உடனடிச்செய்திகள்

Wednesday, March 26, 2014

தொண்ணூறைத் தொடும் நிலையிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டவர்தி.க.சி . ! -தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி


தொண்ணூறைத் தொடும் நிலையிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டவர்தி.க.சி . ! தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி

இலக்கிய வழிகாட்டியாகவும் பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் தமிழ்த் தேசியச் சான்றோராகவும் விளங்கிய தோழர் தி.க.சி. அவர்கள் 25.03.2014 அன்று இரவு காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தோழர் தி.க.சி. அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மார்க்சிய லெனினியத்தின் மீது நீங்காத பற்றுறுதி கொண்ட தோழர் தி.க.சி.,  அந்தந்த மண்ணுக்கேற்ப மார்க்சியம் பயன்படுத்தப்படவேண்டும் - வளர்க்கப்படவேண்டும் என்ற தெளிவில் உறுதியாக இருந்தார்.  கடந்த பத்தாண்டுகளாக தி.க.சி. அவர்களோடு எனக்கும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.  

தமிழர் கண்ணோட்டம் இதழில் வரும் கட்டுரைகள் மற்றும் படைப்புகள் அவர் கவனத்தை ஈர்த்ததே அந்த நெருக்கத்திற்குக் காரணம்.  தம்மைத் தமிழ்த் தேசியராக அறிவித்துக் கொண்டார் தி.க.சி.  மார்க்சிய - லெனினியம் தேசிய இன விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற உண்மையை நூற்றுக்கு நூறு ஏற்றிருந்த அவர் தேசிய இனத் தன்னுரிமையைப் பயன்படுத்த இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களும் உரிமை படைத்தவை என்று அவர் கருதினார்.  தொடக்கம் முதல் இறுதி மூச்சு வரை அவர் இந்திய கம்யூனிஸ்ட்க் கட்சியில்தான் இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்.  ஆனாலும் தற்சார்புள்ள சிந்தனையாளராக அவர் விளங்கினார். 

வர்ணசாதி எதிர்ப்பு, வர்க்கச் சுரண்டல் எதிர்ப்பு, தேசிய இன இறையாண்மை உரிமை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்ட ஒரு மார்க்சியராக அவர் திகழ்ந்தார்.  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஐயம் திரிபற ஆதரித்தார்.  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.  தி.க.சி. அவர்கள் மேற்கண்ட தம் நிலைப்பாடுகளை ஒருபோதும் ஒளித்து வைக்கவில்லை.  

அவருடைய கட்டுரைகளில், சொற்பொழிவுகளில், ஏடுகளுக்கு எழுதிய வாசகர் கடிதங்களில் தமது இந்த நிலைப்பாடுகளை அவர் வெளிப்படுத்தினார்.  தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி இலக்கிய அரங்குகளில் அவர் பேசிய பேச்சுகள் ஏடுகளில் வந்துள்ளன. அவர் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக விளங்கியதைப் போலவே சிறந்த அரசியல் திறனாய்வாளராகவும் விளங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஒருபோதும் தவறிவிடக் கூடாது என்று அவர் அடிக்கடி கூறுவார். 

திருநெல்வேலிப் பக்கம் செல்லும்போதெல்லாம் சுடலைமாடன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் தி.க.சி. அவர்களைப் பார்த்து உடல்நலம் விசாரித்து அவரோடு உரையாடி ஊக்கம் பெற்றுவருவதைக் கடந்த சில ஆண்டுகளாக நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். தொண்ணூறு அகவையைத் தொடும் நிலையில் இருந்தபோதும்  தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருந்த தி.க.சி. அவர்களின் இயங்கு ஆற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

கடைசியாக 3.3.2014 அன்று திருநெல்வேலியில் அவர் மகன் கல்யாணசுந்தரம் (கல்யாண்ஜி) அவர்கள் இல்லத்தில் நோயுற்ற நிலையில் இருந்த போது பார்த்துப் பேசிவந்தேன்.  வரும் மார்ச் 30 அன்று அவர் தொண்ணூறாவது அகவையில் அடியெடுத்து வைக்க இருந்தார்.  அப்போது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பினோம். ஆனால் அதற்குள் தோழர் தி.க.சி. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். 

தி.க.சி. அவர்கள் எழுதிய நூல்களிலும் கடிதங்களிலும் கட்டுரைகளிலும் நண்பர்களுடனும் தோழர்களுடனும் நடத்திய உரையாடல்களிலும் தி.க.சி. தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார், வழிகாட்டிக் கொண்டிருப்பார் என்ற ஆறுதலை தி.க.சி.யின் தோழர்களாகிய நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டு தி.க.சி. அவர்களுக்கு மீண்டும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 - பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Tuesday, March 18, 2014

சுரங்கத்தொழிலாளிதுப்பாக்கியால்சுட்டுக்கொலை: நெய்வேலியிலிருந்துமத்தியப்பாதுகாப்புப்படையினரைதிரும்பப்பெறவேண்டும்

சுரங்கத் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை: நெய்வேலியிலிருந்து மத்தியப் தொழில் பாதுகாப்புப் படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (17.03.2014) நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் மத்தியப் பாதுகாப்புப் படை ஆள் ஒருவரால் இராஜ்குமார் என்ற ஒப்பந்தத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிகிறது. 

மொழித் தெரியாத , மனித உரிமை பயிற்சியேதும் இல்லாத மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் செய்துவரும் தொடர்ச்சியான அத்துமீறல்களின் ஓர் உச்ச இது.

17.03.2014 அன்று காலை இரண்டாவது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தனது நண்பரை சந்திக்க, அடையாள அட்டையை காண்பித்து அனுமதி கோரிய இளம் ஒப்பந்த தொழிலாளி இராஜ்குமாரை அங்கு காவலுக்கு இருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மறுத்து தடுத்துள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நடந்த நிகழ்வு இவ்வளவே.

இதுகுறித்து தான் சந்திக்க விரும்பிய பணியிலிருந்த தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது சற்றும் தேவையற்ற முறையில், பாதுகாப்புக்கு எந்த அச்சுருத்தலும் இல்லாத சூழலில் தொழி்ற்சாலைப் பாதுகாப்பு படையை சேர்ந்த என்.ட்டி. நோமன் என்ற வட நாட்டு பாதுகாப்பு படை ஆள் இராஜ்குமாரின் தலையில் சுட்டுள்ளார்.

மூன்று சுற்று நடைபெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் மூளை சிதறி இளம் தொழிலாளி நிகழ்விடத்திலேயே குறுதி வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். 

காட்டுமிராண்டித் தனமான இந்தக் கொலை பாதுகாப்புப் படையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு முறையையும் சட்டங்களையும் மீறிய கொலைக் குற்றச் செயலாகும்.

இக் கொடிய நிகழ்வு என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது இயல்பான ஒன்று. 

இக் கொலைச் செயலைக் கண்டித்து சுரங்கத்தொழிலாளர்கள் நெய்வேலி – விருத்தாசலம் சலையில் மறியல் போராட்டம் செய்ததும் இது போன்ற அதிர்ச்சி நிகழ்வுகளில் பல நேரங்களில் நடக்கும் கண்டனப் போராட்டம்தான்.

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தடியடியும், கண்ணீர் புகைக் குண்டு வீச்சும் நடத்தியதோடு இல்லாமல், சிதரி ஓடி அக்கம் பக்கத்து வீடுகளில் புகுந்துகொண்ட தொழிலாளர்களையும் துரத்திச் சென்று வீடுகளுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து அடித்து தமிழக காவல்துறை தனது பங்கிற்கு அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது. 

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டதிலிருந்தே தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக தொடர்ச்சியான அத்துமீறல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் கூட ஆனந்தன் என்கிற தொழிலாளி இப்படையினரால் சட்டவிரோதமாக தாக்கப்பட்டுள்ளார். 

ஏதோ அயலார் படையெடுப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதைப் போல் அமைதியாக இயங்கும் என்.எல்.சி நிறுவனத்திற்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவது தேவையற்றது. என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர்களை குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர அச்சத்தில் வைத்து வேலை வாங்கும் நோக்கத்திலேயே இப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இம் மக்களின் மொழியான தமிழ்த் தெரியாத வட நாட்டுக் காரார்களே மிகப் பெரும்பாலும் என்.எல்.சி யில் இப்படையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்த் தெரிந்தவராக இருந்தால் தொழிலாளர்களுடைய நிலைமைகளைப் புரிந்துகொள்வார் என்பதற்காகவே மொழி புரியாத படையாட்களை நெய்வேலியில் நிறுத்துகிறார்கள். 

துணை இராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு மக்களிடைடையே பணியாற்றுவதற்கு தேவையான குறைந்த அளவு மனித உரிமைகள் பயிற்சிகள் கூட தரப்படுவதில்லை. இவர்கள் எதிர்கொள்ளுகிற எல்லோருமே எதிரிகள் என்ற மன நிலையிலேயே இப்படையினர் வளர்க்கப்படுகிறார்கள்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நெய்வேலியிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றக் கோரிக்கை தொழிலாளர்களிடத்திலேயும், நெய்வேலிப் பகுதி மக்களிடத்திலேயெயும் தொடர்ந்து இருந்துவருகிறது. இவை எதுபற்றியும் சட்டை செய்யாமல் இந்திய அரசின் சுரங்கத்துறை அமைதியான நெய்வேலியில் இந்தத் துணை இராணுவப் படையினரை நிறுத்தியுள்ளது. அவர்கள் தொடர்ந்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது பற்றி அவ்வப்போது நிர்வாகத்திடம் புகார் அளிக்பபட்டாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. 

இந்நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் நெய்வேலியிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 

இராஜ்குமார் சாவு ஒருக் கொலைக் குற்றம் என்ற வகையில் மத்தியப் பாதுகாப்புப் படையை சேர்ந்த என்.ட்டி நோமன் மீதும் இத் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிற அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 

இராஜ்குமார் கொலையை கண்டித்து குரல் எழுப்பிய நெய்வேலி சுரங்கம் 2-ன் தொழிலாளர்கள் மீது கேள்வி முறையற்று தடியடித் தாக்குதல் நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

கொலையுண்ட இராஜ்குமார் குடும்பத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் ரூபாய் இருபது இலட்சம் இழப்பீடும், அவருடைய இளம் மனைவிக்கு அவரது தகுதிக்குத் தகுந்த வேலையும் வழங்கி உடனடியாக ஆணையிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT