உடனடிச்செய்திகள்

Wednesday, May 25, 2016

தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்
அய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!


தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனரும், மாணவர் நகலகத்தின் உரிமையாளருமான அய்யா. நா. அருணாச்சலம் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (23.05.2016) மாலை, சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அகவை 76.
ஆனாரூனா என்று அறியப்பட்ட அய்யா நா. அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், “ஒரு குறிப்பிட்டக் காலத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வரலாற்ற முன்னோக்கிய ஒரு நகர்வை ஏற்படுத்திய, ஆனாரூனா அவர்கள், என்றென்றும் தமிழர் நெஞ்சில் பதிந்திருப்பார்என்று தெரிவித்திருந்தார்.
சென்னை கொட்டிவாக்கம் இராமலிங்கம் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யா அருணாச்சலனாரின் உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இன்று (24.05.2016) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன், தோழர்கள் வடிவேலன், பாலசுப்பிரமணியன், இளவல், அருண் குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று, அய்யாவின் திருவுடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இன்று (24.05.2016) பிற்பகல் 2 மணிக்கு மேல், அய்யாவின் திருவுடல், அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் - நன்னிலம் வட்டம் - திருகண்ணபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. நாளை காலை 10 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் அதில் பங்கேற்கின்றனர்.
அய்யா ஆனாரூனாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செம்மாந்த வீரவணக்கங்கள்!

Saturday, May 21, 2016

களம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர்! தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே!


களம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர்!

தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

அஇஅதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு அரசியல் கட்சியை அல்லது வேறொரு அரசியல் கூட்டணியை முன்னிறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை (16.05.2016) சந்தித்தவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். அவ்விரண்டில் ஒரு திராவிடக் கட்சிக்கு மாற்று இன்னொரு திராவிடக் கட்சியே என்பது போல் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அஇஅதிமுக – 134 தொகுதிகள், திமுக அணி – 98 தொகுதிகள் வென்றுள்ளன. எஞ்சிய இரண்டு தொகுதிகளுக்கு 23.05.2016 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

      திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சிறு அளவில் கூட வேறு கட்சி வெல்லவில்லையே, ஏன்? மாற்று என்று சொல்லிக் கொண்டவற்றில் பெரும்பாலான கட்சிகள் குட்டி திமுக, குட்டி அதிமுக என்று சொல்லத்தக்கவையே! இலட்சியமற்று பதவிவெறி, பணவெறி, குடும்ப அரசியல், ஒற்றை ஏகபோகத் தலைமை என்று செயல்படும் திராவிடக் கட்சிகளின் சிறு வடிவங்களாகவே மாற்று பற்றி பேசிய கட்சிகள் இருக்கின்றன.

      தமிழ்நாட்டில் ஒரு பொதுத் தேர்தலை நடத்த எத்தனை இராணுவப் பட்டாளங்கள், அண்டை மாநிலக் காவல்துறைப் பிரிவுகள், நடுவண் அரசு அதிகாரிகள் படையெடுப்பு; இரவு பகல் தூங்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்! ஒரு சனநாயகத் தேர்தலுக்கு இத்தனை படை பரிவாரங்கள் ஏன்? குற்றச் செயல்கள் நடந்து விடாமல் தடுத்திட! இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்? ஆளுங்கட்சியினரும் எதிர்க் கட்சியினரும்!

      இந்தக் குற்றக் கும்பல்கள்தாம் தேர்தலில் வென்று நாட்டை நிர்வகிக்கப் போகின்றன: ஆளுங்கட்சியாக – எதிர்க்கட்சியாக நாட்டை நடத்தப் போகின்றன. உற்று நோக்கினால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் கிரிமினல் குற்றவாளிகளுக்கிடையே நடந்த தேர்தல் போல் அல்லவா ஆகிறது! ஒரு பேட்டையில் நாலைந்து ரவுடிக் கும்பல்கள் செயல்படுகின்றன, பேட்டை நிர்வாகத்திற்காக அந்தக் குற்றக் கும்பல்களுக்கிடையே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படியல்லவா தமிழ்நாடு தேர்தல் நடைமுறைகள் ஆகிவிட்டன! எந்த கட்டுக் காவலையும் ஏமாற்றி வாக்காளர் வீடு தேடிப்போய் கையூட்டு கொடுக்கும் வல்லவர்கள் தமிழ்நாட்டில் தான் இவ்வளவு பெரிய அளவில் இத்துணை சீரழிந்த அளவில் செயல்படுகின்றனர், அவர்கள் தலைவர்கள் அப்படி!

      பாக்கிஸ்தானின் பக்கத் துணையோடு பல குழுக்கள் ஆயுதந்தாங்கி விடுதலைப் போராட்டம் நடத்தும் சம்மு காசுமீரில் நடைபெறும் தேர்தல் போல் தமிழ்நாட்டுத் தேர்தலில் அரசுப் படை, பரிவாரங்கள் களம் இறங்கின. அங்கே தேச விடுதலைப் போராட்டம்! இங்கே தன்னல வெறிச் சூதாட்டம்!

      இந்தியாவிலேயே இன உரிமைப் பறிப்பிற்கு அதிகம் ஆளாகியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! இயற்கை வளங்கள் கொள்ளை, சுற்றுச் சூழல் கேடுகள் எனப் பேரழிவுக்கு உள்ளாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு. அவற்றுக்கு முகம் கொடுக்காத பெரிய, சிறிய கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

      இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு! தனிநபர் பகை அரசியல், தனிநபர் ஆதாயத்திற்காகத் தன்மானத்தைப் பலியிட்டுத் தலைவர் வழிபாடு நடத்தும் தரங்கெட்ட அரசியல், ஊழல் கொள்ளையில் ஒய்யார அரண்மனை வாழ்க்கை, பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களைப் போல் மக்களுக்கெட்டாத உயரத்தில் ஒற்றை அதிகார மையம் – இவைதானே இன்று தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள்!

      பெரிய திராவிடக் கட்சிகளும், வெவ்வேறு பெயர்களில் உள்ள சின்ன திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் நிலைநாட்டியுள்ள சனநாயகம் இதுதான்!

      இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர் மொழி, இன அடையாளங்களை அழித்து ஆரிய அடிமைச் சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்றிட, பாசிசத்தின் பாரத மாதா வடிவமாக பாசக வருகிறது. ஏற்கேனவே தமிழின உரிமைகளைப் பறித்த, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொள்கிறது. தேர்தல் இடதுசாரிகளுக்குத் தனித்துவமான வேலைத்திட்டம் எதுவுமில்லை. தில்லு முல்லுக் கூட்டணி ஒன்றில் சேர்ந்து கொள்ளும்.

      காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உரிமைகளை மீட்கவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன், நியூட்ரினோ, மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும் மேற்கண்டவற்றில் எத்தனை அரசியல் கட்சிகள் களம் கண்டன? மக்கள் அமைப்புகள், உழவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் என்ற குடிமைச் சமூக இயக்கங்கள் தான் இச்சிக்கல்களில் முன்கை எடுக்கின்றன; முதன்மையாகக் களத்தில் நிற்கின்றன!

      தமிழ்மொழி காத்திடவும், தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவும், அயலாரின் தாயகமாகவும் முற்றும் முழுதாக மாறிடாமல் தடுக்கவும் குடிமைச்சமூக அமைப்புகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும்தாம் போராட வேண்டும்.

      தரங்கெட்ட பொருளையெல்லாம் சந்தையில் தள்ளிவிட, மாய விளம்பரங்கள் செய்யும் வணிக நிறுவனங்கள் மக்களுக்கு நுகர்வு வெறியை ஊட்டுகின்றன. திராவிடக் கட்சிகள் மக்களில்  கணிசமானோரை கையூட்டு வாங்கி வாக்களிப்போராக, தற்சார்பற்றுக் கையேந்தும் பயனாளிகளாக மாற்றி விட்டன. ஆனாலும் நம்மக்களிடம் விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாகத் தான் இத்தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிகை கணிசமாகக் குறைந்துள்ளது. “யாருக்கும் வாக்களியேன்” என்ற நோட்டா வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளது! தேர்தல் ஆணையம் வாக்களிக்க வலியுறுத்தி ஊருக்கு ஊர், சந்துக்கு சந்து, சட்ட விதிகளுக்கு அப்பால் சென்று தீவிரப் பரப்புரை செய்தும், தூண்டியும் பயன் இல்லை.

      நம்பிக்கையோடு நாம் செயலில் இறங்கலாம்.

      நம் உரிமைகளைப் பாதுகாத்திட மட்டுமின்றி, நாறிப்போன தமிழ்நாட்டு அரசியலை நாகரிகப்படுத்தவும் களத்தில் இறங்க வேண்டிய கடமை குடிமைச் சமூக இயக்கங்களுக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் இருக்கின்றன, தேர்தலுக்கு வெளியே இந்தப் பணிகள் தொடர வேண்டும்.

      புதிய மறுமலர்ச்சி தமிழினத்தில் புத்தொளி வீச வேண்டும்! இதற்கான பொறுப்பு பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளையோர்க்கும் பெரியோர்க்கும் இருக்கிறது! இலட்சியத் தேர்வு – உரிமை உள்ள உணர்ச்சி – அறம் சார்ந்த பண்பு – செயல் துடிப்பு – இவையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகட்டும்!

      களம் காத்திருக்கிறது; காலம் அழைக்கிறது; கடமையாற்ற வாருங்கள்!

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

Wednesday, May 18, 2016

“முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியாநமக்கு எதிரியே என்ற புரிதல் வேண்டும்!”தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!


முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியா நமக்கு எதிரியே என்ற புரிதல் நமக்கு வேண்டும்என, சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில், ஊடகவியலாளர் ஏகலைவன் தொகுத்துள்ள நேர்காணல் தொகுப்பு நூல், நேற்று (17.05.2016) மாலை, சென்னையில் வெளியிடப்பட்டது.

சென்னை வடபழனி ஆர்.கே.வி. அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான்தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. திருச்சி வேலுச்சாமி, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் பால் நியூமன், தோழர் உமர், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தோழர் சிவ. செம்பியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினர். நூல் ஆசிரியரும், ஊகடயவியலாளர் திரு. விசுநாத் ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில், ஆதிராவின் 'நவீனக் கூத்துப்பட்டறை'யினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பின் வருமாறு பேசினார் :

முள்ளிவாய்க்கால் முடிவல்லஎன்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூலை தம்பி ஏகலைவன் தொகுத்துள்ளார். ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நேர்கணல்களை  அவர் எடுத்தார்.

தமிழினமே அம்புகள் பாய்ந்து, குருதி கொட்டிய வலியோடும், தமிழ்நாட்டுத் தமிழர் வெட்கியும் மனச்சான்று உற்பத்தியும் துன்புற்றிருந்த நேரத்தில், பக்கத்து மண்ணில் நம் கண்முன்னேயே தமிழீழ இனப்படுகொலை நடப்பதை எண்ணி நாம் துன்பப்பட்டுத் துடித்துக்  கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக இந்த நேர்காணல்களை அவர் எடுத்து வெளியிட்டார். அதில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன்.

முதலில், இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்த, அவர் பணி புரிந்த குமுதம் நிறுவனத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், குமுதம் இதழின் உரிமையாளர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அல்லர். இருப்பினும், தோழர் ஏகலைவனை சுதந்திரமாக இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்தார்கள். என்னைப் போன்றவர்களுக்கு அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எங்கள் கருத்துகள் அப்படியே, இந்த புத்தகத்திலும் வெளியாகி இருக்கின்றன. எந்தத் திருத்தமும் அவர் செய்யவில்லை.

தம்பி ஏகலைவனை செய்தியாளர் - ஊடகவியலாளர் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். அதற்கும் மேலாக அவர் மனச்சான்றுள்ள ஒரு மனிதர்ஒரு தமிழர்.

ஊடகவியலாளருக்கு உள்ள மனச்சான்றின்படி அவர், ஈழ விடுதலையின் பக்கம் நின்று, ஆதரவு நிலையில் கருத்துகளைப் பரப்பினார். என்னைப் போன்றவர்கள், ஈழவிடுதலைக்குத் தலைமையேற்றுப் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கம் நின்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பக்கம் நின்றுதான் கருத்துகளைக் கூறுகிறோம். நடுநிலை என்றெல்லாம் குழப்ப வேண்டியதில்லை. எல்லாரும் எங்களைப் போல் இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது ஞாயமும் இல்லை.

இந்த நேர்காணல்களில் பெரும்பாலும் ஈழவிடுதலை ஆதரவுக் கருத்துகளே காணப்படுகின்றன. அதற்கு, நம் போராட்ட ஞாயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த புத்தகத்தை ஈடுபாட்டுடன் தொகுத்த ஏகலைவன் மற்றொரு காரணம்!

ஒரு புத்தகத்தைப் பார்த்து எழுதி விடலாம். ஆனால் ஒரு பேச்சைக் கேட்டு, அதை சொற்றொடர்கள் தவறாமல் சரியாக அமைத்து எழுதுவது கடினமான பணி! சற்றொப்ப 632 பக்கங்களுக்கு நீளும் இந்த நேர்காணல்களை, ஏகலைவன் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பானது! அந்த உழைப்பை நாம் பாராட்ட வேண்டும்! நன்றி சொல்ல வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் தமிழினத்தின் ஆன்மாவாக, நம் கருத்துகள் இந்த நூலில் வெளியாகியுள்ளன. வரலாற்றைக் குழப்புவதற்கு இன்றைக்கு பலபேர் உள்ள நிலையில், உண்மையாக நடந்தது என்ன என்று வருங்காலத் தலைமுறைக்குத் தெரிவிக்க இந்த நூல் பெரிதும் பயன்படும் ஆவணமாகும்.

இந்த நூலுக்கு, “முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை, என்ன செய்ய வேண்டுமென்று, இந்த நூலில் உள்ள என் நேர்காணலிலேயே சொல்லி விட்டேன்.

தமிழீழத்தில்முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய அழிவு நேர்ந்ததற்கு, வெறும் பூகோள அரசியல் மட்டுமே காரணமல்ல. உலக நாடுகளைத் திரட்டி அந்த இனப்படுகொலையைச் செய்தது, இந்திய அரசு. அதன் சதியும் தமிழின வெறுப்பும் தான் முதன்மைக் காரணம்!

வரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். சிந்துச்சமவெளி தமிழர் நாகரிக நகரங்களை அழித்த அதே ஆரியப் பார்ப்பனிய பகைக் கும்பல்தான், “இந்தியவடிவில் கிளிநொச்சி நகரத்தையும் அழித்தது என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழர்களுக்கு ஒரு நாடு அமையக் கூடாது என்பதே அவர்களது எண்ணம்!

காங்கிரசு, பா..., மட்டுமின்றி வேறு எந்த அனைத்திந்தியக் கட்சி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தாலும், அவர்கள் நம் இனத்திற்கு எதிராகத்தான் இருப்பார்கள். தமிழீழ இன அழிவிற்குப் பிறகாவது அந்தப் புரிதல் நமக்கு வலுப்பட வேண்டும். அது முக்கியமானது.

தமிழீழத்திற்கு ஆதரவாக இந்தியாவை திருப்பிவிடலாம், தமிழ்நாட்டு சிக்கல்களுக்கு ஆதரவாக இந்தியாவைத் திருப்பிவிடலாம் என நம்மில் பலர் நினைக்கின்றனர். அது நடக்கவே நடக்காது! ஒருக்காலும், இந்தியாவை நமக்கு ஆதரவாகத் திருப்பவே முடியாது.

காவிரிப் பிரிச்சினையில் இந்தியாவை நம் பக்கம் திருப்ப முடியுமா? தமிழ்நாட்டு அரசியலில் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் இருப்பது ஒரு பாதிப்பு என்றாலும், நமக்கும் வேறொரு இனத்திற்கும் தகராறு என்றால், அந்த வேறொரு இனத்தைத்தான் இந்தியா ஆதரிக்கும். நம்மை ஆதரிக்க மாட்டார்கள்.

இவ்வளவு பெரிய இழப்புக்குப் பிறகும், நாம் இதனைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், பிறகு எப்பொழுது நாம் வாழ்வதுவெல்வது? ஈழத்தமிழர்கள்தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தப் புரிதலைப் பெற்றுச் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆற்றுநீர் சிக்கல்கள், தமிழ்நாட்டிற்குள் வெளி இனத்தாரின் ஆக்கிரமிப்பு, தமிழ் மொழி உரிமைப் பறிப்பு, இன உரிமைப் பறிப்பு போன்றவற்றில், தமிழ் மக்களைத் திரட்டிக் கால் பதித்து நின்று, அந்தப் போராட்டங்களின் வழியே ஈழ விடுதலைக்கு நாம் துணை செய்யலாம். அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், ஈழத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழ்நாட்டில் செயல்பட்டால், சிறிது காலம் நாம் செயல்படுவோம், அது வெகுமக்களிடம் வேரூன்றாத தற்காலிகமான மக்கள் ஆதரவாகவே அமையும். அதன்பின் அது பயனில்லாமல் போகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களைஅவர்கள் அடிமைப்பட்டிருப்பதை உணர்த்தி போராட்டக் களங்களுக்குத் திரட்ட வேண்டும். தனது சொந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட முன்வராத உளவியல் இங்கிருந்தால், அவர்கள் எப்படி ஈழத்தமிழர் விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

எனவே, இந்த உறுதியோடு இளைஞர்கள்மாணவர்கள் செயல்பட வேண்டும். சிந்திக்க வேண்டும். நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொள்ளாமல், நாம் தான் முன்னின்று செயலாற்ற வேண்டும் என, இலட்சக்கணக்கான தமிழர்கள் இறப்பிற்குப் பிறகாவது இளைஞர்கள் உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.

அதற்கான உந்துசக்தியை, இந்த நூல் நிச்சயம் வழங்கும். இந்த நூலை விற்பனை செய்ய எல்லோரும் துணை செய்ய வேண்டும். கடன்கள் ஏதுமில்லாமல், மறுபதிப்புக்கு இந்த நூல் வரும் அளவிற்கு, நாம் இந்நூலை கொண்டு சென்று விற்பனை செய்து, கருத்துகளைப் பரப்ப வேண்டும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

நிகழ்வில், தமிழ்த் தேசியப்பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் வடிவேலன், இளவல், சீவானந்தம், சரண்யா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளின் திரளான தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

Tuesday, May 17, 2016

”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!ஆதிக்க இந்தியாவின் அடிமையாக உள்ள தமிழ்நாடு, தனது அடிமை முறியைப் புதுப்பித்துக் கொள்ளும் வடிமாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (2016 மே 16) பரபரப்போடு நடந்து கொண்டிருந்த வேளையில், அந்த அடிமைத் தேர்தலைப் புறக்கணித்து – தமிழ் இன விடுதலைக்காகப் போராடும் தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு விடுதலைக்காக உயிரீகம் செய்த புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் வீரவணக்க நிகழ்வை நடத்தியது.

நக்சல்பாரி இயக்கத்தின் தமிழக நிறுவனர்களில் ஒருவரும் தூக்குத் தண்டனை பெற்று பின்னர் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வெளிவந்த ஈகியும் தமிழ்த் தேசியப் போராளியுமான புலவர் கு.கலியபெருமாள் அவர்கள், கடந்த 16.05.2007 அன்று காலமானார்.

மார்க்சியத்தை ஓர் ஆன்மிக நூல் போல் பார்க்காமல் மண்ணுக்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பூக்கம் மிக்க புரட்சியாளராக விளங்கியவர் புலவர் கலியபெருமாள்.

தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அதிலிருந்து விடுபட அரசுக்குக் கருணை மனு அளிக்கப் பலரும் புலவர் கலியபெருமாளை வலியுறுத்திய போது, “ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால்என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை” என்றுகூறி கருணை மனுத்தாக்கல் செய்ய மறுத்தார்.

புலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22.2.1970-இல்தோழர்கள் சர்ச்சில்கணேசன்காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம்தென்னஞ்சோலை செங்களம்” என அழைக்கப்படுகிறது.

நேற்று (16.05.2016) மாலை 6 மணியளவில் செங்களத்தில், “தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் - வீரவணக்க நிகழ்வு, எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வுக்கு, புலவர் கலியபெருமாள் அவர்களின் தம்பியும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் செயலாளருமான தோழர் கு. மாசிலாமணி தலைமை தாங்கினார்.

புலவர், மனைவி வாளாம்பாள், தோழர்கள் கணேசன், சர்ச்சில், காணியப்பன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி, முழக்கங்கள் எழுத்தி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழர் தேசிய முன்னணி மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். நிறைவில், தோழர் சௌ.ரா. கிருட்டிணமூர்த்தி நன்றி கூறினார்.

நிகழ்வில், மாந்த நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், தோழர் க. சோழநம்பியார், தமிழ்த் தேசியப் பேரியக்க முருகன்குடி செயலாளர் தோழர் அரா. கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முனுனணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இராமகிருட்டிணன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

புலவர் கு. கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

Sunday, May 15, 2016

நன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்

நன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்

'தமிழக அரசியல்' வார இதழுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ. மணியரசன் வழங்கிய பேட்டி !

அடிமைப்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் - தங்கள் அடிமை நிலையை உணராமல் இருப்பதற்காக வெள்ளையர்கள் கொண்டு வந்த அதே தேர்தல் முறையை, ஆதிக்க இந்திய அரசு நம்மீது திணிக்கிறது என்றுகூறி, அதிகாரமில்லா தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் ஏமாற்றுப் பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி 20 அன்று தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் அளித்துள்ள பேட்டி, “தேர்தலே ஒரு நாடகம்” என்ற தலைப்பில் 'தமிழக அரசியல்' வார ஏட்டில் இன்று வெளியாகியுள்ளது.

அப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“முதலில் நாம் ஏன் வாக்களிக்கிறோம்? எதற்காக வாக்களிக்கிறோம்? யாருக்காக வாக்களிக்கிறோம்? என்ற கேள்விகள் நம் மக்கள் முன் இருக்கிறது. அதற்கு முன் இந்த சட்டமன்றம் எப்படி உருவானது என்பதை சொல்கிறேன்.

வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் 1919-ஆம் ஆண்டு மாண்டே செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட காலனி ஆட்சிக்குரிய சட்டமன்றம்தான் இப்போது உள்ள சட்டப்பேரவை. முதலில் இந்த சட்டப்பேரவை வெள்ளையர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தது. இப்போது டெல்லி அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. அதுதான் உண்மை.

நாம் ஏன் வாக்களிக்கிறோம்? தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்களித்து என்ன முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறோம்? ஏழை ஏழையாகதான் இருக்கிறான். பணக்காரன் பணக்காரனாகத்தான் இருக்கிறான். எந்த முன்னேற்றமும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையை முன்னேற்ற இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? நம்முடைய 234 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நம் தமிழக மக்களுக்காக ஒரு மசோதாவை முதலில் சட்டமன்றத்தில் இயற்ற முடியுமா?

அதற்கு முதலில் டெல்லி அரசின் மூலமாக நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். அதுவும் அந்த சட்டம் மத்திய அரசுக்கு எதிராக இருந்தால் ஆளுநர் கையெழுத்து போட மாட்டார். பிறகு எப்படி நம் வாழ்க்கையைம் வளமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலால் முன்னேறும்?

நம் மக்களின் பிரச்சினைகளான காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, பாலாற்று உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, மீனவர்கள் உரிமை என எந்த உரிமைகளை நாம் இதுவரை வாக்களித்த கட்சிகள் பெற்றுத் தந்தன? இவையனைத்தும் நம்மைவிட்டு பறிபோனதுதான் மிச்சம். பிறகு ஏன் இவர்களை நம்பி நாம் வாக்களிக்கிறோம்?

நம் வாழ்வு சிறக்க வேண்டும். நம் மண் சிறக்க வேண்டும் என்றுதானே வாக்களிக்கிறோம். அதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா? ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் கோடி எவ்வளவு? இந்த பணமெல்லாம் யாருடைய பணம்? ஒவ்வொருவரின் வரலாற்றையும் திருப்பி பாருங்கள். அப்போது அவர்களின் உண்மை முகம் தெரியும். நம் மக்களின் பணத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்கள் தளபதி என்றும் தமிழினத் தலைவர், புரட்சித் தலைவி என்றும் அவர்களை பிரகடனப்படுத்திக் கொள்ள நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நம் மக்கள் இங்கு மின்சாரப் பற்றாக்குறையால் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் போது இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, தினசரி நாளொன்றுக்கு கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் 11 கோடி அளவுக்கு கொடுத்து பக்கத்து மாநிலங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தார்களே? அதற்காகவா நீங்கள் இவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?

இப்போது தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளின் உண்மை முகங்களை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். நாம் நன்றாக ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போகமாட்டார்கள்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன், தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். 


Saturday, May 14, 2016

அதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் பொதுத் தேர்தலைப் புறக்கணிப்போம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறைகூவல்!


அதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு நடத்தப்படும்

பொதுத் தேர்தலைப் புறக்கணிப்போம்!உண்மையான அதிகாரத்திற்குத் தமிழ்த்தேசிய சுடரேந்தி போராடுவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறைகூவல்! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...
காவிரி புதிய அணைகளைத் தடுக்க..
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்
அவமதிக்கும் கேரள அரசை தண்டிக்க
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


ஆண்டாண்டு காலமாக பாலாற்றில்

கிடைத்து வந்த ஆற்றுநீரை அணைக்கட்டித்
தடுக்கும் ஆந்திரத்தைத் தடுக்க
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


எங்கள் மண் கச்சத்தீவைத் திரும்பத் தாஎன 

சிங்கள அரசிடம் உரிமை கோர
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்

நெய்வேலி மின்சாரத்தைப் பயன்படுத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில்

எடுக்கப்படும் பெட்ரோலைப் பயன்படுத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழீழப் பொதுவாக்கெடுப்பு வேண்டுமன

.நா. அவையை வலியுறுத்த 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழீழ இனப்படுகொலையாளிகளை 

அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


உயிருக்குக் கேடு விளைவிக்கும்

அணுஉலைகளை இழுத்து மூட
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில்

மாணவர் சேர்க்கையை நடத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


நிலத்தில் துளையிட்டு மீத்தேன் எரிவளி

எடுக்கும் .என்.ஜி.சி.யை விரட்ட
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டின் நிலக்கரி - இரும்பு 

கனிம வளங்களைப் பயன்படுத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


ஆயிரமாண்டுகளாக நடந்து வந்த

ஏறுதழுவலை தானே நடத்திக் கொள்ள
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


வழிப்பறிப் போல் கொள்ளையடிக்கும்

சுங்கச்சாவடிகளை இழுத்து மூட
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


பெட்ரோல், டீசல், தங்கம்

விலைகளைத் தீர்மானிக்க - கட்டுப்படுத்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

தமிழன்என்று நம் இனத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழை

அலுவல் மொழியென அறிவிக்க
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு நடுவண் அரசு நிறுவனங்களில் 

தொழிற்சாலைகளில் தமிழர்களைப் பணியமர்த்த
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு நடுவண் அரசு நிறுவனங்களில் 

தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கும் சிங்களரை,

தமிழகக் காவல்துறை கைதுசெய்ய ஆணையிட 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


இந்தி - சமற்கிருதத் திணிப்பில் ஈடுபடும் 

நடுவண் அரசு நிறுவனங்களைத் தடைசெய்ய
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


நடுவண் அரசுத் தேர்வெழுதும் தமிழர்களுக்கு

தமிழிலேயே வினாத்தாள் பெற்றுத்தர 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


உலகில் எங்கெனும் தமிழர்கள் தாக்கப்பட்டால்,

தாக்கியவர்களை அரசுரீதியாகக் கண்டிக்க 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டில் குடியிருக்கும் தமிழீழ அகதிகளுக்கு 

குடியுரிமை வழங்கி ஆணையிட 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


மேற்கு மாவட்ட வேளாண்மையை நசுக்கும்

கெயில் குழாய்களைப் பதிப்புத் திட்டத்தைத் தடுக்க 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


தமிழ்நாட்டு வேளாண் சந்தையை அபகரித்து, 

நம் உழவர்களைக் கடனாளியாக்கும், அயல்மாநில
வேளாண் விளை பொருட்களைக் கட்டுப்படுத்த 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!


ஆனால்....................
ஊழல் செய்து பணம் ஈட்ட

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


ஊரை அடித்து உலையில் போட

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


மக்கள் போராட்டங்களை ஒடுக்க

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


இந்தியக் கொடியை ஏற்றி வைக்க

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


தெரு விளக்குகளை மாற்றி

புதிய சாலைகள் போட 
தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


அரசே சாராயக்கடை நடத்த

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


பிடிக்காதவர்களை சிறையில் அடைக்க

தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமுண்டு.!


அதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு ஆதிக்க இந்தியா நடத்தும்

தேர்தலைப் புறக்கணிப்போம்!உண்மையான அதிகாரத்திற்குத் தமிழ்த்தேசிய சுடரேந்தி போராடுவோம்! 
போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT