உடனடிச்செய்திகள்

Friday, January 29, 2016

தழல் ஈகி முத்துக்குமார்க்கு வீரவணக்கம்!




சிங்கள – இந்திய கூட்டுப் படைகளால், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை எதிர்த்து, இந்திய அரசின் அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனில், சனவரி 29 – 2009 அன்று, கொளத்தூரைச் சேர்ந்த கு. முத்துக்குமார், தீக்குளித்து உயிரீகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த ஈகியரின் வீரவணக்க நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

தழல் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடமான சென்னை கொளத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் ஈகியர் நினைவுத் தூண் ஏற்படுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தும் ஏற்பாட்டை, இயக்குநர் த. புகழேந்தி ஒருங்கிணைப்பில், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு செய்து வருகின்றது. இவ் ஆண்டும், ஈகியர் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று(29.01.2016) காலை எழுச்சியுடன் நடைபெற்றது.

தழல் ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், தங்கை திருமதி. தமிழரசி கருக்குவேல்ராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், நடிகர் திரு. சத்தியராஜ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார், ஓவியர் வீரசந்தனம், பத்திரிக்கையாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட பலரும் வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், சென்னை த.இ.மு. செயலாளர் வெற்றித்தமிழன், பொழிச்சலூர் த.இ.மு. செயலாளர் தோழர் கவியரசன், பாவலர் முழுநிலவன், தோழர்கள் ஜீவாநந்தம், பிரபாகரன், வடிவேலன், நல்லசிவம், வினோத் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள், ஈகியர் நினைவுத் தூணுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

ஏழு தமிழர் விடுதலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கப் பதாகையில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கையெழுத்திட்டதோடு, எழுவர் விடுதலை குறித்து எழுதிய புத்தகத்தை திருவாட்டி. அற்புதம் அம்மையாரிடம் வழங்கினார்.


தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!

தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்! 







Monday, January 25, 2016

மொழிப் போர் 50 மாநாடு


“சனவரி 25-ஐ தமிழ்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்” மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் எழுச்சியுடன் நடத்திய மொழிப்போர்-50 மாநாடு!

1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர்-50” மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.



ஈகச்சுடரேற்றம்

மதுரை தமுக்கம் கலையரங்கில், நேற்று (24.01.2016) காலை 9.45 மணியளவில், மதுரை தமிழர் பண்பாட்டு கலைக்குழு போர்ப்பறை அதிர பேரெழுச்சி முழக்கங்களுக்கிடையே “மொழிப்போர் 50“ - மாநாடு தொடங்கியது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளருமான தோழர் இரெ. இராசு வரவேற்றுப் பேச, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முன்மொழிய, செந்தமிழ் அந்தனர் – முதுமுனைவர் இரா இளங்குமரனார் அவர்கள் மொழிப் போர் ஈகியர் வீரவணக்கச் சுடரை ஏற்றி வைத்தார்.

மையத்தில் சுடரை சூழ்ந்து மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள் உடன் நிற்க, அவர்களை பேரியக்கத்தின் செஞ்சட்டைத் தோழர்கள் சூழ அதன்பின் பின் உணர்வாளர்கள், அணிவகுக்க செஞ்சுடர் மிளிர்ந்தது. தோழர் நா. வைகறை மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி - எழுச்சி முழக்கங்கள் எழுப்ப அதனை அனைவரும் எதிரொளித்து வீரவணக்கம் செலுத்தினர்.

ஒளிப்படக்காட்சி

இதனையடுத்து, மாநாட்டுத் திடலில் மொழிப்போர் வரலாற்றை காட்சிப்படுத்தும் அரிய ஆவணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படக்காட்சியை, கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் மனைவி திருவாட்டி கமலம் அவர்கள் திறந்து வைத்தார்.

ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் தம்முடைய கணவர் தமிழ்ச் சான்றோர்கள், இனவுணர்வாளர்கள் முன்னிலையில் மொழிப்போர் மாநாட்டின் வாயிலாக நினைவுக் கூறப்படுவதை எண்ணி அப்பொழுது அவர் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார். முது வயதிலும் ஓடிச்சென்று அரங்கில் இருந்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் புகைப்படத்தை பார்த்து கைகூப்பி வணங்கினார். அவரைத் தொடந்து மொழிப்போர் ஈகியரது வாரிசுகளும், குடும்பத்தினர்களும் மொழிப்போர் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட வரலாற்றை பார்ந்து நெகிழ்ச்சியுற்றனர். தொடர்ந்து அவ்விடத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி இயக்கிய “மொழிப்போர்-1965” ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன் ஒளிப்பட அரங்கை நெறிப்படுத்தி, காலை முதல் மாலை வரை அங்கு வந்து பார்வையிட்ட பார்வையாளர்களிடம் கருத்துகள் பெற்றார். பலர் மொழிப்போர் ஈகியர் படங்களை தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்துச் சென்றனர்.

தொடக்க நிகழ்வு

இதனையடுத்து, மாநாட்டு அரங்கில் தமிழறிஞர் இரா.இளங்குமரனார், மாநாட்டுத் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “பல்வேறு வகையிலும் தமிழ்மொழி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நடுவணரசாலும், பன்னாட்டு நிறுவனங்களின் வணிகப் படையெடுப்பினாலும் மொழியின் இருப்பிற்கு குந்தகம் நேர்ந்துள்ளது. இந்தியைத் திணிக்க நடுவணரசு முயற்சி மேற்கொண்ட பொழுதெல்லாம் அதைத் தடுக்கச் சமர் புரிந்தவர்கள் மாணவர்கள்தான். மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட தீவிர மொழிப்போரின் காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகள் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பாராட்டிற்குரியதாக இல்லை. மொழி என்பது ஓரினத்தின் அடையாளம் என்பதால்தான் அண்டை மாநிலங்கள் அனைத்தும் தத்தமது மொழியின் மீது தீவிரமான பற்றும், பாசமும் கொண்டு இயங்குகின்றன. அந்த நிலை தமிழகத்திலும் தோன்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். ஐயா இளங்குமரனார் அவர்களுக்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.

“மொழிப்போர்“ – கருத்தரங்கு

இதனையடுத்து, பேரியக்கத்தின் மதுரை தோழர் மூ. கருப்பையா முன்னிலையில்,நடைபெற்ற “மொழிப்போர்” கருத்தரங்கில், முனைவர் ம.இலெ.தங்கப்பா, “மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்-1916” குறித்தும், முனைவர் த.செயராமன் “1938-மொழிப்போர்” குறித்தும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ”1965ஆம் ஆண்டு மொழிப்போர்” குறித்தும் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர்.


கண்கவர் கலை நிகழ்வு

இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் பிற்பகல் அரங்கின் துவக்கமாக மதுரை - தமிழர் பண்பாட்டுக் கலைக் குழுவினரின் கண்கவர் தமிழர் வீரக்கலைகள் அரங்கேறியது. முதலாவதாக அக்கலைக் குழுவினரின் பறை இசை முழங்க சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கயிறேற்றம், யோகக் கலைகளை காண்போரைக் கண்கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியினரின் சிலம்பக்கலை அரங்கேறியது. சிலம்பச்சண்டை, தீச்சிலம்பம் தமிழரின் வீரக் கலையை பறைசாற்றியது.

சூடேற்றிய “இளந்தளிர் அரங்கு”

கலை நிகழ்ச்சிகளுக்கு அடுத்து மாணவ மாணவியர் பங்கேற்ற இளந்தளிர் அரங்கம் நடைபெற்றது. அரங்கத்தை தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் குடந்தை இரா.அருள் தலைமையேற்று நடத்தினார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நெறிப்படுத்தினார். ஓசூர் தமிழ்மாறன் ”தமிழரின் அடையாளம்” என்ற தலைப்பில் ஆற்றிய ஆற்றல் மிகு உணர்ச்சி உரை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவரைத் தொடர்ந்து, “தமிழன் எழவேண்டும்” என்ற தலைப்பில் ஓசூர் நிகரன், ”தமிழ் மொழிக்கு வீரவணக்கம்” என்ற தலைப்பில் சென்னை வெ.சரண்யா ஆகியோர் பேசினர். மழலை மு. இனியனின் மழலைப்பாடல் அரங்கேறியது. இளந்தளிர் அரங்கில் பங்கேற்ற இளந்தளிர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு செய்து வாழ்த்தினார்.

உணர்ச்சி கொள்ளச் செய்த பாவரங்கம்

அதன்பின், “இனத்தை செய்தது மொழிதான்” என்றத் தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர் இன்குலாப், காணொளி மூலம் பாவீச்சு நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, பாவலர்கள் செம்பரிதி, இராசாரகுநாதன், கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் பாவீச்சால் அரங்கத்தை உணர்ச்சி கொள்ளச் செய்தனர். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா நிகழ்வை நெறிப்படுத்தினார்.

“வளர்தமிழ்“ – கருத்தரங்கு

இதனையடுத்து, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை தலைமையில் “வளர்தமிழ்” அரங்கு நடைபெற்றது. தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணிய சிவா முன்னிலை வகித்தார். “கலைச் சொல்லாக்கம்” என்ற தலைப்பில் முனைவர் இராம. சுந்தரம், “கல்வித்தமிழ்” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா. கல்விமணி, “நாடகத்தமிழ்” என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் முனைவர் மு. இராமசாமி, “இசைத்தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் இராச. கலைவாணி, “இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஆழி. செந்தில்நாதன், “தொடர்பியல் தமிழ்” என்ற தலைப்பில் பொறியாளர் க. அருணபாரதி ஆகியோர் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து அவரவர் துறை சார்ந்த முன்னேற்றங்களையும், அதில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினர்.

பாராட்டரங்கம்

அடுத்ததாக, மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர் மற்றும் தமிழை வழக்கு மொழியாக்கப் போரடிய போராளிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுக்கு சிறப்பு செய்யும் “பாராட்டரங்கம்” நடைபெற்றது. அரங்கிற்கு, இயக்குநர் வ. கவுதமன் தலைமையேற்றார். பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் முதன் முதலில் தீக்குளித்து உயிரீகம் செய்த ஈகி கீழப்பழுவூர் சின்னச்சாமியின் மனைவி திருவாட்டி. கமலம், மகள் திராவிடச்செல்வி, விராலிமலை சண்முகத்தின் அண்ணன் திரு. மாணிக்கம் உள்ளிட்ட மொழிப்போர் ஈகியரின் குடும்பத்தினரும், மறைமலையடிகள் பெயரன் திரு. தி. தாயுமானவன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகனார் திரு. கி.ஆ.பெ.வி. கதிரேசனார், ‘தூயதமிழ்க்காவலர்’ அண்ணல் தங்கோவின் பெயரர் திரு. செ. அருட்செல்வன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் புதல்வர் திரு. மா.பூங்குன்றன், தமிழறிஞர் சி. இலக்குவனாரின் புதல்வர் திரு. திருவள்ளுவன், இந்தி எதிர்ப்புப் போராளி - ‘சன்டே அப்ஸர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரன் திரு. தியாகராசன் உள்ளிட்டோரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகப் போராடி சிறைபட்ட வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட வழக்குரைஞர்களும் பாராட்டப்பட்டனர்.

தொழில் முனைவோர் திரு. சே.அண்ணாதுரை, பெங்களூர் திரு. த. விசயன், திருச்சி திரு. து,இரவி ஆகியோர் போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறப்புச் செய்தனர். திரு. மா.பூங்குன்றன், திரு. திருவள்ளுவன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

குறும்படப்போட்டியில் வென்றோருக்குப் பரிசு

மாநாட்டையொட்டி நடைபெற்ற குறும்படப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் பி.ஆர். சுதர்சன் (படம்: என் தமிழ்), இரண்டாம் பரிசு பெற்ற மதுரை அரசு இசைக்கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் பூ. பத்திரகாளி (படம்: அமுது), மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி இளைஞர் விவேக் நிவநேசா (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கவுதமன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

மேலும், சென்னை ஊரப்பாக்கம் உமா கார்க்கி (படம்: திவாகரின் கனவுகள்), விழுப்புரம் அருண் காமராஜ் (படம்: தமிழ் மக்கள் அடையாளம்), திருவாடூர் பள்ளி மாணவர் குறள்மகன் (படம்: திருக்குறள்), மதுரை அருளானந்தர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி எஸ். சோனியா (படம்: நிலவில் தோன்றிய இருள்), மாணவி எஸ். சுகன்யா (படம்: உதிரும் மொட்டுகள்), திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி மாணவர் தமிழ்பாரதன் (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆன்மிகம் வளர்த்த தமிழ்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் நான்காம் அமர்வாக “ஆன்மிகம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ஆன்மிகப் பெரியோர் உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இவ் அரங்கில், “சைவநெறி வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார், “கிறித்துவம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் அருட்தந்தை அமுதன் அடிகள், “இஸ்லாம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் மு. அப்துல் சமது ஆகியோர் அவரவர் சமயநெறி சார்ந்து தமிழ் மொழி வளர்ச்சி குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.

மாநாட்டில், சனவரி 25 – தமிழ் மொழி நாளாகத் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும், மொழிப்போர் வரலாறு, பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தித் தர வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மூ.த. கவித்துவன், ம. இலட்சுமி, இரா. இளங்குமரன், மதுரை தோழர் கதிர்நிலவன் ஆகியோர் முன்மொழிய தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க. முருகன், க. விடுதலைச்சுடர், ப. சிவ வடிவேல், மு. தமிழ்மணி, க. பாண்டியன், இலெ. இராமசாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன், ச. பிந்துசாரன், க. விசயன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

நிறைவாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவரங்கிற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் பே. மேரி முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில், “தாய்மொழிக்காக பல நூறு உயிர்களை ஈந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனங்கள் உலகில் வேறெங்கும் இல்லை. 1965ஆம் ஆண்டு மொழிப்போரில், பொள்ளாச்சியில் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் இல்லை. தற்போது தமிழ்நாடெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நினைவிடங்கள், மொழிப் போர் ஈகியரின் நண்பர்கள், குடும்பத்தினர் எழுப்பியவை. அவை அரசு எழுப்பியவை அல்ல என்பது வேதனை தரும் உண்மை.

அயல்மொழிகளான இந்தியும் சமற்கிருதமும் பல்வேறு வகையில் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மொழிக்காக உயிரீகம் செய்த முன்னோடிகளின் வரலாற்றை நம் இதயத்தில் ஏந்துவது இன்றைய இளைஞர்களின் கடமையாகும். எனவே, மொழிப்போர் குறித்த வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழியைக் காப்பதற்கென்று கன்னட அதிகாரம் என்ற அமைப்பு செயல்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் அதிகாரம் மிக்க தமிழ் வளர்ச்சி ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அனைத்து மட்டத்திலும் தமிழே ஆட்சி, அலுவல், கல்வி, வழிபாடு, பண்பாட்டு மொழியாகத் திகழ்வதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாளை மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம். இந்நாளை, இனி நாம் “தமிழ் மொழி நாள்“ என்று அறிவித்து கடைபிடிக்க வேண்டும். இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தின் வரலாற்றை வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்வதோடு, தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசே எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மாநாட்டின் நிறைவில் மதுரை தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.

மாநாட்டு நிகழ்வுகள் கண்ணோட்டம்.காம், அகரமுதல.இன் உள்ளிட்ட இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகின. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் பா. ஸ்டாலின், குடந்தை செழியன், பொன். மணிகண்டன் உள்ளிட்ட பேரியக்க இணையக்குழுவினர் இணைய ஒளிபரப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

நிகழ்வில், தமிழ்நாடெங்கிலுமிருந்து பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் வாகனங்கள் எடுத்து வந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.



Friday, January 8, 2016

முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!
 
தஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு! 
 

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தும், கேரளா சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாக்கியும் அடாவடித்தனம் புரிந்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என 2011ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் நாள், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) எழுச்சியுடன் நடத்தியது.

சென்னை, குடந்தை, ஒசூர், கோவை ஆகிய இடங்களில் மலையாள ஆலுக்காஸ் உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டு, பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சையில் மலையாளக் கடைகளை முற்றுகையிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் ஆ. அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய தோழர்கள், திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் பிணையில் விடுதலையாகி, தஞ்சை மாவட்ட - கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணையில் பங்கேற்றனர். இன்று காலை வழங்கப்பட்டத் தீர்ப்பில், தோழர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் விடுதலையான தோழர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று வாழ்த்தினார். தோழர்களுக்காக வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் மு. கரிகாலன், சிவராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Thursday, January 7, 2016

மதுரையில் மொழிப் போர் - 50 மாநாடு

மேலும்..

Monday, January 4, 2016

தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


செய்தியாளர் சந்திப்பில் - தமிழர் எழுவர் கூட்டியக்கம் - கோரிக்கை முன்வைப்பு!


இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாக விளங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் - சாந்தன் - முருகன் - நளினி - இராபர்ட் பயஸ் - இரவிச்சந்திரன் - ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களையும், சனவரி 17 அன்று தொடங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161-இன்படி தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டுமென “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” கோரிக்கை வைத்துள்ளது.

அண்மையில் கடந்த 02.12.2015 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு விதி 161ன் படி மாநில அரசு விடுதலை செய்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெளிவுபடுத்து விட்டது என்பதையும் கூட்டியக்கம் எடுத்துக் கூறியது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” சார்பில், இன்று (04.01.2015) காலை, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வை, திரு. வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் தோழர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. வியனரசு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசே!

24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


இதே போல் நீண்ட நாள் சிறையில் வாழும் சிறையாளிகளையும் விடுதலை செய்க!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT