உடனடிச்செய்திகள்

Wednesday, February 10, 2010

இயக்குநர் சீமான் மீது வழக்குக் கூடாது: பெ.மணியரசன் வலியுறுத்தல்

மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில்
சீமான் பெயரை நீக்க வேண்டும்

பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கியவர்களைக்
கைது செய்ய வேண்டும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை "கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி அவளை எப்படி கண்ணடிக்க (சைக் அடிக்க) முடியும்" என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறி பொதுவாகப் பெண் குலத்தையும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தி குற்றம் புரிந்துள்ளார்.

இச்செய்தி தமிழ்நாட்டில் பரவியதும் தமிழகமெங்கும் தமிழ் இன உணர்வாளர்கள் மனம் கொந்தளித்தனர். கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிலையில் சென்னையில் உள்ள மலையாள நடிகர் செயராம் வீட்டை யாரோ சிலர் தாக்கியுள்ளனர். மிகவும் விரைந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து 16 பேரைக் கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள்.


நடிகர் செயராம் வீட்டைத் தாக்கத் தூண்டிவிட்டவர் என்று குற்றம் சாட்டி நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமானை அவ்வழக்கில் சேர்த்து அவரை கைது செய்ய காவல்துறை தேடுகிறது. இது சனநாயக நெறிமுறைகளுக்கும், தமிழ் இன உணர்வுக்கும் எதிரான செயல். செயராம் வீட்டைத் தாக்கினால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


வேடிக்கைப் பார்க்க வேண்டியதில்லை தான். ஆனால் அந்த நிகழ்வில் பங்கெடுக்காத இயக்குநர் சீமானை வழக்கில் சேர்ப்பது தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். ஒரு வீட்டில் வன்முறை நடக்கும்போது வேடிக்கைப் பார்க்கமாட்டோம் என்று இப்போது மலையாள நடிகர் செயராம் பாதிக்கப்பட்ட போது உறுமும் முதல்வர், தமிழ் இன உணர்வாளர் சீமான் கார் தீ வைக்கப்பட்ட போது, ஈழத்தமிழர்களைக் காக்கப் போராடிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்ட போது தமிழ் இன உணர்வுள்ள இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கணிப்பொறி மற்றும் படப்பிடிப்புக்குரிய கருவிகள், அறைகலன்கள் நொறுக்கப்பட்ட போது தமிழகக் காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது.


மேற்கண்ட மூன்று வன்முறை நிகழ்விலும் இன்றுவரை குற்றவாளி ஒருவரைக் கூடக் கைது செய்யவில்லை. காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டது யார்? முதல்வர் கருணாநிதி விளக்கம் சொல்லவேண்டும். செயராம் வீட்டைத் தாக்கிய வழக்கிலிருந்து இயக்குநர் சீமானை விடுவிக்க வேண்டும் என்றும், சீமான், தா.பாண்டியன் ஆகியோர் கார்களுக்குத் தீ வைத்த குற்றவாளிகளையும் பாரதி ராஜா அலுவலகத்தைத் தாக்கிய குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
நாள் : 09.02.2009

Tuesday, February 9, 2010

தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.

தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, பா.ஆரோக்கியசாமி(த.தே.பொ.க.) ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் மா.சாந்தக்குமார் நன்றியுரை நிகழ்த்துவார்.


Thursday, February 4, 2010

சிறைவாசிகளை தாக்குவதுதான் காவல்துறையின் கடமையா? பெ.மணியரசன் கேள்வி

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களை தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொங்குதமிழ்.காம் இணையதளத்திற்கு வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.

கைதிகளை தாக்குவதுதான் காவற்துறையின் கடமையா: மணியரசன்
செங்கல்பட்டில், நேற்றிரவு காவற் துறையினர் சிறப்பு தடுப்பு முகாமில் புகுந்து அடித்து நொருக்கிய சம்பவம் பற்றி அறிந்தபோது, இலங்கைச் சிறையில் சிங்களக் காடையர்கள் எப்படி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களோ அப்படியேதான் செங்கல்பட்டு முகாமிலும் நடத்துகிறார்கள் என்ற உணர்வுதான் வந்தது எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் திரு பெ. மணியரசன்.

நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் கைதிகள் மீது தமிழக பொலிசார் மேற்கொண்ட கண்மூடித்தனமாக தாக்குதல்கள் குறித்து பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே திரு மணியரசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அவர்களில் 18 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பதும் அவர்களில் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதுவும் சிங்கள காடையர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சிறப்பு முகாம் என்பது வண்ணம் பூசப்பட்ட ஒரு கொடிய சிறைச்சாலையாக இருக்கிறது. அவர்கள் பல தடவை காலவரம்பற்ற உண்ணாவிரதம், உள்ளிருப்பு என்று போராடி அரசு தரப்பில் அதிகாரிகள் சென்று வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

10 -15 வருடங்களுக்கு முகாமிலேயே இருப்பதா என்று கேட்கிறார்கள். வழக்கை நடத்தி குற்றம் செய்தார்களெனில் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுக்கட்டும். இல்லையென்றால் வெளியே அனுப்புங்கள். அதை விடுத்து இரண்டும் கெட்டானாக நடத்துவது ஒரு பாசிச முறை.

உலகம் முழுவதும் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதில் ஒரு கைதிக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையும் வழங்கியே அவரை விசாரிக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு விலக்காக துன்புறுத்தி சித்திரவதை செய்து காலத்தை நீடிப்பது ஒரு சட்ட நெறியையே அரசு கவிழ்த்து விடுவதாக அர்த்தம்.

எனவே அந்தக் கோரிக்கையை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தும்போது பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, காவற் துறையை ஏவி, அடித்து நொருக்கி படுகாயப்படுத்தி அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கை, அதாவது காவலர்கள் அரச ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தனர் என்பதாக, ஒரு பொய் வழக்கைப் போட்டிருக்கிறார்கள்.

ஒரு கைதியை அடிப்பதுதான காவற்துறையின் கடமையா? அந்த கடமையை செய்ய விடாது தடுப்பது குற்றமா? பாசிஸ்டுகள் ஆட்சியில்தான் அதுமாதிரி செய்ய முடியும். தமிழ்நாட்டில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

உடனடியாக இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டு ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். தவிர தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு கையும் காலும் இல்லாதவர்களையெல்லாம் அங்கு அடைத்து வைத்துக்கொண்டு, அவர்களை வெளியில் விட்டால் ஓடிப்போய் விடுவார்கள் என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழுரிமை அமைப்புக்கள் மட்டுமல்ல, சனநாயகத்தில் மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து இவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போராட வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT