல்விக்கடன் பெற்று படித்துவிட்டு, வேலை இல்லாமல் கடன் சுமையுடன் இருக்கிறோம். எங்களின் ஒரே நம்பிக்கையே அரசுப் பணிகள்தான். அதற்காகத்தான் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து வருகிறோம். ஆனால், இப்போது வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யார் வந்து வேண்டுமானாலும் இங்குவந்து தேர்வெழுதலாம் என்றால், நாங்கள் எப்படி வேலை வாய்ப்பை பெறுவது?

மற்ற மாநிலங்களில் இதுபோல தமிழக மாணவர்களை தங்கள் மாநில அரசுப்பணிக்கு அனுமதித்தால் நாமும் அனுமதிக்கலாம். எங்குமே எங்களை தேர்வெழுத அனுமதிக்காத நிலையில், இங்கு மட்டும் அவர்களை அனுமதித்தால் அது நியாயமாகுமா?. இப்படியே போனால் தமிழகத்தில் படித்த பல இலட்சம் இளைஞர்களாகிய நாங்கள் என்னதான் செய்வது” என்கிறார் ஆதங்கத்துடன்”.

இவ்வாறு அச்செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, November 21, 2017

பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!

பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களில் பலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் வருகின்ற 23.11.2017 அன்று காலை 10 மணிக்கு சென்னை தரமணி நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (Central Polytechnic College) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்திருந்தது.
 
தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் வேலைக்கு வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அனுமதிப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்தது. இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளி மாநிலத்தவர் பெயர்களை நீக்கிவிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்தது.
 
அவ்வாறு வெளி மாநிலத்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் தரமணியில் நடந்தால், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் நேர்காணல் நடைபெறும் அலுவலகம் முன் நீதி கேட்கும் ஒன்றுகூடல் போராட்டம் நடத்துவது என்றும் அறிவித்திருந்தோம். போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தோம்.
 
வெளி மாநிலத்தவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பிரிவுகளுக்காக சென்னை தரமணியில் 23.11.2017 அன்று நடைபெறவிருந்த நேர்காணலை, இப்போது நிர்வாகக் காரணங்களுக்காக நாள் குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
 
எனவே தமிழ்த்தேசியப் பேரியக்கம் 23.11.2017 சென்னை தரமணி பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தவிருந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்பதையும், மேற்படி நேர்காணல் வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு மீண்டும் நடந்தால், அந்நாளில் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மண்ணின் மக்கள் வேலைவாய்ப்பு உரிமையில் அக்கறையுள்ள அனைவருக்கும், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்ட அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
 
 

Thursday, November 16, 2017

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு!

நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு! அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குசராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப்பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள அநீதி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக் கூடாது என்றும், அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அந்த இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், 23.11.2017 அன்று சென்னை தரமணியிலுள்ள நடுவண் (சென்ட்ரல்) பாலிடெக்னிக் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்து, அதைவிடப் பேரிடியாக இப்பொழுது வெளி நாடுகள் – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.

பதவியில் இருக்கிற காலத்திற்குள் தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, தாங்கள் ஆதாயமடைய வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழர்கள் விழிப்புணர்ச்சியுடன் கட்சி கடந்து, இன ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க களம் காண வேண்டிய நேரமிது!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 07.11.2016 – திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குசராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் நாடெங்கும் உரிமைப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதன் முதற்கட்டமாக 23.11.2017 அன்று சென்னை தரமணியில் நடத்தும் போராட்டத்திற்கு தமிழர்கள் திரளாக வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

இலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மரியாதை

இலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மரியாதை


என்ற தன் வரலாறு நூலுக்கு ஸ்பேரோவின் விருது பெற்ற மகளிர் ஆயம் ம.இலட்சுமி அம்மா அவர்களைப் பாராட்டி சால்வை அணிவிக்கிறார் இயக்குனர் மு.களஞ்சியம் மரியாதை செலுத்தினார்.
 
நாள்-13-11-2017 இடம்- தஞ்சை கலைஞர் நகர் இல்லம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, November 15, 2017

சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!

சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் 14.11.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், கோ. மாரிமுத்து, நா. வைகறை, குழ. பால்ராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, ம. இலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர்கள் அரியமங்கலம் திரு. இரெ.சு. மணி, காதாட்டிப்பட்டி சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை தமிழின உணர்வாளர் திரு. இராம. இளங்காவன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, தமிழறிஞர் – பேராசிரியர் மா. நன்னன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்தும் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால் சென்னையில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலத்தவர்களையே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Teachers Recruitment Board) நடத்திய தேர்வின் முடிவுகள், கடந்த 07.11.2017 அன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப் பட்டுள்ளன. அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்! இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களை தட்டிப் பறித்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணை வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் வெளி மாநிலத்தவர் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்! வழக்கமாக இதுபோன்ற தேர்வுகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு மாணவர்கள் 120 முதல் 130 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், 140லிருந்து 154 வரை வெளி மாநிலத்தவர் மதிப்பெண் பெற்றுள்ளது, இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், பாடங்கள் தமிழில் தான் நடத்தப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!

தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு திணித்த நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!

மகாராட்டிரத்தில் 1968லிருந்தும், கர்நாடகாவில் 1986லிருந்தும், குசராத்தில் 1995லிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999லிருந்தும் என - தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்! மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சிதைத்து மண்ணின் மக்களான தமிழர்கள் உரிமையைப் பறிப்பதாகும்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளைச் செய்யும்போது, தமிழ்நாட்டு மரபு வழியில் தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான காலவரம்புடன் கூடிய இருப்பிடச் சான்று, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல, மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித்தேர்வு பட்டியலிலிருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும்! இல்லையெனில், வரும் 23.11.2017 அன்று சென்னை தரமணி நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அறப்போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துவது என தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!

தீர்மானம் 2 :

ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும்!

சனநாயகத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறுவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது என்பதை வழக்கமாக்கிவிட்ட அரசியல் திருடர்கள் இந்தியா முழுவதும் பெருகியுள்ளார்கள். இந்தியாவிலேயே மிக அதிகமாக அரசியல் கொள்ளை நடைபெறும் மாநிலம், தமிழ்நாடு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்பொழுது, ஒரு பிரிவு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், பினாமி தொழில்கள் என்று சற்றொப்ப 200 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது. இந்த வருமானவரிச் சோதனை என்பது, நரேந்திர மோடி அரசால் அரசியல் உள்நோக்கத்துடன், தனக்கு ஆகாத பிரிவினர் மீது தொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை! அதாவது, நரேந்திர மோடி அரசுக்கு ஊழல் ஒழிப்பிலும், சனநாயகக் கொள்ளையர்களைத் (Decoit of Democracy) தண்டிப்பதிலும் உண்மையான அக்கறையில்லை!

ஆனால், பிடிபடாத திருடர்களை சுட்டிக்காட்டி பிடிபட்ட திருடர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்று பேசுவது தூய்மை நெறியும் அன்று; நீதியும் அன்று! ஒரு சாரார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்று, மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவதே அறத்தின் பாற்பட்டது!

எனவே, இப்பொழுது தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மீது நடைபெறும் வருமானவரி சோதனைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது! இதையும், குற்றவியல் அழுத்தம் கொடுத்து அ.இ.அ.தி.மு.க.வின் அப்பிரிவை தன்னோடு கூட்டணி சேர்த்துக் கொள்ளும் அரசியல் தந்திரமாக பயன்படுத்தக் கூடாது என்று மோடி அரசைத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!

அரசியல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முதல் நிலை ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அச்சொத்துகளை இழந்தோர், நீதிமன்றத்தை நாடி நீதி பெற்றுக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருப்பதால், சொத்துகளைப் பறிமுதல் செய்வது அநீதியாகாது என்பதை இந்திய அரசுக்கு கோரிக்கையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வைக்கிறது!

தீர்மானம் 3 :

தமிழ்நாடு ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டும்!

தமிழ்நாடு ஆளுநர் புரோகித் பன்வாரிலால் இப்பொழுது புதுச்சேரியின் கிரண் பேடி போல, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறிக்கும் தில்லியின் கைத்தடியாக செயல்படுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இன்றைக்குள்ள அரசமைப்புச் சட்டம், மாநில அமைச்சரவைக்கு முழுமையான அதிகாரம் தரவில்லை என்றாலும், அந்த அமைச்சரவையின் ஒப்புதலின்றி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவில்லை. கோவை மாநகராட்சி அலுவலகம் சென்று, இன்று (14.11.2017) ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறதா என்று பேருந்து நிலையக் கழிவறைகளைப் போய் பார்த்திருக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் நேரடிப் பொறுப்பு தமிழ்நாடு அமைச்சரவையிடம் இருக்கிறது. அடுத்தடுத்து இதுபோல் தமிழ்நாடு அமைச்சரவைப் பணிகளில் தலையிட்டு தனிக் கட்டளைகள் பிறப்பிக்கும் திட்டத்தையும் ஆளுநர் புரோகித் வைத்துள்ளார் என்று தெரிகிறது.

இந்த அதிகார ஆக்கிரமிப்பை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டும்! தலைமையமைச்சர் நரேந்திர மோடி தலையிட்டு, புரோகித்தின் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும்! ஆளுநர் தமது அதிகார அடாவடித்தனங்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர் செல்லுமிடமெங்கும் தமிழர்கள் கருப்புக் கொடி காட்டி “திரும்பிப் போ!” என்று முழங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 4 :

தஞ்சையில் ஊழல் செய்து ஓட்டை மேம்பாலம் கட்டிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்!

தஞ்சை மேரிஸ் கார்னர் – சாந்தப்பிள்ளை கேட் அருகில் புதிதாகக் கட்டி, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாத மேம்பாலத்தில் விழுந்த ஓட்டைகள் வழியே, தமிழ்நாடு ஆட்சியாளர்களின் ஊழல் முகமே வெளிப்பட்டுள்ளது.

“சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் மக்கள் சீரமைப்புக் குழு”வினர், மேம்பாலத்திலுள்ள விரிசலை ஊடகங்களில் வெளிச்சமிட்டுக் காட்டியபிறகு, அந்த விரிசல்களை அடைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகள், மேம்பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களால், அவை தரமற்று இருப்பதோடு மட்டுமின்றி, அவை மிகப்பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் மரணக் கட்டுமானங்களாகவும் அமைகின்றன.

ஊழல்கள் காரணமாக தரமற்ற நிலையிலுள்ள இந்த மேம்பாலத்தை முழுவதுமாக இடித்துத் தள்ளிவிட்டு, தரமான புதிய மேம்பாலம் கட்ட வேண்டும். ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் – ஆட்சியாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் மேம்பாலச் செலவுத் தொகை முழுவதையும் வசூலிக்க வேண்டும். இது குறித்து விசாரிக்க நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)யின் விசாரணை வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!

தீர்மானம் 5 :

இந்தியக் கடலோரக் காவல்படையினரைக் கைது செய்ய வேண்டும்!

தமிழகக் கடலோரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் 13.11.2017 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிகழ்வு, தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய, இத்துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த மீனவர்கள் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகியோருக்கு குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். தமிழில் பேசியதற்காகவும், இந்தியில் பேசத் தெரியாது என சொன்னதற்காகவும் மீனவர்களை கடலோரக் காவல்படையினர் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டை இந்தியக் கடலோர காவல் படையினர் மறுத்தநிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து துப்பாக்கிக் குண்டினை மீனவர்கள் தமிழகக் காவல்துறையினரிடம் அளித்து அவர்களின் பொய்க்கூற்றை உடைத்தெறிந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு (29.03.2017), நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்திய செய்தி, தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச் சூடு நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிங்களக் கப்பல்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதற்கு இந்தியக் கடலோரக் காவல்படை, இதுவரை மறைமுக உதவி செய்து வந்துள்ளது. இப்போது, சிங்களப் படை போல இந்தியப் படையும் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. சிங்களர்கள் பங்காளிகள் – தமிழர்கள் பகையாளிகள் என்ற உறவு முறையைத்தான் இந்திய அரசு கொண்டுள்ளது என்பது இப்போது மேலும் தெளிவாகியுள்ளது.

இந்நிலையில், மீனவர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், வெறும் வழக்குப்பதிவோடு நிற்காமல், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இந்தியக் காவல்படையினரைக் கைது செய்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!
 
செய்தியாளர் சந்திப்பு

மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி, இன்று (15.11.2017) தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். டி.ஆர்.பி. தேர்வில் வெளி மாநிலத்தவர்களால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் கூறினர். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இடம் : தஞ்சை
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT