உடனடிச்செய்திகள்
Showing posts with label எதிர்வினை. Show all posts
Showing posts with label எதிர்வினை. Show all posts

Friday, May 6, 2016

தனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா? “தமிழ் இந்து”வில் பி.ஏ.கிருஷ்ணனின் வஞ்சக வாதத்திற்கு தோழர் பெ.மணியரசன் எதிர்வினை!


தனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும்  தனிநாடு கேட்குமா?

“தமிழ் இந்து”வில் பி.ஏ.கிருஷ்ணனின் வஞ்சக வாதத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எதிர்வினை!

நாளேடுகளிலும் மற்ற தமிழ் இதழ்களிலும் பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் கட்டுரைகள் எழுதி வருகிறார். பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களைச் சிதைக்கும் வகையிலும் தமிழ் மக்களிடையே பிளவுகளை உண்டாக்கும் வகையிலும் எழுதி வருகிறார். அவ்வப்போது அவற்றை விமர்சித்திள்ளோம்.

தமிழ் இந்து நாளிதழில் 4.5.2016 அன்று “அரசியல் கட்சிகளுக்கு நன்றி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் உத்தியை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார் கிருஷ்ணன்.

அசாம் - விடுதலைக்குப் போராடும் அசாம் விடுதலைக்கூட்டணியில் (ULFA) பிளவுகள் ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாட்டுக்கு அசாம் மிக முக்கியமான பாடத்தைக் கொடுத்திருக்கிறது. பிரிந்து போகத் துடிப்பவர்களிடமிருந்து பிரிந்து போகத் துடிப்பவர்களும் கட்டாயம் இருப்பர். தனித்தமிழ்நாடு கேட்டால், எங்களுக்குத் தனித் திருநெல்வேலி கொடு என்று கேட்பார்கள்; அவர்களுக்குச் சரியாகப் பதில் சொல்லி மீள்வது கடினம்” என்று கூறுகிறார்.

எங்களைப் போன்றவர்கள் தனித் தமிழ்நாடு கோருவதை விமர்சிக்கும் உரிமை அவருக்குண்டு. ஆனால் பொருந்தாத உவமைகளையும், கற்பனை வாதங்களையும் நயவஞ்சகமாகக் கூறித் தமிழர்களிடையே பிளவு உண்டாக்கும் முயற்சி வன்மையான கண்டனத்திற்குரியது.

அசாமில் வெவ்வேறு மொழி பேசும் பழங்குடியினங்கள் சற்றொப்ப எட்டு இருக்கின்றன. அவற்றுள் போடா, கர்பி பழங்குடியினங்கள் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கணிசமான மக்கள் தொகை கொண்டவை. அசாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த அப்பழங்குடிகள் அதிலிருந்து விலகித் தங்கள் தங்கள் தனித்தாயகத்திற்குப் போராடுகின்றன. இதை எடுத்துக்காட்டி, தனித்தமிழ்நாடு கேட்டால், தமிழ்நாட்டு மாவட்டங்கள் தனிநாடு கேட்கும் என்கிறார்.

இப்பொழுதுள்ள தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரிமுனை வரை தமிழர்களே 85 விழுக்காட்டினர். பிறமொழி பேசுவோரும் தமிழைத் தங்கள் தாய்மொழிப்போல் ஏற்றுக் கொண்ட தமிழ் மக்களே!

1949 லிருந்து 1963 வரை தி.மு.க. தனிநாடு கேட்டுத் தமிழ்மக்களைத் திரட்டிய போது வெகுமக்கள் திரண்டார்கள். 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கை வைத்திருந்த தி.மு.க. 50 தொகுதிகளில் வென்றது. அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி தனிநாடாக வேண்டும், கோவை தனிநாடாக வேண்டும் என்று கோரிக்கை வைத்து எந்த இயக்கமும் தோன்றவும் இல்லை. மக்கள் ஆதரவைப் பெறவும் இல்லை.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு மொழிகள் பேசும் பல பழங்குடி இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்துதான் அசாம் விடுதலை கேட்கிறார்கள்; நாகாலாந்து விடுதலை கேட்கிறார்கள். மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் விடுதலை இயக்கங்கள் அவ்வாறே இயங்குகின்றன. இவற்றில் இணைந்திருந்த சில பழங்குடிகள் பிரிவதும் நடக்கிறது.

 தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே பழங்குடி இன அடிப்படையில் பிளவுகள் வரக்காரணம் எதுவுமில்லை. தமிழர் என்போர் வளர்ச்சியடைந்த தேசிய இனமாக (Nationality) விளங்குகின்றனர். அவர்களின் தாய்மொழியான தமிழ் அவர்கள் அனைவர்க்கும் தாய்மொழியாகவும் பொதுமொழியாகவும் வரலாற்று வழியில் வளர்ந்துள்ளது. எனவே தமிழர்களிடையே மண்டல வாரியாகத் தனிநாடு கேட்கும் கோரிக்கை ஒருநாளும் எழாது.

பி.ஏ.கிருட்டிணன் அவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக அவர் பாணியில் ஓர் உவமை சொல்லலாம்.

அண்ணன் அண்ணி ஆதிக்கமும் கொடுமையும் தாங்காமல், திருமணமான தம்பி தனிக்குடித்தனம் போகிறேன், என் பங்கை ஒதுக்கி விடு என்கிறான் – அதற்கு அண்ணன்காரன் “இன்று நீ என்னிடமிருந்து பிரிந்தால் நாளை உன் மனைவி உன்னிடமிருந்து பிரிந்து விடுவாள்” என்று சொன்னானாம்! அந்த அண்ணனைப் போல் பேசுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT