உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்நாடு உரிமை. Show all posts
Showing posts with label தமிழ்நாடு உரிமை. Show all posts

Tuesday, April 12, 2016

தேர்தல் புறக்கணிப்பு ஏன்? – தினசெய்தி நாளேட்டுக்கு தோழர் பெ. மணியரசன் பேட்டி!




தேர்தல் புறக்கணிப்பு ஏன்?
தினசெய்தி நாளேட்டுக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!


தேர்தல் கூட்டணி, கூட்டணிக்கு எதிர்ப்பு, கோடிகளில் பேரம், போட்டிக் கட்சிகள் என தமிழகத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வரும் வேளையில், "சட்டப் பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்!" என்று தீர்மானம் இயற்றி ஒட்டுமொத்தமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள், "தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர்! தீர்மானம் குறித்து பேரியக்கத்தின் தலைவரான தோழர் பெ. மணியரசனிடம் பேசினோம்..
 

திடீரென இப்படியொரு தீர்மானம் நிறைவேற்ற என்ன காரணம்?

"இது திடீரென இயற்றப்பட்டத் தீர்மானம் அல்ல. 1992-ஆம் ஆண்டிலிருந்தே இதுதான் எங்கள் இயக்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாடு".

"உரிமைகளை வென்றெடுக்க அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்; அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியலில் ஈடுபட வேண்டும்" என்பதுதானே நிதர்சனம்? அம்பேத்கரும் இதைத்தானே வலியுறுத்துகிறார்?

"அம்பேத்கர் முன்வைக்கிற பிரச்சினைகள் வேறு; நாங்கள் முன்வைக்கிற பிரச்சினைகள் வேறு. உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமையாகக் கிடக்கும் தமிழ் இனத்துக்கு இறையாண்மை வேண்டும்" என்பதுதான் நமது கோரிக்கை. அரசமைப்பு சட்டத்தைத் திருத்துகிற அதிகாரம், சட்டசபைக்கு கிடையாது. மாநில அரசின் அதிகார வரம்பு என்பது மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான். உண்மையான அதிகாரத்தை கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த அதே திட்டம்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில், கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியபோது கூட, இங்கே நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படுகிற கோடிக்கணக்கான யூனிட் மின்சாரமானது பக்கத்து மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டது. காவிரி நீரை தடுத்துவைத்துத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும்கூட நமது நாட்டிலிருந்து மின்சாரம் போகும். அதனை தடுத்து நிறுத்தும் அதிகாரம்கூட நமது சட்டமன்றத்துக்கோ, முதல்வருக்கோ கிடையாது.

இதேபோல், காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம், கேஸ் போன்றவற்றையும் கூட தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படுத்தும் அதிகாரம் கிடையாது. சுருக்கமாக சொன்னால், சட்டத்தை இயற்றுவதற்கே அதிகாரம் இல்லை. வெறுமனே மசோதாவை மட்டுமே இயற்றுவார்கள். அந்த மசோதாவில் மாநில கவர்னர் கையெழுத்து வைத்தால்தான் அது சட்டமாகவே மாறும். ஆக, மாநில அரசு என்றாலே மத்திய அரசின் கங்காணிகள்தான்!

இப்படியொரு சூழலில், தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை சென்று எந்த இறையாண்மையை வென்றெடுக்க முடியும் சொல்லுங்கள்?"

இந்த குறைந்தபட்ச அதிகாரம் எங்களுக்குத் தேவையில்லை" எனக் கூறும் நீங்கள் தமிழக மக்களின் உரிமைகளை எவ்வாறு நிலைநாட்டப் போகிறீர்கள்?

"பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, விவசாய வாழ்வுரிமைப் போராளி நாராயணசாமி நாயுடுவின் தொடர்ச்சியான போராட்டங்களினால்தான் விவசாயிகளுக்கான இலவச மின்சாரமே கிடைத்தது. இப்போது, "லோக் ஆயுக்தா" விவகாரத்திலேயே மக்கள் ஒருங்கிணைந்து போராடியதால் செய்தி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தானே சட்டமாகவும் நிறைவேறியது!"

"தமிழ் ஆட்சிமொழி, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள்" என தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முதன்மையான கோரிக்கைகள் பலவும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் உள்ளன. எனவே, நீங்கள் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பீர்களா?

"தி.மு.க, 1970-களில் இருந்து "மாநில சுயாட்சி" பற்றி தேர்தலுக்குத் தேர்தல் பேசுகிறார்கள். காங்கிரஸ், பா.ஜ.க. என்று பல தடவை மத்திய அரசு கூட்டணியில் இருந்தவர்களால் ஏன் இன்றுவரை "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி"யை அடைய முடியவில்லை?

அடுத்ததாக, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். நல்லதுதான். ஆனால், இதுவரைக்கும் தி.மு.க. இந்த கோரிக்கையை வைத்து ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? இந்தித் திணிப்பை தடுத்தி நிறுத்தியிருக்கிறார்களா? சும்மா நாக்கில் இனிப்பு தடவுவதுபோல் தேர்தல் நேரத்தில் மட்டும் சுயாட்சி, தமிழ் ஆட்சிமொழி என்று பேசுகிறார்கள். இதெல்லாமே நாடகம்!"

சீமானின் "நாம் தமிழர் கட்சி", தமிழருவி மணியனின் "காந்திய மக்கள் இயக்கம்" போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு உங்கள் ஆதரவைக் கொடுக்கத் தயங்குவது ஏன்?

"ஈழத்தமிழர் போராட்டம், ஆந்திராவில் 20 பேர் படுகொலை போன்ற பல்வேறு களங்களில் சீமான், வைகோ, வேல்முருகன் என கோட்பாடு ரீதியாக தமிழ் ஆர்வலர்களோடு இணைந்து கூட்டுப் போராட்டங்களை நடத்துகிறோம். ஆனால், தேர்தல் எனும் அரசியல் போராட்டத்தில் எங்கள் நிலை வேறு. இந்தித் திணிப்பு தடுப்பு, நெய்வேலி – காவிரிப்படுகை திட்டங்களை தமிழ்நாடே முழுமையாக கையாள்வது போன்ற விஷயங்களில் இவர்களிடம் என்னத் திட்டம் இருக்கிறது? அப்படியே திட்டம் இருந்தாலும் மத்திய அரசிடம் இவர்கள் கோரிக்கைதானே வைக்க முடியும்? தமிழர்களிடம் அதிகாரம் இல்லை; எனவே அடிமைகளாகத்தான் இருக்கிறோம். ஆனால் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு இந்தத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டால், எங்களது முதன்மையான இலட்சியங்களில் இருந்து திசை திருப்பலாகி, எங்களது உரிமைப் போராட்டத்தை ஊனமாக்கிவிடக்கூடும்" என்றார்.

 




வெளியீடு:
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9047162164 |
ஊடகம்: www.kannotam.com | இணையம்: tamizhdesiyam.com

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list 







போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT