உடனடிச்செய்திகள்
Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Monday, December 2, 2019

வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்! திசம்பர் 20 அன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன் மனிதச் சுவர் போராட்டம்! பெ. மணியரசன் அறிவிப்பு!



வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!

திசம்பர் 20 அன்று சென்னை

நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்
மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!



தமிழ்நாட்டில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குவிகிறார்கள். உயர் தொழில்நுட்ப வேலையிலிருந்து, உடலுழைப்பு வரை எல்லா வேலைகளையும் அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிலே தங்கிக் குடும்பம் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, எண்ணெய் எரிவளித் துறை, பி.எச்.இ.எல், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையங்கள், படைக்கலத் தொழிற்சாலைகள், வருமான வரி – சரக்கு சேவை (ஜி.எஸ்.டி.) வரி, சுங்க வரி அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சல் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 90 விழுக்காடு வேலை வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வேலைகளுக்கும் (TNPSC) இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கொடிய நிலையில் உள்ளது. கல்வித் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் மிகமிகக் குறைந்த கூலிக்கு வேலை பார்ப்போர் மிக அதிகம்! கல்வித்தகுதி பெற்று, வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர்!

அண்மையில் கோவை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., போன்ற பட்டம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போட்டார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.

தமிழ்நாட்டு வேலைகளை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் பறித்துக் கொண்டால், தமிழர்களின் கதி என்ன? வெளி மாநிலத்தவர் மக்கள் தொகை தமிழ்நாட்டில் வெள்ளம் போல் உயர்ந்து கொண்டே போனால், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு மிஞ்சுமா என்ற கேள்விகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டெரிகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சிக்கலை முன்னுணர்ந்து 2005இல் ஈரோட்டில் “வெளியாரை வெளியேற்று” என்ற தலைப்பில் மாநாடு போட்டது. வெளியார் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அவர்களை வெளியேற்றுவதற்குரிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் கூறி, அம்மாநாட்டில் புத்தகமும் வெளியிட்டது.

தொடர்ந்து, சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, குடந்தை, ஓசூர் எனப் பல இடங்களில் வெளியாரை வெளியேற்றக் கோரியும், மண்ணின் மக்களுக்கு மாநில அரசில் 100 விழுக்காடும், நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடும், தனியார் துறையில் 90 விழுக்காடும் வேலை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.

இவ்வாண்டின் (2019) தொடக்கத்தில் தொடர்வண்டித்துறையில் சென்னை பெரம்பூர், திருச்சி பொன்மலை, கோவை போன்ற இடங்களில் பழகுநர் பணிக்கும், நிரந்தரப் பணிக்கும் வேலைக்கு ஆள் சேர்த்தபோது 90 விழுக்காடு இடங்கள் வடவர்க்கும், வெளி மாநிலத்தவர்க்கும் தரப்பட்டது. அந்த அநீதியைக் கண்டித்தும், 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வலியுறுத்தியும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கக் கோரியும் கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை வாயில் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மறியல் போராட்டம் நடத்தியது. ஏராளமான இளைஞர்கள், அம்மறியலில் கலந்து கொண்டு கைதானார்கள்.

நமது போராட்டம் வீண்போகவில்லை! போராட்டம் நடைபெற்ற சில வாரங்கள் கழித்து 2019 மே 20 அன்று புதிதாக 510 பேரை வேலைக்கு எடுப்பதற்கான அறிவிப்பை சென்னை ஐ.பி.எப். தொழிற்சாலை வெளியிட்டபோது, அதில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்போருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதன் அடுத்தகட்டமாக, இப்போது சென்னை, திருச்சி, கோவை தொடர்வண்டித்துறை தொழிற்சாலைகளில் பழகுநர் வேலைக்கு (Act Apprentice) தென்னகத் தொடர்வண்டித்துறை உள்ள தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமே விண்ணப் பிக்கலாம் என்று 26.11.2019 நாளிட்ட புதிய அறிவிப்பை தென்னகத் தொடர் வண்டித்துறை வெளியிடடுள்ளது. நமது பேராட்டத்திற்குப் பலன் உண்டு என்பதற்கு இந்த மாற்றம் ஒரு அளவுகோல்!

தென்னகத் தொடர்வண்டித்துறையிலும் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டிக் கோட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தொடர்வண்டித்துறையை வலியுறுத்துகிறோம்! ஒருபடி முன்னேற்றம் என்ற வகையில் இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

வெளி மாநிலத்தவர்களே
திரும்பிப் போங்கள் – மனிதச் சுவர் போராட்டம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு வேலைகளுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை, வந்த வழியே திரும்பிப் போங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. இப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்!

பெருந்திரளாகத் தமிழர்கள் இந்த மனிதச் சுவர் போராட்டத்தில் பங்கேற்று, தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் தாயக உரிமையையும் பாதுகாக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, September 18, 2019

நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க நீலகிரியில் நேரில் கள ஆய்வு! பெ. மணியரசன்



நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை
தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க
நீலகிரியில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேரில் கள ஆய்வு!


தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரளா வழியாகச் சென்று கடலில் கலக்கும் பாண்டியாற்றின் நீரை, தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கும் பணிக்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் நீலகிரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரியில் கடந்த ஆகத்து மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பணிகள் வழங்கும் நிகழ்வில் 16.09.2019 அன்று மாலை பங்கேற்ற ஐயா மணியரசன் அவர்கள், நேற்று (17.09.2019) நீலகிரி மாவட்டத்தின் முகாமையான சிக்கல்கள் குறித்து ஆய்ந்தறிய பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மகளிர் ஆயம் தலைவர் திரு. ம. இலட்சுமி அம்மாள், தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, கூடலூர் த.தே.பே. தோழர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் வந்தனர்.
ஓய்வு பெற்ற மின்துறை கண்காணிப்பாளர் திரு. சி.ஆர். கிருஷ்ணன் மற்றும் மங்குலி கிராமம் திரு. எம்.எஸ். ஆண்டி ஆகியோர் தேவர்சோலையிலுள்ள பாடாந்துறை, வேடன் வயல் - செளுக்காடி, மங்குலி, கொங்கம்வயல், புத்தூர் வயல், மறுப்பமுடி மலை ஆகிய பகுதிகளுக்கு ஐயா மணியரசன் அவர்களை நேரில் அழைத்துச் சென்று அங்குள்ள நீர்நிலைகள் குறித்து விளக்கினர். மகிழுந்து பயணிக்க முடியாத பல மலைப் பகுதிகளுக்கு ஜீப்பில் சென்றனர்.
கூடலூரில் ஐயா பெ. மணியரசன் அவர்கள வரவேற்ற நாம் தமிழர் கட்சி கூடலூர் செயலாளர் திரு. கேத்தீசுவரன் தலைமையிலான தோழர்கள், ஓவேலி – சூண்டி பகுதி வழியாக சந்தனமலை சென்று எல்லமலையிலிருந்து பாண்டியாறு உருவாகும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஐயா பெ. மணியரசன் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தனர். கூடலூர் எழுத்தாளர் சி. கந்தையா அவர்கள் தாம் எழுதிய நூலை ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிப் பேசினார்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் அவர்களது தோழர்கள், நீலகிரி மாவட்டத்தின் சிக்கல்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்களையும், அரசுக் குறிப்பு ஆவணங்களையும் ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிக் கலந்துரையாடினார்.
பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்தும் வகையிலான விரிவான திட்டம் குறித்த ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT