முல்லைப் பெரியாறு:
கேரள அரசின் தமிழினப்பகையை கண்டிக்கிறோம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படையற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதற்கு கேரள அரசு முனைகிறது. தன்னுடைய தமிழர் பகை நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டிக் கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசின் ஆதரவோடு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கோரும் முழுஅடைப்பு போரட்டத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.
உச்சநீதிமன்றம் நியமித்த சார்பற்ற வல்லுநர் குழு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அணை வலுவுடன் உள்ளதாக அறிவித்து அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அணையில் 145அடி தண்ணீர் தேக்குமாறு ஒரு முறைக்கு இரு முறை தீர்ப்பளித்து விட்டது. இத்தீர்ப்பை மீறும் வகையிலும் தமிழர்களுக்கு எதிரான இனப்பகையை தீவிரப்படுத்தும் முறையிலும் இந்த கடை யடைப்புக்கு கேரள அரசு ஏற்பாடு செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழிவழி மாநில சீரமைப்பு நடக்கும் போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது. இன்றும் கூட இடுக்கி மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.
எனவே இனப்பகையை வளர்க்கும் இடுக்கி மாவட்ட முழு அடைப்பு போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
கேரள அரசின் இந்த தமிழினப் பகைப்போக்குத் தொடருமேயானால் தமிழகத்தில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களும் பெருந்தொகையாக வாழும் மலையாளிகளும் தமிழகத்தி லிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழின உணர்வாளர்களும் மேற்கொள்ள வேண்டி வரும்.
இந்திய அரசு, பிழையாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளையும் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்துடன் இணைத்து எல்லை மறுசீரமைப்பு செய்யுமாறு வலியுறுத்துகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செய்யும் அடாவடிகளை நிறுத்த வலியுறுத்தி அரசமைப்பு சட்ட விதி 355ன் கீழ் அறிவுறுத்தல் ஆணை அனுப்புமாறு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கேரள அரசின் இந்த தமிழினப்பகை நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நின்று முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சிதம்பரம்