உடனடிச்செய்திகள்
Showing posts with label கதிராமங்கலம். Show all posts
Showing posts with label கதிராமங்கலம். Show all posts

Monday, May 21, 2018

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19.05.2018 அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் மீது, தமிழகக் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல்நிலையத்தில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். பலரைத் தேடி வருகின்றனர். 

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அறவழியில் கூட்டம் நடத்திய தலைவர்கள் மீதும், களப்போராளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 

தமிழ்நாடு அரசு! அறப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அடக்குமுறையை ஏவாதே! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Wednesday, July 26, 2017

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் ஆ. குபேரன், இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானார்.

கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.07.2017 காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் மீது, பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (25.07.2017) சிதம்பரம் நீதிமன்றம் தோழர் குபேரனுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியது. சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கோபாலகிருஷ்ணன் அவர்களும், வழக்கறிஞர்கள் முகுந்தன், இதயச்சந்திரன் உள்ளிட்டோரும் தோழர் குபேரனுக்காக நேர்நின்று வாதாடினர்.

இதனையடுத்து, இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து தோழர் குபேரன் விடுதலையானார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, சிதம்பரம் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் சிறை வாயிலில் அவரை முழக்கமிட்டு வரவேற்றனர்.

தோழர் குபேரன் கைதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! தோழர் குபேரனை பிணையில் எடுக்க உதவிய சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி!

சிறையிலிருந்து விடுதலையான பின், சிறைச்சாலை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய தோழர் குபேரன், கதிராமங்கலத்துக்காகவும், தமிழினத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடுவோம், அதை இதுபோன்ற அடக்குமுறைகளால் தடுத்துவிட முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

தொடருந்து போராட்டக்களத்தில் நிற்போம்! போராடுவோம்!
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Tuesday, July 11, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் 12.07.2017 அன்று தெருமுனைக்கூட்டம்..!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் 12.07.2017 அன்று தெருமுனைக்கூட்டம்..!

கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், மதுரையில் நாளை (12.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது.

மதுரை - செல்லூர் அறுபது அடி சாலையிலுள்ள கண்ணையா முத்தம்மாள் அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம் தலைமை தாங்குகிறார். பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, July 6, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், திருச்சியில் வரும் வெள்ளியன்று (07.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகில், 07.07.2017 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, July 5, 2017

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!
கதிராமங்கலத்தைக் காப்பதற்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “மகளிர் ஆயத்தின்” மகளிர் தோழர்கள், இன்று (05.07.2017) தஞ்சை மாநகரில் செய்தப் பணிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் திகைத்து நின்றனர்!

கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கி ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்த்த காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அச்சிடப்பட்ட சுவரெட்டிகளை குடந்தை நகரில் நாம் ஒட்டிய நிலையில், அதைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர்.
இன்று (05.07.2017) அச்சுவரொட்டிகளை மகளிர் ஆயத்தின் தோழர்கள் தாங்களாகவேச் சென்று தஞ்சையின் முதன்மை வீதிகளில் ஒட்டினர். தள்ளாத அகவையிலும் இளைஞரைப் போல் சுறுசுறுப்போடு செயல்பட்டு வரும் மகளிர் ஆயத்தின் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில், மகளிர் தோழர்கள் கோகிலா, சரசுவதி, உமா, தானி ஓட்டுநர் சிவா ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். நாளையும் அப்பணியில் தோழர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, கடந்த 03.07.2017 அன்று திருச்சி நடுவண் சிறைக்கு சென்ற தோழர் இலட்சுமி அம்மாள், வெள்ளம்மாள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதனையடுத்து நேற்று (04.07.2017), கதிராமங்கலத்திற்குச் சென்ற தோழர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட தோழர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் தோழர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மகளிர் ஆயத்தின் பணி தொடர்கிறது!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு: 7373456737
www.kannotam.com
முகநூல்: FB/MakalirAayam

Friday, June 30, 2017

வெறியாட்டம்!

வெறியாட்டம்!
கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலில், அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வன்முறை ஏவி, மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட 13 பேர் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, காவல்துறையினர் கைது செய்து, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அவர்களது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்களும், ஊர் பொதுமக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஊரில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

Friday, June 23, 2017

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!
தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு : 

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவிகளும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.

இப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.

மக்கள் போராட்டம் 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து "கதிராமங்கலம் கதறல்" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.

இப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, " 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

பூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்கிறார்.

நன்றி: விகடன் 
http://www.vikatan.com/news/tamilnadu/93126-this-is-what-happening-in-kathiramangalam.html

ஆவணப்படத்தைப் பெற : 
https://www.facebook.com/panmaiveli/photos/a.1461988764024142.1073741828.1460639837492368/1907244619498552/?type=3&theater

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச : 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannotam.com 
இணையம் : www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT