உடனடிச்செய்திகள்

Saturday, February 25, 2017

பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்? பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் கால வோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது வரலாற்றின் இயங்கியல் என்பர் அறிஞர்கள்!

திருப்புமுனை என்று சொல்லிக் கொள்ளாமலே சில மாநாடுகள் திருப்பு முனையாக அமைந்து விடுவதுண்டு.

அப்படித்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு அமைந்து விட்டது. “தமிழ்த் தேசியம்’’ இப்போது தனித்தன்மையுள்ள ஒரு கருத்தியலாக வளர்ந்துள்ளது. ஒரு கருத்தியலாக மட்டுமின்றி அதற்கான அமைப்பு வலிமையும் வளர்ந்து வருகிறது. இதற்கான அடித்தளமிட்டது 1990 பிப்ரவரி 25 மாநாடு!

1980 களிலும் 1990 இன் தொடக்கத்திலும் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும் உச்சத்தில் இருந்தன. தமிழி னம் இனப்படுகொலை செய்யப்படுகிறது. நம்முடைய தமிழினம் தனிநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பிய காலம் அது!

ஆனால் அவ்வுணர்ச்சி, தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒடுக்கப்படுவதைப் பற்றிய கவனம் இல்லாமலேயே வெளிப்படுத்தப்பட்டது. தேசிய இனங்கள் தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை படைத்தவை என்ற வாதங்களை முன் வைத்துத் தமிழ் ஈழம் அமைப்பதை ஞாயப்படுத்தும் தலைவர்கள், பேச்சாளர்கள் அனைவரும் அதே ஒடுக்குமுறை, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இருப்பதைப் பற்றியோ, தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதைப் பற்றியோ பேசுவதில்லை.

அன்றைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைத் தோழர்கள் இது பற்றி கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குரிய தமிழ்த் தேசியம் என்ற அடித்தளத்தின் மீது நிற்காத தமிழீழத் தேச ஆதரவு உறுதியானதாகவும், பெரு வீச்சுள்ளதாகவும் இருக்காது என்றும் பேசினோம். நாங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்பிலிருந்து வெளியேற முடிவெடுத்து அக்கட்சிக்குள் இருந்து கொண்டே, கல்லணையில் கமுக்கமாகக் கூடி விவாதித்தோம். இரண்டு நாள் நடந்த விவாதத்தில் எழுத்து வடிவில் வைக்கப்பட்ட ஓர் ஆவணம் தமிழகத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றியது.

மற்ற அடிப்படை விவரங்களும் அங்கு பேசப்பட்டன. நாங்கள் சி.பி.ஐ.(எம்) கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு / வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய பின் முதல் முதலாக வெளியிட்ட நூல் அதே கல்லணை ஆவணம்தான். நூல் வடிவில் அதன் பெயர் “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ அந்த ஆவணத்தை அப்போது நான் எழுதியிருந்தேன்.

நாங்கள் தனி அமைப்பு கண்ட பிறகு, தமிழ்த் தேசியக் கருத்தியல் எங்களிடையே கூடுதல் முகாமைப் பெற்றது. அப்பொழுது எங்கள் அமைப்பின் பெயர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, சுருக்கமாக எம்.சி.பி.ஐ.

ஈழத்தமிழர் ஆதரவு, காவிரி உரிமை மீட்பு, தமிழ் உரிமைக் காப்பு போன்ற பல தளங்களில் பலப் போராட்டங்களை எம்.சி.பி.ஐ. நடத்திக் கொண்டிருந்தது. அந் நிலையில் மக்கள் விடுதலைக்கான முதன்மைப் புரட்சி முழக்கம் எது என்ற வினா அப்போது கட்சிக்குள் எழுந்தது.

அதற்கு விடைகாண அக்கட்சியின் தமிழக சிறப்புப் பேரவை 12.11.1989 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற அந்தச் சிறப்புப் பேரவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கட்சியின் முன்னணிச் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

செயற்குழுவின் சார்பில் தீர்மானத்தை முன் வைத்து தோழர் கி.வெங்கட்ராமன் (இன்றைய தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்) விளக்கமளித்தார். ஆழ்ந்த அக்கறையோடும், உற்சாகத்தோடும் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசிய நிர்ணய உரிமை’’ என்பதே மக்கள் புரட்சியின் முதன்மை முழக்கம் என அச்சிறப்புப் பேரவை முடிவு செய்தது. இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது என முடிவானது.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கட்சி சார்பின்றி தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டங்களில் முனைந்து ஈடுபட்டு வந்தார். நாங்களும் தோழர் சுப.வீ அவர்களும் தமிழகத் தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்கான மாநாட்டை நடத்துவதென்று முடிவு செய்தோம்.

அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தின் சிற்றரங்கில் 1989 நவம்பர் மாதம் நடத்தினோம். அதில் பாவலர் இன்குலாப், பாவலர் தணிகைச் செல்வன், பேராசிரியர் சுபவீரபாண்டியன், தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் இராசேந்திரசோழன், தோழர் உதயன், காலஞ்சென்ற பேரா. முனைவர் ந. பிச்சமுத்து, பாவலர் அறிவுமதி, தோழர் அ. பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நான் மாநாட்டு நோக்கங்களை விளக்கி முன்மொழிவாகப் பேசினேன். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன.

“தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு’’ என்ற பெயரில் மாநாடு நடத்துவது என முடிவானது. சுயநிர்ணயம் என்பது தமிழ் இல்லை என்பதால் அதனைத் தன்னுரிமை என்று மாற்றிக்கொள்வது என்று முடிவானது. தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு 1990 பிப்ரவரி 25 இல் சென்னை பெரியார் திடலில் நடத்துவது என்று முடிவானது.

பின்னர் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் திருவல்லிக்கேணி அரசு அலுவலர் ஒன்றியக் கட்டடத்தில் நடந்தது. தோழர் அ. பத்மநாபன் வரவேற்புக் குழு தலைவராகவும், தோழர் வண்ணை நக்கீரன், வரவேற்புக்குழு செயலாளராகவும், முடிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் எம்.சி.பி.ஐ. தோழர்கள். பேராசிரியர் முனைவர் ந.பிச்சமுத்து அவர்கள் திருவல்லிக் கேணி பாரதிசாலையிலுள்ள தமது சக்தி புத்தக நிலையத்தை வரவேற்புக்குழு அலுவலகமாக வைத்துக் கொள்ள அனுமதி தந்து உதவினார். சக்தி புத்தகக் கடையின் மாடியில் சீ சைடு லாட்ஜ் (Sea side lodge) இருந்தது. அதில் ஓர் அறையை வாடகைக்கெடுத்து, அதில் தங்கி மாநாட்டு வேலைகளைச் செய்தோம்.

மாநாட்டைப் பொதுத் தன்மையுடன் “இன்னணம்- வரவேற்புக் குழு’’ என்று போட்டு நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். பேராசிரியர் சுப.வீ., பாவலர் இன்குலாப், போன்றவர்களும் இணைந்து நடத்தப்படும் மாநாடு கட்சி சார்பின்றி பொதுத்தன்மையில் நடத்தப்படுவதே பொருத்தம். கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மாநாட்டிற்கு வருவதற்கும் இந்தப் பொதுத் தன்மை வாய்ப்பளிக்கும். இம் மாநாட்டை முன்மொழிந்தது மற்றும் இதை நடத்துவதில் அமைப்பு வழிப்பட்ட ஆற்றலாக இருந்தது எம்.சி.பி.ஐ. என்றாலும் பொதுத் தன்மையுடன் நடத்த முன் வந்தது எம்.சி.பி.ஐ. அணுகுமுறையிலும் சனநாயகத் தன்மையைக் காட்டியது.

சுப.வீ அவர்கள் கடுமையாக உழைத்தார் நண்பர்களைத் திரட்டினார். 1990 பிப்ரவரி 25 அன்று பெருந்திரளான உணர்வாளர்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் கூடியிருந்தனர். எம்.சி.பி.ஐ. தோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள் மற்றும் ஊர்திகள் எடுத்து, ஆண்களும் பெண்களுமாக வந்திருந்தனர்.

மதுரையிலிருந்து புரட்சிக்கவிஞர் பேரவைத் தோழர்கள் நெய்வேலியிலிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஊர்திகள் எடுத்து வந்திருந்தனர். சென்னை புதுவண்ணைப் பகுதியிலிருந்து “தாகம்’’ தேநீரகம் வைத்திருந்த தோழர்கள் சிறப்பாக சுவரெழுத்து விளம்பரங்கள் செய்திருந்தனர். மாநாட்டிற்கும் வந்தனர். தாகம் இதழ் செங்குட்டுவன் ஜூனியர் விகடன் திருமாவேலன் ஆகியோர் அந்தத் தாகம் அமைப்பில் இருந்தனர். இவர்கள் தோழர் சுபவீ அவர்களின் தொடர்பில் வந்தவர்கள்.

முற்பகல் நிகழ்வு தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் எழுச்சி இசையுடன் தொடங்கியது. தோழர் அ.பத்மநாபன் வரவேற்புரைக்குப்பின் எம்.சி.பி.ஐ தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் சௌ.வேணுகோபால் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. பின்வரும் விவரப்படி கருத்தரங்கம் நடைபெற்றது.

பேரா. முனைவர் சுப.வீரபாண்டியன் - தமிழ்த் தேசிய இன எழுச்சி வரலாறும் படிப்பினைகளும்,

காரல்தாசு - தேசிய இனப் போராட்டம் உலகு தழுவிய அளவில்

கவிஞர் இன்குலாப் - தேசிய இனப்போராட்டம் இந்திய அளவில்

அசுவகோசு - தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?

கவிஞர்தணிகைச்செல்வன் - தேசிய இனப்பிரச்சினைகளும் வர்க்கப் போராட்டமும்

கி.வெங்கட்ராமன் - தன்னுரிமை கொண்ட தமிழகத்தில் தமிழர்களின் புது வாழ்வு.

பல கோணங்களில் நின்று தேசி யத் தன்னுரிமைக் கொள்கையை விளக்கும் ஆழமான உரையரங்கமாக இது திகழ்ந்தது.

பின்னர் மதுரைத் தோழர் இராஜன் தலைமையில் மாணவர் அரங்கம் நடந்தது. மாணவர்கள் செகதீசுவரி (சென்னைப் பல்கலைக் கழகம்) ரவி (காஞ்சிக் கலைக் கல்லூரி), இராமகிருட்டிணன் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரி) செயச் சந்திரன் (சென்னைப் புதுக் கல்லூரி) சிற்றரசு (கோவை அரசுக் கல்லூரி) வாசு தேவன்(கிண்டி தொழிற்பயிற்சி நிலையம்) சி.வெற்றி வேல் (தமிழ்த் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்), கரு.கணேசன் (சென்னை சட்டக் கல்லூரி), த. பொன்னுசாமி (சென்னைப் பல் கலைக் கழகம்), முனுசாமி என்கிற தமிழ்நம்பி (திண்டிவனம் கோவிந்த சாமி அரசினர் கலைக் கல்லூரி) ஆகியோர் உரையாற்றினர்.

சிறுவன் பாரதி வசந்தனின் (இப்பொழுது திரைப்படக் கவிஞர் யுகபாரதி) கவிதை வீச்சு இடம் பெற்றது.

காஞ்சி கவிஞர் அமுத கீதன் எழுதி இயக்கிய “உரிமை முழக்கம்’’ நாடகம் நடந்தது. காஞ்சி கலைக் குழுத் தோழர்கள் பாவெல், ச.யோக நாதன் (காஞ்சி அமுதன்) சம்பத் குமார், உலக ஒளி, கோதண்டம், கோ. மணிவர்மா ஆகியோர் நடித்த னர்.

காஞ்சி கலைக்குழுப் பாடகர்கள் தோழர்கள் பாவெல், சம்பத் குமார், உலக ஒளி ஆகியோர் எழுச்சிப் பாடல் பாடினர்.

உடனடிக் கோரிக்கைகள் குறித்த தீர்மானங்களை முன் மொழிந்து தோழர் குமரி மகாதேவன் (அப் போது தமிழர் தேசிய இயக்கம்), ஆண்டன் கோமஸ் (கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட் டக்குழுத் தலைவர்) நெய்வேலி மு. செந்திலதிபன் (இப்போது ம.தி.மு.க., தத்துவ அணிச் செயலாளர்), க. பழநிமாணிக்கம் (எம்.சி.பி.ஐ., தஞ்சை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வுகளுக்கிடையே எனது “இந்தியாவில் தேசிய இனங்கள்’’ என்ற நூலின் இரண்டாவது பதிப்பை முனைவர் ந.பிச்சமுத்து வெளியிட ஈகி கன்னியாகுமரி பி.எஸ். மணி பெற்றுக்கொண்டார்.

பாவரங்கில் பாவலர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, இருவரும் எழுச்சிமிகு பா படித்தனர்.

நிறைவாக, சிறப்பரங்கம்; அதன் தலைமை நான் (பெ. மணியரசன்)

சிறப்புரை: திரு பழ. நெடுமாறன் அவர்கள். அப்போது அவர் தமிழ் ஈழம் சென்றிருந்ததால் தமது உரையை எழுதி தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பரந்தாமன் வசம் கொடுத் தனுப்பியிருந்தார்கள். தோழர் பரந்தாமன், ஐயா அவர்களின் உரை யைப் படித்தார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் மராத்திய மாநில அமைப்பாளர் திரு வெ. பன்னீர்செல்வம், கர்நா டகத் தமிழர் பேரவைத் தலைவர் திரு ப. சண்முக சுந்தரம், ஈழத் தமிழர் சார்பில் எம்.கே. ஈழ வேந் தன், திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன், வெகுமக்கள் சமுதாயக் கட்சித் தலைவர் நகைமுகன், தெற்கெல்லை மீட்புப் போராளி ஈகி கன்னியாகுமரி பி.எஸ். மணி, திராவிடர் கழக வழக்கறிஞர் அருள் மொழி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பேரா. தீரன், தமிழறிஞர் சாலை இளந்திரையன், நிறைவாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் பேசினர்.

நான் எனது தலைமையுரையில் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை” (Right to self determination with right to secede) என்ற தீர்மானத்தை முன் மொழிந்து பேசினேன். இதற்கான வரைவுத் தீர்மானம் 1 1/2 மாதத் திற்கு முன்பாக அச்சிட்டுக் குறு நூலாக வெளியிடப்பட்டது. காங் கிரசு உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது. துக்ளக் உட்பட பல ஏடுகளுக்கும் அனுப்பப் பட்டது.

தமிழக மெங்கும் அங்கங்கே உணர்வாளர்கள் கூட்டம் நடத்தி இவ்வரைவுத் தீர்மானத்தை விளக்கிக் கூறினோம். ஐயங்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவற்றைக் கேட்டோம். சில திருத்தங்கள் செய்தோம். அவ்வாறு திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினேன். பேசி முடித்த பின் கருத்துகள் கேட்டேன். சிலர் கருத்துகள் கூறினர். அவ்வாறு திருத்தம் கூறியவர்களுள் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர் களும் ஒருவர். அங்கே வந்த சில திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இறுதியாகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

ஏற்பிசைவின் வெளிப்பாடாக அரங்கம் அதிர கையொலி எழுப்பினர்.

தீர்மானத்தின் சாரம் இதுதான்:

தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனத்தவர். பிற தேசிய இனங்க ளுடன் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்று முடிவெடுக்கும் உரிமை ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. இந்த உரிமைக்குப் பிரிந்து போகும் உரிமை யுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with rights to secede) என்று பெயர் தமிழ்த் தேசிய இனத்திற்கு உடனடியாக இவ் வுரிமை வேண்டும்.

இந்தியா ஒரு தேசம் அன்று. இந்தியாவில் பல தேசிய இனங்கள் பல தேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லாத் தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை வேண்டும்.

தேசம் என்று குறிப்பிடப்பட வேண்டியவற்றை மாநிலம் என்று கூறுவது தவறு.

குடியுரிமை வழங்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழ்த் தேசக் குடியரசு என்று அழைக்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் இருப்பது போல் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை கொண்ட தேசங்களின் ஒன்றியமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

நிறைவரங்கத்தில் பேசியோர் இத்தீர்மானத்தை ஆதரித்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெங்களூர் அண்ணாச்சி சண்முக சுந்தரம், சாலையார் ஆகியோர் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்று கேட் காமல் நேரடியாக விடுதலையைக் கேட்கவேண்டும். என்றனர்.

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று பேசினார் வழக்கறிஞர் அருள்மொழி. பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும் விட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்க வேண்டும் என்று நான் பேசியத் திற்கு மறுமொழியாக இவ்வாறு கூறினார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், மேற்படி வரைவுத் தீர்மானத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் பற்றியும் தேசிய இன ஒடுக்குமுறை பற்றியும், சமூகக் கட்டமைப்பு பற்றியும் ஆய்வாகக் கூறப்பட்ட கருத்துகளை மிகவும் பாராட்டிப் பேசினார்.

தமிழின உரிமைப் போராட்டம் தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதற்காக ஈகங்கள் செய்துள்ளார்கள் தமிழ் மக்களும் தமிழறிஞர்களும் தலைவர்களும்! ஆனால் இலக்கு துல்லியப் படுத்தப்படவில்லை. சமூக அறிவியல்படி சரியான விளக்கங்களும் வரையறுப்புகளும் வழங்குவதில் குறைபாடுகள் நீடித்தன.

தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் வழியாக மீண்டும் தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின உணர்ச்சி - தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு விடுதலை நோக்கித் திரும்புவதில் இம் மாநாடு குறிப்பிடத்தகுந்த பணியைச் செய்துள்ளது என்ற நம்பிக்கையுடன், மனவெழுச்சி யுடன் உணர்வாளர்கள் விடை பெற்றனர்.

ஆனால் இவ்வளவு பெரிய மாநாடு பற்றி நாளேடுகள் எதுவும் எழுதவில்லை. மிக விரிவாகச் சுவரொட்டிகள் மூலம் சுவரெழுத்து மூலம் விளம்பரப்படுத்தப் பட்ட, விரிவாக வரைவறிக்கை விவாதிக்கப்பட்ட நாளேடு ஒன்றில் விளம்பரம் கொடுக்கப்பட்ட இம் மாநாடு பற்றி நாளேடுகள் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் துக்ளக் கிழமை ஏடு கனமாகக் கண்டு கொண்டது. “இலக்கு பிரிவினை, வழி வன்முறை” என்று தலைப்புக் கொடுத்து இம்மாநாடு பற்றி மூன்று பக்கங்கள் எழுதியிருந்தது. அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் திரு தமிழ்க்குடிமகன் அவர்கள் அம் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதை மாநாட்டில் படித்தோம். அதையும் சுட்டிக் காட்டி, தி.மு.க. ஆட்சியின் ஆதரவோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று எழுதியது.

பெருஞ்சித்திரனார் பேச்சு, என் பேச்சு அருண்மொழி பேச்சு, சுபவீ பேச்சு, இன்குலாப் பேச்சு முதலிய வற்றில் சிற்சில பகுதிகளைப் போட்டு, இந்தியாவை உடைத்திட பிரிவினைப் போராட்டம் நடத்திட இம்மாநாடு என்று எழுதியிருந்தது.

பாவலர் ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்ற வரிகளைத் தூக்கிப் போட்டுப் “பார்த்தீர்களா வன்முறை நோக்கத்தை” என்று எழுதியது. பாவலர் அறிவு மதியின் பாடல்வரிகள் சிலவற்றைப் போட்டது,

“1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!”

இவைதாம் அறிவுமதி பாடலின் அந்த வரிகள்! சில சொற்கள் மாறியிருக்கலாம். துக்ளக் பற்ற வைத்த நெருப்பு பற்றிக் கொண்டது. அப் போது நடந்த தி.மு.க. ஆட்சியை எதிர்க்க இம்மாநாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவராக அப்போதிருந்த முரளி மனோகர் சோசி “தி.மு.க. ஆட்சி பிரிவினை சக்திகளை ஊக்கப்படுத்துகிறது” என்று கண்டன அறிக்கை கொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. ஆட்சிக் கெதிராக ஒரு வாரம் நடத்திய பரப்புரையில் “தி.முக. ஆட்சியில் தங்கு தடையின்றி பிரிவினைவாத மாநாடு நடந்திருக்கிறது. கொடுமை என்னவென்றால் இப்பிரிவினை மாநாட்டை வாழ்த்தி சபாநாயகரே செய்தி அனுப்பியுள்ளார்” என்ற குற்றச்சாட்டைத் தனது துண்டறிக் கையில் கூறியிருந்தது. இதனை அது தனது மாநில செயற்குழுத் தீர்மானத்திலும் கூறியிருந்தது.

தமது ஆட்சி பற்றி பார்ப்பன ஏடுகளில் ஏதாவது குற்றச்சாட்டு வந்துவிட்டால் அதுவும் தமிழினத்திற்குச் சார்பாக இருக்கிறார் என்று வந்துவிட்டால் நடுங்கிப் போவார் கலைஞர் கருணாநிதி. உடனே என்மீது 1967ஆம் ஆண்டின் பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தினார். அதே போல் பாவலர் அறிவுமதி மீது தேசியக் கொடியை அவமதித்த வழக்கைப் பதிவு செய்யச் சொன்னார். இச் செய்தி நாளேடுகளில் வரும்படிச் செய்தார்.

உடனடியாக என்னைத் தளைப்படுத்தவில்லை. வழக்குப் போட்டுக் கணக்குக்காட்டியாகி விட்டது. காவல்துறையினர் இம்மாநாட்டில் நான் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதற்கான சாட்சியங்கள் ஆவணங்கள் அணியப் படுத்தக் காலமெடுத்துக் கொண்டனர். 1990 டிசம்பர் 24 முன்னிரவில் சிதம்பரத்தில் தளைப்படுத்தி - இரவு அங்கு காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு, டிசம்பர் 25 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தினர். தோழர் கி.வெங் கட்ராமன் கூடவே சிறைச்சாலை வரை வந்தார்.

சென்னை நடுவண் சிறையில் என்னை அடைத்தனர்.

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் என் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். சென்னை, சைதை யில் தோழர் அ. பத்மநாபன் தலைமையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசினார். பின்னர் பிணையில் வெளிவந்த போது, பா.ம.க.வின் முன்னணித் தலைவர்களான தோழர்கள் தலித் எழில் மலை (பாமக பொதுச் செயலாளர்) பு.தா.இளங்கோவன் ஆகியோர் சிறைவாயிலில் என்னை வரவேற்று மருத்துவர் சார்பில் சால்வை அணிவித்தனர்.

இந்திய அரசுக் கொடியை அவமதித்த வழக்கில் தோழர் அறிவுமதி அவர்களும் - பிரிவினைத் தடைச் சட்ட வழக்கில் நானும் எட்டாண்டுகள் எழும்பூர் நீதி மன்றத்தின் மாநகரக் கூடுதல் தலைமை நீதிபதி நீதிமன்றத்திற்கு அலைந்தோம். தீர்மானம் முன்மொழிந்ததை நானும் மறுக்கவில்லை. பாடல் பாடியதை அறிவுமதியும் மறுக்கவில்லை.

எனக்காக வழக்கறிஞர்கள் சென்னை திரு.சி. விசயகுமார் அவர்கள், திரு. தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் ஆகியோர் வாதாடினர். மேற்படித் தீர்மானம் நிறை வேற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என்று வாதிட்டனர். துக்ளக் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. ரமேஷ் வந்துதாம் எழுதியதை உறுதி செய்து சாட்சி சொன்னார். என் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தோழர்அறிவுமதிக்காக வழக்கறிஞர் பாலு வாதாடினார். தோழர் அறிவுமதியும் விடுதலை ஆனார்.

ஆனால் தூர்தர்சனில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக இருந்த பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவ்வளவு அதிர்வுகளை அந்த மாநாடு ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் எம்சிபிஐ தலைமைக் குழுவில் உள்ளோர் வரைவுத் தீர்மானம் அச்சிட்டு சுற்றுக்கு வெளியிட்ட உடனேயே ஒரு முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டோம். “இந்த மாநாட்டுத் தீர்மானத்திற்காக என்ன அடக்கு முறை வந்தாலும் ஏற்க வேண்டுமே தவிர இந்தத் தீர்மானத்தைக் கைவிடக் கூடாது’’ என்பதுதான் அந்த உறுதி. அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை மேலும் மேலும் செழு மைப்படுத்தி, தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்துள்ளோம். “தமிழ்த் தேச விடுதலை” என்று முழக்கத்தைக் கூர்மைப் படுத்தியுள் ளோம்!

தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு ஏற்படுத்திய தாக்கம் பல வகையிலானது. ஐயா நெடுமாறன் அவர்கள் அதே ஆண்டு சூன் 9,10 நாட்களில் தஞ்சையில் தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாடு” நடத்தப் பெரிய அளவில் ஏற்பாடு கள் செய்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு மாநாடு என்று கூறி தி.மு.க. ஆட்சி அதைத் தடை செய்தது. நெடுமாறன், பாவலரேறு பெருஞ் சித்திரனார், சாலையார், சாலினியார், தாமரை பெருஞ்சித்திரனார், கி.வெங்கட்ராமன் (பேரியக்கப் பொதுச் செயலாளர்), சுப.வீரபாண்டியன் உட்பட பலர் சிறைப் படுத்தப்பட்டனர். த.தே.இ. பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் முருகேசன் தேசியப் பாது காப்புச் சட்டத்தில் அடைக்கப் பட்டார்.

அதன்பிறகு சென்னையில் பாமக நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் “தமிழகத்திற்குத் தன்னுரிமை” கோரித் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது செயலலிதா ஆட்சி! மருத்துவர் இராமதாசு, திரு. பழ.நெடுமாறன், பண்ருட்டி இராமச்சந்திரன், பெ.மணியரசன், சுபவீ, தியாகு, நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

1990 பிப்ரவரியில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்திய போது முதலாளியத்திற்குப் பல்லக்குத் தூக்கப் போவதாக எம்சிபிஐ யைத் தாக்கி எழுதின சில மார்க்சிய - லெனினிய அமைப்புகள். பின்னர் அவை தன்னுரிமையை ஆதரித்தன. அவற்றில் ஒன்று தமிழ்நாடு விடுதலை வேண்டும் என்று கூறித்தன் அமைப்பின் பெயரையே மாற்றிக் கொண்டது.

இன்று ஏராளமான தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளன.

எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசம் தமிழ்த் தேசம்
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது இலட்சியம்

என்று வரையறுக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்நாடு விடுதலையை அறிவிக்கப்பட்ட இலட்சியமாகக் கொள்ளாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசிய அமைப்பு ஆகாது என்பதே துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு!

இதன் தொடக்கமாகத்தான் 1990 பிப்ரவரி 25இல் சென்னைப் பெரியார் திடலில் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பிரிந்துபோகும் உரிமை கோரிய தீர்மானம்!

1990-லிருந்து தொடர்ந்து தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்து வரும் வாய்ப்பையும் அதனை அடிப்படை இலட்சியமாகக் கொண்ட வேலைத் திட்டங்களைச் செயல்படுத்திய பட்டறிவையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கு வரலாறு வழங்கியது.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் தமிழ்த் தேசியக்களத்தில் முகாமை பெறுகிறது. எனவே, ஆண்டுதோறும் பிப்ரவரி 25 ஆம் நாளைத் தமிழ்த் தேசிய நாளாகக் கடைபிடிக்கலாம் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஐயா பழ.நெடுமாறன், ஐயா பாவலரேறு போன்றோரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாநாட்டு நாள் அது! தமிழகத்தில் விரிவான கலந்தாய்வுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. பல தரப்பினரையும் கொண்ட மூவாயிரம் தமிழர்கள் பங்கேற்க நடந்த மாநாடு அது!

இந்த பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் எங்களுக்கு மட்டுமே உரியதென்று நாங்கள் தனியுரிமை கோரவுமில்லை. தமிழ்த் தேசியம் பேசும் அனைவரும் இந்நாளைக் கடைபிடிக்க வேண்டுமென்று திணிக்கவுமில்லை. தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடைபிடிக்கிறது. இந்நாளைத் தக்கதென்று கருதும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழர்களும் கடைபிடிக்கலாம்!



தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சியில் நாளை நூலறிமுகம்!

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சியில் நாளை நூலறிமுகம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” - நூலின் அறிமுக விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், திருச்சியில் நாளை (25.02.2017) நடைபெறுகின்றது.

திருச்சியில், நாளை காரிக்(சனி)கிழமை (பிப்ரவரி 25) அன்று மாலை 5.30 மணியளவில், தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள ராஜா (ஓட்டல்) உணவகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தொடக்கவுரையாற்றுகிறார். திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. வீ.ந. சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்குகிறார்.

திருச்சி - தனிநாயகம் அடிகள் தமிழியல் கல்லூரி முதல்வர் அருட்திரு. அமுதன் அடிகள் நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார். புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் த. மணி நூலாய்வு உரையாற்றுகிறார்.

நூலாசிரியரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, February 21, 2017

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சி - சென்னையில் நூலறிமுகம்!

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சி - சென்னையில் நூலறிமுகம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” - நூலின் அறிமுக விழாக்கள் திருச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகின்றன.

திருச்சி

திருச்சியில், வரும் காரிக்(சனி)கிழமை (பிப்ரவரி 25) அன்று மாலை 5.30 மணியளவில், தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள ராஜா (ஓட்டல்) உணவகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தொடக்கவுரையாற்றுகிறார். திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. வீ.ந. சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்குகிறார்.

திருச்சி - தனிநாயகம் அடிகள் தமிழியல் கல்லூரி முதல்வர் அருட்திரு. அமுதன் அடிகள் நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.

சென்னை

சென்னனையில், வரும் ஞாயிறு (பிப்ரவரி 26) அன்று மாலை 5.30 மணியளவில், எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார்.

சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் வாழ்த்துரை வழங்குகிறார். கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் நூலை திறனாய்வு செய்து உரையாற்றுகிறார். தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் சிறப்புரை நிகழ்த்துகிறாது.

சென்னை - திருச்சி ஆகிய இரு நிகழ்வுகளிலும், புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் த. மணி நூலாய்வு உரையாற்றுகிறார்.

நூலாசிரியரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
               www.fb.com/panmaiveli

Monday, February 20, 2017

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? பெ. மணியரசன் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.02.2017) நடந்த நிகழ்வுகள், அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும், தன்னலவாத – அராஜகக் கட்சிகள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சர் தேர்வு என்பது சனநாயக முறைப்படி இல்லாமல், சசிகலா ஆள்கடத்தல் கும்பலின் அராஜகத்தின் வெற்றியாக முடிந்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறிய, முதன்மை எதிர்க்கட்சி இரகசிய வாக்கெடுப்பு கோரிய போது, அ.இ.அ.தி.மு.க. உண்மையான சனநாயக அமைப்பாக இருந்திருந்தால், இரகசிய வாக்கெடுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலையை எண்ணும் முறையில் வெற்றி பெறுவது என்ன சனநாயகம்? தலைகளைக் கடத்திப் பல நாள் பதுக்கி வைத்திருந்து, சட்டப்பேரவைக்கு மந்தையாய் ஓட்டி வந்து – தன்னை வாங்கியவர்களின் கண்காணிப்பின் கீழ் கை தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது அ.தி.மு.க. பாணி சனநாயகம்!

தி.மு.க. பாணி சனநாயகம் எப்படி இருந்தது? சட்டப்பேரவைக்குள் தகராறு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வந்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய எதிர்ப்பை சனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்கு மாறாக, நாற்காலிகளைத் தூக்கி எறிவது, குப்பைக் கூடைகளைத் தூக்கி எறிவது, பேரவைத் தலைவரைப் பிடித்து இழுத்துத் தள்ளுவது, அவருடைய நாற்காலியில் தி.மு.க. உறுப்பினர்கள் போய் குந்திக் கொள்வது என்ற அராஜகங்களை தி.மு.க. அரங்கேற்றியது!

தி.மு.க. நடத்திய இந்த கலாட்டா எந்த வகையிலும், சனநாயக வழிமுறையாக இருக்காது. ஆனால், இந்த கலாட்டாவை ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படாத சொல்லாக இதுவரை “அறம்” இருந்தது. அதையும் கொச்சைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பதவிப் போட்டியில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதில் ஒரு விழுக்காடுகூட காட்டவில்லை! அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை.

தமிழ்நாட்டு இன – மொழி – பண்பாட்டு உரிமைகளுக்கு கருத்துருவாக்கம் செய்ய, களப்போராட்டம் நடத்த முன் வந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் சரியான தமிழ்த்தேசிய மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற படிப்பினையைத்தான் தமிழர்களுக்கு, நேற்றைய சட்டப்பேரவை அராஜகங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Sunday, February 19, 2017

“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே பெ. மணியரசன் பேச்சு!

“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் “தமிழ் மன்றம்” சார்பில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் நேற்றும்(17.02.2017) இன்றும்(18.02.2017) இருநாட்களாக நடந்து வந்த “தமிழ் அறிவுத் திருவிழா – 2017” இன்று நிறைவு பெற்றது.
கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், நேற்று கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான இன்று (18.02.2017), தமிழ்நாடு தழுவிய அளவில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கவியரங்கம், பேச்சு, விவாதம், நாடகம், நடனம் உள்ளிட்ட திறனறிதல் போட்டிகள் நடந்தன. மாலை விழாவில் நிறைவரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிறைவரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்துரையாற்றியதோடு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தமிழ் மன்றப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. ப. சிவக்குமார், முன்னாள் மாணவரும், தொழில் முனைவோருமான திரு. சந்திப் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்புரையாற்றிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு பேசினார்:
“தமிழ் மன்றம் நடத்தும் இவ்வாண்டு விழாவிற்குத் “தமிழ் அறிவுத் திருவிழா” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள். பாராட்டிற்குரிய தலைப்பு! விழா தொடங்கும் முன் போட்ட காணொலிக் காட்சியில், முத்தமிழ் நிகழ்ச்சி எனப் போட்டிருந்தீர்கள்.
தமிழ் மொழி என்றாலே அறிவு மொழி என்றுதான் பொருள். தமிழினம் ஒர் அறிவியல் சமூகம்! இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும் வகையில் முத்தமிழ் என்று நாம் சொல்கிறோம்.
இயல், இசை, நாடகம் என்ற இம்மூன்றும் உலகத்தின் பல மொழிகளிலும் இருக்கின்றன. ஆனாலும், அவை மூன்று ஆங்கிலம், மூன்று பிரஞ்சு, மூன்று டச்சு என்று போட்டுக் கொள்வதில்லை! தமிழர்கள் மட்டும் ஏன் முத்தமிழ் எனப் போட்டார்கள்? எதையும் நுணுகி ஆராய்ந்து வகுத்துத் தொகுக்கின்ற அறிவியல் முறை நம் முன்னோர்களிடம் இருந்தது.
இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் மூன்று வகை இலக்கணங்களைச் சொன்னார்கள். அதற்குள்ளும் இரண்டு வாழ்வியல் பிரிவுகள் பிரித்தார்கள். ஒன்று, அக இலக்கியம். இன்னொன்று, புற இலக்கியம்.
உலகில் பல மொழிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அக இலக்கியம் என்ற தனிப் பிரிவு கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்தில், காவியங்களும் பல்வேறு இலக்கியங்களும் நிறைந்த மொழி என சமற்கிருதத்தைச் சொல்கிறார்கள். அந்த சமற்கிருதத்தில் நம்முடைய அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்ற அக இலக்கியம் கிடையாது. ஒரு அகத்துறையும் கிடையாது.
தமிழர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து தொகுக்கக்கூடியவர்கள். ஒரு கருத்தோ ஒரு கோட்பாடோ சொன்னால், அதற்கு வரைவிலக்கணம் சொல்லக்கூடிய தருக்கவியல் பாங்கு தமிழர்களிடமே இருந்தது. மாணவர்களாகிய நீங்கள்கூட, யாராவது ஒரு கோட்பாட்டையோ புதிய கருத்தையோ சொன்னால் அதற்கு வரைவிலக்கணம் சொல்லுங்கள் என்று கேளுங்கள்.
இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனுக்கு குட புலவியனார் என்ற புலவர் அறிவுரை கூறினார். மன்னவர்களைப் பொய்யாகப் புகழ்ந்து பாடுபவர்கள் அல்லர் நம் சங்கப்புலவர்கள்! இப்பொழுது உள்ளது போல் கவிஞர்கள், தமிழறிஞர்கள் அந்த காலத்தில், ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து வாழவில்லை!
அந்த வகையில்தான் குடபுலவியனார் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்து சொன்னார்: “உன் போர்க்கள வெற்றிகள், உனக்கு நிலைத்த புகழைத் தராது. மக்கள் உயிரைப் பாதுகாக்கும் செயல்கள்தான், உனக்குப் புகழைத் தரும். இறந்த பின்னும் உன் புகழை நிலை நிறுத்தும்” என்று சொல்ல வந்த குடபுலவியனார், சில வரையறுப்புகளைச் சொன்னார்.
“உயிர் என்பது உணவின் பிண்டம். அதாவது, உணவினால் இயங்குவது. உணவு என்பது நீரும் நிலமும் சேர்ந்தது. நிலத்தோடு நீரை இணைத்தவர்தான் உணவைக் கொடுத்து, உயிரைக் காத்தவர் ஆவார். எனவே, நீ ஏரி, குளங்களைப் பெருக்கி மக்களைக் காப்பாற்றினால், இம்மண்ணில் உன் புகழ் தங்கும். இல்லையேல் தங்காது” என்றார். இந்தப் பாட்டில், உயிர் என்றால் என்ன, உணவு என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தருகிறார்.
மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேச்சை, பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் இல்லை! வழிகாட்டுவதற்குரிய உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் நீங்கள்! (கைதட்டல்) எனவே சீரழிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தலை நிமிர்த்த, வழிகாட்ட வாருங்கள்!
உங்களிடம் புதிதாகத் தோன்றும் கருத்துகளை கூச்சப்படாமல், தயங்காமல், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வெளிப்படுத்துங்கள். தவறாகச் சொல்லி விடுவோமோ என்று அச்சப்படாதீர்கள். ஒருவேளை, தவறாகப் போய்விட்டால், திருத்திக் கொள்ளலாம். அடுத்த தடவை சரியான கருத்தை வெளியிட முடியும்!
ஆங்கில அறிஞர் எமர்சன் “தன்னம்பிக்கை” என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “உங்கள் சிந்தனையில் தோன்றும் புதிய கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்துங்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக அல்லது கூச்சம் – வெட்கம் ஆகியவற்றின் காரணமாக அதை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒரு சில ஆண்டுகள் கழித்து அதே கருத்தை இன்னொருவர் சொல்வார். அப்போது உங்கள் நிலை என்ன? இக்கருத்தை முதலில் சிந்தித்த நீங்கள், இன்னொருவர் சொன்ன பிறகு அதை ஏற்க வேண்டிய நிலைக்கு உள்ளாவீர்கள். அந்தக் கருத்து, அவருடையதாக இருக்கும்! எனவே, உங்களிடம் தோன்றும் சிந்தனைகளை அச்சப்படாமல் வெளிப்படுத்துங்கள்” என்றார். அதையேதான், உங்களிடத்தில் நான் சொல்கிறேன்.
முன்முயற்சி (Initiative) எடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள முக்கியமான சிக்கலே முன்முயற்சி எடுப்போர் மிகமிகக் குறைவாக இருப்பதுதான்! சாலையில் ஒருவர் விழுந்து கிடந்தால், “அய்யோ விழுந்து கிடக்கிறாரே” என்று சொல்லிக் கொண்டே பலர் போய்க் கொண்டிருப்பர். அவர்களுக்கு இரக்க குணம் இல்லாமல் இல்லை! முன்முயற்சி எடுப்பதில் தயக்கம் இருக்கிறது. சிலருக்கு வெட்கம் அல்லது கூச்சம்கூட இருக்கும். பத்து நிமிடம் கழித்து அதே சாலையில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடப்பவரைத் தூக்குவார். உடனடியாகப் பலரும் அங்கே ஓடி வந்துவிடுவார்கள். ஒருவர் சோடா வாங்கிக் கொடுப்பார். இன்னொருவர் தண்ணீரை முகத்தில் தெளிப்பார். மற்றொருவர் விழுந்து கிடக்கும் அவரது இரு சக்கர வண்டியைத் தூக்கி நிறுத்துவார். இந்தச் செயல்கள் பத்து நிமிடங்களாக அவர் விழுந்து கிடந்தபோது, ஏன் நடக்கவில்லை? முன்முயற்சி எடுப்பதில் உள்ள குறைபாடுதான்! முன்முயற்சி எடுப்பவர் வந்தவுடன் மக்கள் கூடிக் கொண்டார்கள்.
நீங்கள் முன்முயற்சி எடுப்பவராக இருங்கள்! புதிய வரலாற்றை உங்களால் உருவாக்க முடியும்! நீங்கள் முன்முயற்சி எடுத்தால், தமிழ்ச்சமூகம் உங்களோடு சேர்ந்து கொள்ளும்! (கைதட்டல்)
அந்தக் காலத்தில், ஒற்றையடிப் பாதையில் பயணம் போன ஒருவர், அப்பாதையில் கிடந்த முள் கொத்தைக் கவனிக்காமல் மிதித்துவிட்டார். அது குத்தி விட்டது! அவர் உடனே நின்று காலிலிருந்த முள்ளை நீக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த முள் கொத்து பாதையில் அதே இடத்தில் கிடந்தது. அரைமணி நேரம் கழித்து, இன்னொருவர் அந்தப் பாதையில் வந்தார். அவர் முள் கொத்தைக் கவனித்துவிட்டார். காலில் குத்திக் கொள்ளாமல் ஒதுங்கிப் போய்விட்டார். அரைமணி நேரம் கழித்து, மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். அவர் முள் கொத்தைப் பார்த்தார். அவர் அதை எடுத்து அருகிலிருந்த வேலியில் போட்டு விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த மூன்றாவது நபராக நீங்கள் இருங்கள்! (கைதட்டல்)”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், தமிழ் மன்றப் பொருளாளர் மாணவர் கௌரி சங்கர் நன்றி நவின்றார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Saturday, February 18, 2017

"பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையெனில், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” கேரள தடுப்பணையை பார்வையிட்ட பின் கோவையில் - பெ. மணியரசன் பேட்டி!

 "பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையெனில், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” கேரள தடுப்பணையை பார்வையிட்ட பின் கோவையில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேட்டி!

“பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையென்றால், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்டங்களில் வாழும் மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற முடிவோடு, பவானி ஆற்றில் கேரள அரசு கட்டி ஆறு தடுப்பணைகள் கட்டி வருகிறது. கேரள மாநிலம் – தேக்குவட்டையில் கட்டப்பட்டு வந்த தடுப்பணையை, இன்று (17.02.2017) காலை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்த்து வந்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க கோவை மாநகர்ச் செயலாளர் தோழர் விளவை இராசேந்தின், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, எழுத்தாளர் வான்முகில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் உள்ளிட்ட தோழர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அதன்பின் கோவை செய்தியாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்:

“இன்று காலை கேரள மாநிலம் – அட்டப்பாடி அருகில் தேக்குவட்டையில் கேரள அரசால் தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டோம். அங்கு தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்த ஊர் மக்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களை கேட்டபோது, பவானி ஆற்றில் இன்னும் ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அங்கு பொறிக்காரி மடுவு என்ற 100 அடி ஆழமான இயற்கையான நீர்த்தேக்கம் இருப்பதாகவும், அதை வைத்து அம்மக்கள் தங்கள் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கேரள அரசு, இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசன நீருக்காகவே தடுப்பணைகள் கட்டுகிறோம் என்று கூறுகிறது. உண்மையில், பல கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கேரளப் பகுதிகளுக்கு பவானி நீரைக் கொண்டு செல்லும் முயற்சியாகவே, இந்தத் தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இந்தத் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரை பெரிய அளவிலான பம்புகள் வைத்து கொண்டு செல்லத் திட்டமிடுகிறது.
ஆற்று நீரைக் கொண்டு பாரம்பர்யமாக வேளாண்மை நடைபெற்று வந்த பகுதிகளுக்குத்தான் Riparian Right என்ற பாசன உரிமை பொருந்துமே தவிர, புதிதாகப் பாசன விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளுக்கு இது பொருந்தாது.

ஏற்கெனவே காவிரித் தீர்ப்பாயம், காவிரி ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு முன், அத்தண்ணீரைப் பாரம்பர்யமாக பாசன நீராகப் பயன்படுத்தி வரும் கடைமடை மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறுகிறது. இதை மீறும் வகையில்தான் ஏற்கெனவே ஆந்திர அரசு, பாலாற்றில் பல தடுப்பணைகளைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒருசொட்டு நீர் கூட வரவிடாமல் தடுத்துள்ளது. கடைசி அணையையும் புல்லூரில் கட்டிவிட்டது.
தற்போது, கேரள அரசு அதேபோல் பவானி ஆற்றில் சட்ட விரோதத் தடுப்பணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவிடாமல் தடுக்க முற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சற்றொப்ப 3 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்படும். இம்மூன்று மாவட்டங்களிலுள்ள 1 கோடி மக்களின் குடிநீர் பறிக்கப்படும். ஒட்டுமொத்தமாக இம்மூன்று மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயமுள்ளது.
கேரளத்திற்குத் தண்ணீர் வளம் ஏராளமாக உள்ளது. கேரளத்தில் அரபிக்கடலில் ஆண்டுக்கு 2,000 ஆ.மி.க. தண்ணீர் கடலில் கலக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் முயன்றால் பவானி நீரைத் தடுக்காமல், பிற பகுதி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு அந்த வாய்ப்பில்லை.

எனவே, கேரள அரசு பவானியின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், கேரள அரசுக்கும் – இந்திய அரசுக்கும் அரசியல் அழுத்தம் கொடுத்து, இத்தடுப்பணைகள் கட்டும் பணியை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், இக்கோரிக்கைக்காக கேரள முதல்வரையும், இந்தியத் தலைமை அமைச்சரையும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசு காவிரியில் அணைகள் கட்டுவதையும், ஆந்திர அரசு பாலாற்றில் அணைகள் கட்டுவதையும் இந்திய அரசு இதுவரை தடுக்கவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்தும் சட்டக்கடமையையும் இந்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து, தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்தச் சிக்கலிலும் இது தொடர்கிறது.
இந்திய அரசும், கேரள அரசும் நடவடிக்கை எடுத்து பவானி ஆற்றில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடச் செய்யவில்லையென்றால், தங்கள் வாழ்வுரிமையைக் காப்பாற்றிக் கொள்ள அறப்போர் நடத்துவரைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மலையாளிகள் பல இலட்சம் பேர் வாழ்கிறார்கள்; தொழில் செய்கிறார்கள்; வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் குடிநீர், குடும்ப நீர், தொழில் துறைக்கான நீர் பவானியிலிருந்துதான் கிடைக்கிறது.
காவிரி உரிமைச் சிக்கலில் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் ஆணைகளை செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்து வருவதன் மூலம், தமிழ்நாட்டில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அரசு இனப்பாகுபாடு பார்த்து, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை நிற்கிறது; தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தித் தமிழ்நாட்டு வாழ்வுரிமையைக் காக்க அது முன்வரவில்லை.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சிற்றணையைச் செப்பனிட்டு முழுக் கொள்ளளவான 152 அடி தண்ணீரைத் தமிழ்நாடு தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், சிற்றணைக்குக் கட்டுமானப் பொருள் எதையும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அணைக்கு அன்றாடம் நம் அதிகாரிகள் உரிமையுடன் சென்று வர முடியவில்லை. இதில், இந்திய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முன்வரவில்லை. இதிலும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு அரசியல் நடத்துகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாடு பா.ச.க. ஆட்சியில் மட்டுமில்லை, காங்கிரசு ஆட்சியிலும் செயல்பட்டது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழியாகத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படும்போது, வாழ்வுரிமை பறிக்கப்படும்போது, தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தோம்.
பவானியில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிடவில்லையென்றால், பவானித் தண்ணீரைப் பயன்படுத்தும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலையாளிகளைக் கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு அழைத்துக் கொள்ள கேரள அரசு மறுத்தால், தமிழர்கள் இம்மூன்று மாவட்டங்களில் வாழும் மலையாளிகளின் வீட்டு வாசலுக்குச் சென்று கேரளாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அறவழியில் அவர்களைக் கேட்டுக் கொள்ளும் மக்கள் இயக்கத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தோழர்கள் திருவள்ளுவன், ஸ்டீபன்ராஜ், இராசேசுக்குமார், திருப்பூர் சிவக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Friday, February 17, 2017

காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுத்திட இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! பெ. மணியரசன் வேண்டுகோள்!

காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுத்திட இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
காவிரியில் கசிவு நீர்கூட தமிழ்நாட்டுக்கு வராமல் தடுப்பதற்கு மேக்கேத்தாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு, ரூபாய் 5,912 கோடி கர்நாடக அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி. செயச்சந்திரா தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அணையின் மொத்தக் கொள்ளளவு 66.50 ஆ.மி.க. (TMC) என்றும், இதன் மின் உற்பத்தித் திறன் 400 மெகா வாட் என்றும் செயச்சந்திரா கூறியுள்ளார்.

வீணாகக் கடலில் சென்று கலக்கும் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்துவதற்காகவே புதிய அணை கட்டப் போவதாக அமைச்சர் செயச்சந்திரா கூறியுள்ளார். காவிரியில் கடலில் கலக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கு ஆண்டுதோறும் வருவது போலவும், அதைப் பயன்படுத்துவதற்கு புதிய அணை கட்டுவது போலவும் கர்நாடகம் கயிறு திரிக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி சிறிதளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதன் பிறகு, எட்டாண்டுகள் கழித்து 2013இல் மேட்டூர் அணை நிரம்பி சற்றொப்ப 20 ஆ.மி.க. அளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்தி, தமிழ்நாட்டை வறட்சியாக்கும் வன்கொடுமைதான் தொடர்ந்து கொண்டுள்ளது. கடலுக்கு மிச்ச நீர் போனது என்ற பேச்சுக்கே இடமில்லை!

இவ்வாண்டு, வேளாண்மைப் பொய்த்து, கருகிய பயிரைப் பார்த்து இருநூறுக்கும் மேற்பட்ட உழவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மாரடைப்பால் இறந்தார்கள்.

இன்னொரு இமாலயப் பொய்யைக் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க. தண்ணீரைக் கொடுத்தது போக, மிச்சமுள்ள நீரைத் தேக்கத்தான் புதிய அணை என்பதே அந்தப் பொய்!

காவிரித் தீர்ப்பாயம் 1991 சூன் 25இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு, 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போதும், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்ததில்லை! நயவஞ்சகத்தை நஞ்சாகக் கொடும்பில் அடக்கிக் கொண்டு, நாக்கில் தேன் தடவி கர்நாடக அமைச்சர் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடுவோம் என்கிறார்.

ஆனாலும், கர்நாடக அமைச்சரின் வஞ்சகப் பேச்சில் வழுக்கிக் கொண்டு உண்மை வெளிவந்துவிட்டது!

“கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளில் நீர் நிரம்பிவிட்டால் மிச்ச நீரை தமிழ்நாட்டிற்குத்தான் திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. கிருட்டிணராஜசாகர், கபினி அணைகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே, புதிய அணை கட்ட முடிவெடுத்தோம்” என்கிறார் செயச்சந்திரா. (“Karnataka ends up releasing excess water to Tamil Nadu from its four reservoirs. And there is no scope for expanding the KRS and the Kabini reservoirs. Hence, it is important to take up this project” he stated, Feb 16 - 2017, Deccan Herald News Service).

இப்பொழுது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும், தமிழ் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி!

இதுவரை இந்திய அரசு, அது காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் காவிரிச் சிக்கலில் காவிரித் தீர்ப்பாய முடிவுகளையோ, உச்ச நீதிமன்ற ஆணைகளையோ செயல்படுத்தாமல் இனப்பாகுபாடு காட்டி அவற்றை முடக்கிப்போட்டது. கர்நாடகத்தின் தமிழர் எதிர்ப்பு வெறிச் செயலுக்கு இந்திய அரசு துணை போனது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியாளர்களும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் இந்திய அரசோடு கூட்டணி கொண்டோ அல்லது நல்லுறவு வைத்துக் கொண்டோ செயல்பட்ட போதிலும், காவிரி உரிமையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அவர்களால் இதுவரை முடியவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம்?

காவிரிச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர் சிக்கல் என்று சுருக்கக்கூடாது. தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து, இராமேசுவரம் தீவு வரை, புதுவை – காரைக்கால் உட்பட இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் அளிக்கிறது காவிரி! வேளாண்மை இழப்பு ஒரு பக்கம், குடிநீரே இன்றி தவிக்கும் நிலை இன்னொரு பக்கம். தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு வெளியேறப் போகிறோமா, அல்லது அனைத்து மக்களும் அறப்போராட்டம் நடத்தி, காவிரி உரிமையை மீட்கப் போகிறோமா என்பதே நம்முன் உள்ள கேள்வி!

கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை – இனவெறிச் செயல்களைத் தடுக்கும் சட்டக்கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அதற்கான ஆற்றலை இந்திய அரசமைப்புச் சட்டம் நடுவணரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அதுபோல் இந்திய அரசு செயல்படாமல் தமிழர்களை வஞ்சித்து, இனப்பாகுபாடு காட்டுகிறது.

சட்டப்படி செயல்படும் வகையில் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டங்களை தமிழர்கள் நடத்தியாக வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய தமிழர் ஒத்துழையாமைப் போராட்டம் தொடங்க வேண்டும்.
 
ஒத்துழையாமை இயக்கத்தின் கோரிக்கைகள் :

1. இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டும்.

2. மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவது சட்டவிரோதம் என்று இந்திய அரசு, கர்நாடக அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 355இன் கீழ் கட்டளைக் கடிதம் அனுப்ப வேண்டும். சட்டப்படியான இவ்விரு கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை, இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்.

“நீதி தவறிய கொடிய அரசுடன் ஒத்துழைப்பது பாவச்செயல்” என்று கூறி காந்தியடிகள் 1920இல் காலனி ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். இனப்பாகுபாட்டுடன் தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசுக்கு எதிராக, காந்தியடிகள் காட்டிய வழியில், தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்.

• தமிழ்நாட்டிற்கு வரும் இந்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கருப்புக்கொடி காட்டுவோம். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம்.

• இந்திய அரசு கொடுக்கும் விருதுகளைத் தமிழர்கள் வாங்க மறுப்போம்.

• காவிரியில் நீதியை நிலைநாட்டும் வரை தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுப்போம்.

• கர்நாடகப் பொன்னி அரிசி மற்றும் கர்நாடக உற்பத்திப் பொருட்களை வாங்க மறுப்போம். அவை தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுப்போம்.

• நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்துவோம்.
தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் அறப்போராட்டமாக, இந்தத் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை செயல்படுத்துவோம். தமிழர் உரிமை மீட்போம்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
               www.fb.com/tamilsboycottgovtofindia

Thursday, February 16, 2017

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பைச் செய்யாதிருப்பது, அவர் தமது பதவியை சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயலலிதா – சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சில நாட்களில் தீர்ப்பு வர இருந்ததால், நேற்று (14.02.2017) வரை, தமிழ்நாடு முதல்வர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பை வெளியிடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதில் காரணம் இருந்தது.

ஆனால், நேற்று காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் தீர்ப்புச் சொல்லி, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபிறகு, இன்று (15.02.2017) மாலை வரை முதல்வர் பதவி குறித்து முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுநர் மவுனம் காப்பது, அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க. இங்கு வீங்கிப் பெருக்க வேண்டும் என கனவு காண்கிறது. இவ்வாறான பா.ச.க.வின் அரசியல் சதி நோக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் என்றால், அவர் தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டவர் ஆவார்.

அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் தமிழ்நாட்டில் நிலவுகின்ற முதலமைச்சர் பதவிச் சிக்கலுக்கு தீர்வு காண ஆளுநருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1. முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் இருவரில் ஒருவரை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்வது. அடுத்த சில நாட்களில் இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பை உடனடியாக வெளியிடுவது.

2. பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களால் வெளியில் தேர்வு செய்யப்பட்டு அவ் உறுப்பினர்களின் ஒப்புதல் கையொப்பத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க உடனயாக வாய்ப்பளிப்பது. அவர் தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கெடு விதிப்பது.

3. இப்போது முதலமைச்சராக உள்ள திரு ஓ. பன்னீர்ச்செல்வத்திற்கு தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிறுவிட முதல் வாய்ப்பளிப்பது. அவருக்குப் பெரும்பான்மை இல்லையேல் அடுத்த வாய்ப்பை திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிப்பது.

இவ்வாறான முறைகளில் ஒன்றை உடனடியாக ஆளுநர் தேர்வு செய்து, ஒரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. சண்டையை இருபக்கமும் இருந்து கொண்டு, பா.ச.க. ஊதிப் பெருக்கி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரும் சதித் திட்டத்திற்கு ஆளுநர் இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam


Wednesday, February 15, 2017

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! பெ. மணியரசன் அறிக்கை!

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகள் கூறிய கூற்று, இன்று (14.02.2017) மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் கொள்ளை வழக்கில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏற்கெனவே நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு அப்படியே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதன் பொருள், செயலலிதாவும் குற்றவாளிதான் என்பதாகும்.

தமிழ்நாட்டில் சர்வாதிகார அரசியல் - குடும்ப அரசியல் – கொள்ளை அரசியல் முடிவுக்கு வந்து, உண்மையான சனநாயக அரசியல், அறம் சார்ந்த அரசியல் மலர அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டால், இத்தீர்ப்பின் பலன் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் சிறந்த புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Sunday, February 12, 2017

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அ.இ.அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தமிழ்நாடு அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் தன் வீட்டில், தனக்கு ஆதரவுப் பரப்புரையை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆதரவாளர்களை சேர்க்கும் பணியிலேயே 24 மணி நேரமும் இருக்கிறார். “புதிய முதல்வர்” என்று அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்ட சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர்களை தலைநகருக்கு வெளியே கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார். அவரும் தனக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேலையிலேயே இருக்கிறார்.

இதனால், அரசு நிர்வாகம் செயல்படாமல் – பல தரப்பு மக்களும் துயரத்தில் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அன்றாடம் நடக்க வேண்டிய அலுவலகப் பணிகள், ஏற்கெனவே காலம் கடந்துவிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் நடைபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அரசு எந்திரத்தை முடக்கிவிட்ட நிலையில், இதுதான் நல் வாய்ப்பு என்று கருதி கேரளம், பவானியில் ஆறு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசு, பாலாற்றில் மேலும் புதிய தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா குடிநீரையும் ஆந்திர அரசு குறைத்துவிட்டது.

மிக முக்கியமாக, உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் வல்லடி வழக்குகளை எதிர் கொள்ளக்கூடிய தயாரிப்புப் பணியை, நம் தரப்பில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கு தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தவில்லை.

ஓ.பி.எஸ். வீடும், போயஸ் தோட்டமும் சர்க்கஸ் கூடாரங்கள் போல் ஆகி, தொலைக்காட்சிகளின் நிரந்தர நேரடி ஒளிபரப்பில் இருக்கின்றன.

“காபந்து முதலமைச்சர்” என்பவர் அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுகளை செயல்படுத்த கடமைப்பட்டவர். உடனடித் தேவைகளுக்காக முடிவுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர். அரசமைப்புச் சட்டத்தில், “காபந்து அரசு” என்றோ, “காபந்து முதலமைச்சர்” என்றோ ஒரு வகையினம் கிடையவே கிடையாது.

ஓர் அமைச்சரவை பதவி விலகினாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிந்தாலோ, அந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் நின்று போகாமல் தொடர்வதற்காகவே, “காபந்து அமைச்சரவை” ஏற்பாடு உள்ளது.

எனவே, இப்பொழுது ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள்தான் முதலமைச்சர்! அவர், உடனடியாகத் தலைமைச் செயலகம் சென்று தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சசிகலா அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்குகின்ற வகையில், எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள அரசுக் கடமைகள் முடங்கி மக்கள் துன்புறாத வகையில், ஓ.பி.எஸ். செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Saturday, February 11, 2017

சசிகலா – பன்னீர்ச்செல்வம் : இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு? பெ. மணியரசன்.

சசிகலா – பன்னீர்ச்செல்வம் : இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு? பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி செயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று அவர் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது ஒரு பொதுக் குற்றச்சாட்டாகவும் பேசப்படுகிறது.

அடுத்து, அவருடைய சாவிற்குப் பிறகு கட்சித் தலைமை – ஆட்சித் தலைமை ஆகியவற்றைக் கைப்பற்ற நடக்கும் உட்கட்சிப் போட்டி, மிகக் கொடூரமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டுள்ளது.

இந்த இரு அணிகளில் ஒன்றிற்குத் தலைமை தாங்கும் சசிகலாவும், இன்னொன்றிற்குத் தலைமை தாங்கும் ஓ. பன்னீர்ச்செல்வமும் மேற்கண்ட கொடூரங்களுக்கும் கேவலங்களுக்கும் உடனடிக் காரணங்களாகத் தெரியலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி பார்த்தால் – இவற்றிற்கெல்லாம் மூல காரணம் செயலலிதா தான்!

செயலலிதாவின் அகவாழ்க்கை – அரசியல் வாழ்க்கை இரண்டுமே மர்மமானவை! அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம், ஒரு மாளிகை! ஆனால், அது ஒரு மர்மக் குகையாகவே செயல்பட்டது.

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் “நிரந்தரப்” பொதுச் செயலாளராக இருந்த செயலலிதா மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பின் இவ்விரு பதவிகளுக்கும் போட்டி இடுபவர்கள் யார்? சசிகலாவும், ஓ. பன்னீர்ச்செல்வமும்!

சசிகலா அ.இ.அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பில் இருந்தார்? அக்கட்சியின் வெளியே தெரிந்த பொறுப்பு எதிலும், செயல்பாடுகள் எதிலும் அவர் இல்லை. ஆனால் அவரும் அவர் குடும்பங்களின் உறுப்பினர்களும் பரிந்துரைத்தவர்கள்தான் – அதிக அளவில் செயலலிதாவால் ஏற்கப்பட்டு, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக – அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வில் தலைமைச் செயற்குழு, ஆட்சி மன்றக்குழு, அவைத்தலைவர், பொருளாளர் போன்ற அமைப்புப் பொறுப்பாளர்கள் செயலலிதா மற்றும் சசிகலாவின் எடுபிடிகளாகவும், அவர்களின் காலில் விழுந்து கும்பிடும் அண்டிப் பிழைப்போராகவும் இருந்திருக்கிறார்கள்.

எனவே, செயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவிடம் செயலலிதாவின் அனைத்துச் சொத்துகளும், அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து நிதி மற்றும் சொத்துகளும் இருக்கின்றன. ஆகவே, செயலலிதாவிடம் அண்டி வாழ்ந்த அதே அற்பர்கள் தங்களின் ”அரசியல்” வாழ்வின் தொடர்ச்சியாக இப்போது, சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு இலாபமடைகிறார்கள்.

இதே ஓ. பன்னீர்ச்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிட்டு, பொதுச் செயலாளர் பொறுப்பேற்க பிரார்த்தனை செய்தவர்தான்!

ஒருவேளை அன்று அவர் சசிகலாவின் காலில் விழுந்தது, ஒரு நடிப்பே தவிர அது உண்மையாக அல்ல என்றால், அந்த நடிப்பு காலில் விழுந்ததைவிடக் குற்றச் செயலாகும்!

அ.இ.அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் இப்போது அணிமாறி, ஓ.பி.எஸ். பக்கம் நிற்கிறார். இவர் சின்னம்மாவை பொதுச்செயலாளர், முதலமைச்சர் பொறுப்புகள் ஏற்கக் கெஞ்சி, அவர் காலில் விழுந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டுள்ளது.

செயலலிதா, தமிழ்நாட்டிற்கு விட்டுச் சென்றுள்ள தலைவர்களைப் பாருங்கள்! சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், மதுசூதனன் போன்றவர்கள்தான்! அ.இ.அ.தி.மு.க.வில் எவரும் ஒன்றிய அளவில்கூட தலைவராக உருவாகிவிடக் கூடாது என்று கவனமாக கட்டுப்படுத்தி வைத்தவர், செயலலிதா. அவர் கட்சியில் அவருக்கு அடுத்தநிலைத் தலைவர் ஒருவர் உருவாக வாய்ப்பே இல்லை!

நேரு இறந்த பிறகு சாஸ்திரி தலைமை அமைச்சர் ஆனார். சாஸ்திரி இறந்த பிறகு இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் இடையேதான் போட்டி! நீண்ட அரசியல் அனுபவமும் கற்றறிந்த தகுதியும் உள்ளவர்கள் அவ்விருவரும்! சசிகலா, ஓ.பி.எஸ்., மதுசூதனன் போன்றவர்கள் அல்லர் அவர்கள்.

காரணம், அவர்களுக்குத் தலைமை தாங்கியவர் பண்டித நேரு, காமராசர், சாஸ்திரி போன்றவர்கள்!

முதலமைச்சராக இருக்கும்போதே அண்ணா இறந்தார். அவருக்குப்பின் ஆட்சித் தலைமைக்கும் கழகத் தலைமைக்குமான போட்டி கருணாநிதி – நெடுஞ்செழியன் இடையே ஏற்பட்டது. இருவரும் கழகத்தைக் கட்டி எழுப்பிடப் பாடுபட்டவர்கள். மக்களுக்காகச் சிறை சென்றவர்கள். இருவரும் கற்றறிந்த தகுதி உள்ளவர்கள்!

சசிகலா – ஓ.பி.எஸ். பாணி அரசியல் வாரிசுப் போட்டி எப்பொழுது தமிழ்நாட்டில் தலைகாட்டியது? எம்.ஜி.ஆர். மறைந்த போது – எம்.ஜி.ஆர். மனைவி சானகி – எம்.ஜி.ஆர்ரோடு கதாநாயகியாக நடித்தவர் செயலலிதா என்ற உரிமையில் அப்போட்டி முன் வைக்கப்பட்டது. அதற்கும் ஒரு முன்னோடி உண்டு!

கருணாநிதி தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் குடும்ப வாரிசுரிமையைத் தொடக்கி வைத்தார். தி.மு.க.வில் திரைத்துறையிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக – தம் மகன் மு.க. முத்துவை நுழைத்தார்.

1970களின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, தன் மகன் மு.க. முத்துவ – தனக்குப் பிறகான தலைவராக உருவாக்கிட, கட்சி அமைப்பையும் அரசு எந்திரத்தையும் பயன்படுத்தினார். பிறகு தம் மகன் மு.க. ஸ்டாலினை நிலை நிறுத்தினார்.

கருணாநிதியினால் தி.மு.க.வில் தொடக்கி வைக்கப்பட்ட குடும்ப அரசியல், எம்.ஜி.ஆருக்குப் பின் செயலலிதா – செயலலிதாவுக்குப் பின் சசிகலா, தீபா என்று வளர்ந்து கொண்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்க தீபாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்றாடம் தீபாவைச் சந்தித்துக் கும்பிட்டு தலைமை தாங்க வருமாறு அழைக்கும் தமிழர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்?

“தகுதி இருக்கிறதா இல்லையா என்பது அடுத்த செய்தி. தீபாவுக்கு உரிமை இருக்கிறது. செயலலிதாவின் அசல் இரத்தத்துடன் தொடர்புடையது தீபா இரத்தம் – செயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த பெண்” என்பார்கள்!

“அக்காவோடு முப்பதாண்டுகள் வாழ்ந்தேன். அவரைக் கண்போல் காத்தேன்” என்பதைச் சொல்லி, கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்கும் உரிமையை சசிகலா கோரும்போது, அப்பதவிகளை செயலலிதாவின் உண்மையான இரத்தத்தின் இரத்தத்திற்குக் கொடுக்கக் கூடாதா?” என்பது அவர்களின் வாதம்!

தமிழ்நாட்டின் முதற்பெரும்கட்சியின் அரசியலில் தலைமை தாங்க சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், தீபா ஆகியோர் முன்னிறுத்தப்படுவது சனநாயகத்தின் வீழ்ச்சி இல்லையா? தமிழர் நாகரிகத்திற்கேற்பட்ட இழிவில்லையா? இதை அருவருக்காமல் – இவர்களில் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த தன்னலமில்லையா?

ஓ.பி.எஸ். பின்னால் பா.ச.க. இருக்கிறது; இந்துத்துவா இருக்கிறது; எனவே சசிகலாவை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும், சசிகலாவின் பின்னால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட அவரின் உறவினர்கள் என்ற குற்றக்கும்பல் இருக்கிறது; எனவே ஓ.பி.எசை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும் தன்னலம் சார்ந்த சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள் – அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.

சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகியவற்றைத் தன்னால் முடிந்த அளவு சீரழித்துவிட்டார் செயலலிதா! அந்தச் சீரழிவின் இன்றையச் சின்னங்கள்தான் ஓ.பி.எசும் சசிகலாவும்!

பா.ச.க.விடம் எளிதாக விலைபோகக் கூடியவர் ஓ.பி.எஸ்; கறாராகப் பேரம் பேசி விலை போகக் கூடியவர் சசிகலா!

பா.ச.க., காங்கிரசு, இந்திய ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே விலை போனவர் கருணாநிதி!

இவர்களிடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பவர் – இப்பொழுது நிலவும் சீரழிவு அரசியலைத் தொடர்வதற்குத் தானும் ஒரு தூண் நடுபவராகவே இருப்பார்!

தவறானவர்களில் ஒருவரை நீக்கி இன்னொருவரைக் கொண்டு வரக்கூடாது. சரியான மாற்றை உருவாக்க வேண்டும். சரியான மாற்று என்பது ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவர் இல்லை! தமிழ்ச்சமூகத்தில் உருவாகும் விழிப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உருவாகி வளரும் புதிய இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள்!

நாளைக்கே இந்த மாற்று உருவாகி விடுமா என்று சிலர் கேட்பார்கள். நாளைக்கே பதவிக்கு வந்து சசிகலாவோ, ஓ.பி.எசோ, ஸ்டாலினோ எதைச் சாதிக்கப் போகிறார்கள்? கருணாநிதியும் செயலலிதாவும் எதைச் சாதித்தார்கள்? காவிரி, கச்சத்தீவு, கடல் உரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி, தமிழ் மொழி எனப் பறிபோன உரிமைகளில் எதை மீட்டர்கள்? ஈழத்தமிழர்கள் அழியாமல் காத்தார்களா? ஏழத்தமிழர்களைத்தான் விடுதலை செய்தார்களா?

தலைமை இல்லாத மாணவர்கள், இளைஞர்கள் போராடி சல்லிக்கட்டு உரிமையை மீட்டார்கள். நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களின் போராட்டங்களாய் விரிவடைந்து முதற்கட்ட வெற்றி பெற்றுள்ளது. கெய்ல் குழாய்ப் பதிப்பும் அப்படித்தான் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாண்டு பொங்கல் விழாவுக்கான பொது விடுமுறையும் நடுவணரசு நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களின் போராட்டங்களாலும், பொது மக்களின் ஆவேசத்தாலும் பெறப்பட்டது.

இன்றைக்கு சீரழிவின் சில சின்னங்களில் ஒன்று தனியாகவோ, அல்லது சில சின்னங்களின் கூட்டாகவே தலைமை தாங்கட்டும்.

எதிர்காலத்தில் தமிழர் வாழ்வுரிமை, தமிழ் மொழி உரிமை, தமிழர் தாயக உரிமை ஆகியவற்றை மீட்கவும்,

சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆற்றல்கள் தனித்தனியே இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அந்தத் திசையில் முன்னேறிப் பயணிப்போம்; ஒருங்கிணைவோம்!

தமிழ்நாட்டில் உறுதியாக சரியான மாற்று உருவாகும்! மாற்றம் உறுதியாகும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT