கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!
தமிழக உழவர் முன்னணி அறிக்கை!
வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேளாண்மையைப் புறக்கணித்திருப்பது உழவர்களுக்கு வேதனை அளிக்கிறது.
அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று முந்திக் கொண்டு இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கிறார்களே அன்றி தமிழக மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும், சிறுதொழில்களையும் பாதுகாப்பதற்கு உருப்படியான திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.
தமிழக வேளாண் சந்தையை பாதுகாப்பது, வேளாண் விளைபொருள்களுக்கு
இலாபவிலை உறுதி செய்வது, வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கட்சிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவை அண்டை மாநிலங்களால் முடக்கப்பட்டு தமிழகம் ஒரு வகை நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமான ஆற்றுநீர் உரிமையை மீட்பதற்கு அண்டை மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் அரசியல்-பொருளியல் அழுத்தம் கொடுப்பது பற்றி இக்கட்சிகள் சிந்திக்கவே இல்லை.
வற்றிய ஆறுகளில் மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து கொள்ளையடிப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.வேளாண் நிலங்கள் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்காகவும், அடுக்குமாடி கட்டடங்களுக்காகவும் மிக வேகமாக மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மனை வணிகத்தில் கட்சி வேறுபாடின்றி தேர்தல் தலைவர்கள் அனைத்து மட்டத்திலும் தரகர்களாக செயல்படுகின்றனர்.
வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உலைவைக்கும் மரபீனி மாற்று விதைகளைப்பற்றி இத்தேர்தலில் போட்டியிடும் பெரியகட்சிகள் எதுவும் கண்டுக்கொள்ளவேயில்லை.
ஒரு ரூபாய் அரிசித்திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் அழுத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.
இந்திய அரசு வேளாண் மானியத்தையும், வங்கிக் கடன்களையும் பெருமளவு வெட்டியுள்ள சூழலில் தமிழக உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே குறைந்த வட்டிக்கடனுக்கு சார்ந்து நிற்கும் நிலை உள்ளது.ஆனால் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கருவிகளை வாங்க கடன் வழங்குவது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து உழவர்களுக்கு வேளாண் கடன்கள் தாரளமாக வழங்குவது பற்றி கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.
இவ்வாறு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பெரும்பாலான கட்சிகள் வேளாண்மையையும் உழவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன. இலவ சங்கள் அறிவித்தும் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தும் பதவியைப் பெறுவது என்பது மட்டுமே அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் பாதையாக உள்ளது. எந்தத் தேர்தல் கட்சியிலும் உழவர்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வலுவுள்ள சக்தியாக இல்லை.ஆனால் கிராமப்புற வாக்காளர்கள் தான் எந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் மறந்து இவ்வாறான கட்சிகளில் கரைந்து பிரிந்து கிடப்பதே இந்த அவல நிலைக்கு முதன்மையான காரணமாகும்.
இனியாவது உழவர் பெருமக்கள் இந்தத் தேர்தல் சூதாட்ட அரசியலைப் புரிந்துக் கொண்டு கட்சிகளுக்கு அப்பால் அணிதிரண்டு உரிமைகளை வலியுறுத்தும் மாற்று அரசியல் சக்தியாக மாற வேண்டும்; உழவர்களாய் அணிதிரளவேண்டும் என தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
சி.ஆறுமுகம்,
செயலாளர்,
தமிழக உழவர் முன்னணி
23.03.2011