உடனடிச்செய்திகள்

Tuesday, May 25, 2010

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பாதையை முற்றுகையிடுவோம் - த.தே.பொ.க. அறிவிப்பு!

முல்லைப் பெரியாற்று நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மறுத்து கேரளம் செய்யும் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பாதைகளை மறிக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் தலைமையில் 28.05.2010 அன்று காலை பொள்ளாச்சி நடுப்புணி சாலையில் மறியல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைபெரியாறு அணை வலுவாக உள்ளது, முதற்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் சில பணிகள் செய்தபின் 152 அடி தேக்கலாம் என்று 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.அத்தீர்ப்பைக் கிழித்தெறிவதற்குச் சமமாக அதை எதிர்த்து ஒரு சட்டத்தைக் கேரளம்15.3.2006 அன்று நிறைவேற்றியது.

கேரளச்சட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்புச் சொல்லாமல், அணை வலுவாக இருக்கிறதா என்று ஆராய புதிய குழுவை அமைத்துள்ளது. அக்குழுவி;ல் இடம் பெற முதலில்மறுத்த தி.மு.க ஆட்சி, பின்னர் தமிழகம் சார்பில் ஒருவரை இணைத்துள்ளது. அக்குழுவில் ஆள் போடுங்கள் என்று இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் இரு கடிதங்கள் எழுதி விட்டது என்கிறார் முதல்வர்கருணாநிதி. உச்சநீதி மன்றத்தீர்ப்பை நிறை வேற்றுமாறு இதுவரை ஒரு கடிதம் கூட இந்திய அரசு கேரள முதல்வருக்கு எழுத வில்லை.

வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டுப் புதியஅணை கட்டும் பணிகளை நடுவண் அரசின் ஒப்புதலுடன் கேரளம் தொடங்கி விட்டது.

இந்திய அரசின் முழு ஆதரவும் கேரளத்திற்கு இருப்பதால்இ மலையாளிகளின் இனவெறிச் செயல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. தமிழர்களைப் பகை இனமாகக் கருதி முல்லைப்பெரியாறு அணை உரிமை மட்டு மன்றிஇ மற்ற நீர் வரத்துகளையும் தடுக்கிறார்கள். அமராவதி ஆற்றிற்கு வரும் பாம்பாற்றில் அணைகட்டுகிறார்கள். பாம் பாற்றில் அணைக்கட்டுவதால் தமிழகத்திற்குப் பாதகமில்லை என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் கூறினார்.; நெய்யாற்றங்கரை இடது கரைக் கால்வாயில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். செண்பக வல்லி அணை நீர்வரத்தை அதிகரிக்க தமிழகம் சிறிய தடுப்பணைக் கட்ட அனுமதி மறுக்கிறார்கள்.

அரிசி, பருப்பு, பால், முட்டை, காய்கறி இறைச்சி, மணல் முதலிய பல்வேறு பொருட்களை அன்றாடத் தேவைகளுக்கு கேரளம் தமிழ் நாட்டை சார்ந்துள்ளது என்ற உண்மையை மலையாளிகளுக்கு உரைக்கும் வகையில் உணர்த்த வேண்டும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 12 சாலைகளில் பொருள் போக்குவரத்தைத் தடுக்க மறியல் நடத்துகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் அப்போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

உலகின் முதன் மொழியைப் பேசும் தமிழினமே வையகம் வியக்க வாழ்ந்து வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டு கிடக்கும் தமிழினமே!

கெஞ்சிக்கேட்டால் கிடைக்காது கிளர்ச்சி செய்யா விட்டால் நடக்காது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள் நேருக்கு நேர் நின்று பார்த்திடுவோம்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 17, 2010

முத்துக்குமார் சிலைக்கு அனுமதி மறுப்பு! முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கண்டனம்!ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள இந்திய அரசுகள் தமிழீழ மக்கள் மீது தாக்குதல் தொடுத்த, பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழித்ததை நினைவு கூறும் விதமாக, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் ஒன்றை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வின் போதே, சிலை திறப்பு நிகழ்வையும் இணைந்து மே 16 அன்று நடத்த ஏற்பாடானது. இதற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் முத்துக்குமாருக்கு முதல் சிலை நிறுவும் நிகழ்வுக்கு ஆதரவு குவிந்தது. பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் முன்தினம்(15.05.2010) அன்று சிலை திறப்புக்கு காவல்துறையினர் திடீர் தடை விதித்தனர். அதன் பின், மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் சுடரோட்டம் நிகழ்வுக்கு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 16.5.2010 அன்று காலை அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மேடையில் முத்துக்குமார் சிலையை வைப்பதற்கும் காவல்துறை தடை விதித்தது.

நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் இடையறாத பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பும் கூட காவல்துறை தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டது.

வீரவணக்கப் பொதுக் கூட்டம்

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தஞ்சை வந்திருந்த உணர்வாளர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் மட்டும் எழுச்சியுடள் நடத்தப்பட்டது. இளந்தமிழர் இயக்கத்தினர் உணர்வாளர்களை வரவேற்று ஆங்காங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.

எழுச்சித் தமிழிசை
புதுவைச் சித்தன் செயமூர்த்தி குழுவினரின் எழுச்சித் தமிழிசையுடன் தொடங்கிய வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, காவல்துறையினரின் அடாவடிப் போக்கைக் கடுமையாகச் சாடினார். முத்துக்குமார் சிலையை நிறுவ சட்ட முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அறிவித்தார்.

புலவர் கலியபெருமாள் சிலை திறப்பு
தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் ஓவியர் பரணர் தீட்டிய புலவரின் முழு உருவ ஓவியப் படத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து திறந்து வைத்துப் பேசினார்.

வீட்டுக்கு வீடு முத்துக்குமார் சிலை
அதன் பின் மேடை ஏறிய, இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன், “முத்துக்குமாருக்கு ஒரு சிலை அல்ல, ஓராயிரம் சிலைகளை நாங்கள் நிறுவுவோம். கையடக்கமுள்ள முத்துக்குமார் சிலைகளை இளந்தமிழர் இயக்கம் தானே தயாரித்து, உணர்வாளர்களிடம் பரப்பும். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, தம் சொந்த இடத்தில் இச்சிலை நிறுவப்படும். இதனை யார் தடுக்க முடியும்?” என்று பேசினார்.


(உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகிறார்...)

(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசுகிறார்...)

(புலவர் புலமைப்பித்தன் பேசுகிறார்...)

(இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் பேசுகிறார்...)


(இயக்குநர் ராம் பேசுகிறார்...)


(கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் திரள்...)

(முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை திரு. பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்...)

(மகளிர் ஆயத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா பேசுகிறார்...)

(இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசுகிறார்...)


(இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் பேசுகிறார்...)

ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு குமரேசன் வருகை தந்து சிறப்புரையாற்றினார். அதன் பின், மகளிர் ஆயத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, முன்னாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT