செல்லாத சட்டத்தில் பொல்லாத வழக்கு!
த.தே.பே தலைவர் மணியரசன் மீது பொய் வழக்கு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!
தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திறனாய்வு செய்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் 2019 நவம்பரில் அந்த தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களில் கவிதை ஒன்றை எழுதி முகநூலில் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு இப்போது தமிழ்நாடே மதக்கலவரத்தில், மக்கள் மோதலில் தத்தளித்து கொண்டிருப்பது போலவும், தீர்ப்புரைத்த நீதிபதிகள் அவமானத்தால் மனம் பாதிக்கப்பட்டது போலவும், இப்போது தமிழ்நாடு காவல் துறை வழக்கு புனைந்திருக்கிறது.
இதேபோல் இத்தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க. குணசேகரன் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கீழவாசல் காவல் நிலையத்தில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்திய அரசின் உள்துறைதான் இவ்வழக்கை புனைவதற்கான அழுத்தத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்திருக்கிறது என்று கருத அடிப்படை இருக்கிறது.
தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட மூவர் மீதும் ஒரே விதமான குற்றச்சாட்டில் இவ்வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தொழில் நுட்பசட்டத்தில் பிரிவு 66(A), (மின்னனு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல்), 72 (இரகசிய தன்மையையும், தனி நபர் உரிமையையும் மீறியது), பிரிவு 72(A) (சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்தத் தகவல்களை வெளியிடுவது) ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 228 (நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதி முறைமையில் குறுக்கிடுதல்), 504 (பொது அமைதியை சீர்குலைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவது), 505(2) (பல்வேறு மத, இன சமூகங்களுளிடையேப் பகைமையை, வெறுப்பை அல்லது தவறானக் கருத்துகளை உருவாக்குவது), பிரிவு 12 (நீதிமன்ற அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழும் இந்த வழக்குத் தொடுக்கப்படுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீதான வழக்கிற்கு காரணமாக சொல்லப்படும் கவிதை இதுதான்.
மண்டபத் தீர்ப்பு
--------------------------
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்றார் இளங்கோவடிகள்
அரசு நடத்துவோர் நடுநிலை தவறினால்
அறம் தண்டிக்கும் என்றார்!
அன்று
அரசனும் நீதிபதியும் ஒருவரே!
சரியாய் விசாரிக்காமல்
தவறாய்த் தீர்ப்புரைத்து
கோவலனைக் கொன்ற குற்றத்திற்காக
தன்னையே மாய்த்துக் கொண்டான்
பாண்டியன்
தமிழர் நீதி இப்படி தழைத்தது!
இன்றோ
மன்னன் வேறு நீதிபதி வேறு!
என்றாலும்
ஒன்றாய் உட்கார்ந்து எழுதியது போல்
தீர்ப்புரைக்கிறார்களே அது எப்படி?
வழிபடும் மண்டபம் - எந்த
வகைறாவுக்கு என்று வழக்கு வந்தது
வல்லடி வழக்கு பேசி – எதிரியின்
வழிபாட்டு மண்டபத்தைத் தகர்த்தவரை
மன்னராகத் தேர்வு செய்தனர் மக்கள்
மன்னர் நீதிபதியைத் தேர்வு செய்தார்
கூடம் கட்டி கோபுரம் எழுப்பி
கும்பிட்டு வந்த வரலாறு
மாற்றுத் தரப்புக்கு மட்டுமே
உண்டு எனினும்
இடித்தவருக்கே மண்டபம் சொந்தம்
என்றார் நீதிபதி
………
என்று தொடர்கிறது அக்கவிதை! இதைத்தான் ஆகப்பெரிய "குற்றம்" என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்ட சட்டப்பிரிவுகளை பாருங்கள். எந்த சட்டநெறியுமின்றி பழி வாங்கும் ஆரிய வன்மத்தில், அதன் அடிப்பொடி அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு என்பது தெளிவாகும்.
இதில் சொல்லப்படும் முதன்மைப் பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) என்பதாகும். இப்பிரிவு குறித்து வேறொரு வழக்கு தொடர்பாக நான் ஏற்கெனவே விரிவாகத் திறனாய்வு செய்திருக்கிறேன். ("சட்டத்தின் தாக்குதல்", கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).
கணிப்பொறியில் கைவைத்தாலே குற்றம் என்று கூறும் அளவிற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையுமே குற்றமாக வரையறுக்கும் பிரிவு 66(A)!
“பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத்தக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக் கூடிய, மனதைக் காயப்படுத்தக் கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகையை வளர்க்கக் கூடிய, வெறுப்பைப் பரப்பக் கூடிய, இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழி இனங்களுக்கிடையே பகைமையை மூட்டக் கூடிய அல்லது தீமை பயக்கக் கூடிய அல்லது சட்டவிரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்” என்கிறது இந்த பிரிவு 66(A).
இப்பிரிவின் கீழ் இச்சட்டம் உருவாக்கப்பட்ட 2012இல் தொடங்கி பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்த வழக்குகளில் ஸ்ரேயா சிங்கால் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதிகள் செல்லமேசுவர், நாரிமன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு, இந்த பிரிவு 66(A) முற்றிலும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வரையறுத்து, இப்பிரவு 66(A) இனிச் செல்லாது எனக்கூறி இப்பிரிவையே ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஒரு சட்டப்பிரிவை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்துவிட்டால், பிரிவு சட்டப்புத்தகத்தில் இல்லை என்று பொருள்! அப்பிரிவு செத்துவிட்டது என்று பொருள்.
சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட இந்தப் பிரிவு 66(A) கீழ்தான் இப்போது தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் கொடிய வழக்குத் தொடுக்கப்படுள்ளது.
இந்த பிரிவு 66(A)ஐ இரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின் வருமாறு கூறுகிறது:
”இது போன்றதொரு பிரிவு நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இருக்க முடியாது. எது பேசினாலும் குற்றம் என்று வரையறுக்கும் இந்தப் பிரிவு 66(A) சனநாயகத்தையே அழித்துவிடும். சனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்கான அரணாக விளங்குவது, மக்களின் கருத்து கூறும் உரிமையாகும்.
கருத்துரிமையை பிரிவு 66(A) தகர்த்து விடுகிறது. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 19, 21, 14 ஆகிய உறுப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. எனவே இப்பிரிவு 66(A) ஐ சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்கிறோம்”.
சட்டப் புத்தகத்திலிருந்தே தூக்கி எறியப்பட்ட – இல்லாத சட்டப்பிரிவின் கீழ்தான் இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது. இந்திய உள்துறையின் இச்செயல் புதிதல்ல. இச்சட்டப்பிரிவு 66(A) நீக்கப்பட்ட 2015 மார்ச்சுக்குப் பிறகும் 2018 வரையில் 42 வழக்குகள் இப்பிரிவின் கீழ் பல மாநிலங்களில் வழக்கு புனையப்பட்டது.
இவை குறித்த சில வழக்குகள் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றன. அவற்றுள் ஜாகிர் அலி தியாகி வழக்கு குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கிற அத்தியானந்து என்ற பா.ச.க. தலைவர் மீது 27 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என விமர்சனம் செய்து ஜாகிர் அலி தியாகி என்ற 20 வயது இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66(A)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின் உயர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்தார். இறுதி மேல் முறையிடு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. இவ்வழக்கைக் கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட – செல்லாத சட்டத்தின் கீழ் எவ்வாறு வழக்கு தொடுக்கப்படுகிறது என்று வினா எழுப்பினர்.
"66(A) பிரிவு உயிரோடு இல்லை என்ற நிலையிலும் அப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது என்றால் தொடர்புடைய காவல் துறை உயர்அதிகாரிகள் ஒன்று - சட்ட அறியாமையில் இருக்கிறார்கள் அல்லது ஆணவத்தில் செயல்படுகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் ஆணவமும் அறியாமையும் இணைந்துதான் இவ்வாறான பொய் வழக்குகளைப் புனைய வைக்கிறது" என்று கூறி கண்டித்தார்கள்.
ஸ்ரேயா சிங்கல் வழக்கில் 66(A) நீக்கப்பட்ட பிறகு ஜாகிர் அலி தியாகி வழக்கில் இச்சட்டப்பிரிவைப் பயன்படுத்துவது ஆணவமும் அறியாமையும் கலந்த நடவடிக்கை என்று கண்டித்த பிறகும் இப்போது மீண்டும் அதே பிரிவில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
மோடி அரசும் அதன் ஆணையைச் செயல்படுத்தும் எடப்பாடி அரசும் எவ்வளவு தூரம் சட்டத்தை சீர்குலைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அதேபோல் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 72 கூறும் ரகசியத்தன்மையை, தனிநபர் உரிமையை அச்சுறுத்துவது என்ற குற்றம் இங்கு எழவே இல்லை. ஏனெனில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு பொது ஆவணமாக உள்ள பாபர் மசூதி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இரகசியமானது அல்ல! இது எந்த நீதிபதியின் தனிநபர் உரிமையும் அல்ல! உச்ச நீதிமன்றம் என்ற நீதி நிறுவனத்தின் தீர்ப்பு அது. மனம் போன போக்கில் பிரிவு 72ஐ சேர்த்திருக்கிறார்கள்.
அதே போல் பிரிவு 72(A) இப்பிரிவு கூறும் தனிநபர் தகவல் எதையும் கவிதையின் வழியாக பெ. மணியரசன் வெளியிடவில்லை.
இவ்வழக்கில் கூறப்படும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 228 பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் காவல் துறை கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அரசின் சட்ட ஆணையத்தாலேயே எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இப்பிரிவின் கீழும் பெ. மணியரசன் வழக்கில் வரும் இன்னெரு பிரிவான 12 கீழும், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971ன் கீழும் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கின்றன.
அவற்றுள் பால் தாக்கரே வழக்கு மற்றும் பதேகர் நடுவண் சிறைக் கண்கானிப்பாளர் எதிர் ராம் மனோகர் லோகியா ஆகிய வழக்குகள் முக்கியமானவை.
நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அத்தீர்ப்பை எழுதிய நீதிபதிகளைக் குற்றம் கூறியது ஆகாது. மிக வெளிப்படையாக ஒரு நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டின்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் கூறி கருத்துரைத்தால் தான் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட வேண்டும். எவ்வளவு தான் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தாலும் அது உண்மையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல ஆயுதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர நீதிபதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாகவோ, நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டில் செய்யப்படும் குறுக்கீடாகவோ கருதக்கூடாது என்று இத்தீர்ப்புகள் தெளிவுபடுத்தின.
இத்தனைக்கும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஒரு தீரப்பு குறித்துக் கட்டுரை எழுதும் போது, அதில் மும்பை நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளில் ஒருவர் 32 இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றிருக்கிறார் எனத் தகவல் வந்திருப்பதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அவ்வாறான சூழலில் கூட இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது, நீதிமன்ற செயல்பாட்டில் குறுகீட்டதாகவும் கருதக்கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றம் தீரப்பளித்தது.
இந்த வழக்கில் கூறப்படும் 505(2) என்ற தண்டனைச்சட்ட பிரிவுகளில் தோழர் பெ. மணியரசனின் கவிதைக்கோ மற்ற இருவரின் கருத்துக்கோ தொடர்பற்றது என்பதை இப்பிரிவை உற்றுநோக்கினால் தெரியும்.
”யாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, மொழி அல்லது பிரதேச குழுகளிடையேப் பகைமையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றிக்கைகள் உருவாக்கி வெளியிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் 3 ஆண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாகப் பெறத்தக்கவர் ஆவார்" என்று கூறும் 505(2) அதற்குக் கீழ் விதிவிலக்கையும் அடுத்தப் பத்தியிலேயே கூறுகிறது.
“மேற்படிக் குற்றசெயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கி வெளியிடப்படும் அறிக்கைகள் அல்லது உரைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச் செயல் ஆகாது” என்று அந்த விதிவிலக்குப் பற்றி கூறுகிறது.505(2)ஐ ஒழுங்காக படிக்காததலோ அல்லது தங்கள் ஆணவத்தின் காரணமாகவோ அப்பிரிவை இவ்வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.
கருத்துரிமைக்கு ஞாயமான வரம்பு என்ன என்பது குறித்து மேற்சொன்ன ராம் மனோகர் லோகியா வழக்கில் (1960 (2) SCR 821) உச்ச நீதிமன்றம் கூறுவது கவனிக்கத்தக்கது.
“ஒரு செயல் குறித்தோ தீர்ப்பு குறித்தோ கடுமையாகத் திறனாய்வு செய்வதோ விவாதிப்பதோ அல்லது அக்கருத்திற்கு எதிரான தனது கருத்து நிலையைத் தீவிரமாக முன்வைப்பதோ பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி விடக்கூடாது”
“ஒரு கொள்கை நிலையில் இருந்து ஒருவர் வெளியிடும் கருத்து சிலருக்கு அல்லது சமூகத்தின் சில பிரிவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் அல்லது ஒரு கருத்து பரிமாற்றத்தால் ஒரு குழுவினர் கடுமையான மனபாதிப்பு அடையக்கூடும், அதை வைத்துக் கூறப்படும் கருத்து பொது அமைதிக்கு எதிரானது என்றோ சமூக குழுக்களிடையேப் பகைமையைத் தூண்டக்கூடியது என்றோ முடிவுக்கு வந்துவிடமுடியாது.
எடுத்துகாட்டாக, ஒடுக்குமுறையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ, சாதி முறையினை நீக்கிவிட வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ இக்கருத்தின் மறுதரப்புக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். அதற்காக அக்கருத்துரிமைக்கு வரம்பு கட்ட முடியாது அக்கருத்துகளைப் பொது அமைதிக்கு இடையூறானது என்று கருதக்கூடாது.”
“பொது அமைதிக்கு அல்லது சமூக ஒழுங்கிற்கு உடனடி ஆபத்து விளைவிக்காத எந்த கருத்தையும் ஞாயமான வரம்பு என்ற பெயரால் தடைவிதித்துவிடக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
இத்தீர்ப்பின் வெளிச்சத்தில் தோழர் பெ. மணியரசன் மீதான வழக்கில் இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகள் 505(2), 504 ஆகியவை சற்றும் பொருந்தாதவை என்பது விளங்கும்.
மொத்ததில் தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது, ஆரிய வன்மத்தின் விளைவாக தொடுக்கப்பட்ட பழிவாங்கும் வழக்கு என்பது தெளிவாகும்.
பாபர் மசூதித் தீரப்பு குறித்து பல்வேறு திறனாய்வுகள் எல்லா ஏடுகளிலும் வந்துவிட்டன; வந்துகொண்டும் இருக்கின்றன. உண்மையில் இந்த கவிதைக்காக தோழர் பெ. மணியரசன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாக கருதமுடியாது!
ஆரியத்துவத்திற்கு எதிராக அவர் தொடர்ந்து சமராடி வருவதால் காழ்ப்புணர்ச்சியோடு சினம் கொண்ட மோடி அரசின் உள்துறை தான், கை நீட்டிய இடத்தில் பாயும் தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பயன்படுத்தி இருக்கிறது என்று தெரிகிறது.
சட்டப்புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட பிரிவின் கீழும் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டப் பிரிவுகளின் கீழும் தொடர்பே இல்லாதப் பிரிவுகளின் கீழும் கவிதை எழுதி நான்கு மாதங்களுக்குப் பிறகு வழக்குப் புனைந்திருப்பது இந்த ஆரிய வன்மத்தையேக் காட்டுகிறது.
சட்டதின் ஆட்சி குறித்து சற்றேனும் அக்கறை இருந்தால் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது போட்டுள்ள இந்த பொய் வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam