உடனடிச்செய்திகள்
Showing posts with label கைது!. Show all posts
Showing posts with label கைது!. Show all posts

Tuesday, September 13, 2016

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்கு! திருச்சியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!





 தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில்

90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்கு! 

திருச்சியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 

நூற்றுக்கணக்கானோர் கைது!


“வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”, “வெளியேற்று வெளியேற்று வெளியாரை வெளியேற்று!”, “இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கே வழங்கிடு!” - திருச்சித் தொடர்வண்டி நிலையத்தில், இன்று காலை விண்ணதிர எழுப்பப்பட்ட முழக்கங்கள் இவை!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும், தமிழையே இந்த அலுவலகங்களில் ஆட்சி மொழியாகச் செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (12.09.2016) திருச்சி தொடர்வண்டிக் கோட்டத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, திருச்சி தொடர்வண்டி நிலையம் முன்பு பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சாலைப் போக்குவரத்து ஒரு பகுதி முடக்கப்பட்டது.
பேராட்டத்திற்காக, இன்று காலை முதல் தொடர்வண்டி நிலையத்தின் வாயிலில் பெண்கள் – குழந்தைகள் – முதியவர்கள் – இளைஞர்கள் என திரளாகத் திரண்ட தமிழ் மக்கள் இம்முற்றுகைப் போரில் பங்கேற்று, தொடர்வண்டி நிலையம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தியக் காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்தனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அங்கேயே சாலையில் படுத்து மறியல் செய்தார். தோழர்கள் அனைவரும் மறியல் செய்து, சாலையில் அமரவே அவ்விடம் பரபரப்பானது. இன்னொருபுறத்தில், தொடர்வண்டி நிலையத்தின் முகப்பிலிருந்த தொடர்வண்டிப் பெட்டியின் மீது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஏறி நின்று, “வெளியாரை வெளியேற்று” என ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினர். செய்வதறியாது திகைத்தக் காவல்துறையினர், அனைவரையும் கைது செய்தனர்.

முன்னதாக, முற்றுகைப் பேரணியை பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தொடக்கவுரையாற்றிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், திருப்பூர் தமிழின உணர்வாளர் திரு. க.இரா. முத்துச்சாமி, புலவர் இரத்தினவேலவர், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. ம.பா. சின்னதுரை உள்ளிட்ட இன உணர்வாளர்கள் பலரும் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை முற்றுகைப் போராட்ட முழக்கங்களை எழுப்பினார்.


தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், மதுரை இரெ. இராசு, குடந்தை விடுதலைச்சுடர், முருகன்குடி க. முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் இராசாரகுநாதன், ஒசூர் செம்பரிதி, பெண்ணாடம் கனகசபை, திருச்செந்தூர் தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர்களும் தோழர்களும் என சற்றொப்ப 500க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT