உடனடிச்செய்திகள்

Sunday, August 26, 2018

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன்.

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி திடீரென்று ஆகத்து 15, 16 நாட்களில் அதிக அளவில் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு வெளியிலும் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கைகள் கொடுத்து வருகிறது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது.

தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் உறுதி மனு (Counter Affidavit) தகர்த்துள்ளது.

வெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்திற்குப் போன ஆகத்து 14 முதல் 19 வரையிலான ஆறு நாட்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 ஆ.மி.க. (டி.எம்.சி.). இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 ஆ.மி.க. மட்டுமே!

இடுக்கி – இடமலையாறு நீர் 29.35 ஆ.மி.க. மிகக் குறைவாக 6 நாட்களில் திறந்துவிட்ட 6.65 ஆ.மி.க. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

ஆகத்து 15 அன்று 12 ஆயிரம் கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. திடீரென்று பெருவெள்ளம் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாட்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் தான் மேற்படிப் பொய்க் கூற்றில் பல் இளிக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

Friday, August 24, 2018

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பேரழிவால், அதன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கும் உயரத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்கவும், அவ்வணையில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரத்தை புதியதொரு மேலாண்மைக் குழுவிடம் ஒப்படைக்கவும் கேரள அரசு குறுக்குவழியில் சிந்தித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது.

கேரளத்தைச் சேர்ந்த இரசல் இராய் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தைக் குறைத்தால்தான் கேரளம் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று உள்நோக்கத்துடன் கூடிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் விசாரணையின் போக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழ்நாட்டுத் தரப்பின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, “தமிழ்நாடு அரசு மனச்சான்றுக்கு அஞ்சி நீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அப்பொழுது காணொலி மூலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் கொடுத்த அறிக்கையில், “காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமையை வெட்டிக் குறைத்து – குறைப்பிரசவம் போல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையிலும் கை வைக்கிறாரே!” என்று கவலை தெரிவித்திருந்தேன்.

அடுத்து, நடுவண் நீர்வளத்துறை தலைவர் யு.பி. சிங் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 139.99 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கியுள்ள செய்தி இன்று வந்துள்ளது. இதே யு.பி. சிங்தான், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு கூறிய “ஒரு செயல்திட்டம்” என்பது “மேலாண்மை ஆணையத்தை” குறிக்காது என்று முதன் முதலில் “விளக்கம்” கூறியவர் என்பது கவனத்திற்குரியது! தமிழ்நாட்டிற்கெதிரான அதே மனநிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் உயரம் தொடர்பாகவும் அவர் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள அரசு நேற்று (23.08.2018) அபாண்டமான ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மனித உயிர்களும், பொருட்களும் சேதமானதற்கு முதன்மையான காரணம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசு திடீரென்று திறந்துவிட்ட பெரு வெள்ளம் தான் என்று கூறியுள்ளது.

அவர்களின் கூற்றுக்கு சான்றில்லை என்றாலும், அவர்கள் வாதத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொண்டால் கூட ஆகத்து 15 அன்று 9,000 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளத்தின் வெள்ளப்பேரழிவு ஆகத்து 8ஆம் நாள் வாக்கிலேயே தொடங்கிவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விட்ட 9,000 கன அடி நீர் இடுக்கி அணைக்குச் சென்று, அதன் மதகுகள் வழியே வெளியேற வேண்டும். 70.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் வடிகாலுக்கு 9,000 கன அடி நீர் அபாயமான அளவா?

கர்நாடக அரசு முன் கூட்டியே தெரிவிக்காமல், திடீர் திடீரென்று 2 இலட்சம் கன அடி – இரண்டரை இலட்சம் கன அடி என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. அதற்காகக் கர்நாடக அரசைத் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டவில்லை!

அடுத்ததாக, 21,450 கன அடி தண்ணீர் திறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீர்தான் இவ்வளவு பேரழிவிற்குக் காரணமா? இடுக்கி அணை உட்பட 80 நீர்த் தேக்கங்களிலிருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. இந்த உண்மையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தக்கவாறு எடுத்துக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகத்து 16 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய விடை மடலில், இரண்டு துயரச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று, அணைக்கு முன்பாக உள்ள நீர் வரத்துப் பகுதியில் நீர் வரும் அளவு எடுப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை கேரள அரசு அனுமதிக்கவில்லை என்பது. இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் யானை ஒன்று இறந்ததை சாக்காக வைத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு அன்று துண்டித்த மின் இணைப்பை இன்றுவரை கொடுக்க மறுப்பது. இவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணையில் அனைத்துப் பணிகளும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் செயல்படுகின்றன என்பது வேதனை அல்லவா!

மின் இணைப்புக் கட்டுமானத்திற்காக கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையிலும், மின் இணைப்பு கொடுக்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார்.

இன்று (24.08.2018) உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் எந்தப் பகுதியையும் செப்பனிட்டு வலுப்படுத்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கிறது என்ற உண்மையைக் கூறியுள்ளது.

அத்துடன், கேரள அரசு கெட்ட நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதுபோல் முல்லைப் பெரியாறு அணை திறப்பினால்தான் கேரளத்திற்கு இவ்வளவு பெரிய வெள்ளமும், இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டுகிறது என்று தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2014இல் வழங்கிய தீர்ப்பில், முதல் கட்டமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்று கேரள அரசு முனைகிறது. இதில் வெற்றியடையா விட்டால், கேரள அரசு புதிய அரசமைப்பு ஆயம் கோரவும் கூடும்!

கேரள அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தக்க முறையில் எதிர்வினையாற்றி வருவது வரவேற்கத்தக்கது! அதேவேளை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த வழக்கின் ஊடாக, முல்லைப் பெரியாறு அணையின் சிற்றணைப் பகுதியில் அணையை வலுப்படுத்துவதற்குரிய கட்டுமானப் பணிகளை செய்வதற்கு புதிய ஆணை ஒன்றைப் பெற்றாக வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு (பணத்திற்குத்தான்) கொடுக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறைத் தலைவரின் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைத்து, அது தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது! 06.09.2018 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தகுந்த வழக்கறிஞர்களை வைத்து, கேரளத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Tuesday, August 14, 2018

ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன்.


ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன் - பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

மோடி அரசு “வெள்ளை” என்று ஒரு பொருளைச் சொன்னால் அது “கருப்பு” என்று புரிந்து கொள்ள வேண்டும். “கூட்டுறவுக் கூட்டாட்சி” என்று சொன்னால் ஆதிக்க ஒற்றை ஆட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இப்போது உயர்கல்வி நிர்வாகத்துக்கு “கூடுதல் தன்னாட்சி” என்ற முழக்கத் தோடு மாநில அரசுகளின் அதிகாரத்தையும், பல்கலைக் கழகங்களின் நிர்வாக உரிமையையும் பறிக்கும் உயர்கல்வி ஆணையத் தைத் திணிக்கிறது பா.ச.க. அரசு.

தமிழ்நாட்டு கல்வியாளர்கள், மாணவர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் முனைப்பான எதிர்ப்பால் மோடி அரசு தான் முன்வைத்த “புதிய கல்விக் கொள்கை” ஆவணத்தை வலியுறுத்தாமல் நிறுத்தி வைத்தது. வந்த ஆபத்து நீங்கியதாக பலரும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், இக்கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு அனுப்பியும் ஒப்புதல் பெறாமலேயே, அதன் வெவ்வேறு கூறுகளை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.

அச்சதியின் ஒரு பகுதியாக இப்போது நடப்பில் உள்ள பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு அதற்கு பதிலாக “உயர்கல்வி ஆணையம்” (Higher Education Commission) என்ற ஒன்றை நிறுவ முயல்கிறது.

இதற்காக “இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம், 2018 (பல்கலைக் கழக நல்கைக் குழுச் சட்டம் - 1956 நீக்கம்)” (Higher Education Commission of India Act - 2018, Repeal of University Grants Commission Act -1956) என்ற பெயரில் புதிய சட்ட வரைவை நாடாளுமன்ற மக்கள வையில் முன்வைத்துள்ளது.

இச்சட்ட வரைவை முன்வைத்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவ்டேகர் “குறைந்த அளவு அரசின் குறுக்கீடு நிறைந்த அளவு நிர்வாகச் செயல்பாடு” (Less Government, More Gover nance) என்ற நோக்கத்தில் இச்சட்டம் கொண்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் இச்சட்டத்தின் கூறுகளைக் கூர்ந்து கவனித்தால் இந்திய அரசின் மிகக் கடுமையான சர்வாதிகாரப் பிடி உயர்கல்வித் துறையில் இறுகுவதற்கே இது கொண்டுவரப்படுகிறது என்பது புரியும்.

நடப்பில் உள்ள பல்கலைக் கழக நல்கைக் குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் கல்வித் தரத்தை மதிப்பிட்டு, புதிய படிப்புகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குவதோடு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கைகளை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி ஆணையம் நிதி வழங்குவது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம். அமைச்சரகம் தான் பல்கலைக் கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யும்.

யு.ஜி.சி. பெருமளவு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையம் முற்றிலும் இந்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிருவாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. கூடுதல் தன்னாட்சி வழங்குவது என்று சொல்லிக் கொண்டே தனது அதிகாரப்பிடியை இந்திய அரசு இறுக்கியுள்ளது.

உயர்கல்வி ஆணையத்தை நிறுவும் முறையிலும், அந்த ஆணையத்தின் அன்றாட நிர்வாகத்திலும் இந்திய அரசின் கை மேலோங்கி இருக்கும் வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஆணையம் என்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பொம்மையாக மாற்றப்படுகிறது.

உயர்கல்வி ஆணையத்திற்கு ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், பன்னிரெண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களை அமர்த்துவதற்கு அமைச் சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு தேடுதல் மற்றும் அமர்த்துதல் குழு அமைக்கப்படும். இத்தேடுதல் குழுவில் உயர்கல்விச் செயலாளரும், மூன்று புகழ் வாய்ந்த கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது. (இச்சட்டத்தின் பிரிவு 3(6))

“புகழ்வாய்ந்த கல்வியாளர்கள்” என்ற பெயரில் ஆளுங் கட்சிக்கு நெருக்கமானவர்களே அமர்த்தப்படுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த வகையில் ஆணைய மானது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் வகையில் இச்சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக சிறந்த கல்வியாளர் (Eminent Acadamician) அமர்த்தப்படுவார். அவர் இந்திய குடிமகன் - குடிமகளாகவோ அல்லது வெளி நாடு வாழ் இந்தியராகவோ இருக்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வகையிலும் தனது ஆட்களைக் கொண்டுவர பா.ச.க. திட்டமிடுகிறது.

ஆளும் பா.ச.க.விற்கு வேண்டிய ஆர்.எஸ்.எஸ்.காரரே ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என்பது திண்ணம். ஏற்கெனவே உயர்கல்வி நிறுவனங்களிலும், உயர் ஆய்வு நிறுவனங்களிலும் தலைவராக ஆர்.எஸ்.எஸ். ஆட்களே நிரப்பப்படுவதை காண்கிறோம்.

ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 3 பேர் இந்திய அரசின் துறைச் செயலாளர்களாக இருப்பர். ஒருவர் உயர்கல்வித் துறைச் செயலாளர், இன்னொருவர் திறன் மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர், மற்றொருவர் அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் (AICTE) தலைவர், தேசிய ஆசிரியர்க் கல்விக் கழகத் (NCTE) தலைவர் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பர்.

யு.ஜி.சி.க்கு அடுத்து ஏ.ஐ.சி.டி.இ, என்.சி.டி.இ, ஆகியவை கலைக்கப்பட போகின்றன என்பதற்கான அறிகுறி இது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரி களின் தரங்களை மதிப்பிடும் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்திலிருந்து (NAAC) இருவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர்.

இதுவரை கல்வி நிறுவனங்கள் தாங்களாக விரும்பி தேசிய தர நிர்ணயக் குழுவிடம் மனு அளித்து தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறுவார்கள். பல தனியார் நிகர் நிலை பல்கலைக் கழங்களும், கல்லூரிகளும் கையூட்டு செலவு செய்து இந்த மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை.

ஆணையத்தின் உறுப்பினர்களாகவே தர மதிப்பீட்டுக் கழகத்தினர் ஆக்கப்பட்டிருப்பதும் 8(1), தர மதிப்பீட்டை தொடர் செயல்பாடாக மாற்றியிருப்பதும் 15(3)(மீ) உயர் கல்வியைக் கார்ப்பரேட்மயம் ஆக்குவதற்கான மோடி அரசின் திட்டமிட்ட சதியாகும்.

பெரிய தொழில் அதிபர் ஒருவர் (Doyen of Industry) ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார் என இச் சட்ட விதி 8 (1) கூறுகிறது. இதுவும் கல்வியை பெருங்குழு மங்களிடம் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

கல்வி நிர்வாகம் தொடர்பான இந்த உயர்கல்வி ஆணையத்தில் இரண்டு பேர் மட்டுமே பல்கலைக் கழக பேராசிரியர்களாக இருப்பார்கள் என இச்சட்ட விதி கூறுவதிலிருந்தே இந்த ஆணையத்தின் தரம் தெளிவாகும்.

வெறும் கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை அமைத்த பிறகும் பா.ச.க அரசின் அதிகாரப் பசி அடங்கவில்லை.

இந்த ஆணையத்திற்கு வழிகாட்டும் அமைப்பாக ஒரு மதியுரை மன்றம் (Advisory Council) இருக்கும் என்றும், இந்த மன்றம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் இயங்கும் என்றும், இம்மன்றத்தின் வழிகாட்டுதலின் படி தான் உயர்கல்வி ஆணையம் செயல்பட வேண்டும் என்றும் இச்சட்டவிதி 24 கூறுகிறது.

அது மட்டுமின்றி உயர்கல்வி தொடர்பான நடுவண் அரசின் கருத்துகளை ஆணையம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், எது வொன்று குறித்தும் நடுவண் அரசின் கருத்தே இறுதியான தென்றும் இச்சட்டம் கட்டளையிடுகிறது. (விதி 25)

உயர் கல்வியை ஆரியமயமாக்குவதற்கும், இந்திய மயமாக்குவதற்கும், மாநில அரசுகளின் அரைகுறை உரிமைகளை முற்றிலும் துடைத்து அழிப்பதற்கும் இந்த சட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ஆணையத்தின் தர மதிப்பீட்டை பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கே நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று ஆணையத்தின் பணிகளை வரை யறுக்கும் விதி 15 வலியுறுத்துகிறது. இதன் மூலமும் பெருங்குழும கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதி நல்கைக் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.

இன்னும் தொடங்கப்படாத அம்பானியின் ஜியோ உயர்கல்வி நிறுவனத்திற்கு “உயர் தகுதி நிறுவனம்” (Institute of Excellence) என்ற தகு நிலை அளித்து 1,000 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்த அரசுதான் மோடி அரசு என்பதைக் கவனத்தில் கொண்டால் உயர்கல்வி ஆணையச் சட்டம் எந்த நோக்கத்திற்காக பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதற்கும் ஒரே வகை பாடத்திட்டம் இருக்க வேண்டும் என இச்சட்ட விதி 15 வரையறுக் கிறது. இதன் மூலம் பாடத்திட்ட வரையறுப்பிலிருந்து மாநில அரசுகள் முற்றிலும் வெளியே வைக்கப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மாநில மொழியிலோ, மாநிலத்தின் தனித் தன்மையைக் கருத்தில் கொண்டோ அமைய முடியாது என்று ஆக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் விதி 20 ஒழுங்குமுறை அதிகாரம் அனைத்தையும் உயர்கல்வி ஆணையத்திற்கு வழங்கு கிறது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களின் அரைகுறை தன்னாட்சியும் பறிக்கப்படுகிறது.

கல்வி என்பது அந்தந்த மாநிலத் தன்மையில் இருந்து பன்மையோடு விளங்குவதும், உயர்கல்வி நிறுவனங்கள் பல்வேறு கருத்துகளின் விவாதக் களமாக இருப்பதும் அவை கல்வி நிறுவனங்களாக இருப்பதற்கு அடிப்படைத் தேவையாகும். இச்சூழல் அமைந்தால் தான் சுதந்திர சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் முகிழ்த்து எழும் களமாக கல்வி நிறுவனங்கள் அமையும்.

யு.ஜி.சி.யின் அறிவிக்கப்பட்டக் கொள்கைக்கு ஏற்ப அந்த அமைப்பை சீர்திருத்தம் செய்தால் போதுமானது. அதன் குறைபாடுகளைக் காரணம் காட்டி அதனைக் கலைப்பது, நோயைக் காரணம் காட்டி நோயாளியைக் கொல்லும் செயலாகும். ஏனெனில் முன்மொழியப் பட்டுள்ளது. உயர் கல்வி ஆணையம் நோய் தீர்க்கும் மருந்தல்ல, நோயாளியைக் கொல்லும் நஞ்சு.

இந்த ஆணையச் சட்டம் செயலுக்கு வருமானால் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் நுட்பப் பணியாளர்களை உற்பத்தி செய்யும் தொழில் பட்டறையாக கல்வி நிறுவனங்கள் மாறிப்போய் விடும்.

ஆரியமயமான, ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னலின் தலைமைப் பொருளியல் அடியாள் மோடி விரும்புவது அதுதான்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகத்து 1 - 15, 2018)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, August 12, 2018

இலண்டனில் சீக்கியர் ஒன்றுகூடல்!

இலண்டனில் சீக்கியர் ஒன்றுகூடல்!
சீக்கியர்கள் முன்னெடுக்கும் 
பஞ்சாப் பொது வாக்கெடுப்பு 2020 
- இலண்டன் பிரகடன நிகழ்வுக்கு, 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 
உறுதிமிக்க ஆதரவைத்
தெரிவித்துக் கொள்கிறது!

சீக்கியர்களின் தேசிய இன விடுதலைப்
போராட்டத்திற்கு தமிழர்கள்
ஆதரவளிப்போம்!

All Peoples have the
Right to SELF - DETERMINATION !

We Tamizh Thesiya Periyakkam (TTP) 
extend our grateful support to the 
LONDON DECLARATION on
PUNJAB REFERENDUM 2020 !

#KhalistanReferendum 
#Tamils4Khalistan
#TNforKN

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்:www.tamizhdesiyam.com

Friday, August 10, 2018

தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்! 
#ReleaseThirumurugan

மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று (09.08.2018) பெங்களுரு வானூர்தி நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைக்க சென்னை கொண்டு வந்திருப்பது முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கும் எதிரான செயலாகும்! இச்செயல் சனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழின உரிமைகளுக்கும் எதிரானது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்திய மக்கள் மீது மனிதவேட்டை நடத்துவது போல், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக் கொன்றும், சற்றொப்ப 80 பேருக்கு படுகாயங்களை உண்டாக்கியும் தமிழ்நாடு காவல்துறை வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த மனித உரிமை மீறலையும், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தோரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் சனநாயக விரோதப் போக்கையும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி எடுத்துக்கூறி, நீதிகேட்டதுதான் அவர் செய்த “குற்றம்” !

ஐ.நா. மன்றத்தின் சட்டதிட்டங்கள்படி ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதற்கு மனித உரிமை மன்றம் வாய்ப்பளிக்கிறது. ஐ.நா. மன்றத்தின் இச்சட்டம் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தின்படிதான் திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மேற்படி உரையை மே பதினேழு இயக்கத்தினர் தங்களின் முகநூலில் வெளியிட்டார்கள் என்றும், அதைப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

அண்ணா தி.மு.க.வினர் புகார் அளித்திருப்பதால், திருமுருகன் காந்தி பேச்சு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் என்று கருதி, அவரைக் கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். திருமுருகன் காந்தி பேச்சால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறும் காரணம், எவ்வளவு போலியானது – புனைவானது என்பது எல்லோருக்கும் புரியும்! அவர் ஐ.நா. அவையில் பேசிவிட்டு வந்த, இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அவரால் எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழவில்லை! இது ஒரு அடிப்படையற்ற கற்பனை என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானால் யார் மீதும் பொய் புகார் கொடுக்கலாம், அந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் என்ற நிலை ஏற்படும்!

தமிழ்நாடு அரசு நடுவண் அரசின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி கைது! இச்செயல்களால் தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சனநாயக உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் குடிமை உரிமைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பணயக் கைதிகள் போல், மக்களை தன் ஏவலுக்கும் கண்காணிப்புக்கும் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முனைகிறது.

எனவே, மக்கள் உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் சனநாயக உரிமைகளை மீட்கவும், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் திரள் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது.

தமிழ்நாடு அரசு, தனது சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும், தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

#ReleaseThirumurugan

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, August 9, 2018

இந்தியத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் இருக்கிறதா? அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி. தோழர் பெ. மணியரசன்.

இந்தியத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் இருக்கிறதா? அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி. தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
“தினமணி” நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு” என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை” என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை” என்றும் எழுதியுள்ளார்.

அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள்! தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாததுதான்!

இதோ காலஞ்சென்ற பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறுகிறார் :

“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது”.
- தெய்வத்தின் குரல், பாகம் – 1, பக்கம் 267.

மேலும் சொல்கிறார் :

“எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியதேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.
- அதே நூல், அதே பக்கம்.

பழங்காலத்தில் “பாரததேசம்” என்ற பெயரில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு தேசமாக இருந்ததாக ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதற்கான இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை!

இன்று இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பகுதியில் பழங்காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாக “மகாபாராதம்” கூறுகின்றது.

1918இல் வெளிவந்த, “புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்” என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.வி. ஜகதீச ஐயர், 56 தேசங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், குருதேசம், சூரசேனதேசம் என்று தொடங்கி 56 ஆவது தேசமாக கர்னாடக தேசம் குறிப்பிடப்படுகிறது. அந்த 56இல் சீனதேசம், பாஞ்சாலதேசம், பாரசீக தேசம், காந்தார தேசம், காம்போஜ தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம் போன்றவை இருக்கின்றன. ஆனால், பாரததேசம் என்பது இல்லை!

வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனி – தான் கைப்பற்றிய தனித்தனி நாடுகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முதல் முதலாக 1773-இல் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) இயற்றியது. அதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ அல்லது பாரதம் என்ற பெயரிலோ இந்த நிலப்பகுதி ஒரே நாடாக – ஒரே தேசமாக இருந்ததே இல்லை! வெள்ளைக்காரர் உள்ளிட்ட மேற்கத்தியர் சிந்து ஆற்றின் பெயரை அடையாளமாகக் கொண்டுதான் இந்தியா, இந்து என்ற பெயர்களை உருவாக்கினார்கள்.

இலக்கியங்களில் தமிழ்நாடு
---------------------------------------------
தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்பு இல்லை என்கிறார் அர்ஜூன் சம்பத். இதோ இருந்ததற்கான சான்றுகள் :

“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…” – புறநானூறு, 168.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..” – அகநானூறு, 227.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..” – பரிபாடல், 410.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..” – சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.

“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..” – கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்” – சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.

“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு” – பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.

தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார்.

“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார்.

உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார்.

தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது.

“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து” – புறம், 19.

தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது.

“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.

அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப் பட்டார்.

எனவே இலக்கியங்களில் தமிழர் என்ற இனம் குறிக்கப்படவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறுவது சரியன்று!

தேசிய இன வரையறை
--------------------------------------
“வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் தேசிய இனம் அமையாது” என்கிறார் அர்ஜூன் சம்பத். ஆனால், இவர் சார்ந்துள்ள இந்துத்துவா அமைப்பு இல்லாத இந்தியத்தேசிய இனத்திற்கு இந்தி மற்றும் சமற்கிருதம் இரண்டையும் ஏற்றாக வேண்டும் என்று நிபந்தனை போடுகிறது. இனம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை உருவாவதற்கான முதன்மைக் கூறு தாய்மொழி! கிரேக்கர், ஆங்கிலேயர், பிரஞ்சியர், சப்பானியர் போன்ற தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின. அர்ஜூன் சம்பத் சொல்வதுபோல், மொழி வெறும் கருவியன்று!

தாய்மொழி, தாயகம், பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டு, வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் “நாம் ஓரினம்” என்ற மனப்பாங்கு வளரப் பெறுகின்றனர். இதற்கு முன் நிபந்தனையாக இனக்குழு (Ethinicity) மரபு உருவாகிறது. இனக்குழு மரபிலிருந்து ஒரு மூல மொழி தொடர்கிறது. தமிழர்களுக்கு மூலமொழியாகவும் (Dialect) வளர்ச்சியடைந்த பொது மொழியாகவும் (Standard Language) இருப்பது தமிழே!

தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுடன் தனித்தனி தேசங்கள் அமைவது 18 – 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதனால், தேசிய இன உணர்வே அதன்பிறகுதான் உருவானது என்று கொள்ளக் கூடாது. யூதர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்தது. தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்ததால்தான், இன அடிப்படையிலான தாயக எல்லையாக வடவேங்கடம் குமரிமுனை இடையிலுள்ள தமிழ் பேசும் பகுதியை தொல்காப்பியம் பாயிரத்தில் பணம்பாரனார் கூறினார். அதேபோல், தமிழகம் – தமிழ்நாடு – தமிழர் என்ற இன உணர்வு வெளிப்பாடுகள் சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்களுக்குத் தொடர்கிறது.

மதம் ஒரு தேசியத்திற்கோ அல்லது தேசிய இனத்திற்கோ அடிப்படைக் கூறாக அமைவதில்லை. மதம் – ஒரு மெய்யியல் என்ற அளவில் இனம் கடந்து, மொழி கடந்து பரவும். ஐரோப்பா ஒரே கிறித்துவ தேசமாக அமையவில்லை. அரபு நாடுகள் ஒரே இசுலாமிய தேசமாக அமையவில்லை. மதம் ஒன்றாக இருந்தாலும், மொழி இன அடிப்படையில் அவை தனித்தனி நாடுகளாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முதன்மை கொடுத்த இந்து நாடு - நேப்பாளம்! இப்போது புதிதாக வந்துள்ள அரசமைப்புச் சட்டத்தில்தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், “இந்துதேசம்” என்று இந்தியாவை அழைக்க விரும்புவோர் நேப்பாளமும் இந்தியாவும் தனித்தனி நாடாக இருப்பதை உணர வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் குறிப்பிடுகிறது (உறுப்பு – 1). ‘இந்தியன்’ (Indian) என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது வரையறை செய்கிறது.

இல்லாத இந்திய தேசியத்தை – இந்து தேசியமாக மாற்றிக் கொண்டு, தமிழ்த்தேசிய இனம் போன்ற இயற்கையான இனங்களின் மொழி, பண்பாடு, அரசுரிமைகள் முதலியவற்றை மறுக்கக் கூடாது. இந்தியா ஒரு நிர்வாகக் கட்டமைப்பு; அதில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

(பின்குறிப்பு : அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழியாக, அக்கட்டுரை வந்த மறுநாளே (02.08.2018) இக்கட்டுரை தினமணிக்கு அனுப்பப்பட்டது. “தினமணி” இதழ் இக்கட்டுரையை வெளியிடாததால், இன்று (09.08.2018) இங்கு வெளியிடப்படுகிறது).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

Tuesday, August 7, 2018

பன்முக ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் கலைஞர்! தோழர் பெ. மணியரசன் இரங்கல் செய்தி!

பன்முக ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் கலைஞர்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் செய்தி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று (07.08.2018) மாலை 6.10 மணிக்கு, சென்னை காவேரி மருத்துவமனையில் காலமான செய்தி துயரமிக்கது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், கலைஞர் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர். அரசியல் வழியில் அவர் மீது விமர்சனம் கொண்டுள்ளவர்கள் கூட, அவரது தமிழ் ஆற்றலில் ஈர்ப்புக் கொண்டிருப்பர். அவ்வாறு அவருக்குத் தமிழ் வேர் உண்டு!

தமிழில் பன்முக ஆற்றல் கொண்டவர் அவர்! திரைக்கதை - வசனம், சிறுகதை, புதினம், கவிதை, திரைப்பாடல்கள், நாடகம், தொலைக்காட்சித் தொடர், சங்க இலக்கியம் சார்ந்த படைப்புகள், திருவள்ளுவப் பெருந்தகை மீது பற்றும் திருக்குறள் ஆற்றலும் என பன்முக ஆற்றல் கொண்டவர் கலைஞர்! இவற்றில் காலத்திற்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டவர்.

அரசியல் போராட்டங்கள், கூட்டுப் போராட்டங்கள், உட்கட்சி சிக்கல்கள் என கடுமையான அன்றாடப் பணிகளுக்கிடையே மேற்கண்ட கலை இலக்கியச் சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். அரசியலில் அவரின் நினைவாற்றல் வியக்கத்தக்கது!

வர்ணசாதி ஆதிக்கங்கள் நிறைந்திருந்த தமிழ்நாட்டு அரசியலில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் வந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் மக்களின் செல்வாக்கு பெற்ற பெரும் தலைவராக நிலைத்தது பெரும் சாதனையாகும்!

அவருடைய இந்த சாதனைக்கு அவருடைய உழைப்பே மூலதனம்! இளம் தலைமுறையினர் அவரிடமிருந்து உழைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது அவர் எழுப்பி வந்த சமூக நீதிக் குரல் என்றும் நினைவில் நிற்கும்!

கலைஞரை இழந்து துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது; அவருடைய மறைவுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
நேற்று (06.08.2018) மாலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சிகள் அது தொடர்பான நேரலைகள் – கருத்துரையாடல்கள் முதலியவற்றை வெளியிட்டன. நியூஸ்18 – தமிழ் தொலைக்காட்சி, திரு. குணசேகரன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ஒரு கலந்துரையாடலை நேரலை செய்தது. அதில், திரு. சுமந்த் சி. இராமனும் மற்றும் ஒருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) கலந்து கொண்டனர்.

தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியின் 50 ஆண்டுகளில் மற்ற பல மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வாக்காளர்களுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பது கூட பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவுதான் என்றும் சுமந்த் சி. இராமனும் மற்றவரும் கூறினர். பணமதிப்பு குறைக்கப்பட்ட நேரத்தில் கண்டெய்னர் சரக்குந்துகளில் 89 கோடி ரூபாய் கடத்தப்பட்டது கூட பணமதிப்பு குறைப்பால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்பதற்கான அடையாளம் தான் என்று மேலும் இருவரும் கூறினர். இவ்விருவரின் இக்கருத்தை ஏற்றுக் கொண்ட நெறியாளர் திரு. குணசேகரன், இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஓர் உவமை கூறினார்.

ஆலைக்கழிவுகளால் பாதிப்பு வருகிறது, ஆனால் அது தொழில் வளர்ச்சியின் பக்க விளைவு அல்லவா என்றார்.

உலகில் எந்தப் பொருளியல் வல்லுநரும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவு கோலாகக் கையூட்டுத் தொகையின் அளவு அதிகரிப்பைக் கூறியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைவிட பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைப் போல் அதிகமாக வாக்காளர்ககுக் கையூட்டுக் கொடுக்கிறார்களா? இல்லை!

பாலியல் தொழில் வளர்ச்சியடைந்து, அதில் கட்டண உயர்வு ஏற்பட்டால், அதுவும் தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிகள் நிகழ்த்திய சாதனைதான் என்பார்களோ இவர்கள்!

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நமது வாதமன்று! வெள்ளையராட்சியில் கூட அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சாலைகள், தொடர்வண்டிகள், கல்விக் கூடங்கள் எனப் புதிய முன்னேற்றங்கள் வரத்தான் செய்தன.

கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் ஆட்சி பற்றி அக்குவேறு ஆணி வேறாக விமர்சிப்பது தேவை இல்லை.

பொதுவாகத் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசியல் சீரழிவுகள் அதிகமாக ஏற்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கழகங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் வாங்கும் கையூட்டுத் தொகை கற்பனைக் கெட்டாத வடிவங்களில், அளவுகளில் வளர்ந்தது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்திக் கொண்ட தனிநபர் பகை அரசியல் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு கேவலமானது! சுக துக்கங்களில் கலந்து கொள்வதுகூட குற்றம் என்று ஆக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இரு கழகங்களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க முடியாத அவலம்!

கச்சத்தீவு பறிபோனது, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் போனது, காவிரி உரிமை போனது, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை மாற்றியது போன்ற பேரிழப்புகளும், பேரவலங்களும் கழகங்களின் ஆட்சியில்தான் ஏற்பட்டன.

கல்வித் தகுதி பெற்று தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ள இளையோர் எண்ணிக்கை 90 இலட்சத்திற்கு மேல்! உரிய கல்வியும் உயர்கல்வியும் கற்றவர்கள் உரிய ஊதியம் இல்லாமல் மிகக் குறைவான அத்துக்கூலியில் கல்வி நிலையம் தொடங்கி தொழிற்சாலைகள் வரை தமிழ்நாட்டில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள்.

இவைதாம் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியின் “சாதனைகள்” !

வடமாநிலங்களைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று இம்மூவரும் கலந்துரையாடலில் கூறினர். கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் எந்தக் காலத்தில் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைவிட வளர்ச்சி பெற்றிருந்தார்கள்? வேறு எதில்தான் தமிழ்நாட்டைவிட முன்னேறியிருந்தார்கள்?

இதுவரை வடமாநிலத்தவர்களைக் காட்டிலும் பொருளாதாரம், அறிவாற்றல், கலைப்படைப்புகள் அனைத்திலும் தமிழர்தாம் முன்னேறி இருந்தார்கள்! கழகங்களின் ஆட்சியில் எவ்வளவோ சீரழிவுகளும், அரசியல் கொள்ளைகளும் இருந்தாலும், மரபுத்தொடர்ச்சி வளர்ச்சி தமிழர்களுக்கு இருக்கிறது என்பதே உண்மை!

திராவிடப் பொற்கால ஆட்சி குறித்த பூரிப்பில் இருப்பவரும், தமிழ்நாட்டில் இந்திய ஏகாதிபத்தியவாதத்தின் கடைசிப் புகலிடம் திராவிட அரசியல்தான் என்று அடையாளம் கண்டவர்களும் நடத்திய கலந்துரையாடல் என்று இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, August 6, 2018

வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா? தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா? தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி - தென்றல் நகரில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான கண்ணன், கடந்த 03.08.2018 அன்றிரவு தனது மனைவி மகாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இரவு 11.45 மணியளவில், அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். பிரசவம் முடிந்த மறுநாள், மகாலட்சுமி தனது இயல்பான வீட்டு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆரம்ப நலத்துறை (சுகாதார) ஊழியர்கள் மூலம் தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், மாவட்ட பொது சுகாதாரம் இணை இயக்குநர் உள்ளிட்ட மொத்த மருத்துவக் குழுவும், பி.சி. பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான காவலர்களும் “குற்றவாளி” வீட்டை முற்றுகையிடுவது போல், கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு, தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் சேர்க்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தாயையும் குழந்தையையும் பரிசோதிக்க வந்த அலோபதி மருத்துவர்களுக்கு கண்ணன் – மகாலட்சுமி இணையர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசு சார்பில் சித்த மருத்துவர் குழு அங்கு வந்தது. தாயையும் குழந்தையும் பரிசோதித்த போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலரும், சித்த மருத்துவருமான திலகவதி, கம்பம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் ஆகியோர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றாலும், தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது, எனவே குழந்தையின் தொப்புள் கொடியை அகற்ற வேண்டுமெனக் கூறி அகற்றியுள்ளார். அரசு நலத்துறை துணை இயக்குநர் வரதராஜ், குழந்தை 3.50 கிலோ எடையுடன் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், மருத்துவர்களை மிரட்டியதாக கூறி கண்ணன் மற்றும் அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர் மீது பி.சி.பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததுடன், தனுஷ்கோடியை கைது செய்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து, தேனியில் ஊடகங்களிடம் பேசியுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு நலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், வீட்டுப்பிரசவம் பார்ப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் பிறப்பை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மட்டுமே சட்டம் கூறுவதாக பி்.பி.சி. தமிழ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாடெங்கும் ஓடும் தொடர்வண்டிகளில், பேருந்துகளில், வீடுகளில் என பிரசவங்கள் இயல்பான முறையில் நடந்து கொண்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் “குற்றச்செயலாக” சித்தரித்து, அதில் ஈடுபடுபவர்கள் மீது “குற்ற” நடவடிக்கை எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவுப் போக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையால் சூழப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ முறைகளையும் கட்டாயப்படுத்தித் திணிக்கும் தமிழ்நாடு அரசின் இப்போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும் அந்தரங்க உரிமை (Right to Privacy)-யை உறுதி செய்கின்றன. தாங்கள் விரும்பும் மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இவை அனைத்தையும், தமிழ்நாடு அரசு மீறியுள்ளது, இங்கு கார்ப்பரேட் காட்டாட்சி நடக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, உடனடியாக தனுஷ்கோடியை விடுதலை செய்து, கண்ணன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்துள்ள வழக்கைத் திருபம்பப் பெற வேண்டும்! உரிய முறையில் நடைபெறும் இயற்கை முறை வீட்டுப்பிரசவங்களை தமிழ்நாடு அரசு தடுப்பதும், அதில் ஈடுபடுவோரை மிரட்டுவதும் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, August 3, 2018

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
 
மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அமர்வு நேற்று (02.08.2018) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளை ஒரே வழக்கில் கொண்டு வருமாறு ஆணையிட்டது. அப்போது, நீதிபதி சி.டி. செல்வம் வெளியிட்ட “கண்டனங்கள்” பெரும் ஆறுதலாக உள்ளன.
 
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் காவல்துறையை தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரணப் பொதுக் கூட்டம் நடத்திட, ஊர்வலம் நடத்திட, சேலம் – திருவண்ணாமலைப் பகுதிகளில் மக்களைச் சந்தித்திட என எதையும் அனுமதிக்காமல் உடனே வழக்குப்போடுவதும் சிறையில் அடைப்பதுமாக இருக்கிறார்கள்.
 
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நடந்த 100ஆவது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போராட்டத்தில், 15 பேரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். சற்றொப்ப 80 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் இரும்புத் தடி தாக்குதலில் எலும்புகள் முறிந்தும், படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டனர்.
 
ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் விருப்பப்படி மூடிவிட்டதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபடாத வெகுமக்கள் மீது ஏராளமான வழக்குகள் போட்டு கைது செய்து வருகிறது தமிழ்நாடு அரசு! ஒருவர் மீது 80 வழக்கு – 100 வழக்கு என்று போடுகின்றனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே கோரிக்கைக்காக நடந்த அறப்போராட்டத்தில், தனித்தனி வழக்குகளாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.
 
இச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சான் வின்சென்ட் மற்றும் வழக்கறிஞர் டி. பொன்பாண்டி ஆகியோர் போட்ட பொது நல வழக்கில் நேற்று (02.08.2018) நீதிபதி செல்வம், காவல்துறையின் அத்துமீறலுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சாட்டை அடி கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :
 
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் துயரத்தில் உள்ள மக்களுக்குக் கருணை காட்டுவதற்கு மாறாகக் காவல்துறையின் கட்டாந்தடியைக் காட்ட வேண்டுமா?
 
ஒரு நபர் மீது 100 வழக்குகள் – 80 வழக்குகள்! எதற்காக? ஒரு வழக்கில் பிணை பெற்றால் இன்னொரு வழக்கில் உள்ளேயே இரு என்று சொல்வதற்காகவா? இவ்வளவு ஆணவமும் இரக்கமின்மையும் அரசுக்கு எப்படி வந்தது? நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளின் கதவைத் தட்டி, மக்கள் மனத்தில் பீதியை உண்டாக்குவது எதற்காக? இது பற்றி அரசுக்குக் கவலை எதுவும் இல்லையா?
 
தங்களின் உயிருக்கு உயிரானவர்களைத் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்த குடும்பத்தினர் தாங்களும் கைது செய்யப்படுவோமோ, தங்களின் நெருங்கிய உறவினர்களும் கைது செய்யப்படுவார்களோ என்று நிரந்தரமாக அச்சப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறதா? இதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.
நூறாவது போராட்ட நாளன்று (22.05.2018) போட்ட வழக்குகள் அனைத்தையும் - கல்லெறிந்த வழக்கு – கடும் சொற்கள் பேசியதற்கான வழக்கு – சமூக வலைத்தளங்களில் எழுதியதற்கான வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்கு ஆக்குங்கள் என்று காவல்துறைக்கு ஆணையிடுகிறோம்”.
 
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது 92 வழக்குகள்! அவை அனைத்திலும் பிணை பெற்ற நிலையில், அவர் மீது ஏவப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை இரத்துச் செய்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உயர் நீதிமன்றத்துக்கு வரவழைத்தக் கண்டனம் தெரிவித்தது இதே சி.டி. செல்வம் – பசீர் அகமது அமர்வுதான்! அதற்கு முன்பு, சூலை 26 அன்று, ஸ்டெர்லைட் போராட்டக் குழு இளைஞர் மகேஷ் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவலை இரண்டே நாட்களில் திரும்பப் பெற ஆணையிட்டதும், இதே நீதிமன்ற அமர்வுதான்!
 
நீதித்துறை சட்டத்தையும் நீதியையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறையை உயர்த்திப் பிடித்துள்ளார்கள் நீதிபதி சி.டி. செல்வமும், பசீர் அகமதும்! தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக – கண்மூடித்தனமாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் போராட்டத்திற்குத் துணை நின்ற தோழர்களை சிறையில் தள்ளியது எடப்பாடி அரசு! அந்த ஆணைகளைத் தூக்கி எறிந்து அனைவரையும் விடுதலை செய்தது மதுரை உயர் நீதிமன்றம்!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 28.07.2018 அன்று திருச்சி உறையூரில் “சனநாயகம் காத்திட – தமிழர் ஒன்றுகூடல்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முறைப்படி எல்லா ஏற்பாடுகளும் செய்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது காவல்துறை. அதே நாளில் மாலை அந்த பொதுக்கூட்டத் திடலுக்கு அருகில் பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் திரளாகக் கூடி கண்டன முழக்கம் எழுப்பினோம். ஒலிபெருக்கி இல்லாமல் நான் மட்டும் சிறிது நேரம் தடை விவரங்களைப் பற்றி பேசினேன். அப்போது நான் கூறியதிலிருந்து …
 
“துச்சாதனன் திரவுபதியின் துகிலை உரியும்போது கண்ணபிரான் ஆடை கொடுத்து காப்பாற்றினான். ஆட்சியாளர்கள் சனநாயகத்தின் துகிலை உரியும்போது, கண்ணபிரான் போல் காப்பாற்ற வேண்டியது நீதித்துறை! ஆனால் சில நேரங்களில் – நீதித்துறை ஆட்சியாளர்களின் சட்டவிரோதச் செயல்களை அங்கீகரிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்!”.
 
நீதிபடி சி.டி. செல்வம் அவர்கள் கண்ணபிரான் போல் செயல்பட்டுள்ளார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது! உடனே விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது! உடனே விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
புகழ் பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர், நேற்று (02.08.2018) கோவையில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர் என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்திருக்கும்.

வரும் ஆகத்து 26ஆம் நாள் கோவை புதூரில், “மருந்து – மாத்திரைகள் – ஸ்கேனிங் இல்லாத இனிய சுகப்பிரசவத்திற்காக” - இலவச பயிற்சி அளிக்க ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். 

இதனை எதிர்த்து, ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரும், அவரது அலுவலக மேலாளர் சீனவாசனும் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மோசடி செய்யும் நோக்குடன் ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் கிருத்திகா என்ற பெண்மணிக்கு, அவரது கணவர் யூடியூப்பை பார்த்து வீட்டில் இயற்கை பிரசவம் நடத்த முயன்றபோது, கூடுதல் குருதிப்போக்கு ஏற்பட்டு கிருத்திகா இறந்து போனதைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவர்களையும் மருத்துவ ஆலோசகர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், நல்வாழ்வுத்துறை செயலாளரும் தொடங்கினர். அலோபதி மருத்துவர்கள் பலரும், “முற்போக்கு” சிந்தனையாளர்கள் சிலரும், பெண்ணியவாதிகள் சிலரும்கூட இந்த கூக்குரலில் இணைந்தனர்.

அதன் தொடர்ச்சியாகத்தான், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத நம்பிக்கைகளின் பெயரால் உடலுக்கும், மனதிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய செயல்கள் குற்றச்செயல்களாக கருதப்படுவதில்லை. ஆனால், மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை கூட குற்றச்செயலாக வரையறுக்கப்பட்டு அச்சுறுத்தல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் இச்செயல் கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் மரபு அறிவியல் அனைத்தையும் “மூடநம்பிக்கை” என ஒதுக்கும் செயலும் ஆகும்! 

எந்த மருத்துவமும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுவதே சரியானது. முறையான மரபுவழி மருத்துவமும் அவ்வாறுதான் நடந்து வருகிறது. 

மரபுவழி பிரசவத்தில் சுகப்பிரசவம் என்பதுதான் பொதுப் போக்காக இருந்தது. இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும்! ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய் முடியும். 

அரசின் துணையோடு மரபுவழி அறிவியலும், அதன் ஒரு பகுதியான மரபு வழி மருத்துவமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில், பயிற்சி பெற்ற மரபுவழி மருத்துவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள். 

மரபுவழி மருத்துவத்தை ஒரு மருத்துவமாகவே நடைமுறையில் இந்திய – தமிழக அரசுகள் ஏற்பதில்லை! எனவே, மரபுவழி மருத்துவத்திற்கு முறையான பயிற்சி அளித்து முறைப்படுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. பெயருக்கு ஒரு ஓரத்தில், சித்த மருத்துவப் பிரிவும், “சித்த மருத்துவக் கல்லூரிகளும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. 

மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்றும், மண்ணின் மருத்துவங்கள் “மாற்று மருத்துவம்” என்ற பெயரிலும் புறந்தள்ளப்பட்டது. 

மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் அரசின் இத்தாக்குதலைத் தொடர்ந்து அனுமதித்தால், இன்றைக்கு பல போராட்டங்களுக்கிடையில் முன்னேறி வரும் மரபு வழி வேளாண்மையும் புறந்தள்ளப்படும். இரசாயண மருத்துவம் போலவே, இரசாயண வேளாண்மையும் மீண்டும் உறுதிப்படும்! 

அறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் “வளர்ச்சி” வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்! 

தமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழர் மரபின் அறிவியல் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கச் செய்வதில்தான் “வளர்ச்சி” வாத ஆதிக்கத்தின் வெற்றியே இருக்கிறது. இந்த வளர்ச்சி வாதத்தின் உச்சமாகத்தான், மரபுவழி மருத்துவமே தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக மரபுவழி மருத்துவத்தை பரப்பி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர் மரபு அறிவியலுக்கும், தமிழின உரிமைக்கும், அடிப்படை சனநாயக உரிமைக்கும் எதிரானதாகும்! 

எனவே, ஹீலர் பாஸ்கரையும், அவரது அலுவலக மேலாளரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், மரபுவழி மருத்துவத்தை மருத்துவமாக அங்கீகரித்து அதை ஒரு கல்வித்திட்டமாக ஆக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் செயல் திட்டங்கள் வகுக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

#HealerBaskar
#WeStandWithHealerBaskar
#ReleaseHealerBaskar

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, August 1, 2018

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
காவிரி நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஆற்றுநீர் கடலில் கலப்பதை “வீணாகக் கலக்கிறது” என்று முடிவு செய்வது ஒரு மூடத்தனம்! ஆற்று நீர் ஆண்டுதோறும் கடலில் கலந்தால்தான், கடல் உப்பு நீர் நிலத்தடியில் மேலும் மேலும் முன்னேறி உட்புகாமல் தடுக்கும்!

காவிரிச் சமவெளியில் கடல் உப்பு நீர் மேலும் மேலும் ஏறி வருகிறது. நிலத்தடி நீர் பாசனத்திற்கும் குடிக்கவும் பயன்படாமல் மாறிப் போகிறது. காரணம், ஐந்தாண்டு அல்லது எட்டாண்டுக்கு ஒருமுறைதான் மேட்டூர் அணை நிரம்பி காவிரி நீர் சிறிதளவு கடலுக்குப் போகிறது.

அடுத்து, உலகெங்கும் ஆற்று நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டால், கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகி மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்; கடல் நீர் ஆவியாகி மேகமாகும் அளவும் குறைந்து, நிலக் கோளத்தில் மழைப் பொழிவு குறையும்! அதனால் வரும் பாதிப்புகள் பல!

கடலோரத்தில் ஆற்று நீர் கலக்கும் இடத்திற்கும் ஆழ்கடலுக்கும் இடையே அச்சூழலுக்கேற்ப ஒருவகை மீன்கள் உற்பத்தியாகும். ஆற்று நீர் கடலில் கலக்க வில்லையென்றால், அந்த மீன்வளம் அழியும்.

கேரளத்தில் ஓர் ஆண்டில் 2,000 ஆ.மி.க. (1 ஆ.மி.க. - 100 கோடி கன அடி) ஆற்று நீர் - அரபிக் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் ஓர் ஆண்டில் 1,000 ஆ.மி.க. நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கோதாவரி ஆற்று நீர் மட்டும் ஓர் ஆண்டில், 2,000 முதல் 3,000 ஆ.மி.க. வரை வங்கக் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு, தென்பெண்ணை ஆறுகளின் நீர் கடலில் கலப்பதில்லை. எப்போதாவது பெரும் புயல் ஏற்பட்டால் உலக அதிசயமாக அவற்றின் நீர் கடலில் கலக்கும்! வைகை ஆறு கடலில் போய்ச் சேர வழியே இல்லை. தாமிரபரணி, பெரும்பாலும் கடலில் கலப்ப தில்லை.

காவிரி ஆற்றிலிருந்து தவிர்க்க முடியாமல் தப்பிச் செல்லும் நீர் ஆண்டுச் சராசரியாக 10 ஆ.மி.க.தான் எனக் காவிரித் தீர்ப்பாயம் கணித்துள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் தவிக்கும் தமிழ்நாடு, காவிரி ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் தடுப்பணைகள் (அதன் உயரம் சற்றொப்ப 6 அடி அளவில்) கட்டி, தண்ணீரை அங்கங்கே தேக்கி நிறுத்தலாம். இதனால் அதன் அருகே உள்ள கிளை வாய்க்கால்களில் முழு அளவில் தண்ணீரைத் திருப்பி விட முடியும். அத்துடன் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஊற்று அதிகரிக்கும். அதேபோல் ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்.

மற்றபடி காவிரியில் தமிழ்நாட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தேவை இல்லை. கர்நாடகம் மேக்கேத்தாட்டில், இராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. கர்நாடகம் புதிய அணை கட்டினால் எந்தப் பெரிய வெள்ள காலத்திலும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மாட்டார்கள்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT