உடனடிச்செய்திகள்

Thursday, September 29, 2016

“கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்” பெ.மணியரசன் கோரிக்கை!

"கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க
தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன் கோரிக்கை!


“சிவகங்கை மாவட்டம் - கீழடி (மதுரை சிலைமான் அருகில்), பண்டைய தமிழ்நாட்டில் பரவலாக இருந்த நகர நாகரிகத்துக்கு முகாமையானச் சான்றாகத் திகழ்கிறது. இங்கு நடைபெறும் அகழாய்வில் வெளிப்பட்ட பல்வேறு வரலாற்றுச் செய்திகள் வியப்பைத் தருவதாக உள்ளன. இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவுறும் நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கீழடி கிராமத்தில் பல்நோக்கு கள அருங்காட்சியகம் (Site Museum) அமைக்க நிலம் தந்து உதவ வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள், நேற்று (27.09.2016) கீழடி அகழாய்வை நேரில் பார்வையிட்டார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு, மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, ஊடகவியலாளர் திரு. சிவக்குமார், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் மேரி, தோழர்கள் மதுரை சிவா, கரிகாலன், இளமதி, பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

கீழடி அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின், தலைவர் பெ. மணியரசன் அவர்கள் கூறியதாவது:
“கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் மூலம் தமிழர்களின் தொன்மை நாகரிகம் நகரம் சார்ந்ததாகவும், பன்னாட்டுத் தொடர்போடு நாம் விளங்கியதையும், கல்வியில் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்தரையும் அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது இங்கு 70க்கும் மேற்பட்ட பழந்தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன.
சூது பவள மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தில் செய்யப்பட்ட பகடைக்காய் -தாயக்கட்டைகள், சங்ககாலப் பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள், இரும்பாலான அம்பு முனைக்கருவிகள், அழகிய ரோமானிய மண்பானைகள் என ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. மாபெரும் வணிகச் சமூகம் இங்கு வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கல்களாலான கட்டுமானங்கள் பரவலாக உள்ளன.
ஆடைகளுக்கு வண்ணமேற்றும் சாயத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதில், சாயத் தொட்டிகள், தண்ணீரை கொண்டு செல்லும் சுடுமண் குழாய்கள், கழிவு நீரை வெளியேற்றும் சுடுமண் குழாய்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள் எனப் பல இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது, நாகரிகத்தில் மேம்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்துள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் இங்கு காண முடிகிறது. இது போன்ற அரிய தொல்லியல் ஆய்வுகளை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தமிழ்நாடு அரசின் கடமை!

நடுவண் தொல்லியல் துறை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலமாக, தமிழ்நாடு வரலாறு மட்டுமன்றி, இந்தியாவின் வரலாறும்கூட மறு வாசிப்பிற்கு உள்ளாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளோடு வணிகத் தொடர்பு மேற்கொண்ட மிகச் செழுமையான தமிழர் நாகரிகத்தை, சிறப்போடு வெளிக்காட்டும் வகையில், கீழடி கிராமத்திலேயே கள அருங்காட்சியகம் (Site Museum) அமைக்க வேண்டும்.
ஆனால், இங்கு கிடைக்கும் தொன்மைச் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மைசூர் நடுவண் அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கிறார்கள். இதுபற்றி, தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டதற்கு, “அவற்றை இங்கு வைப்பதற்கு கள அருங்காட்சியகம் இல்லை; அதை அமைப்பதற்கு இந்த இடத்திற்கு பக்கத்திலேயே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளோம். இன்னும் அது கிடைக்கவில்லை. பக்கத்திலேயே புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் உள்ளது. அதை இந்தியத் தொல்லியல் துறைக்கு ஒப்படைத்தால், அந்த இடத்தில் இந்தியத் தொல்லியல் துறை கள அருங்காட்சியகம் கட்டி, கீழடியில் திரட்டப்படும் தொன்மைச் சான்றுகள் அனைத்தும் இங்கேயே வைக்கப்படும்” என்றார்கள்.
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழர்களிடம் அரைப் பழங்குடி நாகரிகமே நிலவியது என்ற வடநாட்டு ஆய்வாளர்கள் கூற்றைத் தகர்க்கும் வண்ணம் கீழடி ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு உடனடியாக பல்நோக்கு கள அருங்காட்சியகத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு நிலம் அளித்து உதவ வேண்டும்.
மூன்றாம் கட்ட ஆய்வுக்கு நடுவண் தொல்லியல் துறையே ஒப்புதல் அளித்துள்ள செய்தி, கீழடி அகழாய்வின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, உடனடியாக அந்த 2 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைத்திட அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கீழடி மற்றும் கொந்தகை கிராம உள்ளாட்சித் தலைவர்கள், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கி, அதற்கான தீர்மானங்கள் சிவகங்கை மாவட்ட நிர்வாகக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் காலந்தாழ்த்தாது வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
இரண்டாண்டுகளாக, இங்கு கள ஆய்வு நிகழும் இடத்திலேயே தங்கிப் பணியாற்றி வரும் நடுவண் தொல்லியல் கண்காணிப்பாளர் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா மற்றும் அவரது உதவியாளர்கள் ராஜேஷ், வீரராகவன் ஆகியோரையும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள தொல்லியல் பயிலும் மாணவர்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வாழ்த்தி மகிழ்கிறது.
இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் நல்கி வரும் தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம், ஆய்வுக்கு இடம் தந்த உதவிய நில உரிமையாளர்கள், நாளும் பொழுதும் அயராது உழைத்து களப்பணியாற்றி வரும் பொதுமக்கள் மற்றும் கீழடி கிராமத்தாரையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் பாராட்டுகிறது.
கீழடி அகழாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு பல்வேறு புதிய தகவல்களை தமிழ் கூறு நல்லுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மேற்கண்ட அனைவரையும் தமிழ்நாடு அரசும் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

Wednesday, September 28, 2016

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் - தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக
அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை
இந்திய அரசு அமைக்க முயன்றால் - தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச்
செயற்குழுவில் முடிவு!


தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன், நா. வைகறை, சென்னை க. அருணபாரதி, ஓசூர் கோ. மாரிமுத்து, குடந்தை க. விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், மதுரை இரெ. இராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழர் தன்மானப் பேரவை நிறுவனர் தோழர் அ.கோ. கஸ்தூரிரெங்கன், காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசு ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 : காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்து கட்டளையிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு விநாடிக்கு 6,000 கன அடி திறந்துவிட மறுத்து கர்நாடக சட்டமன்றம் சட்ட விரோதமானத் தீர்மானம் இயற்றியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு வெளிப்படையாக அறைகூவல் விடும் அவமதிப்புக் குற்றம் இது!
இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர், மேலாண்மை வாரியத்தின் “வழிகாட்டுதலில்” கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளும் தமிழ்நாட்டின் மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணைகளும், கேரளாவின் பானசுரசாகர் அணையும் ஒருங்கிணைந்த முறையில் இயங்கும் என்பதே உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கூற்று எனக் கூறியிருப்பது தமிழினத்திற்கு எதிரான திரிப்பு வேலையாகும்.
2007 பிப்ரவரியில் அளிக்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8-இன் பத்தி 16, “காவிரி மேலாண்மை வாரியத்திடம் அணைகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்க வேண்டும். அந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றத்தின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை ஒழுங்காற்றுக் குழுவின் உதவியோடு இம்மேலாண்மை வாரியம் செயல்படுத்தும்” என தெளிவாகக் கூறுகிறது.
இதே பகுதி 8-இன் பத்தி 15, “இந்த காவிரி மேலாண்மை வாரியம் பக்ராபியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்றதாகவே அமைக்கப்பட வேண்டும்” என விளக்குகிறது.
இத்தீர்ப்பு முன்னெடுத்துக்காட்டாகக் கூறிய “பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம், பக்ராநங்கல் திட்டம், பியாஸ் - சட்லஜ் இணைப்புத் திட்டம், பியாஸ் – போங்கு அணைத் திட்டம் ஆகியவற்றின் நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும்” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசின் நீர்வளத்துறை உயரதிகாரி இத்தீர்ப்புக்கு எதிராக விளக்கமளித்திருப்பது இந்திய அரசு, தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு மாறாக அதிகாரமற்ற இன்னொரு மேற்பார்வைக் குழுவை அமைக்க முயல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்!
தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் இந்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. தீர்ப்பாயத்தில் கூறப்படாத அதிகாரமற்றப் பொறியமைவை ஏற்படுத்தினால், அது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் மட்டுமின்றி, தமிழினப் பகை நடவடிக்கையாகவும் அமையும்.
எனவே, தமிழ்நாட்டு மக்களும் உழவர் இயக்கங்களும் அரசியல் அமைப்புகளும் இதில் விழிப்போடு இருந்து - தொடர் அழுத்தம் தராது போனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக நழுவும் ஆபத்து உள்ளது.
எனவே, வரும் அக்டோபர் 7ஆம் நாளுக்குள் இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் வகையில் தமிழர்கள் போராட வேண்டும் என்றும், இதற்கான அழுத்தமான முன்முயற்சிகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 : தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு அரும்பொருள்களை கர்நாடகாவிற்கு கொண்டு செல்லக் கூடாது! அவற்றை மதுரையிலே வைத்துப் பாதுகாக்க வேண்டும்!
சிவகங்கை மாவட்டம் – கீழடி சிற்றூரில் பள்ளிச் சந்தைத் திடலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில், இதுவரை 6,000க்கும் மேற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சற்றொப்ப 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ள சங்ககாலக் கட்டுமானங்களும் தொழிற்சாலைகளும் உறைக் கிணறுகளும் மேம்பட்ட தமிழி என்ற எழுத்து வடிவமும், பண்பாட்டு மரபும் வாழ்நிலையும் பண்டையத் தமிழர்களுக்கு இருந்ததை உறுதி செய்கின்றன.
இந்த அரிய தொல்லியல் பொருட்கள் அனைத்தையும் மைசூர் அல்லது பெங்களுருவுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்தியத் தொல்லியல் துறை இறங்கியுள்ளது.
தமிழினத்திற்கு எதிரானத் தீராப் பகையோடு கன்னடர்கள் தொடர்ந்து செயல்படுவது உலகறிந்த உண்மையாகும். கடந்த ஒரு மாத காலமாக காவிரிச் சிக்கலையொட்டி, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்பகைத் தாக்குதல்கள் இதற்கு சான்றுகூறும். பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் அவை தமிழர் ஒருவரின் உடைமைகள் என்ற காரணத்தினாலேயே எரித்து அழிக்கப்பட்டன. தமிழர் கடைகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. தமிழர்கள் என்பதனாலேயே அவ்வூர்திகளின் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டார்கள். இழிவுபடுத்தப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட இனப்பகை வெறி கொண்ட கன்னடர்களுடையப் பகுதிக்கு தமிழர்களின் தொல்லியல் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டால், அவை சிதைத்து அழிக்கப்படக்கூடிய ஆபத்து உண்டு.
எனவே, கீழடியில் கிடைத்த அரிய வரலாற்றுச் சின்னங்களை, தொல்லியல் பொருட்களை, மதுரையில் அருங்காட்சியகம் அமைத்து, அங்கே பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி, மதுரையில் தமிழ் அறிஞர்களையும், வரலாற்று அறிஞர்களையும், தமிழின உணர்வாளர்களையும் ஒன்றுதிரட்டி வலுவான பொதுக்கூட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 : தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயல் இனத்தாரின் ஆதிக்கத்தை எதிர்த்து தொடர் பரப்புரை – உள்ளூர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் தமிழ்நாட்டு மக்களுக்கே 90% வேலை வழங்கக் கோரியும், 10 விழுக்காட்டிற்கு மேல் இந்நிறுவனங்களில் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும், கடந்த ஆகத்து மாதம் தொடங்கி தமிழ்த்தேசியப் பேரியக்கம் மேற்கொண்ட விரிவான பரப்புரை இயக்கம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, 12.09.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய திருச்சி தொடர்வண்டித்துறை மண்டலத் தலைமையக முற்றுகைப் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
இதன் அடுத்த கட்டமாக வரும் 2016 அக்டோபர் 13 தொடங்கி 20ஆம் நாளுக்குள், திருச்சி பொன்மலை, திருவெறும்பூர் பி.எச்.இ.எல்., துப்பாக்கித் தொழிற்சாலை, சென்னை ஆவடி பாதுகாப்புத்துறைத் தொழிற்சாலைகள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகிய இடங்களில் அங்கங்கே நிலவும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கங்களை அம்பலப்படுத்தி, விரிவான பரப்புரையும் உள்ளூர் அளவில் போராட்டங்களும் நடத்தப்படும்.

Tuesday, September 27, 2016

காவிரித் தீர்ப்பு : வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்ச நீதி மன்றம்! நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே ! பெ.மணியரசன் அறிக்கை!காவிரித் தீர்ப்பு : வன்முறைக்கு 
வளைந்து கொடுக்கிறது உச்ச நீதி மன்றம்! 
நீதியை நிமிர்த்த
வீதிக்கு வாருங்கள் தமிழர்களே !

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!


காவிரிவழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கர்நாடக அரசின் சட்ட விரோத செயல்களையும் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும் மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்ததுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும் என்று தமிழ்நாட்டின் ஏழரைக்கோடி தமிழ்மக்கள் இன்று எதிர்பார்த்தார்கள் . சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யவில்லை .அவர்மீது உரியவாறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.மாறாக உச்ச நீதிமன்ற மாண்புக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது என்று சித்தராமையாவிடம் உச்ச நீதிமன்றம் கெஞ்சியுள்ளது..
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில் 21.09.2016 முதல் 27.09.2016 வரை ஏழு நாட்களுக்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தது.ஆனால் ஒருசொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு திறக்கமுடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக அரசிடம் அதுபற்றி விளக்கம் கேட்காமல் வெறுமனே செப்டம்பர் 28,29,30 மூன்று நாட்களுக்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் பம்மி,பதுங்கி கூறியிருக்கிறது .கர்நாடகத்தைக்கண்டு உச்ச நீதிமன்றம் அச்சப்படுகிறதா ? அல்லது நடுநிலைத் தவறி சட்டப் புறம்பான சாதகங்களை கர்நாடகத்திற்கு செய்கிறதா ? என்ற ஐயம் தமிழ் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது .
நான்கு வாரங்களுக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று 20.09.2016 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் கர்நாடக,தமிழக முதலமைச்சர்கள் இருவரையும் நடுவண் அரசு அழைத்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கி இருப்பதன் மர்மம் என்ன?.
உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் மூலம் தங்களது அட்டூழியங்களுக்கும் ,வன்முறை வெறியாட்டங்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் ,மத்திய அரசும் இருப்பது போலவே உச்ச நீதி மன்றமும் ஆதரவாக இருக்கிறது என்பதை கர்நாடக விவசாயிகளும்,இனவெறியர்களும் புரிந்து கொண்டார்கள் .எனவே இப்பொழுதே அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உரிமையுடன் கலவரங்களில் இறங்கி விட்டார்கள் .
இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் நீதிகளும்,பாதுகாப்புகளும் தமிழ்நாட்டிற்கு இல்லையென்பதை ஏற்கனவே நடுவண் அரசு தனது நடுநிலை தவறிய செயல்கள் மூலம் தெரிவித்து வருகிறது.இப்பொழுது உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசைப்போலத்தான் செயல்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
நீதியை முறியடிக்க போராடுபவர்களுக்கு நீதி வளைந்து கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.இப்பொழுது நீதியை நிமிர்த்தவும் ,தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்கவும் ,நடப்பு சம்பா சாகுபடியை காப்பாற்றவும் ,இருபது மாவட்டங்களுக்கான குடிநீரை உறுதிப்படுத்தவும் தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசு நிறுவனங்களை செயல்பட விடாமல் முடக்குவது உட்பட பல வடிவங்களில் வீதியில் இறங்கிப் போராடுவது ஒன்றே வழியாகும்.

Monday, September 26, 2016

வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தோழர் பெ. மணியரசன் சந்திப்பு!வேலூர் சிறையில் பேரறிவாளனுடன்
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சந்திப்பு!


இராசீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டு - 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவித் தமிழரான பேரறிவாளனை, 22.09.2016 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேலூர் சிறை சென்று சந்தித்தார்.
அண்மையில் குற்ற வழக்குகள் பலவற்றில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையிலிருந்த ஒருவரால் சிறைக்குள் வைத்துத் தாக்கப்பட்ட பேரறிவாளன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி, தந்தை பெரியார் தி.க. பொறுப்பாளர் தோழர் ஈரோடு குமரகுருபரன், மருத்துவர் பழ. பாலகிருட்டிணன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், தோழர் செ. ஏந்தல், ஈரோடு வழக்குரைஞர் கு. திலீபன், உள்ளிட்டோர் வேலூர் சிறைக்கு வந்தனர். சிறைக்குள் பேரறிவாளனைச் சந்தித்த தோழர்கள், அன்று பிறந்தநாள் காணும் தோழர் பேரறிவாளனுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தோழர் பேரறிவாளனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த தோழர் பெ.ம., “மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் பேரறிவாளன்; 3 கிலோ எடையுள்ள இரும்புப் பட்டையால் கொடியவன் தாக்கியுள்ளான். மாங்காய் பிளந்தது போல் தலைக்காயம் உள்ளது. ஆறி வருகிறது. எந்தச் சட்டச்சிக்கலும் இல்லாத நிலையில், இப்போது ஒருமாதம் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரோல் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க வேண்டும்” என்றார்.

Saturday, September 24, 2016

பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!


பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும்

செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!

பாறையைப் பிளந்து கொண்டு விதைமுளைப்பது போல், தமிழினஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு“தமிழ் மக்கள் பேரவை” உருவாகியிருப்பது,உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம்குளிரும் செய்தியாகும்.

பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும்வெகு மக்களை ஒருங்கிணைத்துக்கொண்டு கூட்டுத் தலைமையின் கீழ்உருவாக்கியிருக்கும் “தமிழ் மக்கள்பேரவை”க்கு தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் மனம் நிறைந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர்விரோதப்போக்குகளை ஈழத்தில் வாழும்தமிழ் மக்கள் புரிந்து கொண்டு, “தமிழ்மக்கள் பேரவை”யால் முன்னெடுக்கப்படும்எழுக தமிழ் பேரணியில், தமிழ் சொந்தங்கள் பங்கெடுக்க வேண்டியது ஒவ்வொருதமிழரதும் வரலாற்றுக் கடமையாகும்.
தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்களப்படையாட்கள் போர் முடிந்த நிலையில்,கடந்த ஏழாண்டுகளாகத் தமிழர்களின்விளை நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், வீடுகளை வன்கவர்தல்செய்தும் புதிய வகையில் இன அழிப்புப்போரைத் தொடர்கின்றனர். இராசபட்சேஆட்சியில் நடந்த அதே சிங்களப்படையின்வன்கவர்தல்களும் ஆக்கிரமிப்புகளும்மைத்திரி – ரணில் ஆட்சியிலும்தொடர்கின்றன.
ஈழத்தின் அதிகரித்த ராணுவ பிரசன்னம்காரணமாக மக்களின் சுதந்திரமானநடமாட்டம் பாதிக்கப்பட்டிருப்பதோடுகுடியியல் (சிவில்) நிகழ்வுகளில்இராணுவத்தின் தலைகீடும் நெருக்கடியும்தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்கண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள்அனைத்தும் விலக்கப்பட்டு தமிழர்களின்பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள்திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் பேரவையின் கோரிக்கை உலகஅரங்கில் ஏற்கப்பட வேண்டிய மனிதஉரிமை நீதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைஇராணுவமயமாக்கிக் கொண்டுள்ளஅதேவேளை அவற்றில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத் திணித்துதமிழர் தாயக அழிப்பு வேலையை சிங்களஅரசு இன்றும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர்தாயகம் என்ற அடிப்படை உரிமையைப்பறிக்கும் வகையில் சிங்களர்களைமைத்திரி – ரணில் அரசு குடியேற்றிக்கொண்டுள்ளது.
இந்து மற்றும் கிருஸ்தவ, இசுலாம்மதங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின்தாயகத்தில் சிங்கள பௌத்தகோயில்களைப் புதிது புதிதாக எழுப்பிக்கொண்டுள்ளார்கள். இந்துக் கோயில்களில்புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்.இவ்வாறான தமிழர் ஆன்மிக அழிப்புநடவடிக்கைகளை மைத்திரி – ரணில் அரசுஉடனடியாகக் கைவிட வேண்டும்.
போர்க்காலத்தில் நடந்த தமிழினப்படுகொலைக் குற்றங்கள், காணாமல்போன தமிழர்கள் என்ற தலைப்பில்அழிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்கள் –அதற்கான பொறுப்பாளிகள் ஆகியவற்றைவிசாரித்து, நடந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர - குற்றவாளிகளைத்தண்டிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம்உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
“தமிழ் மக்கள் பேரவை” – நாளை (24.09.2016)காரி(சனி)க்கிழமை யாழ்ப்பாணத்தில்நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும்“எழுக தமிழ்” பேரணி, தமிழர் அரசியல்செயல்பாட்டில் புதுக்குருதி பாய்ச்சும் என்றுஉறுதியாக நம்புகிறோம்.
இப்படிப்பட்ட வடிவிலான மக்கள் அமைப்பும்,மக்கள் திரள் போராட்டங்களும்தான்தமிழர்களுக்கான உண்மையான –உறுதியான அரசியல் தலைமையைஉருவாக்கும். தற்சமயம் தமிழீழத்தில்சிங்கள ஆட்சியாளர்களின் அரவணைப்பில்வலம் வந்து கொண்டிருக்கும் கங்காணித்தலைமைகளைப் புறந்தள்ளும்.
கூட்டுத் தலைமையில் சனநாயகஉள்ளடக்கத்தோடும் சமூகப் பன்மைகளைஏற்கும் உளவியலோடும்உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மக்கள்பேரவை”யின் பேரணியில், பல இலட்சம்தமிழ் மக்கள் கலந்து கொண்டு உலகத்தின்கவனத்தை ஈர்க்க வேண்டும். உலகம்வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியல் திறன் காட்டிசாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கைஎமக்கிருக்கிறது.


Friday, September 23, 2016

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை


காவிரித் தீர்ப்பு :

காங்கிரசு – பா.ச.க. தலைமைகள்
தமிழர்களுக்குத் துரோகம்!

தமிழ்நாடு முதல்வர் - உள்ளாட்சித்
தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை


உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.
நேற்று (21.09.2016) கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியபின், அம்மாநில முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்றும் 24.09.2016 அன்று கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின், காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையைக் கலந்து ஆலோசித்தபின் இந்த முடிவுகளை சித்தராமையா அறிவித்ததாக இன்று (22.09.2016) “இந்து” ஆங்கில நாளேடு கூறியுள்ளது. காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களான சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்ததற்குத் துணை நிற்கிறார்கள் என்பதும், அவ்விரு தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துக் கர்நாடகத்தின் தமிழினப்பகை அரசியலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தங்களுடைய அனைத்திந்தியத் தலைமை தமிழர்களுக்குச் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது அனைத்திந்தியத் தலைமையின் நிலைபாட்டை நடுநிலையாக மாற்றுகிறார்களா என்பது இன்று தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வியாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்பதை கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா இருவரும் ஒளிவு மறைவின்றித் தெரிவித்து, அச்செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. சதானந்தகவுடா புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று வற்புறுத்திய செய்தியும் ஊடகங்களில் வந்துள்ளது.
பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைமை, தனது கட்சியின் கர்நாடகத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக, நடுவண் அமைச்சர்களாக உள்ளவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாதே என்று சொல்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அவர்கள் அவ்வாறு பேசி வர அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு பா.ச.க. தலைமை செய்யும் துரோகமாகும். தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் அனைத்திந்தியத் தலைமையின் நடுநிலை தவறிய, தமிழர் விரோத அணுகுமுறையை மாற்றி அமைக்காமல் தமிழ்நாட்டில் காவிரி உரிமை பற்றி பேசிக் கொண்டிருப்பது ஏமாற்று வேலையாகவே தமிழர்களால் புரிந்து கொள்ளப்படும்.
இவ்வளவு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த, நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா ஈடுபடாமல் இருப்பதன் மர்மம் என்ன?
கர்நாடகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டியதுடன் கர்நாடக வெகு மக்களிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு எதிராகவும் கன்னட இனவெறியை மறைமுகமாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தூண்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவது குறித்து ஒருவகை “அரசியல் தீண்டாமை”ப் பார்வையே தமிழக முதல்வர் செயலலிதாவிடம் இருக்கிறது. அவரின் இந்த அணுகுமுறை தமிழ் மக்கள் அவரை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்புக்கு துரோகமிழைப்பதாக அமையும்!
கர்நாடக முதலமைச்சர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதுடன், முதலமைச்சர் செயலலிதா நேரடியாக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் 20.09.2016 தீர்ப்பைச் செயல்படுத்துமாறு கர்நாடக முதல்வருக்கு கட்டளையிட்டு, அரசமைப்புச் சட்ட உறுப்பு 355-இன் கீழ் கடிதம் எழுதுமாறு வலியுறுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வைத்திடவும், கர்நாடகத்தில் ஆளுங்கட்சியின் துணையோடு அனைத்துக் கட்சிகளும் கன்னட வெறி அமைப்புகளும் நடத்தும் தமிழர் விரோத அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய தருணமிது! இந்த அவசரத் தேவையை உணர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை சில மாதங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.Thursday, September 22, 2016

தமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!தமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!கேள்வி :
---------------
கர்நாடகத்தில் தமிழர்களையும் தமிழர் நிறுவனங்கள் மற்றும் ஊர்திகளையும் தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். மற்றபடி கன்னடர்கள் குறிப்பாக, கர்நாடக உழவர்கள், தமிழர்களுக்கெதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று இங்கு கட்டுரைகள் எழுதுகிறார்கள், தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறார்கள். இது சரியான செய்தி தானா?

பதில் : 
---------------
தமிழ் மாணவர் சந்தோசைத் தாக்கி இழிவுபடுத்திய வன்முறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர்கள் பலர் இழிவுபடுத்தப்பட்டது – தாக்கப்பட்டது, தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது என கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் எவற்றையும் கர்நாடகக் காங்கிரசு முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. நடுவண் அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கௌடா ஆகியோர் கண்டிக்கவே இல்லை.

சித்தராமையா வருத்த மளிக்கிறது என்று கூறி பூசி மொழுகினார். பா.ச.க. அமைச்சர்கள் அதைக்கூட கூறாமல், தமிழ்நாட்டில் நடந்தவற்றின் எதிர்வினைகள்தான் இவை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார்.
கன்னடர்களில் கணிசமானோர்க்கு, தமிழின எதிர்ப்பு நீண்டகாலமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நாற்பதாண்டுகளுக்கு முன் வாட்டாள் நாகராசு கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராகத் தொடங்கிய கன்னட சளுவளி அமைப்பு!
கன்னட மக்களிடம் தமிழர்களுக்கு எதிரான இனவெறி இருப்பதால்தான் அதைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்க அரசியல் கட்சிகள் அங்கு போட்டி போடுகின்றன.
இந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ சில கிரிமினல்கள் செய்த வேலைகள் என்ற கூறித் தமிழ்நாட்டில் தமிழர்களை ஏமாளிகள் ஆக்க இந்தியத்தேசியவாதிகள் முயலக்கூடாது.
அதேபோல் தமிழர்களுக்கெதிராகக் கர்நாடகத்தில் நடந்த வன்முறைகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க வேலைகள் மட்டுமே என்று சுருக்கவும் கூடாது.
1991 திசம்பரில், காவிரி இடைக்காலத் தீர்ப்பு நடுவண் அரசிதழில் வெளியிட்ட போது, அப்போது காங்கிரசு முதல்வராக இருந்த பங்காரப்பா தூண்டுதலில் முழு அடைப்பு நடந்தது. அவருடைய மறைமுக ஆதரவோடு கன்னட வெறியர்கள் தமிழினப் படுகொலைகளை நடத்தினர். பன்னிரெண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களுடைய நிறுவனங்களும் வீடுகளும் சூறையாடப்பட்டன. எரிக்கப்பட்டன. 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக ஓடி வந்தார்கள். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. தூண்டுதல் என்று சொல்ல முடியாது!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!


கேள்வி :
---------------
கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கும் காவிரிச் சிக்கலில் பிரதமர் தலையிடமாட்டர் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளாரே?
பதில் :
---------------
தஞ்சாவூர் அஞ்சலகத்தில் கங்கை நீர் விற்பதற்குத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலையிடுவார். ஆனால், தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் சட்டப்படி தலையிட வேண்டிய பிரதமர் தலையிடமாட்டாரா?
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் என்றால் ஐ.நா. பொதுச் செயலாளர் தலையிட வேண்டும் என்கிறாரோ நிர்மலா?

Tuesday, September 20, 2016

காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு அலட்சியத்தை நீக்கி அக்கறையுடன் வாதமிட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


காவிரி மேற்பார்வைக் குழு 
தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது!
தமிழ்நாடு அரசு அலட்சியத்தை நீக்கி
அக்கறையுடன் வாதமிட வேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை! 


நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழு, இன்று (19.09.2016), 21.09.2016 முதல் ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று முடிவு வழங்கியுள்ளது. இந்த மேற்பார்வைக் குழு கர்நாடகத்திற்கு அஞ்சி அம்மாநிலத்தின் மனம் நோகாமல் வழங்கிய தீர்ப்பு இது! 3,000 கன அடி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு சிறிதளவுகூட போதாது. இது ஒருதலைச்சார்பான தீர்ப்பு!
ஏனெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில், இப்பொழுது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகித நீரை கணக்கிட்டு அந்த அடிப்படையில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேற்பார்வைக் குழுக் கூறியிருந்தால், அது சட்டப்படியான ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான கணக்கை மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை!
காவிரி மேற்பார்வைக் குழு தன் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி, அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, பற்றாக்குறைப் பகிர்வு விகிதப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருக்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழு தனது கடமையில் தவறியிருக்கிறது!
தமிழ்நாடு அரசு உருப்படியாக வாதம் செய்கிறதா என்றால், அதுவும் இல்லை!
கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணீர் 64 டி.எம்.சி. என்றும், அதைத் திறந்துவிட ஆணையிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தால் அது சரியான வாதமல்ல!
தற்போது, கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் பற்றாக்குறைப் பகிர்வுத் திட்டப்படி எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி வாதிட்டு, அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகம் தர வேண்டிய பாக்கித் தண்ணீரின் அளவை கூறியிருந்தால், தமிழக அரசின் வாதம் வலுவாக இருந்திருக்கும்.
பொதுவாகவே கடந்த ஆகத்து 22-ஆம் நாள் முதல் இன்றுவரை, தமிழ்நாடு அரசு காவிரி வழக்கில் கடைபிடித்திருக்கும் வாத முறைகள் முன்னுக்குப்பின் முரண்பட்டும் முதன்மைப்படுத்த வேண்டிய தர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளியும் வந்திருப்பது தெரிகிறது. இவ்வழக்கு வாதங்கள் இராணுவ இரகசியங்கள் அல்ல. இவற்றை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
கர்நாடகப் பொதுப்பணித்துறை தனது இணையதளத்தில், அம்மாநிலத்திலுள்ள காவிரி அணை நான்கிலும் 19.09.2016 அன்று 26.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகக் குறைத்துக் காட்டியுள்ளது. இவ்வழக்கு 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, 51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பு கூறியது. அதன்பிறகு, 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 41 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியது. இப்போது, 26.17 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் தவறானத் தகவல்கள்! அவர்களின் பொய்க்கணக்குப்படியே பார்த்தால்கூட, கடந்த 14 நாட்களில் 25 டி.எம்.சி. தண்ணீர் எங்கே போனது?
நான்கு அணைகளிலும் உள்ள நீர் மட்டுமின்றி, 437 ஏரிகளை நீர்த் தேக்கங்களாக விரிவுபடுத்தி அவற்றில் சேமித்து வைத்துள்ள தண்ணீரையும் கர்நாடகத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு தனது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கர்நாடகத்திற்கு அனுப்பி அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கணக்கெடுத்து அதை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் தாக்கல் செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசு உழவர்களின் ஓலக்குரலை கண்டு கொள்ளவே இல்லை! சரியான முன் தயாரிப்பு இல்லாமல், இறுதித் தீர்ப்பில் மாத வாரியாக வழங்கப்பட்ட நீரின் அளவை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு, இவ்வளவு பாக்கி – அவ்வளவு பாக்கி என்று சத்தற்ற வாதம் செய்து வருகின்றது.
நாளை (20.09.2016) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வரவுள்ளது. அதில், சரியான தர்க்கத்தை முன்வைத்து வாதாடி தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்ட - சம்பாவிற்கு உரிய தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு முழுமூச்சாக முன் தயாரிப்புப் பணியில் இறங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, September 18, 2016

பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு- பெ. மணியரசன்

பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இந்திய விடுதலைக்குப் பிறகு பாரதமாதா பலிகொண்ட தமிழர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இப்போது, தமிழின இளங்குருத்து தம்பி பா. விக்னேசு தழல் ஈகியாகியுள்ளார். விக்னேசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்முறைக் குழு ஆகியவற்றை அமைத்து அதனைச் செயல்படுத்துமாறு இந்திய அரசுக்குக் கட்டளையிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு பகுதியாக உள்ள அரசிதழில் வெளியிடுவதை மட்டும் செயல்படுத்திவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நயவஞ்சகமாக அப்போதிருந்த காங்கிரசுக் கூட்டணி அரசும், இப்போதுள்ள பா.ச.க. கூட்டணி அரசும் ஒதுங்கிக் கொண்டுவிட்டன.

இதனால்தான், தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் கர்நாடக ஆட்சியாளர்களாலும் கன்னட வெறியர்களாலும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே, விக்னேசு தீக்குளிப்பும் வழக்கமான இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு அரசியலால் விளைந்ததே!

பாரதமாதா பலிகொண்ட மற்றொரு தமிழனே விக்னேசு!
தமிழக வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில், 1953இல் சிறைபட்ட 2 தமிழர்கள் சிறையிலேயே உயிரீகம் செய்தனர். தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தில், 11.08.1954 அன்று, 16 தமிழர்கள் கேரளக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வலியுறுத்தி, காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி 13.10.1956-இல் பலியானார் பெரியவர் சங்கரலிங்கனார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து 1964 சனவரி 25-இல், கீழப்பழூர் சின்னச்சாமி முதல் தீக்குளிப்பு ஈகியாக உயிர் நீத்தார். அதன்பிறகு, 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து கோடம்பாக்கம் சிவலிங்கம் தொடங்கி மயிலாடுதுறை மாணவன் சாரங்கபாணி வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் உயரீகம் செய்தோர் எட்டு தமிழர்கள். அப்போது துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் பலியானார். தமிழ்நாட்டில் அந்த மொழிப் போரில், காவல்துறையினராலும் இந்தியப் படையினராலும் 300 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் 1991 திசம்பரில், கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டத்தில் பன்னிரெண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களின் வணிக நிறுவனங்களும் வீடுகளும் எரிக்கப்பட்டன.

அடுத்து, ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க அப்துல் ரவூப், முத்துக்குமார் தொடங்கி சேலம் விசயராஜ் வரை இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்தனர். முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க கூடலூர் செல்வபாண்டியன், தேனியில் 2011 திசம்பரில் தீக்குளித்து உயிரீந்தார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, கச்சத்தீவும் தென்கடலில் மீன் பிடி உரிமையும் பறிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 600 பேர் சிங்களப் படையாட்களால் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்களர் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்து வாடுகின்றனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீர் மறுக்கப்பட்டதால், வேளாண்மை செய்ய முடியாமல் எண்ணற்றத் தமிழ்நாட்டு உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 20 பேரை, 2015இல் ஆந்திரக் காவல்துறை கடத்திக் கொண்டு போய், கட்டி வைத்து சுட்டுக்கொன்றது.

இவையெல்லாம் தமிழர்கள் பாரத மாதாவுக்குக் கொடுத்த பலிகள்! ஆயுதப் போராட்டம் நடத்தாத ஒரு மாநிலத்தில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் 1947 – ஆகத்து 15க்குப் பின் மக்களை பலி கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!

அந்த பலிகளில் ஒருவராக நம்முடைய இளம் தம்பி – நாம் தமிழர் கட்சி மாணவர் அணிப் பொறுப்பாளர் மன்னார்குடி விக்னேசு ஈகியாகியுள்ளார். அவரைப் படிக்க வைத்து – அவரின் எதிர்காலம் பற்றிய கற்பனையில் வாழ்ந்த அவர்தம் பெற்றோர் திருவாளர்கள் பாண்டியன் – செண்பகவல்லி ஆகியோருக்குப் பேரிழப்பு! ஆற்றலும் அறிவுமுள்ள ஓர் இளைஞரை இழந்தது தமிழினத்திற்கும் பேரிழப்பு!

விக்னேசு கடிதத்தை படிக்கும்போது, தழல் ஈகி முத்துக்குமாரைப் போல் விக்னேசும் அறிவாற்றல் மிக்க போர்க்குணமுள்ள இளைஞர் என்று தெரிய வருகிறது. அப்படிப்பட்ட ஆற்றலுள்ளவர்கள் மக்களைத் திரட்டிப் போராட தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழின உரிமைகளுக்காகத் தங்களை மாய்த்துக் கொள்ளும் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.

இவ்வளவு அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் உள்ள விக்னேசு மக்களைத் திரட்டும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றினால், நம் இனத்திற்கு எவ்வளவு பெரிய பயன் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, நம் இன எதிரிகள் நம் இளைஞர்களின் ஒப்புமையற்ற இந்த தழல் ஈகங்களால் எந்த நெருக்கடிக்கும் உள்ளாகப் போவதில்லை.

தமிழர் உரிமைகளைப் பறிக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தமிழ் மக்களுக்குத் தூண்டுதலும், எழுச்சியும் வழங்கும் என்ற கருத்தில்தான், தமிழின இளைஞர்கள் தீக்குளிக்கிறார்கள். அந்த நேரத்தில் அது ஒரு சமூகம் தழுவிய ஆத்திரத்தை உண்டாக்கினாலும், நிரந்தரமான தற்காப்புப் போராட்ட எழுச்சிகளைத் தொடர்ந்து இந்த ஈகங்கள் வழங்குவதில்லை.
தன்னலமற்ற போராளிகள் களப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு - அமைப்பு வழியில் மக்களைத் திரட்டுவதுதான் தமிழின உரிமைகளைக் காக்க – மீட்க வாய்ப்புகளைத் தரும்.
தமிழ்நாட்டில் தீக்குளிப்பு ஈகங்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு தங்களை அழித்துக் கொள்வதற்கான காரணங்களில் மக்களின் செயல்பாடின்மையும் செயலற்றத்தன்மையும் அடங்கும்.
தமிழர் உயிர்களும், உரிமைகளும், உடைமைகளும், பகைவர்களால் பறிக்கப்படும் போது, அவற்றைத் தடுக்க அறச்சீற்றத்துடன் மக்கள் திரள் களமிறங்காத நிலையில், அந்த மக்களுக்கு உணர்ச்சியூட்டி களத்தில் இறங்கச் செய்வதற்காக விக்னேசு போன்ற இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீச்சுடராக்கிக் கொள்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். இந்த ஈகங்களைக் கண்டு வெறும் இரக்கம் காட்டுவது அல்லது கண்டும் காணாமல் இருப்பது என்ற மக்கள் திரள் மனநிலை மாற வேண்டும்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழின உணர்வுச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆவேசப் பேச்சுகளே விக்னேசு போன்ற இளைஞர்களைத் தீக்குளிக்கத் தூண்டி விடுகின்றன என்று ஒரு சாரார் கொச்சைப்படுத்துகின்றனர். முதலமைச்சர் செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கானோர் இதே தமிழ்நாட்டில் தீக்குளிப்பு உள்பட தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களையெல்லாம் செயலலிதா தூண்டிவிட்டார் என்று யாரும் அப்போது விமர்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழின உரிமைகளைக் காக்கச் செயல்படுவோரைக் கொச்சைப்படுத்திட, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், மேற்கண்டவாறு உள்நோக்கம் கொண்ட விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இளம் தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதே நேரத்தில், நம் இளைஞர்கள் இனி யாருமே தீக்குளிப்புப் போராட்டத்தில் இறங்கித் தங்களை அழித்துக் கொள்ளாமல் களச் செயல்பாடுகளில் ஈடுபட்டு போராளிகளாக – தலைவர்களாக உருவாக வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட இடங்களைத் தனித்தனியே நேரில் சென்று பார்வையிட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும்
எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் 
கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள்
நாசப்படுத்தப்பட்ட இடங்களைத் தனித்தனியே
நேரில் சென்று பார்வையிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உச்ச நீதிமன்றம் கடந்த 05.09.2016 அன்று காவிரி வழக்கில் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் ஒரு பகுதித் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டதிலிருந்து கர்நாடகத்தில் அம்மாநில அரசின் மறைமுக உதவியுடன் கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கியும், தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களின் பேருந்துகளை – சரக்குந்துகளை – மகிழுந்துகளை தீ வைத்து எரித்தும் – தாக்கி உடைத்தும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி. நடராசன் அவர்களின் உயர்தர உலாப் பேருந்துகள் 42 எரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழர்கள் பலருக்கும் பலவகைச் சேதங்கள். அத்துடன் அவமானங்கள். எப்பொழுது என்ன நடக்குமோ என்ற உயிர் அச்சத்தோடு கர்நாடகத்தில் தமிழ் மக்கள் இன்றைக்கும் ஒளிந்து மறைந்து வாழ்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், அம்மக்களுக்கு ஆறுதல் கூறவும் - நம்பிக்கை அளிக்கவும் – கன்னட வெறியர்களின் அட்டூழியங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெறவும் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்களும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனடியாகத் தனித்தனியே கர்நாடகம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூற வேண்டும்.

அதன்பிறகு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை இவ்விருவரும் தனித்தனியே நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடும் வழங்கிடவும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட கன்னட இனவெறியர்கள் அனைவரையும் உரிய குற்றப் பிரிவுகளின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

பீகாரிகள் அசாமில் அசாமியரால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்ட போது, லல்லு பிரசாத் யாதவ் அசாமில் சம்பவம் நிகழ்ந்த இடங்களுக்கே சென்று பீகாரிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்து உரிய பாதுகாப்பு கொடுக்கவும் வலியுறுத்தினார்.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டடம் ஒன்று தகர்ந்து, ஆந்திரத் தொழிலாளிகள் பலர் ஒரே நேரத்தில் இறந்தபோது, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்னை வந்து, சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மேம்படுத்தவும் வேண்டுகோள் வைத்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த
தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!


காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிமையானத் தண்ணீரை கேட்டு, ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் கொந்தளித்து எழுந்துள்ள நேரத்தில், காவிரி உரிமைக்காக தீக்குளித்த தம்பி விக்னேசு உயரீகம் செய்துள்ளார்.
கடந்த 15.09.2016 அன்று, சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பேரணி”யில் பங்கேற்ற, அக்கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தம்பி பா. விக்னேசு, காவிரி உரிமைக்கான முழக்கங்களை எழுப்பிக் கொண்டு திடீரென பேரணியில் தீக்குளித்தார். உடனடியாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட விக்னேசு, நேற்று (16.09.2016) காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு அகவை 25.
தீக்குளிப்பிற்கு முன்பு விக்னேசு எழுதிய கடிதத்தில், “காவிரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள், என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள், எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள், இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் - அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமற்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார். (முழு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).
தம்பி விக்னேசின் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழின உணர்வுடன் போராட்டக் களத்திற்கு வரும் இளம் தோழர்கள், மக்களைத் திரட்டி கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமே தவிர, “தீக்குளிப்பு” போன்றவற்றால் கோரிக்கைகளை வென்றெடுத்துவிட முடியாது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

தம்பி விக்னேசின் உடலை சென்னை போரூரிலுள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தலையிட்டு, உடலை நேரடியாக அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்குதான் கொண்டு செல்ல வேண்டுமென நிர்பந்தித்தனர். எனினும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே இதனை எதிர்த்துப் போராட்டம் நடைபெறவிருந்த சூழலில், பின்னர் வேறு வழியின்றி போரூருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

அதன்படி, நேற்று (16.09.2016) மாலை வரை, போரூர் – வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தம்பி விக்னேசின் உடல் பொதுமக்கள் வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழின உணர்வாளர்களும் அங்கு சென்று தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் செ. ஏந்தல், சத்தியா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், தம்பி விக்னேசின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

இன்று (17.09.2016) காலை, மன்னார்குடியில், தம்பி விக்னேசின் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு, இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு திரு. பி.ஆர். பாண்டியன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், திரளான உழவர்கள் – பொது மக்களும் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. சு. முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தோழர்கள் பொறியாளர் செயபால், மன்னார்குடி ரெ.செயபால், கோட்டூர் செயபால், பொறியாளர் இரா. பன்னீர்செல்வம், செயக்குமார், குடந்தை செழியன், அன்பு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

காவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்!

Saturday, September 17, 2016

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகைகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும்
ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் திறந்து விட மறுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி - தமிழர்களின் உடைமைகளை சூறையாடிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், ஓசூர் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகம் இன்று (16.09.2016) முற்றுகையிடப்பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழு – அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள “காவிரி போராட்டக் குழு” சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரதாரவுடன் தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு நடந்து வரும் நிலையில், காவிரி போராட்டக் குழு சார்பில், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி வசூல் அலுவலகம், திருவாரூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம், நாகை இந்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
ஓசூரில் காவிரி போராட்டக் குழு சார்பில் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
காவிரி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் கோ. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழகத் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தமிழரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயலாளர் தோழர் முருகன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் பங்கேற்றுள்ளனர்.
“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டில் வரி வசூலிக்காதே!”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஆவேசமாக எழுப்பிக் கொண்டு பேரணியாகச் சென்ற தோழர்களை, அஞ்சலகத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, முன் கூட்டியே திட்டமிட்டு – அஞ்சலகத்திற்குள்ளே நுழைந்த இளம் தோழர்கள் நிகரன், சுதிர் நந்தன், ஆதித்யன், தமிழ்மாறன் ஆகிய நால்வரும் வேகமாக உள்ளே சென்று, முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை தாழ்ப்பாள் போட்டனர். ஓடி வந்து அவர்களை பிடித்தக் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT