உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Thursday, October 22, 2020

இந்து தமிழ் ஏடே, இனப்படுகொலையை ஆதரிக்கும் முரளிதரனை எதிர்ப்பது இனவெறியா? - ஐயா பெ.மணியரசன் கேள்வி?


இந்து தமிழ் ஏடே,
இனப்படுகொலையை ஆதரிக்கும்
முரளிதரனை எதிர்ப்பது இனவெறியா?


ஐயா பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



இந்து தமிழ் ஏடு 21.10.2020 அன்று “சனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்வேட்டின் பெங்களூர் செய்தியாளர் இரா.வினோத் அக்கட்டுரையை எழுதியுள்ளார்.

மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ்நடிகர் விசய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று பேரெழுச்சியாய்க் கிளம்பிய தமிழர் எதிர்ப்பை எதிர்க்கும் கட்டுரை இது!

இலங்கையில் உள்நாட்டுப் போர், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையோடு முடிந்து பத்து ஆண்டுகள் முடிந்த பின்னும் சினிமா, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூட தமிழகத்தில் சர்ச்சையாக்கப்படுவது சரியா என்று வினோத் கேட்கிறார்.

நூறாண்டுகள், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் காலனி ஆட்சியில் ஆங்கிலேய அரசு, பிரஞ்சு அரசு போன்றவை காலனி நாட்டு மக்கள் மீது நடத்திய படுகொலைகளுக்காக, முன்னாள் காலனிகள் அந்த நாடுகளை மன்னிப்புக் கேட்குமாறு கோருவதும் இழப்பீடு கோருவதும் இன்றும் தொடர்கிறது. சீனாவில் ஜப்பான் நடத்திய படுகொலைகளுக்காக சீனா இன்றும் ஜப்பானை மன்னிப்புக் கேட்குமாறு கோருகிறது.
தமிழ் இனப்படுகொலை நடந்து பத்தாண்டு முடிந்த பின்னும் இன்று ஏன் அந்த தமிழர்களுக்காகப் பரிந்து பேசுகிறாய் என்று நம்மை பார்த்துக் கேட்கிறது இந்து தமிழ் கட்டுரை!

“ஏ நாதியற்ற தமிழர்களே, நீங்கள் உலகத்தில் 12 கோடி பேர் இருப்பதாகக் பீற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இறையாண்மையுள்ள ஒரு நாடு உண்டா? ஒரு தேசம் உண்டா? ஐ.நா. மன்றத்திலே நீங்கள் உறுப்பு வகிக்கிறீர்களா? இல்லை! ஆதிக்கக்காரனுக்கு அடிமைகள் அடங்கிப்போக வேண்டும்; அளந்து பேசுங்கள்?” என்று வெளிப்படையாகப் பேச இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது என்று கருதி, இரா.வினோத் போன்றவர்களின் இனத்துரோகக் கட்டுரைகளை வெளியிடுகிறது அவ்வேடு.

இசை, கலை, விளையாட்டு போன்றவற்றிற்கு அரசியல் இல்லை என்று பேசுகிறார் இரா.வினோத். பாரதிராஜா அவர்களை இடித்துக்காட்டி இக்கருத்தை வினோத் எழுதியுள்ளார்.

எந்த நாட்டிலே, அந்நாட்டின் அரசியல் முடிவுக்கு அப்பால் அயல்நாட்டு இசைக் குழுவை, கலைக்குழுவை, விளையாட்டுக் குழுவை அனுமதிக்கிறார்கள்? இந்திய அரசு பாக்கித்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிகுமா? சீனாவின் இசைக்குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? சீனநாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன்? இப்போது நடக்கும் எல்லை மோதல்தான்! இது அரசியல் இல்லையா?

தெனாப்பிரிக்காவில் அந்நாட்டின் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களின் வாக்குரிமையைப் பறித்து, வெள்ளை இனவெறி ஆட்சி நடந்துவந்தது. கருப்பர்களுக்கு வெள்ளையருக்குச் சமமாக உரிமை இல்லை. இன ஒதுக்கல் (Aparthied) செய்தார்கள். எனவே அந்த நாட்டுடன் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் தூதரக உறவு வைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தன.

கலைக்கும் விளையாட்டிற்கும் அரசியல் இல்லையா?

இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போகத் தடை; தென்னாப்பிரிக்கக் குழுக்கள் இந்த நாடுகளுக்கு வரத்தடை இருந்தது.

இன ஒதுக்கலை அந்நாடு கைவிட்ட பின்தான் இந்நாடுகள் இத்தடையை நீக்கின. மேற்படி தடையை எல்லோரும் ஆதரித்தோம்! அதே போல் பாலத்தீனர்களின் தாயகத்தை ஆக்கிரமித்துக் கொண்ட யூதர்களின் இஸ்ரேலுடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தூதரக உறவு கொள்ளாமல் – இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் போக வரத் தடை விதித்திருந்தன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பாலத்தீன விடுதலை அமைப்பிற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைக்குப் பின்னரே இஸ்ரேலுக்கு எதிரான தடைகள் நீங்கின.

இலங்கையில் சிங்கள இனவெறி ஆட்சி ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த பின், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தூதரக உறவைத் துண்டித்துத் தடைகள் போட்டிருக்க வேண்டும். சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழின அழிப்புப் போரை வழிநடத்திய இந்திய அரசு எப்படி இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்படும்?
ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன உணர்ச்சியைக் கணக்கில் கொண்டு அன்றையத் தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; சிங்களப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கை விளையாட்டுக் குழுக்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விளையாடக் கூடாது – என்று சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்!
தமிழ்நாட்டின் குடியரசுத் தலைவராகவோ அல்லது தலைமை அமைச்சராகவோ செயலலிதா இருந்து மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால் ஐ.நா.மன்றம் அவர் குரலை செவிமடுத்திருக்கும். பல நாடுகள் தமிழ்நாட்டுடன் சேர்ந்து இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை, கலைக்குழுக்கள், விளையாட்டுக் குழுக்களுக்கான தடை அனைத்தையும் போட்டிருக்கும்!

செயலலிதா அம்மையார் போட்ட அந்த சட்டப் பேரவைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழ்நாட்டில் இலங்கை விளையாட்டுக்குழுக்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது; சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சி தரக்கூடாது என்கிறோம்.

இதன் தொடர்ச்சியாகத்தான், சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை ஆதரித்த, ஆதரிக்கின்ற, தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ்நடிகர் விசய்சேதுபதி நடிக்கக்கூடாது என்கிறோம். சிங்கள நடிகர்களைக் கொண்டோ, வேறுநாட்டு நடிகர்களைக் கொண்டோ முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் வந்தால் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அந்தப் படம் தமிழ்நாட்டில் ஓடக்கூடாது என்கிறோம்!

இனப்படுகொலை மற்றும் மனித உரிமைப் பறிப்பு நாடுகளுக்கு எதிராக நாகரிகச் சமூகம் – சனநாயகச் சமூகம் கடைபிடிக்கும் புறக்கணிப்பு நடவடிக்கையைத்தான் தமிழின உணர்வாளர்களாகிய நாங்கள் கடைபிடிக்கிறோம்.

ஐ.நா.பொதுச்செயலரும் - மனித உரிமை மன்றமும்

அன்றைய முதல்வர் செயலலிதா, அப்போது ஈழத்தமிழர் இனப்படுகொலையால் மனம் பதைத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கான ஒரு சாகசமாக – ஓர் உத்தியாக – இலங்கைக்கு எதிரான தடைகளை விதித்தார் என்று இந்து தமிழ் நாளேட்டின் “உயர்மட்ட அறிவாளர் குழு” எதிர்வாதம் செய்யக்கூடும்!

2009இல் பொறுப்பில் இருந்த ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்கிமூன் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்கும் தேவை இல்லையல்லவா? ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் உறுப்பு வகிக்கும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்கும் தேவை இல்லை அல்லவா!

இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டே, பன்னாட்டுப் புகழ்பெற்ற இந்தோனேசிய மனித உரிமைச் சிந்தனையாளர் தாருஸ்மான் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமர்த்தி, இலங்கையில் இறுதிப்போர் நாட்களில் நடந்த மனிதப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார். அக்குழு அளித்த அறிக்கை பின்வருமாறு கூறியது.

2009 இறுதிப்போரில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் – பொதுமக்கள் – இலங்கைப்படையினரால் கொல்லப்பட்டனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டையச் சென்ற பொதுமக்கள் இலங்கை படையாட்களால் கொல்லப்பட்டனர். அங்கு நடந்துள்ள படுகொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Crime against Humanity). இவற்றை விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று மேற்படி தாருஸ்மான் குழு ஐ.நா.பொதுச் செயலாளர்க்குப் பரிந்துரைத்தது.

2015-இல் செனிவாவில் கூடிய ஐ.நா.மனித உரிமை மன்றம் இலங்கை அரசு நடத்திய இறுதிப்போரில் நடந்த படுகொலைகள், போர்க் குற்றங்கள் அனைத்தையும் விசாரிக்க இலங்கை அரசு பன்னாட்டு வல்லுநர்களையும் இணைத்துக் கொண்ட புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
ஐ.நா.மன்றப் பொதுச் செயலாளர் கொடுத்த அறிக்கைப்படியும் ஐ.நா.மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானப்படியும் புலனாய்வு அமைப்புகள் அமைக்காதபடி இந்தியா உள்ளிட்ட பலநாடுகள் சிங்கள இனவெறி அரசுக்குப் பாதுகாப்பு அரண்களாக விளங்குகின்றன. ஆனால், சிங்கள அரசு – ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது என்ற உண்மையை ஏதோ ஒரு வடிவில், உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

தமிழினப் படுகொலை செய்தோர் மற்றும் முரளிதரன்

தமிழினத்தில் பிறந்த, இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் 2009 இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. போர் முடிந்த நாள் தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றார்.

“2009 – இல் போர் முடிவுக்கு வந்ததால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது நின்று போனது என்ற கருத்தில்தான் என் வாழ்நாளில் அது மகிழ்ச்சியான நாள் என்று 2019-இல் கூறினேன்” என்று இப்போது மிண்டும் கூறியுள்ளார்.

அப்பாவிப் பொதுமக்கள் இனிமேல் கொல்லப்பட மாட்டார்கள் என்று மகிழ்ந்த முரளிதரன் 2008 – 2009 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கும் மேல் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்ததுண்டா? இல்லை! ஏனேனில் கொன்றவர்கள் முரளிதரனின் எசமானர்கள். கொல்லப்பட்டவர்கள் அப்பாவித் தமிழர்கள்! அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லை! இதில் முரளிதரனுக்குத் தன்னலவெறி அரசியல் இல்லையா?

ஈழத்தமிழர், சிங்களர் என்ற இரண்டு இனங்களின் தாயகமாக உள்ளது இலங்கை. இதைச் சிங்களத் தீவு என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார் முரளிதரன். இதில் அவரது தன்னல அரசியல் இல்லையா?

பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் காமரூன் காமன் வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த போது 16.11.2013 அன்று வடக்கே தமிழர் பகுதிக்குப் போய் தமிழர்களின் துயரங்களைக் கேட்டறிந்தார். அவரிடம் தமிழ்த்தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டுபோன, சிங்களக் காவல்துறை என்ன செய்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை; எங்கள் பிள்ளைகளை ஒப்படைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிக் கதறி அழுதனர். அதுபற்றி இலண்டன் பிபிசி நிறுவனம் முத்தையா முரளிதரனிடம் கேட்ட போது, இருபது, முப்பது பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆகிவிடுமா என்று எதிர்க் கேள்வி கேட்டார். இது முத்தையா முரளிதரனின் இனத்துரோக அரசியல் இல்லையா?

கடந்த ஆண்டு இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த போது முரளிதரன் இனப்படுகொலைக் குற்றவாளி கோத்தபய இராசபட்சேவுக்குத் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போதுதான் என் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் 2009-இல் போர் முடிந்த நாள் என்றார். அதுமட்டுமல்ல, இப்போது இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றிப் போய் வர முடிகிறது. இந்த அமைதி – பாதுகாப்பு மேலும் உறுதிப்பட வேண்டுமானால், கோத்தபய ஆட்சி வரவேண்டும் என்று பேசினார்.

இப்படிப்பட்ட முரளிதரனைத்தான் “அவர் ஒரு விளையாட்டு வீரர்; அரசியர் அல்ல என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்று வினோத் விளக்குகிறார். என்னே அவரது வாய்மை!

முரளிதரன் அரசியலற்ற வெறும் விளையாட்டு வீரரா? தமிழினத்திற்கு எதிரான அரசியல் பேசினால், அது அரசியல் அல்ல என்பது இந்து தமிழ் நாளேட்டின் நடுப்பக்கச் சிந்தனை நாயகர்களின் முடிவோ? மேற்கண்ட முரளிதரன் கூற்றுகள் அனைத்தும் அவர் கொடுத்த காணொலிக் காட்சிப் பதிவுகளாக உள்ளன.
“இலங்கை என்பது சிங்கள பெளத்த நாடு என்று சொன்னேன். அது உண்மை தானே” என்று ஒரு நேர்காணலில் கேட்கிறார் முரளிதரன். இலங்கை அரசமைப்புச் சட்டம் அனைவர்கும் ஒன்றுதான் அதில் பாகுபாடு இல்லை” என்கிறார் அதே காணொலியில்! இலங்கையில் ஈழத்தமிழர்களும் - அவர்கள் தாயகமும் - அவர்களின் இந்து மதமும் இல்லையா?

இந்துத் தமிழ்நாளேட்டின் சிந்தனை நீர்த் தேக்கங்களுக்கு (think tanks) மேற்கண்ட முரளிதரன் கூற்றுகள் எல்லாம் மட்டைப் பந்து விளையாட்டின் சில விதிமறைகளாகத் தெரிகின்றனவோ? சிங்களப் பேரினவாத அரசியலாகத் தெரியவில்லையோ?

தமிழின வெறுப்பு அரசியல்

விளையாட்டு வீரரிடம் போய் அரசியல் பண்ணலாமா என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர், தமிழின வெறுப்பு தலைக்கேறிப்போன இந்த “நடுநிலை இதழாளர்கள்!”

நாங்கள் அரசியல் பண்ண வில்லை; அரசியல் அனாதையாகக் கிடக்கும் தமிழினத்தின் அவலக் குரலை வெளிப்படுதுகிறோம். மனித உரிமைகளின் மாண்பறிந்த பன்னாட்டுச் சமூகம் காட்டிய பாதையைப் பின்பற்றுகிறோம். தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கேடயம்தான் முரளிதரன் என்கிறோம். அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நம் நடிகர் விசய் சேதுபதியைக் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் வேண்டுகோளை விசய் சேதுபதி ஏற்கவில்லை; எழுந்துள்ள எதிர்ப்பின் ஆழத்தையும் பரப்பையும் புரிந்து கொண்ட முரளிதரன், தன் படத்தில் விசய்சேதுபதி நடித்தால் படம் தோற்றுவிடும் என்று உணர்ந்து கொண்டார். அதை நாசுக்காக – வெளிப்படுத்தி, விசய்சேதுபதி வேண்டாம் என்று விலக்கிக் கடிதம் எழுதிவிட்டார். விலக்கப்பட்ட நபர் விசய்சேதுபதி; அவராக விலகிக் கொண்டது போல் சொற்களை அடுக்கியுள்ளார் சூழ்ச்சிக்கார வினோத்!

இரா.வினோத்தின் இந்து ஏட்டுக் கட்டுரையை வரிக்குவரி மறுக்கலாம். அவரின் அந்தரங்க சூழ்ச்சியை வெளிப்படுத்தலாம். கட்டுரை பெரிதாகிவிடும். எல்லாவற்றையும் வாசகர்களே புரிந்துகொள்வார்கள்!

திரும்பத் திரும்ப சாதியை இழுத்துப் போர்த்திக்கொள்கிறார் வினோத்! முரளிதரனைச் சாதிபார்த்துத் தமிழ் உணர்வாளர்களும் சனநாயகவாதிகளும் கண்டிப்பது போல் எழுதுகிறார். முரளிதரன் தமிழ்நாட்டு மரபுவழித் தமிழன் என்பது மட்டுமே என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். அவர் என்ன சாதி என்று தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதி வேறுபாடற்ற உயர் பண்புத்தமிழன்! அவர் தலைமையை ஏற்றுக்கொண்டது தமிழீழம்.

முரளிதரனை எதிர்ப்போர், வர்க்க வேறுபாடு பார்ப்பதாகச் சொல்கிறார் இரா.வினோத். கோடீசுவரராக உள்ள முரளிதரனின் இன்றைய வர்க்கம் என்ன?

அடுத்து மலையகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியர்களுக்கும் இடையே சிண்டுமுடியும் வேலையில் ஈடுபட்டுள்ளார் வினோத்! மலையகத் தமிழர்கள் உரிமை காக்கவும் அவர்கள் மீது சிங்கள அரசு ஏவி விட்ட ஒடுக்குமுறையைக் கண்டிக்கவும் 1950,60களிலிருந்து இன்று வரை தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதும் போராடியதும் வினோத்துக்கு தெரியுமா? இவற்றை எல்லாம் இந்து தமிழ் நாளேட்டின் நடுப்பக்கச் சிந்தனை நாயகர்கள் விசாரித்து உண்மையறியவேண்டும்!

தமிழ்நாட்டில் முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கிளம்பிய இன உணர்வுக் குரலை – சனநாயகக் குரலை தூண்டிவிட்டவர்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார் வினோத். “இலங்கை அரசுக்கு ஆதரவானவர் (முரளிதரன்) என்று புலம் பெயர் ஈழத் தமிழ் குழுக்கள் ஒரு திரியை கொளுத்திவிட்டதும், தமிழ்நாட்டில் தமிழ் அடையாள அரசியல் பேசுவோர் குரல் பொங்க ஆரம்பித்தது,” என்று வினோத் நையாண்டி செய்கிறார். முரளிதரன் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவானவர் என்பது கட்டுக்கதையா? அடுத்து, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள்தான் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள் என்று இவர் கூறுவது நயவஞ்சகமல்லவா!

“இப்போது போராளிகள் வேஷம் கட்டுபவர்கள் தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் நடந்த கொலைகளைச் செய்தவர்கள் வீடுகளை முற்றுகையிட்டார்களா?” என்று கேட்கிறார். சாதிக் கொலைகளை தொடர்ந்து கண்டித்துவந்துள்ளோம். சாதி ஆதிக்கக் கொலைகாரர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் எனப் போரடி வந்திருக்கிறோம், அது வேறு செய்தி. ஆனால் இனப்படுகொலை ஆதரவாளரை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களைப் பார்த்து சாதி ஆதிக்ககாரர்கள் வீட்டை முற்றுகையிட்டீர்களா என்று கேட்பது என்ன வகையான சனநாயகம், என்ன வகையான தருக்கம்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானர்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராடினால் சாதி ஆதிக்ககாரர்கள் கொலை செய்த போது அவர்கள் வீடுகளை நீங்கள் முற்றுகையிட்டீர்களா என்று கேட்பாரோ வினோத்? எவ்வளவு வன்மமாக, சூழ்ச்சியாக, மக்களைத் திசைதிருப்பும் உள்நோக்கத்தோடு இந்த வினாவை எழுப்பியுள்ளார்! இச்சூழ்ச்சியை சனநாயக உணர்வுள்ள அனைவரும் புரிந்துகொள்வர்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட ஆண்டுகளில் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் மட்டைப் பந்து விளையாடி விருதுகள் பெற்றுவந்தார். என்னை போன்றவர்கள் அப்போது, நம் தமிழ்ப் பிள்ளை விருதுகள் வாங்கிவருகிறது என்று பெருமையாகத்தான் கருதினோம். அப்பிள்ளை என்ன சாதி என்றெல்லாம் பார்க்கவில்லை. அதே பிள்ளை பிற்காலத்தில் தமிழினப்படுகொலையை ஆதரித்தும், கோத்தபய இராசபட்சே குடும்பத்திற்கு வாக்கு கேட்டும் வெளிபட்ட போதுதான் முத்தையா முரளிதரனின் இனத்துரோகம் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியவந்தது.

முத்தையா முரளிதரன் வேடத்தில் விசய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று வலைத்தளங்களில் விமர்சனம் செய்தவர்களை “சோஷியல் மீடியா மாஃபியா” என்று தரக்குறைவாகக் தாக்கியுள்ளார் வினோத். இது தான் சனநாயகமா? இது கண்ணியமான விமர்சனமா?


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, July 27, 2020

"1983 - கருப்பு யூலை” - ஐயா பெ.மணியரசன் உரை!


"1983 - கருப்பு யூலை”


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் - ஐயா பெ.மணியரசன் உரை!





கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, March 14, 2019

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், *“ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு”* சார்பில், இன்று (14.03.2019) - வியாழன் காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் இலங்கை தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வேணுகோபால், திராவிடர் விடுதலை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு தோழர் தியாகு, த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.தா. பாண்டியன், 'இளந்தமிழகம்' செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வி. கோவேந்தன், தோழர்கள் மணி, தமிழரசன், கண்ணன், வடிவேலன், சந்தோஷ், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் தற்போது சூளைமேடு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

ஐ.நா. அவையே! இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டிலேற்று! தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, March 11, 2019

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!
 

தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், “ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், வரும் 14.03.2019 - வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது!

தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, November 27, 2017

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தோழர் கி. வெங்கட்ராமன் உரை!

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரை!
“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், 25.11.2017 காலை, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, “விசை” இணைய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் அ.மு. செய்யது தலைமை தாங்கினார்.

இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டுராசா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன், ஊடகவியலாளர் தோழர் ஆழி செந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பட்டுராசன் காந்தி, தமிழ்நாடு மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் இளையராசா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தோழர் கி.வெ. அவர்களது உரையின் எழுத்து வடிவம் :

“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், முகாமையான பொருளில், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு முதலில் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இனப் போராட்டங்கள் குறித்து நாம் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்பட வேண்டும்.

பொதுவாக நாம், “கருத்து வாக்கெடுப்பு” என்றும், “பொது வாக்கெடுப்பு” என்றும் மாறிமாறிப் பயன் படுத்துகிறோம். இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு! பொது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்புதான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டின் மீது நடக்கும் வாக்கெடுப்பு என்பதால், குறிப்பாக தேசிய இறையாண்மை குறித்தது என்பதால் நாம் இதனை “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) என்றே கூற வேண்டும். “பொது வாக்கெடுப்பு’’ எனக் கூறக்கூடாது என்பது எனது கருத்து!

அவ்வகையில், குர்திஸ்தான் - கட்டலோனியாவில் தங்கள் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய கருத்து வாக்கெடுப்புகளை நாம் ஆதரிக்கிறோம். கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை, தமிழ்ச்சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.

நம் எல்லோருக்கும், தமிழீழ விடுதலை என்ற நோக்கத்தில் பொது கருத்தும், அக்கறையும் இருக்கிறது. தமிழீழத்தில் ஒரு மாபெரும் இன அழிப்பு நடந்த நிலையில், அந்த அக்கறை நம்மிடத்தில் கூடுதலாகவும் உள்ளது. ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறையில் நம்மிடையே வேறுபாடுகள் உள்ளன.

ஐ.நா.வின் சட்டங்கள் - பிரகடனங்கள் போன்ற வற்றில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு என்றைக்குமே வல்லரசு நாடுகள் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்திற்கு தானே முன்வந்து ஆதரவு தெரிவித்த வரலாறு கிடையாது! வரலாற்று நிர் பந்தங்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் அவர்களது நாட்டு நலன் களை அல்லது அவர்களது ஆதிக்கத் தேவைகளுக்கு இசைவாக இருக்கும் போதுதான் ஆதரிக்கிறார்கள்.

பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சி செய்த சோவியத் - சீனா போன்ற நாடுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணையாக நின்றது உண்மை தான்! ஆனால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.

மாபெரும் தலைவர் மாசேதுங் உயிரோடு இருந்த காலத்தில்தான், சீனா - திபெத் தேசிய இனத் தாயகத்தை ஆக்கிரமித்தது.

தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை அளித்து - உலகிற்கே முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை, சோவியத் ஒன்றியம் வைத்திருந்தது. அந்த உரிமையைக் கொண்டு பின்லாந்து நாடு பிரிந்து போவதை தலைவர் லெனின் ஏற்றுக் கொண்டு, தனி நாடு அமைத்துக் கொள்ள வழிவிட்டார்.

இங்குதான் நாம் “சோவியத் ரசியா” என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்கள் சட்டப்படி “சோவியத் ஒன்றியம்” என்றுதான் சொன் னார்களே ஒழிய, நாட்டின் பெயரில் “இரசிய” அடையாளம் வெளிப்படையாக வராமல்தான் பார்த்துக் கொண் டார்கள்.

ஆனால், ஏட்டளவில் உரிமைகள் இருந் தாலும், நடைமுறையில் சோவியத் நாட்டில், இரசிய மொழி - இரசிய இன ஆதிக்கம் மேலாங்கியது. லெனின் காலந்தொட்டு, அங்கு இரசிய மேலாதிக்கத்திற்காக நடந்த அத்துமீறல்கள் குறித்து உக்ரேனியன் கம்யூனிஸ்ட்டுகள் இப்போது எழுதுகிறார்கள். லாட்வியக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படுத்துகிறார்கள். சோவியத் ஒன்றியம் சிதறிப் போனதில், இரசிய மேலாதிக்கத்திற்கு முகாமையான பங்குண்டு!

லெனின் பிரிந்து போகும் உரிமையை ஆதரித்தாலும், தேச அரசு அமைத்துக் கொள்வதை நிபந்தனையற்று ஏற்கவில்லை. தேசியத் தன்னுரிமையை மணமுறிவு (விவாகரத்து உரிமைக்கு) இணையானதாகக் கூறினார். அதாவது பல தேசங்கள் சேர்ந்து இருப்பது குடும்பமாக வாழ்வது போல் இயல்பானது; பிரிந்து சென்று தேச அரசு அமைப்பது விவாகரத்து போல விதிவிலக்கானது. என்பதுதான் லெனின் கோட்பாடு!

ஐ.நா.வின் உரிமைப் பிரகடனத்தின் உறுப்பு 1 (2) இல், எல்லா தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முரணாக அடுத்த பகுதியிலேயே, உறுப்பு நாடுகளின் இறையாண்மையை - பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரண்டு பிரிவுகளையும் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எப்போதுமே தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது, எதிர்நிலையான இந்த சர்வதேச சூழலில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் முன்னேறுகிறது! வரலாற்றுத் தேவைகளைக் கருதி, வல்லரசுகள்கூட தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சூழல் வரலாம். ஒரு ஏகாதிபத்திய வல்லரசு நாடு ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கக் கூடாது என்று லெனின் சொன்னார்.

அதுபோல், வட அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை, “அமெரிக்கக் கையாட்களின் போராட்டம்” என்று முத்திரை குத்திவிட முடியாது. குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் அதுதான்!

ஈராக், துருக்கி போன்ற பல நாடுகளிடையே குர்து இன மக்கள் சிதறிக் கிடக்கின்றனர். துருக்கியில் ஒசலான் தலைமையில் பி.கே.கே. என்ற கம்யூனிஸ்ட் தொழி லாளர் கட்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பல்லாண்டுகளாக - பல ஒடுக்குமுறைகளை எதிர்த்து முன்னேறிக் கொண்டுச் சென்றுள்ளது. ஒசலான் வாழ் நாள் சிறையாளியாக துருக்கியில் அடைக்கப்பட் டுள்ளார்.

1988இல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு, குர்து மக்களை இனப் படுகொலை செய்து, தொகை தொகையாகக் கொன்ற போது குர்து மக்களின் விடுதலைத் தாகம் பெருமளவில் பேசப்பட்டது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, குர்திஸ்தான் விடுதலை இயக்கத்தினர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு மாகாண அரசு ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலாக அதை அமைத்துக் கொண்டார்கள்.

அதன் தலைவர் பர்சானி அப்போதே சொன்னார். “எங்களுக்கு சாதகமான சூழல் வரும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மாகாண அரசைப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்றார். அதைத்தான் இப்போது 25.09.2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - தங்கள் விடுதலைக் கோரிக்கையை உலகறியச் செய்துள்ளனர்.

விடுதலைக் கோரிக்கைக்காக ஆயுதம் தூக்கினால் அதை பயங்கரவாதம் என்கிறாயே, இதோ அங்கீகரிக்கப்பட்ட அரசைக் கொண்டு - சனநாயக வடிவிலேயே எங்கள் விடுதலைக் கோரிக்கையை - மக்கள் கருத்தாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று குர்து மக்களும், கட்டலோனிய மக்களும் தெரிவித் துள்ளார்கள்.

செர்மனி மேலாதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கொசோவா விடுதலையை ஆதரிக்கிறது, ஆனால், கட்டலோனியா விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதுபோல்தான் பல வல்லரசுகளும்!
இதே சூழலில்தான், கனடாவில் கியூபெக் மாகாணத்திலும், ஐக்கிய முடியரசான பிரிட்டனில் ஸ்காட்லாந்திலும் கருத்து வாக்கெடுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த வல்லரசும் அதை முன்வைக்கவில்லை. அங்கிருக்கும் சனநாயக வளர்ச்சிக்கேற்ப, அதை அங்குள்ள பிரிட்ஷ் அரசும், கனடா அரசும்தான் நடத்தியது.

பல தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் “கூட்டாட்சி” (Federation அல்லது Confederation) என்பது தோற்றுப்போன ஒரு கோட்பாடு! கூடுதல் உரிமைகள் பெற்றெல்லாம் ஒரு தேசிய இனம் கூட்டாட்சியில் நிலைத்துவிட முடியாது! கூடுதல் அதிகாரத்தை நோக்கிப் போவதே இயல்பாக நடப்பதில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வலுவாகும் இடங்களில் அவற்றின் அழுத்தத்தில் அவற்றை எதிர்கொள்ள சில இடங்களில் நடக்கலாம்.

சோவியத் ஒன்றியத்தைவிட, தேசிய இனங்களுக்கு உரிமை வழங்கிய ஒரு அரசமைப்புச் சட்டம் உலகில் எங்காவது உண்டா? ஆனால், நடைமுறையில் ரசிய மொழி இன மேலாதிக்கம்தான் அங்கு நடந்தது. ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் என்ற வழியில் அது நடந்தது. வட அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலோ சாக்சன் மொழியினரின் கூட்டாட்சியாக அது இருந்தாலும் கூட, அங்கும் முரண்பாடுகள் வெடிக்கின்றன. கலிபோர்னியாவில் தனி நாட்டுக் குரல் கேட்கிறது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசில், ஏதாவதொரு தேசிய இனம் மேலாதிக்கம் செலுத்துவது இயல்பாக உள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியாகத்தான் நடந்தது. குர்திஸ்தானில், சன்னி இசுலாமியப் பிரிவினரே பெரும் பான்மையாக உள்ளனர். கட்டலோனியாவில் ரோமன் கிருத்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஸ்பெயினிலும் அவ்வாறே! இருப்பினும், அங்கெல்லாம் மதத்தைத் தாண்டி மொழி வழி தேசிய இனப் போராட்டம் நடக்கிறது. பண்பாட்டுக் கூறாக மதம் இருக்கலாமே தவிர, மொழி - தாயகம் தான் தேசிய இனத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இவையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக உள்ளன. சில அரிதான சூழல்களில், நாகாலாந்து போன்ற இடங்களில் பல மொழி பேசுபவர்கள் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படையில், ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து கொண்டு, தங்களுக்கான தேச அரசை அமைத்துக் கொள்ளப் போராடுவதும் நடக்கிறது. இது சராசரிப் போக்கல்ல!

தமிழீழத்தில் இன்றைக்குள்ள நிலையில், விடுதலைக் கோரிக்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அங்கு அமைப்பு ரீதியான சில குழப்பங்கள் உண்டு!

தமிழீழத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேச அரசை நிறுவி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசையும், தமிழீழ மக்களையும் சிங்கள பௌத்த இனவெறி அரசு பல நாடுகளின் பங்ளிப்போடு போர் நடத்தி - இரத்தக் களரியில் அழித்தொழித்தது.

எனவே, பன்னாட்டுச் சமூகம்தான் ஐ.நா.வழியே அந்த அரசை மீட்டெடுத்துத் தர வேண்டும்! அதற்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதற்குமுன், நமக்கு சில புரிதல்கள் வேண்டும்.

இந்தியாவின் அனுசரணையோடு - இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தவே முடியாது என்ற அடிப்படைப் புரிதல் நமக்கு வேண்டும். எந்தவொரு அரசுக்கும் வர்க்கத்தன்மை இருப்பதைப் போல், அவற்றுக்கு ஒரு இனத்தன்மையும் இருக்கிறது. அவ்வாறு, இந்தியாவுக்கு ஒரு ஆரிய இனத்தன்மை இருக்கிறது. ஆரியக் கட்டமைப்பாக அது செயல்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழினத்தை பகையாக நிறுத்தியே, இந்தியா பிறந்து வளர்ந்து நம்முன் நிற்கிறது என்ற புரிதல் நமக்கு அவசியமானது!

உலகின் புவிசார் அரசியல் நிலைமைகள் அவ்வப்போது மாறலாம். சோவியத் - அமெரிக்கா என்ற இருமுனை உலகம் இருந்தபோது, உலக நிலைமைகள் வேறு! இன்றைக்கு, வட அமெரிக்கா தலைமையில் ஒருமுனை உலகம் வலிந்து திணிக்கப்படும் சூழலில், அதற்கு எதிராகப் பலமுனை உலகம் உருவாகி வரும் சூழல் வேறு! எனவே, புவிசார் அரசியல் நலன் என்பது தற்காலிகமானது!

இன்னொருபக்கம், சீன எதிர்ப்புக்காக இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் கருத்தாளர்கள் இருக்கின்றனர். இந்தியா ஒருபோதும் அவ்வாறு செய்யாது! தமிழினப் பகையோடுதான், இந்திய அரசு சீன எதிர்ப்பை முன்வைக்கும். அவ்வாறுதான் செயல்படுகிறது. தனது பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பிலும், சாகர் மாலா திட்டத்திலும் சீனாவோடு கைகோக்கிறது. பன்னாட்டு உறவு வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை!

எனவே, இந்தியா - தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடுதான் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல் அணி வகுப்பை நாம் முன்வைக்க வேண்டும்.

தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வழக்கம்போல் சிங்கள அரசு எதிர்க்கும்! எனவே, அதற்கு ஆதரவாக வெளியில்தான் சூழல்களை உருவாக வேண்டும். அப்பணியில் நாம் ஈடு பட வேண்டும்.

இன்றைக்கு, பல தடைகளைக் கடந்து தமிழீழத்தில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில், மாவீரர் நாள் என்பது துக்கம் கொண்டாடும் நிகழ்வல்ல! “நாங்கள் ஒரு தேசம்! இது எங்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்’’ என்று உலகிற்குத் தங்கள் விடுதலைக் கோரிக்கையை பறைசாற்றும் நிகழ்வு!

இவ்வாறான சூழலில், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த விரும்பினால், அதற்கு மிகப்பெரிய தடையாக இந்தியாதான் முன் நிற்கிறது!

நாமெல்லாம் நேசித்த கியூபா, வெனிசுவேலா போன்ற பல இடதுசாரி நாடுகள், இந்தியாவின் உதவி வேண்டும் என்பதற்காகத்தான், கேள்வி இல்லாமல் இந்தியா ஆதரித்த இலங்கையின் தமிழின அழிப்புப் போரை ஆதரித்தார்கள். இதில் முதலாளிய நாடு - பொதுவுடைமை நாடு என்ற சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது!

இன்றைக்குள்ள உலகச் சூழலில், தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, வல்லரசுப் போட்டிகளுக்கு உள்ளே நுழைந்து நடத்தும் ஒரு காய் நகர்த்தல் ஆகும்! வெறும் கொள்கை உறவோடு, ஞாயங்களின் அடிப்படையில் அது நடக்காது! மனித உரிமை ஆர்வலர்கள் இருப்பார்கள், மக்கள் இருப்பார்கள். ஆனால், அரசு என்பது ஒரு போதும் ஞாயத்தின் பக்கம் நிற்காது. தங்கள் அரசுக்கு அல்லது தங்கள் மண்டலத்திற்கு ஒரு நலன் இருக்கிறதென்றால், ஒரு தேச விடுதலைப் போரை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம்!

இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். கட்டலோனியா மற்றும் குர்திஸ்தானில், மாகாண அரசுதான் கருத்து வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, இங்கேயும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் பிடித்த பிறகு அவ்வாறு கருத்து வாக்கெடுப்பு நடத்து வோம் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை!
ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கூட “இந்திய ஒருமைப் பாட்டை - இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஒருவர் வாக்குறுதி அளித்தால் தான், இங்கு தேர்தலிலேயே நிற்க முடியும்! இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறை ஆகியவை அத்தகையவை! கருத்து வாக்கெடுப்பு என்று அறிவித்தால் அடுத்த நொடி தமிழ்நாட்டு ஆட்சியை இந்திய அரசு கலைத்துவிடும்!

“அடைந்தால் திராவிட நாடு” என முழங்கியவர்கள் கூட, ஏதோவொரு வடிவத்தில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க.வுக்கு அப்போது கூடுதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால், இந்திய அரசு ஒரு தடைச்சட்டம் போட்டு அதை கைவிடச் செய்தது.

தனிநாடு கேட்டவர்கள் ஆயிற்றே என தமிழ் நாட்டுக்குக் கூடுதல் உரிமைகள் எல்லாம் கொடுக்கப் படவில்லை. கூடுதலாக அதிகாரங்கள்தான் பறிக்கப் பட்டன. மாநில உரிமைகள் பல பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவ்வாறுதான், தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டு இந்திய அரசால் “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம்தான் தேசிய இன ஒடுக்குமுறையின் முதன்மைக் கருவியாக இருக்கிறது. சனநாயகம் என்ற போர்வையில் ஆரியமய இந்தி இனத்தின் ஆதிக்கம், ஆரிய வளையத்தில் வீழ்ந்துபோன பிற இனங்களின் துணையோடு நடக்கிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது அதுதான்!

எல்லா வகையிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதென்பது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல! சமற்கிருத இந்தி மொழித் திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் ஆரிய இன மேலாதிக்கத்திற்காக நடக்கின்றன. மோடி இதில் வேகமாக உள்ளார் என்றால், காங்கிரசு அதில் கொஞ்சம் பதமாக நடக்கிறது. அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை!

சிலர், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று கூறுகின்றனர். அது உயர்ந்த இலட்சியம்தான் என்றாலும், அதற்கு உடனடி வாய்ப்பில்லை!

எனவே, முதல் கட்டமாக ஒத்த தேசிய இனங்கள் என்ற வகையில் தமிழர்கள் தங்கள் இறையாண்மை இலட்சிய அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். தமிழர்களின் தேசியத் தாயகங்களான தமிழீழமும் தமிழ்நாடும் “தமிழர் சர்வதேசியம்” என்ற வகையில், பொதுப் புரிதலோடு ஒத்திசைய வேண்டும்.

அதன் வழியிலேயே, தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு நோக்கி நாம் நகர முடியும்! தமிழீழம் இன்றைக்கு எலும்புக் கூடாக இருக்கலாம்! சாம்பல் மேடாக இருக்கலாம். ஆனால், நாளை எழும்! சாம்பலிலிருந்து மீண்டும் எழும்! மாவீரர்களின் ஈகம் வீண் போகாது! தமிழீழம் உறுதியாய் வெல்லும்!”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT