உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ் வழிக் கல்வி. Show all posts
Showing posts with label தமிழ் வழிக் கல்வி. Show all posts

Sunday, June 9, 2013

அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்!

"தமிழக அரசே! அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி 
மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்றாதே!"
தமிழகமெங்கும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில்
17.07.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என்பதை வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்மொழி நம் தாய்மொழி மட்டுமன்று; தமிழ்நாட்டின் ஆட்சிமொழி; தமிழகத்தின் தேசிய மொழி! தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலிருந்து தமிழ்மொழியை அப்புறப்படுத்துவதில், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுடன் தமிழக அரசும் போட்டி போட முனைந்துள்ளது.

2013-2014 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைப் புதிதாகத் தொடங்குகிறது தமிழக அரசு. கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்க உள்ளது.

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பானது எதிர்காலத்தில் கல்வி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தமிழைப் பயன்பாடற்ற மொழியாக்கிவிடும்.

தமிழை இழந்த பின் தமிழ்மக்கள் தங்கள் மண்ணிலேயே அயலார்க்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைகளாகி, ஆட்சி உரிமையை இழந்த உதிரிக் கூட்டமாக மாறிவிடுவர்.

தாய்மொழி வழியில் கற்போர்தாம் சொந்த சிந்தனை வளர்ச்சி பெறுவர்; புதியன படைப்பர் என்று குழந்தை உளவியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்கள் உலகுதழுவிய அளவில் வரையறுத்துள்ளனர். அயல்மொழிவழி படிப்பது நெட்டுருப்போட்டு மதிப்பெண் பெறும் தன்மையைத்தான் உருவாக்கும்.

வளர்ச்சியடைந்த பிரான்சு, செர்மனி, சப்பான், ரசியா, சீனா போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கில வழிக் கல்வி இல்லை. அந்தந்த நாட்டின் தாய் மொழிக் கல்வியே இருக்கிறது.

தமிழ்வழிக்கல்வி மூலம் தான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இனம் அறிவிலும் வணிகத்திலும் செழித்திருந்தது!

அயல்மொழித் திணிப்பைத் தடுக்க - தாய்மொழியைக் காக்க, போராடி முந்நூறு பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதும், பத்துப் பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்ததும் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஈகமாகும்.

தமிழக அரசுக்கு நாம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1.   அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தைப் போக்கப் பின் வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

அ. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும் (language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் (Medium of Instruction) இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அரசு ஆணை(G.O.) போடுவது கூடாது.

ஆ. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அல்லது பிற மொழியை மொழிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.

2.   ஒன்று முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் எண்பது விழுக்காடும், உயர்கல்விச் சேர்க்கையில் எண்பது விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

3.   அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.

4.   பத்து மற்றும் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகமாகக் காட்டி, கல்விக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக தனியார் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தையும் +1 இல் +2 பாடத்தையும் நடத்துகிறார்கள். அறிவு வளர்ச்சிக்கு எதிரான இந்தக் கல்விச் சூதாட்டத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்க வேண்டும். +1 வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும்.

5.   கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 விழுக்காடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

6.   நடுவண் அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

தமிழ்ப் பெருமக்களே!

தமிழ்வழிக் கல்வி கோருவது தமிழைப் பெருமைபடுத்துவதற்காக அல்ல; தமிழர்கள் பெருமை பெறுவதற்காக!

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களுக்கும் பெண்களுக்கும் சமூக நீதி வழங்குவது தமிழ்வழிக் கல்வியே!

பல்வேறு அரசியல் மற்றும் தமிழ் அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 28.5.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த நடவடிக்கையாகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில் 17.6.2013 அன்று ஆர்பாட்டம் நடத்துகிறோம்.

இனம் காக்க, மொழி காக்க, எதிர்கால வாழ்வுரிமை காக்க எழுச்சி பெறுவீர் தமிழர்களே! ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tuesday, May 28, 2013

தமிழ்வழிக் கல்விக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!

தமிழ்வழிக் கல்விக்காக 
ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!




தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28.05.2013) சென்னையில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தைச் சேர்ந்தபல்வேறு கட்சிஅமைப்புகளின் தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.




சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை எதிரொலித்தனர்.

இந்நிகழ்வில், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தலைநகர்த் தமிழ்ச் சங்கக் காப்பாளர் புலவர் த.சுந்தரராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் திரு சைதை சிவா, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிகைணப்பாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், சேவ் தமிழ்ஸ் இயக்கத் தோழர் செந்தில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி, தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், தமிழ் மீட்புக் கூட்டமைப்புத் தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றத் தலைவர் கவிஞர் செவ்வியன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், அ.ஆனந்தன், க.முருகன், உதயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் கு.சிவப்பிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், மு.தமிழ்மணி, கவித்துவன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ம.இலட்சுமி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதான தோழர்கள் தற்போது, ஆயிரம்விளக்கு பள்ளிக்கூடத்தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.



















(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றித் தமிழன்)

Friday, May 24, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!


தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!



தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, வரும் 28.05.2013 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும்ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதுஅதாவது, இதுவரை தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல்சமூகவியல் ஆகிய பாடங்கள் இனி ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்விமானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர்வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்லபெற்றோர்கள் விரும்பினால் எல்லாப்பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள்தொடங்குவோம் என்று அறிவித்தார்.

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம்அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம்பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்இப்போது பெரும்பாலும் வரலாறுபொருளியல்,கணக்குவணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம்அறிவியல்சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர,இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லைஅறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்விஇயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக்கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரைகற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போதுகிராமப்புற மாணவர்கள்அட்டவணை வகுப்பு மாணவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்குஆளாவார்கள்இவர்கள்  நகர்ப்புறமற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள்தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகிமனப்பாதிப்பு அடைவார்கள்இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

எனவே தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் திணிப்பதைக் கைவிட வேண்டும்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல்ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்சேர்க்கிறார்கள்அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு,ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் முடிவை எதிர்த்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது .

1.   முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றவேண்டும்.

2.   அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும்தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள்விளையாட்டுத்திடல் போன்றவை வேண்டும்விளையாட்டுஓவியம்இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3.   மருத்துவம்பொறியியல்வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்குமுன்னுரிமை தர வேண்டும்ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில்தொடங்கினால்கிராமப்புறஅட்டவணை வகுப்புமிகவும் பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும்.குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர்அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும் என்றும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





28.05.2013 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சைதை சிவா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயலர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கத் தோழர் செ.ப.முத்தமிழ் மணி, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப.வேலுமணி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், கவிஞர் இன்குலாப், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த.சுந்தரராசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் பா.கல்விமணி, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் பா.இறையெழிலன், சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கசேந்திர பாபு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பாளர் திரு. சீ.தினேசு, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ் மீட்புக் கூட்டமைப்பு திரு. அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற அமைப்பாளர் கவிஞர் செவ்வியன், எண்ணம் அறக்கட்டளை திரு. கா.தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இப்போராட்த்தில், தமிழ் மீதும் கல்வி மீதும் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமென தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

Monday, May 20, 2013

ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!




வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள் விரும்பினால் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்குவோம் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இம்முடிவுக்கு எதிராக சென்னையிலுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைத்து தமிழக அரசின் முடிவுக்கெதிராக, 28.05.2013 அன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

1. 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2. அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3. மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டுமெனம், அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும்.

இவ்வாறு அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

முன்னதாக, இதற்கான ஆலோசனைக் கூட்டம், கடந்த 18.05.2013 அன்று, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார்.

பேராசிரியர் பிரபா.கல்விமணி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, பாவலர் இன்குலாப், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் சுந்தராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், சேவ் தமிழஸ் இயக்கப் பிரதிநிதி திரு. நாசர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பொறுப்பாளர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர். இக்கலந்துரையாடலின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் தான், இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ் மீதும், கல்வி மீதும் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தொடர்புக்கு: 044-24348911

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT