உடனடிச்செய்திகள்

Saturday, April 30, 2016

அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு, தோழர் பெ. மணியரசன் விளக்கம்!





அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் விளக்கம்!

அ. மார்க்சு அண்மையில் அவரது முகநூலில் ஒரு சித்தரிப்பு வெளியிட்டிருந்தார். அலிகர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் து. மூர்த்தி அவர்கள் அப்பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்ற செய்தியை அ. மார்க்சிடம் மூர்த்தி தொலைப்பேசியில் சொன்னாராம்.

 அதை ஒட்டி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலையில் மூர்த்தி பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளின் பழைய நினைவுகள் அ. மார்க்சுக்கு வந்தனவாம். அவற்றுள் ஒன்று:

“1983 யூலைக் கலவரஙகளை ஒட்டி நாங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்களும், தேசியம் குறித்த கேள்வி – பதில் தொகுப்புகளும் அன்று தமிழக அளவில் பேசப்பட்டவை.

அப்போது நான் சி.பி.எம். கட்சியில் இருந்தேன். 
அவர்கள் எனது இந்தச் செயல்பாடுகளை இரசிக்கவில்லை என்பதை விளக்க வேண்டியதில்லை. நான் கட்சியிலிருந்து விலக்கப்பட்டேன். 
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் எவ்வாறு கையாள்வார்கள் என்பதையும“ சொல்ல வேண்டியதில்லை.

இவர்கள் நக்சலைட் எனக் காவல்துறைக்குத் தகவல் கொடுப்பது உட்பட எல்லாம் நடந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பணியில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர் அன்று சி.பி.எம். கட்சியின் வட்டச் செயலாளராக இருந்த பெ. மணியரசன்”.
கட்சியை விட்டு அ. மார்க்சு நீக்கப்பட்ட பின் அவரை நக்சலைட்டு என்று காவல்துறைக்கு சி.பி.எம். கட்சியினர் தகவல் கொடுத்ததாக அவர் இப்போது கூறியிருப்பது முற்றிலும் பொய். சி.பி.எம். கட்சியில் அப்படி அவர் பற்றிக் காவல்துறையில் தகவல் கொடுக்கவில்லை.
 அடுத்து, அ. மார்க்சு நக்சலைட் என்று தகவல் கொடுத்த முன்னணியில் இருந்தவர்களில் மணியரசனும் ஒருவர் என்று அ. மார்க்சு கூறியிருப்பது முற்றிலும் பொய். அப்படிப்பட்ட இழிசெயல் எனக்குப் பழக்கமில்லை.
ஈழத்தமிழர் சிக்கல் தொடர்பாக எழுதியதற்காக அ. மார்க்சை சி.பி.எம். கட்சி நீக்கவில்லை. 
அவர் வேறொரு நிகழ்வுக்காக நீக்கப்பட்டார். ஈழத்தமிழர் சிக்கலுக்காக இவர் நீக்கப்பட்டதுபோல், ஒரு தோற்றம் காட்டுவது மோசடி.

தமக்குப் பிடிக்காதவர்கள், தமது தன் அகங்காரத்தை ஏற்காதவர்கள் போன்றவர்களை அவதூறு செய்வது அ. மார்க்சின் வாடிக்கை.
 தொடர்ந்து அவரது முகநூலிலும் சில கட்டுரைகளிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் குறித்து அவதூறாகவே எழுதி வருகிறார்.


 தமிழ்த் தேசியப் பேரியக்கம் இந்துத்துவா ஆதரவு இயக்கம் என்று எழுதி வருகிறார். நாங்கள் அ. மார்க்சின் “நம்பகத்தன்மை”, “தர்க்க நேர்மை” ஆகியவை குறித்து நன்கு அறிந்திருப்பதால் அவரது அவதூறுகளுக்கு மறுப்பு எழுதும் வழக்கமில்லை. 
அந்த அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.
தொடர்ந்து, துணிந்து பொய்சொல்லும் ஆற்றல் அ. மார்க்சுக்கு இருப்பதால் ஒரு தடவையாவது நமது மறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இதை எழுத நேர்ந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் திருவாரூர் சி.பி.எம். கட்சி மாவட்ட அலுவலகத்திற்குப் போனாராம். அங்கு அவரை இட்லரின் குற்ற விசாரணை அறை போல் – ஓர் இடத்தில் வைத்து விசாரித்த இடத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்ததாம். சி.பி.எம். தலைவர்கள் அ. மார்க்சை குற்ற விசாரணை செய்யும் போது நானும் உடன் இருந்து அந்தக் குற்ற விசாரணைக்குத் துணை செய்தேனாம். இப்படியெல்லாம் கதையளந்திருந்தார்.

அப்போது நடந்தது என்ன?
அ. மார்க்சை சி.பி.எம். தலைமைக்கு நான்தான் அறிமுகப்படுத்தினேன். தீக்கதிர் இதழில் புனைபெயர்களில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார். போகப் போக சில கட்டுரைகளில் சி.பி.எம். தலைமையின் நிலைபாடுகளுக்கு சிற்சில இடங்களில் முரணாக எழுதுகிறார் என்று கருதி – தீக்கதிர் ஆசிரியர் குழு, மார்க்சு கட்டுரைகளை வெளியிடவில்லை. 

இது குறித்து தீக்கதிர் ஆசிரியருக்கு அ. மார்க்சு கடிதம் எழுதினார்.
இதுதான் அ.மார்க்சு சி.பி.எம். தலைமை மீது சினம் கொள்ளத் தொடங்கிய புள்ளி. அப்போதும்கூட, என் கருத்து அவரது அந்தக் கட்டுரைகளைத் தீக்கதிரில் வெளியிட்டிருக்கலாம் என்பதுதான். அதுபற்றி சி.பி.எம். தலைமையில் நான் பேசியுள்ளேன்.


ஆனால், சி.பி.எம். தலைமை அ. மார்க்சு கருத்துகளில் மாற்றம் வந்திருக்கிறது என்று கூறி – குறிப்பான அந்தச் செய்திகள் சிலவற்றைச் சொல்லி வெளியிட மறுத்துவிட்டார்கள்.

தஞ்சை நகரம் பூச்சந்தை அருகே தோழர் ஐ. மாயாண்டி பாரதி அவர்கள் சிறப்புரையாற்றும் பொதுக்கூட்டம் ஒன்று கட்சி சார்பாக நடத்தினோம். அதில் ஐ.மா.பா. பேசியதை ஒலிநாடாவில் பதிவு செய்தார் மார்க்சு. 
இது தெரிந்து சி.பி.எம். மாவட்டத் தலைமை கேட்டது. அப்பேச்சில் ஐ.மா.பா. 1948-51 கட்சியின் தலைமறைவு கால நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கூறி கட்சியின் ஈக வரலாற்றைப் பெருமிதத்துடன் குறிப்பிட்பிட்டிருந்தார். குறிப்பாக நெல்லைச் சதி வழக்கு – அதில் வெடிகுண்டுப் பிரச்சினை ஆகியவற்றைக் கூறியதாக நினைவு.

இதை அறிந்த மாவட்டத் தலைவர்கள் அ. மார்க்சை திருவாரூரில் கட்சியின் மாவட்டத் தலைமையகத்திற்கு வரச்சொல்லி ஒலிநாடாவைப் போடச் செய்து கேட்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்ற முறையிலும் – தஞ்சை வட்டப் பொறுப்பாளர் என்ற முறையிலும் என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்.

அப்போது தஞ்சை – திருவாரூர் – நாகை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தது. கட்சியின் மாவட்டத் தலைமையகம் திருவாரூரில் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் எட்டுப்பேர்.
 அக்குழுவில் நானும் திருத்துறைப்பூண்டி தோழர் இரா. கோவிந்தசாமி அவர்களும் உறுப்பினர்கள்.
இறுதியில் ஐ.மா.பா. பேச்சு அடங்கிய ஒலிநாடாவை அழித்துவிடச் சொன்னார்கள். நான் அந்த இடத்தில், செயற்குழுவில் இல்லாத அடிப்படை உறுப்பினரான மார்க்சை வைத்துக் கொண்டு செ.கு. தோழர்கள் அறிவித்த முடிவை விதிமுறைப்படி மறுத்துப் பேசக் கூடாது. செயற்குழுத் தோழர்களிடம் தனியேதான் கூற வேண்டும்.

 அப்படித்தான், அந்த ஒலிநாடாவால் ஒன்றும் ஆபத்தில்லை, அது பழைய நிகழ்ச்சிகள் என்று கூறினேன்.
அதை மாவட்டச் செயலாளரும் பெரும்பாலான மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.

இவ்வளவுதான் அன்று நடந்தது. இதனை ஏதோ பாசிஸ்ட் குற்ற விசாரணை (Interrogation Chamber) போல் விசாரித்தார்கள் என்றெல்லாம் அ. மார்க்சு அளப்பது, வழக்கம்போல் தன்னைத் தானே அவர் இரசித்துப் பூரித்துக் கொள்ளும் மனத்திரிபின் ஒரு பகுதிதான்!
அ. மார்க்சு தாம் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளையிலும் மற்ற இடங்களிலும் இந்தச் சிக்கலைப் பெரிது படுத்திப் பேசி, கட்சிக்கு எதிரான பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டார். அதன்பிறகுதான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் முகநூலில் கூறியிருப்பது போல் ஈழத்தமிழர்கள் சிக்கலை எழுதியதற்காக அவர் நீக்கப்படவில்லை.

தன்னோக்கு வாதச்(Subjectivism) சிந்தனைகளால் அ. மார்க்சு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அவரைப் பக்குவப்படுத்தவும், சி.பி.எம். தலைமையுடன் எங்களுக்குள் அரசியல் கொள்கை வழிப்பட்ட மாறுபாடுகளை இலைமறை காய் போல் சாடையாகச் சொல்லி அவரை ஆற்றுப்படுத்தவும் மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி அவர்களும், நானும், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும், ஒருநாள் – அ. மார்க்சு இல்லம் சென்று அவருடன் தனிமையில் பேசினோம். (தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அவர் குடியிருந்த இல்லம்).

“எங்களுக்கும் சி.பி.எம். அனைத்திந்தியத் தலைமையின் கொள்கைகளில் மாறுபாடுகள் இருக்கின்றன. மாவட்டத் தலைமையின் சில செயல்பாடுகளிலும் மாறுபாடுகள் இருக்கின்றன. பொறுமையாக இருங்கள். ஓர் உள்கட்சி விவாதம் நடத்த இருக்கிறோம். அதன்பிறகு பேசிக் கொள்வோம்” என்றோம்.

ஆனால், அ. மார்க்சு எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சி.பி.எம். மாவட்டத் தலைமை திட்டமிட்டு அவரைத் திருப்திப்படுத்த எங்களை அனுப்பி வைத்ததாகவே அச்சந்திப்பை அவர் கருதிக் கொண்டார்.

சி.பி.எம். அந்த அளவு அ. மார்க்சு குறித்து கவலைப்படவில்லை. கட்சிக் கிளை ஒன்றின் உறுப்பினர் மார்க்சு. அதற்கு மேல் கட்சிக்குள் செல்வாக்கும் தோழர்கள் பலரின் பிடிப்பும் உள்ளவர் அல்லர் அவர். 

அவர் ஒரு பேராசிரியர், எழுத்தாற்றல் பெற்றுள்ளார்; கலை இலக்கியத் துறையில் இருக்கிறார்; அவரை இழந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சி மட்டுமே மாவட்டத் தலைமைக்கு இருந்தது.

பின்னர் மார்க்சு, சி.பி.எம். கட்சியை விட்டு விலகி ம.க.இ.க.வுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின்னர், மக்கள் போர் அமைப்பில் சேர்ந்தார். அப்போது தஞ்சை மாவட்ட சி.பி.எம்.மிலிருந்து இவருடன் யாரும் போகவில்லை. பிறகு மக்கள் போர் அமைப்பிலிருந்தும் விலகி எங்கெங்கோ போய் சீரழிந்துவிட்ட அறிவுத்துறையாளராக இப்போது ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.

அதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஒரு போதும் விமர்சிக்கவில்லை. என்னைப் பற்றியும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் குறித்தும் வன்மத்துடன் தொடர்ந்து அவதூறு செய்யும் அ. மார்க்சின் பொய்களை மறுப்பதற்காகவே இந்த விளக்கத்தைத் தெரிவித்தேன். 

Wednesday, April 27, 2016

“ஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” நூல் வெளீயீட்டு விழா – கருத்தரங்கம்.

சிதம்பரத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்நூல் வெளீயீட்டு விழாகருத்தரங்கம்.
          




தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் உயிர்வலி ஆவணப்பட திரையிடல், சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

24.04.2016 மாலை 5.30 மணிக்கு, சிதம்பரம் சபாநாயகர் தெரு, தமிழக உழவர் முன்னணி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் தலைமை ஏற்றார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா வரவேற்றுபேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . முருகன், தோழர் . விடுதலைச்சுடர், பெண்ணாடம் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்வின் துவக்கமாக மரண தண்டனைக்கு எதிரானஉயிர்வலிஆவணப்படம் திரையிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் .பூ. நடராசன் வாழ்த்துரை வழங்கி படத்தை துவக்கிவைத்தார்.

கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்வாக தோழர் கி.வெங்கட்ராமன் எழுதியஏழுதமிழர் விடுதலை உச்ச நீதிமன்ற மறுப்புதமிழ்நாடு அரசின் அதிகாரம்நூல் வெளியீடு நடைபெற்றது. பேரறிவாளன் அவர்களின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள் முன்னிலைவகிக்க சந்தனக்காடு தொடரின் இயக்குனரும், திரைப்பட இயக்குநருமான .கௌதமன் அவர்கள் நூலினை வெளியிட்டுப் பேசினார்.

தமிழர் உரிமைப்போராட்டங்களில் பங்கெடுத்து ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆன பெண்ணாடம் தோழர் மாசிலாமணி (புலவர் கலியபெருமாள் தம்பி) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் ஜா. இராசா, சீர்காழி நகர பேரியக்கச் செயலாளர் தோழர் கோ. நடராசன் , தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர்கள் திரு.வை.ரா.பாலசுப்ரமணியம், திரு.பழமலை, தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. .கோ. சிவராமன், மிட் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் திரு. . மணிவண்ணன் ஆகியோர் சிறப்புப்படி பெற்று கருத்துரையாற்றினார்கள்.

சிதம்பரம் பகுதி மூத்த வழக்குரைஞர் .கோபாலகிருட்டிணன் , சென்னை மத்திய சட்டக் கல்லூரி சட்ட மாணவி செல்வி. .பா. வையவி ஆகியோர் நூல் குறித்து திறனாய்வு உரையாற்றினார்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.



தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் . குபேரன் ஒருங்கிணைத்தார். தோழர் சோ. யாழவன் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் அரங்கில் நடைபெற இருந்த இந் நிகழ்வு தி.மு. தலைவர் கருணாநிதி சிதம்பரம் வருகையை காரணம் கூறி கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது.
எனவே, உடனடியாக இடம் மாற்றி இந் நிகழ்வு நடத்தப்பட்டாலும் அரங்கு நிறைந்த கூட்டமாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைப்புத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும், மட்டுமல்லாது ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.



Wednesday, April 20, 2016

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ்

உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க!



தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பது இன்னொரு தமிழினப் பகை நடவடிக்கையாகும்.


இராசீவ் காந்தி வழக்கில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு செய்த முடிவு, ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வை ஏற்றுக் கொண்ட நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு பாரதிய சனதாக் கட்சி, காங்கிரசுக் கட்சி, பிற அனைத்திந்தியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருக்கின்றனர். அதற்கு முன்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்து அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு ஒருமனதான தீர்மானமும் நிறைவேறியிருக்கிறது.

இவ்வாறு ஒட்டு மொத்தத் தமிழர்களும், தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என செய்துள்ள ஞாயமான முடிவை இந்திய அரசு ஏற்க மறுத்திருப்பது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435 வழங்கும் அதிகாரத்தை, தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் இனப்பகைச் செயலாகும்.

இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ஆயத்தில் நிலுவையில் இருப்பதால்தான், இவ்வாறான முடிவெடுத்திருப்பதாக இந்திய அரசு கூறுவது பொய்யான சாக்குப் போக்கே ஆகும். 19.04.2016 நாளிட்ட அதே கடிதத்தில், தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என அறிவித்திருப்பதே இந்திய அரசின் உண்மையான உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 2015 திசம்பர் 2 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு உள்ள ஒரே மாற்று வழியை எடுத்துக் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ், தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் வழியாக பேரறி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். உறுப்பு 161 மாநில அரசுக்கு வழங்கும் மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, நீதிமன்றத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

விதி 435-இன் கீழ், இந்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட பிறகு, தமிழ்நாடு அரசுக்கு இருக்கிற ஓரே வழி அரசமைப்புச் சட்ட உறுப்ப 161 தான்.

இது தேர்தல் நடத்தை விதிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அதிகாரமும் அல்ல. எனவே, உறுப்பு 161-இன்படியான ஏழு தமிழர் விடுதலை முடிவுக்கு, தேர்தல் நடத்தை விதி குறுக்கே வருமோ என தமிழ்நாடு அரசு தயங்க வேண்டியதில்லை. ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்யலாம்.

இச்சிக்கலில் ஏற்கெனவே ஒரே கருத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளும், இந்தக் எகோதரிக்கையை வலியுறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கோரிக்கைதான் இது என்று மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏழு தமிழர் விடுதலை என்பது தேர்தல் போட்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒட்டு மொத்தத் தமிழினத்தின் இன மானச் சிக்கலாகும்.

இதற்கிடையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்டகால சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒரே முடிவில் நின்று மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
  

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT