உடனடிச்செய்திகள்

Wednesday, November 14, 2007

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்

தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்
4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர்
கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்தப் பேரணிக்கு சென்னை நகர ஆணையர் அனுமதி மறுத்தார். என்றபோதும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் தடையை மீறி நடத்தப்படும் பேரணியில் ம.தி.மு.க பங்கு கொள்ளும் என அறிவித்தார்.
நவம்பர் 12 அன்று மாலை 3 மணியளவில் இருந்தே மன்றோ சிலை அருகே தமிழ் உணர்வாளர்களும் ம.தி.மு.க தொண்டர்களும் குவியத் தொடங்கினர். ஏறத்தாழ 3 லாரி நிறைய காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஏதோ கலவரச் சூழல் போன்று காவல்துறையினர் அணிவகுத்து நின்று அச்சத்தைத் தோற்றுவிக்க முயற்சித்தனர். சுற்றி நின்ற பொதுமக்களை நிற்க விடாமல் விரட்டியடித்தனர்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படம் போட்டு வீரவணக்க வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாகை ஒன்றை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒரு ஊர்தியில் வைத்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த வாடகை ஊர்தி ஓட்டுநரை மிரட்டி வாகனத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பியவர்களை உடனே கைது செய்யப் போவதாக மிரட்டினர். கூடியிருந்தவர்கள் காவல்துறையின் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்தனர். தலைவர்கள் வராமல் யாரையும் கைது செய்யக் கூடாது என காவல்துறையினரிடம் வாதிட்டனர்.

இதற்கிடையே, மன்றோ சிலைக்கு எதிர் திசையான பெரியார் சிலைப் பக்கமிருந்து திடீரென பெரும் ஆரவாரம் கேட்டது. திறந்த ஊர்தி ஒன்றில் பழ. நெடுமாறன், வைகோ, இருவரும் கையில் தமிழ்ச்செல்வன் படம் போட்ட வீரவணக்கப் பதாகைகளை ஏந்தியபடி,
ஆதரிப்போம்! ஆதரிப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! ஆதரிப்போம்!!
வீரவணக்கம்! வீரவணக்கம்! தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
-என்று வீரவணக்க முழக்க மிட்டவாறு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஏறத்தாழ 200 தமிழ் உணர்வாளர்களும் ம.தி.மு.க தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர்.

சாலையின் மறுபுறம் கூடியிருந்த ஏறத்தாழ 4000 பேரும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து ஆகியோரும் தலைவர்கள் வந்த ஊர்தியில் ஏறிக் கொண்டனர்.
இதைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் ஓடி வந்து அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தனர். அதோடு தலைவர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்த ஒலிவாங்கியையும் பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, "ஒலிபெருக்கியைப் பிடுங்கிய உங்களால் என் தொண்டையைப் பிடுங்க முடியுமா?' என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.

இது கூடியிருந்த உணர்வாளர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில் காவல் துறையினர் கூடியிருந்த கூட்டத் திடையே புகுந்து தொண்டர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முனைந்தனர்.
"நாங்கள் சிறைக்கு அஞ்சுபவர்கள் அல்லர். நாங்களாகவே தளைப் படுவோம். நாங்களாகவே காவல் துறை வாகனத்தில் ஏறுவோம். அத்துமீறி கைது செய்யாதீர்கள் என்று தலைவர்கள் கூறிய பிறகும் காவல்துறை தனது செயலை நிறுத்தவில்லை. தலைவர்கள் இருந்த ஊர்தியைச் சுற்றி பாதுகாப்பாக நின்றவர்களை சட்டையைப் பிடித்து ஏறத்தாழ அடித்து இழுத்துச் சென்றனர்.

அதோடு நில்லாமல், 83 வயதான ஆனைமுத்து அவர்களை, அவரின் வயதைக் கூடப் பொருட்படுத்தாமல், ஊர்தியிலிருந்து கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். உணர்வாளர்கள் ஓடி வந்து அதைத் தடுத்து காவல்துறையினருடன் சண்டையிட்ட பிறகே அவரை மெதுவாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் தலைவர்கள் ஒவ்வொருவராக காவல் துறை வாகனத்தில் ஏறினர். கூடியிருந்த அனைவரையும் கைது செய்யாமல், ஏறத்தாழ 1000 பேர் அளவில் மட்டுமே கைது செய்து அவர்களை இராசரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த திருமாறன், இராசேந்திர சோழன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் வீர சந்தானம், சந்திரேசன், மரு. சுந்தர், புதுவை அழகிரி, நா. வை. சொக்கலிங்கம், பொன்னிறைவன், கி. த. பச்சையப்பன், கா. பரந்தாமன், இரா. பத்மநாபன், கே. எஸ். இராதாகிருஷ்ணன், ம.தி.மு.க-வின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ம.தி.மு.க வழக்கறிஞர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 
நன்றி: தென் ஆசிய செய்திகள்
 

Tuesday, November 13, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன்
உள்ளிட்ட 346 பேர் கைது
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
 
ஆதரிப்போம் ஆதரிப்போம்
தமிழீழ விடுதலைப் புலிகளை
ஆதரிப்போம் ஆதரிப்போம்
 
வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
 
என்பது உள்ளிட்ட முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.





அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து வைகோவிடமிருந்த ஒலிபெருக்கியை காவல்துறை பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.





அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.
 
அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.





மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Friday, November 2, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !

வீரச்சாவடைந்துள்ள
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
 
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
 
அவர்களுக்கு வீரவணக்கம் !

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT