உடனடிச்செய்திகள்

Wednesday, August 24, 2016

நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!” எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!”

எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் 
தமிழகத் தொழிற்சங்க முன்னணித் 
தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


 எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயிலில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், பேரியக்கத்தின் தலைவரும் தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவருமான தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

ஓசூர் அசோக் லேலண்ட் அலகு – இரண்டு தொழிற்சாலைக்கானத் தொழிற்சங்கத் தேர்தலில், கடந்த 19.08.2016 அன்று வெற்றி பெற்ற தோழர் கி. வெங்கட்ராமன், அதன்பிறகு சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை – தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் 26.08.2016 அன்று இதற்கானத் தேர்தல் நடைபெறுகின்றது.

இதற்கான பரப்புரையாக, நேற்று (23.08.2016), தொழிற்சாலை வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில், தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :

“அன்பான தொழிலாளத் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பேசும்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல, இங்கு – தொழிற்சங்க இயக்கத்தில் பதவிக்கானப் போட்டி நடக்கவில்லை. தொழிலாளர்களுக்குப் பணியாற்றுவதற்கான பொறுப்புக்கானப் போட்டியே நடக்கிறது. எனவே, இது பணிக்கான போட்டியே தவிர, பதவிக்கானப் போட்டி அல்ல என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? இருக்கின்ற உரிமைகள் பறிபோய்விடாமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழி முறைகள் என்ன? என்பதையெல்லாம் வழிகாட்டுவதற்கான போட்டியே இங்கு நடைபெறுகின்றது.
இதை வெறும் பேச்சாக நாங்கள் கூறவில்லை. நேற்று (22.08.2016) ஓசூரில், அசோக் லேலண்ட் – அலகு ஒன்றில் நடைபெற்றத் தொழிற்சங்கத் தேர்தலில் நாங்கள் வென்ற பிறகு, அங்கு பதவியேற்பு விழா நடத்தவில்லை. “பொறுப்பு ஏற்பு விழா” என்று அதை மாற்றி நடத்தினோம்.

எண்ணூர் அசோக் லேலண்ட்டில் நடக்கும் இந்த தொழிற்சங்கத் தேர்தல், இந்த முறை வழக்கமாக நடைபெறப் போவதில்லை. இந்தத் தேர்தல், புதிய ஒப்பந்தத்திற்கானத் தேர்தல் – புதிய ஒப்பந்தத்திற்கானக் கருத்து வாக்கெடுப்பு என்ற அளவில் நடக்கவுள்ளது.

ஓசூரில் தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு. மைக்கேல் பெர்ணான்டசு அவர்கள், தனது தலைமையைவிட்டுக் கொடுத்து, ஒரே கூட்டணி அமைத்து, எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் வென்றோம்.

எனினும், நாங்கள் யாருக்கும் வளைந்து நெளிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பணிக்கான வாய்ப்பே நமக்குக் கிடைத்துள்ளது. அதைச் சரியாகச் செய்வோம்.

இதற்கு முன்பு, திரு. மைக்கேல் அவர்கள் காலத்தில் போட்ட ஒப்பந்தம் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது புதிய ஒப்பந்தத்திற்காக செயலாற்ற இணைந்துள்ளோம்.

திரு. மைக்கேல் அவர்களையும், தொழிலாளர் நல மன்றத் தலைவர் திரு. குசேலன் அவர்களையும் நாங்கள் சம தூரத்தில் வைத்தும் எதிர்க்கவில்லை.

இங்கு போடப்படும் ஒப்பந்தங்கள், தொழிலாளர்களை வாழ வைக்கும் ஒப்பந்தங்களாக இல்லை. தொழிலாளர்களை வெளியேற்றச் செய்யும் ஒப்பந்தமாகவே இருக்கிறது. இந்நிலையை மாற்றுவோம்.

அதே போல், இவர் தவறு - அவர் தவறு என்று சொல்வதன் மூலம் நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று சொல்ல வரவில்லை. நாங்கள் எது சரி என்பதையும், அதற்கான சூத்திரத்தையும் சொல்கிறோம். நீங்கள் எது சரி எனத் தேர்ந்தெடுங்கள்!

தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில், ஒப்பந்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்து தொழிலாளிக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருவது நடைமுறையாக இருக்கின்றது. ஆனால், அசோக் லேலண்டிலோ தொழிற்சங்கத் தலைவர்கள் எப்பொழுது கையெழுத்திடுகிறார்களோ அப்போதிலிருந்துதான் புதிய ஒப்பந்தம் செயலுக்கு வரும் எனச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான நடைமுறை! அதை முதலில் மாற்றுவோம்.

ஒப்பந்தம் முடித்த அடுத்த நாளே புதிய ஒப்பந்தம் செயலுக்கு வர வேண்டும். அதற்கான நிலுவைத் தொகையைக் பெற்றுத் தருவதுதான் தொழிற்சங்கத்தின் பணியே தவிர, அதை விட்டுக் கொடுப்பதற்கு எதற்குத் தொழிற்சங்கம்?

எனவே, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு நாங்கள் தனி நபரை முன் வைக்கவில்லை. கோரிக்கைதான் கதா நாயகனாக முன் வைக்கிறோம். அந்தக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக, உங்களுக்கு முன் நான் ஓடுகிறேன். நீங்கள் பின்னோக்கி வாருங்கள். எல்லோரும் சேர்ந்தால் அது நம் வெற்றி!
தொழிற்சங்க இயக்கத்தில், தொழிலாளர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது, அவர்கள் பங்கேற்பாளர்களாகவும் இருக்க வேண்டுமென நான் அடிக்கடி சொல்வேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்காமல் யாரும் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.

தொழிற்சங்கத்தைக் கண்காணிக்க வேண்டும். அப்படி தொழிலாளர்கள் சரியாகக் கண்காணித்திருந்தால், கடந்த ஆண்டு, நம் தொழிலாளிகளுக்கு சேர வேண்டிய இன்சுரன்சு பணப் பலன்களை இன்னொரு நபர் – யாருக்கும் தெரியாமல் சுருட்டிக் கொண்டு சென்றிருக்க முடியாது. அந்த நிகழ்வை நினைவூட்டி, உங்கள் எல்லோரையும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணூரில் ஒவ்வொரு ஒப்பந்தம் போடப்படும் போதெல்லாம், தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தற்போது, 2387 தொழிலாளர்கள் உள்ளனர். இதை அப்படியே நிலைநிறுத்த வேண்டும். இனி, அதில் ஒரு தொழிலாளிகூட குறையக் கூடாது என்பது நம் முதல் கோரிக்கை!

மூன்றாண்டுக்கு மேல் யாரும் ஸ்டேண்ட் பைத்(பதிலி) தொழிலாளியாக இருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

செர்மனியில் பாதிரியார் ஒருவர் வாசித்ததாக ஒரு கவிதைச் சொல்லப்படுவதுண்டு. முதலில், இட்லர் கம்யூனிஸ்டுகளை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் யூதர்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் தொழிற்சங்கங்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர், எங்களை அழிக்க வந்தான், எங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்றது அக்கவிதை! எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு அசோக் லேலண்டின் உற்பத்திப் பெருகிக் கொண்டுள்ளது. புதிய நாடுகளைக் கைப்பற்றுவது போல் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகள், உலகச் சந்தையில் போட்டிகள் என அசோக் லேலண்ட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த வளர்ச்சிக்குப் பணியாற்ற – மூளை உழைப்பு செலுத்திய அதிகாரிகளுக்கு அறிவார்ந்த பணிகளுக்கு மதிப்பளிப்பதில் தவறில்லை. ஆனால், அதே அளவிற்கு உடலுழைப்பு செய்த தொழிலாளர்களும் பலன் பெற வேண்டும். அவர்கள் எண்ணிக்கையும் விரிவடைய வேண்டும்.

கடந்த காலாண்டில், அசோக் லேலண்ட் நிறுவனம் 101 விழுக்காடு இலாபம் பெற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கு உருப்படியான ஊதிய உயர்வு இல்லை. இதை அவலத்தை மாற்ற வேண்டும்.

தொழிலாளிகள் இறந்து போனால், அவர்களது வாரிசுகளுக்கு வேலை அளிப்பது சலுகையல்ல. அவர்களது பணிக்கான நன்றிக் கடன் அது. Ethical Management கோட்பாட்டின்படி, அது இயல்பாக நடக்க வேண்டும். நிர்வாகத்திற்கு அதுதான் கவுரவத்தைப் பெற்றுத் தரும். ஆனால், அதைக்கூட போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலைமைக்கு ஆளாக்காதீர்கள்.

நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
கூட்டத்தில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் தோழர் நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான தொழிலாளர் தோழர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Tuesday, August 23, 2016

தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது! சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!
தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக
பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும்
மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது!

சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!


தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டு, “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அம்பேத்கர் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள், சிபி (எம்-எல்) மக்கள் விடுதலை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, தமிழர் நலம் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், 

மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இக்கூட்டமைப்பில் ஒன்றிணைந்துள்ளன.

கூட்டமைப்பின் தலைவராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் கோவை. கு. இராமகிருட்டிணன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவும், கூட்டமைப்பில் உறுப்பு வகிக்கும் ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் இதற்கென அமைக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டமைப்பின் செயல்திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு, இன்று (22.08.2016) காலை சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி (தி.வி.க.), தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பெ. மணியரசன் (த.தே.பே.), ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்கள் கரு. அண்ணாமலை (த.பெ.தி.க.), செந்தில் (இளந்தமிழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி), கண்ணன் (மா.லெ. மக்கள் விடுதலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டமைப்பு குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்தியாளர் குறிப்பு:
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம். இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பி இலட்சக்கணக்கான ஈழ மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடுகிற நாம் நம் மண்ணில் திறந்த வெளி முகாம்களிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்கிற அம்மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமான மக்கள் இயக்கங்களை முன்னெடுக் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழீழத்திற்காக நாம் நடத்துவது விடுதலைக்குத் துணை செய்யும் ஆதரவுப் போராட்டங்களே! ஆனால் இங்குள்ள தமிழீழ ஏதிலியர்கள் தமக்கான கோரிக்கைளைத் தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான சனநாயக வெளி இல்லாது புழுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இறுக்கம் தளர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச் சமூகத்திடம் முன்வைத்து பரந்த அளவில் மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்பத் தமிழீழ ஏதிலியர்க்கு இந்நாட்டுக் குடியுரிமை வேண்டும். நாளை அவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புள்ளதாலும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பில் பங்குபெறும் தேவையைக் கருத்தில் கொண்டும் இடைக்காலக் குடியுரிமை கோருகிறோம். இந்திய அரசு அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவை நாடாளுமன்ற பொறுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்நாட்டில் தங்கியுள்ள அண்டை நாடுகளான வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏதிலியர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க மொழிந்துள்ளது. இப்பட்டியலில் இலங்கையைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப் பொருத்துமான அமைப்பு வடிவம் எமது கூட்டமைப்பு எனக் கருதுகிறோம். இப்படிப் பலவகையில் இக்கூட்டமைப்பு காலத்தின் தேவை என்றே கருதுகிறோம்.

இந்தக் கோரிக்கையோடு அவர்களின் கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை, மனித உரிமை, சிறப்பு முகாம் மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான மக்களியக்கம் நடத்துவதன் மூலம் கோரிக்கைகளை அரசுகளிடம் கொண்டு சேர்த்து வென்றெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் - ஆர்வலர்கள், திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், முன்னாள் இன்னாள் ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திருநங்கை அமைப்புகள் , தமிழக மக்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறோம்.

தமிழ் மக்களிடம் பத்து இலக்கம் கையொப்பங்களைப் பெறும் மக்கள் இயக்கத்தை, வரும் ஆகத்து 27 (27.08.2016) காரிக்கிழமை மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரையில், கூட்டமைப்பின் தலைவர், தலைமைக் குழு, அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கும் நிகழ்வில் தொடங்கி வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் கையொப்ப இயக்கம் தொடங்கி நடத்தப்படும். பத்து இலக்கம் கையொப்பம் பெறும் வகையில் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.
கையொப்ப இயக்கக் கோரிக்கைகள்:

--------------------------------------------------------------------
இந்திய அரசே! தமிழக அரசே!.
* தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இடைக்காலக் குடியுரிமை வழங்குக!
* ஏதிலியர் சிறப்பு முகாம்களைக் கலைத்திடுக!
* தமிழீழ ஏதிலியர் வாழ்வில் காவல் துறை, வருவாய்த் துறை அத்துமீறல்களைத் தடுத்திடுக!
* தமிழீழ ஏதிலியரின் கல்வி, வேலைவாய்ப்புத் தடைகளை நீக்குக!
* இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியர்க்குத் தண்டம் விதிப்பதைக் கைவிடுக!

செய்தியாளர் சந்திப்பில், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் அருளேந்தல் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.

Saturday, August 20, 2016

காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு


காவிரி உரிமை மீட்க
டெல்டா மாவட்டங்களில்
1000 இடங்களில் சாலை மறியல்!

காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு


காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.

தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கலந்தாய்வுக் கூட்ட முடிவுகள்
--------------------------------------------------
இவ்வாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.


தொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.

இந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது!

காவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.

உச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா? இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கர்நாடக முதலமைச்சர்க்குக் கண்டனம்
----------------------------------------------------------------
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை! கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை!

கர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.

கர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே!

2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.

இந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.

காவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய அரசுக்குக் கண்டனம்
----------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.


ஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

-----------------------------------------
காரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.
நடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.


1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்

2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்

3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..

2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.

Tuesday, August 16, 2016

சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும் மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும் செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும்
மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும்
செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி
மக்கள் போராட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 15.08.2016 அன்று பெங்களூருவில் இந்திய விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் ரூபாய். 5,912 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். மேக்கேத்தாட்டுவில் 50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் அணைகள் கட்டுவது கர்நாடகத்தின் திட்டம்!

அப்படிக் கட்டிவிட்டால் வெள்ளப் பெருக்குக் காலங்களில்கூடக் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூர் அணைக்கு வரும் நிலை இருக்காது. காவிரி நீராவாரி நிகாம் மூலம் புதிதாக 430 ஏரிகளில் காவிரி நீரைத் தேக்கிட, அந்த ஏரிகளைக் குட்டி அணைகளாக மாற்றிட 1,002 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ளதாகவும் சித்தராமையா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கர்நாடகத்தில் நீர், நிலம், மொழி விடயங்களில் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்றும் சித்தராமையா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தன்னல ஆதாய அரசியலும் அதனால் தனிநபர் பகை அரசியலும் கோலோச்சுகின்றன. எனவே இங்கு நடக்கும் கட்சிகளின் பகை அரசியல் தமிழர்களின் வாழ்வுரிமை, வரலாற்றுரிமை அனைத்தையும் பலியிட்டுக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த இந்திய அரசுக்கும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கும் கட்டளை இட்டது. ஆனால் அத்தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது; தமிழ்நாட்டை வஞ்சித்து மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை ஆதரிக்கிறது நடுவண் அரசு.

செல்வி செயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு செயலற்ற அரசாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தாய்ப்பாலாக ஓடிவரும் காவிரியின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள வரலாற்று உரிமையை செயலலிதா தமது ஆட்சிக் காலத்தில் நிரந்தரமாக இழந்து விடுவாரோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகக் காவிரி அணைகளில் இப்போது மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் உள்ளது.

பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்பிக் கர்நாடகக் காவிரி அணைகளை நேரில் பார்வையிடச் செய்து, நீர் இருப்பின் உண்மை அளவுகளை எடுத்து, அவ் விவரங்களுடன் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் வல்லுநர் குழுவுடன் கர்நாடக முதல்வரைச் சந்திக்க வேண்டும். இருப்பு நீரில் தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான விகித நீரைத் திறந்துவிடக் கோர வேண்டும். மறுத்தால் உண்மை விவரங்களைப் பெங்களூருவில் செய்தியாளர் கூட்டம் நடத்தி வெளிப்படுத்த வேண்டும்.

அதன்பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு வலியுறுத்த வேண்டும் என்று கடந்த சூலை மாதத்திலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.

முதல்வர் செயலலிதா அசையவில்லை. கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது என்ற வழக்கமான கண்துடைப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முதல்வர் செயலலிதாவால் தடுக்க முடியுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் காரைக்கால் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரி நீர் உரிமையை மீட்கத் தமிழ்நாட்டு முதலமைச்சரையே செயல்பட வைக்க முடியவில்லை எனில், தமிழ் மக்களால் இந்திய அரசை எப்படி செயல்பட வைக்க முடியும், கர்நாடக அரசை எப்படி நீதியின் பக்கம் திருப்ப முடியும் என்ற வினா எழுகிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி நீர் பெறவும், மேக்கேத்தாட்டு அணை முயற்சியைத் தடுக்கவும் செயல் துடிப்புள்ள நடவடிக்கைகளில் இறங்கிடக் கோரிக்கை வைத்துத் தமிழ் மக்கள் அறப் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடியை இழந்தோம். இவ்வாண்டு சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கிட வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் நடத்த முன்வருமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

“போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!” தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை
உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி அவர்கள் 14.08.2016 அன்று காலமான செய்தி, துயரமளிக்கிறது.

அவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் இணைந்து களப் போராட்டங்கள் நடத்தியவர். 1970கள் மற்றும் 80களில் உழவர் உரிமைகளுக்காகவும் உழவர் துயர் துடைப்பதற்காகவும் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களின் தளபதியாக விளங்கியவர்.


அவர்கள் அப்போது நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் உழவர்களை அவமானப்படுத்தி கடன் வசூலிக்கும் முறை பெருமளவில் ஒழிந்தது. வேளாண்மைக்கு இலவச மின்சாரம் கிடைத்தது.
போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் மருத்துவர் சிவசாமி. அவர் இறுதி மூச்சு வரை உழவர் உரிமைகளுக்காகவே போராடினார். வாழ்ந்தார்.

காவிரி உரிமைச் சிக்கலில் 1998-இல் அதிகாரமில்லாத போலித்தனமான ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்ட போது, அதை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கம், மருத்துவர் சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் ஆகியவை கூட்டாகப் பல போராட்டங்கள் நடத்தின. காவிரிச் சிக்கலில் அண்மைக்காலம் வரை மருத்துவரும், தமிழக விவசாயிகள் சங்கமும், தமிழ்த் தேசியப் பேரியக்கமும் கூட்டாக இயங்கிப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் மருத்துவர் சிவசாமி அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இல்லத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்! சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் 
அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப் பேரரின் போது, சிங்கள இராணுவத்தால் 11,786 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பல்லாண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகளில் 107 பேர், அண்மைக்காலமாக மர்மமான முறையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்துள்ளனர்.
நஞ்சு ஊசி போட்டும், உணவில் நஞ்சு கலந்தும் சிங்கள இராணுவம் தமிழீழப் போராளிகளை இனப்படுகொலை செய்ய இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக, தமிழீழ மக்களும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் ஐயப்படுகின்றனர். உடனடியாக தமிழீழ முன்னாள் போராளிகளுக்கு அயல்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு, சோதனைகள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளின் மர்ம மரணத்தைக் கண்டித்தும், சர்வதேச அளவில் மருத்துவக் குழு அமைத்து விடுவிக்கப்பட்ட போராளிகளை சோதனை செய்யக் கோரியும், சென்னையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், 13.08.2016 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம். அனீபா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தந்தை பெரியார் தி.க. வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தோழர் கொண்டல்சாமி (மே17) நிகழ்வை நெறிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தோழர்கள் செ. ஏந்தல், வடிவேலன், கோ. நல்லன், த. சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, August 15, 2016

.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

.

.“திரைப்பாடல் இலக்கியத்தில் 
தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார்”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியைத் தருகிறது. இளம் அகவையில் இலக்கிய நாட்டத்துடன் கவிஞராக அரங்குகளிலும், பின்னர் திரைப்படத் துறையில் இலக்கியத் தரமும் புதிய உத்திகளும் கொண்ட பல பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
இக்காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் – திரைத்துறைக்கு முகாமையான பங்களிப்புச் செய்தவர். அந்த வகையில் திரைப்பாடலில் தமிழின் சமகால வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் முத்துக்குமார். அவருடைய மாணவர் பருவத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த எமது “தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” கூட்டங்களில் வந்து ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் முத்துக்குமார்.
தமிழ் மொழி உணர்வு - தமிழ் இன உணர்வு ஆகியவற்றிலும் அக்கறை கொண்டவர். சிறந்தத் திரைப்பாடலுக்காக அனைத்திந்திய அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் இலக்கிய மற்றும் சமூகவியல் துறையில், இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில், அவர் காலமானது பேரிழப்பாகும். அதேவேளை, அவருடைய கவிதைகள் – திரைப்பாடல்கள் – கட்டுரைகள் வழியாக கவிஞர் நா. முத்துக்குமார் நிரந்தரமாகத் தமிழுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.

Saturday, August 13, 2016

தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்..! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன்
அவர்களுக்கு வீரவணக்கம்..!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தமிழர் தன்மானப் பேரவை நிறுவனத் தலைவர் தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்கள் கடந்த 10.08.2016 அன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
கடந்த மாதம் தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் அங்கு சென்று தோழர் அ.கோ.க. அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம்.
சரியாகப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஒரு சில சொற்கள் பேசினார். ஓரளவு நலம் பெற்று ஊர் திரும்பிய அ.கோ.க. மறுபடியும் உடல்நலம் குன்றி நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குதான் அவர் காலமாகியுள்ளார்.
பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் மக்களைத் திரட்டி உரிமைப் போராட்டங்கள் பல நடத்தியவர் அ.கோ.க.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் அவர் செயல்பட்ட போது, உழவுத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும் களம் பல கண்ட வீரர் அவர்.
ஒரு வழக்கில் சிறைப்பட்ட போது அங்கேயும் சிறைவாசிகளுக்குக் கமுக்கமாக சங்கம் ஏற்படுத்தி, அவர்களின் போராட்டங்களை நடத்தியவர்களில் அ.கோ.க. தலைமையானவர்!
சிறந்த நுண்ணறிவு படைத்த அ.கோ.க. எந்தச் சிக்கலையும் உடனடியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். நான்கு அமைப்புகள் சேர்ந்து தமிழ்த் தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கியதில் தோழர் அ.கோ.க. அவர்களுக்குக் காத்திரமான பங்குண்டு. இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.
தோழர் அ.கோ.க. அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அ.கோ.க. அவர்களின் இயக்கத் தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, August 9, 2016

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கக் கோரி! தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்!


தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை 
வழங்கக் கோரி!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் 
கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்!


தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் நேற்று (07.08.2016) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, பெண்ணாடம் க. முருகன், குடந்தை கா. விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒசூர் செம்பரிதி, தருமபுரி விசயன், திருச்சி இராசாரகுநாதன், தஞ்சை ம. இலட்சுமி, பூதலூர் ஆ. தேவதாசு, மதுரை பே. மேரி, திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, புதுக்கோட்டை த. மணிகண்டன், ஈரோடு வெ. இளங்கோவன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி உள்ளிட்டு, தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் காலமான தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னைத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் ஐயா மு. அருணாச்சலம், நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் சிசு, தமிழர் தன்மானப் பேரவை துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா. காமராசு, பாலாற்றில் உயிரீகம் செய்த உழவர் சீனிவாசன், நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் – போராளி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. “தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே 90% வேலை - தமிழே அலுவல் மொழி” - திருச்சி தொடர் வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம்!
தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் தொழில் – வணிகங்கள் அனைத்தும் இன்று மார்வாடி, குசராத்தி, தெலுங்கர், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரின் கைகளில் உள்ளது. மேலும் உ.பி., பீகார், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்தோர், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகை எண்ணிக்கையில் குடியேறி, தமிழர் தாயகத்தை சீர்குலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறை, பாதுகாப்புத்துறைத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., பெட்ரோலிய ஆலைகள், ஓ.என்.ஜி.சி., துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், நெய்வேலி சுரங்கம் – அனல் மின் நிலையம், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி, கடவுச் சீட்டு, கணக்காயர் அலுவலகங்கள், ஈட்டுறுதி (இன்சுரன்சு), அலுவலகங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் அயல் இனத்தாருக்கு பணி வழங்கி, அயலாரை தமிழ்நாட்டில் இந்திய அரசே நேரடியாகக் குடியேற்றுகிறது. சொந்த மண்ணிலேயே தமிழினத்து இளைஞர்கள் வேலையின்றி ஏதிலியராகத் திரியும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. எனவே, தற்காப்புப் போராட்டங்களில் இறங்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தமிழர் தாயகத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சேவையாற்றவும் வேலைவாய்ப்பளிக்கவும் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்களில், 1976ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி தமிழே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2016 செப்டம்பர் 12 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர். பெ. மணியரசன் தலைமையில், திருச்சி தொடர்வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இப்பொதுக்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இப்போராட்டத்தை இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுச்சி மிக்க போராட்டமாக நடத்தவும், அதற்கேற்ப சுவர் விளம்பரங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான துண்டறிக்கை பரப்புரை, கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி விரிவான பரப்புரை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
2. புதிய கல்விக் கொள்கையைக் கைவிடுக!
அரசின் பிற்போக்கான கொள்கைகளால், சீரழிந்த அரசியலால் மிகவும் கேடு அடைந்த துறையாக கல்வித்துறை சீர்குலைந்துள்ளது. இனி மீட்க முடியுமா என்று அச்சப்படும் அளவுக்கு அனைத்து முனைகளிலும் கல்வித்துறை நிலை குலைந்து வருகிறது. நரேந்திர மோடி அரசு குறிவைத்து சீரழித்துவரும் முதன்மைத் துறையாகவும் கல்வித்துறையே இருக்கிறது. தற்போது, மோடி அரசு முன்வைத்துள்ள புதியக் கல்விக் கொள்கை ஆவணங்கள், இதை உறுதி செய்கின்றன.
ஆரிய ஆதிக்கத்தையும் உலகமய வேட்டையையும் கல்வித்துறையில் தங்குதடையற்றுத் திறந்துவிட்டு பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு வரும், இப்புதியக் கல்விக் கொள்கையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்குக் கல்வி உரிமையை மறுத்து, குறைகூலித் தொழிலாளர் பட்டாளத்திற்கு விரட்டும் நோக்கில் இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி மானியம் நிறுத்தப்பட உள்ளது. சமற்கிருதத் திணிப்பையும் ஆரிய பண்பாட்டு ஆதிக்கத்தையும் இக்கொள்கை மேலும் இறுக்குகிறது.
இதைத் தடுத்து நிறுத்தும் பணியில், தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் மாணவர் அமைப்புகளும் முதல் வரிசையில் அணி திரள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
அவசரகால நிலையின்போது, மாநில அரசின் அதிகாரப் பட்டியலிருந்து நீக்கப்பட்ட கல்வியை, திரும்பவும் மாநில அரசு அதிகாரப் பட்டியலுக்கேக் கொண்டு வர வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி முறை, மாணவர் – ஆசிரியர் உறவையும் அறிவையும் வளர்க்கும் சனநாயக வழிப்பட்டக் கல்வி முறை உள்பட கல்வியில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும்.
3. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!
இந்த ஆண்டு ஆகத்து மாதம் பிறந்தும் மேட்டூர் அணை திறக்க முடியாத நிலையில், இவ்வாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடியும் செய்ய முடியாத பேராபத்து ஏற்படுமோ என்று அச்சப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து, சம்பா சாகுபடியையும் இழந்தால், ஊரில் குடியிருப்பதா அல்லது பிழைப்புக்கு வழி தேடி வெளியேறுவதா என்ற கேள்வியை பல இலட்சம் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பேரிழப்பிற்குக் காரணம் காவிரித் தீர்ப்பாயம் - உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்து மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் கர்நாடகத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தண்ணீர் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு பாதகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆவர்.
காவிரி ஆற்றின் மீது கர்நாடகம் கட்டியுள்ள நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காட்டு அளவிற்கு தண்ணீர் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிகாட்டியுள்ளது. ஆனால், தற்போது முழு அளவிலும் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரிப் பங்கு நீரைத் திறந்துவிடவில்லை. இந்திய அரசோ உச்ச நீதிமன்றமோ, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் இந்த அநீதியை கேள்வி கேட்கக்கூட முன் வரவில்லை.
கன்னட இனவெறியர்களும் நடுநிலை தவறி நயவஞ்சகமாகச் செயல்படும் இந்திய ஆட்சியாளர்களும் எந்தளவிற்கு தமிழ்நாட்டிற்குத் தீங்கிழைக்கிறார்களோ, அதே அளவிற்கான தீங்கை செயல்பட மறுக்கும் இப்போதைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் முன்னாள் ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள்.
இந்தியத் தலைமையச்சர் மோடிக்கு கடிதம் எழுதுவதோடு முதல்வர் செயலலிதாவும், ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காவிரிச் சிக்கலில் நாடகமாடிக் கொண்டிருப்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம், வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு, உடனடியாக தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் குழு ஒன்றை அனுப்பி, கர்நாடகத்தின் நான்கு அணைகளிலுள்ள தண்ணீரை நேரில் அறிந்து, அக்குழுவின் தகவல்களைக் கொண்டு, கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாகச் சென்று பேச்சு நடத்தி, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் விகிதத்தைத் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். அதில் பலனில்லை எனில், இந்தியத் தலைமையமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்து, காவிரித் தீர்ப்பை செயலுக்குக் கொண்டுவர வேண்டும்.
மகதாயி ஆற்று நீர் உரிமைச் சிக்கலில், மராட்டிய மாநிலத்தை எதிர்த்து, கர்நாடக உழவர்களும் மக்களும் நடத்திய போராட்டங்களை பார்த்த பிறகாவது, காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் கட்சித் தலைமைகளின் கட்டளைகளுக்குக் காத்திராமல் களமிறங்கிப் போராட முன் வர வேண்டும். இவ்வாறான போராட்டங்கள் மட்டுமே காவிரி உரிமையை மீட்கும். டெல்டா உழவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும்.
இதனை உணர்ந்து, களமிறங்கிப் போராட முன் வர வேண்டும் என தமிழ்நாட்டு மக்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
4. பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும்!
1892ஆம் ஆண்டு மைசூர் அரசு – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, கர்நாடகா – ஆந்திரா – தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில், கடைமடைப் பகுதியான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றன.
ஏற்கெனவே ஆந்திராவின் பல்வேறு தடுப்பணைகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பாலாறு மறுக்கப்பட்டு பாலைவனமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த நிலையில், பாலாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் வேலூர் மாவட்டம் புல்லூரில், ஆந்திர அரசு புதியதொரு நீர்த்தேக்கத்தை சட்டவிரோதமாக உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே புல்லூரில் இருந்த 5 அடி தடுப்பணையை 12 அடியாக உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, மிகப் பலமாக அடித்தளம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கமாகவே மாற்றியுள்ளது. இதன் காரணமாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.
இந்த நீர்த்தேக்கம் காரணமாக, தமிழ்நாட்டிற்குள் பாலாற்று நீர் ஒரு சொட்டு கூட நுழையாது என்று நாம் கூறியதை உறுதி செய்வது போல், அண்மையில் பெய்த மழை காரணமாக வந்த நீர் அனைத்தும் தற்போது, புல்லூர் நீர்த்தேக்கத்தில் அப்படியே தேங்கியுள்ளது. இதனைக் கண்டு வேதனையடைந்த புல்லூர் உழவர் சீனிவாசன் அவர்கள், அங்கிருந்த நீரில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை – ஆந்திர அரசு முறைகேடான வகையில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது.
ஆந்திர அரசு அணை கட்டும்வரை அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசு, அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிட்டு, மக்கள் போராடி அப்போராட்டச் செய்தி ஊடகங்களில் வந்த பின்னர், ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியது.
தமிழ்நாடு அரசு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் உரிய அதிகாரிகள் குழுவை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுப்பி அவரிடம் நேரில், பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை வலியுறுத்தும் 1892 சென்னை – மைசூரு ஒப்பந்தம், ஆந்திர அரசு ஏற்கெனவே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முயன்றதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதையும் எடுத்துரைப்பதுடன், புல்லூர் தடுப்பணையை உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டு உழவர்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பாதிப்பையும் விளக்க வேண்டும்.
புல்லூர் தடுப்பணையை உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று இடித்துத் தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இணயம் துறைமுகத் திட்டத்தை, மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து - மக்கள் கருத்தை அறியாமல் செயல்படுத்தக் கூடாது!
சற்றொப்ப 1076 கிலோ மீட்டர் நீளமான தமிழ்நாட்டு கடலோரப் பகுதியில், வெறும் 68 கிலோ மீட்டர் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிறது. ஆனால், அம்மாவட்டத்தில் மட்டும் சற்றொப்ப 20 விழுக்காட்டு கடலோடி மக்கள் வாழ்கின்றனர். எனவே, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தரம் உயர்த்தப்பட்ட நவீன மீன்பிடித் துறைமுகம் வேண்டுமென குளச்சல் பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குளச்சலுக்கு மேற்கு பகுதியிலுள்ள இனையம் பகுதியில், ரூபாய் 27,500 கோடி செலவில், அனைத்துலக பெட்டக மாற்று வணிகத் துறைமுகம் (International Container Transhipment Terminal – ICTT) ஒன்று அமைக்கவுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கேரள மாநிலத்தின் கொச்சியில் இந்திய அரசு அமைத்துள்ள இதேவகைத் துறைமுகமும், இனையத்திற்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகமும் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதே போன்றதொரு இன்னொரு துறைமுகத் திட்டத்தை இனையம் பகுதியில் நிறுவ முற்படும் இந்திய அரசின் ”அவசர நடவடிக்கை” விவாதத்திற்குரியது.
இது போன்ற வணிகத் துறைமுகக் கட்டுமானங்களில் சிறிய அளவில் பங்கெடுத்தால்கூட, அதானி போன்ற பெருங்குழும நிறுவனங்களுங்கு அங்கு அதிகளவில் உரிமையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தில் வெறும் 13 விழுக்காடு மட்டுமே பங்களிப்பு செய்த அதான குழுமம், அத்துறைமுகத்தை 60 ஆண்டுகள் நிர்வகிக்க சலுகைப் பெற்றிருப்பது, நம் ஐயத்தை உறுதிப்படுத்துகின்றது.
இன்னொருபுறம், மிகப்பெரும் முதலீட்டில் அமையவுள்ளதாகக் கூறப்படும் இந்த புதிய துறைமுகத்தின் மூலம் அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு சேவையளிக்க முடிவு செய்துள்ள இந்திய அரசு, 5 இலட்சம் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியை இதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளது கடும் விவாதத்திற்குரியது.
இத்திட்டத்தின் காரணமாக இனையம், புத்தனன்துரை, ராமந்துறை, மூல்லூர்துறை, அலூ நகர், மேல்மிடலம், கீழ்மிடலம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த - சற்றொப்ப 50,000 மக்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேற நேரிடும் என்பதும், புதிதாக அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைகள் மற்றும் தொடர்வண்டிப் பாதை ஆகியவற்றிற்காக 57,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் கடல் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்ட பல்வேறு துறைமுகங்கள் காரணமாக, எண்ணூர் தொடங்கி புதுச்சேரி – கடலூர் – நாகப்பட்டினம் – தூத்துக்குடி என தமிழ்நாட்டின் கடலோர மீனவர் கிராமங்களில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு தீவிரப்பட்டு வரும் நிலையில், இனையம் துறைமுகத் திட்டத்திற்காக – பெருமளவில் தடுப்புச் சுவர்கள் எழுப்பவும், 800 ஏக்கர் கடல் மீது மணல் கொட்டவும் திட்டமிடுவது, தெரிந்தே குமரிப்பகுதி மக்களை ஆபத்தில் தள்ளுவதாகும்.
திட்ட மதிப்பீட்டு அறிக்கை, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பொது மக்கள் கருத்துக் கேட்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தியேத் தீருவோம் என நடுவண் அரசின் அமைச்சர்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குமரி மாவட்ட கடலோடிகளின் கருத்துகளுக்கேற்ப நவீன மீன்பிடித் துறைமுகத்தை அமைக்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவையாற்றும் வகையில் வணிகத் துறைமுகம் கட்டும் திட்டத்தை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
எனவே, இந்திய அரசு உடனடியாக இனையம் துறைமுகத் திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்பதோடு, இத்திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இத்திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
6. தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கி செயலுக்குக் கொண்டு வர வேண்டும்!
கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பகுதியானது சிறுதானியங்கள், மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தினசரி உணவிற்குத் தேவையான புளி, கொத்தமல்லி, புதினா என அனைத்து விதமான வேளாண் பயிர்களும் எப்பருவத்திலும் விளையும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இராயக்கோட்டை காய்கறி சந்தையிலிருந்து தினந்தோறும் தமிழகம் தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி உழவர்கள் அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தருகின்றனர்.
பெருமுதலாளிகளின் சுயநலத் தேவைகளுக்காக, மலைகளும், காடுகளும் என சூழலியல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பகுதி, உழவர்களும், பொது மக்களும் தண்ணீரின்றி கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிணற்று நீர் கானல் நீராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதனால் இப்பகுதியில் அனைத்து உழவர்களும் ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பி வேளாண்மை செய்து வருகின்றனர். தற்போது, நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்றுவிட்டது.
ஆழ்துளை கிணறுகளுக்காக செலவிட்டு, கடன்பட்டு வட்டி கட்டமுடியாமல் தங்கள் வாழ்வாதாரமான நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு - வயிறு பிழைக்க நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலையில், இம்மக்கள் தத்தளிக்கின்றனர். இதுமட்டுமின்றி உழவுத் தொழிலை சார்ந்த பலதொழில்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மூலகாரணமாக, இப்பகுதியின் தண்ணீர்ச் சிக்கலே உள்ளது!
20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நிலவும் பருவநிலை மற்றும் சூழலியல் மாற்றங்களை அறிந்த இப்பகுதி பெரியோர்கள், இப்பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தென்பெண்ணை கிளைவாய்க்கால் மூலம் ஆண்டிற்கு ஓரிரு முறை இப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊரணிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநாட்ட முடியும் என உணர்ந்தனர். இவற்றில், நீரை நிரப்பக் கோரும் திட்டத்திற்காக, 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
தொடர் போராட்டங்களின் காரணமாக, கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில் களஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் தான் என பதில் அளித்த தமிழக பொதுப்பணித்துறை, 2012- 2013இல் இத்திட்டதிற்கான அளவீடுகளை செய்து 2014 ஏப்ரலில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 22.20 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்தது. அதன்பின், இத்திட்ட மதிப்பீடு, 2014-15-ஆம் ஆண்டில் 29 கோடியே, 50 இலட்சம் ரூபாயாக உயர்ந்தது.
கடந்த ஆண்டின் (2015) இறுதியில், தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்ட நிலையிலும், கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட போதும், மாவட்டத்தின் மற்றொரு பகுதியான தென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான ஏரி - குளங்கள் நிரம்பாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. கருக்கநல்லி, பெரிய ஏரி - குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி – குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியிருந்தால், கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு அபாயமும் குறைந்து, இப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கவும் பயன்பட்டிருக்கும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழுக் கூட்டம் கோருகிறது.
7. வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்கத்தைக் கைவிட, வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற இந்திய - தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
ஒழுங்குமுறை விதிகள் என்ற பெயரால் நீதிபதிகளை கேள்விமுறையற்ற சர்வாதிகாரிகளாக மாற்றி வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் 2016 மே மாதத்தில் வெளியிட்டது.
இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றப் பணிகள் முற்றிலும் நிலைகுலைந்து ஒரு கொந்தளிப்பான சூழல் நீதித்துறையில் நிலவுவது நல்லதல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து அவர்களது தொழிலுக்குத் தடை விதித்து இந்திய பார் கவுன்சில் சர்வாதிகார ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராட்டம் நடத்திய, வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 43 வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒன்பது மாதமாக அவர்கள் தொழில் நடத்த முடியாமல் அல்லல்படுகிறார்கள்.
இவ்வளவு கொந்தளிப்பான நிலைமை நீதித்துறையில் நிலவும்போது, இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பாராமுகமாக இருப்பது சனநாயகச் சூழலையேக் கெடுத்து விடும்.
உயர் நீதிமன்றம் நிபந்தனை ஏதுமின்றி மே மாதத்தில் பிறப்பித்த வழக்குரைஞர்கள் ஒழுங்குமுறை விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 43 வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். இந்திய பார் கவுன்சில் 126 வழக்குரைஞர்கள் மீது விதித்துள்ளத் தடை ஆணையை திரும்பப் பெற வேண்டும்.
இச்சிக்கலல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தலையிட்டு நீதிமன்ற சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெறவும் வழக்குரைஞர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT