உடனடிச்செய்திகள்

Wednesday, January 30, 2013

காவிரி உரிமை: கண்டனம் முழங்கிட நாளை உழவர்கள் ஆர்ப்பாட்டம்!


 கடந்த 29.01.2013 அன்று, காவிரி சிக்கல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகத் தரப்பின் வழக்கறிஞர் நாரிமன் கூறிய வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர ஆணையிட முடியாதென்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. 

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

காவிரி ஆணையத்தில் போய் தண்ணீா் பெற்றுங்கள் என தமிழகத்திற்குக் கூறிக் கொண்டு, உச்சநீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது. இந்தியாவில் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பான உச்சநீதிமன்றமே, தமிழகத்தினுடைய சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டது.

இதனால், 16 இலட்சம் சம்பா சாகுபடியும் 5 கோடி மக்களின் குடிநீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக மக்கள் துயரடைகிறார்கள். இந்த அநீதியைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நாளை(31.01.2013) மாலை 5 மணியளவில், தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

இதில், உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
தொடர்புக்கு: 9443274002

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது!

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது!

சனநாயக வழியில் போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சிறைபடுத்தியுள்ள சிங்கள அரசுஅவர்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி போர்க்குறறம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு சார்பில்சென்னையிலுள்ள சிங்களத் தூதரகம் இன்று(30.01.2013) காலைமுற்றுகையிடப்பட்டது

போராட்டத்தைஅமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார்அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் கோபிநாத்தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரிமேபதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்தந்தை பெரியார் தி. ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன்மாநில இளைஞரணி செயலாளர்இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழிதோழர் தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 
சாலையை மறித்து மறியலில் அமர்ந்த தோழர்களுடன்காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனர்முடிவில், 70க்கும் மேற்பட்டதோழர்கள் கைது செய்யப்பட்டுகாவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். 


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)







Tuesday, January 29, 2013

தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!




இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் முன் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.

அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.

தஞ்சை
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நேற்று(28.01.2013) மாலை, தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் சாணூரப்பட்டியில் நடைபெற்றது.

முன்னதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அமைத்துள்ள ஈகி முத்துக்குமாரின் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், சாணூரப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக சென்றனர்.

பொதுக்கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. நந்தகுமார் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வீரவணக்க உரை வழங்கினர்.

எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கம், அன்னை தெய்வானை இரத்தினசாமி நினைவு அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தன.




சென்னை


சென்னையில் தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழீழ விடுதலைக்காக உயிரீஈகம் செய்த 22 ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில், 22 அடி ஈகியர் நினைவுத் தூண் சென்னை கொளத்தூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.30 மணயளவில், ஈகி முத்துக்குமாரின் தங்கை திருமதி தமிழரசி குடும்பத்தார் உள்ளிட்ட பல ஈகியரின் குடும்பத்தினர் திரண்டிருந்தனர். காஞ்சி மக்கள் மன்றம் சாபில், தோழர்கள் மகேசு – ஜெசி ஆகியோர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஈகியர் நினைவுச்சுடர் அங்கு ஏற்றப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு தி.வேல்முருகன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு வன்னியரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் அங்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை நகர த.இ.மு. செயலாளர் தோழர் வினோத் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.

தஞ்சை நகரம்
தஞ்சையில் தழல் ஈகி முத்துகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சை அண்ணா நகரில் காலை 9.00 மணியளவில் வீரவணக்க நிகழ்வுக்கு மு.செல்வம் (திரவிட கழகம்) தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இராசு.முணியாண்டி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், விடுதலை வேந்தான் (ம.தி.மு.க.தலைமைக் கழக பேச்சாளர்), பாசுகர் (ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர்) வீரவணக்க உரை நிகழ்த்தினர்.

செல்வம் (ம.தி.மு.க)நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)


Sunday, January 27, 2013

“தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர்வீரவணக்க நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?” - பெ.மணியரசன் கேள்வி


தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்
மொழிப்போர்வீரவணக்க நாள் கூட்டம் நடத்த
யோக்கியதை உண்டா?
மொழிப்போர் ஈகியர் வீரவணக்கக் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் கேள்வி

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர் நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?”  என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், மறைமலை நகரில் நடைபெற்ற மொழிப்போர்ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில், மொழிப் போர் நாளான 25.01.2013 அன்று, மாலை 6 மணியளவில், மறைமலை நகர் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய, ‘இனமொழி ஈகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்ட’த்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு, இனஉணர்வாளர் பொறியாளர் ஆனந்த் சுகுமார் தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் மு.பிச்சைமுத்து வரவேற்புரையாற்றார். திரு. மா.சமத்துவமணி தொகுத்து வழங்கினார். மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன் தொடக்கவுரையாற்றினார்.  திரு. துரை.முத்து ஒருங்கிணைத்தார்.

தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் இது.
“மொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியும் அல்ல, அது கடவுளும் அல்ல. மொழி, வரலாற்றைச் சேமித்து வைக்கும் கொள்கலன். 1938-இலும், 1965-இலும் தமிழ் மொழிக் காக்க நடைபெற்ற, மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகிகளை இன்றைக்கு நாம் நினைவுத்துப் பார்க்கிறேன். 1965 மொழிப் போராட்டம் என்பது எவ்வளவுப் பெரும் மக்கள் எழுச்சியாக நடந்தது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

சனவரி 25ஆம் நாளை, நாம் மொழிப் போர் நாளாகக் கடைப்பிடிக்கிறோம் ஏன் தெரியுமா? 1965 சனவரி 26ஆம் நாளான இந்தியக் குடியரசு நாள் முதல் இந்தியைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டு வந்தனர். அது விடுமுறை நாள் என்பதால், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்கள் அதற்கு முன்பாகவே கூடி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்தனர். எனவே, சனவரி 25ஆம் நாள் தமிழகமெங்கும் மாணவர்கள் பேரணிகள் நடத்தினர். தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய பேரணியில் பள்ளி மாணவனான நான் கலந்து கொண்டேன்.

மதுரையிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காங்கிரசுக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அது வானொலியில் செய்தியாக ஒலிபரப்பான போது, தமிழகம் கொந்தளித்தது. காங்கிரசுக் குண்டர்களைக் கண்டித்துப் பேரணிகள் நடந்தன. அப்போது நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்தேன். அப்போது, எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராகவும் நான் இருந்தேன். நாங்கள் காவல்துறையினரின் தடைகளை மீறிப் பேரணியாக சென்ற போது, காவல்துறை அதிகாரியாக இருந்த தங்கையன் என்பவர், பல ஊர்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றிக் கூறி எங்களை மிரட்டினார். 202 ரவுண்டு சுடுவதற்கு ஆர்டர் வாங்கி வைத்துள்ளேன் என்றார். நாங்கள் பேரணியாகச் சென்றோம்.

மதுரையிலும், சென்னையிலும் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக இரயில்வே கேட் அருகில் சென்ற போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மார்பில் குண்டேந்தி மாணவன் இராசேந்திரன் சாய்ந்தான். உடனடியாக சிகிச்சை அளிக்கக் காவல்துறை மறுத்ததால் அந்த இடத்திலேயே துடிதுடித்து அவன் செத்தான். இப்படுகொலை  தமிழகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களம் ஆனது.  அதன்பின், மாணவர் போராட்டங்களை ஒடுக்க, தமிழகத்திற்குள் இந்திய இராணுவம் வந்தது.

பொள்ளாச்சி, திருப்பூர், குமாரபாளையம் ஆகிய இடங்களில் இராணுவமும் காவல்துறையும் நடத்தியத் துப்பாக்கிச் சூடுகளில் கூட்டம் கூட்டமாக 300க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பொள்ளாச்சியில், இந்தி எழுத்துகளை அழித்த மாணவர்களைக்  காக்கைக் குருவி போல சுட்டு வீழ்த்தியது இந்தியப் படை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில், 4 வயது குழந்தையும் அடக்கம். அந்த 4 வயதுக் குழந்தையை மடியில் ஏந்தி, தமிழ் இராணுவ வீரன் ஒருவன், “இந்த இனத்தில் பிறந்தது தான் நீ செய்த குற்றமா?” என மனமுருகும்படி கேட்ட செய்திகள் எல்லாம் நாளேடுகளில் வந்தன. மதுராந்தகத்தில், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி சிறைபட்டிருந்தவர்கள் வைக்கப்பட்டிருந்த லாக் அப் அறையைக் காவல் காத்த காவலர் இன உணர்வு பீறிட – துப்பாக்கியுடன் தெருவில் இறங்கி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று முழக்கமிட்டார்.  

அப்படி, இராணுவம், காவல்துறை என பலவற்றிலும் தமிழ் இன உணவுர்வு பீறிட்டது. ரசியப் புரட்சியின் போது, அரசப் படையினர் பிளவுண்டு, மக்கள் பக்கம் நின்றதைப் போலிருந்தது. வெறும் மொழிப் போராட்டமாக அது நின்றுவிடவில்லை, இனப்போராட்டமாக மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக அது நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்களை லாரிகளில் கொண்டுபோய், கூட்டம் கூட்டமாகப் புதைத்தார்கள். இன்று வரை அப்பகுதிகளில் இதற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட கிடையாது என்பது, இங்கு ஆள்கின்ற திராவிடக் கட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

1937 சூலை 15இல் இராஜாஜி முதல்வராகப் பதவியேற்றதும், இந்தியைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டு வந்தார். 1938 ஏப்ரல் 21 முதல் 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கி ஆணையிட்டார். சமற்கிருதம் தான் கட்டாயமாக்கப்பட வேண்டும், இந்தி வந்தால் பரவாயில்லை என காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி, இந்தியை வரவேற்றார். இவ்வாறு பார்ப்பனர்கள் இந்தி மொழியை வரவேற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழறிஞர்கள் தான் இந்தித் திணிப்பை தீவிரமாக எதிர்த்தனர். 1938 சூன் 3-லிருந்து மறியல் போராட்டங்கள் தொடங்கின.

ஆகத்து 27-இல் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழவேள் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் கூட்டத்தை நடத்தினார். இரண்டு நாள் கழித்து திருவையாற்றில் செந்தமிழ்க் கழகம் சார்பில் கண்டனப் பேரணி நடந்தது. திசம்பர் 26 அன்று திருச்சியில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அதில், உமா மகேசுவரனார் வரவேற்புரையாற்றினார். நாவலர் சோமசுந்திர பாரதியார் தலைமை தாங்கினார். பெரியார் சிறப்புரையாற்றினார். இந்தித் திணிப்பை மட்டுமல்ல, தமிழர்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். திருச்சியிலிருந்து பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் தலைவர்கள் தலைமையில் சென்னை நோக்கிப் புறப்பட்ட இந்தி எதிர்ப்புப் பரப்புரை நடைப்பயணம் சென்னைக் கடற்கரைக்கு 11.9.1938 அன்று வந் போது நடந்த வரவேற்புக் கூட்டத்தில் தான், தமிழறிஞர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, பெரியார் தமது ஏட்டில், அனைவரும் “தமிழ்நாடு தமிழருக்கே” என பச்சைக் குத்திக் கொள்ள வேண்டுமென எழுதினார். தமிழறிஞர்கள் முன்னெடுத்த இந்தித் திணிப்பு எதிர்ப்பை மட்டுமின்றி, தமிழறிஞர்கள் முன்வைத்த பார்ப்பனப்  புரோகிதரல்லாத திருமணமுறை, கும்பாபிடேக் போன்றவற்றை பெரியார் ஏற்றுப் பெருமெடுப்பில் பரப்பினார்.

இன்றைக்கு உலகத் தாய்மொழி நாள் என ஐ.நா. அறிவித்துள்ள நாள், 300க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மொழிக்காக சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அல்ல. நடராசன், தாளமுத்து ஆகிய ஈகிகள் உயிரீந்த நாள் அல்ல. மாணவ ஈகி இராசேந்திரன் குண்டடிபட்டு மாண்ட நாள் அல்ல. கிழக்குப் பாகிஸ்தானாக வங்கதேசம் இருந்தபோது, அங்கு பாகிஸ்தான் அரசு உருதுமொழியைத் திணித்ததைக் கண்டித்து 11 பேர் உயிரீகம் செய்ததை நினைவு கூரும் வகையில், தான் அது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன், தமிழ்நாட்டின் உயிரீகம் மதிக்கப்படவில்லை்? ஐ.நா.வுக்கு இங்கு இவ்வளவு பேர் மொழிக்காக கொல்லப்பட்டனர் என்ற செய்தி கூடத் தெரியுமா என்பது கேள்வி. வங்கதேசத்திற்குக் கிடைத்த அந்த பெருமை, இவ்வளவு ஈகம் செய்த தமிழர்களுக்கு கிடைக்கவில்லையே ஏன்? அங்கு மொழிப் போராட்டம், தாயக விடுதலையுடன் இணைக்கப்பட்டு, அது வெற்றிபெற்றது. ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. வங்காளிகளுக்கு ஒரு நாடு உருவாகி அது ஐ.நா. மன்றத்தில் உறுப்பு வகிக்கிறது. அந்நாடு அங்கு பேசி, ஐ.நா. நாளைப் பெற்றது. நம் நிலை என்ன? நமக்குச் சுதந்திர நாடில்லை.

சனவரி 25-ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் மொழிப் போர் நாளாகக் கடைபிடித்துக் கொண்டுவரும் நிலையில், மொழிப் போராட்டத்தைச் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. உறுப்பு வகிக்கின்ற நடுவண் அரசு என்ன செய்துள்ளது தெரியுமா? சனவரி 25-ஐ வாக்காளர் நாளாக அறிவித்துள்ளது. தில்லி ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக நாம் இருக்கிறோம் என்பதற்கான அடிமை முறியைப் புதுப்பிக்கும் முறைதான் தேர்தலாக உள்ளது. தில்லிக்கு எடுபிடியாக ஒரு கங்காணி அரசின் தலைவராகத்தான் முதல்வர் பதவி உள்ளது. அந்த அடிமை முறியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில், சனவரி 25ஆம் நாளை வாக்காளர் நாளாக அறிவித்துள்ளார்கள். சனவரி 25ஆம் நாள் மொழிப்போர் நாளாக நாங்கள் கடைபிடிக்கிறோம், எனவே, அந்த நாளை வாக்காளர் நாளாக அறிவிக்க வேண்டாம், வேறொரு நாளில் அதை வைத்துக் கொள்ளுங்கள் என தி.மு.க. சொல்லவில்லை. இந்த உருத்தலே அவர்களுக்கு இல்லை. உள்ளே ஒரு பேச்சு வெளியே ஒரு பேச்சு. இந்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக செயலலிதா கூறுகிறார். அதென்ன மாற்றாந்தாய் மனப்பான்மை? ஒரு அடிமையைப் போல் நடத்துகிறான் எனச் சொல்ல வேண்டியது தானே? இவர்களுக்கு இந்த உருத்தல் கொஞ்சமும் இல்லை என்பதே உண்மை.

இன்றைக்கு இந்திய அரசின் இந்தித் திணிப்பு, முன்பை விட தீவிரம் பெற்றுள்ளது. நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான மறைமலை யடிகளின் பெயரால் உள்ள இதே மறைமலை நகரின், பலகையில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. மொழிப் போர் நாளான இன்று, மதுரையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பில், பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறது. மதுரையின் முக்கிய வீதிகளில், பெயர் பலகைகளில் இந்தி எழுத்து புதிதாகப் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தான் அந்த ஆர்ப்பாட்டம்.

ஏன் இந்தி எழுத்துகள் எனக் கேட்டால், சுற்றுலா நகரம் என்பதால் இந்திக்காரர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படியென்றால், தமிழர்கள் அடிக்கடி செல்லுகின்ற காசி, தில்லி நகரங்களில் தமிழில் பெயர்ப் பலகை இல்லையே ஏன்? இங்கிருக்கும் இந்தி எழுத்துகள், வெறும் எழுத்துகள் அல்ல, நான் உன் எஜமானன் நீ எனது அடிமை என்று இந்திக்காரர்கள் சொல்லும் அறிவிப்பு அது. அ.தி.மு.க.கட்சியைச் சேர்ந்தவர்தான் மதுரை மேயர். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க.வினர் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கக் கூட்டம் நடத்துகிறார்கள்.

நடுவண் அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது தான், தமிழகத்தின் நால்வழிச் சாலைகளில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டன. அதைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பு வகித்த, தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் போராட்டம் நடத்தினோம். இந்தி எழுத்துகளை அழித்தோம். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயலலிதாவை விட நாங்கள் குறைவாகத் தான் இந்தியில் எழுதினோம் என்றார். தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பு, தமிழர்கள் வாயில் மலம் திணிப்பதற்கு சமம். மலத்தை நான் கொஞ்சமாகத் தான் திணித்தேன் என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? இது தான் தி.மு.க. – அ.தி.மு.க. அரசின் இலட்சணம். இவர்கள் தான் இன்றைக்கு மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கக் கூட்டங்களை வெட்கமின்றி, கூச்சமின்றி நடத்துகிறார்கள். 

இன்றைக்கு, தொடர்வண்டித்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், இந்தியிலும், மலையாளத் திலும் தான் முன்பதிவு படிவங்கள் கிடைக்கின்றன. தமிழில் இல்லை. மக்கள் தொகையில் குறைவாக உள்ள கேரளா, தமிழ்நாட்டுத் தொடர்வண்டித் துறையில் ஆதிக்கம் செலுத்து கிறது. இதைத் தடுக்க, திராவிட ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?

1938இல் இந்தியை எதிர்த்து முழக்கமிட்ட பெரியார், 1968இல் என்ன சொன்னார்? இந்தி வரக்கூடாது என்று தான் நான் முழக்கமிட்டேனேத் தவிர, தமிழ் வர வேண்டும் எனச் சொல்லவில்லை, நான் கடந்த 40 ஆண்டுகளாக தமிழைக் காட்டுமிராண்டிமொழி எனச் சொல்கிறேனே, இந்திக்கு பதில் ஆங்கிலம் தான் வரவேண்டும் என்றார். வீட்டில் கூட அனைவரும் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். ஆங்கிலம் அறிவியல் மொழி என்றார். அறிவியல் மொழி, அறிவியலற்ற மொழி என்றெல்லாம் ஒன்று கிடையாது. மூடநம்பிக்கைக் கருத்துகள் அனைத்து மொழிகளிலும் தான் இருக்கின்றன. ஏன், ஆங்கிலத்தில் தானே இங்கு ஆவியெழுப்பும் கூட்டங்கள் நடைபெறுகின்றன? எனவே தான், அறிவியல் மொழி, மூடநம்பிக்கை மொழி என்றெல்லாம் ஒன்று கிடையாது என்கிறோம்.

அப்போது காங்கிரசுக்காரர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இல்லாத ஒன்றாக இணைப்பு மொழி (Link language) என்பதைப் பற்றிப் பேசினார்கள். பல தேசிய இனங்கள் உறுப்பு வகித்த இரசியாவில் கூட, இணைப்பு மொழி என்ற ஒன்று இல்லை. நான்கு மொழிகொண்ட சுவிட்சர்லாந்தில் இணைப்பு மொழி இல்லை அவரவர் தாய்மொழியே இணைப்பு மொழி. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் காங்கிரசின் இணைப்பு மொழிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டன. காங்கிரசார் இந்தியை இணைப்பு மொழி என்றனர். கழகத்தார் ஆங்கிலத்தை இந்தியை இணைப்பு மொழி என்றனர். கழகத்தார் ஆங்கிலத்தை இனைப்பு மொழி என்றனர். இரண்டுமே நமக்கு அயல் மொழிதான். தமிழ் மொழியே, ஆட்சி மொழி, கல்வி மொழி, வழக்கு மொழி என்ற ஒருமொழிக் கொள்கையை முன்வைக்கவில்லை. மாறாக தி.மு.க. தலைவர் அண்ணா முதல்வராக இருந்தபோது, ஆங்கிலம் - தமிழ் என்ற இருமொழிகளைக் கொண்ட ராஜாஜியின் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார். தமிழ் இருக்க வேண்டிய இடத்தில், ஆங்கிலத்தை அமர்த்தினார்.

திராவிட ஆட்சியாளர்கள் எங்கே தமிழை அரியணையில் ஏற்றினார்கள்? ஆங்கிலத்தைத் தான் வாழ வைத்தார்கள். 1938-இல் தமிழ்ப் பகுதிகளில் 60 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இன்று ஆயிரக்கணக்கான பல்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கின்றன. தமிழில் பேசினால் அபராதம் என இன்றைக்கு தமிழ்நாட்டிலே, எத்தனைப் பள்ளிகளில் அபராதம் விதிக்கிறார்கள்? அங்கெல்லாம் நாம் போராட வேண்டும். இது தான் இன்றைக்கு நிலைமை. இப்படி தமிழுக்கு பதில் ஆங்கிலத்தை திணித்தார்களே, தமிழில் என்ன குற்றம் கண்டார்கள்? இங்கே ஏன் மொழிக் குழப்பம்? இங்கே சரியான மொழிக் கொள்கை வைக்கப்படவில்லை? மொழிப்போராட்டம் நடத்திய திராவிடத் தலைவர்கள் நம் இன அடையாளத்தையே குழப்பிவிட்டார்கள். இந்தியன் என்றும் திராவிடன் என்றும் தமிழர்கள் திரிக்கப்பட்டார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தான் இனத்தால் திராவிடன் என்றும், நாட்டால் இந்தியன் என்றும், மொழியால் தமிழன் என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆக, இங்கு இனமே தெளிவாக முன்வைக்கப்படாத குழப்ப நிலை நீடிக்கிறது. நாம், மொழியாலும், தேசிய இனத்தாலும், மரபினத்தாலும் தமிழர்களே என்று உணர வேண்டும்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் சமற்கிருதம் சேரச்சேர பெருமை பெறும், தமிழ் மட்டும் தான் சமற்கிருதம் தீரத் தீர பெருமை பெறும் என்பார் பாவாணர். இப்படி, ஆரியத்துக்கு எதிராக மொழி வடிவிலும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழை, ஏன் திராவிட ஆட்சியாளர்கள் முன் நிறுத்தவில்லை? எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் வைத்த திராவிடம் எனும் பெயரை சுமந்து கொண்டு, நம் இனத்தை மறுதலித்தது சரியா? திராவிட இயக்க நூற்றாண்டு தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்பட்டது, ஏன், கேரளாவில், ஆந்திராவில் அது கொண்டாடப்படவில்லை? ஆரியத்துக்கு எதிராகத் தமிழ்தான் என்றைக்கும் முன்னின்றுள்ளது என்பதே வரலாறு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத் தான் நாம் போராடிக் கொண்டுள்ளோம். தொடர்ந்து போராடுவோம்”. மொழியால் இனத்தால், நாட்டால் நாம் தமிழர்களே! நம் இனம் தமிழர் மட்டுமே!

கூட்டத்தின் நிறைவில், தோழர் கொண்டல்சாமி (மே பதினேழு இயக்கம்) நன்றி நவின்றார்.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள்!


DSC_1714
தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது. அந்நாளை, மொழி – இனம் காக்க சூளுரைக்கும் நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறது.
DSC_1740
சென்னை – வீரவணக்கப் பேரணி
சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப் போர் ஈகிகள் தாளமுத்து, நடராசன், தருமாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் வகையில், காலை 9.30 மணியளவில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மூலக்கொத்தளம் இடுகாடு வரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் வீரவணக்கப் பேரணி நடைபெற்றது. மூலக்கொத்தளம் இடுகாட்டில், மொழிப் போர் ஈகிகள் நடராசன், தாளமுத்து, மருத்துவர் தருமாமம்பாள் ஆகியோரது நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, புலவர் இரத்தினவேலவர், தாம்பரம் த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை நகர த.இ.மு. தலைவர் தோழர் சரவணன் உள்ளிட்ட த.தே.பொ.க. – த.இ.மு. முன்னணியாளர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.
DSC05431
சிதம்பரம்
மொழிப்போர் நாளன்று, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் மாலை அணிவித்தார். 1938-1965 மொழிப் போராட்ட வரலாற்றை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், மொழிப்போர் ஈகியருக்கு ஊர் தோரும் நினைவுச் சின்னம் எழுப்பக் கோரியும், ஒருமொழிக் கொள்கையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில், த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழக உழவர் முன்னணி, நடுவன் குழு உறுப்பினர் திரு. எ.மதிவாணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
DSC02855
திருச்சி
திருச்சி மாவட்டம், தென்னூர் – உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகியர்கள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், த.இ.மு. அமைப்பாளர் தோழர் தியாகராசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செயலாளர் கவிஞர் இராசாரகுநாதன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, மற்றும், திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் திரு.வீ.ந.சோ., திருமாறன், முருகானந்தம், ஈகவரசன் ஆகியோரும், தோழர்கள் மு.வ.பரணர், இனியன், தி.மா.சரவணன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
DSC02282
மதுரை – ஆர்ப்பாட்டம்
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் திருவள்ளுவர் சிலை முன்பு, காலை 11 மணியளவில், மதுரை அரசு முதன்மை இடங்களில் இந்தி மொழியில் பெயர் பலகை வைப்பதை கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலையேற்றார். எம்.ஆர். மாணிக்கம்(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் மீ.த.பாண்டியன் (இ.பொ.க.(மா-லெ) மக்கள் விடுதலை), தோழர் ஐ.வெற்றிச் செல்வன் (புரட்சி கவிஞர் பேரவை), தோழர் கதிர்நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் பொன்மாறன் (தமிழிய வரலாற்று பேரவை), தோழர் மேரி(மகளிர் ஆயம்), வழக்கறிஞர் இராசேந்திரன் (சமநீதி வழக்கறிஞர் சங்கம்), வழக்கற்ஞர் சு.அருணாச்சலம் (மக்கள் உரிமை பேரவை), வழக்கறிஞர் கு.பகத்சிங், வழக்கறிஞர் அகவன், தோழர் இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுனர் நலச் சங்கம்), தோழர் பேரரிவாளன் (தமிழ்ப் புலிகள் இயக்கம்), பொற்கை பாண்டியன் (தமிழ் மீட்சி இயக்கம்) ஆகியோர் கண்டனவுரை ஆற்றினர். நிறைவில், த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரையாற்றினார்.
குடந்தை
தஞ்சை மாவட்டம், குடந்தை காந்தி பூங்கா அருகில், மாலை 6 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க. குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைசுடர் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் தோழர் குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில், தோழர்கள் வளவன், ஈகவரசன் ஆகியோர் வீரவணக்கவுரை நிகழ்த்தினார். கூட்டத்தில், மொழிப் போர் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் இணைக்க வேண்டும், குடந்தையைச் சேர்ந்த மொழிப்போர் ஈகி தாளமுத்து அவர்களுக்கு குடந்தையிலேயே நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு அப்பல்கலைக்கழகத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் நன்றியுரையாற்றினார்.
IMG_01252013_110027
தஞ்சை
தஞ்சை பழையப் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் குழ.பால்ராசு சிறப்புரை நிகழ்த்தினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நகரத் துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.குணசேகரன், தமிழக உழவர் முன்னணி தோழர் காசிநாதன் உள்ளிட்ட முன்னணியாளர்களும், தோழர்களும் இதில் திரளாகப் பங்கேற்கின்றனர்.
DSC_6464
செங்கிப்பட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், காலை 10 மணியளவில், மொழிப் போர் ஈகியருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையேற்றார். த.இ.மு. செங்கிப்பட்டி தலைவர் தோழர் அ.தேவதாசு, புதுக்கோட்டை த.இ.மு. செயலாளர் தோழர் மணிகண்டன் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

(செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

Thursday, January 17, 2013

தமிழர் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் - தோழர் பெ.மணியரசன் பேச்சு


தமிழ்ப் புத்தாண்டு - தைப் பொங்கல் விழா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி -
 தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


தஞ்சை - செங்கிப்பட்டி

பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணி மற்றும் செங்கிப்பட்டி தானி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில், 14.01.2013 அன்று மாலை, தமிழர் திருநாள் பெருவிழா செங்கிப்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு, த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்றார். தோழர் பி.தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற் றினார்.

“தழல் தருக தை மகளே” என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தஞ்சை செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் தலைமையில் பாவீச்சு நடை பெற்றது. ‘இனப்பகை எரிக்க’ என்ற தலைப்பில் கவி ஞர் கவிபாஸ்கர் அவர்களும், ‘மொழிப்பகை எரிக்க” என்ற தலைப்பில் கவிஞர்  கவித்துவன் அவர்களும், ‘பெண்ணுரிமைப் பகை எரிக்க’ என்ற தலைப்பில் கவிஞர் இராசாரகுநாதன் அவர்களும், ‘மண் ணுரிமைப் பகை எரிக்க” என்ற தலைப்பில், கவிஞர் குழ.பா.ஸ்டாலின் அவர்களும் பாவீச்சு நிகழ்த்தினர். 

முனைவர் த.செயராமன் அவர்களை நடுவராகக் கொண்டு,  “தமிழின உயர்வுக்கு பெரிதும் தடையாய் இருப்பது பொறுப்பற்ற ஊடகங்களா? விழிப்பு ணர்வற்ற மக்களா? கொள்கையற்ற அரசியலா?” என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் நடைபெற்றது. “பொறுப்பற்ற ஊடகங்களே” என தோழர் சிவராசு அவர்களும், “விழிப்புணர்வற்ற மக்களே” என தோழர் ரெ.கருணாநிதி அவர்களும், “கொள்கையற்ற அரசியலே” என தோழர் நா. வைகறை அவர்களும் சொற்போர் புரிந்தனர். கொள்கையற்ற அரசியலே என நடுவர் த.செயராமன் தீர்ப்பு வழங்கினார்.

திரு. அய்யனாவரம் சி.முருகேசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார், நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.காமராசு, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் கெ.மீனா, தோழர் அ.விடுதலை வேந்தன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். தானி ஓட்டுநர் சங்கத்  தோழர் வி.சத்யா நன்றி நவின்றார். 

நிறைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விழாப் பேருரை யாற்றினார். அவர் பேசுகையில், “நாம் பொங்கல் விழா, தமிழர் திருநாள் விழா, உழவர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழா என பல்வேறு சிறப்புகளை உள் ளடக்கி இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். மக்கள் மொழியில் பொங்கல் என்று அழைக்கிறார்கள். ஆனால், பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி என்று இந்நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனியச் சார்பாளர்களும், இந்நாளை ‘சங்கராந்தி’ என்றே குறிப்பிடுகிறார்கள். தமிழர்களுடைய கோயில்கள், ஊர்கள் ஆகியவற்றின் பெயர்களை தமிழிலிருந்து சமற்கிருதத்திற்கு மாற்றி விட்டார்கள். அதைப் போலவே தமிழர்களுடைய திருவிழாக்கள், பண் பாட்டுச் செயல்கள் அனைத்தையும் சமற்கிருதத்தில் பெயரிட்டு அழைக்கிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? 

தமிழர்களுக்கென்று சொந்த வரலாறில்லை, சொந்த பண்பாடு இல்லை, சமற்கிருதத்தைத் தவிர்த்துவிட்டு இயங்குவதற்கு தனித்துவமுள்ள மொழி இல்லை என்று தமிழ்நாட்டிலேயே மண்ணின் மக்கள் தங்களை தாழ்வாகக் கருதிக் கொள்ள வேண்டும், இரண்டாந்தர மக்களாக கருதிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தோடு தான் ஆரியப் பார்ப்பனர்கள் அனைத்தையும் சமற்கிருதமயமாக்கி வருகிறார்கள். 

இன்றைக்கு தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. 1921ஆம் ஆண்டு முதல் பல்வேறு கருத்தரங்குகளில் மறைமலை அடிகளார், நமச்சிவாயர், திரு.வி.க., சோமசுந்திர பாரதியார், கி.ஆ.பெ.விசுவசாதம் போன்ற தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாளை தமிழர் திருநாளாக கொண்டாட வேண்டுமென அறிவித் தார்கள். தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமாக, அதை திருவள்ளுவர் ஆண்டு தொடக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். கடந்த தி.மு.க. ஆட்சி, அதை அரசாணையாக்கி தை முதல் தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள் என்று அறிவித்தது. அதற்குப்பின் வந்த, செயலலிதா ஆட்சி, அந்த அரசாணையை நீக்கி சமற்கிருதப் பெயர்களையுடைய பழைய 60 ஆண்டுகளையே தமிழாண்டாக நீடிக்கச் செய்துள்ளார். 

தமிழ் என்றாலே செயலலிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விடுகிறது. செயலலிதா ஆட்சியிலிருக்கின்ற இந்தக் காலம், பார்ப்பனியத்துக்கு புத்துணர்ச்சி காலம் என்று பார்ப்பனிய சக்திகள் கருதுகின்றன. தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குநராக இருந்த நாகசாமி என்பவர் இப்பொழுது மிகத்துணிச்சலாக தமிழுக்கு எதிராக ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்றவை அனைத்தும் சமற்கிருத நூல்களைப் பார்த்து தமிழில் எழுதப்பட்டவை என்று அவர் கூறுகிறார். தமிழர் களுக்கென்று சொந்த இலக்கியம், வாழ்க்கைமுறை எதுவும் இல்லை என்கிறார். தமிழ் எழுத்துகளும், தமிழ் எழுத்து முறையும், பிராமணர்கள் உருவாக்கிய பிராமி எழுத்துமுறையிலிருந்து வந்தது என்கிறார். 

தமிழுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக, கருத்துகள் கூறி, பார்ப்பனியத்திற்கு புத்துயிர் ஊட்ட புதிய எழுச்சியோடு கிளம்புகிறார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தையும், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தையும் கட்டி பல்கலைக்கழகத்தின் அடையாளத் தையே செயலலிதா அழிக்கிறார். 

தி.மு.க.வோ, அதன் தலைவர் கருணாநிதியோ தமிழைப் பற்றி பேசுவார்களே தவிர, ஆரியத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, தமிழர் தனித்துவ அடையாளங்களை அழிப்பதற்குத் துணை போ வார்கள். இந்த நிலையில், நாம் கொண்டாடும் தமிழர் திருநாள் பெருவிழா தமிழர்களின் சிறந்த கூறுகளை முன்னிறுத்துவதாகவும், ‘மனிதர்கள் அனைவரும் சமம் தமிழர்கள் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டை, கனியன் பூங்குன்றன், திருவள்ளுவர் ஆகியோர் வலியுறுத்திய சமத்துவ அறங்களின் மீது மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அமைய வேண்டும்” என அவர் பேசினார்.

சிதம்பரம்

சிதம்பரம் நகர தமிழக இளைஞர் முன்னணி சார்பில், 14-01-2013 தமிழர் புத்தாண்டு - தைத் பொங்கல் நாளன்று, ஆடவர், பெண்கள், சிறுவர், சிறுமியர் புத்தாடை அணிந்து தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 

விழாக்கோலம் பூண்ட  சிதம்பரம் வர வர முனி பள்ளித் திடலில் கபடி, உரியடி, சிலம்பாட்டம், மகளிர் மற்றும் சிறுவர் பங்குபெற்ற ஊசி கோத்தல், எலு மிச்சை ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தோழர் இரா.ராசேசுக்குமார் அவர்களின் சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பாட்டம், குத்து வரிசை தற்காப்பு முறை, கலை நிகழ்ச்சிகள் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. 

போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் ‘பொங்க லோ பொங்கல்’ என மகிழ்ச்சி முழக்கங்களுக்கிடையே பொங்கல் வைக்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும், தோழியர்களும், சிறு வர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் உற்சா கத்துடன் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆ.கலைச்செல்வன், இர.நாராயணன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டிகளை சிறப்பாக வழிநடத்தினர்.

விழாவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழக உழவர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, அக்னிச்சிறகுகள் அமைப்புகளின் தோழர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் அரசுக் கலைக்கல்லூரி கல்வியாளர்களும் திரளாகப் பங்கு பெற்றனர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் திருநாள் விழா மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை தோழர்கள் ஆ.குபேரன், வே.சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.

முருகன்குடி

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், த.இ.மு. மற்றும் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் விழா, முருகன்குடி நூலகக் கட்டடம் அருகில், காலை 6 மணி முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. 

காலை 6 மணிக்கு, தமிழ்ப் புத்தாண்டை வர வேற்று, வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. “ஆங்கில சனவரியை புறக்கணிப்போம்! பார்ப்பன சித்திரையைப் புறக்கணிப்போம்! தைத்திங்களே தமிழர் புத்தாண்டு!” என முழக்கங்கள் எழுப்பியவாறு எழுச்சிமிக்க ஊர்வலம் நடைபெற்றது. காலை 7 மணியளவில், கோலமிடுதல் போட்டி நடைபெற்றது. பின்னர், சிறுவர்களுக்கான கபடிப் போட்டி நடத்தப் பட்டது. 

மதியம், மகளிர் ஆயம் அமைப்புக் குழுத் தோழர் வித்யா, கிளைச் செயலாளர் தோழர் வளர்மதி, மற்றும் தோழர்கள் எழிலரசி, இன்பமதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், பொங்கல் வைத்து அனைவ ருக்கும் பரிமாறினர். 

மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு, புதிதாக உருவாக்க்கப்பட்ட,  சாத்துக்குடல் தமிழக இளைஞர் முன்னணித் தோழர் இளையநிலா தலைமையிலான தப்பாட்டக் குழுவினர் தப்பாட்ட இசை முழக்கத்தோடு தொடங்கியது. தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு வரவேற்புரை யாற்றினார். திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திரு. ரா.கார்த்திகேயன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் முருகன் முன்னிலை வகித்தார். 

சனவரி 4 அன்று, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் முருகன்குடியில் நடத்தப்பட்ட, டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில் கைதான 54 பேருக்கும் ஊர்மக்கள் சார்பில், ஆசிரியர்கள் பழனிவேல், வெள்ளையத்தேவன் ஆகியோர் துண்டு அணிவித்து சிறப்பு செய்தனர். சிலம்பக் கலையை இவ்வூரில் பயிற்றுவித்து வந்த பயிற்று நர்கள் 9 பேருக்கு, முருகன்குடி பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திருவள்ளுவர் படம் பொறித்த நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.

சாத்துக்குடல் த.இ.மு. தோழர்கள், மின்வெட்டு குறித்து பேசும் நாடகம் ஒன்றையும், முருகன்குடி த.தே.பொ.க. தோழர்கள் அணுஉலை ஆபத்து குறித்து பேசும் நாடகம் ஒன்றையும் மேடையில் அரங்கேற்றி, பார்வையாளர்களை ஈர்த்தனர். திருவள் ளுவர் மன்றத் தலைவரும், த.இ.மு. தோழருமான மணிமாறன், மன்றச் செயலாளர் தோழர் ஞானப் பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். த.தே. பொ.க. தோழர்கள் கனகசபை, பெரியார் செல்வன், உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்புற மேற்கொண்டனர்.  

ஓசூர்

ஓசூர் பாரதிதாசன் நகர் விளையாட்டுத் திடலில், தமிழக இளைஞர் முன்னணி - இளம்துளிர் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 
12.01.2013 ஞாயிறு அன்று, பொங்கல் வைத்து, தப்பாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு, தீ நடனம், கரகாட்டம் ஆகிய தமிழர் கலை நிகழ்ச்சி களோடு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இளம்துளிர் மக்கள் இயக்கத் தலைவர் திரு. வடிவேல் வர்மா தலைமையேற்றார். திரு லோகேஷ் வரவேற்பு ரையாற்றினார். திரு. கார்த்தி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரி முத்து எழுச்சியுரை நிகழ்த்தினார். மறுநாள் 13.01.2013 அன்று, உரியடித்தல், வழுக்கு மரம், கபடிப்போட்டி ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தோழர்கள் சதிஷ், கார்த்தி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வுகளில், திரளான உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். 

இராயக்கோட்டை

தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில், 14.01.2013 அன்று காலை 10 மணியளவில், கிருட்டிணகிரி மாவட்டம் இராயக் கோட்டை - லிங்கனம்பட்டி கிராமத்தில், முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குயிக் மற்றும் அய்யன் திருவள்ளுவர் படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.வேலாயுதம் தலைமை யேற்றார். அய்யன் திருவள்ளுவர் படத்தை, புலவர் ‘கவியருவி’ நாகராசன் அவர்களும், கர்னல் பென்னி குயிக் படத்தை, வணிகர்  கோவிந்தசாமி அவர்களும் திறந்து வைத்து உரை யாற்றினர். திரு. கரிகாலன், துருவாசன் உள்ளிட்ட தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகளும், திரளான ஊர் பொது மக்களும் இந்நிகழ்வில்  கலந்து கொண் டனர். திருவள்ளுவர் இளைஞர் மன்றச் செயலாளர் திரு. அரிக்குமார் நன்றி நவின்றார்.








( செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு )

Sunday, January 6, 2013

“பெண்கள் தற்காப்புக்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு


பெண்கள் தற்காப்புக்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு

உலகத் தமிழக் கழகத்தின் சார்பில் வடசென்னை திரு.வி..நகரில் பேருந்து நிலையம் அருகில் திருகுறள்மணி புலவர் இறைக்குருவனார், திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கு நினைவேந்தல் படத்திறப்புக் கூட்டம் நடந்தது.

புலவர் இறைக்குருவனார் திடீர் மாரடைப்பால் 23.11.2013 அன்று காலமானார். தாமரை அம்மாள் அவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் 07.12.2012 அன்று காலமானார். திரு.வி.. நகரில் நடந்த நினைவேந்தல், கூட்டத்திற்கு உலகத் தமிழக் கழகத்தின் தலைவர் முனைவர் .அரணமுறுவல் தலைமை தாங்கினார்.

சென்னை மாவட்ட ... அமைப்புத் தலைவர், அன்றில் திரு பா. இறையெழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் .இலெ.தங்கப்பா அவர்கள் தாமரை அம்மா படத்தையும், புலவர் கு.அண்டிரன் இறைக்குருவனார் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் மூத்த மகன் திரு. மா.பூங்குன்றன், பாவலரேறு அவர்களின் பேத்தியும், இறைக்குருவனாரின் மகளுமான வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இறைக்குருவனாரின் மருமகனும் தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் வேலுமணி ஆகியோரும், பல்வேறு தமிழறிஞர்களும் உணர்வாளர்களும் உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார்.

அவர் பேசும் போது, 1964 ஆம் ஆண்டில் திருக்காட்டுப் பள்ளி அரசு நூலகத்தில் தென்மொழி படிக்கத் தொடங்கியதிலிருந்து அவ்விதழைத் தொடர்ந்து படித்து வந்ததாகவும், 1968 இல் திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த உலகத் தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டில் மாணவப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதையும், அடுத்து 1969 இல் பரமக்குடியில் நடந்த முதல் மாநாட்டில் கலந்து கொண்டதையும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “1916இல் மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்கள் பாவாணர் அவர்களும் பாவலலேறு பெருஞ்சிதிரனார் அவர்களும் ஆவர். பாவானர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைத் தொடர்ச்சியாகவும் இயக்கத் தொடர்ச்சியாகவும் செயல்பட்டவர் இறைகுருவனார் ஆவர். ஒரு சிறந்த தமிழ்க் குடும்பத்திற்கு எடுத்துக் காட்டான குடும்பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். அக்குடும்பத்தின் சிறந்த தலைவியாக, அனைவர்க்கும் அம்மாவாகவும் விளங்கியவர் தாமரை அம்மா அவர்கள். பாவலரேறு தாமரை அம்மா குடும்பம் தமிழ்நாட்டின், தமிழ் இனத்தின் தலைக் குடும்பம் ஆகும்.

அக்குடும்பத்தில் சாதி இல்லை; சமற்கிருதம் இல்லை, பேச்சில் ஆங்கிலம் இல்லை, தமிழினம் உண்டு, தனித்தமிழ் உண்டு, தமிழ்த் தேச விடுதலைத் கொள்கை உண்டு. திருக்குறள் மணி இறைக்குருவனார்க்கும், தாமரை அம்மாள் அவர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

பேச்சு வேறு செயல் வேறு என்றில்லாத குடும்பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். சாதியை மறுத்தார்கள். தமிழ்த் தேசியம் சாதியை மறுக்கிறது. சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்கு வதில்லையாம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

அதேபோல் பெண்ணுரிமையை மதிக்கும் கொள்கை தமிழ்த் தேசியம். தாமரையம்மா பெருங்குடும்பத்தில் பெண்கள் தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

இப்பொழுது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வருகின்றன.  பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழின உணர்வுள்ள ஆண்கள் முன்னணியில் நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் எப்போதும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தங்களிடம் வன்முறை செய்ய வரும் ஆளை முந்திக் கொண்டு கத்தியால் குத்த வேண்டும். தற்காப்புக்காக வன்முறையில் ஈடுபடலாம் இந்திய அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது.

எனவே, தயங்காமல் பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பாலியல் வன்முறை செய்ய வரும் ஆணைக் குத்திச் சாய்த்து விட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முரடன் கையில் சிக்கிச் சாவதை விட அவனைக் குத்திச் சாய்த்துவிட்டு தப்பிக்கலாம் அல்லது அப்போரில் மடியநேர்ந்தாலும் வீரத்தோடு மடியலாம். அவ்வாறு பெண்கள் பேராடும் போது பக்கத்தில் உள்ள ஆண்கள், அந்த முரடர்களைத் தாக்க வேண்டும்எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும், பல்வேறு தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.




(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT