உடனடிச்செய்திகள்

Saturday, September 30, 2017

திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள் - பெ. மணியரசன் கண்டனம்

திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் - பெ. மணியரசன் கண்டனம்!
 
அண்மையில் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களை சிங்கள இனவெறிக் கும்பலொன்று வழிமறித்து, அவமரியாதையாக நடந்து கொண்டதுடன் அவரைத் தாக்கவும் முற்பட்டது.

     அந்த வன்செயலைக் கண்டிக்கும் வகையில் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று (29.09.2017) சென்னையில் இலங்கைத் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அதே அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தோழர் பிரவீண்குமார் அவர்களும் ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்ததுக் கொண்டிருந்த போது, காவல் துறையினர் அங்கு சென்று அவ்விருவரையும் வலுக்கட்டாயமாகத் தள்ளியும் இழுத்தும், சட்டையைப் பிடித்து இழுத்தும் காவல் வண்டியில் ஏற்றும் காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.

     “எங்கள் மீது வழக்கு இருக்கிறதா? நாங்கள் செய்த குற்றம் என்ன? எங்களை ஏன் வலுக்கட்டாயமாக இழுக்கிறீர்கள்” என்று திருமுருகன் கேட்டதற்கு “மேலிடத்து உத்தரவு” என்று மட்டுமே காவல் துறையினர் கூறியுள்ளனர்.

     தோழர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை ஒரு மண்டபத்திலும் தோழர்கள் திருமுருகன், பிரவீண்குமார் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் தனித்தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள்.

     அண்ணன் வைகோ, பேராசிரியர் ஜவஹிருல்லா போன்றவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியப்பின் திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் விடுவித்துள்ளார்கள்.

     எந்த வழக்கும் இல்லாத நிலையில் எந்தச் சட்ட மீறலும் இல்லாத திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் காவல் துறையினர் இழுத்துச் சென்று அடைத்து வைத்த நிகழ்வு ஓர் ஆள்கடத்தல் செயலாகும்.

     மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போதே காவல் துறையினர் திருமுருகனிடம். “நீங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது; கலந்து கொண்டால் கைது செய்வோம்” என்று எச்சரித்துள்ளார்கள். அதனால் அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிப்போய் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் துறையினரின் இச்செயல் சட்டத்திற்கு புறம்பான வன்முறை மற்றும் அடிப்படை மனித உரிமைப் பறிப்பாகும். காவல்துறையினரின் இச்செயலைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

     எப்பொழுதுமே காவல்துறையில் இதுபோன்ற சட்டப்புறம்பான வன்முறைகளில் எங்கிருந்தோ ஏவியவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, கட்டளையை அரங்கேற்றும் களச் செயல்பாட்டில் உள்ள காவல்துறையினர் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். நமக்கும் வேறு வழியில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுதான் கோரவேண்டும்.

     தோழர்கள் திருமுருகன் காந்தி, பிரவீண்குமார் ஆகியோர் மீது வன்முறை ஏவி சட்டவிரோதமாக அடைத்து மனித உரிமைப் பறிப்பை நிகழ்த்திட ஏவியவர்கள்? அமைசவரவையைச் சேர்ந்தவர்களா அல்லது “மேல்” அதிகாரிகளா?

     கட்டுக் கோப்பில்லாமல், பயனாளிக்குழுக்களின் தற்காலிகக் கூடாரம் போல் காட்சி தரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி, தனது தில்லி மேலிடத்தை மகிழ்விக்க தமிழ்நாட்டு மக்களின் இன – மொழி உரிமைப் போராளிகளின் உரிமைகளைப் பறிப்பதிலும் அவர்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதிலும் தெரிவு செய்து நெருக்கடி நிலையை (Selective Emergency) பயன்படுத்துகிறது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கருதுகிறது. இப்போக்கை திருத்திக் கொள்ளவில்லையென்றால், சனநாயக வழியில் தமிழ் மக்கள் எடப்பாடி ஆட்சியைத் தண்டிப்பார்கள்!
 

 
பெ. மணியரசன்
 
தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள் : 30.9.2017 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com


Thursday, September 28, 2017

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசித்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
இதுதவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு “நீட்” தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எட்டுக்கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் படித்து வேலையில்லாமல் துன்புறுவோர் ஏராளம்! தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து பட்டம் பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் - மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் தொழிலகங்களின் வாயில் காப்போர்களாக வேலை பார்க்கிறார்கள். அவ்வேலையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு மிக அதிகமாகிப் போட்டி கடுமையாக உள்ளது.
இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக, இந்திய அரசு “அனைத்திந்தியத் தேர்வு”  என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது விழுக்காடு அளவிற்குச் சேர்த்து வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்.
மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு - 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.
இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் - 10 விழுக்காட்டுக்கு மேல் இவ் அலுவலகங்களில் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்!
தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம்!
மண்ணின் மக்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் இக்காத்திருப்புப் போராட்டத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, September 25, 2017

“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பகைவரா? பெ. மணியரசன்.

“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பகைவரா? பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
“ஒரு தலித் குழந்தை மட்டும் அல்ல, ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவக் குழந்தை தன்னை (தமிழ்நாடு) முதல்வராகக் கனவு காணும் சாத்தியம் இன்றைக்குத் தமிழ்நாட்டுச் சூழலில் இருக்கிறதா? அப்படியென்றால் நாம் பேசும் தமிழ் அடையாள அரசியல் எந்த மதத்தின் எந்தப் பெரும்பான்மைச் சாதிகளைப் பிரதிபலிக்கிறது? …. ஒரு தலித், ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவர் இங்கு முதல்வராகும் சூழல், யதார்த்தத்தில் இல்லையென்றால் தமிழன் என்ற சொல்லுக்கான பெறுமதி என்ன? சமத்துவம் வேண்டாமா?”
 
இவ்வாறு எழுத்தாளர் சமஸ், தி இந்து – தமிழ் நாளிதழில் (25.09.2017) கேட்டுள்ளார். அக்கட்டுரைக்கு “சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா” என்றும் தலைப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த்தேசிய அரசியல், தமிழின அரசியல் என்று சொன்னால் அதற்குரிய மரியாதையை அளித்ததாகிவிடும் என்று கருதி எச்சரிக்கையாக “தமிழ் அடையாள அரசியல்” என்று இந்தியத்தேசிய மேலாதிக்கப் பார்வையிலிருந்து சிதைவான பெயர் சூட்டுகிறார் சமஸ்!
 
இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து தமிழர்களுக்கு “இந்தியன்” என்று “தேசிய இன” அடையாளம் (Nationality) சூட்டப்பட்டது. அவ்வாறு பெயர் சூட்டிய இந்தியத்தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் 1947ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் இருந்து வருகிறார்கள்.
 
1940களிலிருந்து “திராவிடன்” என்று தமிழர்களுக்கு இன அடையாளம் சூட்டினார்கள். அவ்வாறு பெயர் சூட்டிய திராவிடவாதிகளின் ஆட்சியின் கீழ் 1967லிருந்து தமிழர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
 
இந்தியன், திராவிடன் என்ற அடையாளங்களால் “தமிழன்” தனது இயற்கையான சொந்த இனப்பெயரை இழந்து வர்ண சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறான். இவ்வாறு பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் இயற்கையான உளவியல் உறவுக் கோட்பாடு தமிழ் அடையாளமே!
 
வர்ணசாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களைப் பார்த்து, “பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உங்கள் முன்னோர்கள் தமிழர்கள்; நீங்கள் தமிழர்கள். உங்களுக்குள் பிறப்பால் – மதத்தால் உயர்வு தாழ்வில்லை” என்று கூறி, ஓரின உணர்வைத் தட்டி எடிப்பி வருகிறது தமிழ்த்தேசியம்!
 
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தலித், முஸ்லிம், கிறித்தவர் உட்பட எல்லோரும் வருவதற்கான சனநாயக வாய்ப்பு உருவாக வேண்டும் என்பது தமிழ்த்தேசிய அறங்களில் ஒன்று! 
 
இப்பொழுதுதான் எழுந்து வரும் தமிழ்த்தேசியத்தை விரும்பாத சமஸ் போன்றவர்கள் – தமிழர்களை ஏற்றத் தாழ்வுள்ள சாதிகளாகவும், மதங்களாகவும் பிரித்து வைத்துக் கோலோச்சிக் கொண்டுள்ள “இந்தியன்”, “திராவிடன்” என்ற இன அரசியல்வாதிகளைப் பார்த்து தலித், முசுலிம், கிறித்தவர் ஆகியோரை முதல்வராக்க முடியுமா என்று கேட்பதில்லை.
 
குறைந்தது, பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்று பெரியார், அண்ணா ஆகியோரைத் தலைவராகக் கொண்ட திராவிடக் கட்சிகளையும் – காந்தியம் பேசும் இந்தியத்தேசியக் காங்கிரசையும் கேட்பாரா சமஸ்? தமிழின இயக்கத்தாரைப் பார்த்து இக்கேள்விகளைக் கேட்பதேன் நோக்கம் என்ன? 
 
சமஸ், “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு நண்பரா? பகைவரா?
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
 


Wednesday, September 20, 2017

ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் “தமிழர் மீட்சி” இனமுழக்கம் - சிறப்புக்கூடல்!

ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் “தமிழர் மீட்சி” இனமுழக்கம் - சிறப்புக்கூடல்!
1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 40ஆம் நினைவு நாள் நாளையொட்டி (21.09.2019), அவரது நினைவேந்தல் நிகழ்வு மற்றும் “தமிழர் மீட்சி” - இன முழக்கம் பரப்புரைக்கான சிறப்புப் பொதுக்கூடல், நாளை (செப்டம்பர் 21) தஞ்சையில் நடக்கிறது.

ஈகி வெங்கடாசலம் அவர்கள், தஞ்சை வட்டப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தனிச்சிறப்பானவை! அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.

தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் - அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது - காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என நான்கு தளங்களில்போ பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஈகி வெங்கடாசலம் ஆவார்.

1970-71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. அவரது நினைவுகளைப் போற்றி, நன்றி செலுத்துவது மக்கள் கடமையாகும்!

அவ்வகையில், தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் ஆச்சாம்பட்டியில் நாளை (21.09.2017) வியாழன் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஈகி ந.வெ. நினைவேந்தல் மற்றும் தமிழர் மீட்சிப் பரப்புரை நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்குகிறார்.

பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, தோழர் பழ. இராசேந்திரன், தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ. கோபால் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, September 19, 2017

தினகரன் குழுவின் பதினெட்டு உறுப்பினர் நீக்கம் : கட்சிக் கட்டுப்பாடா? மந்தைக் கட்டுப்பாடா? பெ. மணியரசன் அறிக்கை!

தினகரன் குழுவின் பதினெட்டு உறுப்பினர் நீக்கம் : கட்சிக் கட்டுப்பாடா? மந்தைக் கட்டுப்பாடா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
அ.இ.அ.தி.மு.க.வின் தினகரன் பிரிவைச் சேர்ந்த 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியைப் பறித்து, “தகுதிநீக்கம்” செய்துள்ளார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அவர்கள். இந்த 18 உறுப்பினர்களும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொண்டதாகவும், முதலமைச்சர் தன் அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருப்பதை மெய்பிக்க சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியே மனு கொடுத்தனர்.
 
இதையே “கட்சித் தாவல் நடவடிக்கை” என்று பேரவைத் தலைவர் தனபால் முடிவு செய்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறுகிறார். பேரவைத் தலைவரின் இச்செயல் சட்டப்படியானதும் அல்ல, நீதிப்படியானதும் அல்ல, தன்னலம் சார்ந்ததாகும்!
 
தனது குழுவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பதவி இழக்கக் கூடாது என்பதற்காக சட்ட விரோதமாக தனபால் செயல்பட்டிருக்கிறார். இதுவரை பெரும்பாலோரின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று வந்த பேரவைத் தலைவர் தனபால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு சாதாரண தன்னலவாதி என்று பெயரெடுத்திருக்கிறார். அவரது இந்தச் செயல், சட்டம் மற்றும் சனநாயகம் ஆகியவற்றுக்கு எதிரானது! பதினெட்டு உறுப்பினர்களின் பதவியைப் பறித்த பேரவைத் தலைவர் தனபால் அவர்களின் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
 
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில், எது கட்சித் தாவல் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர், தனது கட்சியிலிருந்து விலகிவிட்டாலோ அல்லது தனது கட்சி ஏவுநர் (கொறடா) விதித்த கட்டளையை மீறி தன் கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ – அவர் உறுப்பினர் பதவியை இழப்பார் என்றுதான் கூறப்பட்டுள்ளது. (அதிலும் அக்கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் உறுப்பினர் பதவியைப் பறிக்கக் கூடாது என்கிறது இச்சட்டம்).
 
இந்த இரண்டுவகைச் செயலிலும் தினகரன் தரப்பு உறுப்பினர்கள் ஈடுபடவில்லை. ஆளுநருக்கு ஒரு கோரிக்கையைதான் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஆந்திர முதல்வர் என்.டி. இராமாராவ், உத்தரகாண்ட் ஹரிஷ் ராவத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் பதவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், ஓர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை மெய்பிக்கும் இடம் – சட்டப்பேரவைதான் என்று உறுதி செய்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எடப்பாடி பழனிச்சாமி – தனபால் கூட்டணியின் குறுக்கு வழி!
 
செயலலிதா அம்மையார் இறந்த நாளிலிருந்து தமிழ்நாட்டு அரசியலில் தலைமையிடம் பிடிப்பதற்காக, அன்றாடம் புதுப்புது சட்ட விரோதச் செயல்களில் இந்திய பா.ச.க. ஆட்சி இறங்கி வருகிறது. 18 உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க. தலைமையிலான சதித்திட்டம்தான்! பதவிக்காகவும், பணத்திற்காகவும் நாட்டையே விற்றுவிடத் தயங்காத அ.தி.மு.க.வினர், பா.ச.க.வின் அதிகாரத்திற்குக் கையாளாக மாறி - தன்னலச் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
“பா.ச.க. தலைமைக்கு ஆன்மிக ஒழுக்கமும் கிடையாது – அரசியல் ஒழுக்கமும் கிடையாது” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி வருகிறது. பதினெட்டு உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க.வின் திரைமறைவு வேலைகளால்தான் அரங்கேறி உள்ளது.
 
எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் குழுவினர் சண்டையிட்டுக் கொள்வது – எந்தப் பொதுநலத்துக்காகவும் அல்ல! சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பலவகையான செல்வங்களைப் பாதுகாக்க வேண்டுமானால், தங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் - புதுதில்லியின் அரவணைப்பு இருக்க வேண்டும் என்ற தன்னலத் தந்திரம் காரணமாகவே அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.
 
இம்மூன்று பேருமே பா.ச.க. தலைமையிடம் சரணடைகிறார்கள்! இம்மூவரில் இப்போதைக்கு எடப்பாடியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் தங்கள் காலடியில் விழ பா.ச.க. ஒப்புதல் வழங்கியுள்ளது. கூப்பிட்டால் போவதற்கு கும்பிட்ட கையோடு காத்திருக்கிறார் தினகரன்!
 
தன்னல நோக்கங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி கட்சி மாறுவது – ஆட்சி நிர்வாகத்தில் நிலையற்ற தன்மை உருவாவதைத் தடுக்க வேண்டுமென்றே கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் ஆட்சியில் உள்ளவர்களின் தவறுகளையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளையோ எதிர்க்காமல், கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மந்தையாக இருந்துதான் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலையை கட்சித் தாவல் தடைச் சட்டம் உருவாக்கியுள்ளது.
 
தன்னல அரசியல் கொள்ளையர்கள், அநீதிக்காரர்கள் எந்தச் சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துப் போடுவார்கள் என்பதற்கான, இன்னுமொரு சான்றாகத்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறையில் பயன்படுத்தப்படுகறது. உண்மையில் பார்க்கப்போனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பது அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 வழங்கும் கருத்துரிமைக்கு நேர் எதிரானது! இந்தச் சட்டம் சரியாகப் பயன்படவுமில்லை! எனவே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் கடந்த ஆண்டு(2016) திசம்பரிலிருந்து அரங்கேற்றி வரும் பதவி வெறியாட்டம் - பணப்பதுக்கல் சார்ந்த அராஜகங்கள், அரசியல் என்ற பெயரில் அவை நடத்தும் ஆள் கடத்தல்கள், கோடி கோடியாகப் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கொடுத்து அவை செய்து வரும் ஊழல் நடவடிக்கைகள் – ஒழுக்கக் கேடுகள் – இவை அனைத்தையும் பார்த்து தமிழ் மக்கள் அருவருக்க வேண்டும்! இவற்றில் ஒரு குழுவை ஆதரிப்பது இன்னொன்றை எதிர்ப்பது என்பதோ, இவ்“விளையாட்டு”களில் கொஞ்சமும் சளைக்காத தி.மு.க.வை ஆதரிப்பது என்பதோ – தமிழர் நாகரிகத்துக்கும் சனநாயகத்துக்கும் புறம்பான செயல்கள்!
உண்மையான மக்கள் நேயம், அரசியல் ஒழுக்கம், மனத்தூய்மை ஆகியவற்றைக் கொண்ட அறம் சார்ந்த புதிய அரசியல் நோக்கு – தமிழரிடம் எழ வேண்டும்; புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க சிந்தனை அளவிலாவது துணிய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Sunday, September 17, 2017

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!
 
அண்மையில் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் இயக்குநர் அமீர், வடநாட்டு ஊடகங்கள் அனிதாவை “தலித்” என்று உள்நோக்கத்தோடு பிரித்துப் பேசுகின்றன, அவர் தமிழ்ப்பெண், அவருடைய மரணம் – தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பாய்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அமீரிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழ், தமிழன் என்று சொல்லாதீர்கள், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதிக் கொடுமைகள் நடக்கின்றன, நாங்கள் தலித்துகள்” என்று ஆத்திரத்தோடு பேசினார். திரும்பத் திரும்ப மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, அமீரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதற்கு எதிர்வினையாக, தமிழ்த்தேசியர்கள் இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு இதுபற்றி இன்று (17.09.2017), ஒரு செய்தித் தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், கருத்துக் கூறிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “மேல்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது, இன்றைக்கு நடப்பதைப்போல் 1990களில் நடக்கவில்லை. இப்பொழுது படுகொலைகள் நடப்பதற்கானக் காரணம், தலித்தியர்களும், தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததுதான்! இதன் விளைவுதான் தருமபுரி நாயக்கன்கொட்டாய் தீ வைப்புச் சம்பவம் (2012)” என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத்தில் பன்முகப் பார்வையும், பண்பான விவாதமும் செய்யக்கூடியவர் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், மேற்கண்ட அவரது விமர்சனம் தன்நோக்குவாதம் (Subjectivism) சார்ந்ததாக உள்ளது. அவருக்கு சில கேள்விகள்!

1968இல் (25.12.1968), அண்ணா முதல்வராக இருக்கும்போது - பெரியார் தெம்பாகப் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத்தில், கீழவெண்மணியில் குழந்தைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 44 பேர் – ஒரு குடிசையில் வைத்து, மேல்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டார்களே!

திராவிட ஆட்சியில் - பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரை நடந்த காலத்தில் இது நடந்தது ஏன்? வெண்மணிப் படுகொலைக்கு உரியவாறு உடனடியாக ஒரு கண்டன அறிக்கைகூட பெரியார் அப்போது தரவில்லை என்பதும், அந்த கொடுமை நடந்த இடத்தை பெரியார் போய் பார்த்து – மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதும் கூடுதல் செய்தி!

அதேகாலத்தில் 1968 நவம்பர் 17 அன்று, நாகப்பட்டினம் சிக்கல் கடைத்தெருவில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் பட்டப்பகலில் ஆதிக்கசக்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பலர் அக்காலத்திலும் – அதாவது பெரியார் வாழ்ந்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெரியார் ஆதரித்த காமராசர் ஆட்சி நடந்த காலத்தில், 1950களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியபோது, அதை எதிர்த்த இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று கொலை செய்யப்பட்டதும், பெரும் கலவரம் மூண்டதும் – ஏன் நடந்தது?
பெரியார் காங்கிரசு ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த போதும், பிறகு தி.மு.க. ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளையில் தேநீர் கொடுத்த முறை – தமிழ்நாடெங்கும் பரவலாக - மிக அதிகமாக இருந்தது. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பிலுள்ள சனநாயக ஆற்றல்களின் பரப்புரையாலும் போராட்டத்தாலும் இரட்டைக் குவளை முறை பெருமளவு குறைந்துவிட்டது. இதுபற்றி வழக்கறிஞர் அருள்மொழி என்ன விடை சொல்கிறார்?

அண்மைக்காலங்களில் தலித் ஆண்கள் மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டதால், சில இடங்களில் அந்த ஆண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் கொடுமை! தமிழினத்திற்கே அவமானம்! ஆனால், வழக்கறிஞர் அருள்மொழி கூறுகின்ற 1990கள் – அல்லது அதற்கு முந்தைய காலத்தைவிட, ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண்கள் மேல்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தக்கூடிய நிகழ்வுகள் இப்பொழுது அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறுக்கிறாரா?

1980களுக்குப் பிறகு, தலித்திய – தமிழ்த்தேசியப் பரப்புரைகள் இல்லாத காலத்தில், தி.மு.க.வினர் தங்களுடைய குடும்பத் திருமண அழைப்புகளில் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சாதிச் சங்கங்களில் பொறுப்பேற்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்?

திராவிட முன்னேற்றக் கழகம், தனது கட்சியின் ஒன்றியச் செயலாளர் – மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய்ப்புகளையும் சாதி பார்த்துதான் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கியது. இப்போக்கு 1970களிலிருந்து மிகவும் தீவிரமடைந்தது. பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக தி.மு.க. நிறுத்துவதில்லை. ஆசிரியர் வீரமணியால் “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்ட செயலலிதாவின் அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது. திராவிடக் கட்சிகளின் இந்த சாதியப் போக்கு தமிழ்த்தேசியம் தோன்றி பெரியாரை விமர்சிப்பதற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்கு யார் காரணம்?

வழக்கறிஞர் அருள்மொழி, தலித்தியர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததால்தான் சாதிக் கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுவது, பெரியாரிய சிந்தனையை ஏற்றுக் கொண்ட திராவிடக் கட்சிகளைவிட தலித்திய அமைப்புகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் சமூகச் செல்வாக்கோடு பெரும் அமைப்புகளாக வளர்ந்துள்ளனவா? அல்லது வழக்கறிஞர் கூறுவதுபோல், தலித்திய – தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியாருக்கு எதிராக செய்யும் விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதிய சங்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமைகளும் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நாங்கள் பின் வருபவற்றை கருதுகிறோம்.

1960களில் தி.மு.க. குடும்பத்தினரின் திருமண அழைப்புகளில் மணமக்கள் பெற்றோர் பெயர்களில் பெரும்பாலும் சாதிப்பட்டம் இருக்காது. இப்பொழுது, தி.மு.க.வினர் சிறுவர்களாக உள்ள பேரக் குழந்தைகளின் பெயர்களில் கூட சாதிப்பட்டம் போட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறார்கள். இதுபோல் அவர்கள் எல்லா நிலைகளிலும் சாதியை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்திருக்கிறது.

அதைப்போலவே, திருமண அழைப்பிதழ்களில் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் சாதி போடும் பழக்கம் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்கள் :

1. 1960களில் தி.மு.க, இன விடுதலை – நாட்டு விடுதலை என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கியது. நாட்டு விடுதலையைக் கைவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரம் – ஊழல் என்ற நிலையில், தி.மு.க. சீரழிந்தது. இலட்சியமில்லாத அமைப்பின் பொறுப்பிலும், உறுப்பிலும் இருப்பவர்களிடையே சமூகச் சீரழிவுகள் தோன்றுவதும், அது தொற்றுநோய் போல் சமூகம் முழுவதும் பரவுவதும் இயல்பே!

அதைப்போல், இரசியப்புரட்சி – சீனப்புரட்சி போல் இங்கேயும் புரட்சி நடக்கப் போகிறது என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், அந்த இலட்சியத்தைக் கைவிட்டபிறகு, அதற்கு மாற்றாக வேறொரு புதிய இலட்சியத்தை முன்வைக்காத நிலையில் - அதன் உறுப்பினர்களிடையே சீரழிவு ஏற்பட்டது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, எல்லா ஆளும் கட்சியையும் ஆதரித்து வந்திருக்கிறது. அரசியல் முடிவுகளில் மிகவும் பிற்போக்காக, சீரழிவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தனிப்பட்ட பரப்புரையில் மட்டும் கடவுள் மறுப்பு – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று பேசுவதென்பது ஒரு தன் முரண்பாடு! அந்த தன் முரண்பாட்டுப் பரப்புரை, பெரிய பயன் தராது.

அத்துடன், பெரியார் காலத்திலும் சரி, அவருக்குப் பிந்தைய காலத்திலும் சரி, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையே முதன்மைப்படுத்தி – பார்ப்பனரல்லாதோரிடம் உள்ள சாதி ஒடுக்குமுறையை – பார்ப்பன எதிர்ப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடர் கழகம் பரப்புரை செய்யவில்லை!

இவையும், இன்னும் சிலவும் தமிழ்நாட்டுக்குள் உள்ள காரணங்கள்!

2. இதற்கு மேல், இந்தியத்தேசியம் என்பது ஆரியவாதம் மற்றும் பார்ப்பனிய வாதம்தான்! காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் இந்த ஆரியப் பார்ப்பனியவாதம்தான், அரசு அதிகாரத்தோடு செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வர்ணசாதி வலியுறுத்தப்படுகின்றன!

இந்த இந்திய ஆரியக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு, திராவிடர் கழகம் எதுவும் செய்யவில்லை! பெரியார் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்தியத்தேசியவாதிகளை தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது. இன்றும், காங்கிரசோடு கூட்டணி போல் தி.க. செயல்படுகிறது.

வர்ணசாதிப் பிளவுகளிலும், அவை தொடர்வதிலும், சாதி ஒடுக்குமுறைகளிலும் இந்தியத்தேசிய ஆளும் வர்க்க சக்திகள் மூலகாரணமாக விளங்குகின்றன. இவற்றின்பால், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்ன?

தமிழ்த்தேசியம் – இந்தியத்தேசியத்தை மறுக்கிறது. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழர் அறம், “மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்” என்கிறது. சாதி மதம் கடந்த சமத்துவம் மட்டுமல்ல, ஆண் – பெண் சமத்துவமும் தமிழர் அறத்தில் உள்ளது என்பதை தமிழ்த்தேசியவாதிகளாகிய நாங்கள் பரப்புரை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - முன்னேறிய வகுப்புகளின் தமிழர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஓர் இனத்தின் மூலவர்கள்! தமிழ்ச் சாதி அனைத்திற்கும் – தாய்மொழி தமிழ்! திருவள்ளுவப்பேராசான், கணியன் பூங்குன்றன், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர், இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவானவர்கள்; நம்முடைய மூலவர்கள்!

ஆரியத்தின் வர்ணாசிரமம் கற்பித்த – பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற சாதிக் கொடுமைகள் பிற்காலத்தில் புகுந்து, நம்மைச் சீரழித்துவிட்டன. நம் இனம் தோன்றி வளர்ந்திருந்த அந்த காலத்து சமத்துவத்தை மீட்போம் என்ற இனவழிப்பட்ட இயற்கையான உறவு உணர்ச்சியை நாங்கள் தமிழர்களிடம் எடுத்துக் கூறி, ஒற்றுமைக்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதேவேளையில், சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக பரப்புரை மட்டுமின்றி, அங்கங்கே போராட்டங்களும் செய்து வருகிறோம்.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தையே படி என்றும் கூறியதோடு, தமிழினம் என்று சொல்வது குறைபாடுடையது – திராவிட இனம் என்பதே சரி என்று இல்லாத திராவிட இனத்தை – தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது திணித்தது போன்ற பெரியாரின் பிழைகளை தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிப்பது குற்றமா? பெரியாரின் கருத்துகளைத்தான் பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர். அவர் தமிழர் அல்லாதவர் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை! தமிழ் இனத்தில் பிறக்கவில்லை என்பதை அவருக்கான தகுதிக் குறைவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கருதவில்லை.

எங்களுடைய தமிழ்த்தேசியம் வளர்ச்சி பெற்று, முழு வீச்சில் மக்களிடையே செல்வாக்கு பெறும்போது, சாதி அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களிடையே ஒற்றுமை பெருமளவு ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம்!

இதற்கான முன்னோட்டம்தான், ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் சாதி கடந்து குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழர் என்ற உணர்ச்சியில் ஒன்று திரண்டது. இப்பொழுது, அனிதா உயிரிழப்புக்கு தமிழ்நாடு முழுக்க இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுவதும் தமிழ் இன உணர்ச்சியோடுதான் நடைபெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Friday, September 15, 2017

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அபுதாபி கிளை சார்பில், இன்று (15.09.2017) காலை, அபுதாபியில், தமிழர் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அபுதாபி - பனியாஸ், முஸ்த்தப்பா உழைப்பாளி கிராமத்தில், தமிழ்நாட்டிலிருந்து அபுதாபி சென்று பணிபுரியும் தமிழர்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் செயலாளர் தோழர் கார்த்திக் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தோழர் ருபன் கினிஸ்ட்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்திய அரசே! தமிழர் இன உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வைக் கைவிடு! தமிழினத்தை வஞ்சிக்காதே!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Thursday, September 14, 2017

இயக்குநர் ரஞ்சித்துக்கு.. தோழர் பெ. மணியரசன்.

இயக்குநர் ரஞ்சித்துக்கு..பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


 
''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா?
 
'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா?
 
தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?
 
ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம்.
 
பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள்.
 
நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
 
மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா?
 
ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் "தமிழராய்" ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும்.

தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம்.
 
ஆனால், "எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்?"
 
அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.
 
 
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
 

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Tuesday, September 12, 2017

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்!

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுக் கூட்டம், ஓசூரில் 10.09.2017, 11.09.2017 ஆகிய இரு நாட்கள் எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் ம. இலட்சுமி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் இருநாள் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமைக் குழுவினராகச் செயல்பட்டு நெறிப்படுத்தினர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் தோழர் அ. விடியல் (எ) ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஓசூர் கோ. மாரிமுத்து, க. அருணபாரதி, குழ. பால்ராசு, நா. வைகறை, பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், இரெ. இராசு, க. முருகன் உள்ளிட்டோரும், பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் இருநாள் கூட்டத்திலும் கலந்து கொண்டனர். அரியலூர் மாணவி அனிதா, காவிரிக்காக உயிரீகம் செய்த விக்னேசு, ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்டோருக்கும், அண்மையில் மறைந்த பேரியக்கத் தோழர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்புப் பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 - “மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” - நடுவண் அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசித்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.

இதுதவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு “நீட்” தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

எட்டுக்கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் படித்து வேலையில்லாமல் துன்புறுவோர் ஏராளம்! தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து பட்டம் பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் _ மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் தொழிலகங்களின் வாயில் காப்போர்களாக வேலை பார்க்கிறார்கள். அவ்வேலையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு மிக அதிகமாகிப் போட்டி கடுமையாக உள்ளது.

இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக, இந்திய அரசு அனைத்திந்தியத் தேர்வு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது விழுக்காடு அளவிற்குச் சேர்த்து வருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்.

மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு _- 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் மண்ணின் மக்கள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிறப்புப் பொதுக்குழு ஒருமனமாக முடிவு செய்துள்ளது.

மண்ணின் மக்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் இக்காத்திருப்புப் போராட்டத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு இப்பொதுக்குழு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 - உச்ச நீதிமன்றம், தமிழக உழவர்களைக் காவிரி வழக்கில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கை தமிழ்நாடு அரசு, முழுமையான அக்கறையோடு நடத்தவில்லை. தமிழர்களின் சார்பாக வாதிட வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் அரசியல் அழுத்தங்களால் உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் முயல்கிறது. காவிரி வழக்கின் போக்கைத் திசைமாறச் செய்யும் வகையில் கர்நாடகம் கிளப்பும் பொய்களுக்கும், இந்திய அரசின் வஞ்சகத்திற்கும் தமிழ்நாடு அரசு வளைந்து கொடுக்கிறது.

எனவே, காவிரி வழக்கில் தமிழர்களுக்காக வாதிட “காவிரி உரிமை மீட்புக் குழு”வுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கடந்த ஆகத்து 21 அன்று உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கடிதம் எழுதினார். தமிழர்கள் பலரும் அவ்வாறே உச்ச நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினர். அதற்கு, உச்ச நீதிமன்றம் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

எனவே, உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு உழவர்கள் சார்பில் வாதிட “காவிரி உரிமை மீட்புக் குழு”வை காவிரி வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 - தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்தித் திணிப்பு - கேந்திரிய வித்தியாலயா பள்ளியை அனுமதிக்கக் கூடாது!

தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்து, கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கேந்திரிய வித்தியாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி அமையவுள்ள இடத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் குழுவாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பளல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981 செப்டம்பர் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார். 25 துறைகளின் உயராய்வுக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு, 972 ஏக்கர் அரசு நிலத்தையும் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த தி.மு.க. - அ.தி.மு.க. அரசுகள் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை தமிழ் வளர்ச்சி அல்லாத பிறப் பயன்பாடுகளுக்கு திருப்பி விடும் பணிகளை செய்து வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் முறையாக நடத்தாமல் சீரழித்து வருகின்றனர்.

முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலிகைப் பண்ணையின் 25 ஏக்கர் நிலத்தை இந்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழ்நாடு அரசு. அதன்பின், 50 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அளித்தது. அங்கு இப்போது வீடு கட்டி, தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், 2012இல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 62 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இப்போது, அதையெல்லாம் விட மோசமாக இந்தி - சமற்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு வரும் சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கே - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது!

இந்திய அரசின் இந்தி - சமற்கிருதத் திணிப்புகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு ஆட்சியாளர்கள், அதற்கு நேர் முரணாக இந்திய அரசின் இந்தி - சமற்கிருதத் திணிப்புக் கருவிகளாக விளங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது அயோக்கியத்தனமானது!

உடனடியாக தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்! தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எங்குமே இந்தி - சமற்கிருதத் திணிப்பு கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 - நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களைக் கொண்டு வந்து திணித்து, தமிழ்நாட்டின் மண்ணின் மக்களை புறக்கணிக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ள “நீட்” - அகில இந்தியத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடெங்கும் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

”நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி - எதிர் - மத்தியப்பிரதேச மாநில அரசு” வழக்கில் தீர்ப்பளித்த - ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பிலும் இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை யெல்லாம் குப்பையில் வீசிவிட்டு இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் சட்ட விரோதமாக நீட் தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளன.

அதை எதிர்த்து முறியடிப்பதற்கு மாறாக, மோடி அரசின் எடுபிடியாக நிற்கும் தமிழ்நாட்டின் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவில் நெருப்பை வீசி விளையாடின. இதன் விளைவாகவே, அரியலூர் மாணவி அனிதா உயிரீகம் செய்தார். அவரின் ஈகம் தமிழ்நாட்டு மாணவர்களையும், மக்களையும் உலுக்கியெடுத்துள்ள நிலையில், தன்னெழுச்சிப் போராட்டங்களால் தமிழ்நாடு போர்க்களமாகியுள்ளது.

இச்சூழலைப் பயன்படுத்தியாவது, தமிழ்நாடு அரசு கடந்த 31.01.2017 அன்று நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு, இந்திய அரசிடம் ஒப்புதலைப் பெற உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 5 - கடலூர் - நாகை கிராமங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்!
கதிர்வீச்சு அபாய அணு உலைகள், காற்று மண்டலத்தையும் உயிர் வாழும் சூழலையும் நாசப்படுத்தும் அனல் மின் நிலையங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் பெட்ரோல், எரிவளி (மீத்தேன்) எடுப்பு முயற்சிகள், நியூட்ரினோ ஆய்வகம், வேளாண் நிலங்களை அழிக்கும் கெயில் குழாய்த் திட்டம் என இந்திய அரசால் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்டு வரும் அழிவுத் திட்டங்களில் ஒன்றாக, கடலூர் _- நாகை மாவட்டத்தில் எரிமவேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் சற்றொப்ப 57,345 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், நச்சுக்காற்றையும், மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்களையும் பெரும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய புதிய நகரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 45 கிராமங்களை தனியார் நிறுவன வளாகமாக மாற்றி, இலட்சக்கணக்கான குடும்பங்களை காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றும்.

ஏற்கெனவே சிப்காட் தொழிற்சாலைகளால் கடும் மாசுபாடுகளாலும், நிலத்துக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ள கடலூர் - நாகை மாவட்டங்களில், இந்த புதிய முதலீட்டு மண்டலம் நிலைமையைத் தீவிரமாக்கி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கி விடும்.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் என்பது ஏற்கெனவே மேற்கு வங்கத்தாலும், கேரளாவாலும் தங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டமாகும். அதைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கோருகிறது!

இத்திட்டத்தை எதிர்த்து, இக்கிராம மக்களைத் திரட்டி மண்ணுரிமை காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது என தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 6 - தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை உடனே நிறைவேற்றுக!

கிருட்டிணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் உள்ள 52 கிராமங்களில், தொடர்ந்து பல ஆண்டுகளாக வறட்சியாலும், முறையான நீர் நிலைப் பராமரிப்பின்மையாலும் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டது. அதன் காரணமாக குடிநீருக்கும் வேளாண்மைக்கும் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

பருவமழைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால்கூட, இப்பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தும் கிளைவாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தாததால், அத்தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கும் நிலை உள்ளது.

எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், இங்குள்ள கருக்கநல்லி, பெரிய எள்ளி, குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி - குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனக் கோரி தமிழக உழவர் முன்னணி சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மக்கள் இயக்கத்தின் விளைவாக, தமிழ்நாடு அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, சாத்தியக்கூறு ஆய்வுகளையும் மேற்கொண்டது.

2012 - 2013ஆம் ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 22.20 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் தமிழ்நாடு அரசு மதிப்பிட்டது. எனினும் திட்டம் செயல்படுத்தவில்லை. அரசின் கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. 2014 - 20தீர்மானம் 15ஆம் ஆண்டு இம்மதிப்பீட்டுத் தொகை 29 கோடியே 50 இலட்சம் ரூபாயாக அதிகரித்தது.

எனவே, தமிழ்நாடு அரசு தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை இனியும் தாமதிக்காமல் நடப்பு ஆண்டிலேயே உடனடியாகச் செயல்படுத்தி, இப்பகுதிகளில் பல்லாண்டுகளாக நிலவும் குடிநீர் மற்றும் வேளாண் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 7 - அரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கக் கூடாது!

ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தைகளில் போட்டு சூதாட வழி வகுக்கும் புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஞாயமான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ - ஜியோ” அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு ஆணை (மெமோ) வழங்கியுள்ளது. அவர்களது ஞாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடக்குமுறைகளால் அச்சுறுத்திக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு இந்த அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டக் குழுவோடு தமிழ்நாடு அரசு முறையாக சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
 
நாள் : 11.09.2017
இடம் : ஓசூர்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Friday, September 8, 2017

பிரான்சு, கனடா நாடுகளில் எரி எண்ணெய் எடுக்கத் தடை: தமிழ்நாட்டிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

பிரான்சு, கனடா நாடுகளில் எரி எண்ணெய் எடுக்கத் தடை: தமிழ்நாட்டிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
பாரீசு பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில், பிரான்சு அரசாங்கம் அந்நாட்டில் எரி எண்ணெய் (பெட்ரோலியம்), எரிவளி (எரிவாயு) எடுப்பதை படிப்படியாகக் குறைத்து, 2040க்குள் எரி எண்ணெய் – எரிவளி எடுப்பதை முற்றிலுமாகக் கைவிடுவது என முடிவு செய்து அதற்கான தடைச் சட்டத்தை 2017 செப்டம்பர் 6 அன்று பிறப்பித்திருக்கிறது. 

தங்களது மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவளித் தேவைக்கு இயற்கையோடு இயைந்த மாற்று வழிகளை கடைபிடிக்கப் போவதாக பிரான்சு அரசாங்கம அறிவித்திருக்கிறது. “தூய மின்சாரம்” என்ற பெயரால், அணு மின்சாரம் எடுப்பதையும் கொள்கை அளவில் கைவிட முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, இப்போது அந்நாட்டு மின்சாரத் தேவையில் 75 விழுக்காட்டு மின்சாரம் அணு உலையிலிருந்து வருவதை 50 விழுக்காடாக குறைக்க முடிவு செய்துள்ளது. 

அதேபோல், கனடா நாட்டு – கியூபெக் மாகாண அரசு, தனது செயின்ட் லாரன்சு (Gulf of Saint Lawrence) வளைகுடா பகுதியில் உள்ள அன்டிகோஸ்டீ (Anticosti) தீவிலும் அதை சுற்றியுள்ள கடல் பரப்பிலும் எண்ணெய் எடுப்பதை கைவிடுவது என 2017 சூலையில் அறிவித்திருக்கிறது. 

மின்சார நுகர்வு மிகையாக உள்ள இந்த மேற்கத்திய நாடுகளே எரி எண்ணெய் எடுப்பதைக் கைவிடும்போது, தமிழ்நாட்டில் அவ்வாறு செய்வது இயலாத செயல் அல்ல! 

பிரான்சு, கனடா நாடுகளைவிட கோடைக் காலம் அதிக மாதங்கள் உள்ள வெப்ப மண்டல பகுதியான தமிழ்நாட்டில், அந்நாடுகளைவிட கதிரவன் மின்சாரம் கிடைப்பது ஏராளம்! இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, கதிரவன் மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவும் வேகமாகக் குறைந்து வருகிறது. நிலக்கரியிலிருந்து மின்சார உற்பத்தி செய்வதைவிட கதிரவன் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு குறைவு! காற்றையும் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தி மக்கள் வாழ்வை சீரழிக்காதது!

அதேபோல், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அப்பகுதிகளில் சேரும் திடக்கழிவை மேலாண்மை செய்ய முடியாமல் தவித்து வருவதற்கு விடையாக, கழிவிலிருந்து மின்சாரமும் எரிவாயுவும் உற்பத்தி செய்வதே அமையும். 

இவையன்றி, காற்றாலை மின்சாரம், கடல் அலை மின்சாரம் போன்ற ஏராளமான வாய்ப்புகள் மேற்சொன்ன நாடுகளைவிட தமிழ்நாட்டில் அதிகம். 

அந்தந்த பகுதிகளிலும் 2 மெகா வாட் அல்லது 3 மெகா வாட் அளவிற்கு மிகாத சிறு சிறு உற்பத்தி அலகுகளை இந்த மாற்று வழிகளில் அமைத்துக் கொள்ள முடியும். மின்சாரமும் எரிவளியும் கிடைக்கிற இடங்களைச் சுற்றியே அவற்றின் பயன்பாட்டையும், வழங்கலையும் வைத்துக் கொண்டால், கம்பி இழப்பு – குழாய் வழி இழப்பு போன்றவற்றை வெகுவாகக் குறைக்க முடியும். 

இவ்வாறான மாற்று மின்சார – எரிவளி உற்பத்தி நிறுவனங்கள் இப்போது இருப்பதைவிட பல மடங்கு வேலை வாய்ப்பையும் வழங்குகின்றன. இச்சிறு நிறுவனங்களை ஊராட்சி - நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளே நிர்வாகம் செய்து கொள்ள முடியும். அதிகாரக் குவிப்பையும் தவிர்க்க முடியும்! 

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் – எரிவளி எடுக்கிற பகுதிகளிலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை சுற்றிலும், நிலக்கரி கையாளும் காரைக்கால் துறைமுகப் பகுதிகளைச் சுற்றிலும் கொடும் மாசுபாடு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்வுரிமை பறிக்கப்படுவதை பொறுக்க முடியாமல் மக்கள் போராடி வருகிறார்கள். 

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மின்சாரம் எரிவளி தேவைக்கு இயற்கையோடு இயைந்த மாற்று வழிகளை பிரான்சு - கனடா நாடுகளைப் போல தமிழ்நாடும் மேற்கொள்ள வேண்டும். 

உடனடியாக, ஓ.என்.ஜி.சி.யை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்றும், பேரழிப்பு அணு உலைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன். 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com 

Thursday, September 7, 2017

மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தோழர் அருணா கண்டன அறிக்கை!

மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா கண்டன அறிக்கை!
 
மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் “தேசம்” என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தை சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
நேற்று (06.09.2016) பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் அம்மையார் படுகொலை குறித்து விசாரிப்பதற்காக பெங்களூர் சென்ற லலிதா குமாரமங்கலத்திடம் “நியூஸ்18” செய்தியாளர், அனிதா மரணம் குறித்து கருத்து கேட்டபோது, அவர் இவ்வாறு அலட்சியமாகக் கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அனிதா மரணமடைந்திருப்பதால், அது குறித்து மகளிர் ஆணையம் விசாரிக்க முடியாது என்று கூறிய லலிதா குமாரமங்கலம், “அவர் படித்திருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தலையில் எழுதியிருக்கிறது இல்லையா? அதுபோல் அந்தப் பெண் இறந்துவிட்டார்” என்றும், “தெலுங்கு மாநிலத்தவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்று சொல்லலாம். அப்படியே போனால் தேசம் என்னாவது?” என்றும் கூறினார்.
 
“இந்தியத்தேசம்” என்ற பெயரால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த சோகத்தையும் “தலையெழுத்து” என்று எள்ளி நகையாடுகிறார். தமிழ்நாட்டு உரிமையை குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை இந்தியத்தேசியம் என்ற பெயரால், “பாரதமாதா” பலி கொண்டு விட்டாள் என்பதையே லலிதா குமாரமங்கலத்தின் பேச்சு உறுதி செய்கிறது.
 
கட்சி அரசியலுக்கும், அரசாங்கத்திற்கும் அப்பால் மகளிர் உரிமையைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக செயல்பட வேண்டிய “மகளிர் ஆணையம்” தமிழ்நாட்டு பெண்களின் உரிமை என்றால் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு லலிதா குமாரமங்கலத்தின் பேச்சு சான்றாக இருக்கிறது.
 
“நீட்” தேர்வை எதிர்த்து அழுத்தமாகப் போராடி உயிரீகம் செய்த மாணவி அனிதாவின் சாவை ஏளனம் செய்த, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திய மகளிர் ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலத்திற்கு மகளிர் ஆயத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  
இன்னணம்,
அருணா
ஒருங்கிணைப்பாளர், மகளிர் ஆயம்.
இடம்: மதுரை
 
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல்: fb.com/makaliraayam
 
 



Wednesday, September 6, 2017

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் 07.09.2017 மாலை 5.30 மணி - கண்டன ஆர்ப்பாட்டம்!

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
 இடம்                          :     சூப்பிட்டர் திரையரங்கம் எதிரில்
காலம்                        :     07.09.2017 வியாழன் மாலை 5.30 மணி
கண்டன உரை : தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டு உரிமைகளை மட்டுமல்ல, தமிழர் உயிர்களையும் தில்லி பறித்து வருகிறது. அந்தத் தொடர்ச்சியில் அரியலூர் அனிதா உயிரையும் பறித்துள்ளது!

உச்ச நீதிமன்றத்தில் நடந்த “நீட்” வழக்கில், எடப்பாடி அரசை நம்பி அனிதா தமிழ்நாட்டுத் தரப்பில் சேர்ந்து வழக்கு நடத்தினார். நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், “நீட்” தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என நம்பிக்கை ஊட்டினார்.

நம்ப வைத்துக் கழுத்தறுத்ததைப் போல் துரோகம் செய்த நடுவண் அரசும், தமிழ்நாடு அரசுமே தற்கொலை செய்து கொள்ள அனிதாவை தூண்டியவை!

“நீட்” என்பது மாணவரின் தகுதியைச் சோதிக்கும் தேர்வல்ல - மாநில உரிமையைப் பறிக்கும் தேர்வு! இதன் அடுத்த கட்டமாக “நீட்” தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வடஇந்திய மற்றும் வெளி மாநில மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும் தொலைதூர மாநிலங்களுக்குத் தூக்கி வீசுவார்கள்!

இப்பொழுதுதான் “நீட்” என்பது தமிழர் தாயக உரிமையையும் - இன உரிமையையும் பறிக்கும் தேர்வு முறை என்று உணர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் “நீட்” போன்ற தேர்வுகள் ஏற்கெனவே இந்திய அரசு நிறுவனங்களில், வேலையில் சேர்வதற்கு நடத்தப்பட்டு வருகின்றன.

பி.எச்.இ.எல். போன்ற தொழில் நிறுவனங்கள், இரயில்வே, அஞ்சலகம், நடுவண் அரசின் வரி வசூல் அலுவலகங்கள், ஆவடி – திருச்சி படைத்துறைத் தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே அனைத்திந்தியத் தேர்வு வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அந்நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் வெற்றி பெறாமல் தடுத்து வருகிறார்கள். இப்பொழுதெல்லாம் மேற்படி நடுவணரசு நிறுவனங்களில் 100க்கு 80 விழுக்காட்டு அளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.

அடுத்து, தமிழ்நாட்டின் மாவட்ட அளவிலான நீதிபதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் ஆகியோரை பணியமர்த்துவதற்கு அனைத்திந்தியத் தேர்வு முறையை அறிவித்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில், நீதிமன்றங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தமிழ் தெரியாத – வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகவும் மருத்துவர்களாகவும் இருப்பார்கள்.

எனவேதான், இந்த அனைத்திந்தியத் தேர்வுகள் அனைத்தும் தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படிக்கும் உரிமையைப் பறிப்பது, வேலை பார்க்கும் உரிமையைப் பறிப்பது என்ற உள்ளடக்கம் கொண்டவை! ஆரியத்துவாத் தத்துவத்தின்படி தமிழர்களை ஓரங்கட்டி, கீழ்நிலைக்குத் தள்ளும் இந்திய அரசின் ஏற்பாடுகள்தான் இந்தத் தேர்வுகள்!

எனவே, மொழிவழியாக அமைந்துள்ள தமிழ்த்தேசிய இன தாயக உரிமைகளைப் பாதுகாக்கத்திட வலுவாகப் போராட வேண்டும்!

நம் கோரிக்கைகள்
=================
1. முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும், நடுவண் அமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீத்தாராமன் விலக வேண்டும்.
2. தமிழ்நாட்டுக்கு “நீட்” தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும்.
3. கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.
தனக்காக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் - தன்னுயிர் ஈந்த மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்!

தஞ்சை ஆர்ப்பாட்டத்தை வாருங்கள் தமிழர்களே!
 
தொடர்புக்கு: நா. வைகறை - 94436 17757
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

 
 



Tuesday, September 5, 2017

“மூளைச் சோம்பலும் முகமூடித் தமிழ்த்தேசியமும்” பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

“மூளைச் சோம்பலும் முகமூடித் தமிழ்த்தேசியமும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கன்னடர்களுக்கென்று ஒரு தேசியக் கொடியை வடிவமைத்துத் தருமாறு கேட்டு, ஒரு வல்லுநர் குழுவை நிறுவியுள்ளார். அந்த வல்லுநர் குழுவில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த செயலாளர் (Secretary) அளவில் பணி மூப்புள்ள அதிகாரிகளை அமர்த்தியுள்ளார்.

பெங்களூர் மாநகரத் தொடர்வண்டி நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வழிக்குறிப்புகளை கன்னடர்கள் அழித்துள்ளார்கள். இந்தி அழிப்பை சித்தராமையா ஆட்சி ஆதரித்தது. கர்நாடக அரசுப் பொறுப்பில் உள்ள பெங்களூர் மாநகராட்சித் தொடர்வண்டி நிலையங்களில் இனிமேல் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்படமாட்டா என்று அத்துறை அதிகாரியும் அறிவித்துள்ளார்.

இந்த அதிரடிகளின் அதிர்வுகள் நிற்பதற்குள், கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் வெளி மாநில அதிகாரிகளும் பணியாளர்களும் ஆறு மாதத்திற்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் கன்னடத்தில் பேசவும், கன்னட மொழியில் எழுதப்படும் படிவங்களைப் புரிந்து கொள்ளவும் திறன் பெற வேண்டும். இல்லையேல் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசின் கன்னட மொழி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சித்தராமையா இந்தியத்தேசியக் காங்கிரசுக்காரர். கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது.

அங்கே முதன்மை எதிர்க்கட்சியாக இருப்பது பா.ச.க! இந்தியத்தேசியத்தின் தீவிரப் பிரிவு அது! மேற்கண்ட கன்னட மொழி சார்பான - இந்தியத் தேசியத்திற்கு முரணான கர்நாடக அரசின் நடவடிக்கைகளை பா.ச.க. எதிர்க்கவில்லை.

கன்னட தேசியக் கொடியை வடிவமைக்க சித்தராமையா வல்லுநர் குழு அறிவித்த போது, “இது தேர்தல் தந்திரம்” என்று கர்நாடகப் பா.ச.க. விமர்சித்தது. அதற்கு மறுமொழி கூறிய சித்தராமையா, “கர்நாடகத்திற்கென்று தனிக்கொடி உருவாக்குவதைப் பா.ச.க. எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா?” என்று நேரடியாகக் கூற வேண்டும் என்றார். பதுங்கிக் கொண்டது பா.ச.க.! அக்கட்சியும் கன்னடக் கொடி உருவாவதை எதிர்க்கவில்லை.

அடுத்து கர்நாடகத்தில் இன்னொரு முக்கியக்கட்சி தேவகவுடாவின் ஐக்கிய சனதா தளம்! இதுவும் இந்தியத்தேசியத்தை ஏற்றுக்கொண்ட அனைத்திந்தியக் கட்சி! இக்கட்சியும் தனிக்கொடியை எதிர்க்கவில்லை; இந்தி அழிப்பை எதிர்க்கவில்லை.

இந்தியத்தேசியத்தின் தாயகமாக - தலைமைப் பீடமாகக் கருதிக் கொள்ளும் காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளின் கர்நாடகத் தலைமை கன்னடத் தேசியத்துடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. ஆனால் இந்தியத்தேசியத்திற்கு மாற்றாக திராவிடத்தை முன்வைத்த தி.மு.க.வோ, அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க.வோ தமிழ்த்தேசியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ளாமல் - இந்தியத்தேசியத்தின் கங்காணிகளாகச் செயல்படுவதேன்?

இந்த உளவியல் திரிபை ஆய்வு செய்வது மிகமிகத் தேவை!

1970-இல் அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டுக் காங்கிரசும், பிராமண அமைப்புகளும் அறிவாளிகளும் எதிர்த்தவுடன், அத்திட்டத்தைக் கைவிட்டு விட்டார். கைவிட்டதோடு, நேர் எதிரான வேலையில் ஈடுபட்டார்.

இந்திய விடுதலை நாளில் ஆளுநர் இந்திய அரசுக் கொடியை ஏற்றி வந்த மரபை மாற்றி, அக்கொடியை முதலமைச்சர்கள் ஏற்றுவதற்கான “உரிமை” கோரினார். இந்திய அரசும் கருணாநிதியின் கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி வடிவம் ஒன்றைக் காட்டி, அவ்வுரிமையைப் பெறப்போவதாக மார்தட்டிக்கொண்ட கருணாநிதி, அதற்கு மாற்றாரிடம் எதிர்ப்பு வந்தவுடன், உடனே மண்டியிட்டார். எந்த இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தி.மு.க. வளர்ந்ததோ, அந்த இந்தியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்ற “மாவீரராகத்” தம்மை வர்ணித்துக் கொண்டார்.

திராவிட இயக்கத்தின் இரண்டுங்கெட்டான் இனவாதத்தாலும் போலி வாய் வீச்சாலும் வளர்க்கப்பட்ட தமிழர்களும் “மூவண்ணக் கொடியேற்றும் உரிமையை” மூவேந்தர் கொடியினை ஏற்றும் உரிமை பெற்றதுபோல் பேசிப் பூரித்தனர்! கலைஞர் கருணாநிதிக்கு அவரின் அரசியல் தந்தை பெரியார் காட்டிய வழிதான் இதுவும்!

பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டுக் கொண்டே 1954 முதல் 1967 வரை, காங்கிரசுக்கு வாக்குக் கேட்டு, தேர்தலுக்குத் தேர்தல் பரப்புரை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்களைக் காங்கிரசிலேயே சேரும்படி அறிக்கையும் வெளியிட்டார்.

“தமிழர்” என்பது கலப்பட இனப்பெயர், “திராவிடர்” என்பதுதான் அசல் அக்மார்க் இனப்பெயர் என பெரியார் பரப்புரை செய்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ச் சனியனைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே வீட்டில் மனைவியுடனும் வேலைக்காரியுடனும் பேசிப் பழகுங்கள் என்றார்.

ஒரு காலத்தில் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்தான்! ஆனால் பிற்காலத்தில் எனது இந்தி எதிர்ப்பு தமிழ் ஆதரவு கொண்டது அல்ல; ஆங்கில ஆதரவு கொண்டது என்று அறிக்கையும் வெளியிட்டார்.

பெரியாரும் கருணாநிதியும் இன உறவு கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில், தமிழ்நாட்டைப் போல் இரண்டுங்கெட்டான் இன அரசியல் கிடையாது. அங்கெல்லாம், காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுக் கட்சி போன்ற இந்தியத்தேசியக் கட்சிகள்தாம்! ஆனால் அவற்றின் “மாநிலத்” தலைமைகள், அலுவலகப் படிவங்கள் நிரப்பும்போது மட்டும்தான் தங்களை இந்தியர் என்று கூறிக் கொள்ளும்; மற்ற நேரங்களில் தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றே அழைத்துக் கொள்ளும். ஆரியக் கைச்சரக்கான “திராவிடர்” என்ற இரண்டுங் கெட்டான் பெயரை அவர்கள் ஏற்கவில்லை.

இரண்டுங்கெட்டான் திராவிடப் பின்புலம் இல்லாதததால்தான், ஆந்திராவில் ஒரு நடிகர் இயல்பாகத் “தெலுங்கு தேசம்” என்ற பெயரில் கட்சி தொடங்க முடிந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களும், காங்கிரசுத் தலைவர்களும் மலையாள இனப்பற்றைத் தாண்டி, மலையாள இனவெறியுடன், தமிழ்நாட்டிற்குரிய முல்லைப் பெரியாறு அணையை முடக்கும் வேலைகளில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சர் கன்னடக் கொடியேற்ற சட்டப்படி அதிகாரிகள் குழு அமைத்துள்ளார்.

இந்தியத்தேசிய வெறிக் கட்சிகளான காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள கர்நாடக, கேரளத் தலைமைகள் கன்னட, மலையாள இனப்பற்றைத் தாண்டி, இனவெறியுடன் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலோ இன உரிமை என்ற பெயரில் “திராவிட” இனம் பேசி, இயற்கையான தமிழின உணர்வைக் கொன்று தமிழரல்லாத அயல் இனங்களின் மீது மோகத்தை வளர்த்துவிட்டனர், திராவிடத் தலைவர்கள்!

இருந்தும் தமிழ் இன உணர்ச்சி இங்கு மற்ற தென்மாநிலங்களைவிட குறைவாக இருப்பதற்குக் காரணம் தமிழின அரசியலில் திராவிட அரசியல் புகுந்ததுதான்!

ஆரிய ஏகாதிபத்தியவாதிகள் புதிதாக கட்டமைத்த “இந்தியன்” என்ற வடக்கத்திய இனப்புனைவுக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழறிஞர்களும், தமிழர்களும் வெளிப்படுத்திய தமிழின உணர்ச்சியை - “திராவிடன்” என்று பெரியார் தலைமையிலான திராவிடத் தலைவர்கள் மடைமாற்றினார்கள். அந்த பாதிப்பைத் தான் இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் சுமக்கிறார்கள்.
கர்நாடகத்தில் கன்னடரல்லாதவர்களாக தெலுங்கர்கள், தமிழர்கள், மராத்தியர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் கூட்டுத்தொகை கன்னடர்களின் மக்கள் தொகையைவிட அதிகம் என்றும் கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் 80 விழுக்காடு அளவிற்குப் பெரும்பான்மையினர்!

கர்நாடகத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரமுள்ள கன்னட வளர்ச்சி ஆணையம் (Kannada Development Authority - KDA) அமைத்துள்ளது அம்மாநில அரசு. கர்நாடகாவில் கன்னடம் உரியவாறு பயன் படுத்தவில்லையென்றால் - அதற்குப் பொறுப்பான அதிகாரிக்கு அல்லது தனிநபருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி வரவழைத்து, அவரை விசாரணை செய்யவும், அவரை இடைநீக்கம் செய்யவும், அவருக்குத் தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்தது கன்னட ஆணையம்!

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை என்று ஒன்றுள்ளது. அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் உரியவாறு தமிழ் எழுதப்பட்டிருக்கிறதா என்று பார்க்கக்கூட அதிகாரம் இல்லை! அதற்கான அதிகாரம், தொழிற்சாலை ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கன்னட ஆணையத்திற்கு அழைப்பாணை (Summoning Authority) அனுப்பும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகாரம் எதுவும் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர்களுக்கோ, இயக்குநருக்கோ இல்லை!

“இருப்பது ஓர் உயிர்; அது போவது ஒருமுறை; அது தமிழுக்காகப் போகட்டும்” என்று ஆயிரத்தோருமுறை பேசிய கருணாநிதி தம் ஆட்சிக் காலத்தில், கன்னட ஆணையம் போல் “தமிழ் ஆணையம்” (Thamizh Authority) அமைக்காதது ஏன்?

கன்னடப் பிராமணப் பெண்ணான செயலலிதாவுக்கு இயல்பிலேயே தமிழுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி உண்டு! எனவே அவர் தமிழ் ஆணையம் அமைக்காததைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமது தமிழ் ஆற்றலால் தமிழ் மக்களிடம் வேர் பிடித்த கருணாநிதி, கன்னட ஆணையம் போல், கன்னடத்தேசியக் கொடி போல் தமிழ் ஆணையம் _ தமிழ்த்தேசியக் கொடி முதலியவற்றிற்கு முயலாதது ஏன்?

பிற மாநிலப் பிராமணர்கள்

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பிராமணர்களும் பிராமண அறிவுத் துறையினரும், அந்தந்த மாநிலத் தேசிய இனத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, அந்தந்த மொழி, இன உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பிராமணர்களில் பெரும்பாலோர் தாங்கள் தமிழர்கள் என்ற உளவியல் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒதுங்கியே சிந்திக்கிறார்கள். அதிலும் அறிவுத்துறை மற்றும் ஊடகத்துறையில் உள்ள பிராமணர்களில் பெரும்பாலோர் தமிழின அடையாளங்களுக்கும், தமிழ்மொழி உரிமைகளுக்கும் எதிராகவே செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களின் முன்னோர்கள் ஆரியர்கள், தங்களின் புனித மொழி சமற்கிருதம் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் வீட்டு நினைவுடனேயே (Nostalgia) வாழ்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்களது ஆரிய கோத்திர நினைவுகள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரக் காரணம் என்ன? வர்ணாசிரம தர்மப்படி ஆரியப் பிராமணர்கள் எல்லோர்க்கும் தலைமையாக ஆதிக்கம் செலுத்தியவர்கள். அந்த ஆதிக்கத்தை இன்று விட்டுவிட மனம் வரவில்லை. நவீனமான முறையில், நளினமான வடிவங்களில் இன்றும் பிராமண ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளுணர்வு!

சோ, குருமூர்த்தி, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் தங்களின் ஆரிய பிராமண ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதை ஓரளவு ஒளிவு மறைவின்றிச் சொல்லக் கூடியவர்கள். இடதுசாரிகள், சனநாயகர்கள், தாராளர்கள் என்று அறியப்படும் பிராமணர்களில் பலர் வர்ணாசிரம தர்மத்தின் மறைமுக இரசிகர்கள்!

தமிழ்நாட்டில் பெரியாரும், திராவிட இயக்கத்தினரும் மிகவும் கடுமையாக அவர்களைப் பகைவர்களாக்கும் வகையில் பிராமண எதிர்ப்புப் பரப்புரை செய்தார்கள்; அதனால் பிராமணர்கள் - குறிப்பாகப் பிராமண அறிவுத் துறையினர் தமிழ்த்தேசிய இனத்துடன் ஒருங்கிணையாமல் போய் விட்டார்கள் என்ற வாதம் இங்கு பேசப்படுகிறது. பிராமண ஆதிக்கக் கொடுமைகள் - சகிக்க முடியாத நிலையில் இருந்ததால், பெரியாரும் அவர் வழி வந்தோரும் கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை இருந்தது. அதனைக் குறைகூற முடியாது!

பிராமண வகுப்பில் பிறந்த பாரதியாரே, “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளை பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்று பாடினார். “ஏது செய்தும் பார்ப்பான் காசு பெற பார்ப்பான்” என்றார்.

சங்க காலத்திலிருந்து ஆரிய இன ஆதிக்கத்தையும் ஆரிய மொழி ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்த மரபு தமிழர்களுக்குண்டு! “பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத வியாதியாம்” என்று பாடினார் திருமூலர். “வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்”, “நால்வருணம் தோல் வருணம் ஏது” என்று பேசினார் வள்ளலார்!

தமிழ்நாட்டுப் பிராமணர்களில் உண்மையான சீர்திருத்தவாதி தோன்றி, களைப்படையாமல் தன் சமூகத்தைத் திறனாய்வு செய்து, அவர் பிராமணர்களிடையே செல்வாக்கு பெற்று அந்த வரலாற்றுப் போக்கில் தமிழர்களும் பிராமணர்களும் தேசிய இன அடிப்படையில் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். அந்தச் சீர்திருத்தம் தமிழ்நாட்டுப் பிராமணர்களிடையே நடைபெறவில்லை.

கர்நாடகத்தில் தனிக்கொடிக்கு அரசுக் குழுவை அம்மாநில முதல்வர் சித்தராமையா அமைத்ததை அம்மாநிலப் பிராமண அறிவுத்துறையினர் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் 1970-இல் கலைஞர் கருணாநிதி தனிக்கொடி திட்டத்தை அறிவித்தபோது இங்குள்ள பிராமண ஏடுகள் அதை எதிர்த்துக் கொதித்துக் கொந்தளித்தன. 1938-இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமிழ்த்தேசியத் தாயகக் குரல் கொடுத்தபோது, “எலிவளை எலிகளுக்கே” என்று பிராமண ஏடோன்று கேலி செய்தது.

தமிழ்நாட்டுப் பிராமணர்களிடையே உள்ள சனநாயக ஆற்றல்கள் பிராமணியத்தை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு அரும்பெரும் பங்காற்றிய அறிஞர்களில் பிராமணர்கள் பலர் உள்ளனர்.

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பிராமணர்கள் மற்ற மாநிலங்களில் அந்தந்த தேசிய இனத்துடன் ஒன்றுகலந்ததுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய இனமாய் உளவியல் பெற வேண்டும்.

குருமூர்த்தி, எச். இராசா, சுப்பிரமணிய சாமி, எஸ்.வி. சேகர் போன்ற ஆரிய ஆதிக்கவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். சனநாயக உணர்வுள்ள பிராமணர்கள் அவர்களை ஓரங்கட்ட வேண்டும். எச். இராசாக்கள், தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றால் பிராமணியத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்வினை விமர்சனங்களும் கடுமையாகத்தான் இருக்கும்!

பிறமொழி பேசுவோர்

கர்நாடகத்தில் தெலுங்கு, தமிழ், மராத்தி மொழிகள் பேசுவோர் - கன்னடத்தேசியக் கொடி உருவாவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கன்னட மொழிதான் கர்நாடக அலுவல் மொழி என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அதேபோல் வரலாற்றின் போக்கில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி இந்த மண்ணின் மக்களாக வாழும் பிறமொழி பேசும் மக்கள், தமிழுடனும் தமிழ்த்தேசியத்துடனும் ஒருங்கிணைந்தவர்கள். இந்த உணர்வை, உறவைக் குலைக்கும் வகையில் தெலுங்கு மாநாடு நடத்தி தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று சிலர் தீர்மானம் போடுகிறார்கள். இந்தத் தன்னலவாதிகளின் சூழ்ச்சி வலையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வீழ்ந்துவிடக் கூடாது!

தமிழ்நாட்டை தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் இருமொழி மாநிலமாக மாற்றும் சூழ்ச்சித் திட்டத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சாரார் முயல்கிறார்கள். இந்த முயற்சியின் பின்னணியில் தெலுங்குத் தொழில் அதிபர்களில் ஒரு சாரார் இருக்கிறார்கள். இந்த முயற்சியின் அறிவிக்கப்படாத தலைவராக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் போன்றோர் செயல்படுகின்றனர். இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாகத்தான், ஆந்திரத் தெலுங்கர்களைத் தமிழ்நாட்டின் ஆளுநராக இந்திய அரசு அவ்வப்போது அமர்த்துகிறது.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் தங்களைத் தமிழர்களாக உணர்கிறார்கள். தமிழ்மொழி உரிமைப் போராட்டங்களில், ஈழ விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அந்த சிறந்த மரபு தொடர வேண்டும்.

பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசும் மக்கள் அனைவரும் இந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல, மரபுவழிப்பட்ட தமிழர்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் இருக்கிறது என்ற நிலைபாடு கொண்டது நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்!
பிறமொழி பேசுவோரும் தமிழைத் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஏற்க வேண்டும். விருப்பப்பாடமாக அவர்கள் தாய் மொழியைக் கற்கும் வாய்ப்பும் இங்கு இருக்க வேண்டும்.

முகமூடித் தமிழ்த்தேசியம்

“தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்துடன் 1930களில் தமிழ்த்தேசியக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் பெரியார் தலைமையிலும் அண்ணா தலைமையிலும் திரிபான திராவிட வடிவம் என்ற போதிலும் தமிழ்நாட்டு விடுதலையை பெருவாரியான தமிழ் மக்கள் ஆதரித்து அணிவகுத்தனர்.

தனிநாட்டு விடுதலைக்குரல் எழுப்பாத ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றையும் ஒருதலைக் காமம் போல் சேர்த்துக் கொண்டு, நான்கு மாநில விடுதலைக்குத் தி.மு.க. குரல் எழுப்பியது. தமிழ்நாட்டு விடுதலையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் திரள் தி.மு.க.வை ஆதரித்தனர். விடுதலை முழக்கத்தை எழுப்பிக் கொண்டு முதல் முதலாக போட்டியிட்ட 1957 தேர்தலில் 15 சட்டப் பேரவை உறுப்பினர்களையும், அடுத்து 1962 தேர்தலில் 50 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் தி.மு.கழகத்திற்கு வழங்கினார்கள்.

அதன்பிறகு 1963இல் தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. 1971 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது தி.மு.க. அதன் பின்னர் காங்கிரசுடனும் பா.ச.க.வுடனும் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து வருகிறது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் எழுப்பிய தனிநாட்டுக் கோரிக்கை தொடக்கத்திலேயே ஒரு பகட்டு முழக்கமாகவே முன்வைக்கப்பட்டது. பிறக்கும்போதே ஊனமாகப் பிறந்தது. தேசியம், தேசிய இனத் தாயகம் ஆகியவற்றைப் பற்றி இவர்களிடம் சமூக அறிவியல் படியிலான வரையறுப்பு இல்லை; அப்படி வரையறுக்க வேண்டும் என்ற விருப்பமும் இவர்களிடம் இல்லை! எல்லாவற்றிற்கும் மேலாக இம்மூவருக்கும், இவர்கள் எழுப்பும் விடுதலைக் கோரிக்கையின் மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை; எனவே விடுதலை இயக்கத்திற்கேற்ற நடைமுறை அரசியலை இவர்கள் பின்பற்றவும் இல்லை!

இந்திய ஏகாதிபத்தியத் தலைமையுடன் கூடிக் குலாவிக் கொண்டனர். தங்கள் இயக்கத்தின் எல்லைக்குள் வராத இன்ன பிற இனங்களையும் இவர்களாக சேர்த்துக் கொண்டு, அவற்றிற்கும் விடுதலை கேட்டனர்.

இவர்களால் தமிழர் இன அரசியலில் - அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களும், பின்னடைவுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றையத் தலைமுறை அவர்கள் ஏற்றி வைத்த சுமைகளைத் தாங்கித் தவிக்கின்றனர்.

மீண்டும் அவ்வாறான குழறுபடிகள் இல்லாமல் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இளந்தலைமுறையினர்க்கு இருக்கிறது.

இந்தியம், திராவிடம் இரண்டையும் புறக்கணிக்காமல் தமிழ்த்தேசியம் பேசினால், அது முகமூடித் தமிழ்த்தேசியம்! முகமூடியில் தமிழர் முகம்; உள்ளே பச்சோந்தி முகம்!

இந்தியம், எதிரியாகச் செயல்பட்டு தமிழர் உரிமைகளைப் பறிக்கிறது. இது நேர்முக எதிரி! திராவிடம் - உறவாடிச் சீர்குலைக்கிறது! இது மறைமுக எதிரி!

இந்தியத்தேசியம் பேசும் அனைத்திந்தியக் கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ள மாநிலங்களில் வளர்ந்துள்ள சொந்த இன உணர்ச்சியும் சொந்த இன அரசியலும், மாநிலக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் இல்லை. இதை உணர்ந்து படிப்பினைகள் பெறுவோம்!

தமிழ்த்தேசிய முழக்கங்கள் இன்று பல முனைகளிலிருந்து வருகின்றன. அம்முழக்கம் எழுப்புவோர், தமிழ்த்தேசிய இறையாண்மையை முன் வைக்கிறார்களா? பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தன்னல மறுப்பு இலட்சியவாதிகளாக இருக்கிறார்களா?

பகட்டு ஆரவாரத்துடன் தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டே, பகைவன் அனுமதிக்கும் கங்காணிப் பதவிகளுக்காகக் காத்திருக்கிறார்களா?

இளந்தலைமுறையினர் இப்படியெல்லாம் அலசி ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏற்கெனவே நம் முன்னோர் ஏமாற்றப்பட்டனர்!

சிந்திக்கத் தயங்காதீர்; மூளைச்சோம்பல் அறிவை முடக்கிவிடும்! திறனாய்வு செய்ய அஞ்சாதீர்; தேசத்தின் தலைவிதி உங்கள் கையில் உள்ளது! நம்தேசம் தமிழ்த்தேசம்!

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் ஆகத்து 16-31 இதழில் தோழர். பெ. மணியரசன் எழுதிய கட்டுரை இது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT